மாறியது நெஞ்சம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 15, 2026
பார்வையிட்டோர்: 122 
 
 

கையில் கறிகாய் பையோடு நடந்து கொண்டிருந்த வனஜாவை இடிப்பது போல் டூ வீலர் ஒன்று வந்து நின்றதும் பயத்தோடு ஒதுங்கியவள், ஹெல்மெட்டின் முகப்பு கண்ணாடியை தூக்கி சிரித்த மகளிடம், “ம்ம் வந்து மோது, இதுக்குதான் டூ வீலர் வாங்கித் தந்திருக்கோம்” என்றாள் பொய் கோபத்தோடு.

“என்ன மாம்ஸ்? எங்க போய்ட்டு வர?” குறும்பாக கேட்ட திவ்யா, அம்மாவின் கையிலிருந்த பையை வாங்கி தன் காலடியில் வைத்துக் கொண்டு, “ஏறு பின்னால..” என்றாள். மகளின் டூ வீலரின் பின் சீட்டில் அம்ர்ந்து கொண்ட வனஜா, “கறிகாய் தேவையா இருந்தது, போய் வாங்கிண்டு வந்தேன்”

“ஏம்மா கஷ்டப்படற? ஆன் லைனில் ஆர்டர் பண்ணினால் பத்து நிமிஷத்தில் வீட்டுக்கு கறிகாய் வரப்போறது”

“எனக்கு வாக்கிங் போன மாதிரி இருக்கும், தவிர நம்மள நம்பிதானே சொர்ணா கடை போட்டிருக்கா, அவளுக்கும் உதவின மாதிரி இருக்கும்” என்று வனஜா கூறியதற்கு திவ்யா பதில் எதுவும் சொல்லவில்லை. வெளியே போவதற்கு அம்மாவுக்கு ஒரு சாக்கு என்று நினைத்துக் கொண்டாள்.

தாயும் மகளும் சேர்ந்து வீட்டிற்குள் நுழைவதை ஆச்சர்யதோடு பார்த்த ரமேஷ், “என்ன ரெண்டு பேரும் சேர்ந்து வரீங்க?” என்றார்

“நான் இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரம் கிளம்பிட்டேன், வழில அம்மாவ பார்த்தேன்” என்றபடியே கறிகாய் பையை கீழே வைத்த திவ்யா, “இந்த காலத்திலும் ஆன் லைனில் கறிகாய் ஆர்டர் பண்ணாம கடையில் போய் கறிகாய் வாங்குவது அம்மாவாகத்தான் இருக்கும்” என்றதும்,

“அப்படியெல்லாம் இல்ல, நீ ஆன்லைனில் ஆர்டர் பண்ணுகிறாய் என்றால் எல்லோரும் அப்படி இல்லை, என்ன ஆன் லைன்? அன்னிக்கு காலி ஃப்ளவர் ஆர்டர் பண்ணினாய், தம்மாத்தூண்டு வந்தது. பப்பாளி பழம் ஆர்டர் போட்டியே..? காயும் இல்லாம பழமும் இல்லாம ஒண்ணு வந்தது, பழுக்கவும் இல்லை.” வனஜா அடுக்கினாள்.

“நீ வாங்கற சொர்ணாகிட்ட மட்டும் எல்லாம் பெஸ்டாதான் இருக்குமா?”

“பெஸ்டா இல்லாட்டி நான் மறுநாள் அவகிட்ட போய் சொல்ல முடியும், தவிர எனக்கு என்ன பிடிக்கும்னு அவளுக்குத் தெரியும், போன வாரம் எனக்காக பரங்கிக்கொட்டை வாங்கி வந்தா.. உன்னோட ஆன் லைன் இதைச் செய்யுமா?”

“ஆள விடு.. நான் என்ன சொன்னாலும் நீ ஒத்துக்க போறதில்ல” என்று திவ்யா முடித்துக் கொண்டாள்.

இவர்கள் விவாதத்தை கேட்டுக் கொண்டிருந்த ரமேஷ், “முதல் முதலா சூப்பர் மார்க்கெட் கான்செப்ட் வந்து, அரிசி, பருப்பு எல்லாத்தையும் பிலாஸ்டிக் கவரில் போட்டுக் கொடுத்தப்போ எங்க அம்மா இப்படித்தான் என்ன இருந்தாலும் நாம கையால தொட்டுப் பார்த்து வாங்கற மாதிரி இருக்குமா? அவன் கொடுப்பதை வாங்கிண்டு வரணும்னு சொன்னா” என்று சிரித்தார்.

வீட்டிற்கு அருகில் நடைபாதையில் கறிகாய் கடை போட்டிருக்கும் சொர்ணாவிடம் அம்மாவுக்கு ஒரு பாந்தவ்யமே உருவாகியிருந்தது. பண்டிகை நாட்களில் செய்யும் பலகாரங்களில் சொர்ணாவுக்கும் ஒரு பங்கு உண்டு. தான் அதிகம் பயன்படுத்தாத, நல்ல நிலையில் உள்ள புடவைகளை சொர்ணாவுக்குத் தருவாள். அவள் குழந்தைகளுக்கு பள்ளி கட்டணம் கட்ட உதவுவாள்.

“பாவம்டி, அவ புருஷன் வேற ஒருத்திய சேர்த்துண்டு, இவளை விட்டுட்டான்”

ஞாயிறன்று அப்பாவைப் பார்க்க வந்திருந்த அப்பாவின் நண்பர் ஒருவர் ஏகப்பட்ட பழங்கள் வாங்கி வந்திருந்தார். அதில் வீட்டிற்காக எடுத்து வைத்துக் கொண்டு, மற்றவற்றை ஒரு பையில் போட்டு, “இத கொண்டு போய் சொர்ணாட்ட குடுத்துட்டு வா, அவ வீட்ல குழந்தைகள் இருக்கு, சாப்பிடும்” என்று கொடுத்தாள்.

அந்தப் பையை சொர்ணாவிடம் கொடுத்ததும், சின்ன வெட்க சிரிப்போடு வாங்கிக் கொண்டாள் சொர்ணா.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆட்டோக்காரர், “இவங்களுக்கு பழத்தைவிட, வெத்தில கொடுத்தீங்கனா ரொம்ப சந்தோஷமா வாங்கி போட்டுப்பாங்க” என்றார்.

அப்போதுதான் திவ்யா சொர்ணாவை கவனித்தாள், அவள் கடவாயில் வெற்றிலையை அடக்கிக் கொண்டிருப்பது தெரிந்தது.

“வெத்திலை போட்டுக்கங்க, ஆனால் வாயில் அடக்கிக்கொள்ளக் கூடாது, அது நல்லதில்லை” என்றதும், சொர்ணா, “இல்லம்மா வெத்திலயை வாயில் அடக்கிக் கொண்டால் பசி தெரியாது அதான்.” என்றது திவ்யாவிற்கு சுரீர் என்றது. வெற்றிலையை வாயில் அடக்கிக் கொண்டு அதன் சாறை மெதுவாக முழுக்கிக் கொண்டே இருந்தால் பசி தெரியாதா? என்று நினைத்துக் கொண்டாள்.

இரண்டு நாட்கள் கழித்து அவளுடன் வேலை பார்க்கும் ராகேஷ், புதிதாக வீடு வாங்கி கிரஹப்பிரவேசம் செய்தான். தடபுடல் விருந்து, “ரொம்ப ஹெவியா இருக்கு” என்று அவள் கூறியதும், ராகேஷ் வெற்றிலை பாக்கு தட்டை நீட்டி, “வெத்தில போட்டுக்கோ, சரியாயிடும்” என்றதும், “பசி தெரியாம இருக்க வெத்திலையை வாயில் அடக்கிப்பேன்” என்ற சொர்ணாவின் கூற்று நினைவிற்கு வந்தது.

அதன் பிறகு திவ்யா, ஆன் லைனில் கறிகாய் ஆர்டர் செய்வதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *