மாற்றம்





(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இலங்கைத் தமிழ்ச் சமுதாயத்திலே உறைந்து உரமேறிக் கிடந்த ஒரு பாரிய பாறை – சாதிபேதம்- இப்பொழுது நெகிழத்தொடங்கியிருக்கிறது. இது அந்த நெகிழ்ச்சியின் கதை! இரும்புப் பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின் வேருக்கு நெக்குவிடும் கதை! கதைஞர் அந்த மென்மையான சக்தியை எடுத்துக் காட்டும் லாகவம், கதா பாத்திரங்களினது உள்ளப்பாங்கின் துல்லியமான சித்திரிப்பு, கரடுமுரடற்ற கதையோட்டம் – எல்லாம் நம்மைக் கவருகின்றன. கதையைப் படித்து முடிக்கும் போது அழகிய நறுமண மலர் ஒன்றினை முகர்ந்த சுகானுபவம் நமது மனதில் விரிகிறது!
நான் பஸ்ஸைவிட்டு இறங்கியபொழுது அவன் சிரித்தபடி என் எதிரில் வந்தான். இணக்கமான சிரிப்பு. என்னால் அவனை மட்டுக்கட்ட முடியவில்லை. தெரிந்து பழகியது போன்ற முகத்தோற்றம். சடை ‘பொசு பொசு’ என நன்றாக வளர்ந்து தோள்களைத் தழுவியபடி அலைந்தது. நீண்ட உடலை ஒட்டிய சேட்டும் நிலத்தைக் கூட்டுவதுபோல பெல்ஸும் அணிந்திருந்தான். மீசை முளை கொண்டிருந்தாலும் பெண்மையின் சோபிதமும் நளினமும் அவனில் இழைந்தன.
அவன் என்னைக் கடந்து, விலகித் தூரத்தே போன பொழுது, அவனை நெருங்கி மிகுந்த சொந்தமுடன் தொட்டுக் குசலம் விசாரிக்கவேண்டும். போலிருந்தது. ஆனால் அவன் நிற்காமல் போய்க்கொண்டிருந்தான். மனசு அவனைத் தொடர, நான் ஆலடி ஒழுங்கையில் இறங்கி நடந்தேன்.
ஒழுங்கையை மேவிப்பாயும் மாரிவெள்ளம். அதில் பிரியத்துடன் காலைவைத்து நடந்தேன். வேட்டித் தலைப்பு நீரில் தோயத் தோய நடப்பதில் ஒரு திருப்தி மனசு திடீரென லேசாகி, பரவசம் இறக்கை விரித்தது.
படலையடியில் நீர் கணுக்காலைத் தழுவி ஒடியது. வளவில் குசினிக்குப் பின்புறமாக வயல்வெள்ளம் ஏறியிருந்தது. குசினியின் தெற்குச் சுவர் நீர்க் கசிவுடன் பளபளத்தது.
அம்மா, வீட்டுத் தாழ்வாரக்கில் உரலில் ஏதோபோட்டு இடித்துக்கொண்டிருந்தாள். என்னைக் கண்டதும் ஓடிவந்து அணைத்து நெற்றியில் முத்தமிட்டாள்
“என்ன இருந்தாப்பிலை… லீவிலை வந்தனியே?”
“லீவிலைதான். வந்து ஒரு கிழமையாச்சு. உன்னையும் ஐயாவையும் பார்க்கவேணும போலை இருந்தது; அதுதான்”
“மருமகளைக் கூட்டிக்கொண்டு வரேல்லையே?”
“அவவுக்குச் சுகமில்லை.”
”என்ன! ஏதென் வித்தியாசமே?”
“இல்லை.” நான் சிரிக்கின்றேன்.
அம்மாவுக்குக் கண் கலங்கிவிடுகிறது.
எனக்குத் திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் ஒரு குழந்தையுமில்லை. அது அவவுக்கு மிகுந்த கவலை.
‘ஐயா தோட்டத்தாலை வாறார்போலை … ரசம் கொஞ்சம் வைச்சுத்தரச் சொன்னவர்.”
அம்மா உரலில் இருந்ததை அவசர அவசரமாக இடிக்கத்தொடங்கினாள்.
“தம்பியா! எப்ப வந்தது?”
“இப்பதானய்யா.”
உதடுகள் இலேசாகப் பிரிய – புகையிலைக் காவி படர்ந்த மிகவும் சிறியதான அந்த வேட்டைப்பற்கள் தெரிய, ஐயா நெகிழ்ந்து சிரிக்கிறார்,
‘ஆர்ப்பாட்டமில்லாமல் எவ்வளவு இதமாக, நெஞ்சைத் தொடுமாப்போலை இவரால் சிரிக்கமுடிகிறது!’
‘ஐயா தளர்ந்துதான் போய்விட்டார், வயதாகிவிடவில்லை!’
மண்வெட்டியை முற்றத்தில் வைத்தவர், கிணற்றடிப் பக்கம் போனார். அப்பொழுது நான் அம்மாவைப் பார்த்துக் கேட்டேன்:
“ஆரந்தப் பொடியன்? ஹிப்பிமாதிரி தலையிலை சடை வளர்த்தபடி நீண்ட தொள தொள கழிசானும் போட்டுக் கொண்டு ஊருக்குப் புதிசா…”
”அவனா? அவனாகத்தான் இருக்கவேணும்!”
“எவன்?”
“அவன்தான், முத்தன்ரை மருமோன். மாமனோடை வந்து நிக்கிறான் போலை.”
”வள்ளிப்பிள்ளேன்ரை மகனா?”
அவன் யாரென்பது எனக்கு விளங்கிவிடுகின்றது. அந்த நினைவுகளை என்னால் எப்படி மறந்துவிடமுடியும். பதினைந்து இருபது வருடங்களுக்கு முன் நடந்தவை என்றாலும் அவை எனது இளமையோடு பாடம் போடப்பட்ட விஷயங்களாயிற்றே. அம்மாவைப் பார்த்தேன். அவள் முகம் கருமை கொண்டு எங்கோ எதிலோ ஒருமுகப்பட்டு நிலைத்து விடுகிறது. அவளும் அந்த நினைவுகளில் அமிழ்ந்துவிட்டாளோ!
காசிப்பிள்ளை மாமாவும், சந்திக் கடைச் சிவத்தாரும், வினாசியரும் வீட்டுக்கு வந்தபொழுது, அவர்கள் முகத்தில் நெருப்பாய்ப் படர்ந்து சுடர்விட்ட உக்கிரத்தை அவதானித்தவளாய் அம்மா கேட்டாள்:
”என்ன.. என்னண்ணை நடந்தது?”
“என்ன நடந்ததா? குடிமுழுகிப்போச்சுது தங்கச்சி! குடிமுழுகிப்போச்சுது! இவன் சருகு இராசையன் காசியை ரெண்டு நினைச்சிட்டான். கெட்ட ராஸ்க்கல். செஞ்சித் தின்னி. என்ரை புகறனுக்குக் கிழக்காலை, ஆலடிப் பக்கம் இரண்டு பரப்பு மேட்டுத்துண்டு கிடந்ததெல்லே, அதை விக்கப்போறனெண்டு ஒரு வார்த்தை எனக்குச் சொன்னவனே… சரி என்னைவிடு இவர் சிவத்தாரிட்டை இல்லை அவன் வினாசியிட்டை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே. போயும் போயும் இவனுக்கு நாமுத்தன்ரை பேரன்தானே கிடைச்சான். அந்த நளவனும் லேசுப்பட்டவனில்லை. தாவாடிக்கை அதுவும் வெள்ளாளக் குடியளுக்கு நடுவிலை நாட்டாண்மை காட்ட வந்திட்டான்.”
“ஆரவன் முத்தனே? பெத்ததுகளை சிறிசிலை இழந்தவன். ஆனைக்கோட்டையிலைதான் பேரனோடை இருந்தவன். கிழவனும் செத்துப்போச்சுது. தலையெடுத்ததும் உழைப்புப் பிழைப்புக்கு து வசதியாய் இருக்குமெண்டு இஞ்சை வந்தவனாக்கும்;”
அங்கு வந்த ஐயா இதைச் சொன்னபொழுது, அவரை டைமறித்து வினாசியர் சொன்னார்;
“அதுக்காக! அவனை நாம் இஞ்சை நடு வீட்டுக்கை வைக்கேலுமே. அவன்ரை இனசனம் இலந்தையடிப் பக்கம் இருக்குதுகள்; அங்கை போய் அவனிருக்கட்டன்.”
“நான் றோட்டுக்கரையெண்டு புதறனுக்கை புதுவீட்டுக்கு அத்திவாரம் வேறை வெட்டிறன். அவன்ரை கோடிக்கையே நான் போய்க் கிடக்கிறது.”
மாமாவின் கூச்சத்தைப் புரிந்துகொண்டவராய் சிவத்தாரும்:
“அதுசரி காசி! அவன் இஞ்சையிருந்தால் நம்மடை பெண்புரசுகள் அக்கம் பக்கத்திலை புழங்கேலுமே.”
”ஓகோ! உங்களுக்கு அந்தப் பயமே. சரி சரி…… நீங்க போய்ச் செய்யிறதைச் செய்யுங்க. அவனும் பொலிஸ் அது தண்டு போகத்தான் போவான். அந்தக் காலம் போலை நாம அவங்களை ஏறிமிதிக்கேலுமே?”-ஐயா.
ஐயா எப்பொழுதுமே நிதானந்தான். நிதானம் தப்பிப் பேசியதை நான் பார்த்ததில்லை.
மாமாவுக்கு ஐயாவின் உபதேசம் பேய்த்தனமாய்ப் பட்டது. அவா மிகுந்த கோபங்கொண்டவராய் தன் பருத்த உடல் குலுங்க, வினாசியரும் சிவத்தாரும் துணைவர, ஆலடித் துண்டை நோக்கி விரைந்தார். அம்மா மாமாவைத் தொடர நான் அவளைப் பின்தொடர்ந்து ஓடினேன். எங்களைத் தொடர்ந்து ஊரே வந்தது. ஐயா மட்டும் வரவில்லை.
ஐயாவிற்கு மாமாவின் வேலை பேய்த்தனமாய்ப் பட்டிருக்கும்,
ஆலடித்துண்டை அடைந்த மாமா இரைந்து கூவினார்: ஆரடா அவன், வெளியில வா… சாதிகெட்டதுகளெல் லாம் இஞ்சை இந்தத் தாவாடி மண்ணிலை கால் வைக்கேலுமே!”
மாமாவின் குரல் கேட்டு வெளியே வந்தவன் இளமை யோடு இருந்தான். தசை திரட்சிகொள்ள மிகத் திடமாகவுமிருந்தான். அவன் அங்கு நின்றவர்களை எதிர்கொண்டு பார்த்த பார்வை ‘என்ன? குடியிருந்தால் என்னசெய்வியள்?’ என்பதுபோல் இருந்தது.
“அட! அவற்றை பார்வையைப்பார் பார்வையை. மசிர்! மட்டு மரியாதை யல்லாத எளிய நாய்!”
மாமா பாய்ந்துசென்று முத்தனைத் தனது பலங்கொண்ட மட்டும் தாக்கினார். அவன் இதனை எதிர்பார்க்கவிலலை. நிலை தவறி விழப்போனவன் சற்று நிதானமுற்று மாமாவைப் பார்த்துச் சொன்னான்.
“கமக்காரர், இப்பிடி நடவாதையும், நாங்களும் மனிசர்தான். நான் இநதத் துண்டை, குடியிருக்க நிலமில்லாமல் அந்தரிச்சுத்தான் வாங்கினனான்.”
“ஓகோ!.. வாங்கினனீரோ! காசுகொடுத்தோ!…வாங்கின உடனை உமக்கு இஞ்சை ஆட்சியோ?”
அவர் மீண்டும் ஆவேசம்கொண்டு அவனது விலாவில் உதைத்தார்.
அவர் மட்டுமல்ல; சிவத்தார், வினாசியர் என்று மூவரும் முறைவைத்துக்கொண்டு மாறிமாறி அவனை அடித்தார்கள்.
இத்தனைக்கும் அவன் பொறுமையாக இருந்தான், அவனது இந்த அசாத்தியமான பொறுமை எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த மூவரையுமே தனித்து அவன் ஒருவனாகவே சமாளிக்கமுடியும். இருந்தும் அவன் கரங்கள் தழையுண்டு கிடப்பதுபோல அவர்களுக்கு எதிராக உயராமல் இருப்ப தென்றால்! அவன் உண்மையில் ஓர் பணிவான குடிமைதான். அவர்களுக்குக் கைகட்டிச் சேவகம் செய்யத்தான் அவனுக்குத் தெரியும். அதற்கு மட்டுமே அவனது கரங்கள் பழக்கப்பட் டவை. அவனைப் பொறுத்தவரை இது ஒரு வழிவழி வந்த சம்பிரதாயமாகி, அவனுள் ஓன்றிவிட்ட விஷயமாகிவிட்டது.
என்மனம் அவனுக்காகப் பரிவுகொண்டு தவித்தது.
இந்தப் பரிவுதான் ஐயாவை இதில் பங்குகொள்ளாமல் தொலைவுகொள்ள வைதததோ?
ஆனால், அம்மா! அவளுக்கு வைத்தியர் சிதம்பரனாரின் பேத்தி என்பதில் பெருமை. தாவாடிக்காரர்கள் சாதவெள் ளாளர் என்பதில் பெருமை. அந்தப் பெருமைதான் அவளை இங்கு இழுத்துவந்திருக்க வேண்டும். இங்கு வந்த அவள் திகைப்பூண்டில் மிதித்தது போலல்லவா நிற்கிறாள். அவளது திகைப்பு அங்கு கூடிய ஊராருக்கு இருந்ததாகத் தெரிய வில்லை. அவர்கள் தங்களுக்குத் தோன்றிய விதமாக ஏதேதோ சொன்னார்கள்.
“சாதிகெட்ட நாயள் இஞ்சை எங்களுக்கு நடுவிலை எப்படி இருக்கேலும்?”
”கொளுத்துங்கடா அவன்ரை குடிசையை! அடிச்சுக் கொல்லுங்கடா அவனை உசிரோடை! இந்த எளியதுகளைச் சும்மாவிட்டால் எல்லாருக்கும் அதோகதிதான்.”
“இஞ்சை குடியிருக்க வந்திட்டார். இனிப் பெண் கேட்டாலும் கேட்பரர்போலை.”
அவர்களுடைய பேச்சு அவ்விடத்தில் ஒரு குழு வெறியையே ஏற்படுத்திவிடுகிறது.
அதன் வசப்பட்ட மாமா ருத்திரதாண்டவராய் அருகில் கிடந்த மண்வெட்டியைத் தூக்கியபடி முத்தனை நோக்கி ஓடினார்.
அப்பொழுது, அங்கு பாய்ந்து வந்த அவள்!… அந்தப் பெண் மாமாவின் கரங்களைத் தடுத்துத் தளர்ச்சியில்லாமல் இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள்.
அவள்பால் எல்லாருடைய பார்வையும் முட்டிமோதின.
அவள் அழகாக இருந்தாள். முற்றிய செவ்வாழைப் பழத்தின் நிறம். ஒடியும் சொகுசு. மழையளைந்த மலரின் தெளிவு. அவளில் இளமை வழிந்தது!
அவள் அங்குநின்ற எல்லாரையும் வசீகரித்தாள்.
அவளது பார்வை சுழன்று, என்னில் ஒருகணம் தரித்தது. மாமாவில் நிலைத்தபொழுது, மாமா ஏதோ அம்மன் சிலை யைப் பார்ப்பதுபோல் பார்த்துப் பரவசமுற்றார். அவர் கரத்தில் இருந்த மண்வெட்டி தானாகத் தளர்ந்து கீழே விழுந்தது. அவள் அங்கு அடிபட்டு விழுந்து கிடந்த முத்த னைத் தூக்கி அணைத்தபடி குடிசையினுள் சென்றாள். அங்கு நின்றவர்கள் அவள் போவதையே பார்த்தபடி நின்றார்கள். நான் அவளையும் அந்த உணர்ச்சிவசப்பட்ட மனிதர்களையும் மாறிமாறிப் பார்த்து நின்றேன்.
அவளது நினைவுகள் என்னுள் நிலைத்தன.
அவள்தான் வள்ளிப்பிள்ளை. முத்தனின் தங்கை. இது பின்னால் அம்மா கூறித் தெரிந்தது. தடித்த சாதிமானான மாமாவினதும் ஊரவர்களினதும் முயற்சி அன்று தோல்வி யுற்றதென்னவோ வள்ளிப்பிள்ளையால்தான் மாமா அன்றைய நிகழ்ச்சியின்பின் முத்தனை ஊரைவிட்டுக் கலைப்பதில் எதுவித தீவிரமும் காட்டவில்லை, இது ஒருவகையில் அதிசயந்தான்! மாமாவைத் தனது இயல்புசுளையே மீறி நடந்து கொள்ள வைத்தது எது? வள்ளிப்பிள்ளையா? அல்லது அவளது அழகா?
முத்தன் அடிபட்ட நாளிலிருந்து படுத்த படுக்கைதான். டதுகால் மூட்டெ லும்பில் வெடிப்பு ஏற்பட்டு விட்டது. அவனுக்கு வளளிப்பிள்ளை தான் எல்லாமென்ற நிலை. ‘இரத்த உரித் தென்று யாரும் வந்து அவர்களுக்கு உதவியதாகத் தெரியவில்லை. அவர்கள் ஏதோ ஒரு காரணம்பற்றியே அந் தச் சொந்தங்களைத் துறந்து இங்கு குடிவந்திருக்கவேண்டும். கையில் இருந்த சொற் பணமும் முத்தனின் வைத்தியச் செலவு அது இதென்று கரைந்த நிலையில், ஒருநாள் அவள்- வள்ளிப்பிள்ளை எங்கள் வீடுதேடி வந்தாள்.
நான் மிகுந்த ஆர்வத்துடன் அவளைப் பார்த்தேன். அவள் முன்னைக்கு இப்பொழுது சற்று இளைத்து வாடிப்போயிருக் தாள். இருந்தும், அவளது அந்த அழகு! என்னை நடுங்க வைத்தது.
‘மனசின்’ இனிய ரகசியங்களுடன் அவளது நினைவுகளும் ரகசியமாயின.
“என்ன தம்பி அப்பிடிப் பாக்கிறை… ஐயா இல்லையே?”
கனிவும், காதலா – அது எதுவோ, அதுவும் நிரம்பித் தளம்பும் குரலில் அவள் குழைந்தாள்.
எதை அவள் உணர்த்த விரும்பினாளோ, அதைப் புரிந்து கொண்டு நானும் ஏதோ சொல்லமுயன்ற பொழுது அங்கு வந்த ஐயா கேட்டார்:
“ஆர் தம்பி அங்கை வந்தது?”
ஐயாவைக் கண்ட வள்ளிப்பிள்ளை சொன்னாள்:
“அது நான்தானய்யா!… உங்களை நம்பித்தான் வந்தி … ருக்கிறன். அண்ணனும் மூன்று மாசமாய்ப் பாய்க்குப் பாரமாய்க் கிடக்குது. கையிலை மடியிலை இருந்ததும் கரைஞ்சு வழிஞ்சு போச்சுது.”
“பாய்க்கு மட்டுமே பாரம். உனக்கும் தானே. அதுசரி… அதுக்கு நான் என்ன செய்யேலும் பிள்ளை?”
ஐயாவிடம் இந்தப் பதிலை அவள் எதிர்பார்க்கவில்லை. அவள் கண்கள் கலங்கிவிடுகின்றன.
“தோட்டத்திலை ஏதென் புல்லுக்கில்லுப் புடுங்கிறதெண்டாலும் பறவாயில்லை ஐயா…….”
அவள் குரலில் இழைந்த பணிவு. ‘இவளா அன்று நான் கண்ட வள்ளிப்பிள்ளை? இல்லையே!’ என நினைக்கவைத்தது.
“அதுக்கென்ன வள்ளி வாவன் ‘” -ஐயா.
அன்றைய தினமே அவள் ‘அஞ்ஞா’வில் எரு அடித்துப் பரவினாள். தாலாடித் தறையில் னங்காமத்திற்குப் புல் பிடுங்கினாள். அம்மாவுக்கும் விழுந்து விழுந்து வேலைசெய்தாள். நெல்லோ மாவோ குத்துவது இடிப்பதெல்லாம் அவள்தான்.
ஒருசமயம் அவளைப் பார்த்துக் கேட்டேன்:
“ஏன் வள்ளி நீ இப்பிடி மாயிறை? உன்ரை அண்ணருக்கும் சுகமில்லை. உன்ரை இனசனம் ஏதென் உதவாதுகளே?”
“உதவும் உதவும்!…” அவள் பீறிட்ட துயரத்துடன் வெடித்து விம்மினாள். அவளிடம் ஏதோ நிரம்பிய மனக் குறை இருப்பது எனக்குப் புரிந்தது. நான் அவளிடம் தொடர்ந்து எதுவும் கேட்கவில்லை.
பெற்றோரை இளமையில் இழந்த அந்த இருவரும், அவர்களது உதவியை ஏதோ காரணம் பற்றியே விரும்பவில்லைப் போலும்.
இது நடந்து ஒரு கிழமையிருக்கும். வள்ளிப்பிள்ளை மா இடித்துவிட்டு, அம்மா கொடுத்த சாப்பாட்டையும் எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டாள். அவள் போவதையே பார்த்தபடி கிணற்றடியில் நின்ற நான் ஓர் அதிசயத்தை அவதானித்தேன். மாமாவும் அவளை வெறித்து வெறித்துப் பார்த்தபடி வளவில். வேலியோரத்தில் நின்றார். மாமாவின் அந்தப் பார்வை எனக்கு எத்தனையோ அர்த்தங்களை உணர்த்தியது.
‘மாமா வள்ளியை விரும்புகிறாரா?’
லேசாக, மிகமிக இலேசாக ஆணுக்கே உரிய பொறாமை யுணர்வின் உறுத்தலோடு வள்ளிப்பிள்ளை என் எல்லைகளை மீறு வதை உணர்ந்து வருத்தமுற்றேன். வருந்துவதைத்தவிர என் னால் அப்பொழுது என்ன செய்யமுடியும்.
அடுத்த நாள் மாமாவின் தோட்டத்திலும் வள்ளிப்பிள்ளை புல்லும் பிடுங்கினாள். இது எனக்கு ஆச்சரியத்தைத் தர வில்லை; நான் எதிர்பார்த்த ஒன்றுதான் மாமாவை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. மாமா கொஞ்சம் மாறித்தான் போனார்.
வள்ளிப்பிள்ளை தோட்டத்தில் மட்டுமல்ல; வீட்டில் மாமிக்கும் துணையானாள் மாமிக்கு மட்டும்தானா? மாமாவிற்கு!..
மாமா, மாமி இருவரது தாப்பத்தியமும் நிறைவான தொன்றல்ல. அவர்களது பதினைந்து வருட திருமண வாழ்க் கையில் அவர்கள் எப்பொழுதுமே சந்தோஷமாக இருந்த தில்லை. நிரம்பிய சொத்து, சுகம் இருந்தும் வாரிசு இல்லை. இது அவர்களுக்குப் பெருங்குறை. மாமா தெய்வத்தின் மேல் பாரத்தைப் போட்டுப் பேசாமல் இருந்தார். ஆனால் மாமி, மாமாவுக்குத் தெரியாமல், ஊர் வைத்தியனிடம் போய்வந் தான். அந்த வைத்தியனும் பெண் மலடல்ல ; ஆண்தான் மலடு என்று ஏதோசொல்லி மாமியின் மனதைக் கெடுத்து விட்டிருக்கிறான். மாமாவினால் தனக்கொரு குழந்தையைத் தரமுடியாதென்ற வேதனை அவளை ஒரு பிசாசாகவே ஆக்கி விட்டிருந்தது. எப்பொழுதும் எதையோ பறிகொடுத்தவள் மாதிரிப் பரி நவிப்பதும் எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவது மாக அவள் காலம் தள்ளிவந்தாள். அவர்களிருவருக்குமிடை யே ஒரு சிறு சச்சரவு போதும். மாமி விசர்நாயாக மாறி மாமாவைக் குதறி எடுத்துவிடுவாள். அவளது ‘கூக்குரலை’ கேட்டு ஊர் சொல்லும்:
“ஆரது காசி பெண்டிலே? உவவின்ரை அமர் எப்ப தான் அடங்குமோ?”
மாமி அடிக்கடி அம்மாவிடம் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன்:
“இந்த மலடனோடை நான் மல்லுக்கட்டேலுமே இவனை எனக்குப் பேசமுந்தி உவர் கொழும்புக்கடை மணியத்தாரைத்தான் எனக்குப் பேசினவை. அவருக்கென்ன குறை. பால் வத்தாக் குடும்பம். பிள்ளையளோ கிளைகாலி. போன சித்திரையிலதான் அவற்றை கடைக்குட்டி பிறந்தது,
அவள் அதைச் சொல்லும்போது வெளிப்படும் அவல உணர்வு மிகவும் பரிதாபமாக இருக்கும்.
மணியத்தாரைப்பற்றிப் பேசத்தொடங்கிவிட்டால் ஓய மாட்டாள். அவரைப்பற்றி, அவரது குடும்பத்தைப்பற்றிப் பேசுவது அவளைப் பொறுத்தவரை ஒருவகைச் சந்தோஷத் தைக் கொடுத்திருக்கவேண்டும். ஒருசமயம் இவளுக்கு இள மையிலிருந்தே அவர்பால் ஒரு சபலம் இருந்திருக்குமோ? அவரைப்பற்றிப் பேசுப்பொழுது பூரித்து, கள்ளத்தனமாக உருகுவது இவளுக்குச் சுகம் தருகிறதோ?
மனசால் சோரம்போகும் பிறவிகள்.
அம்மாவுக்கு இவளது பேச்சு என்னவோ போலிருக்கும் அவள் சொல்வாள்:
“எழுந்து போ மச்சாள்! உனக்கு வரவர புத்தி மந்திச் சுப்போச்சுது. பேசிறதெது, பேசாததெது எண்டு தெரியேல்லை.”
“என்ன உன்ரை அண்ணரைப்பற்றிப் பேசட்டே? அந்த மலடனைப் பற்றிப் பேச என்ன இருக்குது. அதுசரி பிள்ளை, உங்கடை குடும்பத்திலை ஆரன் முன்னை பின்னை மலடுகள் இருந்தவையே, இவனைத் தவிர?”
அம்மாவினால் இதைத் தாளமுடியாது:
”விசரி, விசரீ! பேசாமை எழுந்துபோ!” என்று கூறியபடி தானும் எழுந்துவிடுவாள்.
மாமி, மாமாவை, அம்மாவை, ஏன் இந்த உலகத்தில் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் எல்லாரையுமே மிகுந்த கைப்புடன் கொச்சைத் தனமாகத் திட்டிக்கொண்டு எழுந்து போவாள்.
இந்த உரசல் எத்தனை மடங்கு அதிகமாக, உணர்ச்சிபூர் வமாக, கொந்தளிப்புடன் அவர்களது தாம்பத்திய வாழ்வில் விரவி நின்றிருக்கும் இந்த விரிசல்தான் மாமாவை வள்ளிப் பிள்ளைபால் அவரது தடித்த சாதித்தோலையும் மீறி மையல் கொள்ள வைத்ததோ? அல்லது அவர் பொய்யாகக்கொண்ட வேஷங்கள் அந்த வசீகரத்தினமுன் தோல் உரித்துக் கொண்டனவோ?
மாமா வள்ளிப்பிள்ளைபால் மயங்கித்தான் விட்டார். எதிர்ப்பே இல்லாத, சுலபமான டமென்று அவர் நினைத் திருக்கலாம். பாவம் வள்ளிப்பிள்ளை. இந்த உறவை அவள் ஒருவகையான பலமென்றே நினைத்தாள். அவளினதும் அவ ளது அண்ணனினதும் அமைதியான வாழ்வுக்கு இந்தத்துணை வளுக்கு வேண்டியிருந்தது. எந்த மனிதன் ஊரைக் கூட்டி வளது அண்ணனை அடித்துத் துரத்த வந்தானோ, அனே அவள் பின்னால் ஒரு வகை யாசகனாக வருவதில் அவளுக்கு மிகுந்த திருப்தி.
மாமாவின் நிலை!
மாமி சொன்னது உண்மையா? அவர் மலடன்தானா? அந்த மனக்குறை அவரைச் சிறுகச்சிறுக அரித்தது. அவரது புருஷத்தனம் அவருக்குத் தெரிந்த ஒன்று. ஆனால், அதற்கு அத்தாட்சி வேண்டுமே! அவர் குரூரமாக மனைவியைப் பழி வாங்க நினைத்துக்கொண்டார்போலும். அவர் கட்டிக்காத்த வைகளெல்லாம் பொய்ம்மைகளென உணர்ந்தவராய் வேஷங் களைக் களைந்தெறிந்து உண்மையாக நடந்துகொள்ள முயற் சித்தார்.
அதன் விளைவுகள்!
அன்று சித்திராப் பௌர்ணமி. ஊரே திரண்டு வேம்படி யில் பொங்கியது. பெரியவயிரவர் மடை. வேம்பையும் அர சையும் சுற்றிப் பொங்கற் பானைகளும், பழவகைகளும், பல கார வகைகளும் மலையாய்க் குவிந்தன. படையலுக்குப் பின் தான் சித்திரபுத்திரனார் கதை வாசிப்பு நடக்கும். வாசிப் பென்றால் மாமா வாசித்தால்தான் வாசிப்பு என்பது ஊர் அபிப்பிராயம்.
மாமா என்ன அலுவலிருந்தாலும் எந்த இடத்திலிருந் தாலும் வாசிப்புக்கு வந்திடுவார். அன்று ஏனோ வரவில்லை.
அம்மா சொன்னாள்: “தம்பி, ராசா, மாமாவைக் கூட்டிக்கொண்டாவன்! எல்லாம் ஆயத்தமெண்டு சொல்லு.
நான் மாமா வீட்டுக்குப் போனபொழுது, மாமியைப் பத்திரகாளியாகத்தான் பார்த்தேன், வள்ளிப்பிள்ளை தாழ் வாரத்தில் விசும்பியபடி கிடந்தாள். மாமா அங்குமிங்கும் நிலைகொள்ளாமல் நெடுமூச்செறிந்தபடி நடந்தார் என்னைக் கண்டதும் மாமிக்கு வெப்பியாரம் தாளமுடியவில்லை. அவள் விம்மியபடி சொன்னாள்:
“கேட்டியா கதையை! உவன், உன்ரை மாமன் செய் யிறதை உவனுக்கு மானம் ரோசமிருக்கே? உவளிட்டை- இந்த, ஊத்தை நளத்தியிட்டை என்னத்தைக் கண்டு சொக் கிப்போயிட்டான். இண்டைக்குக் கையும் களவுமாயெல்லே பிடிப்பட்டிட்டான். கோயில் மணிகேட்டுத் திடுக்கிட்டு முழிச் சுப்பாத்தா இவனைக் காணேல்லை! மனிசன் கோயிலடிக்குப் போயிட்டுதாக்குமெண்டு கிணத்தடிக்குப் போய்த் திரும் பேக்கை ‘மாட்டு மாலு’ க்கை ஏதோ ஆளரவம் கேட்டுது. எட்டிப்பாத்தா, உவனும் உந்தச் சிறுக்கியும்!….. இதை உனக்கு எப்படியடா சொல்லேலும்”
எனக்கு மாமி சொல்லாமலே எல்லாம் விளங்கியது.
மாமி என்ன நினைத்தாளோ திடீரெனப் பாய்ந்துசென்று வள்ளிப்பிள்ளையின் தலைமயிரைப் பிடித்துத் தரதரவென்று இழுத்தாள். மாமா மாமியின் பிடியிலிருந்து வள்ளிப்பிள்ளையை விடுவித்தபடி சொன்னார்:
“அவளை ஒண்டும் செய்யாதை, அவள் கர்ப்பமாயிருக்கிறாள்.”
“என்ன! உனக்கே?”
“ஏன் எனக்குத்தான். இந்த மலடனுக்குத்தான்!”
இதனை மாமியால் தாங்க முடியவில்லை. அவளுக் எவன் மலடன் என நம்பியிருந்தாளோ, அவனால் வள்ளிப் பிள்ளை கர்ப்பமுற்றது நம்பமுயாத சங்கதியாக இருந்தது. மாமி மீண்டும் கேட்டாள்:
“என்ன உனக்கா?”
“ஓம்; எனக்குத்தாள்!”
மாமாவினது பதில் அவளை வெறிகொள்ள வைத்தது. அவள் தனது தலையை வீட்டுச் சுவருடன் மோதி மயங்கிச் கீழே சாய்ந்தாள்.
மாமா அவளை வாரியணைத்துத் தூக்கியபடி வள்ளிப்பிள்ளையைப் பார்த்தார்.
வள்ளிப்பிள்ளை ஒருகணம் தயங்கி மாமாவையும் என்னையும் மாறிமாறிப் பார்த்தாள் பின், அங்கு நிற்கவில்லை. கண்களில் நீர்படர அங்கிருந்து நடந்தாள்.
அவளுக்கு நேர்ந்துவிட்ட துயர் என்நெஞ்சில் கனத்தது.
அந்த நிகழ்ச்சியின்பின், ஓர் ஆறேழு மாதங்கள்தான் மாமி உயிரோடிருந்தாள். ஏமாற்றமும், துயரமும், மாமாவின் பழிவாங்கலும் அவளைப் படுத்தபடுக்கையாக்கி விட்டன.
ஒரு கனத்த மழைநாள் விடியற் பொழுதில் மாமி இறந்து போனாள்.
மாமா குலுங்கிக் குலுங்கிக் குழந்தைபோல அழுதார். அதைக்கண்ட நான், மாமா மாமிபால் அன்பில்லாதவரல்ல என நினைத்துக்கொண்டேன்.
வள்ளிப்பிள்ளை அன்று போனவள்தான். அதன்பின் ஊர்ப்பக்கமே தலைகாட்டவில்லை. அவள் வன்னிப் பக்கம் போய்விட்டதாக ஊரில் பேசிக்கொண்டார்கள். அது எவ்வளவு தூரம் உண்மை என்பது எனக்குத் தெரியவில்லை.
முத்தன் உயிரோடுதான் இருந்தான். அவனிடமும் அவள் வருவதில்லை.
‘அவள் வரவே மாட்டாளா? அவள் வராவிட்டா லென்ன… தொளதொள கழிசானும் ஹிப்பிமாதிரிச் சடையும் வளர்த்தபடி அவளது மகன் வந்திருக்கிறானே’.
“என்ன தம்பி பெலத்த யோசனையில் ஆழ்ந்திட்ட… போய் உடுப்பை மாத்து; ஐயான்ரை துண்டுகிண்டு கிடக்கும். முகத்தையும் கழுவீற்று வா! நீயும் ஒருபிடி பிட்டுச் சாப்பிடு; முட்டை பொரிச்சுத் தாறன்.”
நான் கிணற்றடிக்குப் போய் முகம் அலம்பிவிட்டுத் திரும்பியபொழுது,
அவன் முற்றத்தில் ஐயாவுடன் ஏதோ கதைத்தபடி நின்றான். நான் அவர்களை நெருங்கியதும் அவன் என்னைப் பார்த்துக் கேட்டான்:
“அத்தான், எப்பிடி. இப்பவும் இன்கம்ராக்ஸ்தானோ?”
நான் ஒரு நிமிடம் எதுவுமே பேசவில்லை. இவனைப்பற்றி எதுவுமே தெரியாமலிருக்க, இவன் என்னைப்பற்றி, எங்களைப்பற்றி யெல்லாமே தெரிந்து வைத்திருக்கிறானே!
பேச்சுக் குரல் கேட்டு அம்மாவும் குசினிக்கு வெளியே வந்துவிடுகிறாள்.
அவள் மிகுந்த ஆர்வத்துடன் அவனைப் பார்த்தபொழுது ஐயா சொன்னார்:
”உன்ரை அண்ணற்றை மகன்தான்!”
அம்மா ஒரு கணம் பரிதவித்து, ‘வாவன் உள்ளுக்கு’ என்று சொல்லுவதற்குக் கூடத் தயங்கியதுபோல் ஒரு தோற்றம் காட்டி நின்றாள்.
ஐயா அவனை அழைத்துக்கொண்டு வீட்டினுள் போக, நானும் அம்மாவும் அவர்களைப் பின்தொடர்ந்தோம். வீட்டுப் படி ஏறியதும் அவனது பார்வை அங்கே கதவின் இடப் புறமாகச் சுவரில் மாட்டியிருந்த படத்தைப் பார்த்து நிலைத்துவிடுகிறது.
அது எனது தங்கை ரஞ்சியின் படம். அவள் அற்ப ஆயுளில் தவறிப்போய்விட்டவள். அவளைப் பார்த்ததும் அவன் கண்கள் பனித்துவிடுகின்றன.
ரஞ்சி உயிருடன் இருந்தால் இவனது வயசுதான் இருக்கும். இன்னும் ஓர் இரு வயது குறைவாகக்கூட இருக்கலாம்.
அம்மாவும் கலங்கிவிடுகிறாள்.
“மாமி மச்சாளைப் பாக்கேக்கை என்ரை தங்கச்சியின்ரை நினைவு வருகுது. அவளை உரிச்சுவைச்சாப்பிலை இருக்குது. அது தான்”
அவன் கண்களைத் துடைத்துக்கொள்கிறான்.
“என்ன! என்ன! உனக்கொரு தங்கச்சியா?” மூவரும் ஆச்சரியப்பட்டுப்போய் ஒரே சமயத்தில் கேட்கிறோம்.
“ஏன் இருக்கக்கூடாதா! அப்பு சாகமுந்தி எங்களிட்டை அடிக்கடி வந்துபோறவர். அவற்றை புண்ணியத்திலைதான் நானும் படிக்கமுடிஞ்சுது. பாங்கிலை ஒரு பத்தாயிரம்வரை யிலை அம்மாவின்ரை பேரிலை போட்டவர் அம்மாவுக்கு அவர் துரோகம செய்யேல்லை.”
“தம்பி இப்ப என்ன செய்யிற ராசா”
அம்மா தன்னை மாற்றிக்கொண்டு விட்டாளா? தாவாடிக்காரி… வைத்தியர் சிதம்பரனாரின் பேத்தி…இவ்வளவு சுலபமாக இவளால் எப்படி முடிந்தது!
“நான் ஏ. எல். எடுத்தனான். இப்பதான் மறுமொழி வந்தது. ஒரு பியும் மூண்டு சீயும். மெடிசின் கிடைக்குமெண்டு நினைக்கிறன்”
“உனக்குக் கிடைக்குமடா; கட்டாயம் கிடைக்கும்”.
ஐயா திருப்தியுடன் மனம் திறந்து சொன்னார்.
“தம்பி, நீயும் ஒருபிடி பிட்டுச் சாப்பிடன்; முட்டைப் பொரியலுமிருக்கு.”
“இல்லை மாமி; நான் காலையிலை சாப்பிட்டனான். தண்ணி தாருங்க; போதும்.”
அவன் எதுவித தயக்கமுமின்றி மாமி, மாமி என்று வாய்க்கு நூறுதரம் சொல்லுவது எனக்கு ஆச்சரியமாயிருந்தது
தேநீரும் கையுமாக வந்த அம்மா கேட்டாள்!
“முத்து உன்னை இஞ்சை போகச் சொன்னவனே?”
“இல்லை, நான்தான் வந்தனான். அவருக்கு இதிலை விருப்பமா இல்லையா எண்டு எனக்குத் தெரியாது. ஏன் மாமி தான் இஞ்சை வாறதுக்கு அவரைக் கேக்கவேணுமே?”
தேநீரை அருந்தியபடி அவன் தொடர்ந்து சொன்னான்:
“மாமி நான் இண்டைக்கு வவனியா போகவேணும். அதுக்குமுந்தி உங்களையெல்லாம் ஒருக்காப் பார்க்கவேணும். பேசவேணுமெண்ட ஆசை, அதுதான் வந்தனான்”
அவன் போவதற்கு எழுந்தபொழுது. அம்மா ஓடி சென்று அவனை உச்சிமுகர்ந்து முத்தமிட்டாள்.
‘அம்மா மாறித்தான் போய்விட்டாள்!’
“தம்பி! அடுத்தமுறை வரேக்கை உன்ரை தங்கச்சியையும் கட்டாயம் கூட்டிக்கொண்டுவா ராசா.”
“சரி மாமி; கூட்டியாறன்.”
கூறியகையோடு அவன் இறங்கி நடந்தான். அவன் போவதையே பார்த்தபடி நின்ற எங்களது கண்கள் பனிந்தன.
– மல்லிகை, 1977.
– தகவம் பரிசுக் கதைகள் (தொகுதி-I), முதற் பதிப்பு: ஒக்ரோபர் 1987, தமிழ்க் கதைஞர் வட்டம் (தகவம்), யாழ்ப்பாணம், இலங்கை.
க.சட்டநாதன்
“எழுபதுகளில் அறிமுகமாகிய தனித் தன்மை வாய்ந்த சிறுகதை ஆசிரியர்களில் ஒருவர் க.சட்டநாதன். இவருடைய கதைகளில் ஒரு முதிர்ச்சி யனுபவத்தைக் காணக் கூடியதாக இருக்கிறது.
சட்டநாதன் சிறு பத்திரிகைகளுக்குத் தான் அதிகம் எழுதியிருப்பதனாலோ என்னவோ, இவருடைய பெயர் ஜனரஞ்சக வாசகர்களுக்கிடையில் பிரபல்யம் பெறாமல் இருக்கலாம்.
சுந்தர ராமசாமி என்ற தமிழ்நாட்டு எழுத்தாளரின் கதைகளைப் படிக்கும் பொழுது எழும் இலேசான சுகானுபவம் சட்டநாதன் கதைகளைப் படிக்கும் பொழுது ஏற்படுகிறது. சமூகப் பார்வையும், உளவியல் நுணுக்கமும், மனித உறவுகளைப் புரிந்துகொண்ட தன்மையும், லளிதச் சித்திரிப்பும் ஒருங்கு சேர்வதனால் இவர் கலை நயம் பளிச்சிடுகிறது. – தினகரனில், கே. எஸ். சிவகுமாரன்
சட்டநாதனுடைய சிறுகதைத் தொகுதி ‘மாற்றம்.’