கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 2, 2025
பார்வையிட்டோர்: 390 
 
 

(1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பின்னேரம். 

நான் வீட்டின் பின்விறாந்தையிலிருந்து மேற்குவானைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். 

கதிரவன் விழுந்து கொண்டிருக்கிறான்.  

வீழும் கதிரவனால் ஏவப்பட்ட கதிர்கள், அடிவானில் ஆயிரம் கோலங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன. 

எங்கோ தூரத் தெரியும் அடிவான வெளி என்னில் துயரைக் கவிக்கிறது. 

ஏன் துயர்? 

இனம் தெரியாது உள்ளிருந்து பரவிவரும் துயரக் கசிவில் ஊறிய மனம், நிலைகொள்ளாது மீண்டும் மீண்டும் வான்வெளியில் சென்று மோதுகிறது. 

அடிவானின் குங்குமப் பின்னணி யில் முகில் கூட்டங்களின் பலவித உருவங் களின் அரங்கேற்றம். 

மலை உச்சியிலிருந்து பாய்கின்ற குதிரை. 

பெரிய சிவலிங்கத்தில் இழுக்கப் பட்ட விபூதிக் குறிகள். போர்க்களத்தில் வெட்டிச் சாய்க்கப்பட்டு குப்புறக் கிடக்கும் ஓர் அசுரன். 

திடீர் திடீர் என முளைத்தெழும் சிறுசிறு மலைமுகடுகள். 

சிறிதுநேரம் இவற்றைப் பார்த்துக் கொண்டிருக்க, அவை மெல்ல மெல்ல கரைந்து புதுத் தோற்றங்களில் ஜனனம். 

நிஷ்டையில் இருக்கும் முனிபுங்கவர் போல் சிவலிங்கம் மாறுகிறது. 

பாயும் குதிரை பல்லக்குக் காவி களாய் பரிணமிக்கிறது. 

குப்புறக் கிடந்த அரக்கன் குட்டி அருவிபோல் மெல்ல மெல்லக் கரைந்து நீள்கிறான். 

இப்புது மாற்றங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

அவையும் சிறிது நேரத்தில் வேறொன்றாய் சூல் கொள்ளும் தோற்றம். எந்த உருவமும் நிலைப்பதாய் இல்லை. ஓரே மாற்றம். 

மாற்றங்களின் அரங்காகத் திகழ்ந்த பின்னணித் திரை இப்போ குங்குமச் சிவப்பிலிருந்து செம்மஞ்சளாகிறது. பின்னர் குருத்துப் பச்சையாகிறது. திடீரென குருத்துப் பச்சையின் ஓரங்கள் கருமையால் கௌவப்படும் சாயல். கவியவிருக்கும் இரவின் சமிக்ஞை முதலில் அந்த ஓரங்களில் வந்து உரசிக் கொள்வது போல் …. 

மாற்றங்களின் அரங்காகத் திகழ்ந்த பின்னணித் திரையே மாறுகிறதா? எனக்குள் மீண்டும் அந்த துயர் தலையெடுக்கிறது. ஏன் துயர்? 

குருத்துப் பச்சையாய் செவ்வொளி காட்டிய அடிவானம். கருமையோடு கருமையாகிறது. அதையும் விடக் கருமை தடிப்பேறிய தூரத் தெரிந்த பனைமரங்கள் அடிவான வெளியில் ஜன்னல் கிராதிகள் போல் கோடுகள் காட்டுகின்றன. அவை எனக்கு சிறைச்சாலை கம்பிகளை நினைவூட்டுகின்றன. 

என் சிறைப்பட்ட மனம். 

என் துயரின் காரணம் ஒரு துரும்பளவு பிடிபட்டது போல் தெரிவதற்குள் அது நழுவிப்போய் விடுகிறது. 

எல்லாம் மறைந்த கும்மிருட்டு. 

இது எனக்குச் சாவை நினைவூட்டுகிறது. 

தோற்றம் காட்டிய உருவங்கள், மாற்றங்காட்டிய உருவங்கள் எல்லாம் எங்கே போயின? 

அவற்றின் அரங்காக இருந்த பின்னணி வெளி? சாவில் எல்லாம் மறைகிறதா? சாவில் எல்லாம் மறைகிறதாக. எல்லாம் ஒரு முடிவுக்கு வருவதாக சாகாதவன் நினைக்கிறான். இது சாவைப் பற்றிச் சாகாதவன் வைத்திருக்கும் பார்வை. 

செத்தவனுக்கு எல்லாம் சாவோடு முடிந்து விடுகின்றனவா? 

இது என்ன, ஒரு அபத்தமான கேள்வி? 

செத்தவனுக்கு எல்லாம் சாவோடு முடிந்து விடுகின்றதா இல்லையா என்பதை அறிய நாம் செத்துப் பார்க்க வேண்டும். 

மீண்டும் ஒரு அபத்த வியாக்கியானம். 

செத்தபின் எப்படிப் “பார்க்’கிறது. யார் ‘பார்க்”கிறது? 

திடீரென்று அடிவானில் ஒரு மின்னல் கிழிப்பு. 

அந்தக் கிழிப்பில் வான்வெளியின் இருப்பும். அதில் உருக்கொள்ளும் தோற்றங்களும் பளீரிட்டுச் சிரித்தன. 

இருளுக்கு உயிரூட்டிய மின்னல். 

சாவுக்கு உயிரூட்டுவது எது? 

கணத்துக்குக் கணம் மறையும் தோற்றங்கள், குலையும் கோலங்கள். இவற்றுக்கிடையில் அந்த இருப்பு. 

மின்னல் சுழிப்பில் பழைய உருவங்கள் மறைந்து. புதிய உருவங்கள் குடியேறியிருப்பது தெரிந்தது. 

அப்போ நிலைத்திருப்பது ஒன்றுமில்லை. அப்படியா? அந்த வெளி? 

அது மாறவில்லையா? 

அதன் நிறம் ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு கோலம் கொள்கிறது. அது மாற்றமில்லையா? 

வெளி என்பது நிறமா? வெளி நிறங்களைக் கடந்தது.

அப்படியெனின் நிறங்கள் என்பவை வெளியின் நிகழ்வுகளால் நிழற்றப்படும் குணங்கள் ? திரையிடப்படும் தோற்றங்களுக்கேற்ப, வான்வெளியில் எறியப்பட்டு எதிரொளிக்கும் நிறங்கள். 

அப்போ வெளி மாறவில்லை? 

வெளி வெளியாகவே தான் இருக்கிறது. 

அதில் காலூன்றும் தோற்றங்கள் தான் அதில் தூசும் தேசும் ஏற்றி விகல்ப்பங்கள் புரிகின்றன? 

வெளியில் அமையும் தோற்றங்களுக்கேற்ப வெளியின் இருப்பு பளீரிட்டும் மங்கியும் காட்சி தருகிறது? 

இல்லை, வெளிதன் தூய்மையின் உக்கிரத்தால் தோற்றங்களின் தூசையும் தேசையும் இருப்பாக்கிக் காட்டுகிறது. 


‘என்னத்தை அப்பிடி பார்த்துக் கொண்டிருக்கிறீங்க?” என்று கேட்டவாறு என் மனைவி என் முன்னே நிற்கிறாள்.

நான் திரும்பி அவளைப் பார்க்கிறேன். 

இவள் ஒரு தோற்றம். 

இவள் எந்த வெளியில் தோற்றுகிறாள்? 

இவள் என் புறவெளியில் இருந்து அகவெளிக்குள் நுழைகிறாள். என் அகவெளியில் இருந்து புறவெளிக்கும் புகுகிறாள். அகம் புறம் என்ற பிரிவு வெளிக்கு உண்டா? இல்லை. 

எமக்குத்தான் அந்தப் பிரிவு. 

நாம் அந்த வெளியைப் பிரித்து பங்குபோடும் பங்குதாரர்கள்.

நமது ‘பங்கு’ தீர்ந்ததும் வெளியிலிருந்து நமது தோற்றம் மறைந்து விடுகிறது? 

வான்வெளியில் படரும் முகில் கூட்டங்களின் தோற்றங்கள் போல் நாமும் தோன்றித் தோன்றி மறையும் தோற்றங்கள். எனக்கும் மீண்டும் அந்தத் துயர் சுழித்துச் செல்கிறது. நமக்கு இருப்பென்பது இல்லையா? 

இருப்பு அந்தவெளி மட்டுந்தான். 

நமது இருப்பென்று நாம் பேசுவது நமது நிலையாமையைத் தானா? 

மீண்டும் வான்வெளியில் மின்னல் ஒன்றின் பளீரிடல்.

ஓர் கண மின்னல். 

மின்னல் நிலையாமையின் குறியீடு. 

மின்னல் தன் நிலையாமையின் ஒரு கண இருப்பில், நிலைத்த வெளியின் மகோன்னதங்களைக் காட்டிச் செல்கிறது. 

அந்த மகோன்னத ஒளிவீச்சால் தன் நிலையாமைக்கு நித்திய இருப்புத் தேடுகிறது மின்னல்? 

நமது நிலையாமை இருப்பும் இப்படி வெளியை எடுத்துப் பளீரிடும், வெளியை தன் இருப்பாய் மாற்றும் இந்த மின்னலின் மகோன்னதமாய் இருந்துவிட்டுப் போக வேண்டும். அப்படியா? 

வெளியோடு நாம் கொள்ளும் தொடர்பின் உக்கிரத்தில் எமது இருப்பின் நிலைப்பும் நிலையாமையும் தங்கியிருக்கிறது. 

வெளியோடு நாம் தொடர்பு கொள்ளாமல், வெளியைத் துண்டு துண்டாக வெட்டி பங்கு போடுகிறோமா? நாம் ஒவ்வொருவரும் வெளியை எமக்குள் வைத்துக் கொண்டு இருளை அடைகாக்கிறோமா? 

நான் வெளியோடு தொடர்பு கொள்ள முயல்கிறேனா? 

இருளை அடைகாக்கிறேனா? 

நான் வெளியை நோக்கித் தாவியெழ முனையும்போது என் மனைவியின் தோற்றம் முன்னெழுகிறது? அதேபோல் அவள் எழ முயலும் வெளிக்குத் தடையாக நான் நிற்கிறேனா? 


“முன்னுக்கு நிற்கும் உன் காளியை வெட்டு. அப்போதான அப்பால் செல்லலாம்” தோத்தாபுரி ஸ்ரீராமகிருஷ்ணருக்கு கட்டளை யிடுகிறார். 

திரும்பத் திரும்ப காளிதான் தன் கண்ணுக்கு முன் தெரிவதாக ஸ்ரீராமகிருஷ்ணர் அவருக்கு முறையிடுகிறார். 

“அந்தக் காளியை வெட்டு என்று திரும்பக் கூறிய தோத்தாபுரிக்கு ஸ்ரீராமகிருஷ்ணர் அதே பதிலைத் திரும்பத் திரும்பக் கூறவே, தோத்தாபுரி ஒரு போத்தில் ஓட்டை எடுத்து ஸ்ரீராமகிருஷ்ணரின் நெற்றி நடுவில் கீறி, அவ்விடத்தை மனதிருத்தி தியானிக்கும்படி மீண்டும் கட்டளையிடுகிறார். 

அதன்படி ஸ்ரீராமகிருஷ்ணர் தியானிக்கிறார். அவ்வளவுதான் அடுத்தகணம் தோற்றம் காட்டிய காளியை வெட்டிக் கடந்த வெளியில் அவர். அந்நிலையிலிருந்து அவர் வெகுநேரம் எழும்பவில்லை. 

கட்டளை பிறப்பித்த தோத்தாபுரியே மலைத்து நிற்கிறார். 


காளியை வெட்டு. 

ஏன்? 

அது ஒரு மாயைத் தோற்றம். ஓர் இடைத் தரிப்பு. 

வெளியை மறைக்கும் மாயை. 

தோத்தாபுரியின் குரல் மீண்டும் எனக்குள் ஒலிக்கிறது. 

தூய்மையின் இருப்பிடமான மகா காளியே வெளிக்குத் தடையான மாயை என்றால், என் மனைவி, என் பிள்ளைகள் மொத்தத்தில் என் குடும்பம் எல்லாமே மாயையின் கூட்டு மொத்தப்பழு. 

இவற்றை முன்னால் வைத்துக் கொண்டு வெளியை நோக்குவதென்பது கல்லைக் கழுத்தில் கட்டிக் கொண்டு நீந்தப் பழகுவதற்கு ஒப்பதாகும். அப்படியா? 

எனக்குள் ஏதோ இடறுப்படுவது போல் பட்டது. 

என் மனைவி யார்? 

என் மனைவி மட்டுமல்ல இந்தப் பிரபஞ்சத்தின் அனைத்து கோடி ஜீவராசிகள் நிலையென்ன? 

அத்தனையும் இந்தக் காளியின் சிலிர்ப்பில் ஜனனித்தெழும் தோற்றங்கள் தானே? 

ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணரூபம். அக்குணரூபத்துக்கு ஏற்ப மாயையின் கனரூபம். 

காளியார்? 

வெளிக்கும் அவளுக்கும் என்ன உறவு? 

காளியை நீக்கி -அதாவது தோற்றங்களை நீக்கி வெளியின் இருப்பை சுகிக்க முடியுமா? 

அதேவேளை வெளியை மறந்து தோற்றங்களை மட்டும் கண்டால் அது மாயை. வெளிதரும் சுகத்தை சுகிக்கவிடாது மறைத்து நிற்கும் மாயை. அப்படியா? 

இரண்டின் தன்மையையும் உணர்ந்தவன ஒவ்வொரு தோற்றத்துக்குள்ளும் வெளி புகுந்துள்ளதை உணர்கிறான். 

இந்த அறிவு – 

தோற்றமும் மாயையாகக் காணாது. வெளிவரையும் ஓவியங்களாகக் கண்டு மெய்சிலிர்க்கிறது. 

ஒவ்வொரு தோற்றமும் வெளியை மொண்டு வைத்திருக்கும் சற்பாத்திரங்கள். 

ஒவ்வொரு தோற்றங்களை வெளியை வழிபட வைக்கும் எழில் ரூபங்கள். 

என் மனைவி 

என் பிள்ளைகள் 

நான் -என்னோடு சம்பந்தப்பட்ட சகலதும் என் கழுத்தை அமுக்கும் மாயையின் பழுவல்ல. 

மாறாக எல்லாம் தூயவெளியை மொண்டு வைத்திருக்கும் சற்பாத்திரங்கள், வெளி ஏந்திகள். எனது மெய் சிலிர்க்கிறது. 

எனது அந்தத் துயர்? 

வெளியிடமிருந்து வெகுதூரம் பிரிந்து வந்து விட்டதாகிய என் எண்ணமும் அதன் துயரும் மெல்ல மெல்ல மறைகிறது. 


தோத்தாபுரிக்கு வயிற்றுவலி. 

வயிற்றுவலி மாயைக்குட்பட்டதல்லவா? 

வயிற்றுக்குத்தானே வலி? ஆத்ம வெளிக்கல்லவே? 

தோற்றங்களைக் கடந்து. ஆத்ம வெளியாய் நிற்கும் தோத்தாபுரியை வலி தொட முடியுமா? 

வலி வயிற்றில் ஏற்படத் தொடங்கியதுமே, தோத்தாபுரி உடலை உதறி வெளியில் கலந்துவிடுவார். 

ஆனால் வயிற்றுவலி தொடர்ந்து நிற்கிறது. 

தோத்தாபுரியும் வலி ஏற்படும் ஒவ்வொரு சமயமும் வெளியில் 

கலந்து அதில் இருந்து தப்புகிறார். 

ஆனால் அன்று 

வெளியில் கலக்கும் முயற்சியைக் கூட செய்யமுடியாதவாறு வலி அவரைத் தாக்குகிறது, வெளியோடு ஒன்றிவிட முடியாதவாறு கீழே இழுக்கிறது. 

தோத்தாபுரிக்கு ஆத்திரம் அத்துமீறுகிறது. 

இந்த உடலால்தானே இந்த உபாதை? வெளியில் சதா ஐக்கியமாகி நிற்கக்கூடிய எனக்கேன் இந்த உடல்? இதை அழித்துவிட்டால் எல்லாம் தீர்கிறது’ என்று எண்ணிய தோத்தாபுரி தனது உடலை அழித்துவிட. கங்கையில் தன்னை மூழ்கடித்து தற்கொலை செய்யப்போகிறார். 

கங்கையின் ஆழமான பகுதியில் இறங்கி நடக்கிறார். 

அவர் ஆழமான பகுதியில் இறங்கி நடக்க நடக்க, அவர் ஆச்சரியப்படும் விதத்தில் கங்கை நீர் வடிந்து வடிந்து அவர் முழங்காலுக்குக் கீழே செல்கிறது. 

தோத்தாபுரி தன் தற்கொலை முயற்சியில் களைத்துப் போகிறார். அவர் களைத்துப் போய் தலை நிமிர்கையில் அங்கே அவர் முன் காளி நின்று சிரிக்கிறாள். 

“நீ நினைக்குமாப் போல் எதையும் செய்து விட முடியாது. எதையும் எனது ஆக்ஞைக்கு உட்பட்டே கடக்க வேண்டும்” 

தோற்றங்களை கடந்த தோத்தாபுரிக்கு காளியின் தோற்றம் விளக்குகிறது. 

வெளி என்பது என்ன? 

காளியிலிருந்து வேறான ஒன்றா? 

காளியின் தோற்றத்தை வெட்டும்படி கூறிய தோத்தாபுரி, காளிஉபாசகரான ஸ்ரீராமகிருஷ்ணர் முன்னே சென்று மண்டியிடுகிறார். தான் அங்கிருந்து செல்வதற்கு காளியிடம் அனுமதி கேட்டுத் தரும்படி. 

‘நீ பிரம்மவெளி என்று அழைத்ததைத்தான் நான் காளி என்கிறேன்’ என்று ஸ்ரீராமகிருஷ்ணர் பலருக்கு விளக்கிச் சொல்வது போல் என் காதுகளில் ஒலிக்கிறது. 

ஸ்ரீராமகிருஷ்ணர் விடை கொடுக்க பிரம்மஞானியான தோத்தாபுரி திகம்பரக் கோலத்தோடு அங்கிருந்து சோர்ந்து போய் நடந்து செல்வது என் கண்முன்னே விரிகிறது. 

என் நெஞ்சில் இனந்தெரியாத துயர். 

பிரம்மவெளியின் உச்சத்தைத் தொட்ட தோத்தாபுரிக்கு. தோற்றங்களில் மறைந்திருக்கும் அதே வெளியின் சக்தியை அறிய முடியாது மறைத்த மாயை எது ? 

ஞானச் செருக்கு? 

ஞானச் செருக்கு உடைந்த தோத்தாபுரியின் நடை தூரத் தூரச் சென்று மறைகிறது. 

தோற்றங்கள் மாயையா? 

இப்போ பிரம்ம வெளியின் உச்சத்துக்கு ஏறிய தோத்தாபுரி, கீழிறங்கி தோற்றங்கள் ஒவ்வொன்றுக்குள்ளும் இறங்கி நடந்து கொண்டிருக்கிறார். 

– 1986

– கடலும் கரையும் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூன் 1996, நண்பர்கள் வட்டம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *