கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: அமானுஷம் த்ரில்லர்
கதைப்பதிவு: April 8, 2025
பார்வையிட்டோர்: 7,582 
 
 

(1964ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12

அத்தியாயம்-7

இன்ஸ்பெக்டர் பங்குன் நாயரும் குழந்தைச்சாமியும் ஒருவரை யொருவர் பார்ப்பதைத் தவிர, வேறு ஒன்றும் செய்யாமல் சில வினாடிகள் இருந்தனர்.

அப்போது நாராயணி அம்மாள், பழத்தையும் சுக்கு வெள்ளத்தையும் எடுத்து அறையினுள்ளே வந்தாள். இன்ஸ்பெக்டருக்கு, குழந்தைச்சாமி சொன்னபடி உண்மையை மறைத்து விடுவதா, இல்லை எல்லாவற்றையும் வெளியிட்டுவிடுவதா என்று புரியவில்லை. இருவரும் மௌனமாகச் சாப்பிட்டனர்.

இன்ஸ்பெக்டர் ஏதோ தீர்மானத்துக்கு வந்தவர்போல், சட்டென்று எழுந்து விடை பெற்றுக்கொண்டு வெளியே போனார். போகும்போது குழந்தைச்சாமி உட்கார்ந்திருந்த இடத்தைத் தாண்டிச் செல்ல வேண்டியிருந்தது. அப்போது இன்ஸ்பெக்டர் ஒரு வினாடி தயங்கி நின்றபடி அவரைப் பார்த்தார்.

குழந்தைச்சாமியும், அவரை ஏதோ மன்றாடி வேண்டிக் கொள்வதுபோல் பார்த்தார். இன்ஸ்பெக்டர் வெளியே சென்றார்.

குழந்தைச்சாமி இந்தனையில் ஆழ்ந்தபடி இருந்தார்.

நாராயணி அம்மாள், “இன்னிக்கி ஏன் உங்க முகம் கவலையிலே ஆழ்ந்தபடி இருக்கு?” என்று கேட்டாள்.

சமாளித்தபடி சிரித்துக்கொண்டே, “ஒன்றுமில்லை. வாழ்வின் அமைப்பைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டு இருந்தேன். திடீரென்று என்னைப்பற்றி யாராவது உங்களிடம் வந்து, நான் ஒரு அயோக்கியன், இரக்கமற்றவன் என்று சொன்னால் மறுநாள் முதல் நீங்கள் – நான் எவ்வளவு நல்லதைச் செய்திருந்தாலும்- என்னை நம்புவீர்களா?” என்றார்.

“இதென்ன கேள்வி? வேடிக்கையாக இருக்கிறதே! உங்களைப்பற்றித் தவறாகப் பேசக்கூடிய ஜீவன்கூட இருக்க முடியுமா?” என்று நாராயணி அம்மாள் வியந்தாள்.

பிறகு மோகினியைப் பற்றிச் சில வினாடிகள் பேசிக்கொண்டு இருந்து வீட்டுப் புறப்பட ஆயத்தமானார் குழந்தைச்சாமி.

நாராயணி, “மோகினி பள்ளியில் இருந்து திரும்பும் நேரமாகிவிட்டது. கொஞ்ச நேரம் இருந்து குழந்தையைப் பார்த்துவிட்டுத்தான் போங்களேன்”, என்று வற்புறுத்தினாள்.

”பரவாயில்லை. நாளைக்கு வருகிறேன்”, என்று சொல்லிவிட்டுக் குழந்தைச்சாமி நடந்தார்.

ஆழ்ந்த சிந்தனையோடு நடந்தபடி மலைச்சரிவுக்கு வந்தார். சரிலிலிருந்து மெள்ள ஏறியபடி குருவாயூர் செல்லும் சாலையை அடைந்தார். அதே இடத்தில்தான் பல வருடங்களுக்குமுன், மோகினியின் தந்தை அவனைக் கதறக் கதற வீட்டுவிட்டு பஸ் ஏறிச் சென்றார். இப்போது அதே சாலையில் அழகின் உருவமாய் மோகினி ஒரு புத்தகத்துடனும், இன்னொரு கையில் புதிதாகப் பறித்த புஷ்பங்களுடனும் பள்ளியிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தாள்.

எதிர்ப்புறத்தில் குழந்தைச்சாமி நடந்து வருவதைப் பார்த்ததும், மோகினியின் சிவந்த முகம் இன்னும் சிவந்தது. அவளுடைய நடையில் ஒரு துள்ளல் ஏற்பட்டது. தன் கையிலுள்ள புஷ்பத்தைப் பார்த்தாள். உடனே ஓட்டமாக ஓடிவந்தாள்.

“குழந்தைச்சாமி! உங்களைப் பார்க்க வென்றே வேகமாக வந்தேன். அதுக்குள்ளே புறப்பட்டுட்டீங்களே. இன்னும் கொஞ்ச நேரம் தாமஸிக்கக்கூடாதா?” என்று கேட்டாள்.

அவர் சிரித்தபடி, “நல்லா தமிழ் பேசக் கத்துக்கிட்டியே!” என்றார்.

“எல்லாம் நீங்கள் சொல்லிக் கொடுத்ததுதான். வர்றப்போ அருவித் தோட்டத்திலே இந்தப் பூவைப் பறித்து வந்தேன். உங்களுக்காக”, என்று சில புஷ்பங்கள அவரிடம் கொடுத்தாள்.

சிலவற்றை அவர் பாதங்களில் போட்டு வணங்கினாள்.

அவளைப் பார்த்து அவர், “ஆண்டவன் ஒருவன் பாதங்களில்தான் நீ மலர் போடலாம் மோகினி”, என்றார்.

“நீங்களும் சாமிதானே? நீங்கள் தலையிலே பூ வைத்துக்கொள்ள முடியாது. அதனாலேதான் பாதத்திலே வைத்தேன்”, என்றாள்.

குழந்தைச்சாமி சிரித்தார்.

மோகினியின் முகத்தைத் தடவியபடி “மோகினி! நீதான் என் தாய், இந்தப் புஷ்பங்களை என் தாய்க்குச் சூட்டப் போறேன்”, என்று சொல்லி, அந்த மலர்களை மோகினியின் தலையில் சூட்டினார்.

மோகினி மகிழ்ச்சியோடு அவரைப் அவரைப் பார்த்து, “சாமி! நீங்க எப்பப் பார்த்தாலும் கொடுக்கறீங்களே யல்லாமல், எதையும் வாங்கிச்சு மாட்டேங்கிறீங்களே!” என்றாள்.

அவர் கண்கள் கலங்கின, “மோகினி, நான் கொடுக்கறது கம்மி. நாள் வாங்கிக்கறதுதான் அதிகம். நான் உங்கிட்டேயிருந்து களங்கமில்லாத தெய்வீகமான அன்பை வாங்கிக்கிட்டிருக்கேனே! இந்த ஊரிலே பல பேர் முகம் என்னைப் பார்த்ததும் மகிழ்ச்சி அடைகிறது. அவ்வளவு பேர் அன்பையும் நான் வாங்கிட்டுத்தானே இருக்கேள்!”

“வாங்க, வீட்டுக்குப் போகலாம்.” என்றாள் மோகினி.

“இப்போதான் வீட்டிலிருந்து வர்றேன். பழம், சுக்குவள்ளம் கொடுத்தாங்க நாராயணியம்மா, சாப்பிட்டுத் தான் வர்றேன்..ஆமாம் மோகினி! நான் கெட்டவன்னு சொல்லி யாராவது உன்னைப் பயமுறுத்தினாங்கன்னா நீ என்னைக் கண்டு பயப்படுவியா?”

மோகினி சிரித்தாள், வெள்ளிப் பந்துகள் ஒன்றன் மீது ஒன்று மோதும், போது உண்டாகும் ஒலிபோல் இருந்தது அவள் சிரிப்பு.

“உங்களை முதன் முதல்லே நோக்கினப்பத்தான் பயந்து போயிட்டேன். இனிமேல் பயப்படவே மாட்டேன்.” என்று சொல்லிவிட்டுச் சிரித்துக் கொண்டே வீடு நோக்கி நடந்தாள்.

மோகினி வீடு நோக்கி நடந்து செல்லும் அழகையே பார்த்து நின்றார் அவர். தன் தோளில் ஒரு கை வந்து விழுந்ததைக்கூடக் கவனிக்கவில்லை. திரும்பியதும் திரும்பியதும் எதிரே இன்ஸ்பெக்டர் பங்குன் நாயர் நிற்பதைக் கவனித்தார்.

அதிர்ச்சியைச் சமாளித்து, “நீங்க குருவாயூர் போகல்லியா?” என்று கேட்டார்.

“இதோ குருவாயூருக்குத்தான் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனல் அதன் முன் உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும்” என்றார் இன்ஸ்பெக்டர்.

“சர்க்காருக்குச் செலுத்த வேண்டிய காணிக்கையாக, என் வாழ்வில் இளமைப் பகுதியில் ஏழு வருஷங்களைக் கழித்துவிட்டேன், விடுதலையான பின்பு தான் குற்றவாளிக்கு உண்மைத் தண்டனை ஆரம்பிக்கும் என்பார்கள், அதனை வழங்க வந்திருக்கிறீர்களா இன்ஸ்பெக்டர்?”

“படபடப்பாகப் பேசாதிங்க அழகிரிசாமி,” என்றார் இன்ஸ்பெக்டர்.

“அந்தப் பூர்வாசிரமப் பெயரை ஞாபகப்படுத்தாதிங்க, அதை நான் மறந்தே போனேன். எனக்கு இப்போ பேரே கிடையாது.” என்றார் குழந்தைச்சாமி.

பங்குன் நாயர் சிரித்தார். “பேரில்லாமல் ஒரு பொருளோ மனிதனோ இருக்க முடியாது. இங்கே உள்ளவங்க, உங்களைக் குழந்தைச்சாமின்னு கூப்பிடறாங்க. நீங்க மாறிட்டீங்க என்பதைக் குழந்தை மோகினியோடு பேசிக்கிட்டிருந்தப்பவே தெரிஞ்சது. இதே ரோட்டிலே அவள் அச்சன் அவளை விட்டுட்டு பஸ்லே ஏறிப் போனப்போ, அந்தக் குழந்தை துடியாத் துடிச்சது இன்னமும் என் கண் முன்னாலே நிக்குது. அதே குழந்தை உங்க பாதத்தில் மலர் சூட்டும் அளவுக்கு உங்களை விரும்புது. குழந்தையின் தீர்ப்பு ஓரளவுக்குத் தெய்வத்தின் தீர்ப்பு என்றே சொல்லவேண்டும். அதனால் நான் உங்களுடைய பூர்வ வாழ்க்கையைப் பற்றி யாரிடமும் மறந்து கூடப் பேச மாட்டேன்னு சொல்லிட்டுப் போகவே இதுவரை காத்துக்கிட்டிருந்தேன். நீங்க நிம்மதியா உங்க சேவைகளைத் தொடர்ந்து செய்யுங்க. அந்த அதிராம் பட்டணம் கேஸிலே சம்பந்தப் பட்ட ஆபீஸருங்க யாருமே உயிரோட இல்லை, என்னைத் ‘தவிர”, என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

குழந்தைச்சாமி அப்படியே நடு சாலையில் நின்றார். பங்குன் நாயரின் ஜீப் சென்று மறையும் வரை அதையே பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு, ஒருமுறை, “பராசக்தி! ஜகதாம்பிகே!” என்று கூறியபடி பெருமூச்சோடு நகர்ந்தார்.

இதே சமயத்தில் ‘சாந்திவில்லா’ என்ற மலைமுகட்டு பங்களாலின் சொந்தக்காரர் படுக்கையில் படுத்தபடி முனகிக் கொண்டிருந்தார். அவர் பார்வை எதையோ எதிர்பார்ப்பது போல் தோன்றியது. ‘பங்களாக்காரர்’ என்று சிறப்போடு வாழ்ந்தவர், பல ஆயிரம் பேருக்குப் பல மில்களில் பிழைப்புக் கொடுத்துப் பராமரிப்பவர், இன்று எழுந்திருக்க முடியாமல், கொடுக்கும் உணவை விழுங்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தார்.

அவருடைய உடல் உபாதையைவிட அவருடைய மனத்தை அழுத்தும் ஒரு சுமைதான் அவரைப் படாதபாடு படுத்திக் கொண்டிருந்தது.

அவருடைய மகன் ராஜு அருகில் வீற்றிருந்தான்.

பங்களாக்காரர் “தம்பி வந்தாச்சா? தம்பி வந்தாச்சா?” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

ராஜு, “சித்தப்பாவுக்கு ஆள் அனுப்பியிருக்கேன். அவர் வந்துடு வாரப்பா, ” என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

கோயமுத்தூரிலிருந்து பெரியவரின் நண்பர்கள், செல்வந்தர்கள் எல்லாரும் பல கார்களில் வந்து காத்திருந்தனர். கோயமுத்தூரில் பருத்தி சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தியாகத் திகழ்ந்த பெரியவரின் உடல்நிலை, கடந்த ஒரு மாத காலமாகச் சர்க்கரை நோயால் மிகவும் பாதிக்கப்பட்டு வந்ததால், அவர் நிலை இப்போதோ அப்போதோ என்று இருந்தது. சுயநலம், நட்பு, மரியாதை, என்ற பல காரணங்கள் பல பிரமுகர் கோயமுத்தூரிலிருந்து இந்த மலைக்காட்டுக்குக் கொண்டுவந்திருந்தன.

அந்தப் பெரிய பங்களாவின் எல்லா அறைகளிலும் விருந்தினரே கூடியிருந்தனர். வந்த விருந்தினருக்குத் தேவையான பணிகளை நிறைவேற்ற, ஒரு படை வேலைக்காரர்கள் அங்குமிங்கும் சென்றபடி இருந்தனர். அவர்களில் பெரும் பகுதிப் பேர் மலையாளிகள். சிலர் கோயமுத்தூரிலிருந்து பெரியவரோடு வந்தவர்கள். பங்களாவின் பரந்த தோட்டத்தின் பல மூலைகளிலும், ஒரு வித ஒழுங்கில்லாமல் சிறிய கார்களும், பெரிய கார்களுமாக நிறுத்தப்பட்டிருந்தன.

பங்களாவின் வெளிப்புறம், ஒரு வெற்றிப் படம் ஓடிக்கொண்டிருக்கும் சினிமாத் தியேட்டரின் வெளிப்புறம் போல் காட்சியளித்தது.

‘பிளைமவுத்’ ‘டாட்ஜ்,’ ‘செவர் லேட்’, ‘பென்ஸ்’, இப்படிப் ரகமான கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

ஏழ்மையின் இருப்பிடமான அந்த மலையாளப் பகுதியில், குழந்தைகள் எல்லோரும் கூட்டம் கூட்டமாக அந்தப் பங்களாவின் வெளிப்புறம் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்,

கார்களை ஓட்டிவந்த டிரைவர்களுக்குப் பொழுது நகராமல் நின்றதாகையால், அவர்கள் ஒரு மரத்தடியில் ஜமக்காளம் விரித்து, காசு வைத்துச் சூதாடிக் கொண்டிருந்தனர்.

பங்களாவின் மாடியில் டிரைவர்களின் எஜமானர்கள் ஒரு தனியறையில் நோட்டுக்கள் வைத்துச் சூதாடினர். சீட்டுக் கட்டுக்கள் தேவைப்பட்டதால், கிராமத்துப் பெட்டிக்கடைக்காரன் பஸ்ஸில் ஆள் அனுப்பி, பாலக்காடு, ஷோரனூரிலிருந்து விதம்விதமான சீட்டுக் கட்டுக்களை வாங்கிவந்து ஐந்து பங்கு விலைக்கு விற்றுக் கொண்டிருந்தான். அதேபோல்தான் சிகரெட்டிக்களின் விலையும் ஏறியது.

அந்தச் சிற்றூர் பஜாரின் பொருள்கள் எல்லாமே விலை ஏறியிருந்தன. கோயமுத்தூர்ப் பிரமுகர்களில் முதியவர்கள் ஒருபுறமாக அமர்ந்து, பெரியவரின் பழைய புராணத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.

“பாவம், வெங்கடபதி. காட்டன் மார்க்கெட் டவுன் ஆனப்போ, நூலே விக்காதப்போ, என்னமா சமாளிச்சான்! எல்லாரும் மில்லை விக்கிறப்போ மில்லை அவன் வாங்கினான்! அதுதான் இவ்வளவு பெரிய முதலாளி ஆக முடிஞ்சுது.”

“என்ன ஆகி என்ன பிரயோஜனம்! அவன் தம்பி அழகிரிசாமி செய்த கலாட்டாதான், அவனைத் தலைகுனியச் செய்துட்டுதே. அதனால்தானே அவன் இந்த மாதிரிக் கண் காணாத இடத்துக்கு வரும்படியாச்சு?”

“ஆமாம். வெங்கடபதி சொத்திலே பாதி தம்பிக்கும் சேருமில்லே?”

“தம்பிதான் ஜெயில்லேருந்து வந்தப்புறம் ஏதோ அரைப் பைத்தியமாட்டம் திரிகிறதாச் சொல்றாங்களே. அவனுக்கு எதுக்குச் சொத்து?”

”என்னதான் இருந்தாலும் அழகிரிசாமி நல்ல துணிச்சல்காரன்தான். அதிராம்பட்டணத்திலே ஒரு ராஜாங்கமே நடத்தியிருக்கான்! தோணி தோணியாத் தங்கம் கொண்டு வந்திருக்கான்! மூணு வருஷத்துக்கு நோட்டு அடிச்சிருக்கான். யாருமே கண்டுபிடிக்க முடியல்லியே?”

“ஆமாம். அவ்வளவு பணமும் என்ன ஆச்சு? எங்கே போச்சு?”

“அதுதான் யாருக்கும் புரியல்லியே.”

“புரியறத்துக்கு என்னி இருக்கு? வெங்கடபதி ஒவ்வொரு மில்லா வாங்கினது எந்தப் பணத்திலேன்னு நினைக்கறே? எல்லாம் அந்தக் கள்ள நோட்டுத் தான்”.

“சேச்சே! சும்மா இரு. வெங்கடபதி வீட்டிலேயே உட்கார்ந்துட்டு அவனைப் பத்தியே தப்பாப் பேசறியே”, என்று கண்டித்துப் பதில் சொன்னார் ஒரு முதியவர்.

இவ்வாறு வெங்கடபதி என்ற பெயர் கொண்ட பங்களாக்காரரைப் பற்றி மனம் போனபடி பேசிக் கொண்டிருந்தனர்.

வந்தவர்களில் பலர் சுயநலத்துக்காகவே வந்திருந்தனர். ஒருவர் லட்ச ரூபாய்க் கடனுக்குத் தவணை வாங்க வந்திருந்தார். இன்னொருவர் தனக்கு மாமூலாக வந்து கொண்டிருக்கும் லாபம் தடைபடாமல் தொடர்ந்து நடக்கவேண்டுமே என்ற நோக்கத்தில் வந்தவர், மற்றொருவர் தன் மகன் திருமணத்துக்குப் பத்தாயிரம் கடன் வாங்கிப் போக வந்தவர்.

தந்தை போனபின் ஜேஷ்ட மகனான ராஜுதான் நிர்வாகத்துக்கு வரப் போகிறான் என்று இப்போதிருந்தே அவனை வளைத்துத் தமக்குச் சிநேகமாக்கிக் கொள்ளும் முயற்சியில் அங்கு கூடியிருந்த இளவட்டங்கள் ஈடுபட்டன.

ராஜுவின் இளம் மனைவி விஜயா, புதிதாகக் கல்யாணமாகி வீடு வந்தவள். அவளைச் சுற்றி உறவினர் கூட்டம் குழுமியிருந்தது. செல்வந்தரின் ஒரே மகள், பிறந்த வீட்டிலே செல்வமாக வளர்ந்து புகுந்த வீட்டிலே அவள் வார்த்தையைத் தட்டிச் சொல்ல மாமியோ நாத்தியோ இல்லாத காரணத்தால், பிறர் உணர்ச்சிகளை யெல்லாம் பற்றிக் கவலைப்படும் பண்பு இல்லாதவளாக அவள் இருந்தாள்.

வீடே ஒரு கல்யாண வீடு போல் காட்சி அளித்தது. யாரும் அந்த வீட்டின் ஒதுக்குப்புறமான அறையில் ஒரு ஜீவன் இந்தப் பிரும்மாண்டமான செல்வத்தை விட்டுப் பிரியத் தயாராகிக் கொண்டிருந்த வேதனையை உணரவில்லை. வெங்கடபதி மட்டும் படுக்கையில் படுத்த படி அறையைச் சுற்றிப் பார்த்தார். அவருக்கு அருகே வைத்திருக்கும் மருந்து பாட்டில்கள் கூட அவர் போகப் போகும் புதிய இடத்துக்கு (அப்படி ஒரு இடம் இருந்தால்) உடன் வராது என்றால், சலியா உழைப்பால், விடாத முயற்சியால், பெருக்கிய பெரும் செல்வம் மட்டும் கூடவா வரப் போகிறது?

முடிவுப் பயணத்தின் தன்னுடன் துணையாக வரப் போகிறவர்கள், வரக்கூடிய பொருள்கள் எதுவும் இல்லை என்ற உண்மையை நன்கு உணர்ந்தவர்போல், மருட்சியுடன் அந்த அறையை நோக்கினார்.

தன்னிடம் முடிவு நேரத்தில் சலுகைகள் எதிர்பார்த்து நிற்கும் நண்பர் கூட்டத்தைப் பார்க்கப் பார்க்க அவருக்கு வேதனையாக இருந்தது.

அவர்களைப் பார்க்கவே அவர் விரும்பவில்லை. அருகில் உட்கார்ந்திருக்கும் ஒரே மகன் ராஜாவும், அவன் அன்பும், அவன் ஒழுக்கமும்தான் அவர் வாழ்வில் சம்பாதித்த உருப்படியான பொருள், அவர் வாழ்வின் ஒரே வெற்றி என்று தோன்றியது.

“என் மகன் என்னைப் போல இருக்க மாட்டான் அவன் பணத்துக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்ய மாட்டான். அவன் வாழ்வு நிறைந்திருக்கும்,” என்று எண்ணினார்,

அடுத்த வினாடியே. “என் பாவங்களின், என் தவறுகளின் சுமை அவன் தலையில் விழுமோ?” என்ற எண்ணமும் தோன்றியது. அவர் உடல் நடுங்கியது.

அவர் பார்வை அந்த அறையில் மின்சார விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் குருவாயூரப்பன் படத்தின் மீது லயித்தது. ஒவ்வொரு வியாபார முயற்சியின் போதும் அவர் குருவாயூரப்பனை வேண்டிக் கொண்டுதான் இறங்குவார். அவருக்கு வெற்றி அளிக்காமல் இருந்ததில்லை குருவாயூரப்பன். அந்த முயற்சியினால் பலர் வாழ்வு பலர் சந்தோஷம் பாதிக்கப்படுகிறதே என்று வெங்கடபதி யோசித்ததில்லை. வியாபாரத்தில் அதெல்லாம் சகஜம் என்றுதான் நினைத்தார்.

அம்மாதிரித் தவறான முயற்சிகளில் கூட குருவாயூரப்பன் அவருக்கு வெற்றியை அளித்துத்தான் வந்திருக்கிறான். அதனால் அவர் மனத்தில் குருவாயூரப்பன் என்றும் கை கொடுக்கும் ஒரு கூட்டாளி – லாபத்தில் பங்கு கேட்காத ஒரு கூட்டாளி – போல்தான் இருந்து வந்தான்.

இன்று வெங்கடபதி பார்த்தபோது அந்தக் குருவாயூரப்பன் முகத்தில் அவர் வழக்கமாகக் காணும் புன்முறுவல் இல்லை. அதில் மகிழ்ச்சி இல்லை. இகழ்ச்சிதான் தோன்றியது. “எத்தனை முறை என் சந்நிதியில் வந்து, நெடுங் கிடையாக விழுந்து, ஏதேதோ மில்லுன்காக கோர்ட் விவகாரம் சரியான படி முடிய வேண்டுமென்பதற்காக, அதிக லாபத்துக்காக ஆசைப்பட்டுப் பிரார்த்தனை செலுத்தியிருக்கிறாய்! நானும், நீ கேட்டதையெல்லாம் உடனுக்குடன் கொடுத்திருக்கிறேன். வெள்ளிக்கும், தங்கத்துக்குமாக, செங்கல் கண்ணாம்பால் ஆகிய வீடுகளுக்காக தோட்டங்களுக்காக ஆசைப்பட்டு என் காலில் விழுந்து அழுதாயே! ஆனால் உனக்காக ஒன்று கூடக் கேட்டுக் கொள்ள வில்லையே வெங்கடபதி. நீ எவ்வளவு பெரிய முட்டாளடா!” என்று அந்தக் குருவாயூரப்பன் புன்னகை செய்வது போல் தெரிந்தது.

“ஆம்! என்னுடைய நிரந்தர நலனுக்காக ஒன்று கூடத் தேடிக் கொள்ள வில்லையே. இந்த அறுபது வருவுங்களில் ஒரு ஏழை அழுத கண்ணீரைத் துடைத்திருக்கிறேனா! எவ்வளவு பேரை நசுக்கி அவர்கள் நலிந்த வாழ்வை நடை பாவாடையாக விரிந்து அதன்மீது ஊர்வலம் வந்திருக்கிறேன், வெற்றி! வெற்றி! என்ன விலை கொடுத்தாவது வெற்றி என்று நானே வாழ்ந்திருக்கிறேன்! வெற்றி உண்மையிலேயே தோல்வியின் வேறு பெயர் என்று தெரியாமல் போய்லிட்டதே!” என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது, வீட்டுக் கொல்லைப்புறத்திலிருந்து வெங்கடபதி படுத்திருக்கும் அறைக்குள் திறக்கும் கதவு திறந்தது.

அந்தக் கதவு வழியே, அறையைச் சுத்தம் செய்யும் தோட்டிகள் தான் நுழைவது வழக்கம். அது எப்போதுமே மூடித்தான் இருக்கும். அதன் வழியே நுழைந்தார் குழந்தைச்சாமி.

படுத்துக் கொண்டிருந்த வெங்கடபதி அவர் நுழைந்ததும் மெள்ளத் தலையணைகளின் உதவியால் முயற்சியோடு எழுந்து உட்கார்த்தார்.

“தம்பி! உனக்காகத்தான் காத்துக் கிட்டிருக்கேன். ஏன் இந்தக் கதவு வழியா வந்தே? நேர் வழியா வரக் கூடாதா?”

“வெளி ஹாலிலே கோயமுத்தூர் ஆளுங்க எல்லாம் உட்கார்ந்துகிட்டிருக்காங்க. அவுங்களைப் பார்க்க விரும்பல்லே. அதுதான் பின்புற வழியா வந்தேன்.”

அண்ணன், சிந்தனையுடன் தம்பியைப் பார்த்தார். பிறகு அருகிலிருக்கும் தன் மகனைப் பார்த்தார்.

“சித்தப்பாவுக்குப் பழரசம் கொண்டு வா.”

ராஜு நாற்காலியை வீட்டு எழுந்தான்.

“வேண்டாம் ராஜு, நான் விரதம். ஒன்றும் சாப்பிடுவதில்லை,” என்றார் குழந்தைச்சாமி.

வெங்கடபதியின் முகம் வருத்தத்தைக் காட்டியது. “எப்ப வந்தாலும் விரதம்னு சொல்றே. இந்த வீட்டிலே ஒரு நாள்கூட ஒரு கிளாஸ் பச்சைத் தண்ணி கூடச் சாப்பிடறதில்லே நீ!”

பேச்சை மாற்றும் நோக்கத்தோடு. “அண்ணா உடம்பு எப்படி இருக்கிறது?” என்று கேட்டார் குழந்தைச்சாமி.

“உடம்பா! அது நல்லாத்தான் இருக்கு. நான் தான் அதிலே அதிக நேரம் இருக்கப் போறதில்லே. அதுக்குள்ளே உங்கிட்டே சில முக்கியமான விஷயம் சொல்லிட்டுப் போகணும்,” என்று சொல்லிவிட்டு மகன் ராஜுவைப் பார்த்தார்.

ராஜு தந்தையின் முகக் குறிப்பைப் புரிந்து கொண்டு வெளியே சென்றான். அந்தப் பெரிய அறையில் வெங்கடபதியும். குழந்தைச்சாமியும் மட்டுமே இருந்தனர்.

இருவரும் சில நிமிஷங்கள் பேசவில்லை. வெங்கடபதி தம்பியின் கையைப் பிடித்துத் தன் கையில் னவத்துக் கொண்டார்.

தம்பியின் கையில் மூன்று விரல்கள் இழந்த பகுதியைத் தடவினார். கண்களில் நீர் வழிந்து குழந்தைச்சாமியின் கையை நனைத்தது.

”அன்று அதிராம்பட்டினத்தில் நீ மூன்று விரல்களை மட்டும் இழக்கவில்லை அழகிரி, நல்ல பெயர், சொத்து, சுகம் எல்லாவற்றையும் இழந்தாய்.” இதைச் சொல்லி முடிப்பதற்குள் வெங்கடபதியின் குரல் தழுதழுத்தது.

“விரல்களை இழந்தேன். உண்மை. ஆனால் வாழ்வைப் பெற்றேன் அண்ணா, அமைதியை அடைந்தேன். சிறை செல்லும்வரை வாழ்க்கை ஜுரம் என்னை அனலாக வாட்டியது. சிறையில் அந்த ஜுரம் தணிந்தது. வெளி வந்ததும் ஆத்மான ஒரு நோயற்ற வாழ்வு வாழ முடியும் என்பதை உணர்த்து கொண்டேன். மாலை அந்த இன்ஸ்பெக்டர் பங்குன் நாயரைச் சந்தித்தேன். அப்போதுதான் ஒரு வினாடிக்கு அந்த வாழ்வு ஜுரத்தின் ஞாபகம் திரும்பியது.”

“இன்ஸ்பெக்டர் நாயர் உன்னை அடையாளம் சுண்டு கொண்டாரா? தண்டனை முடிந்தும் உன்னைப் பழி விடாது போல் இருக்கிறதே!”

“என்னை அடையாளம் புரிந்து கொண்டார். ஆனால் அவர் என்னைப் பற்றிப் பேச மாட்டார்.. அவருக்கு இன்று நான் குற்றவாளி அழகிரிசாமி அல்ல. நான் குழந்தைச்சாமியாகவே இருக்கிறேன். என்றும் இருப்பேன்.”

“அழகிரி! உன் அமைதியைப் பார்த்து எனக்குப் பொருமை ஏற்படுகிறது. வாழ்வை விலை கொடுக்காமல் வாங்கிக் கொண்டேன். ஒரு பலனையும் காணவில்லை. தானமாகக் கொடுத்தவன் நீ, உனக்கு இருக்கும் அமைதி எனக்கில்லையே, இந்த முடிவு நேரத்திலாவது, அன்று நீ அதிராம்பட்டினத்தில் அளித்த வாழ்வுக்குப் பிரதியாக ஒரு விலை வாங்கிக்கொள். என் சொத்தில் சரி பாதியை ஏற்றுக்கொள்.”

“வேண்டாம் அண்ண. அன்றே அதிராம்பட்டினத்தில் எனக்கு விலை கொடுத்து விட்டீர்கள். சொத்து சுமையில்லாத இன்ப வாழ்வுக்கு வழி வகுத்துக் கொண்டபின், என் முதுகில் மறுபடியும் பாரத்தை ஏன் ஏற்றுகிறீர்கள்?”

வெங்கடபதியின் முகம் சிவந்தது. அவர் உதடுகள் துடித்தன. “தம்பி! அன்று நீ என்னைக் காப்பாற்றித் தண்டனையடைந்தாய், சிறை சென்றாய். இன்று இப்படி நிற்கிறாய். இவ்வளவும் எதற்காக? எனக்காக. இவ்ளளவும் செய்த நீ என் வீட்டில் உண வருந்துவதும் இல்லை. தங்குவதும் இல்லை. என்னிடம் எதையும் வாங்கிக் கொள்வதும் இல்லை.”

“அண்ணா! அனாதை விடுதியும் பள்ளியும் உங்கள் உதவியால் ஏற்பட்டது. தானே?”

“அழகிரி! உனக்காக என்று ஒன்று கூடப் பெற்றுக் கொள்ள வில்லையே. அன்று நீ அதிராம்பட்டினத்தில், கடற்கரையில் என் பொருட்டுப் பலியாகி யிராவிட்டால் ஏது எனக்குச் சொத்து, அந்தஸ்து, சுகம் எல்லாம்? என் ஆத்ம திருப்திக்காக நீ ஏதாவது பெற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.”

குழந்தைச்சாமி திகைத்து இருந்தார். சில விநாடிகளுக்குப் பிறகு, “அண்ணா! எனக்குக் தேவை என்று நான் நினைக்கும் பொருள் உலகத்தில் ஒன்றுமில்லை. ஆகையால் எதையும் கொடுக்க வேண்டாம். உங்களுக்குப் பிற்காலம் உங்கள் மகன் இந்தத் தர்மங்களைத் தொடர்ந்து நடத்தினால், அதுவே எனக்குப் போதும்” என்று சொல்லிவிட்டுத் திரும்பினர்.

குருவாயூரப்பன் படம் தெரிந்தது.

“அண்ணா! எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்.”

ஆவலுடன், “என்ன தம்பி! என்ன உதவி?” என்று கேட்டார் அண்ணன்.

“உங்கள் கோயமுத்தூர் நண்பர்களுக்குச் செய்ய வேண்டியதையெல்லாம் செய்துவிட்டீர்களா?”

“எல்லாம் முடிந்த மாதிரிதான்.”

“அண்ணா! உங்கள் உலக விவகாரங்களை முடியுங்கள். அதுவரை நான் தோட்டத்தில் இருக்கிறேன். பிறகு வருகிறேன். அப்புறம் யாரும் இந்த அறைக்குள் வரக்கூடாது. நானும் நீங்களும் மட்டும்தான் இருக்க வேண்டும். நம் இருவரிடையேயும் குருவாயூரப்பன் நினைவுதான் இருக்க வேண்டும். அது மட்டுமல்ல, உங்கள் தலை என் மடியில் இருக்க வேண்டும், உங்கள் பயணம் முடியும்போது.”

வெங்கடபதி நன்றியோடு தம்பியின் முகத்தைப் பார்த்தார். “அழகிரி! அன்றும் இன்றும் நீ என்னைப் பற்றித்தான் நினைக்கிறாய்! உன்னைப்பற்றியே நினைப்பது இல்லை” என்று சொல்லிவிட்டு அவர் கைகளைப் பிடித்துக் கொண்டார்.

அப்போது அவர் உள்ளத்தில் ஒரு நிம்மதி ஏற்பட்டது.

அத்தியாயம்-8

குழந்தைச்சாமி வந்த வழியே இறங்கித் தோட்டத்துக்குச் சென்றார்.

அங்கு சித்திப் பசுக்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. அருகில் இருந்தத ஒரு முக்காலியின் மீது உட்கார்ந்தார் சிந்தித்தபடி.

குழந்தைச்சாமி என்ற அழகிரிசாமியின் வளர்ச்சியில் இரண்டே பருவங்கள் தான். பால் பருவம், அடுத்தது முதிய பருவம்! இடையே உள்ள இளமைப் பருவம், அதன் லட்சணங்களாகிய காதல், உறவு, பின் திருமணம், குழந்தைப் பேறு என்று நிகழ்ச்சிகளையெல்லாம் ஒரே தாண்டலில் தாண்டிவிட்டார்.

அவரது பாலபருவம் வறுமையில் கழிந்தது. தாய் தந்தையற்ற வெங்கடபதியும் அழகிரியும் ஒருவருக்கொருவர் தான் உறவு!

ஏழு வயது முத்தவனான வெங்கடபதி, அழகிரிக்கு எண்ணெய் தேய்த்து விடுவது. உணவு தயார் செய்வது போன்ற பொறுப்பெல்லாம் ஏற்றுக் கொண்டான். தம்பிக்கு அண்ணனாக மட்டும் இல்லாமல், தந்தை தாயாகவும் இருந்தான்.

இருவரும் சேர்த்து, “பருத்தி ஜின்னிங்” தொழிற்சாலையில் வேலை செய்தனர். இரவு வேளைகளில் தம்பிக்கு அண்ணன் ஆசிரியராகவும் இருந்தான்.

உயர்த்த ராகாப் பருத்தியோடு மட்ட ரகப் பருத்தியைக் கலந்து விற்கும் சாமர்த்தியத்தினால் வெங்கடபதியின் சம்பளம் உயர்ந்தது, துணிவு இருந்ததால் சில வருஷங்களில் பருத்தி வாங்கி விற்று லாபம் சம்பாதிக்கத் தொடங்கினான். பிறகு ஒரு ஜின்னிங் பாக்டரியின்முதலாளியானான்.

பாங்கு அதிகாரியின் ஆதரவால் தேவைப்பட்ட போது பணம் கிடைக்கவே, அடையாள தெரியாத அளவுக்கு வியாபாரம் பெருகிற்று. பாங்கிக்குக் குறித்த தவணையில் வட்டியும் முதலும் கட்டி வந்தமையால், வெங்கடபதியின் நாணயம் கெடாமல் இருந்தது.

அழகிரியை உயர்நிலைப்பள்ளியில் சேர்த்தான் வெங்கடபதி, செல்வம் பெருகியபோதுகூட, வெங்கடபதியும் அழகிரியும் ஒரே படுக்கையில்தான் தூங்குவார்கள். பள்ளியிலிருந்து திரும்பிய அழகிரிக்குக் காப்பி தயார் செய்ய, வெங்கடபதி வேலையை விட்டு நாலு மணிக்கே ஓடி வந்து விடுவான். சமையலுக்கு ஓர் ஆள் வைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணமே வெங்கடபதிக்குத் தோன்றவில்லை.

தன்னுடைய அண்ணன் ஒரு முதலாளி, ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கிறன், அவன் தனக்கு எண்ணெய் தேய்த்துவிடுவது. உணவு சமைப்பது எல்லாம் பொருந்தாது என்பதை அழகிரி சிறிதும் நினைக்கவில்லை, அழகிரிக்கு நினைவு தெரிந்தது முதல், வெங்கடபதி உழைப்பது, அழகிரி அமர்த்திருப்பது என்பது ஒரு மாமூலாகினிட்டது. செல் வம் வந்தும் கூட ஏழ்மை அவர்கள் வாழ்வில் சிறிது காலத்துக்கு நீடித்துக் கொண்டிருந்தது.

வெங்கடபதிக்குத் திருமணம் ஆனதும் தான் மாறுதல் வந்தது. அழகிரியைச் கவனிக்கும் பொறுப்பு வெங்கடபதியின் மனைவி ராஜத்தின் பணியாகிவிட்டது. அண்ணன் தனக்காக இவ்வளவு பாடு படுகிறான் என்பதை உணர்ந்ததாகவே அழகிரி காட்டிக் கொள்ளவில்லை. நன்றி வார்த்தைகள் கூறுவதுமில்லை. இதைப் பார்த்த வெங்கடபதியின் மனைவி, அழகிரி சுயநலக்காரன், தன் கணவனின் தலைச்சுமை என்று நினைத்தாள். வெங்கடபதிக்குள் குழந்தை ராஜு பிறந்ததும், ராஜத்தின் மனம் பூராவும் ராஜுவின் பராமரிப்பிலேயே சென்றது.

அழகிரி அதே வீட்டில் சாப்பிடுவதும், வெளியே செல்வதுமாக இருந்தான். அந்த வீட்டில் ஓர் அன்னிய மனுஷனாக இருந்தான். பணம் பெருகப் பெருக வெங்கடபதிக்குப் பல தொல்லைகள், பல ஊர்ப்பயணங்கள் ஏற்பட்டவன் வண்ணமே இருந்தன. வீட்டில் தங்கவே நேரம் கிடைப்பதில்லை. தம்பி எப்படி இருக்கிறான், என்ன படிக்கிறான் என்று விசாரிக்கவே நேரமில்லாதபடி போய் விட்டது. பரீட்சையில் தவறிய அழகிரி, படிப்பை நிறுத்திவிட்டான். அதுகூட வெங்கடபதிக்குத் தெரியாது.

அழகிரி கோயமுத்தூரில் உள்ள ஒரு அம்மள் கோவிலுக்குப் அடிக்கடி போவான். பிறகு வீட்டுக்கு வந்து தூங்குவான். இப்படி உபயோகமில்லாத வாழ்க்கை நடத்துகிறோமே என்ற வருத்தம் கொஞ்சமும் இல்லை அழகிரிக்கு. அண்ணன் தனக்காகப் பாடுபட்டபோது நன்றியும் சொன்னதில்லை. அண்ணன் பாராமுகமாக வேலையில் ஈடுபட்டிருந்த போது, குறையும் சொன்னதில்லை. அண்ணி அவனை அலட்சியமாக நடத்திய போது, அண்ணியைப் பற்றி ஒரு நாளும் புகார் சொன்னதும் இல்லை. ஒரு மக்குப்போல், உணர்ச்சியில்லாத மரக்கட்டை போல், இருந்து வந்தான்.

அவ்வப்போது ராஜம் சொல்லும் புகார் வார்த்தைகள மட்டும் தொடர்ந்து கேட்டு வந்த வெங்கடபதி. அழகிரியைக் கண்டிப்பான். அப்போதேல்லாம் அழகிரி கண்கலங்கி நிற்பான், ஆனால் பதில் சொல்லமாட்டான். அழகிரிக்கு மாதாமாதம் கொடுத்து வரும் செலவுத் தொகை நிறுத்தப்பட்டது. அப்போதும் அண்ணனிடம் போய், ” என் அலவன்ஸை ஏன் நிறுத்தினாய்?” என்று கேட்கவில்லை. மாதம் தவறாமல் அரசியல் தலைவர்களுக்கு வெங்கடபதி ஆயிரக்கணக்கில் செலவு செய்து டின்னர்கள் வைப்பான். அந்த அலங்கார விருந்துகளில் கூட, அழகிரி ஒதுங்கியே இருப்பான்.

எதிர்த்துப் போராடாது இருந்த அழதரியிடம் வெங்கடபதியின் மனைவிக்குக் கோபம் குறையவில்லை. அதிக மாகியது. உலகத்தின் பாராட்டு, நல்ல பெயர், அந்தஸ்து இந்தக் காரணங்களுக்காகக் கணவனை ஆடம்பரச் செலவுசெய்ய தூண்டிக் கொண்டிருந்த வெங்கடபதியின் மனைவி ராஜத்துக்கு, படிப்பில்லாமல் ஊமை போல் உலவும் அழகிரியைப் பார்க்கவே பிடிக்கவில்லை. அவன், தன் கணவனின் வளமான எதிர்காலத்துக்குப் பெரிய விரோதி என்றே நினைத்தாள்.

உடை உடுக்கத் தெரியாதவன், பெரிய மனிதர்களோடு பேசிப் பழகத் தெரியாத மண்டு, குலத்தின் பெயரை நாசமாக்க வந்தவன் என்று அடிக்கடி வேலைக்காரர்களிடம் சொல்லி வருந்துவாள். வேலைக்காரர்கள் நாளடைவில் அழகிரியை மதிக்கவே மறுத்தனர். அழகிரிக்குப் பங்களா வேலைக்காரர்களின் நடத்தையில் ஏற்பட்ட மாறுதல் மன வருத்தத்தைக் கொடுத்தது.

அண்ணனிடம் சொல்லலாமா என்று நினைத்தான். ஆனால் அண்ணன் வருந்துவான் என்று நினைத்துப் பேசாமலே இருந்தான். சமையல் அறையில் போய்ச் சாப்பிட்டுவிட்டு வருவதே நாளடைவில் பெரும் சோதனையாகி விட்டது. என்ன செய்வது என்று புரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த அழகிரிக்கு, அந்தப் பிரச்சினை, தானாகவே ஒரு முடிவுக்கு வரும்படியான நிகழ்ச்சி ஏற்பட்டது.

ஒரு நாள் மாலை ஜெயில்ரோடு வழியாக நடந்து வந்து கொண்டிருந்த அழகிரி, ஒரு மூலையில் ஒரு கிழவி கிழங்கு சுட்டு விற்றுக் கொண்டிருந்ததைப் பார்த்தான். பஞ்சு ஆலையில் கூவியாக அண்ணன் வேலை செய்த போது – இருவரும் சின்னப்பிள்ளைகளாக இருந்தபோது – அந்தக் கிழங்கை வாங்கிச் சாப்பிட்டு மகிழ்ந்தது ஞாபகத்துக்கு வந்தது.

வெங்கடபதிக்குச் சுட கிழங்கு என்றால் உயிர் என்று அழகிரிக்குத் தெரியும். செல்வம் வந்தபின் சுட்ட கிழங்கை அண்ணன் சாப்பிடச் சந்தர்ப்பமே இல்லாமல் போய்விட்டதே என்று வருந்தினான் அழகிரி, அந்தக் கிழவியிடம் காலணாக் கொடுத்துச் சுட்ட கிழங்குகளை வாங்கிய பேப்பரில் சுற்றி எடுத்துக்கொண்டு விட்டுக்கு வந்தான்.

அன்றுதான் சென்னையிலிருந்து ஒரு பெரிய செல்வர் வெங்கடபதியின் வீட்டுக்கு வந்து தங்கியிருந்தார். வியாபாரத்தில் ‘முதலுதவி’ செய்யும் பெரிய புள்ளியாகையால் அவருக்குத் தடபுடலாக உபசாரம் செய்து கொண்டிருத்தனர் வெங்கடபதியும், அவர் மனைவியும்.

வெங்கடபதியின் சுறுசுறுப்பான பேச்சிலிருந்து, பெரிய தொகை கடனாப் பெறுவதற்கு முயற்சிகள் செய்து கொண்டு இருந்தார் என்பது தெளிவாகியது. வெங்கடபதியின் பங்களாவின் புல்தரைப் பகுதியில் வர்ண நாற்காலியில் அமர்ந்திருந்தார் விருந்தாளி. எதிரே ராஜமும் வெங்கடபதியும் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் அழகிரி பங்களாவினுல் நுழைந்தான். நுழைந்தவன் பேசாமல் வீட்டின் உட்புறம் போயிருக்கலாம்.

ஆனால் அண்ணன் மீதுள்ள அன்பு, நேரே அவனை நோக்கிப் போகச் செய்தது. “அண்ணா!” என்று ஆசையோடு கூப்பிட்டுக் கொண்டே சென்றான் அழகிரி.

புழுதி அடைந்த கால்களோடு, பழைய செருப்போடு, பழுப்பு நிற வேட்டியோடு நுழைத்து அழகிரி, “அண்ணா!” என்று தன் கணவணை விருந்தாளி முன்பு அழைப்பதே ராஜத்துக்குப் பிடிக்கவில்லை.

ஆச்சரியத்தோடு அழகிரியைப் பார்த்து உட்கார்ந்திருக்கும் சென்னைத் காரரிடம், அழகிரியைத் தம்பி என்று அறிமுகம் செய்து வைக்காமல் இருக்க முடியவில்லை வெங்கடபதியால். அறிமுகம் ஆனபின்பாவது அழகிரி நகர்ந்திருக்கலாம். ஆனால் சுட்ட கிழங்கை அண்ணனுக்கு கொடுக்காமல் போக அவன் விரும்பவில்லை. காகிதப் பொட்டலத்தை அவிழ்த்து, கிழங்குகளை அங்குள்ள பீங்கான் தட்டில் வைத்தான்.

“அண்ணா! உனக்குர் சுட்ட கிழங்குன்னு ரொம்பப் பிடிக்குமேன்னு வாங்கி வந்தேன், சார்! அந்தக் காலத்திலே அண்ணனும் நானும் பேக்டரி டியூட்டி முடிஞ்சதும் கிழங்கு வாங்கித் திங்காமல் வர்றதில்லே,” என்று சொன்னான்.

எதிரே அமர்ந்திருந்த மூவர் முகமும் போன போக்கிலிருந்து, ஏதோ சொல்லக்கூடாத ஒன்றைச் சொல்லி விட்டோம் என்பதை உணர்ந்தான். பேசக்கூடாத விஷயத்தைப் பேசிவிட்டோம் என்பதைத் தெரிந்து கொண்டான்.

“சரி சரி, அழகிரி. உள்ளே போடா,” என்று அண்ணன் அன்பில்லாமல் உத்தரவிடவும். குழம்பிய சிந்தனையோடு அழகிரி பங்களாலினுள் சென்றான். பங்களாலினுள் சென்ற அழகிரி “சுட்ட கிழங்கைச் சாப்பிடுவது என்ன ஒரு கேவலமான செயலா? ஏன் அப்படி அண்ணனும் அண்ணியும் என்னை முறைத்துப் பார்க்க வேண்டும்?” என்று நினைத்த வண்ணம் இருந்தான். பிறகு குளித்துவிட்டுச் சாப்பிட் உட்கார்ந்தான். வந்தவர், இரவு சாப்பிடும் வழக்கம் இல்லாதவராகையால், சீக்கிரமே படுக்கச் சென்றுவிட்டார்.

வெங்கடபதியும் ராஜமும் சாப்பிட வந்தபோது, சமையல் அறையில் அழகிரி சாப்பிட்டுக் கொண்டு இருந்தான். அவனைப் பார்த்ததும் வெங்கடபதிக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. “டேய் அழகிரி! சமய சந்தர்ப்பம் தெரியாமல் இப்படி நடந்துக்கறியே, நீ என்னடா குழந்தையா? உன்னாலே உதவியில்லேன்னாலும் உபத்திரமாவது இல்லாமல் இருக்கலாமல்ல? வந்திருக்கிறவர் யாரு? அவர்கிட்டப் போயி, நாம் கூலி வேலை செய்தது, சுட்ட கிழங்கு சாப்பிட்டது இதையெல்லாமா சொல்லனும்?” என்று உரத்த குரலில் கண்டித்தான்.

அழகிரி தன்னுடைய அண்ணன் இதுவரை இவ்வளவு கோபமாசு இருந்ததைப் பார்த்ததே இல்லை. ‘என்னுடைய அண்ணனா இப்படிப் பேசுகிறார்?’ என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, ராஜம் தொடர்ந்து பேசினாள்.

“எல்லாத்துக்கும் நீங்கதான் காரணம். தம்பியா இருந்தா என்ன? இப்படியா உட்கார்த்தி வச்சு, தண்டச்சோறு போடுவாங்க? ஒரு வேலை வெட்டி இல்லாம், இப்படியே இருந்தா முடிவுதான் என்ன?”

சமையல்காரர்கள் முன் ‘தண்டச்சோறு’ என்ற வார்த்தையை அண்ணி சொல்லவே, அழகிரி கலங்கிப் போனான். “அண்ணி! வார்த்தையை அடக்கிப் பேசு. என் அண்ணன் வீட்டில் நான் சாப்பிடறேன். நீ யார் கேட்கிறதுக்கு?” என்று பதில் சொன்னான்.

“அண்ணன் தம்பியானாலும் வாயும் வயிறும் வேறேதானே. அவனவன் சம்பாதிக்கணும். அப்போத்தான் ஆண் பிள்ளை, வேஷ்டி கட்டறவங்களெல்லாம் ஆண்பிள்ளை ஆயிடமாட்டாங்க” என்று ராஜம் சொன்னதைக் கேட்டதும். அங்கு நின்ற சமையல்காரன் சிரித்தான்.

அழகிரிக்குக் கோபம் வந்தது. “அண்ணா! அண்ணி வாய் போனபடி பேசறாங்க, பார்த்துக்கிட்டு சும்மா இருக்கிங்களே” என்று உரிமையோடு சொன்னான்.

அண்ணன் தரையைப் பார்த்துபடி பேசினான். “அழகிரி! அவள் சொல்றதிலே ஒண்ணும் தப்பில்லே. நானும் உங்கிட்டே ரொம்ப நாளாச் சொல்லணும்னு தான் இருந்தேன். உருப்படியா ஒண்ணும் செய்யாமல் இப்படிச் சுத்திக்கிட்டிருக்கிறது. எனக்குக் கட்டோடு பிடிக்கல்லே. உன்னை என் தம்பின்னு சொல்லிக்கவே எனக்கு அவமானமா இருக்குடா,” என்று கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.

அழகிரி முதலில் திகைப்படைந்தான். அண்ணனே மாறிவிட்டார்! செல்வம் மாற்றியதா, இல்லை, மனைவி மாற்றினானா? இல்லை. இரண்டும் சேர்ந்து மாறுதலைக் கொடுத்ததா?

அழகிரி முன் வைக்கப்பட்டிருந்த உணவு விஷம் போல் காட்சியளித்தது. பூமியே பிளந்துவிட்டது போலவும், அவன் உட்கார்த்திருந்த இடத்தில் அந்தப் பள்ளத்தில் அவன் விழுந்து கொண்டிருப்பது போலவும் உணர்ந்தான். அப்படியே பேய் அறைந்தவன் போல் உட்கார்ந்திருந்தான்.

சமையல்காரன், “சாப்பிடறதுன்ளு சாப்பிடு, இல்லாட்டி எந்திரிச்சிப் போ” என்று சொன்னதும்தான் சுய நினைவுக்கு வந்தான்.

உடனே எழுந்து கழுவிக் கொண்டு வெளியேறினான்.

தூக்கம் பிடிக்கவில்லை. பங்களாவை விட்டு மெள்ள நடக்க ஆரம்பித்தான்.

அவினாசி ரோடில் உள்ள ஒரு பார்க்கினுள் நுழைந்தான். அங்கு போடப்பட்டிருந்த பெஞ்சியிலேயே அன்று இரவைக் கழித்தான். தூக்கத்தில் கழிக்கவில்லை. கோபத்தில் கழித்தான்.

பொழுது புலரும் வேளையில் தான் அண்ணன், அண்ணிமீது ஏற்பட்ட கோபம் தணிந்தது. அவர்கள் சொல்வதில் ஓரளவு உண்மை இருப்பதாகவும் பட்டது. கோபம் தணிந்ததேயல்லாமல், மறுபடியும் மனத்தில் உறவு தொடர வில்லை.

எழுந்து நடந்து ரயில்வே ஸ்டேஷனை நோக்கிச் சென்றான். அங்கிருந்து டிக்கெட்டில்லாமல் ரயில் ஏறினான். அப்புறம் எங்கெங்கோ சென்றான், வாழ்வைப் புரிந்து கொண்டான்.

அரசைத் அறந்த சித்தார்த்தன் புரிந்து கொண்டது போல், வாழ்க்கையின் மூல தத்துவத்தைப் புரிந்து கொண்டான். “அண்ணன், மனைவி, செல்வம், அந்தஸ்து எல்லாம் ஒருவனைச் குழ்த்திருந்தாலும், மனிதன் அடிப்படையில் தனிமையானவன், அவன் கணக்கை அவன்தான் தீர்க்க வேண்டும். அவன் எண்ணங்களோடு, பயங்களோடு, ஆசைகளோடு அவன் தான் தனியாக வாழ வேண்டும். அவன் உண்ணும் உணவை அவனே தான் ஜீரணித்தாக வேண்டும். படவேண்டிய கவலைகளை அவனேதான் படவேண்டும். உறவு உதவாது. சமயத்தில் அவனுக்கு உடலும் உதவாமல் வம்பு செய்யும். மனிதன் ஒரு பயங்கரமான தனிமையில் தான் வாழ்கிறான், தனிமையில் தான் இறக்கிறான் என்ற உண்மையைப் புரிந்து கொண்டான் அழகிரி.

அழகிரி உள்ளத்திலே வாழ்ந்தபோது, வெங்கடபதி ஊரிலே செல்வத்தோடு பரந்து வாழ்ந்தான். அழகிரி ஒவ்வொரு ஆனசகளாக இழந்துகொண்டே வந்த போது, வெங்கடபதி ஒவ்வொரு மில்லாக வாங்கிக்கொண்டே வந்தான். பருத்தி மார்க்கெட் இறங்கிக்கொண்டே போகும்போது, பணமுடை கோயமுத்தூரில் அதிகமாகிக் கொண்டு போகும் நிலையில், ‘வெங்கடபதிக்கு மட்டும் எப்படிப் பணம் கிடைத்தது’ என்று ஊரார் நினைத்தனர். ஆனால் தூக்கமில்லாமல், உணவில்லாமல், பரட்டைத் தலையோடு அதிராம்பட்டணத்துக்கும் கோயமுத்தூருக்குமாக இரவு வேளைகளில் பேய் போல் உலவிக் கொண்டிருந்த வெங்கடபதிக்குத்தான், அவன் மனம் பட்ட பாடு தெரியும். சட்ட விரோதம் என்ற சறுக்குப் பாறையில் சறுக்க ஆரம்பித்து விட்ட வெங்கடபதி நடுவில் நிறுத்த முடியாதபடி சறுக்கிக்கொண்டு வந்தான். கள்ளநோட்டு, கள்ளக் கடத்தல், இரண்டின் அஸ்திவாரத்தின்மீது பயமில்லாது கட்டிய அவனுடைய அந்தஸ்து எப்போது வெடித்துச் சாம்பல் ஆகுமோ என்று ஒவ்வொரு நிமிஷமும் சாகாமல் செத்துக் கொண்டிருந்தான்.

போலீஸ் துப்புத் துலக்குகிறர்கள் என்று தெரிந்ததும் வெங்கட்பதியின் பீதி அதிகமாயிற்று. அவன் மனைவியின் கழுத்தில் மின்னும் வைரங்கள் அவனைப் பார்த்துச் சிரிப்பதுபோல் தோன்றின, அவன் புதிதாகத் துவங்கிய பஞ்சாலைகளின் சங்குகள் ஊதும் போதெல்லாம், அவன் வாழ்க்கைப் பயணத்தின் முடிவுச் சங்கொலியாகவே ஒலித்தன. உடல் கோயமுத்தூரிலும் உள்ளம் அதிராம் பட்டணத்திலுமாகத் தவித்தான். கூட்டாளிகளில் எவனாவது உளறிவிட்டால்?

இந்த நியிைல்தான் பங்குன் நாயர் மலையாளத்தில் ஒரு குற்றவாளியைய் கோயமுத்தூர் பிடித்து விசாரணை செய்யும்போது, செல்வந்தரின் நடவடிக்கை பற்றிக் கேட்க நேர்ந்தது. அவர் புலன் விசாரிக்க ஆரம்பித்தார். வெங்கடபதியின் கார் ஒவ்வொரு சனிக்கிழமையும் தவறாமல் அதிராம்பட்டணம் செல்வதன் விவரம், அது அங்கு தங்குமிடங்களின் விவரம் எல்லாம் போலீஸாரிடம் கிடைத்துவிட்டன. இது வெங்கடபதிக்குத் தெரிந்ததும் அவன் தன் அந்தஸ்தின் முடிவு நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்தான்.

பத்து நாளோ, ஒரு மாதமோ – போலீஸார் தன்னைத் தேடி வருவார்கள் என்பது நிச்சயமாகிவிட்டது. இந்த விஷயத்தை மனைவியிடம் சொல்லி பகிர்ந்து கொள்ளவும் முடியாதே? தம்பி அழகிரியிடம். சொல்லலாம். ஆனால் அவனும் இல்லை. அவன் எங்கு சென்றான் என்றே தெரியவில்லை. ரூபாய் தேடும் ஜுரத்தில் இருந்த வெங்கடபதிக்கு, தம்பியைப்பற்றி நினைக்க அவகாசமேது? துணிவோடு ஒரு தீர்மானத்துக்கு வந்தான்.

லட்சக்கணத்தான தொகைக்குப் பதுக்கிய தங்கத்தை எடுத்துக்கொண்டு சென்று அதிராம்பட்டணத்திலுள்ள கூட்டாளிகளிடம் கொடுத்து, அவனைக் காட்டிக் கொடுக்கக்கூடிய ரிக்கார்டுகள் கடிதங்களைப் பெற்று வருவது என்று புறப்பட்டான். அதிராம்பட்டணத்தில், வெளிப்புறத்தில் ஒரு வெற்றிலை பாக்குக் கடையின் அருகில் தினசரியைப் படித்தபடி நிற்கும் அழகிரியைப் பார்த்ததும் வெங்கடபதிக்கு ஆச்சரியமாக இருந்தது.

அவன் முகத்தில் இருந்த அமைதியைப் பார்த்ததும் பொருமையும் ஏற்பட்டது. ”சின்னப் பையனாக இருந்த போது அவன் பொருட்டு எவ்வளவு பாடுபட்டிருக்கிறேன்’ என்று நினைக்கவும் வெங்கடபதிக்குத் தம்பியைக் கட்டிக்கொண்டு அழுது தன் துன்பத்தையெல்லாம் சொல்ல வேண்டும் என்று தோன்றியது.

“டேய் அழகிரி! இங்கே பாருடா.” என்றதும் அழகிரி பேப்பரை மடித்து விட்டுப் பார்த்தான்.

பத்து வருடங்களாகப் பாராத அண்ணன், காரில் உட்கார்ந்திருப்பதைக் கண்டான்.

மெள்ள நடந்து கார் அருகில் வந்து, “அண்ணா! கோயமுத்தூரில் இருக்க வேண்டியவன் நீ. இங்கே எப்படி வந்தாய்?” என்று குழந்தைபோல் கேட்டான்.

வெங்கடபதி தம்பியிடம் என்ன பதிலைச் சொல்வான்? கண் கலங்கியது. நாக்குழறியது. “தம்பி, வண்டியிலே ஏறிக்கோ” என்றான்.

அழகிரி தயங்கினான்.

“சரிதான். வண்டியிலே ஏறுடா” என்று கட்டளையிட்டதும் அழகிரி காரிலே ஏறிக் கொண்டான், வெங்கடபதி தங்கும் விடுதிக்கு வந்ததும் தம்பியைச் சாப்பிடச் சொன்னான்.

அழகிரி பசியில்லை என்று சாப்பிட மறுத்துவிட்டான்.

“அண்ணா! கோயமுத்தூர்லே நீ தான் இப்ப நம்பர் ஒன் முதலாளியாமே! மில்லு மில்லா வாங்கித் தள்ளறியாமே!” என்று கேள்விகளை அடுக்கினான்.

வெங்கடபதி, “மண்ணாங்கட்டி! நீ ஏண்டா சொல்லாமே கொள்ளாமே வீட்டை விட்டுப் போயிட்டே? இப்ப என்னடா பண்றே?” என்று கேட்டான்.

அழகிரி, “சும்மாத்தான் சுத்திக்கிட்டிருக்கேன் நிலையா ஒரு வேலையும் கிடையாது”, என்று சொல்லிவிட்டு, அண்ணியைப் பற்றியும், குழந்தை ராஜுவைப் பற்றியும் விசாரித்தான்.

ராஜு உதகமண்டலத்திலுள்ள லவ்டேல் பள்ளியில் படிப்பதாகச் சொன்னான் வெங்கடபதி.

அழகிரி விடைபெற்றுச் செல்லக் கிளம்பியதும், வெங்கடபதியால் பொறுக்க முடியவில்லை. அழகிரியைக் கட்டிக்கொண்டு ஓவென்று அழுதான். தன்னை எதிர்நோக்கி இருக்கும் ஆபத்திதைப்பற்றிச் சொன்னான். தன் போலி வாழ்க்கையின் அலங்கோலத்தைப் பற்றி விவரித்தான்.

“தம்பி! என்னைப் போலீஸார் பிடித்துச் சென்றால் நான் வாழப் போவது இல்லை. பையிலேயே தயாராக சயநைடு மாத்திரை வைத்திருக்கிறேன். அதைச் சாப்பிட்டு இறந்துவிடுவேன். அப்போது ராஜுவையும், என் ஆஸ்தியையும் காப்பாற்ற வேண்டியது உன் பொறுப்பு” என்று சொல்லிவிட்டு அழுதான்.

அழகிரி, “அண்ணா! நியா இப்படிக் கேவலமான ஒரு சிக்கல்லே மாட்டிக்கிட்டே! எதுக்கண்ணா உனக்கு இவ்வளவு பணம்?” என்று சிந்தனையில் ஆழ்ந்தான்.

அன்றிலிருந்து அண்ணனும் தம்பியும் இரண்டு நாட்களில் கூட்டாளிகளைச் சந்தித்து, தங்கத்தைக் கொடுத்து, ரிக்கார்டுகளை வாங்கிக் கொண்டனர். வெங்கடபதியின் நிலை ஒருவாறு சரியானதும், அழகிரி வெங்கடபதியைக் கோயமுத்தூருக்குச் செல்லும்படி சொல்லிவிட்டு, தங்கத்தோடு அதிராம் பட்டணத்திலேயே தங்கினான். அதன் அர்த்தம் வெங்கடபதிக்கு விளங்க வில்லை.

ஆனால் இரண்டு நாட்களில் போலீஸார் அழகிரியைக் கள்ளநோட்டு அச்சடிக்கும் யந்திரத்தோடு கைது செய்த போதுதான் விவரம் புரிந்தது. யந்திரத்தை எடுக்கப் பங்குன் நாயர் போலீஸாருடன் வந்தபோது நடந்த கலாட்டாவில் தான் போலீஸார் சுட, அழகிரியின் மூன்று விரல்கள் சிதறி விழுந்தன.

அழகிரி கொடுத்த வாக்குமூலத்தில், “நானே குற்றவாளி. என்னுடைய அண்ணனுக்கு எதுவும். தெரியாது. அண்ணன் பெயரையும் காரையும் சட்ட விரோதமான நடவடிக்கைகளில் நானே உபயோகப்படுத்தினேன்,” என்று குறிப்பிட்டிருந்தான்.

இதைப் பார்த்த வெங்கடபதி கலங்கி விட்டான். விசாரணையின் போது அழகிரி, “அண்ணா! இந்த விசாரணையில் நான் இழப்பது ஒன்றுமில்லை. எனக்கு அந்தஸ்து, சொத்து, மனைவி, மகள் கிடையாது. தனி ஆள், சின்னப் பையனாக இருந்தபோது, என்னை வளர்த்து, காத்து எவ்வளவோ செய்திருக்கிறய். அதற்கு உருப்படியாகப் பதில் ஏதாவது செய்ய வேண்டாமா?” என்று சொன்னான்.

தன் கணவனின் தம்பி, எவ்வளவு உறுதியான தியாக உள்ளம் படைத்தவன் என்று உணர்ந்த ராஜம் அப்படியே மனம் இடிந்துவிட்டாள்.

இரண்டு வருஷம் சுழித்து அவள் இறக்கும்போது அவளுக்கிருந்த ஒரே குறை, அன்று இரவு உணவு சாப்பிடாமல் போனவனுக்குத் தன் கையால் உணவு போடாமல் சாகிறோமே என்பது தான்.


குழந்தைச்சாமி தமது கடந்த காலச் சம்பவங்களைப்பற்றி ஒவ்வொள்றக நினைத்துக்கொண்டே புழக் கடைத் தோட்டத்தில், மாடுகளுக் கெதிரே உட்கார்ந்திருந்தார்.

திடீரென்று ஏதோ தோன்றவே அங்கிருந்து எழுந்து கடைத் தெருவுக்குச் சென்று திரும்பினார்.

அண்ணனிடம் வந்து, ”அண்ணா! உலக விவகாரமெல்லாம் முடிஞ்சதா?” என்று கேட்டார்.

”எல்லாம் முடிஞ்சுது, உன் விவகாரந்தான் பாக்கி. நீதான் ஒண்ணும் வாங்கிக் கொள்ளமாட்டேங்கிறே.” என்றார் அண்ணன்.

“என் விஷயத்தை விட்டுத் தள்ளுங்க. இன்னொரு சின்ன உலக விவகாரம் உங்களுக்குப் பாக்கி இருக்கு.”

மேல் மூச்சு வாங்கியபடியே அண்ணன். “அதென்ன தம்பி?” என்றார்.

குழந்தைச்சாமி தன் கையிலே எடுத்து வந்த பொட்டலத்தைப் பிரித்தார். அதில் தணலில் சுடப்பட்ட சர்க்கரைவள்ளிக் கிழங்குகள் இருந்தன. அவற்றை எடுத்து உரித்து அண்ணன் வாயில் போட்டார். வெங்கடபதி முயற்சி செய்து, கிழங்கை மென்றார், “அண்ணா! என் கணக்கு உங்களுக்குத் தீர்ந்து விட்டது. அன்று இந்தக் கிழங்குகளை ஆசையோடு உங்களுக்குக் கொண்டு வந்தேன். நீங்க சாப்பிட மறுத்தீங்க. இப்போ சாப்பிடறீங்க. எனக்குக் சொத்துக் கொடுத்த மாதிரி ஆச்சு. இனிமேல் நீங்க ஒரு விதக் குறையும் இல்லாம, குருவாயூரப்பனைப் பத்தி நினைக்கலாமில்லே?” என்றார்.

வெங்கடபதியின் தலையைக் குழந்தைச்சாமி தன் மடியில் வைத்துக் கொண்டார். மெள்ள “நாராயணா!” என்று சொல்ல ஆரம்பித்தார்.

இரண்டு சகோதரர்களும் தொடர்ந்து. “நாராயணா” என்று சொல்லியபடி இருந்தனர், குழந்தைச்சாமியின் பார்வை குருவாயூரப்பன் படத்தில் இருந்தது.

ஆனால் வெங்கடபதியின் பார்வை தம்பியின் முகத்தில் நின்றது

இதைக் குழந்தைச்சாமி கவனித்தார். “குருவாயூரப்பன் படத்தைப் பாருங்கண்ணா. கடைசி நிமிஷத்திலே யாவது அவரைப் பாருங்க. கதி கிடைக்கும்”, என்றார்.

வெங்கடபதியின் மூச்சு தள்ளாடியது. கண்கள் மருண்டு படத்தை நோக்கின. ”குருவாயூரப்பன் அங்கே இல்லையே, அங்கே வெறும் போட்டோ பிரேம் தானே இருக்கு? அப்பன் அங்கில்லே. குருவாயூரப்பன் இதோ.. இதோ. என் பக்கத்திலே,” என்று சொல்லி, தன் தம்பியையே சுட்டி காட்டினார் வெங்கடபதி. அடுத்த வினாடி “நாராயணா!” என்று முடிக்கும் போதே அவர் மூச்சு நின்றது.

அவர் தலை தம்பியின் மடிதில் புரண்டது. குழந்தைச்சாமி கண்களிலிருந்து மளமளவென்று கண்ணீர் வழிந்தது.

விரல்கள் இழந்த சுரத்தால் வெங்கடபதியின் கையை எடுத்தார். விரல்களிடையே சிக்கிக் கொண்டிருந்த சுட்ட கிழங்கின் மீதியிருந்த பகுதியை அப்புறப்படுத்தினார். அண்ணன் தலையைப் படுக்கையில் கிடத்தினார்.

அண்ணன் மகன் ராஜுவை அழைத்தார். ராஜு, தந்தையின் வாழ்வு முடிந்துவிட்டது என்று தெரிந்ததும், அலறிக்கொண்டு நெருங்கினான்.

“ராஜு! நான் வருகிறேன்.” என்று கதவை நோக்கிப் போனார் குழந்தைச்சாமி.

ராஜு, “சித்தப்பா! எங்கே போறீங்க?” என்று கேட்டான்.

“அண்ணனுக்குச் செய்ய வேண்டியதைச் செய்திட்டேன். இனி அவர் உடலுக்கு செய்ய வேண்டியதை நீயும், மத்தவங்களும் செய்யுங்க. நான் மயானத்துக்கு வரப் போவதில்லை”, என்று சொல்லி விட்டு வந்த வழியே சென்றார் குழந்தைச்சாமி.

அத்தியாயம்-9

வெங்கடபதியின் உடலுக்குப் பெரிய ஆடம்பரத்துடன் இறுதி மரியாதைகள் செய்யப்பட்டன. அவருடைய கோயமுத்தூர் நண்பர்களுக்கு அவர்கள் இதுநாள்வரை காத்துக் கொண்டிருந்த முடிவு ஏற்பட்டதும், எல்லாருக்கும் ஒரு நிம்மதி, வெங்கடபதியின் உடலை மரியாதையோடு பின் தொடர்ந்தனர்.

வெங்கடபதியின் உறவினர் எல்லாருமே. அழகிரி இந்தச் சமயத்தில்கூட இறுதிப் பயணத்துக்கு வராமல் மலை மீது எங்கோ சென்றுவிட்டான் என்று பேசினர். ஒரே தாய் வயிற்றிலே எப்படி இரண்டு மாறுபட்ட குண அமைப்பு உள்ள மக்கள் பிறந்தனரோ என்று பேசினார்கள்.

ஷோரனூர், குருவாயூரில் இருந்தும் பலர் தானம் வாங்கிப் போக வத்திருந்தனர். சில நாட்களுக்கு சாந்தி வில்லா என்ற மாளிகை ஒரு அன்ன சத்திரமாக விளங்கியது.

ஒரு திருநாளுக்குக் கூட்டம் கூடுவது போல், சாலையில் கூட்டம் கூடவே. மோகினிக்கு விஷயம் புரியவில்லை. நாராயணியிடம், “என்னம்மா இப்படிப் பெரிய கூட்டம் கூடிவிட்டது?” என்று விசாரித்தாள்.

“குழந்தைச் சாமியுடைய அண்ணன் இறந்துட்டாரு. பெரிய சாவு இல்லியா? அதுதான் கூட்டம்,” என்று விளக்கிச் சொன்னாள் நாராயணி அம்மாள்.

குழந்தைச்சாமி மட்டும் அந்த வட்டாரத்தில் இல்லை என்பது மோகினிக்கு ஆச்சரியமாயிருந்தது. வெங்கடபதியின் மரணத்துக்கு மரியாதை செலுத்தும் நோக்கத்தோடு மோகினியின் பள்ளிக் கூடம் மூடப்பட்டது. வீட்டில் உட்கார்ந்தபடி குருவாயூர் சாலையில் செல்லும் வண்டிகளையும் கார்களையும் வேடிக்கை பார்த்தபடி இருந்தாள் மோகினி. தினமும் வரும் குழந்தைச்சாமி இப்போது சில நாட்களாக வராதது குறித்து மோகினிக்கு ஏமாற்றம். அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் எவ்வளவோ இருந்தன. அவர் சொல்லிக் கொடுத்து வந்த திருக்குறள் பாடமும் கம்பராமாயணப் பாடமும் நிறுத்தப்பட்டு இருந்தன. இப்படியே வராமலே இருந்து விடுவாரோ என்று கவலைப்பட்டாள் மோகினி.

வெங்கடபதியின் கருமாதியன்று ஆயிரக்கணக்கான பேர்கள் பக்கத்துக் கிராமங்களில் இருந்து சாப்பிட வந்திருந்தனர். சங்கரன்குட்டி சாப்பிடப் போக வேண்டுமென்று துடித்தான்.

நாராயணி அம்மாள் மோகினியிடம், “நீயும் வேணும்னா குட்டியோடு போய்ச் சாப்பிட்டு வா” என்றாள்.

மோகினிக்கு அந்தப் பங்களாவில் போய் இலவசச் சாப்பிடப் பிடிக்கலில்லை. போக மறுத்து விட்டாள். சிறு பெண்ணாய் இருந்தாலும் தன்மான உணர்ச்சியோடு, “இலவசச் சாப்பாடு வேண்டாமம்மா, நீ சமைச்சு சாப்பாடே போதும்மா,” என்று மோகினி சொன்ன உறுதியைக் கண்டு நாராயணி வியந்தாள்.

சங்கரன் குட்டி மட்டும் சாப்பிடப் போய் வந்தான். அன்று இரவு குருவாயூர் போன்ற இடங்களிலிருந்து அந்த பல பரதேசிகள் சாந்தி வில்லாவில் படுக்க அனுமதிக்கப்படவில்லையாகையால், கடைத்தெருவில் திண்ணைகளில் படுக்கப் புறப்பட்டனர்.

அவர்களில் மெலிந்த தோற்றமுள்ள ஒருவருக்கு மட்டும் படுக்க இடமே கிடைக்கவில்லை. மெள்ள நகர்ந்து இடம் தேடிக் கொண்டிருந்தார், மலையின் சரிவில் ‘மினுக்-மினுக்’ என்று விளக்கு எரிவது தெரியவே. தள்ளாடியபடி மெள்ள இறங்கினார். பாதி வழிகூட இறங்கியிருக்கமாட்டார். குமட்டல் எடுத்தது. இலவசமாகக் கிடைக்கிறதே என்று ஆசையோடு சாப்பிட்டதெல்லாம் வெளியே வந்தன. காதில் ஒரு பேரிரைச்சல். தள்ளாடியபடி நாராயணி அம்மாள் வீட்டுத் திண்ணையில் வந்து உட்கார்ந்தார். உட்கார்ந்தபடி கண்ணை மூடித் தூங்க முயன்றார். ஆனால் அவரி வாழ்வின் கடந்த காலம் விடாமல் அவர் மனத்திரையில் படங்களாக ஓடியபடி இருந்தது.

அதே சமயத்தில் ஒரு பெண் இரல் குருவாயூரப்பனைப்பற்றித் துதித்துப் பாடும் சுலோகம் கேட்டது. அந்தக் குரலைக் கேட்கக் கேட்க அவர் உடலில் ஏற்பட்ட வலியெல்லாம், தாபமெல்லாம் மறைவதுபோல் உணர்ந்தார்.

அதைப் பலமுறை கேட்டிருக்கிறர். ஆனால் இன்று அது அவருடைய உள்ளத்து உணர்ச்சிகளை யெல்லாம் ஒருங்கே திரட்டி, குருவாயூரப்பன் காலடியில் வைப்பது போல் தோன்றியது.

மெள்ள எழுந்து ‘யார் இவ்வளவு சொல்நயம் குன்றாமல் பாடுவது?’ என்று பார்க்க ஜன்னல் புறம் வந்தார். அந்தச் சிறு முயற்சியில் அவர் நெஞ்சு வெடித்து விடும்போல் அடித்துக் கொண்டது.

குடிசையின் உட்புறம் மோகினி குருவாயூரப்பன் படத்தின் முன் நின்று பாடிக் கொண்டிருந்தாள். அவள் சிறு பாலதேவதை போல் காணப்பட்டாள். சுலோகத்தைச் சொல்லும் போது அசையும் அவளது சிவந்த உதடுகள் அவருக்கு யாரையோ ஞாபகப்படுத்தின. ஆண்டவனது தியானத்தில் மூடியிருந்த மேலிமைகள், கரிய அரைவட்டங்களாகச் சிவந்த முகத்தில் காணப்பட்டன. மோகினி கண்களைத் திறந்தாள்.

உடனே அவருக்கு அடையாளம் புரிந்து விட்டது. ‘அதே கறுத்த விழிகள் என் மனைவியின் விழிகள்! இறந்து போன என் மனைவியின் விழிகள்! இந்தச் சிறுமி யின் முகத்தில்..’ என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது, மோகினி சுலோகத்தை முடித்துவிட்டு ஜன்னல்புறம் திரும்பினாள். ஜன்னல் புறமிருந்து வாடி வதங்கிய முகம் தன்னைப் பார்ப்பதைக் கண்டு கலவரம் அடைத்தாள் அவள். பிறகு மெள்ள வெளியே வந்தாள். இருளில் திண்ணையில் திணறும் மூச்சோடு கிடக்கும் உருவத்தின் அடையாளம் தெரியவில்லை. “நீங்க யாரு? உங்களுக்கு என்ன வேணும்?” என்று கேட்டாள் மோகினி.

உருவம் பேச முயன்றது. அதனாம். பேச முடியவில்லை. வீட்டினுள்ளிருந்து நாராயணி அம்மாள், “மோகினி! யார் வந்திருக்காங்க?” என்று குரல் கொடுத்தாள்.

மோகினி என்று வார்த்தையைக் கேட்டதும், திண்ணையில் படுத்திருந்த முகம் ஒருவித மலர்ச்சியடைந்தது. இருளில் மலைச் சரிவைப் பார்த்தார். அதன் உச்சியில் செல்லும் குருவாயூர் சாலையும், எதிரே உள்ள மரங்களின் அமைப்பும் திடீரென்று அவருக்குக் கடந்த காலக் காட்சியை ஞாபகப்படுத்தின. இதே ஊர்தான். இதே இடம்தான். அன்று பகலில் வந்தோம். இன்று இரவில் வந்திருக்கிறோம் என்பதைப் புரிந்து கொண்டார். ஆவலோடு, “குஞ்சே! நீண்ட பேரு மோகினியா? நிண்ட பேரு மோகினியா? நிண்ட அம்மை, அச்சன் எவ்விட?” என்று மலையாளத்தில் தன்னையும் மறந்து கேட்டார்.

“எண்ட அம்மை பஸ்ஸுலே மரிச்சுப்போயி எண்ட அச்சன் …அச்சன் என்னைவிட்டுக் குருவாயூர் போயி..” என்று மோகினி தயங்கிக் கொண்டே கூறினாள்.

உடனே திண்ணையிலிருந்த உருவம்; “நிண்ட அச்சன் பேரு?” என்று கேட்டது.

மோகினி தலையைக் குனிந்தபடி “என் அச்சன் பேரு கிருஷ்ணபணிக்கர். அதெல்லாம் நீங்க ஏன் கேக்கறீங்க? உங்களுக்கு என்ன வேணும்?” என்று கொஞ்சம் துடுக்காகவே தமிழில் பதில் சொன்னாள்.

குழந்தைச் சாமியுடைய பழக்கம் ஏற்பட்டதிலிருந்து அதிகம் தமிழே பேச ஆரம்பித்தாள் மோசினி, தன்னை மறந்த நிலையிலும் அவள் திடீரென்று தமிழே பேசுவாள். திண்ணையில் படுத்திருந்தவர் பதில் சொல்லாமல், விக்கி அழ ஆரம்பித்தார், மெலிந்து எலும்புக்கூடு போன்ற அவர் உருவம் அவர் அழும்போது உதறி ஆடியது. வயது முதிர்ந்த பெரிய மனிதர்கள் விக்கி விக்கி அழுவதை மோகினி இதுவரை பார்த்ததில்லை.

மோகினி ஆச்சரியத்தோடு,’ ‘ஏன் அழறீங்க? நான் என்ன சொல்லிட்டேன், உங்களை?” என்று குழப்பத்தோடு கேட்டபடி நின்றாள்.

உட்புறமிருந்து நாராயணி அம்மாள் கை விளக்கோடு வெளியே வந்தாள். விளக்கின் வெளிச்சம் திண்ணையில் இருந்தவர் மீது தெளிவாக விழுந்தது. அதே சமயம் நாராயணி அம்மாள், “நீங்கள் தானே?.. நீங்கள்தானே?..” என்று வாக்கியத்தை ஆரம்பித்து வீட்டு நிறுத்தினாள்.

“ஆம். நான்தான் கிருஷ்ணபணிகர். நான் தான் மோகினி, உன் அச்சன், அன்னிக்கு உன்னை விட்டுப் போனவன்”, என்று சொல்வதற்குள்ளே மூச்சுத் திணறியது.

புகை, பனி நடுவே தோன்றும் பொருள்கள் எவ்வளவு தெளிவில்லாமல் இருக்குமோ, அப்படித் தான் மோகினிக்குத் தந்தையின் நினைவு இருந்தது. உடலும், முகமும் இளைத்ததன் விளைவாக, கிருஷ்ணபணிக்கரின் கிளி மூக்கு அதிக முக்கியத்துவத்தோடு வெளிவந்தது. மோகினி தன் தகப்பனை ஆச்சரியத்தோடு பார்த்தபடி நின்றாள்.

நாராயணிக்கு பணிக்கர் எந்த நிலையில் இருக்கிறார் என்று புரியவில்லை. அவரைப் பார்த்தவுடன் முதல் உணர்ச்சியாக ஆத்திரம்தான் வந்தது. “இத்தனை நாள் கழித்து இப்பத்தான் வழி தெரிஞ்சுதா உங்களுக்கு? தாயில்லாக் குழந்தையைத் தள்ளிட்டுப் பஸ் ஏறிப் போனீங்களே. இப்போ பாருங்க, மோகினி எப்படி வளர்ந்திருக்கிறாள்னு?” என்று ஏசியபடி பேசினாள்.

“அவள் தேவதை. மாதிரி தான் வளர்ந்திருக்கா. அவ எங்கிட்டே இருந்திருந்தா வீணாயிருப்பா. அதனால் தான் கடவுள் அன்னிக்கி எனக்கு அந்தப் புத்தியைச் கொடுத்திருக்கான். அவளை விட்டுப் போனதிலிருந்து என்னைத் தரித்திரம் விடல்லே. வருமானமே இல்லாமப் போச்சு. இத்தனை வருஷமும் சத்திரம் சத்திரமா சுத்திக்கிட்டிருக்கிறேன்”. இதைச் சொல்லி முடிப்பதற்குள் அவர் பலமுறை நிறுத்தி நிறுத்திப் பேசினார். “தாகமா இருக்கம்மா, கொஞ்சம் தண்ணீர் தர்றியா?” என்று கேட்டார்.

மோகினி வீட்டின் உள்ளிருந்து தண்ணீர் எடுத்து வந்தாள். தந்தையின் தலையைப் பிஞ்சுக் கரங்களால் தாங்கிப் பிடித்தாள். செம்பு நிறைய இருந்த தண்ணீரைப் பூராவும் மடக் மடக்கென்று அவர் குடித்து முடித்தார். அவர் முகத்தில் திருப்தியும் புன்முறுவலும் ஏற்பட்டன. குழந்தையின் தலையைத் தடவினார். “நல்லா இரு மோகினி. நான் செய்த தப்பெல்லாம் என்னை தொடரட்டும். நான் ஏதாவது நல்லது, புண்ணியம் செய்திருந்தா, அதன் பலன் உன்னை அடையட்டும். அதுதான் நான் உனக்குக் கொடுக்கற சொத்து. என்னை மன்னிச்சிடு”, என்று கூறி முடிப்பதற்குள், ஒரு குமட்டல் எடுத்தது.

அதைத் தடுக்க வயிற்றைப் பிடித்துக் கொண்டார் கைகளால், உடனே அவர் உடல் குப்புறத் தரையில் விழுந்தது. அப்புறம் அவர் தலையைத் தூக்கவில்லை.

நாராயணியும் மோகினியும் திகைப்போடு நின்றனர், நாராயணி பணிக்கரை அசைத்துப் பார்த்தாள். பணிக்கரின் நாட்கள் முடிந்துவிட்டன என்பதை உணர்ந்தாள். மோகினியிடம் இதை எப்படிச் சொல்வது என்று யோசித்த படி மோகினியைப் பார்த்தாள். மோகினியின் கண்கள் கலங்கியபடி இருந்தன. தகப்பன் தலையைத் திருப்பித் திண்ணையில் படுக்க வைத்தாள். உள்ளிருந்த ஒரு துணியை எடுத்துப் போர்த்தினாள். பிறகு அருகில் உட்கார்ந்து கொண்டாள்.

“அம்மா! இந்தச் சமயம் பார்த்துச் குழந்தைச்சாமி இல்லாமப் போயிட்டாரே! அவர் இருந்தா என்ன செய்யணும்னு சொல்லுவார்,” என்றாள்.

அதற்கு நாராயணி அம்மாள், ”கவலைப்படாதே மோகினி. மஹேச நம்பூதிரிக் கிட்டே கடன் வாங்கி, அச்சனுக்குச் செய்ய வேண்டிய சடங்கைச் செய்திடுவோம். எங்கெங்கோ சுத்திக்கிட்டிருந்தவர் சாகிறப்போ பெண்கிட்டே வந்துட்டாரே, அதிர்ஷ்டசாலிதான்”, என்று கூறிவிட்டு அப்படியே திண்ணையில் உட்கார்ந்தாள்.

மோகினியும் நாராயணியும் இரவைத் திண்ணையிலேயே கழித்தனர். விடியும் தருணத்தில் தன்னையும் அறியாமல் கண்களை மூடிய மோகினி திடீரென்று விழித்துக்கொண்டாள். அவளை விழித்தெழச் செய்தது யார் என்று கண்களைத் திறந்து பார்த்தாள். குழந்தைச்சாமி எதிரே நிற்பதைப் பார்த்தாள். திண்ணையில் கிடக்கும் உடலையும் குழந்தைச்சாமியையும் மாறி மாறிப் பார்த்தாள்.

அவர் சிறிது நேரம் சிந்தித்தபடி திண்ணையில் கிடக்கும் உருவத்தைப் பார்த்து, “‘நிண்ட அச்சனா?” என்று கனிவோடு கேட்டார்.

அதுவரை சும்மா இருந்த மோகினி பாய்ந்து அவரைக் கட்டிக்கொண்டு அழுதாள், குழந்தைச்சாமி மெள்ள மோகினியைத் தட்டிக் கொடுத்தார். அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டு அன்போடு, “என் தாய் நீ அழலாமா? தாய் அழுதால் இந்த ஏழைச் சாமியும் அழும்,” என்று கொஞ்சியபடி கூறும்போதே அவர். கண்களில் நீர் அரும்பியது.

அதைப் பார்த்து மோகினியின் மனம் வருந்தியது. மோகினி கண்களைத் துடைத்துக் கொண்டாள். “சாமி! இப்போ என்ன செய்யறது?” என்று கேட்டாள்.

“அதெல்லாம் பத்தி என் தாய் கவலைப்படக் கூடாது. மகன் நான் கவனித்துக் கொள்வேன்”, என்று சொல்லிவிட்டு வெளியேறினார்.

பிறகு சில மணி நேரங்களில் வந்து பணிக்கரின் தகனத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்தார், தானே நேரில் இருந்து எல்லாவற்றையும் கவனித்தார். அன்று மாலைதான் மறுபடியும் குடிசைக்கு வந்தார்.

நாராயணி அம்மாளுக்கு அவர் போக்கே புரியவில்லை. தமையன் இறந்த போது மயானம் செல்லாதவர், மோகினியின் தகப்பனாருடைய சடங்குகளை நேரில் இருந்து நடத்துகிறாரே என்று அதிசயித்தாள்.

அவரும் நாராயணி அம்மாளின் கருத்தைப் புரிந்து கொண்டவர் போல், “என் அண்ணன் அந்தஸ்தோடு வாழ்ந்தார். அந்தஸ்தோடு இறந்தார். அவர் மரணம் இந்த ஊர் ஏழைகளுக்கு ஒரு திருவிழாவாகியது. ஆனால் இந்தப் பணிக்கர் அந்தஸ்தோடு வாழவும் இல்லை. அந்தஸ்தோடு சாகவும் இல்லை. என்னைப் போன்றவனின் முயற்சி யினாலாவது அவருக்கு நல்ல கதி கிடைக்கட்டும்”, என்று கூறினார்.

அதன் பிறகு சில நாட்கள் தினமும் மோகினிக்குக் கதை சொல்லி அவள் துக்கத்தை உணராதவாறு பொழுது போக்கினார்.

மோகினி தந்தையின் மரணத்தை மறக்கவேண்டும் என்பதற்காக அவர் புஷ்பங்களும், பலகாரங்களும், பொழுது போக்குப் புத்தகங்களும் கொண்டு வருவார், மோகினியைத் திருப்திப் படுத்துவதில் தீவிரமாக முனைந்து இருந்தவர் ஒருநாள் ஆராய்ந்து திடீரென்று தன்னையே பார்த்துக் கொண்டார். மோகினியின் காரணமாகத்தான் மெள்ள மெள்ள ஒரு குடும்பஸ்தனாகி வருவதை உணர்ந்தார். ஆனால் அவர் அதற்காக மோகினியோடு பொழுதுபோக்குவதை நிறுத்திக்கொள்ளவில்லை. மோகினியின் தந்தை கிருஷ்ண பணிக்கர் இறந்ததன் விளைவாக அவருக்கும் மோகினிக்கும் இடையே உள்ள பிணைப்பு இன்னும் வலுவாகியது.

இவ்வாறு பல மாதங்கள். கடந்தன. ஒருநாள் குழந்தைச்சாமி திடீரென்று பிற்பகல் மூன்றுமணிக்கு நாராயணி அம்மாள் விடுதிக்கு வந்தார். என்றும் வராத வேளையில் அவர் வீட்டுக்கு வந்தது ஆச்சரியமாக இருந்தது. சங்கரன்குட்டி வீட்டினுள் உட்கார்ந்து அடுப்பில் பலாக்கொட்டைகளைச் சுட்டுக் கொண்டிருந்தான், அவர் சிறிது நேரம் சங்கரன் குட்டியைக் கவனித்தபடி நின்றார்.

பிறகு வீட்டின் வெளிப்புறம் நோக்கித் திரும்பியபடி நாராயணி அம்மாளிடம், “அம்மா! கொஞ்சம் வெளியே வருகிறீர்களா?” என்று கேட்டுவிட்டு, வெளிப்புறம் வந்து திண்ணையில் உட் கார்ந்தார்.

நாராயணி எதிர்ப்புறம் உட்காராமல் நின்றாள். ஏதோ முக்கியமான விஷயத்தைப்பற்றிப் பேசப் போகிறவர்போல் எதிரே உள்ள காட்டைப் பார்த்தபடி ஒரு வினாடி இருந்தார். பிறகு நாராயணியிடம் திரும்பி, “அனுபவங்கள் நதிபோல் நம்மைச் சுற்றி ஓடிக் கொண்டிருக்கின்றன. அந்த நதியில், சருகுகள் போல் நாம் மிதக்கிறோம். என்னைப் பொறுத்தவரை, நான் ஏழ்மையில் பிறந்தேன். அண்ணனின் செல்வத்தில் சில நாள் வாழ்ந்தேன். அப்புறம் இன்பம், துன்பம், பழி, தண்டனை – இப்படிப் பல அலைகள் என்னைச் சுற்றி மோதின. ஆனால் எதுவும் என் ஆன்மாவை நனைக்கவில்லை. இந்த ஊருக்கு வருவதற்குச் சில ஆண்டுகளுக்கு முன், ஒரு சாமியார் எனக்கு வாலை மந்திரத்தை உபதேசம் செய்தார். அதை ஒரு கோடி எண்ணிக்கை ஜபித்துப் பூர்த்தியான அன்று மாலைதான், அந்த மலைச்சரிவில் குழந்தை மோகினியைக் கண்டேன். என் ஐபம் சித்தித்தது, என் வரலைக் குமரியே மலை முகட்டில் உதயமானது போல் மோகினி உதயமானாள். அப்புறம் குழந்தையை என்னால் பிரிய முடியவில்லை. நாளுக்கு நாள் என் மனம் மோகினியின் பாசத்தில் பின்னப்படுவதை உணர்கின்றேன். அது குழந்தைக்கு நல்லதல்ல என்று எனக்குத் தோன்றுகிறது. ஆகையால் அவளை என் மனம் உறுதிப்படும்வரை பிரித்திருக்க விரும்புகின்றேன். மோகினி பள்ளியில் தொடர்ந்து படிக்க வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டேன். மாதந்தோறும் அவள் செலவுக்காக வேண்டிய தொகை அனுப்பப்படும். அவன் பெரியவளாகி இஷ்டப்பட்டால், அவள் படித்த பள்ளியிலேயே ஆசிரியை ஆகலாம்.” என்று நிறுத்தினர்.

நாராயணி, “நீங்கள் ஊரைவிட்டே போகப் போகிறீர்களா?” என்று பதட்டத்துடன் கேட்டான்.

“ஆமாம். நான் எங்கிருந்தாலும் மோகினியின் படிப்புக்குக் குறைவு வராதபடி நடக்கும்.”

”குழந்தை உங்களைப் பிரிந்து வாழக்கஷ்டப்படுமே?” என்று நாராயணி வருத்தத்தோடு சொன்னாள்.

அவர் யோசித்தார். பின்பு சிரித்தபடி, “மோகினி இன்னும் சில வருஷங்களில் காட்டுச் செடிபோல் பூத்துக் குலுங்கப் போகிறாள். வாரும் பருவத்தில் இருக்கும் பெண்ணுக்கு, துறவியின் தொடர்பு இருக்கக்கூடாது. இயற்கை விதித்தபடி அவள் வளர வேண்டும். வாழ வேண்டும்.” என்று சொல்லி விட்டு எழுந்தார்.

இரண்டடி நடந்தார். பிறகு திரும்பினார். நாராயணி அம்மாள் கண்ணீரோடு நிற்பதைப் பார்த்தார். “நீங்களே கலங்கினால் மோகினியை எப்படித் தேற்றப் போகிறீர்கள்? மோகினியின் அழகு, அவள் ஒழுக்கத்துக்குத் தீங்கு விளைவிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.” என்று கூறிவிட்டு வேகமாக நடந்து போய்விட்டார்.

சிந்தித்தபடி நடந்து கொண்டிருந்த குழந்தைச்சாமியை நோக்கி, ஒரு வேலைக்காரப் பையன் ஓடி வந்தான். அவன் மிகவும் படபடப்புடன் காணப்பட்டான். குழந்தைச்சாமி தன்னுடைய ஆஸ்தியாகிய சட்டை, வேஷ்டியை ஒரு சிறு தோல் பையில் எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டார். இனி அவர் திரும்புவது எப்போதோ என்ற நினைப்பில் புறப்பட்டவரைத் தடுப்பவன்போல் அந்த வேலைக்காரப் பையன் ஓடி வந்தான்.

அவன், “சாமி! நீங்க புறப்பட்டுப் போனவுடனே இந்தத் தந்தி வந்ததுங்க. உங்களை எங்கெங்கோ தேடினேன். கிடைக்கல்லே,” என்று சொல்லித் தந்தியைக் கொடுத்தான்.

“தந்தியா? எனக்கா?” என்று ஆச்சரியத்தோடு தந்நியை வாங்கிக் கொண்டார் அவர்.

– தொடரும்…

– 1964, குமுதம் வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *