கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 22, 2025
பார்வையிட்டோர்: 1,594 
 
 

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘இப்படைப்பில் இடம்பெறும் சம்பவங்கள், பாத்திரங்கள் யாவும் படைப்பாளியின் கற்பனையே! இதனைப் படிப்பதோடு நில்லாது உங்கள் எண்ணக் கருத்துக்களையும் அறியத் தாருங்கள். தன் பாதையை உணரவும், தன் தவறைத் திருத்தவும் அவை நிச்சயம் படைப்பாளிக்கு உதவும்.’ 

கையில் புரளும் “புத்தொளி” சஞ்சிகையினைப் புரட்டிக் கொண்டிருந்த போது குறுநாவல் ஒன்றின் முன்பாக வரையப்பட்டிருந்த அந்தச் சிறு குறிப்பில் அவனது கண்கள் ஓர் கணம் நிலைக்கிறது. புத்தொளியின் அழகில் மேலும் மூழ்குகிறான் அவன். 

‘ஈழத்து இலக்கிய இளந்தளிர்களை ஊக்கும் திங்கள் வெளியீடு’ என அழகாக வரையப்பட்ட எழுத்துக்கள் அட்டையை அலங்கரிக்கின்றன. 

இந்த சஞ்சிகையினை ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக அவன் நடத்தி வருகிறான். உயர் வகுப்போடு தரப்படுத்தப்பட்டு மேல் உயர முடியாது விரக்தியின் விளிம்பிற்கே சென்றவன் புது யுகம் ஒன்றைக் கண்டது புத்தொளியே தஞ்சமென்று புகுந்த பின்னர்தான்! அது நடந்தது…… இப்போது போல் இருக்கிறது. அதற்குள் ஐந்து வருடங்கள் உருண்டோடி விட்டதா? வீணை மீட்டும் கலைமகள் படத்தோடு புத்தொளி ஜொலிப்பது ஏனோ அவனது கண்களுக்கு குத்துகின்றது. கலைமகள் என்றதுமே அவன் சிந்தனைகள் சிறகடிக்கின்றன. 

“மைமலுக்கை கொம்மான் வந்து போனார் மோனை…… தங்கச்சி பொடியன்ரை குறிப்பை ஒல்லுப்போலை தா….. பொடிச்சியின்ரையோடை பார்ப்பம் எண்டு நாண்டு கொண்டு நிண்டார். என்னெண்டாலும் பொடியன்ரை முற்றுக் கேட்டுத்தான் நான் தருவன் எண்டு சொன்னனான். ஏன் மோனை அவற்றை அங்கலாய்ப்பையுங் கெடுப்பான்? பாவம்…… நாலுபெட்டைக்காரன்…… பெரிய ஆறணிவு படுகிறார். காலம்பறை வருவார் ஒண்டுக்குள்ளே ஒண்டுதானே?ஓலையைக் குடுக்கட்டே?” என அடுப்படிக்குள் இராகமிழுத்த தாயாருக்கு, 

“என்னை யென்ன இரண்டாந்தாரமா கட்டச் சொல்லுறியே?” என்றான் எதையோ மனதிருத்தி இரட்டை அர்த்தம் தொனிக்க! 

ஆச்சரியத்துடன், “என்னடா மோனை நோடாலங் கொத்துறாய்…..?” எனக் குறுக்குக் கட்டை இழுத்துக் கட்டியவாறே கேட்ட தாயாருக்கு, “நான் தானேயெணை புத்தொளியை அஞ்சு வருசத்துக்கு முன்னம் கட்டிப் போட்டு இப்ப மாதாமாதம் ஒவ்வொரு குழந்தையாய்ப் பெத்துத் தள்ளுறனே!” என்றான். 

“தாற்பரியம் விளங்காமல் கதை பறையிறாய்! இக்கணம் என்னதான் செய்யப் போறியோ!” எனப் பதிலுக்குத் தாயார் சலிப்புற்றதும் நடந்த கதை..! 

‘அப்படியானால் அதைப்பற்றி அம்மாவிடம் சொல்லவோ?’ என்று கூட அவன் சிந்தித்தான். 

புத்தொளியினைப் புரட்டுகிறான். சிறுகதைகள்…… நெடுங்கதைகள்…… குறுநாவல்! “மாறுதல்கள்”…… கலைமகள் வரையும் குறுநாவல்! முதலாம் அத்தியாயம்! 

அவனது மனம் இன்று ஓர் நிலையில் இல்லை. அவள் வரையப் போகும் அந்தப் பதிலில்தான் அவனது வாழ்வே தங்கியுள்ளது. நல்லதோர் பதிலை அவள் நல்குவாளா? சிந்தனை நெஞ்சில் சுழல கடந்த காலத்தை அவனது மனம் அசை போடுகிறது…..அவனது சிந்தனையை…… 

திசை திரும்புகிறது மனம். கலைமகள், இந்த கலைமகள் எங்கோ பிறந்தவள்….. எவ்வளவோ தூரத்திற்கு அப்பால் வளர்ந்தவள். இன்று எப்படியோ அவன் இதயத்தில் இணைந்து…… இணைந்து என்றால்…..? ஊன் கலந்து! உயிர்கலந்து! கலைமகள் அவனுக்கு அறிமுகமானது கூட சிறு கதைப் பாணியில் தான் புத்தொளி ஆண்டு மலர் வெளியான போது வாசகர்களிடம் இருந்து குவிந்த கடிதங்கள் மத்தியில் ஓர் கடிதம் அவனை மிக வியப்பில் ஆழ்த்தியது. 

“இலக்கிய இலை மறைகாய்களை ஈழத்திற்கு இனம் காட்டி வரும் உயர் திரு. பிரம்மா அவர்களுக்கு” என்று ஆரம்பித்த அம்மடல் …… மடலின் ஒவ்வோர் வரியும் அடிக் கரும்பாக இனித்தது அவனுக்கு! 

கலைமகள் பெயரிற்கேற்ப கலை நாட்டம் கொண்டவள். அதனால் அவனது இதயத்தில் மட்டுமல்ல, புத்தொளி இதழிலும் படிப்படியாக இடம்பிக்க ஆரம்பித்தாள். மாதா மாதம் கடைசி வாசகர் பக்கத்திலாவது அவளின் பெயர் பொறிக்கப் பெற்று புத்தொளி மலர்ந்தது. அது விபரீதமாய் முடிந்தது……. 

“என்ன பிரம்மா சார்…….? அந்த கலைமகள் யார்? உங்கள் காதலியா?” என வாசகர் பலரிடமிருந்து குவிந்த காரசார கடிதங்களின் பின்புதான்……. 

அவளின் நினைவில்……. தரங் காணாது அவளது ஆக்கங்களைப் பிரசுரித்த கண்மூடித்தனம் அதற்குப் பின்பு தான் அவனுக்கே தெரிய வந்தது. 

கலைமகள் யாழ் வளாகத்தில் கலைப் பட்டதாரியாகக் கல்வி பயில்பவள். “படிப்பின் இடையிடையே இலக்கியம் பிரசவிக்கிறேன். தயவு செய்து அதனைத் தரங்கண்டு எனது அபிமான புத்தொளியில் பிரசுரித்து வளரும் எனக்கு ஊக்கமளியுங்கள்” எனக் கெஞ்சாக்குறையாகக் கேட்டு வரும் மடல்களில் மதி மயங்கி, தரங் காணாது அவளது ஆக்கங்களைப் பிரசுரித்ததும் வாசகர்களின் விமர்சனங்களின் பின் அவளின் ஆக்கத்தில் கைவைத்து வெட்டிக் கொத்திய பின் பிரசுரித்து புத்தொளி வெளியான பின் அவளிடம் முறையாக வாங்கிக் கட்டிக் கொண்டதும்…… சோக வரலாறு ததும்பும் முதலாம் அத்தியாயம்! 

சுவாரஸ்யமாக உருவான அந்த (அறி)முகம் அண்மையில் சலனமாக வடிவெடுத்த தனது நாவலை…….அந்த மாறுதல்களை அவன் எண்ணிப் பார்க்கிறான். 

மகிழூரின், வடலித்திடல் பகுதியே அவனது பிறப்பிடம். பரம்பரை பரம்பரையாக மகிழூர் வாழ் வேளாளருக்கு குடிமைத் தொழில் செய்து பிழைப்பவர்களே வடலித்திடல் பகுதியார். மகிழூர் கிராம சபைத் தேர்தலில் கூட வடலித் திடல் குறிச்சிக்கு மகிழூர் வேட்பாளர் ஒருவரையே நியமித்து முற்று முழுதாக அப்பகுதி மக்களை அடிமைப்படுத்தி வந்தனர் மகிழூரார். அந்தச் சந்தர்ப்பத்தில் தான் வடலித்திடலிலிருந்து கொதித்தெழுந்தது ஓர் இள இரத்தம். மகிழூர் முருகையன் சித்திரத் தேர் வெள்ளோட்ட விழாவில் தான் புது யுகமொன்றிற்கே வெள்ளோட்டம் நிகழ்ந்தது. 

“நாங்களும் தேர் வடம் பிடிக்கப் போறம்…….” என அவனது தலைமையில் வடலித் திடலே திரண்டது. 

சபை சந்திக்குதவாத இவங்களுக்கு வடம் வேண்டியிருக்கோ……” சித்திரத்தேர் உருவாகக் காரணமாக இருந்த விசுவலிங்க விதானையார் கொதித்தெழுந்ததும், 

“இண்டுமேற்பட்டு நாங்கள் குடிமைத் தொழில் செய்யிறதில்லே!” என வடலித்திடலார் வைராக்கியம் கொண்டதும்…… அதனால் மகிழூரில் இறந்தவரை தகனஞ் செய்ய அயலூரான வாழைத்திடலை நாடியும் பயனில்லாது போய் முடிவில் வெள்ளாளரே அப்பணியில் இறங்கியதும், “குடிமைத் தொழிலை விட்டுப் போட்டு உவங்கள் என்ன செய்யப் போறாங்கள்……” என்ற மகிழூராரின் வாயடைக்கும் வகையில் வடலித்திடல் செல்வங்கொழிக்கும் தோட்டந் துலவுகளாக மாறுதல்கள் பெற்றதும்……! 

அவனது மாறுதல்கள் நாவலின் முதலாம் அத்தியாயம் அது! 

தான் பிறந்த சமூகத்தைப் பிரதிபலிக்க அவன் வரைந்த அந்தப் படைப்புக்கு அவளிடமிருந்து வந்த, “தங்களது படைப்புகளில் ஆத்ம வளர்ச்சிக்கான அடையாளங்களை இனம் காண்கின்றேன். அவற்றில் மிளிரும் ஆழமிக்க கருத்துக்கள் அதைச் சொல்லும் பாணி எல்லாமே தங்களது அறிவாற்றலையும், எழுத்துத் திறனையும் பறை சாற்றுகின்றன. உண்மையில் நீங்கள் ஆக்க இலக்கிய உலகில் பிரம்மாவேதான்! இன்னுஞ் சொல்வதானால் மாறுதல்களை விரும்பும் இந்தப் பிரம்மாவுக்கு மாலையிடும் அந்த கலைமகள் கொடுத்து வைத்தவளே……” என்ற மடலின் பின்புதான் இங்கு சலனம் உருவானது. 

இயற்கையே பிரளயமானாலும் உறுதியான எம் உறவை உடைக்க முடியாது கலைமகள்…. என ஆணித்தரமாக எழுதி விட்டு அவளிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளும் திராணி அற்றவனாகப் பழைய பயம் பற்றிக் கொள்ளவே, ‘அதாவது…… இலக்கிய உறவே…….!” என பின்னர் இங்கிருந்து மடல் சென்றதும்…… பதிலுக்கு வந்த அவளது மடலிலிருந்து அங்கும் சலனம் உண்டு என அறிந்து கொண்ட அவன் அந்த…… சலனத்தை வெறும் கோடுகளாக நீள விடாது காதலாக உருமாற்ற உறுதிபூண்டு முடிவாக……… 

நேரில் பேசத் தயங்கும் எத்தனையோ உயர்ந்த விடயங்களை எழுத்தால் சாதித்துவிடலாம் என்பதை உணர்ந்து, “அன்புள்ள கலைமகள், ஆசைக்கு வெட்கமில்லை. நேர்மைக்கு தடையுமில்லை…. நேர்மை நெஞ்சத்துடன் கூறுகிறேன். உள்ளக்கிடக்கையினை வெளிவிடாது போவதால் தானே தொல்லைகள் பல விளைகின்றன…..” என்று அழகு தமிழில் ஆரம்பித்து, “ஆங்கிலத்திலை எழுதினால் தான் மச்சான் இந்த நாளியிலை மதிப்பு’ என ‘ஆர்ட்டிஸ்ட்’ சிவகுமார் ‘அட்வைஸ்’ பண்ணித் தொலைத்ததால் “மை டியர் கலைமகள்… எனத் தொடர்ந்து, ‘டிக்ஷனரி’யும் கையுமாக ஆங்கிலத்தில் (அரைகுறையாக) எழுதி முடித்து அவன் போட்ட மடல். அதற்கு அவளின் பதிலை நோக்கியே…..இப்போ அச்சுக்கூட வாசலில் காத்திருக்கிறான் செக்குரிட்டி கார்ட் போல! 

சிந்தனைப் பம்பரம் சுழன்று ஓய, மீண்டும் அவனது கண்கள் புத்தொளியில் நிலைக்கின்றன. 

சீதன உவர் நீங்கிச் சாதிக் கழிவு ஓய்ந்து செழுமை நன்னீர் சுரக்கும் வரை இந்தச் சமுதாயம் ஒரு சாக்கடையே…..! இந்தச் சாக்கடையில் சங்கமிக்கின்ற சந்தனவூற்றுக்களால் தான் சமூகத்தில் புத்தொளி பிறக்கும்…….. மாறுதல்கள் நிகழும். 

ஆலாபனத்துடன் அவளது அடுத்த அத்தியாயம் ஆரம்பித்துவிட்டது. 

இந்த பிரம்மாவிற்கு இந்த கலைமகள் வெறுமனே பெயரளவில் மட்டுமல்ல கொண்ட கருத்தாலை கொள்கையாலை இலட்சியத்தாலை…… ஒத்தவள் தான்…….! அவளின்ரை சிந்தனை முற்போக்கான கருத்து……. புதுமையை விரும்புகிற மனோபாவம்…….. எல்லாமே என்னைப் போலத்தான். “உண்மையிலே அவள் எனக்கென மலர்ந்த மலர்தான்” என்பான் அவன். 

“கருத்தாலே மாறுதல்களை விரும்புகிற எத்தனையோ பிரம்மாக்கள் தங்களின் சொல்லுக்கும், செயலுக்கும் இடையில் தான் மாறுதல்களைக் காட்டுவார்கள்” என்பான் பதிலுக்கு அவனது ஆத்ம நண்பனான ரஞ்சித். 

“ஆர் எப்படியிருந்தாலும் அவள் அப்படியானவள் இல்லை…..” என்பது அவனது பதில். 

ஆனால், அவளது பதில் எப்படி அமையுமோ? 

“உங்களுக்காக இந்தச் சந்தேகம்? அது வரலாமா? எனக்கு நீங்கள் என்பது எப்போதோ உறுதியானதொன்று. எங்கள் காதல் மலரவேண்டிய புத்தொளியினை நல்குவதற்கு சமூகப் போலிப் போர்வை எனும் மேகங்கள் சூழ்ந்து நின்றாலும் புரட்சிக் காற்றினால் மாறுதல்களை ஏற்படுத்துவோம்……” 

அவளுடைய குறுநாவலில் மேலும் அவன் மனம் லயிக்கவில்லை! அச்சுக்கூடத்தில் இன்று அவன் மட்டுமே தனியாளாக நிற்கிறான். அச்சு வேலைகள் யாவும் பூர்த்தியாகி, இன்று மலர் வெளியாகவுள்ளதால் அச்சுக்கோப்பாளர்கள் இருவருக்குமே இன்று விடுமுறை. ‘ஆர்ட்டிஸ்ட்’ சிவகுமார் போன்றோர் புத்தொளி பணிமனையில் பகுதி நேர ஊழியர்கள் ஆதலால் மலர் பூர்த்தியானதும் அவர்களும் தத்தமது கடமைகளில் ஈடுபடத் தொடங்கிவிடுவார்கள். புத்தொளியில் அவனது பார்வை படர்கிறது. “மாறுதல்கள்” – கலைமகள் வரையும் குறுநாவல் இறுதி அத்தியாயம். 

‘கிணிங், கிணிங’ வாசலில் தபால்காரன். ஆமாம் அவளிடமிருந்து அவன் எதிர்பார்த்த கடிதம். பரீட்சை முடிவை உடைக்கும் பரீட்சார்த்தி நிலை அவனது நிலை! கடிதத்தைப் பிரிக்கிறான் பாரதமாக வரும் கடிதம் இன்று ஒரு பக்கமாக……. வந்துள்ளதே! ஓ தன் விருப்பத்தை இரத்தினச் சுருக்கமாக வரைந்திருக்கிறாள் போலும். அச்சமென்றும்……. நாணமென்றும் சும்மாவா சொன்னார்கள்? 

“பண்புள்ள ஆசிரியர் பிரம்மா அவர்களுக்கு!” திக்கென்றது அவனுக்கு. ‘அன்பின் பிரம்மா!’ ‘ப்ரிய பிரம்மா!’ என ஆசையுடன், ஓசையுடன் விளிப்பவளா இன்று இப்படி…….? என்ன விளையாடுகிறளா? 

“….கதை, காவியங்கள் என்பன வேறை! வாழ்க்கை என்பது வேறை. கற்பனையில் வளர்வன கதைகள். அதில் கையாளப்படுகின்ற கருத்துக்கள் படைப்பாளியின் அறிவாற்றலை, எழுத்துத்திறனை பறைசாற்றி நிற்பவை……… வெறும் பொழுதுபோக்கிற்காக இலக்கியவாதியின் ஆத்ம திருப்திக்காகவே கதைகள் படைக்கப்படுகின்றன. ஆனால், வாழ்க்கை என்பது உயர்வானது! வாழ்க்கைக்கென்று சில வரம்புகள் உண்டு! நியதிகள் உண்டு! கட்டுக்கள் சிதைக்கப்படுவதும் வரம்புகள் மீறப் படுவதும் எல்லைகள் உடைக்கப்படுவதும்…… வியூகங்கள் சிதறப் படுவதும் புத்தொளி பிறப்பதும் மாறுதல்கள் நிகழ்வதும்… தேவையானால் கதைகளில் சுவைக்காகக் கையாளப்படலாம். ஆனால் நடைமுறைக்கு அது ஒத்துவராது. அந்தஸ்துக்கு மீறிய காதல்கள் வெறும் கற்பனைகள்! கானல்கள்…… ஏன் சருகுகள் என்று கூடச் சொல்லலாம். அவற்றையே நடைமுறையாக்கினால் வாழ்வு வளமாய் அமையாது வெறும் விளம்பரமாகத் தான் அமையும்.” 

அவனால் அதை நம்பவே முடியவில்லை. கருத்தாலே மாறுதல்களை விரும்புகிற எத்தனையோ பிரம்மாக்கள் தங்களின் சொல்லுக்கும், செயலுக்கும் இடையில் தான் மாறுதல்களைக் காட்டுவார்கள்! 

“ஓ! கலைமகள் நீயுமா?” அவனையே அறியாது அவன் புலம்பினான். 

கடிதம் நழுவ கையில் புத்தொளி புரள்கிறது! பக்கங்கள் விரிகின்றன…….! 

‘நீ உன்னைத் திருத்து! சமூகம் தானே திருந்தும்.’ அறிஞர் வாக்குடன் உருகி எரியும் மெழுகுவர்த்தியுடன் கூடிய புத்தொளிச் சின்னம் அவனது கண்களில் அர்த்தத்துடன் திரையிடுகிறது! 

– 11.10.1981, வீரகேசரி வாரவெளியீடு.

– நிலாக்காலம் (சிறுகதைத்தொகுப்பு), முதற் பதிப்பு: 25 ஜூலை 2002, ஆ.இரத்தினவேலோன் வெளியீடு, கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *