கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: June 20, 2025
பார்வையிட்டோர்: 611 
 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

செந்நிறமான சிறுவீடு ஒன்று இருந்தது. அதில் ஒரு சிறுவன் தனியாக வாழ்ந்து வந்தான். அந்தச் சிறுவன் பெயர் நம்பி. 

அவனிடம், பால் கறக்காத பசு ஒன்று இருந்தது; முட்டை இடாத பெட்டைக்கோழி ஒன்று இருந்தது; குரைக்காத நாய் ஒன்று இருந்தது. இம்மூன்றும் அவனுடன் வாழ்ந்து வந்தன. 

இவற்றுள் ஒன்றாவது அவனுக்குப் பயன்பட வில்லை. ஆகையால், அவனுக்கு இது ஒரு குறையாக இருந்தது. 

ஒரு நாள் நம்பி பசுவை அணுகி, “கருநிறப் பசுவே! கருநிறப் பசுவே! எனது காலை உணவுக்காக நீ எப்போதும் பால் கறப்பதில்லையே. அது ஏன்?” என்று கேட்டான். 

“அந்தச் சிறு வெண்பேடை எப்போது முட்டை யிடுமோ, அப்போது நான் உனது உணவுக்காகப் பால் கறப்பேன்,” என்று அது மறுமொழி கூறிற்று. 

நம்பி பெட்டைக்கோழியை அணுகினான்; அணுகி, “சிறு வெண்பேடையே! சிறு வெண் பேடையே ! நீ எப்போதும் முட்டை இடுவதில்லையே. அது ஏன்?” என்று வினவினான். 

“அந்த நெடுங்கால்நாய் எப்போது இரவிலும் பகலிலும் குரைக்குமோ, அப்போது நான் முட்டை இடுவேன்,” என்று அது மறுமொழி கூறிற்று. 

உடனே, நம்பி நாயை அணுகினான்; அணுகி, “நெடுங்கால்நாயே! நெடுங்கால்நாயே! யாராவது இவ்வழியாகச் சென்றால் இரவிலும் பகலிலும் நீ குரைப்பதே இல்லையே. அது ஏன்?” என்று வினவினான். 

“குரைக்கும் இயற்கையை நான் இழந்து விட்டேன்; அதுதான் காரணம் என்று நினைக்கின்றேன்,” என்று நெடுங்கால்நாய் மெல்லிய குரலில் கூறிற்று. 

“அந்தோ! அப்படியா ! நீ அன்புடன் குரைப் பாயானால், அப்போது சிறு வெண்பேடை முட்டை இடுமே; கருநிறப் பசு பால் கறக்குமே,” என்று நம்பி வருத்தத்தோடு கூறினான். 

“ஒரு மந்திரக்காரியின் மாயப் புகை வேண்டும்; அந்தப் புகையை நான் உட்கொள்ள வேண்டும்; அவ்வாறு செய்தால், நான் குரைக்க முடியும். இது தான் எனக்குத் தெரிந்த வழி,” என்று நாய் மெல்லிய குரலில் சொல்லிற்று. 

“மந்திரக்காரியின் மாயப்புகையே வேண்டுமா?”

“ஆம், ஆம், மந்திரக்காரியின் மாயப் புகையே வேண்டும். மற்றப் புகையால் பயன் இல்லை”. 

“அப்படியானால், நான் அதை உலகம் எங்கும் தேடிக் கண்டுபிடித்தல் வேண்டும். அன்புள்ள நாயே! நீயும் என்னுடன் வருதல் வேண்டும்,’ என்று நம்பி கூறினான். 

“உன்னுடன் வரவேண்டும் என்பதே என் விருப்பம்; உன்னுடைய அன்புக்காக நன்றி செலுத்துகின்றேன்”, என்று நாய் மெல்லிய குரலில் சொல்லிற்று. 

அந்த ஏற்பாட்டின் படியே, நம்பி புறப்படலானான்; வீட்டிற்குள் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி விட்டான்; கதவைத் தாழிட்டான்; புல்லும் நீரும் நிறைந்த வயலில் கருநிறப் பசுவை மேயவிட்டான்; சிறுவெண்பேடைக்காக, நெல், கேழ்வரகு முதலிய வற்றை நிரம்ப வைத்தான்; நெடுங்கால் நாயைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு புறப்பட்டான். 

நம்பி நெடுந்தூரம் நடந்தான். பகல் கழிந்தது; இரவு வந்தது. நம்பியும் களைப்பு அடைந்தான்; நாயும் களைப்பு அடைந்தது. 

