மாறியது நெஞ்சம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 6, 2025
பார்வையிட்டோர்: 3,684 
 
 

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“நித்யா.. நீ உன்னோட முடிவை மாத்திக்க மாட்டியா?’ குமரனின் குரல் சோகமாய் இழைந்தோடியது. நித்யா அந்த முகத்தை நிமிர்ந்து பார்க்க விருப்பமில்லாதவளாய் தன் வேலைகளில் கவனமாய் இருந்தாள். குமரன் அவளது அருகில் வந்து சட்டென்று அவள் தோள்களைப் பற்றுகிறார். அந்த எதிர்பாராத உணர்வால் சிலிர்த்துப் போன நித்யா அவரிடம் இருந்து விலகிக் கொள்கிறாள். அவளுக்குத் தன் கணவரை நன்றாகத் தெரியும்.. அவரது குணங்களும் தெளிவாகப் புரியும்.. அப்படிப் புரிந்துகொண்டதனால் வந்த விளைவுதான் இன்றைய விரிசலுக்குக் காரணம்.

“நித்யா.. இது சாதாரண விஷயமில்லே. நீ ஒரு முறைக்கு மறுமுறை யோசிச்சுப்பாரு.. உடைஞ்சுபோன கண்ணாடி எப்படி ஒட்டாதோ..அதே மாதிரிதான்.. நம்ம வாழ்க்கையும் போயிடும்.. இப்ப அவசரப்பட்டு அப்புறம் நீதான் வேதனைப் படணும்.. நான் ஆண்பிள்ளை..” படபடவென்று கொட்டிவிட்டுக் குமரன் விருட்டென்று வெளியேறுகிறார்.

நித்யா அவன் போனதைப் பார்த்து நின்றாள். அந்தக் கட்டுமஸ்தான உடலும் கம்பீரமான நடையும் அவளை ஒரு முறை தடுமாற வைத்தது. அந்த நாற்பது வயதிலும் இத்தனை இளமை முறுக்கோடு இருக்கும் தன் கணவரைப் பற்றி மனதில் பெருமையாய் நினைத்து சந்தோஷப் படக்கூட முடியாத அளவுக்கு அவர்மேல் வெறுப்பு நிறைந்திருந்தது அவளுக்கு. பணம்.. படிப்பு.. உத்யோகம் செல்வாக்கு இந்த முத்திரைகள் அவரை ஒட்டிக் கொண்டிருந்ததாலோ என்னவோ… குமரன் உண்மையிலேயே கோபியர் கொஞ்சும் குமரனாகவே மாறி இருந்தார்.

பதினைந்து வருடங்களுக்கு முன் அவரை மாலையிட்டு அவரோடு புதுமனையில் புகுந்து புதுக்குடித்தனத்தை ஆரம்பித்தபோதே அவருடைய லீலா வினோதங்கள் தெரிந்துதான் இருந்தன. இருந்தாலும் காலப்போக்கில் மாற்றி விடுவார் என்று மெளனமாக அவள் இருந்தாள். தன் மனைவியைக் கண்ணில் வைத்துக் காத்து… நெஞ்சில்பூட்டித் தாலாட்டிய குமரன் தனக்கே உரிய பலவீனத்தினால் சில சமயங்களில் அவளது கண்ணில் நீரை வரவழைப்பதும் உண்டு.

இரவு நேரத்தின் இறுக்கத்தில் எத்தனையோ சந்தர்ப்பங்களில் அவரது இறுகிய அணைப்பில். திணறிய உணர்வில், கண்கள் பொழிகின்ற வேதனை மழையில், அவருடைய பரந்த மார்பு தெப்பமாய் நனையும். சிரிப்பும் கொஞ்சலும்.. கிண்டலும் மாறி. வெறுப்பும்.. விரக்தியும் வேதனையும் அவள் நெஞ்சில் நிறைந்தபோது ராஜியும், ரகுலனும் பத்து வயதையடைந்திருந்தனர், ஒரே தடவையில் இரட்டைக் குழந்தைகளாய் அவர்களைப் பெற்றுவிட்ட நித்தியா மீண்டும் தாய்மை அடையும் வாய்ப்பை அந்த முறையோடு முற்றாக இழந்து விட்டாள். ‘உனக்கென்ன கவலை நித்யா.. நீதான் ஆசைக்கும் ஆஸ்திக்கு சேர்த்தே பெத்துட்டியே..’ என்று தோழிகள் ஆறுதலாக அன்பை பொழிந்த வேளையில் குமரனின் அலுவலகத் தோழிகள் அவளை பாராட்ட வந்து அவளது தூங்கும் உணர்வுகளைத் தட்டி எழுப்பிச் சென்றனர். தன் கணவனின் நெருக்கத்தில் நின்று “ங்கிராஜிலேஷன் மிஸஸ் குமரன். உங்க கணவர் இந்த விஷயத்தில் ரொம்ப கெட்டிக்காரர்தான்.. இல்லேன்னா இப்படி ஒரே தடவையில் உங்களுக்கு இரட்டைப் பரிசைக் கொடுத்திருப்பாரா..” என்று சொல்லிச் சிரித்து..அவரை செல்லமாகத் தட்டிக் கொடுத்துவிட்டுச் சென்ற புஷ்பாவும் மலர்விழியும்.. அவளைத் தேம்பித் தேம்பி அழ வைத்தனர்.

தன்னைத் தவிர இன்னொருத்தி தன் கணவரின் அந்தரங்கத்தைப் பற்றிப் பேசும் அளவுக்கு அவர் அவர்களோடு பழகுகிறார் என்ற எண்ணம் ஒன்றே அவளை அவரின் அந்தரங்கத்தில் இருந்து மெல்ல மெல்லப் பிரித்தது. வளர்கின்ற குழந்தைகளின் அழகில் கணவரின் குறைகளை மறந்தாள். குழந்தைகளின் கல்வியின் வளர்ச்சியிலேயே கவனமாய் இருந்தாள். கண்ணுக்கு அழகான கணவன் தன் அருகில் இருந்தாலும் கண்டும் காணாதவளாய் அவள் இருந்தாலும் அவர் அவளை என்றும் விட்டதே இல்லை.

குழந்தைகள் இருக்கிறார்கள் என்ற நினைவுகூட இல்லாதவராய்த் தோளைப் பற்றிக்கொஞ்சுவதும், இடையிலே கைபோட்டு அணைப்பதும் மடியிலே படுத்து மகிழ்வதும் அவளால் நிராகரிக்கப்படாத ஒன்றாய் ஆகிவிடும். அப்பாவின் விளையாட்டைக் கண்டு அதையே தங்கள் சந்தோஷமாய்ப் பிள்ளைகள் எடுத்துக் கொண்டாலும் வளர்கின்ற பிள்ளைகள் மனதில் விகல்பமாய் எதுவும் பட்டு விடுமோ என்ற அச்சமும் அவளுக்குள்ளே எழுந்து நின்று ஆர்ப்பாட்டம் செய்தபோதுதான் அவள் ஒரேயடியாய்ப் பயந்தாள்.. பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாய் இருக்க வேண்டிய பெற்றோர்கள்.. எது எதுக்கெல்லாமோ பயப்பட வேண்டியிருக்கிறதே.. இதை ஏன் இவர் அறிவதே இல்லை.

ரகுலனுக்கு பதினைந்து வயதாகிவிட்டது. அந்தச் சின்னஞ்சிறு சிவந்த உதட்டுக்கு மேலே அழகிய மீசை அரும்ப ஆரம்பிக்கிறது. ராஜி இப்போது அதிகமாய் வளர்ந்திருந்தாள். அண்ணனின் அருகில் உட்காராமல் தள்ளி உட்காரவும்.. அவனைத் தொட்டுப் பேசுவதை – தவிர்க்கவும் கற்றிருந்தாள். தொலைக்காட்சியில் ஆபாசமான காட்சிகளைப் பார்க்கும்போது இனந் தெரியாத கலவரமும் நாணமும் முகத்தில் படருகிற கோலத்தை அவளைப் பெற்றவள் கண்டு கொள்கிறாள். தன்னையும் அறியாமல் கண்ணாடி முன் நின்று தன் அழகை, மாற்றத்தை அவள் ரசிக்கிறாள். மெல்லிய பாடல்களை அவள் முணுமுணுக்கிறாள்.

அப்பாவின் மடியில் உட்கார்ந்து .. தோளில் தொங்கி அரட்டை அடிப்பதைவிட்டு அடக்கமாய் மரியாதையாய்ப் பழகத் தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறாள். இந்த மாற்றங்கள்தாம் நித்தியாவைப் பயப்பட வைத்தன. எத்தனையோ இரவுகளில் அவன் தன் குழந்தைகளின் உறக்கத்திற்குப் பின்பு படுக்கை அறைக்குள் நுழைந்திருக்கிறாள். ஆனால் இந்த மாதிரியான கவலைகள் எதுவுமே இல்லாமல் குமரன் நடந்து கொள்வதை எண்ணும்போதுதான் மனதில் புயல் எழும்பும் பூகம்பம் உருவாகும்.

அது பிரளயமாகி பெரும் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்கத்தான் அவள் இந்த முடிவுக்கு வந்தாள். அதையே உறுதி செய்யும்படி அன்று காலையில் நடந்த நிகழ்ச்சி ஒன்று அமைந்துவிட்டது. காலையில் கணவர் வேலைக்குப் போனபின் சமையலறையில் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறாள் நித்யா.. வரவேற்பறையில் அலறிய தொலை பேசியை எடுத்து ரகுலன் பேசுகிறான்… அவனது குரல் அவள் காதில் விழாத வேளையில்.. அவளது வேலைகளில் அவள் மும்முரமாய் இருக்கும்போது, அவன் விறைப்போடு அம்மாவிடம் வருகிறான்.

“அம்மா.. அம்மா.. அப்பா செய்றது எனக்குக் கொஞ்சமும் பிடிக்கலே.. யார் இந்த புஷ்பா… எங்கிட்டே அப்பான்னு நெனச்சு ஒரேயடியா கொச்சையா கொழையறா…!”

அவள் கூறிய அந்த வரிகளால் அவள் நிலைகுலைந்து போய் கையிலிருந்த கண்ணாடி ஜாடியை கை தவற விடுகிறாள்.. அது.. அவனது மனத்தைப் போலவே சுக்கு நூறாகிச் சிதறுகிறது! எது நடக்கக்கூடாது என்று பயந்துகொண்டிருந்தாளோ, அது இவ்வளவு சீக்கிரம் நடந்துவிட்டது… இது இனியும் தொடர்ந்தால்.. இது இல்லமாக இருக்குமா?

நித்யாவின் மனம் கல்லாகிப்போய் அவள் விடுவிடுவென்று தன் தேவைக்கான பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு அவரிடமிருந்து தனியாகப் போய்விடத் தீர்மானித்தாள். அவரிடம் அவள் எப்படி எப்படியோ எடுத்துச் சொல்லியும் அவர் தன்னை மாற்றிக் கொள்ளாதபோது அவள் மேலும் அங்கே இருப்பதால் எந்தப் பயனும் கிட்டப் போவதில்லை என்பதை உணர்ந்தபின் வந்ததுதான் இந்த முடிவு. இந்த பதினைந்து வருட இல்லறத்தில் என்றுமே கவலைப்படாத குமரன் இன்று மட்டும் சற்று வாடிப்போயிருக்கிறார்.

நித்யா அவரை விட்டுப் போய் விட்டால்… பிள்ளைகளும் அவரை விட்டு விலகி விடுவார்கள்.. அந்த வசதியான வீடு வெறும் வறண்ட பூமியாய்க் காட்சி அளிக்கும்.. அலுத்துப் போய் வீடு வரும்போது அங்கே மகாலட்சுமி போல் நிற்கும் மனைவி இருக்கமாட்டாள். எத்தனை குற்றம் செய்தாலும் அதை மறந்து, மன்னித்துத் தாய்போல் உபசரிக்கும் அவளது அன்பும் அரவணைப்பும் இனி கிடைக்காது. வாலிப வயதைக் கடந்து ஒரு பக்கத் துணையின் முழு ஆதரவைக் கடந்து ஒரு பக்கத்தில் அவளையன்றி வேறு யாராலும் அந்த நிறைவைத் தர முடியாதே.. மனைவியைவிட.. பெற்ற மக்களைவிட.. வேறு எந்த சுகத்தாலும் சந்தோஷத்தையும்.. நிம்மதியையும் கொடுத்துவிட முடியாது என்பது இப்போதுதான் தெரிகிறது.. சில மணித்துளிகள்.. கொதிக்கும் வெயிலின் வெப்பத்திற்காக ஒதுங்கும் அந்த சில நேர மகிழ்ச்சிக்காக காலம் முழுவதும் ஒன்றிப் போகும் உணர்வுகளை, உறவுகளை… பிரிவது எவ்வளவு முட்டாள் தனம்.

புஷ்பாவும்.. மலர்விழியும் எப்போதும்.. எங்கும் மலர்களாய் கிடைக்கலாம். ஆனால் என் அன்பான மனைவியும் அறிவான பிள்ளைகளும், எத்தனைதான் கொட்டிக் கொடுத்தாலும் திரும்பக் கிடைக்க மாட்டார்களே.. குமரன் வந்த வேத்தோடு வீட்டுக்குத் திரும்புகிறான். அங்கே வரவேற்பறையில் மூன்று சின்னஞ்சிறு பிரயாணப் பைகள் வரிசையாய் அடுக்கி வைக்கப்படுகின்றன. சோபாவில் அமர்ந்து நித்யா தன் கைப்பையில் எதையோ தேடிக் கொண்டிருக்கிறாள். சட்டென்ற உள்ளே நுழைந்து அவளது அருகில் அமர்ந்து…

“நித்யா. நீ போகக்கூடாது. தயவு செய்து நான் சொல்றதைக் கேளு. என்னால உன்னையும் என் செல்வங்களையும் பிரிஞ்சு இருக்க முடியாது நித்யா..” என்றார்.

அவளின் முகத்தில் விரக்தி கலந்த புன்னகை தவழ்கிறது. “இங்கே பாருங்க.. உங்களுக்கு நான் தேவையில்லாதவங்கிறது முடிஞ்சு போன விஷயம். ஆனா என் ரெண்டு பிள்ளைங்க உருப்படியா வளரணும்கிற காரணத்தாலே நான் போறேன். ஒரு பொறுப்புள்ள கண்ணியமான தகப்பன் கிட்ட வளராத பிள்ளைங்க பிற்காலத்தில் நல்லா இருக்க முடியாது. உங்க மாதிரியே உங்க பிள்ளைங்களும் வளர்ந்திட்டா அதனால் நான்தாங்க கஷ்டப்படணும். பிள்ளைங்கதான் தாய் தகப்பனை இணைக்கிற இரும்புப் பாலம்னு சொல்வாங்க. ஆனா அந்தப் பாலத்தை உறுதியாப் போடற தாய் தகப்பனே உதவாக்கரையா இருந்தா பாலம் உறுதிப் படாதுங்க. உளுத்துத்தான் போகும். என்னோட எந்த முயற்சியும் பயன் கொடுக்காததாலேதான் நான் இந்த முடிவுக்கு வந்தேன். இதைவிட வேறு வழி தெரியலங்க.. என்னை மன்னிச்சிடுங்க.. உங்க பிரியத்துக்கு நீங்க வாழறதுக்கு எந்தத் தடையும் நான் சொல்லலே. ஏன்னா உங்க சந்தோஷம்தான் என் சந்தோஷம். நான் புறப்படுகிறேன்ங்க”அவள் எழுகிறாள்.

“இல்லே, நித்யா.. நீ நெனக்கிற உன் கணவன் கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே செத்துப் போயிட்டான். நான் இப்ப புது மனிதனாய் மாறிப் போயிட்டேன். என் அன்பு மனைவிக்காக அருமைப் பிள்ளைகளுக்காக நான் மாறி வந்துட்டேன். நம்ம குழந்தைகளை காரணம் காட்டி என்னைப் பிரிஞ்சு போயிடாதே. நம்ம குழந்தைங்கதான் நம்ம சேர்த்து வைக்கிற பாலமா இருக்கணும். ஆமா நித்யா நம்ம பிள்ளைங்க மேல சத்தியமாச் சொல்றேன். என்னை நீ நம்பு.. என்னால இனியும் உனக்கு வேதனை இருக்காது. எந்தப் பிள்ளைகளைக் காரண காட்டி நீ என்னைப் பிரிய விரும்புறாயோ அந்தப் பிள்ளைங்க என்னைப் பிரிக்கப் பிறக்கலே. என் கண்ணைத் திறக்கப் பிறந்தவங்க.” மனைவியின் மடியில் தலை வைத்துத் தேம்புகிறான். அந்தத் தேம்பலில் நித்யாவின் இளகிய மனம் மெல்ல கரைகிறது.

“அப்பா அழாதீங்க. அம்மா அப்பாவை அழவிடாதங்க..”ராஜியும், ரகுலனும் சேர்ந்து விம்முகின்றனர்!

– செவ்வந்திப் பூக்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2007, வெளியீடு: சிங்கை தமிழ்ச்செல்வம், சிங்கப்பூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *