கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: அமானுஷம் த்ரில்லர்
கதைப்பதிவு: April 10, 2025
பார்வையிட்டோர்: 7,299 
 
 

(1964ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

அத்தியாயம்-10

கையில் தந்தியோடு நின்ற குழந்தைச்சாமி தூரத்தில் மோகினி புஸ்தகப் பையைத் தூக்கிக் கொண்டு, ஒரு அழகுத் தேர் வருவது போல் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தார்.

உடனே மரத்தின் பின்புறம் மறைந்து கொண்டார். வேகமாக வீடு நோக்கி வந்து கொண்டிருந்த மோகினியின் மனத்தில், குழந்தைச்சாமியின் நினைவு தான். வீட்டுக்குப் போனதும் சாமியிடம் பள்ளியில் கற்றதையெல்லாம் அள்ளிக் கொட்டி, அவருடைய அவருடைய அன்புப் புன்முறுவலைக் கண்டு மகிழலாம் என்று ஆசையோடு துள்ளி நடந்து போய்க் கொண்டிருந்தாள். ஆனால் அவர் ஒரு மரத்தின் பின்புறம் நின்றபடி, அவளைக் கவனித்துக் கொண்டிருந்ததை, அவள் உணரவில்லை.

மோகினி மரத்தைக் கடந்ததும், அவர் வெளியே வந்து அவள் சரிவில் இறங்கும்வரையில் அவளையே பார்த்துக் கொண்டிருந்தூார்.

பிறகு கண்களைத் துடைத்துக் கொண்டார். பெருமூச்சு விட்டபடி, தந்தியைப் பிரித்துப் பார்த்தபடி சில வினாடிகள் நின்றார்.

தந்தி கோயமுத்தூரிலிருந்து வந்திருந்தது.

அதில், “விஜயாவுக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. விஜயாவின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது-ராஜு” என்று குறிப்பிட்டு இருந்தது. மோகினி என்ற பாசத்தை வெல்லப் புறப்பட்டுக் கொண்டிருந்தவருக்கு அண்ணன் மகன் ஒரு தந்தியனுப்பி, அவருக்குக் குடும்பத் தொடர்பை ஞாபகப் படுத்தினான்.

அண்ணள் வெங்கடபதி இறக்கும் போதே அவர் மருமகள் விஜயா கருவுற்றிருந்தாள் என்பது குழந்தைச்சாமிக்குத் தெரியாது. அண்ணன் வீட்டில் சில மணி நேரங்களே தங்கிவிட்டு வெளியேறும் பழக்கம் கொண்ட அவருக்குக் குடும்ப விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆவலும் கிடையாது.

அவரிடம் யாரும் குடும்ப விஷயங்களைப்பற்றிப் பேசுவதும் கிடையாது. தந்தை இறந்தபின் சித்தப்பாதான் வீட்டுப் பெரியவர் என்று நினைத்து ராஜு தந்தி அனுப்பி இருக்க வேண்டும்.

விஜயாவுக்குக் குழந்தைச்சாமியிடம், பக்தி, மதிப்பு எதுவும் கிடையாது என்பதை அவள் அவரிடம் முதல் சந்திப்பிலேயே காட்டி விட்டிருந்தாள். அவருக்கு அதனால் வருத்தம் இல்லை.

விஜயாவுக்கு உண்மை தெரியாது. ‘சிறை சென்று திரும்பிய ஒரு குற்றவாளி, அழகிரி. சிறையிலிருந்து திரும்பியதும் நல்லவனாக வேஷம் போடுகிறான். அவனிடம் ஏன் நம் கணவரின் தந்தை மரியாதை காட்டுகிறார்?’ என்றுதான் விஜயா நினைத்தாள்.

மாமனார் வெங்கடபதிக்கும் அவர் சகோதரன் அழகிரிக்கும் உள்ள பிணைப்பு, அதில் மறைந்து கிடக்கும் தியாக சரித்திரம் – விஜயாவுக்கு யாரும் சொல்லவில்லை. சொல்லவும் முடியாது.

கோயமுத்தூர் பெரிய புள்ளிகள் நினைத்தது போல் அழகிரியைத் தப்பாக விஜயா எண்ணியதில் ஆச்சரியமில்லை.

குழந்தைச்சாமி, கோயமுத்தூர் செல்வதா, இல்லை, நேராகத் திட்டமிட்டபடி ஆனைமலைக்கோ சென்றுவிடுவதா என்று ஒரு வினாடி யோசித்தார். பிறகு ஒரு முடிவுக்கு வந்து ஷோரனூர் ரயில் சந்திப்புக்கு வந்து ரயில் ஏறினார்.

அவர் கோயமுத்தூர் வந்து சேரும் போது, இரவு ஒன்பது மணி இருக்கும். அண்ணன் பங்களாவுக்கு ஒன்பதரை மணி அளவில் வந்து சேர்ந்தார். பங்களாவின் வெளிப்புறம் ஒரே கூட்டமாக இருந்தது. குழந்தைச்சாமி நுழைந்ததை யாரும் கவனிக்கவில்லை.

விஜயா படுத்திருந்த அறை, ஓர் ஆஸ்பத்திரி போல் காட்சியளித்தது. டாக்டர்களும், நர்சுகளும் புடைசூழ நின்று கொண்டிருந்தனர்.

குழந்தைச்சாமி நுழைந்ததும் கவலையோடு, ஒரு மூலையில் உட்கார்ந்திருந்த ராஜு எழுந்து வந்து, “சித்தப்பா! வாங்க, வாங்க” என்று அழைத்துக்கொண்டு விஜயா படுத்திருக்கும் அறையினுள் நுழைந்தான்.

விஜயாவின் கண்கள் மூடியிருந்தன. முகம் வெளுத்துக் கிடந்தது. குழந்தைச்சாமி விஜயாவின் கால்களைத் தொட்டுப் பார்த்தார். ஜில்லிட்டுக் கிடந்தது. கவலையோடு திரும்பினார்.

ஒரு வேலைக்காரன் ஒரு கோப்பைப் பாலோடு வந்து, “சாமி, சாப்பிடுங்க,” என்றான்.

குழந்தைச்சாமியின் பார்வை பால் கோப்பையில் நின்றது. ராஜு கவலை யோடு, “சித்தப்பா? எனக்கு ஒன்றுமே புரியல்லே. டாக்டர்கள் ஒன்றும் பிடி கொடுத்துப் பேசமாட்டேங்கிறாங்க. ‘பல்ஸ்’ தளர்ந்து போச்சு. மேல் சுவாசம் வந்திட்டுது. என் விஜயா பிழைப்பாளா? அவள் பிழைப்பாளா – சொல்லுங்க சித்தப்பா,” என்று அவன் இழந்துவிட்ட நம்பிக்கையைச் சித்தப்பாவின் வார்த்தைகளால் மறுபடியும் அடையத் துடித்தான்.

ராஜு தன் மனைவியை எவ்வளவு நேசிக்கிறான் என்பதை அவள் முகம் காட்டியது. குழந்தைச்சாமி ஒன்றும் பதில் சொல்லவில்லை.

தன்னுடைய சட்டைப் பையிலிருந்து ஒரு காகிதப் பொட்டலத்தை எடுத்து, அதிலிருந்த குங்குமத்தை விஜயாவின் நெற்றியில் வைத்தார். “ரயிலை விட்டு இறங்கியதுமே அம்மன் கோயிலுக்குப் போயிட்டுத்தான் வந்தேன்,” என்று சொல்லிவிட்டு, வேலைக் காரன் நீட்டிய பாலை வாங்கி ஆர்வத்தோடு குடித்தார்.

திரும்பவும் ராஜுவிடாமல் “விஜயா பிழைப்பாளா? டாக்டர்கள் சொல்றதைப் பார்த்தா, எனக்குப் பயமா இருக்கு சித்தப்பா,” என்று மறுபடியும் சொன்னான்.

“ராஜு எனக்கு வைத்தியம் தெரியாது. ஆனால் வாழ்வும் அதன் முடிவும் எந்த டாக்டர் கையிலுமில்லை என்பது தெரியும். கோவில்லே நுழைஞ் சப்போ தீபாராதனை நடந்தது. இங்கே வீட்டிலே நுழைஞ்சப்போ கடிகாரத்திலே மணி அடித்தது. விஜயாவின் இந்த ரூமுக்கு வந்து, அவள் காலைத் தொட்டுப் பார்த்தேன். பனிக்கட்டி மாதிரி ஜில்லுனு இருந்தது. கவலையோடு உன் பக்கம் திரும்பினேன், அப்போ உன் வேலைக்காரன் பாலைக் கொடுத்தான், குடிக்கச் சொல்லி. ஒரு மணி நேரத்துக்குள்ளாற மூன்று சகுனம் நல்லதையே காட்டுது. அம்மன் அருளாலே, விஜயா பிழைச்சிடுவாள்னு தான் எனக்குத் தோணுது,” என்றார்.

ராஜுவின் முகம் நம்பிக்கையால் மலர்ந்தது. ”உங்க வார்த்தையே போதும் சித்தப்பா,” என்று சொல்லி விட்டு, அவரை உணவருந்த அழைத்தான்.

“வேண்டாம் ராஜு, நான் சாப்பிட்டாச்சு. இங்கே வந்தவுடனே பாலும் சாப்பிட்டுவிட்டேன். உன் குழந்தையைப் பார்க்க வேண்டும்.” என்றார்.

ராஜு அவரை அடுத்த அறைக்கு அழைத்துச் சென்றான்.

அங்கு தொட்டிலில் ஒரு பெண் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. “குழந்தைக்கு ஆதி பராசக்தியின் அழகான திருநாமங்களில் ஒன்றாகிய கௌரி என்ற பெயரை வை. அது தாய்க்கும் சேய்க்கும் நல்லது செய்யும்,” என்று கூறிவிட்டு வெளியே நகர்ந்தார்.

ராஜு வீட்டில் தங்கும்படி வேண்டினான். ஆனால் குழந்தைச்சாமி, “பரவாயில்லை. நான் போக வேண்டும்,” என்றார்.

“காரையாவது எடுத்துச் செல்லுங்கள்” என்றான். அதற்கும் ஒப்புக் கொள்ளாமல் நடந்தே வெளியே சென்று ரயில்வே ஸ்டேஷனை அடைந்தார்.

அன்று சென்ற சித்தப்பா குழந்தைச்சாமியை, அப்புறம் ராஜு பல வருஷங்களுக்குச் சந்திக்கவில்லை.

சாவு முனையில் இருந்த விஜயா டாக்டர்களின் முடிவுகளுக்கு நேர்மாறாக இரண்டு நாட்களில் கண் திறந்தாள். உயிர் தப்பினாள். ஆனால் அவள் எழுந்து நடவாட முடியாமல் படுக்கையிலேயே இருந்தால் பிரசவத்தின் காரணமான பலவீனம் என்று நினைத்தான் ராஜு.

மாதங்கள் செல்லச் செல்ல, எந்த மாறுதலும் இல்லை. அப்புறம்தான் பிரசவ அதிர்ச்சியின் விளைவாக விஜயாவின் கால்கள் விளங்காமல் போய் விட்டன என்ற உண்மையை டாக்டர்கள் வெளியிட்டார்கள்.

எப்போதும் சுறுசுறுப்பாக எல்லோரையும் அதிகாரம் செய்து பழக்கப்பட்ட விஜயாவுக்கு, படுத்த படுக்கையாக வாழ்நாள் கழியப் போகிறது என்பதை நினைக்கவும் முடியவில்லை. அவளுக்குக் கோபம் கோபமாக வந்தது. தன்னை முடமாக்கியது பிள்ளைப்பேறு என்பதை உணர்ந்தவுடன், அதற்குக் காரணமான தன் கணவன் மீது ரகசியமாகக் கோபம் வந்தது. அதை வெளியில் காட்டிக் கொள்ளவும் பயப்பட்டாள்.

மாமனார் இறந்தபின் அவர் சொத்துக்கள் எல்லாம். கணவன் மேற்பார்வைக்கு வரும். அப்போது நேரடியாக எல்லாவற்றையும் ஆண்டு அனுபவிக்க வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருந்தாள்.

ஐரோப்பா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளைக் கணவனோடு சுற்றிப் பார்க்க வேண்டும் என்றெல்லாம் திட்டம் போட்டிருந்தாள்.

ஐரோப்பாவும் அமெரிக்காவும் இனி மேல் படுக்கைதான். அவளுடைய சுற்றுளாக்களை யெல்லாம் இனி ஒரு சக்கர நாற்காலியில் சுற்றி முடிக்க வேண்டும் என்பதை நினைக்க நினைக்க அவள் உள்ளம் துடித்தது.

தன்னை அன்போடு பார்க்க வந்த சிநேகிதிகள், உறவுப் பெண்கள் எல்லாரையுமே, அவளது பரிதாப நிலைகண்டு சந்தோஷப்பட்டுப் போக வந்த எதிரிகளாகவே நினைத்தாள்

கோயமுத்தூர் வாழ்வு வெங்கடபதிக்கு எப்படி ஒரு காலத்தில் சுசந்து போய், மலையாளத்து சாந்தி வில்லாவின் தனிமையை விரும்பினாரோ, அதே போல் விஜயாவும் தெரிந்தவர்களின் தினசரித் தொடர்பு இல்லாமல் இருக்க, அதே சாந்தி வில்லாவிற்கே செல்ல விரும்பினாள். ராஜுவும் விஜயாவின் இஷ்டப் படியே ஜாகையை மறுபடியும் மலையாளத்துக்கு மாற்றினான்.


சாந்தி வில்லாவில் விஜயாவின் வாழ்வு குறுகியதுபோல், அதே மலையாளப் பகுதியில் சிறு வீட்டில் வாழ்ந்து வந்த மோகினியின் வாழ்வு வளர்ந்து பெருகிற்று. குழந்தைச்சாமி தன்னிடம் சொல்லாமல் போய்விட்டாரே என்று வருத்தம் மட்டும் மோகினியை வாட்டியது. அவரிடமிருந்து கடிதமோ வேறு எந்தவிதத் தகவலோ வரவே இல்லை. அவர் எங்கிருக்கிறார் என்றுகூட மோகினிக்குத் தெரியவில்லை. பிரிவு, மோகினியின் மனத்தில் குழந்தைச்சாமி சார்பில் இருந்த பக்தியை அதிகப்படுத்திற்று. அவர் அவளுக்குச் சொல்லிக் கொடுத்த பொன்மொழிகளை அவள் மறக்கவில்லை.

“மோகினி! உடல் என்பது ஆன்மா வாழும் வீடு. அதை நீ அழகாக, புனிதமாக வைத்திருக்க வேண்டும். அதற்கு, பயிற்சிகள் தேவை”, என்று சொன்னதை மோகினி மறக்கவே இல்லை.

நீர் இறைப்பது, தோட்ட வேலைகளைச் செய்வது எல்லாவற்றையும் மோகனி தேகப்பயிற்சியாகவே கருதினாள். “உழைப்புதான் நமக்கும் ஆண்டவனுக்கும் உள்ள ஒற்றுமை. இவ்வளவு அண்டங்களையும் படைத்துக் காத்து வருகிறான் ஆண்டவன். அவன் விடாமல் உழைக்கிறான். அதுவும் இச்சையில்லாமல் உழைக்கிறான். நாமும் அதே போல் தன்னலம் இல்லாமல் உழைத்தால்தான் ஆண்டவன் இதயத்தை ஓரளவு நெருங்க முடியும்.” குழந்தைச்சாமி கூறிய இந்த வார்த்தைகளை அடிக்கடி நினைத்துக் கொள்வாள்.

சோம்பல் வரும்போது, வேலையில் சலிப்பு வரும்போது இந்த வார்த்தையை நினைத்துக் கொண்டால், யாவும் உடனே மறைந்துவிடும்.

வீட்டுக் கடமைகளைச் செய்வது. சங்கரன்குட்டிக்குப் பாடம் கற்பிப்பது, தோட்டத்துக் காய்கறிகளை மார்க்கெட்டுக்கு எடுத்துப் போய் விற்று வருவது – எல்லா வேலைகளையும் மோகினியே ஆர்வத்தோடு செய்ய ஆரம்பித்தாள்.

உழைப்பின் விளைவாக நாராயணியின் செல்வ நிலையும் வளர்ந்தது. எதிர்காலத்தைப்பற்றிப் பயமும் குறைய ஆரம்பித்தது.

குழந்தைச்சாமி அந்த மலைச் சரிவை வீட்டுச் சென்றிருந்தாலும், அவருடைய சொற்கள் நூராயணி அம்மாள் வீட்டில் ஆட்சி புரிந்து வத்தன.

வருடங்கள் செல்லச் செல்ல, படிப் யும் உழைப்பும் தன் உடலில் செய்து வந்த மாறுதல்களை மோகினி சரியாக உணரவில்லை,

ஏற்கனவே சிவந்திருந்த அவள் மேனி. குங்குமச் சிவப்பில் வெளுப்பைக் கலத் தது போல் ஒருவிதக் களியின் நிறத்தை அடைந்தது. மோகினியின் பருவத்தின் குமுறல், அவள் அணிந்திருந்த ஆடை களின் உட்புறத்திலிருந்து ஊரின் செவிகளுக்கும் கண்களுக்கும் ஒலித்தன. விண்பூத்த வெண் தாமரையோ அல் லது வானத்து மோகினியோ என்று எண்ணும்படி இருந்தது அவள் அடு காக பவளிவரும் காட்சி. மோகினியும் மற்றவர்கள் தன்னைப் பாரிக்கும் பாபி வையில் களங்கமும் கலக்கமும் இருட் பதை உணர்ந்தாள். ஒரு கால் ஏற்றி, ஒரு கால் இறக்கி ஏதோ ஒரு தெய் வீகத் தாளத்துக்குத் தக்கபடி மோகினி அடி எடுச்சி வைக்கு து. அவளது தோளும் மார்பும், கால்

அசைவுக்குத் தக்கபடி அசைந்து உருளும் காட்சி பார்ப்பவர் உள்ளத்தில் ஆசைப் புயலை எழுப்பியதில் ஆச்சரியமில்லை. முழங்கால்வரை தொங்கும் நீண்ட கேசம் இடமிருந்து வலம் அசையும் பின்னழகைப் பார்த்தவர் பார்த்தபடி நின்றனர். முன் அழகோ, பார்த்த முனிவரும் தவம் செய்வாரோ என்று எண்ணும்படி இருந்தது. இவள் ஒரு மின்னலா, இல்லை மோகினியா என்று ஐயப்படாதவர் இல்லை.

நாராயணி அம்மாள் மோகினியை ஷோரனூர் மார்க்கெட்டுக்குக் காய்கறி விற்கச் செல்ல வேண்டாமென்று தடுத்துப் பார்த்தாள். ஆனால் மோகினி அதைக் கேட்க மாட்டாள். ஒரு சிறு மாட்டு வண்டியில் காய்கறிகளை ஏற்றிக் கொண்டு அவளே ஓட்டிச் செல்வாள்.

“அழகே ஒரு ஆபத்து” என்று நாராயணி சொல்வாள்.

“அந்த ஆபத்தைச் சமாளிக்கத் தெரியாத பெண் அழகாய் இருக்கக் கூடாது” என்று மோகினி சட்டென்று பதில் சொல்வாள்.

வண்டி மார்க்கெட் வந்தடைந்ததும், கடைக்காரர்கள் பலரும் மோகினியைச் சூழ்ந்து கொள்வார்கள். மோகினி திட்டமிட்ட விலையைக் கொஞ்சம்கூடத் தாட்சண்யம் இல்லாமல் சொல்வாள்.

வியாபாரிகள் வாய்திறந்து, உணர்விழந்து பார்த்தபடி விலையை ஒப்புக் கொள்வார்கள். பணத்தை வாங்கிக் கொண்டு, வீட்டுக்கு வேண்டிய மளிகைச் சாமான்களை அதே விலைக்கு வாங்கிக்கொண்டு, வண்டியில் இடத்திலிருந்து வீடு திரும்புவாள்.

பள்ளிப் படிப்பு முடித்ததும், கோயமுத்தூரில் மேல் படிப்புடடீச்சர் ட்ரெயினிங்-படித்துவிட்டு ஊர் திரும்பி, குழந்தைச்சாமியின் பள்ளியிலேயே ஆசிரியையாகப் பணியாற்றி வந்தாள்.

சம்பளம், காய்கறி வியாபாரத்து லாபம் – இவற்றையெல்லாம் நாராயணி அம்மாளிடமே கொடுத்துவிடுவாள்.

மோகினிக்குப் பதினெட்டு வயது முடிந்த நிலையில் நாராயணி ஷோரனூர் பண்டு ஆபீஸில் ஆயிரத்து இருநூறு ரூபாய் சேர்த்திருந்தாள்.

அந்தப் பணத்தை மோகினியின் கல்யாணத்துக்கு என்று ஒதுக்கி இருந்தாள்.

பள்ளி வேலை முடிந்து வீடு திரும்பியதும் தோட்ட வேலை. பிறகு மார்க்கெட் செல்வது – இவ்வாறு மணிக் கணக்காக உழைத்து வந்த மோகினிக்குத் திருமணத்தைப் பற்றி நினைக்கவே பொழுதில்லை.

இனக் கவர்ச்சி என்றால் என்ன என்பதை அவள் அனுபவத்தில் உணரவில்லை. அவள் மனத்தில் இருந்த ஒரே பாசம் குழந்தைச்சாமியின் மீதுதான், அவரை எப்போது பார்ப்போம் என்று ஆவலோடு இருந்தாள்.

அவர் இருக்கும் இடம்பற்றி, அவர் நடவடிக்கைபற்றி, நிச்சயமான ஒரு தகவலும் கிடைக்கவில்லை. எங்கோ ஆனைமலைக் காட்டில் இருப்பதாகச் சிலர் சொன்னார்கள். சிலர், திருவண்ணாமலையில் ஒரு பெரியவரோடு இருப்பதாகச் சொன்னர்கள். வேறு சிலர், எங்கோ ராஜஸ்தானில் இருப்பதாகத் தகவல் சொன்னார்கள்.

இந்த நிலையில் தான் ஒரு நாள் மோகினி பள்ளியிலிருந்து வீடு திரும்பியதும் காய்கறிகள் பறித்து வண்டியில் ஏற்றிக்கொண்டு மார்க்கெட்டுக்குப் புறப்பட்டாள். சங்கரன்குட்டியும் உடன் வருவேன் என்று குழந்தை போல் பிடிவாதம் செய்தான். காய்கறிகளோடு. இருபது வயதுக்கு மேற்பட்ட சங்கரன் குட்டியும் வண்டியில் ஏறிக் கொண்டான். மீசையோடு பருத்து வளர்த்திருந்த சங்கரன்குட்டி மூளையளவில் இன்னமும் குழந்தையாகவே இருந்தான்.

வண்டியோடு மார்க்கெட்டில் இறங்கியதும் ஒரு மூலையில், திண்ணையில் வைக்கப்பட்டிருந்த பஞ்சு மிட்டாய்க் கடைக்குச் சென்று பஞ்சுமிட்டாய் வாங்கித் தின்ன ஆரம்பித்துவிட்டான். தோட்டத்துக் காய்களையும், பலாப்பழங்களையும் விற்றுவிட்டு, சாமான்களை வாங்கிக் கொண்டு மோகினி வீடு திரும்ப நினைக்கும்போது, இருட்டிவிட்டது.

சங்கரன்குட்டி கூட்டத்தில் மறைந்தவன் திரும்பவில்லை. அவனுக்காகக் காத்திருந்தாள்.

குறுகிய தெருவில் போவார் வருவாரின் தீ போன்ற சுடும்பார்வை மோகினியை வேதனைக்குள்ளாக்கிற்று.

ஏழு மணி சுமாருக்குச் சங்கரன்குட்டி கையில் மிட்டாயுடன் திரும்பி வந்தான்.

”குட்டி! இனி உன்னை மார்க்கெட்டுக்குக் கூட்டிட்டு வரமாட்டேன். இந்தேரம் வரையிலும் எங்கே போயிருந்தே?” என்று மோகினி கடிந்து கொண்டாள்.

குட்டி நடுங்கியபடி. “மோகினி! மோகினி! கோபிக்காதே.. புகைவண்டி பார்க்கப் போயிருந்தேன். வண்டி அப்படியே முட்டிமோத வந்தது. பயந்து, ஓடி வந்துட்டேன்,” என்று சொல்லி விட்டு, ரயில் போல் ஊத ஆரம்பித்தான்.

மோகினி வெறுப்புடன், “ஏறிக்க வண்டியிலே,” என்றாள். உடனே குட்டி “குப் குப்” என்று ரயில்போல் சத்தமிட்டபடி வண்டியின் பின்புறம் ஏறிக் கொண்டான்.

வயது நிரம்பியவன் ரயில்போல் சத்தமிடும் வேடிக்கையைப் பார்த்து, கடைக்காரர்கள் சிரித்தபடி இருந்தனர்.

மோகினிக்கு வேதனையாய் இருந்தது. வண்டியில் ஏறிக்கொண்டு, வேகமாக ஓட்டினாள்.

வண்டியினுள் இருந்தபடி குட்டி சாமான் பொட்டணங்களை ஒவ்வொன்றாகப் பிரித்தான். அவரைப் பந்தல் போட மூங்கில்கள் வாங்கி வண்டியில் வைத்திருந்தாள் மோகினி.

அதைப் பார்த்த குட்டி, “மூங்கில் எதுக்காக வாங்கியிருக்கே மோகினி?” என்று கேட்டான், ஆத்திரத்துடன் இருந்த மோகினி, “உன் தலையிலே அடிக்க,” என்று வெடுக்கென்று பதில் சொல்லிலிட்டு, வண்டியை இருளில் வீடு நோக்கி ஓட்டிக் கொண்டிருந்தாள்.

குட்டி வண்டியினுள் இருந்தபடி வெல்லப் பொட்டலத்தைப் பிரித்து, வெல்லத்தை எடுத்துக் கடிக்க ஆரம்பித்தான்.

வண்டி அடர்த்தியான தென்னை மரங்கள் நிறைந்த தோப்பினுள் நுழைந்தது. வண்டி நடுத்தோப்பில் நுழைந்ததும் மரங்களில் பின்புறம் இருந்து ஓர் உருவம் நகர்வதுபோல் தெரிந்தது.

மோகினியின் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. வண்டியை வேகமாக ஓட்டினாள்.

ஆனால் மரத்தின் பின்புறம் மறைந்து இருந்தவன் திடீரென்று பாய்ந்து வந்து வண்டியை நிறுத்தினான்.

அவன், வரிகள் போட்ட பளியன் அணிந்து இருந்தான். ஹிட்லர் மீசை வைத்து இருந்தான். அவன் வாய்விட்டுச் சிரித்தபடி மோகினியைப் பார்த்தான்.

அவன் வெறிப் பார்வை மோகினிக்குப் புதிதல்ல.

அடிக்கடி அவள் தன்னை இப்படி வெறியோடு பார்ப்பதைச் சில மாதங்களாக உணர்ந்திருக்கிறாள். மரக்கடை வைத்திருந்த காக்கா வஹாப், அவள் பள்ளியிலிருந்து திரும்பும் போது கடை வாசலில் நின்றபடி சிரிப்பான். அவன் பார்வை எப்போதும் அவள் உடல் மீதே லயித்து நிற்கும். “வஹாப், வண்டியை விடுங்க,” என்றாள்.

அதே சமயம் காக்கா, வண்டியின் உட்புறமிருக்கும் சங்கரன்குட்டியைக் கவனித்தான். குட்டியும் பயத்தோடு காக்காவைக் கவனித்தான். “குட்டி! இறங்குடா!” என்று கட்டளை இட்டான் காக்கா.

அடுத்த வினாடியே குட்டி நடுங்கும் கால்களோடு, வண்டியில் இருந்து கீழே குதித்தான். “டேய் பிராந்து! பொய்க் கோடா! இவ்விட இருந்து பொய்க் கோடா,” என்று உரத்த குரலில் கட்டளையிட்டான்.

“ஞான் ஒண்ணும். செய்யில்லா. ஞான் ஒண்ணும் செய்யில்லா”, என்று அவறியபடி குட்டி நடுங்கி ஓடினான்.

“ஓடாதே குட்டி, நில்லு. என்னைத் தனியே விட்டு ஓடாதே குட்டி! நில்லு!” என்று மோகினி கூப்பிடுவதைக்கூடக் கேளாமல் குட்டி ஓடினான்.

ஓடும் குட்டியைப் பார்த்து வஹாப் சிரித்தபடி, “அந்தக் குட்டி சுத்தப் பட்டி. ஆறடி உயரம் இருக்கான். காலடி ‘தில்’ அவனுக்கு இல்லே,” என்று சொல்லியபடி மோகினியை நெருங்கினான்.

மோகினியின் முகம் வியர்த்தது. வஹாபின் கை மோகினியின் தோளைப் பற்றியது. மோகினி சட்டென்று விலகிக் கொண்டாள், அவன் கையில் அவளது ஜாக்கெட் மாட்டிக் கொள்ளவே, அது கிழிந்தது. அவன் அறிவையும் உணர்வையும் இழந்தான். உதடுகள் துடித்தன. மார்பைக் கைகளால் மூடிக் கொண்டாள் மோகினி.

அத்தியாயம்-11

இருண்ட தோப்பில், தனிமையில் வஹாப்பின் வெறுத்த பார்வையில் இருந்தாள் மோகிலி. அதிக அழகு ஆபத்தை விளைவிக்கும் என்பது அன்றுதான் மோகினிக்கு அனுபவ பூர்வமாகத் தெரிந்தது. வஹாப்பின் மூச்சு வேகமாக வந்து போய்க் கொண்டிருந்தது.

மோகினி அவசர அவசரமாகத் தன் மார்பைக் கைகளால் மூடிக் கொண்டாள். வஹாப் அவள் கைகளைப் பிடித்து இழுத்தான். மோகினி திமிறினாள். இந்தப் போராட்டத்தின் விளைவாக மோகினி தரையில் விழுந்தாள்.

வஹாப் விரட்டியதில் பயந்து ஓடிய சங்கரன்குட்டி தோப்பை விட்டு ஓடவில்லை. அவனுக்கு, மோகினிக்கு உதவி புரியும் துணிவும் இல்லை. ஆனால் அங்கு என்ன நடக்கிறது என்பதை இருந்து பார்க்க வேண்டுமென்ற விபரீத ஆசை மட்டும் அவனுக்கிருந்தது. மரத்தின் பின்புறம் நின்று நடப்பதைக் கவனித்தான்.

மோகினியின் ஆடை கிழிந்து அவள் மானத்தோடு போராடுவதைப் பார்த்தான். இதுநாள் வரை அவளோடு நெருங்கி வாழ்ந்த போதிலும், அவன் மோகினியின் பெண்மையை ஒரு ஆண் பார்க்கும் முறையில் இது வரை பார்த்ததில்லை. கிழிந்த ரவிக்கையோடு உடல் வெளித் தெரிய நிற்கும் மோகினியைப் பார்த்த சங்கரன் குட்டியின் குழம்பிய அறிவில் புரியாத உணர்ச்சிகள் எழ ஆரம்பித்தன.

குட்டி ஓடியபின் மோகினியின் மனத்தில் ஒன்றன்பின் ஒன்றாகப் பல உணர்ச்சிகள்! வஹாப் ஒரு மிருகம் என்பதை உணர்ந்த மோகினிக்கு முதலில் வெறுப்பு ஏற்பட்டது. அவள் மீது அவன் கை பட்டதும் அருவருப்பு. அருவருப்பின் காரணமாக அவள் பிடியிலிருந்து நகர்ந்து கொண்டாள். அதனால் அவள் ரவிக்கை கிழிய நேர்ந்தது. அவள் வெறுக்கும் மனித மிருகத்தின் முன் ஆடை குலையும்படியாயிற்றே என்றதனால் வேதனை தரும் லஜ்ஜை அவளைத் தாக்கியது. கைளால் உடலை மூடிக் கொண்டான். அவன் கைகளைப் பற்றி இழுத்ததும் பீதி அவள் மனத்தைத் தாக்கியது. விலை மதிப்பில்லாத தன்னுடைய மானம் என்ற சொத்தை இழக்க நேருமோ என்ற பயம் அவளை இருள் சூழ்வது போல் சூழ்ந்தது. கை கால்கள் அசையும் சக்தியை இழந்தன.

“ஐயோ! என்னைக் காப்பாற்ற யாருமில்லையா?” என்று கூச்சலிடலாம். என்றாலும் குரல் எழவில்லை.

செயலற்ற ஊமையாய் வினாடிக்கு வினாடி பயம் ஏறிக்கொண்டே போகும் நிலையில், மூச்சு மட்டும் வேகமாக வந்து போய்க் கொண்டிருந்தது. உடல் வியர்த்தது. கண்கள் மருண்டு அங்கும் இங்கும் நோக்கின. பீதியின் காரணமாக மோகினியின் உடலில் ஏற்பட்ட லட்சணங்கள் எல்லாம், வஹாப்பின் ஆசை வெறி என்ற நெருப்புக்கு நெய்யாக உதவி, அதை இன்னும் பன்மடங்கு கொழுந்து விட்டு எரியச் செய்தன.

அந்த வினாடியில் மோகினியின் பயம் அதன் எல்லைக் கோட்டை அடைந்தது. அந்தப் பயத்தின் எல்லையில் அருவருப்பின் எல்லையையும் கண்டாள். அதே இடத்தில் பயம் முடிந்து ஒரு வித முரட்டுத் தைரியமும் தேகத்தில் ஒரு வித அசாதாரணமான சக்தியும் பிறப்பதை உணர்ந்தாள். அவனை நெட்டித் தள்ளினாள். செவ்வாழைத் தண்டு போன்ற அந்தக் கைகளுக்கு எப்படித்தான் அந்தப் பலம் வந்ததோ, அவளுக்கே தெரியவில்லை.

தள்ளப்பட்ட வஹாப் ஒரு வினாடிக்குச் செயல் இழந்து கிடந்தான். உடனே எழுந்தான். சிரித்தான். “துள்ளும் மீன் என்றால் எனக்குப் படா குஷி,” என்று சொல்லிக்கொண்டே மோகினியை நோக்கி நெருங்கினான்.

அதற்குள். மோகினி அவரைப் பந்தலுக்கு என்று வாங்கி வைத்திருந்த மூங்கில்கள், வண்டியின் வெளிப்புறத்தில் நீட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். உடனே பாய்ந்து ஒரு மூங்கிலை வண்டியிலிருந்து உருவினாள். உழைப்பால் பலமேறிய கைகள், மூங்கில் கழியின் துணையோடு சுற்ற ஆரம்பித்தன. ஆசையோடு நெருங்கிய வஹாப்பின் தலை, முதுகு, தொடை முதலிய இடங்களில் மூங்கில் அடி விழுந்து வஹாப்பைத் திணற வைத்தது. அடுத்த வினாடி மோகினியைப் பயமுறுத்தும் நோக்கத்துடன் வஹாப் தன் பையிலிருந்து பேனாக்கத்தியை எடுத்துப் பிரித்துக் கொண்டு மோகினியை நெருங்கினான்.

