மீண்டும் முறை மாப்பிள்ளை…
கதையாசிரியர்: தாரமங்கலம் வளவன்
தின/வார இதழ்: கணையாழி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: December 18, 2013
பார்வையிட்டோர்: 6,412
மதுரையின் பிரபல மருத்துவமனை அது.
சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்கும் தனம், தன்னை தள்ளிக் கொண்டு வரும் இசக்கியை திரும்பி பார்த்தாள்.
டில்லியில் கூட இதே மாதரிதான் அந்த மருத்துவமனைக்கும் ஓடிவந்தான்..
இவனுக்கு என்ன ஆயிற்று…
இவன் என்னமோ சொல்லுகிறானே…
இவன் உண்மையாகத்தான் சொல்லுகிறானா..
தான் தொட்டதெல்லாம் துலங்காது என்றும், தன்னுடன் வந்ததினால்தான், கணவன் பிரபாகரும், குழந்தை சுப்ரியாவும் அப்போது டில்லியில் கார் விபத்தில் இறந்து போனதாகச் சொன்னார்கள்..
மறுபடியும், தன்னுடைய ராசியினால்தான் கூட வந்த அப்பாவும் அம்மாவும் இப்போது இந்த மதுரையில் இறந்து போனதாகச் சொல்லுகிறார்கள்…
இருந்தும் இவன் என்னமோ சொல்லுகிறானே…
அதுவும் டில்லியின் பிரபல மருத்துவ மனைதான். அன்று தனத்திற்கு தன் முன்னால் ஏதேதோ நடப்பது மாதிரி கண்ணில் தெரிந்தது. ஆனால் காதில் ஏதும் கேட்காதது மாதரியும், கோர்வையாய் ஏதும் புரியாதது மாதரியும் இருந்தது. எல்லாம் மறந்து போனது மாதரியும் இருந்தது. தலையில் அடி பட்ட பாரம் அழுத்தியது. தான் மட்டும் எப்படி இன்னும் உயிரோடு எப்படி இருக்க முடிகிறது நினைத்து ஆச்சர்யப் பட்டாள். பின்னர் அதற்காக அழுதாள்……
கார் கவிழ்ந்த பின் கணவனும் குழந்தையும் இறந்து விட்டதாகச் சொல்லுகிறார்களே…
இந்த பரந்த டில்லி மாநகரத்தில் தனக்கு யாரும் தெரியாத நிலையில், மார்ச்சுவரியில் இருந்து இன்னும் கொஞ்ச நேரத்தில் கணவன் பிரபாகரின் உடலையும் குழந்தை சுப்ரியாவின் உடலையும் கொடுக்கப் போகிறார்களாம், அதை தான் பெற்றுக் கொள்ள வேண்டுமாம்… பெற்றுக் கொண்டு என்ன செய்ய…
அந்த மருத்துவ மனையின், பேஸ்மெண்ட் தளத்தில், பின்பக்கமாக இதற்கென்று ஒரு தனி லிப்டும், ஒரு தனி கதவும் ஏற்படுத்தி இருந்தார்கள். மணி இரவு பதினொன்று இருக்கும். ஆள் நடமாட்டம் குறைவாக இருந்தது.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் வெளியே போய் வரலாம் என்று அவள்தான் கணவன் பிரபாகரை நச்சரித்து காரை எடுக்கச் சொன்னாள். ஒரு சினிமா, பிறகு ஓட்டலில் டிபன் என்று முடித்துவிட்டு வீடு திரும்பும் போது, கார் நல்ல வேகத்தில் வந்து கொண்டு இருந்தது.
ரிங் ரோடில் வந்து கொண்டிருக்கும் போது நிஜாமுதீன் ரோடில் போவதா, இல்லை நொய்டாவுக்கு போகும் டோல் ரோடில் போவதா என்று சற்று தடுமாறும் போது, பின்னால் அதி வேகமாய் வந்து கொண்டிருந்த ஒரு வெளி நாட்டுக் கார் பயங்கரமாய் மோத, பிரபாகரின் கார் இரண்டு மூன்று முறை உருண்டு, பள்ளத்தில் போய் விழுந்தது.
பிரபாகரும், குழந்தை சுப்ரியாவும் ரத்த வெள்ளத்தில் சிதைந்து போக, என்ன ஆச்சர்யம், தனத்திற்கு ஒன்றும் ஆகவில்லை.
டில்லியில் தெரிந்தவர்கள் என்பது கணவன் வேலை செய்யும் அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் நண்பர்கள்தான்.. அதில் ஒரு நெம்பரை எடுத்து அவள் போன் செய்ய, அவர்கள் தான் வந்து எல்லாம் பார்த்துக் கொண்டார்கள்.
பரமக்குடியில் இருக்கும் பெற்றோர்களுக்கு போன் செய்த போது செயலிழந்த அவர்கள் அழுது கொண்டே சொன்னது,
“ நம்ம இசக்கி டில்லியில தான் இருக்கானாம்… அவன வந்து உதவ சொல்லட்டுமா..”
“ யாரும்மா இசக்கி…”
“ என்னடி தனம்.. இப்படி கேட்கற… உன்னோட முறை மாப்பிள்ளை.. நீ அவன கட்டிக்கமாட்டேன்னு சொல்லி.. அவன் கூட தற்கொலைக்கு முயற்சி பண்ணி…”
“ எனக்கு எதுவுமே நெனவுக்கு வர மாட்டேங்குதும்மா….”
இசக்கி வந்து சேரும் போது, மணி பனிரெண்டை தாண்டி இருந்தது. உடல்களை விமானத்தில் மதுரை வரை தூக்கிச் செல்வதற்கான ஏற்பாடுகளை இசக்கி ஏற்றுக் கொண்டான். பிரபாகரின் அலுவலக நண்பர்கள் விமான தளம் வரைக்கும் வந்தார்கள்.
டில்லியில் விமானம் ஏறும் முன், தனம் இசக்கியிடம்,
“ ஏங்க.. உங்க சம்சாரத்துக்கிட்ட சொல்லிட்டீங்களா… என் கூட பரமக்குடி வர்ரதா…”
அவள் தன்னை கல்யாணம் செய்து கொள்ள மறுத்த பின், தான் வேறு ஒரு பெண்ணை மணம் செய்து கொள்ளாமல் இருப்பது அவளுக்கு தெரியாது போலிருக்கிறது என்று நினைத்த இசக்கி, இந்த சமயத்தில் இதைப் பற்றி பேசக் கூடாது என்பதற்காக….
“ அவங்க அம்மா வீட்டுக்கு ஏற்கனவே மதுரைக்கு போயிருக்காங்க…” என்று சொல்லி சமாளித்தான்..
சென்னை விமான நிலையத்திற்கு பரமக்குடியிலிருந்து அம்மாவும், அப்பாவும் வந்திருந்தார்கள்.
அம்மா தனத்தைப் பார்த்து மயங்கி விழுந்தாள். ஆனால் தனம் தைரியமாய்தான் இருந்தாள்.
உடல்களை மதுரை விமானத்திற்கு மாற்றினார்கள்.
பிறகு மதுரையில் இறங்கி, காரில் பரமக்குடி போய் சேர்ந்தார்கள்.
தனத்திற்கு மாமியார் வீடும் பரமக்குடிதான்.
தன் மகனின் உடலைப் பார்த்தவுடன் தனத்தின் மாமியார், உன் ராசிதான் என் மகன் செத்து விட்டான் என்று சொல்லி வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு கத்தினாள்.
மாமியார் தன்னை வைத்துக் கொள்ள மாட்டாள் என்று தெரிய, அம்மா வீட்டிலேயே தங்கி காலத்தை தள்ளினாள் தனம்.
இரண்டு வருடம் ஓடியது.
ஒரு நாள் தனம் கோயிலில் இருந்து வீட்டிற்கு திரும்பும் போது, இசக்கி சோபாவில் உட்கார்ந்து கொண்டு காபி குடித்து கொண்டு இருப்பதைப் பார்த்தாள். அப்பா பக்கத்தில் உட்கார்ந்து இருந்தார்.
சமையல் கட்டில் இருந்த தனத்திடம் வந்த அம்மா, தன்னிடம் ஏதோ பேச தயங்கி நிற்பது புரிந்தது.
அம்மாவே பேசட்டும் என்று காத்திருந்தாள்.
“ இசக்கி டில்லிக்கு போறதுக்கு முன்னாடி நம்மள பாக்கறதுக்காக வந்திருக்கான்… டில்லியில, மாப்பிள்ளை வேலை செஞ்ச கம்பெனியில உனக்கு ஒரு வேலை போட்டுத் தராங்களாம்… இசக்கி ஏற்பாடு பண்ணி இருக்கானாம்.. நீ எத்தன நாளுக்குதான் இப்படி பரமக் குடியில அடைஞ்சி கெடக்க முடியும்… நாங்க போனதுக்கு அப்புறம், ஒனக்கு ஒரு பாதுகாப்பு வேணும் இல்லியா…” என்று சொல்லி நிறுத்தினாள்.
“ டில்லியில நான் தனியா வேலை செய்யறது மட்டும் பாதுகாப்பா..”
அம்மா ஏதோ சொல்ல வந்து, அடக்கிக் கொண்டாள்.
சோபாவில் உட்கார்ந்து கொண்டிருந்த இசக்கியிடம், ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக, தனம் அவனிடம்,
“ குழந்தைங்க எத்தனை, உங்க சம்சாரத்தையும் கூட்டிக்கிட்டு வந்திருக்கலாம் இல்லையா..” என்று சொல்ல,
இதைக் கேட்டு, அம்மா, அப்பா இருவரும் திடுக்கிட, இசக்கி மட்டும் ஏன் இவள் இப்படி கேட்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டான்.
தான் இரண்டு வருடத்திற்கு முன்னால், தனத்தின் கணவன் பிரபாகரின் உடலையும், குழந்தையின் உடலையும் டில்லியிலிருந்து மதுரைக்குகொண்டு வரும் போது சொல்லியதை வைத்து இப்படி கேட்கிறாள் என்று புரிந்தது.
என்ன பதில் சொல்வது என்று தடுமாறினான் இசக்கி.
அதற்குள் அம்மா,
“ உனக்கு தெரியாதா.. இசக்கியை நீ கல்யாணம் கட்டிக்க மாட்டேன்னு சொன்னதுக்கு அப்புறம் அவன் கல்யாணமே வேண்டான்னு சொல்லிட்டான்…. இப்ப அவனுக்கு வயசு முப்பதி நாலு ஆயிடுச்சி… உன் அத்தை சொல்லி அழுதாங்க.. உனக்குதான் இப்படி ஆயிடிச்சி..”
அம்மா சொல்ல வந்ததை தனம் புரிந்து கொண்டாள்.
பிறகு தனம் சொன்னாள்….
“ நான் இசக்கியோட கொஞ்சம் தனியா தனியா பேசணும்..”
இதைக் கேட்ட அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சந்தோசம். ஒரு வேளை சம்மதம் சொல்ல போகிறாளா..
“ சரி, பேசு…” என்று சொல்லிவிட்டு வாசலுக்கு போய் விட்டார்கள்.
அவள் இசக்கியிடம்,
“ நான் திரும்பவும் டில்லிக்கு வந்து இந்த வேலையை ஏத்துக்குனும்னா நீ ஒரு காரியம் பண்ணனும்..” என்றாள்.
“ என்னா அது..”
“ நீ ஒரு நல்ல பெண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கனும்..”
இதை சற்றும் எதிர்பாராத இசக்கி, சமாளித்துக் கொண்டு,
“ சரி.. பண்ணிக்கிறேன்…” என்று சொல்லிவிட்டு டில்லி கிளம்பினான்.
ஒரு ஆறு மாதம் கழித்து, திரும்பவும் இசக்கி பரமக்குடிக்கு வரும் போது தனம், “ கல்யாணம் பண்ணிக்கிட்டியா..” என்று கேட்டாள். அப்போது இசக்கி,
“ நான் டில்லி வேலையை விட்டுட்டேன்.. இங்க மதுரையில ஒரு வேலை வாங்கியிருக்கேன்.. சம்பளம் குறைவு தான் ” என்றான்.
“ ஏன்…..” தனம் கேட்க,
“ உனக்கு இப்படி ஒன்னு நடக்காம இருந்திருந்தா, ஒரு வேளை உன்ன மறந்திட்டு வேற கல்யாணம் பண்ணியிருந்திருப்பேன்.. ஆனா இந்த சூழ்நிலையில நா எப்படி உன்ன விட்டுவிட முடியும்…” என்றான் இசக்கி.
தனத்திற்கு அந்த பேச்சு பிடிக்க வில்லை. அவள் பதில் ஏதும் சொல்ல வில்லை.
அதற்கு பிறகு அம்மா அப்பாவோ, இசக்கியோ இது பற்றி பேசவில்லை.
ஒரு நாள் அம்மா,
“ தனம் வீட்லே அடைஞ்சு கெடக்கா…. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போயிட்டு வரலாம்,…” என்று அப்பாவிடம் சொல்ல, ஒரு வாடகைக் கார் வைத்துக் கொண்டு மதுரைக்கு கிளம்பினார்கள்.
காலை ஆறு மணி இருக்கும்.
டிரைவர் நல்லபடியாய்தான் ஓட்டிக்கொண்டு வந்தான்.
மானாமதுரையைத் தாண்டும் போது, எதிரே வந்த லாரி, அவர்களின் கார் மீது மோத, கார் உருண்டு போய் பள்ளத்தில் விழுந்தது.
டிரைவர் பெல்ட் போட்டிருந்ததாலே என்னமோ தப்பித்துக் கொண்டான்.
அம்மாவும் அப்பாவும் ஏதும் சலனமில்லாமல் கிடந்தார்கள்.
தனத்திற்கு வலது காலில் பலத்த அடி.
ரத்தம் ரொம்ப போயிருந்தது தனத்திற்கு.
ஆனால் நினைவு இருந்தது அவளுக்கு..
ஆம்புலன்ஸ்ஸில் தூக்கிப் போட்டார்கள்.
அம்மா அப்பாவை தட்டிப் பார்த்தாள். உலுக்கி பார்த்தாள். பேசி பார்த்தாள். எந்த சலனமும் இல்லை.
கணவனையும் சுப்ரியாவையும் பறிகொடுத்தது போல அம்மாவையும் அப்பாவையும் பறிகொடுத்து விட்டது புரிந்தது.
அம்மா அப்பாவிடம் கேட்டாள்…
‘ ஏன் வந்தீங்க என்னோட… நான் தான் உடன் வருபவர்களை கொல்லும் எமனாகி விட்டேனே…’
அழும் சக்தியை இழந்து விட்ட தனம், அழவில்லை…..
ஆம்புலன்ஸ் மதுரை அரசாங்க மருத்துவ மனைக்கு வந்து சேர்ந்தது.
அப்பாவின் மொபைலில் இருந்த நம்பரை வைத்து தனம் போன் செய்ய, அத்தையும், இசக்கியும் அலறி அடித்துகொண்டு வந்து சேர்ந்தார்கள்.
அம்மாவையும் அப்பாவையும் பரிசோதித்து விட்டு அவர்கள் இறந்து விட்டதாக டாக்டர் சொன்னார்.
அம்மா அப்பாவின் கடைசி மரியாதையை இசக்கிதான் செய்தான்.
தனத்திற்கு கால் குணம் ஆக ஆறு மாதம் ஆகும் என்று டாக்டர் சொன்னார்…
பிறகு தனத்தை ஒரு தனியார் மருத்துவ மனைக்கு மாற்றினான் இசக்கி.
பத்து நாட்கள் ஓடிவிட்டது…
மருத்துவமனையிலிருந்து காலையில் டிஸ்சார்ஜ் செய்ய போவதாய் சொன்னார்கள்.
“ வீல் சேர் ஒன்னு சொந்தமா வாங்கிக்கலாம்…” என்று சொல்லிவிட்டு போய் வாங்கிவந்தான் இசக்கி.
காலையில் டிஸ்சார்ஜ் முடிந்தவுடன், புதிதாய் வாங்கி வந்த சக்கர நாற்காலியில் தனத்தை உட்கார வைத்து இசக்கி தள்ள, அத்தை சாமான்களை எடுத்துக் கொண்டு டாக்ஸியை நோக்கி நடந்தாள்.
டாக்ஸியை அடைந்தவுடன், அத்தையின் தோளைப் பிடித்து கொண்டு, பின்சீட்டில் உட்கார்ந்தாள் தனம்.
சக்கரநாற்காலியை மடக்கி கொண்டிருந்த இசக்கியைப் பார்த்து, தனம் கேட்டாள்,
“ என்னை கல்யாணம் பண்ணிக்க உனக்கு பயமா இல்லியா…”
“ இல்லை..” என்று ஒரே வார்த்தையில் பதில் சொல்லி விட்டு, மடக்கிய சக்கர நாற்காலியை டாக்ஸியின் பின்பக்க டிக்கியில் வைத்து விட்டு, முன் பக்க சீட்டில் வந்து உட்கார்ந்தான் இசக்கி.
தனத்தை பார்த்து, “ வண்டியை பரமக் குடிக்கு விடச் சொல்லட்டுமா.. இல்ல எங்க வீட்டுக்கு, தள்ளாகுளத்துக்கு விடச் சொல்லட்டுமா…” என்றான் இசக்கி.
“ உங்க வீட்டுக்கு போகலாம் ..” என்றாள் தனம்.
– இது ‘ கணையாழி’ அக்டோபர் 2013 இதழில் வந்து உள்ளது.
![]() |
தாரமங்கலம் வளவனின் முப்பது சிறுகதைளை கொண்ட முதல் சிறுகதை தொகுப்பு, ‘ ஐயனார் கோயில் குதிரை வீரன்’ என்ற தலைப்பில் காவியா வெளியீடாக 2016 இல் வெளி வந்தது. பிறகு இவர் எழுதிய சிறுகதைகளையும், குறுநாவல்களையும் தொகுத்து ‘தோற்றப் பிழை’ என்ற தலைப்பில் காவியா பதிப்பகம் 2019 இல் வெளியிட்டு உள்ளார்கள். இந்த இரு தொகுப்பிப்பிலும் இடம் பெற்ற பல படைப்புகள் சிறுகதைகள்.காமில் பதிவிடப் பட்டு இருக்கிறது. இவ்விரண்டு தொகுப்புகளும்,…மேலும் படிக்க... |