அப்போது, வெண்ணிறமான சிறு வீடு ஒன்று தென்பட்டது. அவ்வீட்டில் சமையற்காரி ஒருத்தி இருந்தாள். அன்று இரவு அந்த வீட்டில் தங்கி உறங்கலாம் என்று நம்பியும் நாயும் எண்ணினார்கள். நம்பி இதைப்பற்றிச் சமையற்காரியைக் கேட்டான். 

“நீங்கள் அவ்வாறே செய்யலாம். இதோ இந்த அறையைத் தூய்மையாகப் பெருக்கிவிட்டுப் படுத்துக் கொள்ளலாம்,” என்று சமையற்காரி கூறினாள். 

அந்த அறையில் புழுதி மிகுதியாக இருந்தது. அதை, நம்பி ஒரு துடைப்பம் கொண்டு பெருக்கினான்; ஆனால், புழுதி போகவில்லை. அவன் மேலும்மேலும் பெருக்கினான்; பெருக்கப் பெருக்க, புழுதி மிகுதியாகிக் கொண்டே வந்தது. 

“இது என்னவோ! தெரியவில்லை. இது ஏதோ மாயமாக இருக்க வேண்டும்,” என்று நம்பி சினந்து கூறினான்; தன் கையில் இருந்த துடைப்பத்தை வீசி எறிந்தான். 

“தலைவனே! பொறு, பொறு. நான் முயற்சி செய்து பார்க்கிறேன். என்னால் முடியும் என்று எண்ணுகிறேன்,” என்று நாய் மெல்லிய குரலில் மொழிந்தது. 

ஆனால் அந்த நாய் என்ன செய்தது தெரியுமா? அது துடைப்பங்கொண்டு பெருக்கவில்லை. தலையைத் தரைமேல் வைத்து வாயால் ஊதிற்று, ஊதிற்று, விடாமல் ஊதிற்று. 

புழுதி இங்கும் அங்குமாகப் பறந்தது; அறையைச் சுற்றி எங்கும் பறந்தது. சிறிது நேரத்தில் புழுதி இல்லாமற் போயிற்று. அறை தூய்மை ஆயிற்று. 

பிறகு, நம்பியும் நாயும் படுத்து உறங்கினார்கள்; விடியற்காலையில் எழுந்தார்கள். அறை சிறிதும் புழுதி இல்லாமல் தூய்மையாக இருப்பதைச் சமையற்காரி கண்டாள்; கண்டு மகிழ்ந்தாள். 

சமையற்காரி நம்பிக்கும் நாய்க்கும் சிற்றுண்டி அளித்தாள்; நம்பிக்கு அடையும் வடையும் அளித்தாள்; நாய்க்கு ஆப்பமும் கறியும் அளித்தாள்; நம்பியும் உண்டு மகிழ்ந்தான்; நாயும் தின்று மகிழ்ந்தது. 

பிறகு சமையற்காரி அவர்களை நோக்கி, “இந்த அறையில் ஏதோ மாயம் இருந்தது.இதனை யாராலும் பெருக்கித் தூய்மை செய்யமுடியவில்லை. உங்களால் முடிந்தது. இனிமேல் இந்த அறை தூய்மையாக விளங்கும். உங்கள் உதவியைப் பாராட்டுகிறேன். உங்களுக்கு நான் ஏதேனும் கைம்மாறு செய்ய முடியுமானால், மகிழ்ச்சியுடன் செய்வேன்,” என்று கூறினாள். 

“மந்திரக்காரியின் மாயப்புகை எங்களுக்கு வேண்டும். நாங்கள் அதைத் தேடிக்கொண்டு வந்திருக்கிறோம்,” என்று நம்பி கூறினான். 

“அப்படியானால், நான் ஒன்று சொல்லுகிறேன்; கேளுங்கள். என்னுடைய தங்கை ஒருத்தி இருக்கிறாள். அவளிடம் செல்லுங்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும். இதோ, இந்த வழியாகச் செல்லுங்கள்; பிறகு, வலப்புறமாகத் திரும்புங்கள்; அங்கிருந்து தெற்கு நோக்கிச் செல்லுங்கள்; பிறகு நேராக நடவுங்கள். அங்கே, செந்நிறமான சிறு வீடு ஒன்று தென்படும். அதுதான் என் தங்கை வீடு,” என்று அவள் கூறினாள். 

நம்பியும் நாயும் அவ்வாறே புறப்பட்டுச் சென் றார்கள்; அந்த வழியாகச் சென்று, பிறகு வலப்புற மாகத் திரும்பி, அங்கிருந்து தெற்கு நோக்கிச் சென்று, பிறகு நேராக நடந்தார்கள். அங்கே அந்தச் செந்நிற மான சிறு வீடு தென்பட்டது. 

அங்கே சமையற்காரியின் தங்கையைக் கண்டார்கள். அவளுடைய வீட்டிலும் ஓர் அறையில் புழுதி ஒழியாமல் இருந்தது. அதைப் பெருக்கித் தூய்மை செய்துவிட்டால், அங்கே நம்பியும் நாயும் தங்கியிருக்கலாம் என்று அவள் கூறினாள். 

“நாங்கள் அவ்வாறே செய்வோம். நீ எங்களுக்கு ஓர் உதவி செய்யவேண்டும். மந்திரக்காரியின் மாயப் புகையைப் எப்படிப் பெறமுடியும்? இதை நீ எங்களுக் குச் சொல்லவேண்டும்,” என்று நம்பி வேண்டினான். 

இதைக் கேட்டதும், அவள் கோபம் கொண் டாள்; சொல்ல முடியாது என்று மறுத்துவிட்டாள். பிறகு, அதைச் சொல்லாவிட்டால், அந்த அறையை அவர்கள் பெருக்க மாட்டார்களே என்று அவள் எண்ணினாள்; எண்ணி, அதைப்பற்றிச் சொன்னாள். 

“குன்றுக்கு மேற்கே, குளத்துக்கு அப்பால், 
வேலியைக் கடந்து, புறம்போக்கை அடுத்து,
வளைந்து சென்று, வடக்கே நோக்கினால்,
காணலாம் புகையைக் கண்ணால்” என்றாள்.

பிறகு, நாய் தரையில் படுத்துக்கொண்டு, புழுதியை ஊதிற்று. அறை தூய்மை ஆயிற்று. நம்பியும் நாயும் இரவெல்லாம் உறங்கினார்கள். 

காலையில் எழுந்த பிறகு, சமையற்காரியின் தங்கை அவர்களுக்கு உணவு அளித்தாள். உணவு உண்டதும் அவர்கள் புறப்பட்டார்கள். குன்றுக்கு மேற்கே,குளத்துக்கு அப்பால், வேலியைக் கடந்து, புறம்போக்கை அடுத்து, வளைந்து சென்றார்கள்; வடக்கே நோக்கினார்கள். 

அவர்கள் காலையில் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்தார்கள்; சமையற்காரியின் தங்கை வீட்டிற்கே வந்து சேர்ந்தார்கள். செந்நிறமான சிறு வீடுதான் அங்கே இருந்தது. 

“அவளே மந்திரக்காரியாக இருக்கவேண்டும்.” என்று நெடுங்கால்நாய் மெல்லிய குரலில் கூறிற்று. 

நம்பி வியப்படைந்தான். “இது வரைக்கும் இதைத் தெரிந்துகொள்ளாமல் இருந்துவிட்டோமே! அதோ, புகை தெரிகிறதே! இதோ, இந்த வழியாகப் போ; கொஞ்சம் மேலே ஏறு; அந்தப் புகையை உட்கொள்ளுவாய்,” என்று அவன் நெடுங்கால் நாய்க்குக் கூறினான். 

நெடுங்கால்நாய் மேலே ஏறிற்று; ஏறியதும் புகையை உட்கொண்டது; உட்கொண்டதும், “வவ், வவ், ளொள், ளொள், ளொள்,” என்று உரக்கக் குரைத்தது; மெல்லிய குரலை இழந்தது; குரைக்கும் இயற்கையைப் பெற்றது. 

“இனி, நாம் வீடு திரும்பலாம்,” என்று நம்பி கூறினான்; நாயுடன் புறப்பட்டான்; வீட்டின் வாயிலை அணுகினான். அணுகியதும், பெட்டைக் கோழி முட்டை இடும் ஒலி கேட்டது. 

“கிளக், கிக், கிக், கிளக், தலைவனே! தலைவனே! இதோ, நான் முட்டை இட்டேன்,” என்று சிறு வெண்பேடை கூறிற்று. 

கருநிறப்பசு சுவரின்மேல் தலையைச் சாய்த்துக் கொண்டே, “ம்மா, ம்மா, தலைவனே! தலைவனே! இதோ, உனது உணவுக்காகப் பால் கறக்கிறேன்,” என்று கூறிற்று. 

நம்பி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான். நாள் தோறும் சிறுவெண்பேடை முட்டை இட்டது; கருநிறப்பசு பால் கறந்தது; நெடுங்கால்நாய் இரவிலும் பகலிலும் வழியில் போகிறவர்களைக் கண்டு குரைத்தது. 

எல்லோருக்கும் வாழ்க்கை இன்பமாக இருந்தது. 

– கழகக் கதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: ஜனவரி 1951, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *