மாய மனிதன்!




சித்தர் ஒருவரது வழிகாட்டுதலின் படி ஒரு மாதம் ஆழ்நிலை தியானப்பயிற்ச்சி செய்ததால் தனது உடலை பிறரால் பார்க்க இயலவில்லை யென்பதையும், மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வைக்க முயன்றும் முடியவில்லை யென்பதையும் தெரிந்த போது அதிர்ச்சியடைந்த போகன், அதையே சாதகமாக்கி சில பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என யோசித்ததில் மனம் சாந்தமானான்.

அவன் வாழும் ஊரில் வேலை பார்த்த அரசு அதிகாரி ஒருவர் கட்டிடம் கட்ட அனுமதி வாங்க தன்னைத்தேடி வருபவர்களிடம் ஏழைகளென்றும் மனமிரங்காமல் லட்சக்கணக்கில் லஞ்சம் கேட்பதும், வேறு வழியின்றி வருவோரும் தங்களது தேவையை கடன் வாங்கிக் கொடுத்தாவது முடித்துக் கொள்ள பணத்தைக் கொடுத்துச் செல்வதும் போகனை கோபமடையச் செய்திருந்தது.
பல வருடங்களாக தான் சம்பாதித்த பணத்தை வைத்து வெளி மாநிலத்தில் தனது நண்பர் ஒருவரது பெயரில் சொத்து வாங்க முடிவு செய்த அதிகாரி, ஒரு நாள் இரவு நேரத்தில் வீட்டிலிருந்து லஞ்சத்தால் சம்பாதித்த பண மூட்டையை எடுத்து தனது காரின் பின் டிக்கியில் வைப்பதைப் பார்த்த போகன், அதிகாரிக்குத் தெரியாமல் அந்தப்பண மூட்டையை டிக்கியிலிருந்து எடுத்துச் சென்று விட்டான்.
போகனது உருவம் மட்டும் தான் பிறருக்கு தெரியாதே தவிர அவர் கொண்டு செல்லும் பொருட்கள் தனித்து தெரியும். இதன் காரணமாகவே பகலில் எதையும் கொண்டு செல்வதில்லை. அவனது குடும்பத்தினருக்கு மட்டும் அவனது நிலையைச்சொல்லி அதற்கேற்ப செயல்பாடுகளை வைத்துக்கொள்வான்.
சில பொருட்களை எடுப்பதுடன் சரி. எடுத்த பின் தனது நண்பன் மேகனிடம் கொடுத்து, கொண்டு செல்ல வைத்து விடுவான். உறவினர்களிடம் வெளியூருக்கு வேலைக்கு சென்றிருப்பதாக குடும்பத்தினர் பொய் சொல்லி சமாளிப்பதை அருகிலிருந்து பார்ப்பதால் வருத்தப்படுவான். தான் நடந்து செல்லும்போது கூட யார் மீதும் மோதி விடாமல் பார்த்துக்கொள்வான்.
இதன் காரணமாகவே வாகனங்களை ஓட்டுவதைத்தவிர்த்தான்.
பண மூட்டையை போகன் எடுத்ததைப்பார்க்காத அதிகாரி காரை ஓட்டிச்சென்றவர், போகும் வழியில் திடீரென ஏற்பட்ட சந்தேகத்தால் ஒரு முறை வாகனத்தை நிறுத்தி டிக்கியைப்பார்த்த போது பணம் இல்லாதது கண்டு அதிர்ந்து போனார். வேறு வழியின்றி வீடு திரும்பியவர் எந்த வகையில் யோசித்தும் பணம் போன வழியை மட்டும் அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை.
சிசிடிவி கேமராவின் பதிவை ஆராய்ந்து பார்த்த போது கேமரா திருப்பி வைக்கப்பட்டிருந்தது. யாராவது திருப்பியிருந்தாலும் திருப்பும் வரை திருப்ப வருபவரைக் காட்டி விடும். அப்படி எந்த உருவமும் திருப்பும் வரை பதிவாகாததைக்கண்டு திகைத்துப்போனார். ‘என்ன மாய மந்திரமோ…?’ என நினைத்தவர், அந்த வீதியிலிருந்த ஒரு வீட்டில் குடியிருக்கும் மந்திரவாதியை வரவழைத்து ரகசியமாக விசாரித்தார்.
“இத பாருங்க சார். என்னைப் பொருத்த வரைக்கும் ஒருத்தரைக் கெடுக்க மந்திரத்த பயன் படுத்த மாட்டேன். பாதிக்கப்பட்டவங்களை காப்பாத்தத்தான் மந்திரத்த பயன் படுத்துவேன். குட்டிச்சாத்தான வெச்சு பணத்த எடுக்க முடியும். ஆனா அந்தப்பணத்தை கண்ணுல பார்க்கலாமே தவிர செலவு பண்ண முடியாது. வேணும்னா எடுத்தது யார்னு மை போட்டுப்பார்த்துச்சொல்லறேன் வாங்க” என கூறி தன் வீட்டிற்கு அதிகாரியை அழைத்துச் சென்றார்.
வெற்றிலையை எடுத்து மை தடவி சில மந்திரங்களைச் சொன்னவர் முகம் வெற்றிலையை உற்றுப்பார்த்தவுடன் வேர்த்துக்கொட்டியது.
“சார் நான் என்னுடைய அனுபவத்துல இப்படி ஒரு காட்சியக்கண்டதில்லை. பண மூட்டை தானாகவே பறந்து போய் மறைஞ்சிடுது. ஒன்னு எடுத்தவர் மாய மனிதனா இருப்பாரு. இல்லேன்னா ஏதாவது உங்களால பாதிக்கப்பட்டு இறந்து போன ஆவியா கூட இருக்கலாம். நீங்க எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருங்க. ஏன்னா பணத்த எடுத்த அந்த சக்தி உங்களை பழிவாங்கவும் வாய்ப்பிருக்கு” கேட்ட அதிகாரிக்கும் வேர்த்தது.
காலையில் ஒரு ஏழையின் வீட்டின் முன் போடப்பட்டிருந்த உடைந்த சேரில் போய் உட்கார்ந்து கொண்ட போகன் அந்த வீட்டில் ஏழாவது படிக்கும் மாணவி தனது பிறந்த நாளுக்கு மற்றவர்களைப்போல புது துணி எடுக்க வேண்டுமென அடம்பிடித்து அழ, அவளது தாய் முடியாது என கூறி பிரம்பெடுத்து அடிக்க, அச்சிறுமி வலியால் துடிக்க, உடல் தடிக்க, அதைக்கண்டு அடித்த தாயும் அழ, அதைக்கண்டு போகனும் அழுதான்.
அழுதவன் இரண்டாயிரம் ரூபாய் பணத்தைக்கொண்டு போய் அவர்கள் வீட்டின் சுவாமி படத்தின் முன் வைத்து விட்டான். முதலில் பணத்தைக்கண்ட சிறுமி துள்ளிக்குதித்தாள். அவர்களுக்கு ஒரே ஆச்சர்யம். சாமி கொடுத்ததாக பேசிக்கொண்டவர்களின் வீட்டில் அடுத்த நாள் புத்தாடையணிந்து, கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவதைப்பார்த்து போகனும் மகிழ்ந்தான்.
பின்பு ஒரு நாள் ஒரு வீட்டில் குடும்பத்தலைவர் ஒருவருக்கு உடல் நிலை சரியில்லாமல் நடக்க இயலாமல் இருந்ததைக்கண்டு அந்த வீட்டிற்குச்சென்றான். “தாலிக்கொடிய வித்துட்டேன். ஆபரேசனுக்கான பணம் பாதி கெடைச்சிருக்கு. மீதிய எப்படி பொரட்டுவேன்னு தெரியலை. கடவுளே எனக்கு மாங்கல்யப்பிச்சை கொடு” என அந்த வீட்டின் குடும்பத்தலைவி கண்களை மூடி கதறி அழுது விட்டு கண் விழித்த போது அவளுக்குத்தேவையான பணம் அவள் முன் இருந்தது கண்டு மகிழ்ச்சியடைந்தவள் உடனே தனது கணவனுக்கு ஆபரேசன் செய்ய தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துச்சென்றவள், அடுத்தவாரம் பக்கத்திலிருந்த பரமசிவன் கோவிலில் அபிசேகம் செய்து குணமான கணவனுடன் மகிழ்ச்சியுடன் வழி பட்ட போது போகன் அருகிலிந்து மகிழ்ந்ததை அவர்களால் தெரிந்து கொள்ள இயலவில்லை.
ஒரு நாள் இறந்து போன ஏழையின் வீட்டின் முன் போய் நின்றவன், அங்கு நடக்கும் நிகழ்வுகளைக்கவனித்தான். “பொணம் எடுக்க கூட பணம் இல்லாம குடிச்சுக்குடிச்சே சம்பாதிச்சதை சேத்து வெக்காம அழிச்சுட்டாரு. இப்ப என்ன பண்ணுவேன்னே தெரியலை” இறந்து போனவரின் மனைவி உறவுப்பெண்ணிடம் கூறியதைக்கேட்ட போகன் ஒரு குறிப்பிட்ட தொகையை அப்பெண் முன் அவள் பார்க்காத போது வைத்து விட்டு நகர, அங்கிருந்தவர்கள் பலரும் ஆச்சர்யத்தில் திக்கு முக்காடிப்போயினர்.
“எழவுக்கு வந்த ஏதோ ஒரு மகராசன் சொல்லாம பணத்த வெச்சுப்போட்டு போயிட்டாரு” என பேசியவர்கள், இறந்தவரை அடக்கம் செய்து விட்டு, வந்திருந்த உறவுகளுக்கு பசி தீர உணவும் போட்ட பின் நிம்மதிப்பெருமூச்சு விட்டதைப்பார்த்து விட்டு வந்த போகனும் நிம்மதியாகத்தூங்கினான்.
போகனது உடலைச்சுற்றிலும் ஒரு அடி சுற்றளவு மட்டுமே அவனது ஆடை உள்பட, அவன் வைத்திருக்கும் பொருட்கள் யாருக்கும் தெரிவதில்லை. இதனாலேயே பணத்தை பாக்கெட்டில் வைத்திருப்பதை யாரும் கண்டு பிடிக்க முடியாதது அவனது இப்படிப்பட்ட உதவும் செயல்களுக்கு சாதகமாகி விட்டது.
இப்படியே மிகவும் சிரமப்படும் பலருக்கும் கண்காணாத தெய்வமாகவே வாழ்ந்தவனுக்கு சிறு கவலையும் வந்தது. ‘அதிகாரியின் லஞ்சப்பணம் முழுவதும் செலவாகி விட்டால் இப்படிப்பட்ட உதவிகளை எப்படிச்செய்வது?’ என்பது தான் அந்தக்கவலைக்குக்காரணம்.
உடலில் கட்டையால் அடிப்பது போல் உணர்ந்தவன் படுக்கையிலிருந்து பதறி எழுந்தான். மனைவி மகி பூரிக்கட்டையுடன் நின்று கொண்டிருந்ததைக்கண்டவனுக்கு இது வரை தான் கண்டது கனவு என்பது புரிந்தது.
கண்டது கனவாக இருந்தாலும் சிரமப்படும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் எனும் மனநிலை இதன் மூலம் உறுதியானது மகிழ்ச்சியளித்தது. நண்பர்கள் பலரை ஒன்று சேர்த்து அறக்கட்டளை ஆரம்பித்து, அதன் மூலம் ரத்த தானம், உணவு தானம், உடை தானம், இறந்த பின் உடல் உறுப்புகள் தானம் என பல சேவைகளை பிறர் தேவையறிந்து செய்ததால் பலராலும் தெய்வமாக போற்றப்படும் மனிதனாக வலம் வந்தான். நல்ல கனவுகளும் கூட நல்ல மனிதர்களை உருவாக்குகிறது என்பதை ஆணித்தரமாக நம்பினான் போகன்.