மாலிகன் மதி இழந்த கதை!
கிருஷ்ண பரமாத்மாவின் நண்பன்
கிரக தோஷத்தாலோ, விதி வசத்தாலோ… மனிதனின் புத்தி, சில தருணங்களில் பேதலித்து விடுகிறது. மாலிகனின் நிலையும் அப்படித்தான் ஆயிற்று! பேராசை யும் மமதையும் தலைதூக்க… சிறியவர்- பெரியவர் என்றில்லாமல், எல்லோரையும் அவமதித்து, பலவாறு துன்புறுத்தினான் மாலிகன்.
யார் இந்த மாலிகன்?
யதுகுல நாயகனாம் கண்ணனின் நண்பன். கண்ணனின் தோழனாக இருப்பவன், சுபாவத்தில் நல்லவனாகத்தானே இருக்க வேண்டும்?! மாலிகனும் இயல்பில் நல்லவன்தான். யசோதை அன்னைக்கு நிகராக… கண்ணனிடம் அன்பைப் பொழிந்தவன்தான்!
எனவேதான் அவனுக்கு, சகல கலைகளையும் கற்றுத் தந்தான் கண்ணன். ஆயர்பாடியே வியக்கும் விதம்… தனக்கு நிகராக மாலிகனை உயர்த்தினான் அந்த மாயவன். ஆனால்?
கண்ணனிடமே கலை கற்றதால் உண்டான கர்வமும், அளவிலா ஆற்றல் பெற்று விட்டோம் என்ற அகந்தையும் அவனை ஆட்டிப் படைத்தன. மமதையால் மதியிழந்து அலைந்தான் மாலிகன்! அனைத்தும் அறிந்த கண்ணன், இதை அறியாமல் இருப்பானா? அறிந்தும், ‘காலம் புத்தி புகட்டும்’ எனக் காத்திருந்தான்.
விரைவில்… மாலிகனின் வாழ்வில் விளையாடியது விதி. அது, விபரீத ஆசையாக அவனுள் புகுந்தது! ‘கண்ணனிடம் சக்ராயுதம் பிரயோகிக்கவும் பயிற்சி பெற வேண்டும்’ இதுவே அவனது ஆசை!
‘கண்ணன் என் நண்பனல்லவா? நிச்சயம் கற்றுத் தருவான்!’ என்ற எதிர்பார்ப்புடன் கண்ணனிடம் வந்து சேர்ந்தான். கவலையும் பரிவும் மேலோங்க நண்பனை எதிர்கொண்டார் கண்ணன்.
”வருக மாலிகா… உன்னைக் கண்டு எவ்வளவு நாளாகி விட்டது!”
”ஆம், நண்பா… நானும் உன்னைக் காணும் ஆவலுடன்தான் ஓடோடி வந்தேன். கூடவே… உன்னிடம் ஒரு வேண்டுதலும் உண்டு!” என்றான் மாலிகன். அவன் என்ன கேட்கப் போகிறான் என்பதைப் புரிந்து கொண்டார் மாயக் கண்ணன். எனினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ”என்ன வேண்டும் மாலிகா? தயங்காமல் கேள்!” என்றார்.
மாலிகன் தொடர்ந்தான்: ”தோழா… நீ, எவ்வளவோ கலைகளை எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறாய். ஆனாலும் ஒரு குறை…”
”குறையா… என்ன அது?”- அறியாதவர் போல் கேட்டார் அனந்தன்.
”மாதவா, எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்த நீ, உனது சக்ராயுதப் பிரயோகம் குறித்து கற்றுத் தரவில்லையே!”
எதிர்பார்த்த ஒன்றுதான். எனினும் கண்ணன் சற்று துணுக்குற்றார். நல்லுரைகளால் மாலிகனின் மனதை மாற்ற நினைத்தார்.
”சக்ராயுதப் பிரயோகம் என்பது அபாயகரமானது எனவே, அந்த ஆசை உனக்கு வேண்டாம் மாலிகா” என்று புத்திமதி கூறினார். ஆனால், கண்ணனது இந்த நல்லுரைகளை மாலிகன் ஏற்கத் தயாராக இல்லை.
”தோழனே, அந்த வித்தையை நீ எனக்குக் கட்டாயம் கற்றுத் தர வேண்டும். எனக்கு எந்தவித ஆபத்தும் நேராது. கவலை வேண்டாம்!” என்றான். தன்னையே மறுத்துப் பேசும் அளவுக்கு மாலிகனிடம் அசுர குணம் மேலோங்கி விட்டதை உணர்ந்தான் பரந்தாமன். இனி, என்ன கூறினாலும் அதை ஏற்கும் மனோநிலையில் மாலிகன் இல்லை என்பதையும் புரிந்து கொண்டார்.
வேறு வழியின்றி சக்ராயுதப் பிரயோகப் பயிற்சிக்கு சம்மதித்தார். ஆனந்தக் கூத்தாடினான் மாலிகன். தனக்குக் கூடுதல் வல்லமை கிடைக்கும் என்ற சந்தோஷம் அவனுக்கு.
சற்று நேரத்தில் பயிற்சி ஆரம்பமானது!
”எனது சொல்லை மதியாமல், உனது ஆசையை நிறைவேற்றப் பார்க்கிறாயே! அதற்கான பலனை நிச்சயம் அனுபவிப்பாய்” என்ற கிருஷ்ண பகவான் சக்ராயுதத்தை விரலில் ஏந்தினார்.
தனது விரலால் ஒரு சுழற்று சுழற்றி, இலக்கை நோக்கி ஏவினார். சுழன்று மேலெழும்பிய அந்த வீரச் சக்கரம் காற்றில் விரைந்து பயணித்தது. மிகச் சரியாக இலக்கைத் தாக்கிய பிறகு, மறுபடியும் கிருஷ்ணரின் விரலை வந்தடைந்தது.
சக்ராயுதத்தின் வேகத்தையும், கிருஷ்ணர் அதை ஏவிய லாகவத்தையும் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான் மாலிகன்.
அடுத்து அவன் முறை!
கிருஷ்ணர் கொடுத்த சக்ராயுதத்தை மிகக் கம்பீரமாக ஏந்தியவன், அதைப் பிரயோகிக்க முனைந்தான். ஒரு சுழற்று சுழற்றினான். விண்ணில் எழும்பியது சக்கரம். குதூகலம் அடைந்தான் மாலி கன். ‘ஆஹா… சாதித்து விட்டோம். இனி, இரண்டு கண்ணன்கள். யது குலத்தை நானும் ரட்சிப்பேன்!’ – ஆணவம் தலை தூக்க… தன்னிலை மறந்தான்.
திரும்பி வரும் சக்ராயுதத்தை ஏற்க, விரலைத் தயாராக வைத்திருக்க வேண்டியவன், நிலையிழந்து… கரத்தை தனது முகவாயில் வைத்து நின்றிருந்தான்! இதனால், மாலிகனின் கரத்தை அடைய வேண்டிய சக்ராயுதம் அவன் கழுத்தை துண்டித்தது. தலை வேறு உடல் வேறாக மண்ணில் வீழ்ந்தான் மாலிகன். அவன் உடல் அருகே மண்டியிட்டு அமர்ந்தார் கிருஷ்ணர். கண்ணில் நீர் பெருக… அவர் வாய் முணு முணுத்தது:
”மாலிகா… உன்னை அழித்தது சக்ராயுதம் அல்ல. உனது ஆசையும் ஆணவமுமே உன் உயிரைக் குடித்தன!”
– ஆர்.அலமேலு, சென்னை-85 (ஆகஸ்ட் 2008)