இன்னது செய்கிறோம் என்று தெரியாத ஒரு நிலையில் மோகினி இருந்தபடியால் அவளுக்குத் கத்தி பயத்தைத் தரவில்லை, மூங்கிலை முரட்டு வேகமாகச் சுழற்றியபடி வஹாப்பை நெருங்கினாள். மூங்கில் வஹாப்பின் மணிக்கட்டில் படிரென்று அடித்து, கத்தியைத் தொலைவில் வீசி எறியச் செய்தது. மூங்கிலின் பலம் பொருந்திய அடி, கை எலும்பில் படவே, பொறுக்க முடியாத வலியைக் கொடுத்தது. வலி என்ற உணர்ச்சி தேகத்தில் படரவும் வஹாப்பின் காம இச்சை குறைய ஆரம்பித்தது. தொடர்ந்து மோகினி அடித்துக் கொண்டே இருந்தாள்.

வஹாப்பின் மனத்தில், மூங்கிலைச் சுழற்றிச் சுழற்றியடிக்கும் மோகினியைப் பார்த்துப் பயம் பிடித்துக் கொண்டது. சற்று தூரத்தில் போக்கு வண்டிகளின் சத்தம் கேட்கவே காக்கா வஹாப் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான். அவன் ஓடி விட்டான் என்பதைக் கூடப் புரிந்து கொள்ளாமல் மோகினி தொடர்ந்து மூங்கியைச் சுழற்றியபடி சில வினாடிகள் இருந்தாள். பிறகுதான் மூங்கிலைக் கீழே எறிந்தாள்.

அவள் உடம்பு இன்னும் நடுங்கி ஆடிக்கொண்டே இருந்தது. புரியாத பலவித உணர்ச்சிகளால் தொடர்ந்து தாக்கப்பட்டதால், அவளுக்குச் சிறிது நேரம் ஒன்றுமே புரியவில்லை. தனியாக நின்று ஓர் ஆண் மிருகத்தை விரட்டி விட்டோம் என்ற வெற்றி உணர்ச்சி கூட ஏற்படவில்லை. தன்னைத்தானே அவள் பாராட்டிக் கொள்ளவும் இல்லை, ஒரு பெண்ணுக்கு இயற்கையாக உள்ள பெண்மை அவளைப் பற்றிக் கொள்ள, அப்படியே வண்டிக் கூட்டைப் பிடித்துக் கொண்டு விக்கி விக்கி அழுதாள். அப்படி அழுவதில் ஒரு பெரிய ஆறுதல் இருப்பதாகவும் நினைத்தாள்.

ஒரு கோழையாக, மோகினியின் வீரப் போராட்டத்தை மரத்தின் பின் இருந்து பார்த்துக் கொண்டிருந்த குட்டிக்கு மோகினி ஏன் அழுகிறாள் என்பது புரியவில்லை. மோகினி மூங்கிலால் அடித்துத் தரையில் எறிந்திருந்த காக்காவின் பிரித்த கத்தியை எடுத்துக் கொண்டு மெள்ள அடி மேல் அடி வைத்து சங்கரன் குட்டி மோகினியை நெருங்கினான்.

அவள் அழுது கொண்டிப்பதைப் பார்த்த குட்டி, ”மோகினி! நீ ஆடின குச்சிகள் ரொம்ப நல்லாயிருந்தது. இந்த குச்சிகள் நீ எவ்விடே படிச்சே மோகினி?” என்று கேட்டான்.

மோகினி பதில் சொல்லவில்லை. ஆஜானுபாகுவாக வளர்ந்திருக்கும் குட்டியைப் பார்த்தாள், உருண்டு திரண்டு வலிமையோடு காணப்படும் அவனுடைய கரங்கள் தனக்கு எந்தவிதமான பாதுகாப்பும் அளிக்கவில்லையே என்பதை நினைத்ததும் வருந்தினாள். அவனை நொந்து பயனில்லை என்பதை உணர்ந்து கொண்டு ஆத்திரத்தை அடக்கியபடி, “சரி குட்டி. பேசாம வண்டியிலே ஏறிக்கோ.” என்று சொல்லிக் கொண்டே, கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

குட்டி அவளை அதோடு விடுவதாயில்லை, “மோகினி! ஆ பட்டியிண்ட மகன் (நாயின் மகன்) வஹாப்பில்லே அழணும்? நீ ஏன் அழணும்?” என்று தொடர்ந்து கேட்டான்.

பொறுமையை இழந்த மோகினி, “நீ சும்மா இருக்கமாட்டே? உன்னோட தனியா வந்ததை நினைச்சுத்தான் அழறேன்,” என்றாள் வெடுக்கென்று.

அப்புறம், குட்டி பேசாமல் வீடு செல்லும் வரையில், வண்டியின் பின் புறம் உட்கார்ந்திருந்தான். ஆனால் அடிக்கடி மோகினியின் முதுகுப்புறத்தைப் பார்த்தபடி இருந்தான். அவளைத் தொட வேண்டுமென்று ஓர்முறை நினைத்தான். ஆனாலும் அவனுக்குப் பயம். பேசாமல் இருந்துவிட்டான்.

வீடு வந்ததும் சாமாள்களை எடுத்து வீட்டுக்குள் கொண்டு போய் வைத்தான். மோகினி மாட்டைப் பட்டியில் கட்டிவிட்டு வண்டியைத் தள்ளி ஒதுக்குப்புறமாக வைத்துவிட்டு வீட்டுக்குள் வருவதற்குள் குட்டி தன் தாய் நாராயணி அம்மாளிடம், வழியில் நிகழ்ந்த ஆபத்தையும், அதை மோகினி சமாளித்த விதத்தையும் விவரமாகக் கூறிவிட்டான்.

நாராயணி பதறி விட்டாள். “அதாம் மா, நீ மார்க்கெட்டுக்குப் போக வேண்டாம்னு சொல்றேன். உனக்கு இருக்கிற அழக்குக்கு, நீ படுதாவுக்குப் பின்னாலே இருக்கணும். நீ இனிமே தனியா எங்கேயும் போகாதே மோகினி,” என்றாள்.

மோகினிக்குக் குட்டியின் மீது ஆத்திரம் வந்தது. “எங்கேயும் தனியா போகாம், நான் எப்படிம்மா வாத்தியார் வேலை பார்க்க முடியும்? எப்படித் தான் வாழமுடியும்? இன்னிக்கித்தாம்மா எனக்கு ஒரு புது உண்மை புரிஞ்சது.” என்றாள்.

“என்ன மோகினி அது?” என்று கேட்டாள் நாராயணி.

”பயம் என்பது கொஞ்ச நேரத்துக்குத்தாம்மா. அப்புறம் பயம் முடிஞ்சவுடனே, தைரியம் தானே வருதும்மா”.

சற்று முன்பு அனுபவித்த பீதியைச் சமாளித்துச் சாமர்த்தியமாக அவள் பேசுகிறாள் என்பதை உணர்ந்து கொண்ட நாராயணி அம்மாள், “போதும் போதும் உன் பேச்சு. ஒருநாள் போலவா இருக்கும் எல்லா நாளும்? இன்னிக்கு உன்னைக் குருவா உன்னைக் குருவாயூரப்பன்தான் காப்பாற்றியிருக்கார்,” என்று சொல்லி மோகினியைச் சாப்பிட்டு விட்டுப் படுத்துக் கொள்ளும் படி கட்டணயிட்டாள்.

அந்த இரவிலிருந்து சங்கரன்குட்டி தன்னை ஒரு புது விதமாகப் பார்ப்பதை மோகினி உணரவில்லை. அதற்கு மோகினிக்கு அவகாசமும் இல்லை. சங்கரன் குட்டி என்பவன் ஒன்றும் அறியாத வளர்ந்த குழத்தை. தன்னை விட வயதில் மூத்த ஒரு குழந்தை. அவனைக் கண்டிக்க வேண்டிய சமயங்களில் கண்டிக்க வேண்டும். பச்சாத்தாபம் காட்ட வேண்டிய சமயங்களில் பச்சாத்தாபம் காட்ட வேண்டும். இப்படித் தனக்குள்ளேயே ஒரு தீர்மானம் செய்து வைத்திருந்தாள் மோகினி.

மறுநாள் காலை குளித்துவிட்டு, குடை எடுத்துப் பிடித்துக் கொண்டு அவள் பாடம் சொல்லித் தரும் பள்ளிக்குச் சென்றாள். அதுவே அவள் படித்த பள்ளி. இப்போது அவள் அதன் ஆசிரியை.

தினமும் மோகினி பள்ளியில் நுழைந்ததும் செருப்பை வெளியே விட்டுவிட்டு நடுமத்தியப் பகுதியில் உள்ள தொழும் ஹாலில் சில வினாடிகள் அமர்ந்துவிட்டுத்தான் தன் வகுப்புக்குச் செல்வது வழக்கம்.

அந்தத் தொழுகைக் கூடத்தில் சுவரில் திருவண்ணுமலையில் வாழ்ந்த ரமண பகவான் உருவப்படம், ராமகிருஷ்ண பரம ஹம்சர், விவேகானந்தர், சிவானந்தர் ஆகியோரின் படங்கள் மாட்டி வைக்கப்பட்டிருந்தன. அதன் ஒரு முலையில் சிறிய அளவில் குழந்தைச்சாமியின் படமும் மாட்டப்பட்டிருந்தது. அவரது படத்தின் முன் நின்று சிந்தித்தபடி இருந்தாள் மோகினி. அவர் எங்கிருக்கிறாரோ என்ற நினைப்பும், அவரைப் பார்க்க வேண்டும் என்ற துடிப்பும் அவள் மனத்தில் இருந்தன.

தொழுகை அறையின் வெளியே வந்ததும் மூங்கில் படல்கள் வழியே மோகினியின் பார்வை சென்றது. பள்ளிக்கூடத்தின் வெளிப்புறத்தில் மிகப் பெரிய கார் ஒன்று நின்று கொண்டு இருந்தது. அந்தக் கார் பொன் வண்டு கலரில் பார்க்க மிகவும் அழகாயிருந்தது.

இதற்கு முன் பலமுறை தூரத்திலிருந்து அந்தக் கார் போவதை மோகினி பார்த்திருக்கிறாள். அது அந்தப் பள்ளிக்குத் தனம் உதவிக் கட்டியவரான ‘சாந்தி வில்லா’ உரிமையாளரின் கார் என்று கேள்விப்பட்டிருக்கிறாள்.

சாந்தி லில்லா முதலாளி ராஜுவின் கையெழுத்தைத்தான் இது வரை மோகினி பள்ளிக்கு அவ்வப்போது வரும் அறிக்கைகளில் பார்த்திருக்கிறாள். பள்ளியின் நிர்வாகியும், தலைமை ஆசிரியையுமான பாருகுட்டி அம்மாள்தான் அவரிடம் பள்ளி விஷயமாகப் பணம் பெறவோ, பள்ளியின் அன்றாட விஷயங்களைப் பற்றிப் பேசவோ போய் வருவாள்.

பள்ளியை ஆரம்பித்த குழந்தைச்சாமியும் எங்கோ சென்று விட்டார். அதற்கு மூலதனம் அளித்து ரட்சிக்கும் பிரபுவும் பள்ளிப்பக்கம் வருவதில்லை. இந்த நிலையில் பள்ளியின் வரவு செலவு நிர்வாகம் எல்லாமே பாருகுட்டி அம்மாவின் கையில்தான் இருந்தது. வேலையில் ஒருவரை சேர்த்தல், வேலையிலிருந்து ஒருவரைச் நீக்கல், காத்தல், ஆகிய பள்ளியைப் பொறுத்த முத்தொழிலையும் பாருகுட்டி அம்மாளே செய்து வந்தாள்.

மோகினி ஒருத்திதான் குழந்தைச்சாமியின் வேண்டுதல்படியின் பள்ளி ஆசிரியையாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டான். அதுவும் குழந்தைச்சாமி ஊரை விட்டுப் போகும் போது, அவர் எழுதி வைத்து விட்டுப் போன படி: “மோகினி இலவசமாகப் படிக்க வேண்டியது; மேல் படிப்புப் படிக்க அவள் விரும்பினால் அவளுக்குப் பள்ளிக்கூடம் பண உதவி செய்ய வேண்டியது. மறுபடியும் அவள் இதே பள்ளியில் வேலை பார்க்க விரும்பினால் அவளுக்கு ஆசிரியை வேலை கொடுக்கவேண்டியது.”

மேற்படி குறிப்பின் பிரகாரம்தான் அவளுக்கு அந்த வேலை கிடைத்தது. பாருகுட்டி அம்மாளுக்கு மோகினியைப் பிடிக்காமல் போயிருந்தால் இந்த உதவிகள் மோகினிக்குக் கிடைக்காமலே போயிருக்கலாம். மோகினியின் சார்பில் உதவி செய்யக் குழந்தைச்சாமி அங்கில்லை, அவரது அண்ணன் ராஜுவுக்கோ மோகினி யைப்பற்றி ஒன்றும் தெரியாது.

இப்போது ராஜுவின் கார் பள்ளிக்கு வந்ததில் பள்ளியைச் சேர்ந்த எல்லாருக்குமே ஆச்சரியம், மோகினி காருக்குள் எட்டிப் பார்த்தாள்.

மோகினியின் பார்வையில் ராஜுவின் முகம் தெரியவில்லை. ராஜுலின் முதுகுப் புறமே தெரிந்தது. சில்க் ஜிப்பாவும், அதன் மேல்புறம் உயர்ந்து வளர்ந்த கழுத்தும், கறுத்து அடர்த்தியாயிருந்த சுருண்ட தலை மயிரும்தான் தெரிந்தன. அடுத்த வினாடியே கார் புறப்பட்டுச் சென்றது. காரின் அருகில் நின்றுகொண்டிருந்த பாருகுட்டி அம்மாள், மஞ்சள் நிற சில்க் கௌன், வெள்ளை ஸ்டாக்கிங், பூட்ஸ் அணிந்த குழந்தையை மெள்ள அழைத்தபடி பள்ளியை நோக்கி வந்தாள்.

தலைமை ஆசிரியையின் கையைப் பிடித்துக் கொண்டு வந்த குழந்தையின் முகம் மெலிந்து, உணர்ச்சி வில்லாமல் வெளுப்பாக இருந்தது. அழகான முகம்தான் – ஆனால் புஷ்டியானதாகத் தெரிய வில்லை. குழந்தைகளுக்கு உள்ள இயற்கையான குதூகலம், அந்தக் குழந்தையிடம் இல்லை. மெதுவாக அடிமேல் அடி எடுத்து வைத்து. ஒரு வயது முதிர்ந்த பெண் உப்பதுபோல் அந்தக் குழந்தை நடந்து வந்தது. முகத்தைப் பார்த்தால், ஆறு ஏழு வயது இருக்கும்போல் தெரிந்தது. ஆனால் அதற்குத் தகுந்த வளர்ச்சி குழந்தைக்கு இல்லை. குழந்தையின் உதடுகள் சற்று வெளுத்தும் கறுத்தும் இருந்தன.

பாருகுட்டி அம்மாளின் பின்புறம் டவாலி அணிந்த வேலைக்காரன் ஒருவன் குழந்தையின் சிலேட், புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்த பையைத் தூக்கிக்கொண்டு வந்தான்.

தலைமை ஆசிரியையோடு வரும் குழந்தையை வேடிக்கை பார்க்க மற்ற ஏழைக் குழந்தைகள் இருபுறமும் கூடி விட்டனர்.

ஆனால் எல்லாக் குழந்தைகளும் தன்னையே உற்றுப் பார்க்கும் புதுமை, அந்தச் செல்வக் குழந்தைக்குக் கலக்கத்தைக் கொடுத்தது.பள்ளியின் வெளிப்புறம் உள்ள நான்கு படிகளை ஏறித்தான் பள்ளியின் உட்புறம் நுழைய வேண்டும். பாருகுட்டி அம்மாளும் அந்தக் குழந்தையும் படிக்கட்டை அடைந்ததும், ஒன்றும் பேசாமல் புத்தகப் பையுடன் பின்னால் வந்து கொண்டிருந்த சேவகன் திடீரென்று குழந்தையின் முன்னால் வந்தான். ”சின்னம்மா! பொறுங்க,” என்றான். உடனே அந்தக் குழந்தையை லபக்கென்று தூக்கினான். நான்கு படிகளையும் மெள்ளக் கடந்து குழந்தையை இறக்கித் தரையில் விட்டான்.

தலைமை ஆசிரியையின் திகைப்பைத் தீர்க்கும் நோக்கத்தோடு அந்தச் சேவகன், “சின்னம்மா! உங்களுக்கு ‘ஹார்ட்’ சரியில்லே. படி ஏறக் கூடாது, வேகமாக ஓடக்கூடாதுன்னு டாக்டர் சொல்லி இருக்காரே?” என்றான்.

அந்தச் செல்வக் குழந்தை மற்றக் குழந்தைகளைப் பார்த்து வெட்கத்தோடு தலை குனிந்தது. அந்தக் குழைந்தைக்குத் தன்னுடைய பலவீனத்தை எல்லோர் முன்னிலையிலும் அம்பலப் படுத்திய வேலைக்காரன் மீது ஆத்திரம் லந்தது. ஆத்திரம் காரணமாக ரத்தம் குபுகுபுவென்று குழந்தையின் முகத்துக்கு வர குழந்தையின் உதடுகள் இன்னும் கறுப்பாயின.

அந்தக் குழந்தையின் நிலையை மோகினி உணர்ந்து கொண்டான். அவளையுமறியாமல் மோகினிக்கு அந்தக் குழந்தையின் மேல் ஓர் வகை பச்சாத்தாபம் ஏற்பட்டது.

பாருகுட்டி அம்மாளின் பார்வை மோகினியின் மீது நின்றது. “மோகினி, இதுதான் கௌரி. நம்ம பள்ளியில் போஷகர் ராஜுவின் ஒரே பெண், கௌரி உன் வகுப்பில்தான் படிக்கப் போகிறாள். அவளை நீ ஜாக்கிரதையாகக் கவனித்துக் கொள்ளவேண்டும்,” என்று சொல்லிவிட்டு, குழந்தை கௌரியிடம் திரும்பினான். “கௌரி! இவுங்கதான் உன் டிச்சர் மிஸ் மோகினி.”

கௌரி அப்படியே மோகினியை விழுங்குபவள் போல் பார்த்தாள். கௌரியின் முகத்திலேயே அவள் கண்கள்தான் சிறந்த பகுதி. அகன்று, சிறுத்து நீர்படிந்து, மோகினியை நோக்கின. அந்தப் பார்வையில் ஒரு விதக் கெஞ்சல் பாவம் தான் இருந்தது. உடனே ஓடிப் போய் அந்தக் குழந்தையை அணைத்துக்கொண்டு முத்தமிட வேண்டுமென்று தோன்றியது மோகினிக்கு. ஆனால், “நாம் ஒரு ஆசிரியை. பள்ளியில், மற்றக் குழந்தைகள் முன்பு நிற்கிறோம்” என்ற நினைப்புத்தான் மோகினியைத் தடுத்தது.

மோகினியையே முறைத்துப் பார்த் துக் கொண்டிருந்த கௌரி திடீரென்று பிரித்தாள். “இவுங்களா டீச்சர்? ரொம்ப அழகா, சினிமா ஸ்டார். மாதிரி இருக்காங்களே?” என்று சொன்னாள். இதுவரை புதிதாக வந்த குழந்தையை ஒரு விசித்திரப் பொருளைப் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்த மற்றக் குழந்தைகள் கொல்லென்று சிரித்தனர். தமிழ் புரியாத பல மலையாளக் குழந்தைகள். மற்றக் குழந்தைகள் சிரிப்பதைப் பார்த்துப் புரித்து கொண்டது போல் சிரிப்பில் சேர்ந்து கொண்டார்கள்

பாருகுட்டி அம்மாளும் மோகினியும் ஒன்றும் புரியாமல் நின்றர்கள். குழந்தை கௌரி எல்லாக் குழந்தைகளும் உரக்கச் சிரிப்பதைப் பார்த்து, தன்னைத்தான் கேலி செய்கிறார்கள் என்று நினைத்தாள், தன்னைப் பார்த்துச் சிரிக்கும் மற்றக் குழந்தைகளை வெறுத்தாள், டீச்சர் மோகினியின் மீதும் ஒரு விதக் கடுப்பு ஏற்பட்டது.

சந்தர்ப்பத்தைச் சமாளிக்கும் எண்ணத்தோடு மோகினி, “கௌரி! வா, வகுப்புக்குப் போகலாம்.” என்று சொல்லிக் குழந்தையை நோக்கிக் கையை நீட்டினான்.

குழந்தை கௌரி மோகினியின் கையைப் பிடித்துக்கொண்டு பின் செல்லத் தயங்கினாள். மோகினியை ஒரு விதக் கசப்போடு பார்த்தபடி நின்றாள்.

அந்தியாயம்-12

நீட்டிய கையை வாங்கிக் கொள்ளாமலே, ஒருவித கலவரத்தோடு நிற்கும் குழந்தையை மோகினி கவனித்தாள். கௌரியின் மருண்ட பார்வை தன்னையும் மற்றச் சிரிக்கும் குழந்தைகளையும் மாறி மாறிப் பார்ப்பதை அறிந்தாள்.

கௌரி பள்ளிக்கு வந்த முதல் நாளே பள்ளியை வெறுக்கக் கூடாது என்ற உண்மையை மோகினி உணர்ந்தாள். பள்ளி இன்பம் தரும் சூழ் நிலையாக இல்லாவிட்டால், பள்ளி தரும் போதனை மாணவிக்குப் பயன்படாது என்பதை உணர்ந்தவள் மோகினி. குழந்தைச்சாமி, அவள் சிறுமியாக இருந்தபோது, படிப்பை எவ்வளவு கவர்ச்சியாகச் செய்திருக்கிறார்!

இளமையில் மனம். விரிய வேண்டும், மலர்போல் விரியவேண்டும். அன்னிய விமர்சனமோ, புரளியோ பிஞ்சு மனத்தை விரியச் செய்யாமல் குவியச் செய்து விட்டால் அந்த மனம் குவிந்து குவிந்து, சிறுத்து, தனிமையிலே இருந்தபடி உலகத்தை வெறுக்கத் தொடங்கும். உலகமே தம் விரோதி என்ற விபரீதமான அடிப்படை மனத்தில் எழுந்துவிடும். வலிமை இல்லாத இளம் உள்ளங்களை மற்றவர்களின் பொறுப்பற்ற கேலியும் சிரிப்பும் தாக்கி, முறித்து விடும் என்பது மோகினிக்குத் தெரியும். இளமையில் வறுமை கூடக் கொடிது அல்ல. ஆனால் நோயும் அன்பில்லாமையும் கொடிது என்பதை உணர்ந்திருந்தாள்.

செல்வத்தில் வாழும் கௌரியின் முகம் வெளுத்து, உதடுகள் கறுத்து இருக்க, அவள் இளம் வாழ்வில் ஒரு விதக் குறை இருக்கவேண்டும். அது அன்பில்லாத சூழ்நிலையாக இருக்குமோ என மோகினி ஐயமடைந்தாள். உடனே அதிகப்படியாகப் புன்முறுவல் செய்தபடி மிகக் கனிவோடு. ”கௌரி! வகுப்புக்குப் போனால் நாம் எவ்வளவோ பேசலாம். வா கௌரி’ என்று வலுவில் போய், கௌரியின் கையைப் பிடித்துச் கொண்டாள்.

கௌரி வேறு வழியில்லாமல் நடந்தாள். வகுப்புக்குப் போகும் வழியில் கௌரியின் பார்வை மோகினியின் மீதே நின்றது. வெண்மையாக, தந்தம் போன்ற, மாசு மறுவற்ற கைகளைப் பார்த்தாள். அடுத்தபடியாக அவள் கண் பார்வைக்கு நேராக இருந்தது மோகினியின் தங்க நிறமான இடை, டீச்சரின் நடையே ஒரு நாட்டியமாகத் தோன்றியது குழந்தைக்கு.

வகுப்பை அடைந்ததும் குழந்தை கௌரி அப்படியே தன்னை விறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது மோகினிக்கு ஒரு விதக் கூச்சத்தைக் கொடுத்தது. கௌரி குழந்தைதான் – அதுவும் பெண் குழந்தை தான் – ஆனாலும் அவள் கண்களின் பார்வை அவளை விட வயதில் முதிர்ந்த மோகினிக்கு ஒருவித சலனத்தை உண்டு பண்ணிற்று. அதன் காரணம் மோகினிக்கே புரிய வில்லை.

கௌரியின் பார்வையை எதிர்த்து நோக்க முயன்றபோது, மோகினியின் இதயத்தில் என்னவோ போன்ற ஒரு விதத் துடிப்பு ஏற்பட்டது. தன் குழம்பிய உணர்ச்சிகளை அடக்கிக் கொண்ட பின் மோகினி, “என்ன கௌரி அப்படிப் பார்க்கறே?” என்று கேட்டாள்.

அதற்கு அந்தக் குழந்தை சிரித்த படி, “டீச்சர்! நீங்க ரொம்ப அழகா நடக்கறீங்க,” என்றாள்.

இப்போதுதான் கௌரி வகுப்புக்கு வரும்வரையில் தன்னுடைய நடையையே கவனித்து வந்திருக்கிறாள் என்பது புரிந்தது மோகினிக்கு. “அப்படியா? என் நடை அவ்வளவு அழகாகவா இருக்கு? உங்கம்மாவை விடவா நான் அழகாக நடக்கிறேன்?” என்று சொல்லி விட்டுக் குழந்தையைத் திருப்தி செய்து விட்டோம் என்ற மனநிறைவோடு கௌரியைப் பார்த்தாள். ஆனால் கெளரி மோகினியை வெறுப்போடு பார்த்தாள். கௌரியின் கண்களில் பொல பொலவென்று தீர்த்துளிகள் சேர்ந்தன. கௌரியின் கைவிரல்கள் ஒன்றேடு ஒன்று பின்னிக் கொண்டன. அவள் உதடுகள் துடித்தன. “டீச்சர்…டீச்சர்…” என்று இருமுறை அழைத்து விட்டு நிறுத்திக் கொண்டாள்.

மோகினிக்கு விஷயம் விளங்கவிட்டது. குழந்தையிடம்ஏ தாய் செல்லக்கூடாது அதைச் சொல்லிவீட்டோம் என்பதை தெரிந்து கொண்டாள். அனால் சொல்லக்கூடாத அந்த விஷயம் என்ன என்பது மோகினிக்குத் தெரியவில்லை.

கௌரி முத்தத்தில் கண்ணீர் வழியத் தேம்பியபடி, “என்ன கேலி செய்யாதீங்க டீச்சர், எங்கம்மாவாவே தான் நடக்க முடியாதே. அவுங்க எப்படி, உங்களை விட அழகா நடக்க முடியும்?” என்று சொன்னாள்.

கெளரியின் தாய் கால் விளங்காமல் கிடக்கிறாள் என்பதோ கௌரியின் வீட்டின் விவரங்களோ மோகினிக்குத் தெரியாது. தன் வேலை உண்டு. தன் வீடு உண்டு என்று வாழ்த்து வந்தவளுக்கு ராஜுவின் மனைவி விஜயா, கௌரியைப் பிரசவித்தவுடனே அதிர்ச்சியால் கால்களின் சக்தியை இழந்துவிட்டாள் என்பது தெரியாது.

குழந்தையிடம் தன் குற்றத்தை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று மோகினியின் மனம் சொல்லிற்று. அதே சமயம் வகுப்பில் மற்றக் குழந்தைகள் இருப்பதையும் உணர்ந்தாள். கௌரியை எடுத்து அணைத்து ஆறுதல் கூறி மன்னிப்புக் கேட்டால் வருப்பிலுள்ள மற்ற ஏழைக் குழந்தைகள் கெரி பணக்காரத் குழந்தை. அதனால் டீச்சர் மன்னிப்புக் கேட்கிறார்’ என்று நினைக்க நேரும்.

வகுப்பின் கட்டுப்பாட்டுக்கு அது பொருந்தாது. ஆனால் ஒரு குழந்தையின் உள்ளம் நோகும்படியாகப் பேசி விட்டோம். ஆனால் நோக வேண்டும் என்று நினைத்துப் பேச வில்லை என்பது அந்த குழந்த்தைக்குப் புரியவேண்டும். என்ன செய்வது என்று ஒரு வினாடி யோசித்தாள். பிறகு “கௌரி! குழந்தைகள் தப்பு செய்வது போல் பெரியவர்களும் சில சமயம் தெரியாமல் தப்பு செய்கிறார்கள். உங்கம்மா கால் இழந்தவள் என்பது உண்மையாகவே எனக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் பேசியிருக்கமாட்டேன். தெரியாமல் செய்ததாயினும் அப்பிழை உனக்கு வேதனையைக் கொடுத்திருக்கிறது. அதனால் அது தவறு தான், இனிமேல் அந்தத் தவறைச் செய்யமாட்டேன். நீ உன் இடத்தில் போய் உட்கார என்று தன அந்தஸ்த்தைக் குறைத்துக் கொள்ளாமல் சொல்லிவிட்டு, பாடத்தை நடத்த ஆரம்பித்தாள்.

வகுப்பில் அமைதி நிவுவியது. கௌரிக்கு இது ஆச்சரியமாய் இருந்தது. தவறு செய்த பெரியவர்கள், தங்கள் தவறை ஒத்துக் கொண்டதை அவள் பார்த்தது இல்லை. மனம் புண்படும்படி பேசியவர்களைப் பார்த்திருக்கிறாள். ஆனால் தவறு என்று ஒத்துக் கொண்டதைப் பார்த்ததில்லை. அப்போதே கௌரி, மோகினி டீச்சர் ஒரு தனி ராகம் என்பதை உணர்ந்து கொண்டாள்.

அன்று மாலை விரு திரும்பியதும் கௌரியின் மனம் டீச்சரைப் பற்றியே நினைத்தது. முதல் நாள் பள்ளிக்குச் சென்று வந்த மகளிடம் விஜய ஆசையோடு, “கௌரி! உனக்குப் பள்ளிக்கூடம் பீடிச்சிருக்கா?” என்று கேட்டாள்.

அதற்குக் கௌரி, “பள்ளிக்கூடம் ரொம்பப் பிடிச்சிருக்கம்மா. என்னுடைய டீச்சர் ரொம்ப அழகா இருக்காம்மா. ரொம்ப நல்லவம்மா” என்றாள்.

விஜயாவின் மனம் திருப்தியடைந்தது. ஆனல் முதல் நாளே குழந்தை தன் டீச்சரைப் பற்றி அவ்வாறு புகழ்ந்து பேசுவது விஜயாவுக்குப் பிடிக்கவில்லை. விஜயாவின் உள்ளம், மற்றவர் உள்ளங்களையும் ஆளவிரும்பும் உள்ளம், அவள் குழந்தையோ கணவனோ. அவளைத் தவிர வேறு யாரிடமும் அன்போ, மரியாதையோ செலுத்துவது அவளுக்குப் பிடிக்காது. விஜயா அவள் வாழ்வை ஒரு சூரிய மண்டலமாகக் கருதினாள். அந்தச் சூரிய மண்டலத்தில் தன்னை ஒரு சூரியனாகவும், மற்றவர்களைத் தன் கவர்ச்சியின் காரணமாகத் தன்னைச் சுற்றிவரும் கிரகங்களாகவும் கருதினாள். விஜயா என்ற நடு மையத்தில் இருந்து நெருக்கமாகச் சுற்றி வரும் ஒரு கிரகம் மகள், இன்னொரு கிரகம் கணவன். உறவினர்கள் சற்றுத் தொலைலில் சுற்றி வர் வேண்டிய கிரகங்கள். வேலைக்காரர்கள், இன்னும் சற்று அதிக தூரத்தில் இருந்து சுற்றி வர வேண்டிய கிரகங்கள், மற்றக் கிரகங்கள் அவளிடமிருந்து வாங்கிக் கொள்ளும் ஒளியால் பிரகாசிக்க வேண்டும். அவர்களுக்குச் சொந்தமாக எந்த ஓனியும் இருக்கக்கூடாது என்று ஆசைப் படுகிறவள் விஜயா.

குழந்தை கௌரி, அவள் சென்று வந்த பள்ளியைப் புகழ்ந்தது. விஜயாவுக்குப் பிடித்தது. காரணம். அது, அவள் தேர்ந்தெடுத்து அனுப்பிய பள்ளிக்கூடம். சென்ளைக்கோ, கோயமுத்தூருக்கோ, குழந்தையை அனுப்பிப் படிக்க வைக்க வேண்டும். என்பதுதான் ராஜுவின் எண்ணம், அதனால், குழந்தை பள்ளியைப் புகழ்வது சரி. ஆனால் அதன் டீச்சரை அழகானவள், நல்லவள் என்று ஏன் புகழவேண்டும் என்று நினைத்தாள் விஜயா.

சற்றுக் கடுமையான முகத்தோடு, “ஒரு நாள் பழக்கத்திலே டீச்சரை நல்லவள் என்று எப்படிச் சொல்ல முடியும்?” என்று கேட்டாள்.

அதைக் கேட்ட கௌரி யோசித்தாள். பின்பு தொடர்ந்து, “ஆமாம்மா. டீச்சர் நல்லவங்கன்னு ஒரு நாள்லே சொல்ல முடியாதும்மா. ஆனா அவுங்க அழகாய் இருக்காங்கங்கிறதை நிமிஷத்திலே சொல்லிவிடலாமே?” என்று பதில் கூறினாள்.

குழந்தையின் இந்தச் சாதுரியமான பதிலைக் கேட்டுக் கொண்டிருந்த ராஜு, உடனே சிரித்து விட்டான். விஜயா, சிரிக்கும் கணவனின் முகத்தைப் பார்த்தாள். தன் கணவன் உட்கார்த்து இருக்கும்போது, தன் மகள் இன்னொரு பெண்ணின் அழகைப் பற்றிப் பேசுகிறாளே, அதைக் கேட்டுவிட்டு அவரும் சிரிக்கிறாரே என்று வேதனை ஏற்பட்டது விஐயாவுக்கு. வேதனையோடு, சந்தேகமும் கூடவே எழுந்தது.

ஆனால் தன் சந்தேகத்தை வெளிப் படையாகக் எட்டிக் கொள்ளவும் இஷ்டமில்லை விஜயாவுக்கு, உள்ளே பொங்கி எழுந்த சந்தேகத்தை மறைத்துக் கொண்டு கௌரியிடம் திரும்பி “சரி சரி. நீ போய் ஜூஸ் சாப்பிடு, படிக்கட்டிலே இறங்கிப் போயிடாதே கௌரி. மாதவனைச் கூப்பிட்டு, தூக்கிட்டுப் போசுச் சொல்லு,” என்று மகளை அனுப்பிவிட்டு, ஜன்னலருகின் புஸ்தகம் படித்துக் கொண்டிருக்கும் கணவனைப் பார்த்தாள்.

மாலை ஒளி ராஜுவின் முகத்தில் வீசியது. அந்த ஒளியின் ராஜுவின் மேனி, தகதகவென்று மின்னியது. ஓங்கி உருண்டு வளர்ந்திருந்த அவன் தோள்கள், வலிமையும் ஆண்மையும் சேர்த்து, உருவாக்கிய கழுத்து… இரண்டையும் கவனித்தாள். தேகப் பயிற்சியினால் அகலமாக விரிந்திருந்த அவன் மார்பும், அவளைக் கவர்ந்ததைப் போல் மற்றப் பெண்களையும் கவர்ந்து விட்டால்…

புஸ்தகத்திலேயே கவனம் செலுத்தியபடி இருந்த கணவனிடம், “ஆமாம். காலையிலே பள்ளிக்கூடத்துக்குப் போயிருந்தீங்களே. அங்கே கௌரியின் டீச்சரைப் பார்த்து, கௌரிக்கு ஹார்ட் வீக்குன்னு சொல்லி, அவள் படி ஏறாம், ஓடாம், அவளைத் தனியாக் கவனிக்கணும்னு சொன்னீங்க இல்லியா?” என்று கேட்டாள்.

இந்தக் கேன்வி தேவையே இல்லை. விஜயாவேதான் மாதவனோடு குழந்தை பள்ளி செல்லவேண்டும் என்று திட்டம் செய்தவள். மாதவன் பள்ளி முடியும் வரை இருந்து, குழந்தையை அழைத்து வரவேண்டுமென்று ஏற்பாடும் செய்திருந்தாள், இந்தக் கேள்விக்கு ராஜு சொல்லும் பதிலிலிருந்து, ராஜு கௌரியின் டீச்சரைப் பார்த்திருப்பானா, அவள் அழகு ராஜுவின் மனத்தைக் கவர்ந்திருக்குமா என்பதைப் புரிந்து கொள்ளவே, ஒரு கிரிமினல் வக்கீல், குறுக்கு விசாரணையில் வலை விரித்துக் கேள்வி கேட்பது போல் கேள்வி கேட்டாள்.

புஸ்தகத்திலேயே ஆழ்ந்திருந்த ராஜு, “விஜயா, நீ என்ன கேட்டே?” என்று குழந்தைபோல் கேட்டான்.

விஜயா ‘நம்ம கௌரிக்கு ஹார்ட் வீக், அவளை ஜாக்கிரதையாக் கவனிச்சுக்கணும்னு கௌரியோட டீச்சர் கிட்டே சொன்னீங்களா?” என்று கேட்டாள்.

அந்தக் கேள்ளியிலிருக்கும் சூதைப் புரிந்து கொள்ளாமல் ராஜு, “கௌரியின் டீச்சர்கிட்டேயா? அவவிடம் நான் போய் இதையெல்லாம் சொல்லிட்டிருக்கனுமா? மாதவன் சொன்னா போதாதா? நான் பள்ளிக்கூடத்துக் குள்ளேயே போகல்லே. பாருகுட்டி அம்மாளிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டு வந்துவிட்டேன்,” என்று பதில் சொன்னான்.

ராஜு கௌரியின் டீச்சரைப் பார்க்கவில்லை என்பதை விஜயா புரிந்துகொண்டாள், அதனால், அவளுக்கு ஒரு வித நிம்மதி ஏற்பட்டது. மெல்ல சக்கர நாற்காலியைக் கைகளால் தள்ளிக்கொண்டு ராஜு உட்கார்ந்திருக்கும் இடத்துக்குப் போனாள். ராஜுவின் மனம் புஸ்தகத்தில் ஆழ்ந்திருந்தது. ஆகையால் விஜயா அருகில் வந்ததை அவன் கவனிக்கவில்லை. விஜயா தன்னுடைய கணவனின் தேகக் கட்டையும். அவன் உதடுகளின் சிவப்பையும், மேல் உதட்டில் அரும்பு போல் வளர்ந்திருக்கும் மீசையின் அழகையும் பார்த்தபடி இருந்தாள்.

ராஜு- விஜயாலின் வாழ்க்கை இன்பம் முடிந்து, கௌரிக்கு உண்டான வயதாகிவிட்டது. விஜயாவின் மனத்தில், ராஜுவுடன் திருமணம் ஆனது. ராஜுவை முதன்முதலில் சந்தித்தது, போன்ற காட்சிகள் மனத்திரையில் தொடர்ந்து ஓடின. முதல் சந்திப்பை நினைக்கும்போதே விஜயாவுக்குப் புரியாத இன்பம் ஏற்பட்டது.

கோயமுத்தூரில் வருடா வருடம் நடக்கும் போட்டி மைதானம். நூறு கெஜப் போட்டி, இருநூறு கெஜப் போட்டி, போல் வால்ட், ஹை ஐம்ப் லாங் ஜம்ப், ஒரு மைல் ஓட்டம், அரை மைல் ஓட்டம் முதலிய பல போட்டிகள் நடக்கும். போட்டிகள் நடுப்பகல் ஒரு மணிக்கு மேல் துவங்கும். மாலை ஆறு மணிக்கு முடிவடையும்.

அதை வேடிக்கை பார்க்க வரும் பெரிய இடத்துப் பெண்மணிகள், ஆண்கள் எல்லோருக்கும் அங்குள்ள ‘ஸ்டேடியத்தில்’ உட்கார இடம் இருக்கும். மற்றச் சாதாரண மக்கள், விளையாட்டு மைதானத்தின் விளிம்புகளில் குடை பிடித்தபடியும், குடை பிடிக்காமலும் நின்று வேடிக்கை பார்ப்பார்கள்.

பல கல்லூரிகள், பள்ளிகளிலிருந்து வந்து போட்டியில் கலந்து கொள்வார்கள். அதைப்பார்ப்பதில் விஜயாவுக்கு மிகுந்த உற்சாகம்., வீட்டிலிருந்து ஐஸ் வாட்டர் நிரம்பிய ஒரு தெர்மாஸ் கூஜா, கடலைப் பொட்டலங்கள், சாக்லெட் துண்டுகள், ஆரஞ்சுப்பழங்கள் இவைகளோடு சில சினேகிதிகளை அழைத்துக் கொண்டு ஒரு மணிக்கே விஜயா ஸ்டேடியத்துக்கு வந்துவிட்டாள்.

அவள் தந்தை அந்த விளையாட்டுக்கள் நடத்தும் நிர்வாகத்துக்கு வருடம் தவறாமல் ஆயிரம் ரூபாய் நன்கொடை கொடுப்பவராதலால், போட்டி நிர்வாகிகள் விஜயாவையும் சினேகிதிகளை மரியாதையோடு நிழல் நிறைந்த ஓர் இடத்தில், போட்டிகளை நன்றாகப் பார்க்கும்படியான ஒரு மூலையில் நாற்காலிகள் போட்டு உட்கார வைத்தார்கள். உடல் தெரியும் படியான உடை அணிந்து, அதன் மீது விலை உயர்ந்த பிரெஞ்ச் ஷானல் நம்பர் 5 என்ற வாசனை சென்ட்டைத் தெளித்து விஜயா உரக்கச் சிரித்தபடி நடந்து செல்லும் காட்சியை யாராலும் பார்க்காதிருக்க முடியாது.

தன்னை யாரும் பார்க்கத் தவறக் கூடாது என்பதுதானே விஜயாவின் வாழ்வின் நோக்கமி? இயற்கையான அவளுடைய அழகு, பருவம், இவை இரண்டுமே மற்றவர்களைக் காந்தம் போல் இழுக்கும். அதோடு மட்டும் திருப்தி அடையவில்லை விஜயா. தன்னைச் சுட்டிக் காட்டி எல்லாரும் பேச வேண்டுமென்பதே அவளுடைய நோக்கமாய் இருந்தது.

போட்டி மைதானத்தில் போட்டிகள் தொடங்கியதும் நூறு கெஜப் போட்டியில் முதலாவதாக வந்ததுமே விஜயாவின் கவனம் ராஜு வில் மீது சென்றது. சளசளவென்று பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்தவள் பேச்சை நிறுத்தினாள். சிரிப்பதை நிறுத்தினாள், மைதானத்தின் போட்டியில் கலந்து கொண்டவர்களின் நடுவே நின்றபடி சிரித்துக் கொண்டிருந்த ராஜுன் அழகான முத்தி பல் வரிசைப் பற்களையும், விரிந்த கண்களையுமே கவனித்தாள். அவ்வளவு அழகான சிரிப்பையும், சிரிப்பின் கவர்ச்சியைப் பன்மடங்கு அதிகப்படுத்தும் அழகான பற்களின் வரிசையையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது விஜயாவுக்கு.

ஒவ்வொரு போட்டியிலும் ராஜுவே வெற்றி பெற வேண்டுமென்று, விஜயா விரும்பினாள், துடித்தாள். தன்னுடைய ஆர்வத்தை நினைத்ததும் அவளுக்கே வெட்கமாக இருந்தது.

பரிசு வழங்குதல் முடிவுற்று, விழா முடிந்து கூட்டம் கலைந்தும் கூட விஜயாவுக்கு அந்த மைதானத்தை விட்டு நகரவே இஷ்டம் இல்லை. ராஜு பரிசுகளைத் தன் கார் டிரைவர் வசம் கொடுத்து அனுப்பிவிட்டான். ராஜு சிறிது நேரம் அருகில் பார்க்கில் தங்கிவிட்டுப் பிறகு வீட்டுக்கு நடந்தே போகத் தீர்மானித்தான். பார்க்கை நோக்கி நடந்து போய்க் கொண்டிருக்கும் ராஜுவை விஜயா சந்திக்கும்படி நேர்ந்தது.

“மிஸ்டர் ராஜு! மிஸ்டர் ராஜு!” என்று கூப்பிட்டாள். ராஜு திரும்பிப் பார்த்தான், காரில் உட்கார்ந்திருக்கும் லிஜயாதான் தன்னை அழைத்தாள் என்பதைப் புரிந்து கொண்டான். அவள் ஆடையிலிருந்து, மென்காற்றில் மிதந்து வந்த சுகத்தம் அவன் நாசியை இழுத்தது. சிரித்தபடியே அவளைப் பார்த்தான்.

விஜயாவுக்கு, முதலில் என்ன பேசுவது என்று புரியவில்லை, வார்த்தைகளை முயற்சி செய்து தேடிப் பிடித்து ஒன்று சேர்த்துப் பேச முயன்று கொண்டிருந்தாள். அவள் தவிப்பை உணர்ந்து கொண்ட ராஜு சிரித்தபடி, “நீங்கள் என்னிடம் ஏதோ பேச வேண்டும் என்று நினைக்கிறீர்கள். ஆனால் முடியவில்லை, நடுரோடில் காரை நிறுத்திக் கொண்டு அதிக நேரம் யோசித்தால் மற்றக் கார்களின் போக்குத் தடைப் படும். ஆகையால் நான் காரில் ஏறிக் கொள்கிறேன். நீங்கள் காரை ஓட்டிக் கொண்டே சொல்ல வேண்டியதைச் சிந்தியுங்கள்,” என்று சொல்லிவிட்டு அவள் பதிலுக்குச் சற்றும் எதிர்பாராமலே, காரின் கதவைத் திறந்து விஜயாவின் அருகில், முன்சீட்டில் உட்கார்ந்து கொண்டான்.

விஜயாவுக்குப் பாதி பயத்தாலும், பாதி இன்பத்தாலும் உடல் வியர்த்தது. காரை ஓட்டியபடியே, “ஒன்று மில்லை.. ஒன்றுமில்லை…” என்று ஏதேதோ சொல்ல முயன்றாள்.

ராஜு சிரித்தபடி, “என்னிடம் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றால் என்னிடம் பேசியிருக்க வேண்டாமே. நான் இறங்கி விடட்டுமா?” என்று கேட்டான்.

உடனே விஜயா பதட்டத்துடன், “வேண்டாம் வேண்டாம். இறங்க வேண்டாம்.” என்றாள். இறங்கப் போனவனை இறங்க வேண்டாம் என்று ஏன் தடுத்தோம் என்று அவளுக்கே புரியவில்லை. “நீங்கள் இன்று போட்டி யில் வென்றதைக் குறித்து உங்களைப் பாராட்ட விரும்பினேன். அதற்காகத் தான் உங்களைக் கூப்பிட்டு காரை நிறுத்தினேன்,” என்று சொல்லிவிட்டுப் பேச்சை நிறுத்தினாள்.

ராஜு உடனே குறும்புத்தனமாக, “அப்படியா? பாராட்டுதல்தான் முடிந்து விட்டதே. இனிமேல் நான் போகலாம். அல்லவா?” என்றான்.

விஜயாலின் மனம் காலியாக இருந்ததால் அவளுக்கு ஒன்றும் பேசத் தோன்றவில்லை, ஆனாலும், அவனைப் பிரியவும் அவளுக்கு மனம் இல்லை. ஏதாவது பேசி, அவனைக் காரை விட்டு இறங்காமல் தடுக்க வேண்டும் என்று விரும்பினாள். “எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொண்ட உங்கள் உடல் மிகவும் களைத்துப் போயிருக்குமே! பாவம்! நடந்து வீடு போகிறீர்களே. சொந்தக் கார் இல்லையா?” என்றாள்.

இந்தக் கேள்வியை விஜயா கேட்டதும் ராஜுலின் மனத்தில் ஒருத குறும்புத்தனமான விபரீத யோசனை தோன்றியது. பல லட்சங்களுக்கு அதிபதியான வெங்கடபதியின் மகன் என்று நாம் கூறிக் கொள்வானேன்? இவள் யார் என்று தெரிவதற்கு முன்பு, நாம் யார் என்று சொல்வானேன் என்று நினைத்தான், ஆகையால் விளையாட்டாக, “என்ன செய்வது? வாடகை சைக்கிள் கடை வைத்திருப்பவங்க வீட்டுப் பிள்ளை நான். சவாரிக்கு கார் வைத்துச் கொள்ள முடியுமா?” என்று சொன்னான்.

வாடகை சைக்கிள் ஷாப்காரன் என்றதும் விஜயாவுக்குச் சுருக்கென்றது. கவனம் சிதறியதால், கார் ஒரு புறமாக ஒதுங்கப் பார்த்தது. அது சென்று பக்கத்துச் சுவரில் இடிப்பதற்குள், ராஜு தாவிக் காரின் ஸ்டியரிங்கைப் பிடித்துத் திருப்பிச் சரி செய்தான். காரைச் சரி செய்யும் போது ராஜுவின் கருங்கல் போன்ற புறங்கள் விஜயாவின் கைகளில் உரசும் படியான ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஒரு வினாடிக்கு விஜயாவின் இதயம் படபடத்தது.

அடுத்த வினாடி கதாரித்துக் கொண்டாள். “சொந்தமாகக் கார் ஒன்று இல்லை என்றாலும், உங்களுக்குக் கார் ஓட்டத் தெரிந்திருக்கிறதே!'” என்றாள்.

ராஜு சிரித்தால், “படிப்பு முடிந்ததும் கார் ரிப்பேர் ஷாப் வைக்கலாமென்றிருக்கிறேன்.” என்று இன்னெரு முறை புளுகினான், “உங்கள் வீடு இருக்கும் இடத்தைச் சொல்லுங்கள். அங்கு கொண்டு போய் விடுகிறேன்.” என்றாள்.

“நான் வாழும் பகுதி ஜனசந்தடி நிரம்பிய இடம். அங்கு என்னைக் காரில் கொண்டு வந்து இறக்கிலிட்டால், உங்களைப் பற்றித் தவறான பேச்சுக் கிளம்பும்,” என்று சொல்லிவிட்டு நழுவினான்.

பிறகு தினமும் இருவரும் ரகசியமாகச் சந்தித்தனர். விஜயா ஒரு பெரிய செல்வந்தர் மகனைக் கல்யாணம் செய்து வாழ வேண்டும் என்று கனவு கண்டவள். அந்தக் கனவு இப்போது நிகழாது என்று நினைக்கவும், அவளுக்கு ஏமாற்றமாய் இருந்தது. இருந்தாலும் ராஜுவிடமிருந்த கவர்ச்சியின் முன், அவள் ஆணவம், கர்வம், பணத்தாசை மூன்றுமே மறைந்து இருந்தன.

இந்த நிலையில் அவள் தந்தை ஒரு நாள் நடுப்பகல் வந்து ஒரு குண்டைப் போட்டார். “இன்று, மாலை நான்கு மணிக்கு வெங்கடப்பதியும் அவர் மகனும் வருவார்கள். அவரு உன்னை மருமகளாக்கிக் கொள்ள ஆசை. அவர் மகனுக்கு உன்னைக் கொடுக்கலாம் என்றிருக்கிறேன் சமையல்காரனிடம் சொல்லி, டிபன் காப்பி தயார் செய்யச் சொல். நல்லா டிரஸ் பண்ணிட்டிரு. வெங்கடபதி மில் முதலாளிகள் சங்கத்தில் முதல் நம்பர் பேர் வழி. அவர் சம்பந்தம் கிடைக்கிறது நம்ம அதிர்ஷ்டம்,” என்று சொன்னார்.

சிந்தித்துச் சிந்தித்துச் சலித்துப் போயிருந்த விஜயாவிடம் அவள் அத்தை வந்து, “வெங்கடபதியும் மகனும் வந்துட்டாங்க. இன்னும் நீ டிரஸ் செய்து கொள்ளவில்லையே?” என்று கடிந்து கொண்டாள். அதற்கு விஜயா, “எப்படியாவது இந்தச் சம்பந்தம் இல்லாமல் போசு வேண்டும். அவர்களுக்கு என்னைப் பிடிக்காமல் இருக்க வேண்டும்,” என்று மனத்துக்குள் வேண்டிக்கொண்டாள்.

எப்போதும் சரிகைப் பட்டுப்புடவை உடுத்திச் செல்பவள், கதர்ப்புடவையும், கதர் ரவிக்கையும் அணிந்து ஒரு நகைகூட இல்லாமல், ஹாலுக்குப் புறப்பட்டாள். ஒவ்வொரு நாள் மாலைம் ராஜுவை ரகசியமாகச் சந்திக்கப் போகும் போதெல்லாம் சர்வ அலங்காரங்களையும் செய்து கொண்டுதான் செல்வாள்.

ராஜு” ஒருநாள் அவளிடம், “உன் திவ்ய அலங்காரத்தைப் பார்த்தால் எனக்கு என் யோக்யதையில் நம்பிக்கை போய்விடுகிறது விஜயா,” என்றான்.

அவள் குறும்பாகச் சிரித்தபடி, “கவலைப்படாதீங்க. உங்கள் யோக்யதையைச் சரிசமமாகச் செய்து விடுகிறேன்” என்று தன்னுடைய நெக்லஸை எடுத்து அவன் கழுத்தில் போட்டாள்.

பிறகு செயினைப் போட்டாள். வளையல்களைப் போடப் போகும் போது ராஜுவின் கை பருத்து இருந்ததால் அதை அவனால் போட முடியவில்லை. இருவரும் சிரித்தார்கள். அந்த நிலையில் அவளடைந்த இன்பத்தில் அவள் சுய ஞாபகத்தையே இழந்தாள்.

இந்த நினைவு அவளை வந்து தாக்கிறது. “இந்த வேங்கடபதியின் மகனுக்கு ஒரு அலங்காரமும் இல்லாமல் போனால் தான் அவன் என்னை வெறுத்து விலக்குவான்” என நினைத்தபடி ஹாலினுள் வந்தாள். வெள்ளைக் கதராடை அணிந்து நகைகள் எதுவும் இல்லாமல் நுழைந்த விஜயாவைப் பார்த்த அவள் தந்தை அதிர்ச்சி யடைந்தார்.

தாம் தம் மகளுக்கு ஒருநகை கூடப் போடவில்லை என்று தவறாக நினைத்து விடுவார்களோ என்ற பயத்தால், “இரண்டு லட்ச ரூபாய்க்கு நகை பண்ணி யிருக்கேன். என்ன விஜயா, தினமும் மாலையிலே வெளியே போறப்போ எல்லா நகையையும் போட்டுட்டுப் போவே. இன்னிக்கிப் பார்த்து இப்படி வெறுங் கழுத்து, காதோட வந்து நிக்கிறே?” என்றார்.

தந்தை மகளைத் தன் முன்னால் கண்டிப்பது – விஜயாவின் தந்தையின் தரக் குறைவைக் காட்டுகிறது என்று நினைத்தார் வெங்கடபதி. ஆனால் ராஜு உடனே சமாளித்தான். “ஒருவேளை பெண்ணுக்கு எளிமையில்தான் விருப்பமோ என்னவோ. பணக்கார வீட்டுப் பெண்களுக்கு ஏழ்மையை ஆசைப்படுவது சசுஜம்,” என்று கேலியாகக் கூறினான்.

அதுவரை குழப்பத்தால் தரையைப் பார்த்துக் கொண்டிருந்த விஜயா ராஜுவின் குரல் கேட்டுத் தலைநிமிர்ந்து பார்த்தாள். வெங்கடபதியின் அருகில் சிரித்தபடியே தன்னையே ஒருவிதக் கேலியோடு பார்த்துக் கொண்டிருக்கும் ராஜுவைக் கவனித்தாள்.

அவளுக்கு அவன் மீது கோபமும் ஆத்திரமும் வந்தன. தன் உள்ளத்தைக் கவர்ந்து, உறவு ஏற்படுத்திக்கொண்ட ராஜு அவனுடைய உண்மை அந்தஸ்தை மறைத்து விட்டான் என்பதை நினைக்கவும் அவன் ஏமாற்றுக்காரன் என்று ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அவனைப் பணக்காரனாக்க அவள் அவனிடம் திட்டங்கள் வகுத்துக் கொண்டிருக்கும்போது அவன் உண்மையிலேயே மனத்திற்குள் கேலியாகச் சிரித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். அவன் ஒங்கிக் கன்னத்தில் அறைந்திருந்தால் கூட, விஜயாவுக்கு இவ்வளவு வேதனை தோன்றியிராது.

விஜயாவின் ஆணவும். நிறைந்த மனத்திற்கு அங்கு நிற்கவேமுடியவில்லை. ராஜுவைப் பார்க்கவும் பிடிக்கவில்லை. கண்களில் நீர் ததும்ப, அங்கிருந்து தன்னையும் மறந்து ஓடினாள். வெங்கடபதிக்கும், விஜயாவின் தந்தைக்கும் புரியவில்லே, ஆனால் ராஜுவுக்கு மட்டும் சிரிப்புச் சிரிப்பாக வந்தது.

– தொடரும்…

– 1964, குமுதம் வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *