மாண்புமிகு கம்சன்
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 28, 2024
பார்வையிட்டோர்: 2,286
(1995ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6
அத்தியாயம்-3
மறுநாள் காலை பிரபு ஆராய்ச்சிக்கூடத்துக்கு வந்த போது அங்கு ஏற்கெனவே பாலுவும் சாலமனும் தங்கள் வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.
தான் கவனிக்க வேண்டிய சில ஃபைல்களைப் பார்த்துவிட்டு பிரபு மற்றவர்கள் இருந்த இடத்துக்கு வந்தார்.
அந்த இடம் நீண்ட ஓர் அறை. அறையின் இரண்டு பக்கத்திலும் சுவரையொட்டி பளபளக்கும் கருங்கல் மேசைகள்.
ஒரு பக்கம் சிறிய கூண்டுகள் வரிசையாக அடுக்கப் பட்டிருந்தன. கூண்டுகள் சிலவற்றில் எலிகள் அங்கு மிங்கும் ஓடிக்கொண்டிருந்தன; எலிகளின் எடைக்கேற்ப கூண்டுகள் வகைவகையாய்ப் பிரிக்கப்பட்டிருந்தன. மற்ற கூண்டுகள் காலியாய் இருந்தன. மறுபக்க சுவரையொட்டி இருந்த மேசைமேல் நிறைய கண்ணாடிக் குடுவைகள்- பலவித அளவுகளில் இருந்தன. சிலவற்றில் அளவுக்குறிக் கேற்ப திரவங்கள்; மற்றும் சிலதில் திரவங்கள் கொஞ்சமே இருந்தன். எல்லாமே பார்ப்பதற்கு தண்ணீர் போல இருந்தது. ஒவ்வொரு கண்ணாடிக் குடுவையின் மேல் எண்களும் ஆங்கில எழுத்துக்களும் எழுதப்பட்டிருந்தன. எது எது என்னென்ன என்று பார்த்ததும் சுலபமாக அங்கிருப்போர் தெரிந்துகொள்ள வேண்டி ‘லேபிள்’ ஒட்டப்பட்டிருந்தது. அவ்வளவையும் கவனமாகத் தயாரிக்க வேண்டியது பாலு, சாலமன் இருவரின் பொறுப்புகளில் ஒன்று. அன்றும் அவர்கள் அதையே முதல் வேலையாகச் செய்து கொண்டிருந்தனர்.
பிரபு கூண்டுகளிலிருந்த எலிகளைப் போய்ப் பார்த்தார். அவற்றில் இரண்டு கூண்டுகள் அவருடைய கவனத்தை மிகவும் ஈர்த்தது. அவர் முகம் அளவில்லாத திருப்தியைக் காட்டியது. தன்னுடைய நாநூறு பக்கப் பருமனுள்ள குறிப்புப் புத்தகத்தில் எலிகளின் உடலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை ஒன்றுவிடாமல் குறித்துக் கொண்டார். தான் செய்யும் பரிசோதனைகள் வெற்றி யடைய வேண்டுமென்றால், அவற்றில் தான் கவனிக்கும் எல்லாவற்றையும் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை எந்த விஞ்ஞானிதான் மறக்க அல்லது மறுக்க முடியும்? இதையே பிரபு அடிக்கடி தன் இளம் விஞ் ஞானிகளுக்கும் சொல்வார். கல்லூரி, பள்ளி இப்படி எங்கேயாவது பேச அழைத்தார்களானாலும் இதை ஒரு முக்கியக் கருத்தாக இளம் மாணவ மாணவியருக்குச் சொல்வார். விஞ்ஞான முன்னேற்றத்துக்கு முக்கிய காரணம் விஞ்ஞானியின் கூர்மையான கவனிக்கும் திறன் என்பதில் பிரபுவுக்கு என்றுமே சந்தேகமில்லை.
குறிப்புப் புத்தகத்தை மூடி பையில் வைத்துக் கொண்டு பாலு, சாலமன் இருக்குமிடம் சென்றார். வழியில் மற்றும் சில விஞ்ஞானிகளும், ‘டெக்னிஷியன்’ களும் பிரபுவுக்குப் பாராட்டுச் சொல்லி வாழ்த்தி னார்கள். பிரபுவுக்கு அந்த ஆராய்ச்சிக் கூடத்தில் எந்த அளவு மதிப்பும் மரியாதையும் இருந்தது என்பதற்கு அதுவே அத்தாட்சி என்பதுபோல தோன்றியது.
“குட் மார்னிங் டாக்டர் பாலு, டாக்டர் சாலமன்” பிரபு உற்சாகமாக அவர்களை அணுகினார்.
“குட் மார்னிங் சார்” என்று இருவருமே ஒரே சமயத்தில் சொன்னதும் பிரபு சிரிப்பை அடக்கிக் கொள்ள வேண்டியதாயிற்று.
“சீக்கிரமே வந்துவிட்டீர்கள் போல இருக்கே” பிரபு திருப்தியுடன் பேசினார்.
“இன்று முக்கிய பரிசோதனையின் முதல் கட்டம்னு சொன்னீங்களே. அதற்கான எல்லாவற்றையும் தயாரித்து வைக்க வேண்டாமா? அதற்காகத்தான் ஒரு மணி நேரம் முன்னாலேயே வந்தோம்” என்று பாலு சொன்னான்.
“இன்னும் ஆறு ‘சொலூஷன்’ செய்துவிட்டால் இந்த வரிசை முடிந்துவிடும்” என்று சாலமன் முடித்தான்.
“பரவாயில்லையே! அப்ப நான் இன்னக்கிக் காலையிலேயே பரிசோதனையைத் தொடங்கிடலாம் போல இருக்கே” பிரபுவின் உற்சாகம் அங்கிருந்தவர் களுக்கு ஊக்க மூட்டியதற்கு இது போன்ற பேச்சும் காரணமாயிருந்தது. இது பிரபுவுக்கே உரிய குணம். ‘நீ இதைச் செய், நீ அதை சரியாகச் செய்’ என்று உத்திரவுகள் போடாமல், தன்கூட வேலை செய்பவர்கள் கேட்கும்படி தன் விஞ்ஞான ஈடுபாட்டை, ஆர்வத்தை அடிக்கடி வெளியிடுவார்.
“சார், இன்னொரு விஷயம்” சாலமன் ஆரம்பித்தான்.
“என்ன, டாக்டர் சாலமன்?” பிரபு கேட்டார்.
“நேற்று பாராட்டு விழாவில் என்னையும் பாலு வையும் அறிமுகப்படுத்தி வைச்சீங்களே அதுக்கு நாங்க ரொம்ப நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கோம்.” சாலமன் குரலில் கொஞ்சம் உணர்ச்சி கூடியது.
“இது என்ன பேச்சு? நீங்கள் நமது ஆராய்ச்சிகளுக்கு எவ்வளவு உதவி செய்கிறீர்கள். ‘கோ-சயின்டிஸ்ட்’ என்றால் சும்மாவா? சீக்கிரமே உங்கள் இருவருக்கும் தனியாக ஒரு பாராட்டு விழாவை நானே ஏற்பாடு செய்யலாம்னு இருக்கேன். இப்போது நாம் தொடங்கும் பரிசோதனைகளின் முடிவு தெரிந்ததுமே ஏற்பாடைச் செய்யலாம்னு இருக்கேன்” பிரபு தன் மனத்தில் பட்டதை அப்படியே சொன்னார்.
“என்ன சொல்றதுன்னே தெரியலை, சார்… உங்களை ஒன்று கேட்கலாமா?” பாலு கேள்விக்குறியில் நிறுத்தினான்.
“தாராளமாகக் கேட்கலாமே..”
“இப்போது எந்த மாதிரி பரிசோதனை ஆரம்பிக்கிறீங்க?”
“டாக்டர் பாலு, அதைப்பற்றி நான் இப்போது சொல்வது சரியில்லையே. நமக்குக் கிடைத்திருக்கும் மத்திய அரசின் பண உதவி பற்றி உங்களுக்குத் தெரியும். அந்த உதவி கிடைப்பதற்கு நாம் பட்டபாடும் தெரியும். அதில் ஒரு ‘கண்டிஷன்’ இந்த ஆராய்ச்சியின் தன்மை, முடிவு எல்லாம் கடைசி வரை அதாவது ரிப்போர்ட் வெளியாகும் வரை – நாம் யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாதவை. எனக்கு மத்திய அரசிலிருந்து நேரடியாகத் தகவல் இதுபற்றி வந்துள்ளதே. அதனால்தான் பார்க் கிறேன். ஆனால் உங்கள் இருவருக்கும் இதில் முக்கிய பங்கு உண்டு. இது நிச்சயம்” என்று பிரபு முறையாக விளக்கியதும் பாலு, சாலமன் மேலே ஒன்றும் பேச முடியவில்லை.
பிரபு மீண்டும் தன் குறிப்புப் புத்தகத்தை எடுத்து அதில் எழுத ஆரம்பித்தார். பாலு சாலமன் இவர்கள் தயாரித்திருந்தவைகளைப் பற்றி எல்லாக் குறிப்புகளையும் அட்டவணையில் பதித்துக் கொண்டார். இருவருக்கும் நன்றி சொல்லிவிட்டு, அங்கிருந்த ‘டெக்னிஷியன்’ ஒருவனிடம் போய் ஆரம்பிக்கவிருந்த பரிசோதனைக்கான இருபது எலிகளைக் கூண்டில் வைக்க ஏற்பாடு செய்தார். ‘பத்து ஆண் எலிகள்; பத்து பெண் எலிகள். இரண்டு கூண்டுகள் வேண்டும். ஒவ்வொன்றையும் இரண்டு பகுதியாகப் பிரிக்க நடுவில் தடுப்பு. பிரித்த கூண்டில் ஒரு பக்கம் ஐந்து ஆண் எலிகள்; மறு பக்கம் ஐந்து பெண் எலிகள். சரியா? மற்றபடி வழக்கமான தயாரிப்பு” பிரபு முடித்துவிட்டு தன் அறைக்குத் திரும்பினார்.
பிரபு பார்வையிலிருந்து மறைந்ததும், பாலுவும் சாலமனும் ஆராய்ச்சிக்கூடத்திலிருந்து வெளியே வந்தனர்.
சாலமன் ஒரு சிகரட்டைப் பற்ற வைத்தான்.
“ஏண்டா பாலு, ஆள் அசையமாட்டான் போல இருக்கே?” சாலமன் ‘ஆள்’ என்று குறிப்பிட்டது பிரபுவைத்தான் என்பதில் பாலுவுக்கு ஒரு ‘கிக்’.
“எனக்கு ஒரே ஒரு வழிதான் தெரியுது.”
“என்ன?”
“அவன் எல்லாத்தையும் குறிப்புப் புத்தகத்திலே எழுதி எழுதி வைக்கிறானே அந்தப் புத்தகத்தை ஒரு தரம் எடுத்துகிட்டு போய் ‘ஜெராக்ஸ்’ செய்துகிட்டா நமக்கு எல்லா விவரமும் தெரிஞ்சிடும்.”
“ஐடியா நல்லா இருக்கு. ஆனா அவன் அதை எப்பவும் தன் கைப் பையிலேயே வைச்சிக்கிறானே?” சாலமன் வருத்தப்பட்டான்.
“பார்ப்போம். நமக்குன்னு ஒரு நல்ல சந்தர்ப்பம் வராமலா போயிடும்” பாலுவின் நம்பிக்கை சாலமனுக்குத் தெம்பூட்டியது.
“இன்னொரு விஷயம்டா பாலு” சிகரெட் புகையைச் சுருள் சுருளாக விட்டான் சாலமன்.
“சொல்லு… நீதான் புகை விடறதிலே கெட்டிக்காரனாச்சே.”
“இப்ப நாம தயார் செய்துகிட்டு இருக்கோமே அந்த கெமிக்கல் என்ன தெரியுமில்லே?” சாலமன் நிறுத்தினான்.
“என்னடா ரொம்ப சஸ்பென்ஸ் மாதிரி? ஏன் தெரியாது? அது ‘மேலதயான்’ போல வாடை அடிக்குதே… அதானே?” பாலு விட்டுக் கொடுக்கவில்லை.
“கரெக்டா சொல்லிட்டியே பாலு. அது ‘மேலதயான்’ என்பதில் சந்தேகமேயில்லை. ‘அமெரிக்கன் சயனமிட்’ கம்பெனிதான் அமெரிக்காவுலே இதைத் தயாரிக்குது. இதை வைச்சு நிறைய ஆராய்ச்சி செய்திருக்காங்கன்னு நான் படிச்சிருக்கேன்”. சாலமன் தொடர்ந்தான்.
“அப்படின்னா ‘மேலதயான்’ எப்படிப்பட்ட பூச்சிக் கொல்லின்னு ஏற்கெனவே தெரிஞ்சதுதானே. இதையேன் பிரபு ஆராய்ச்சிக்கு எடுத்துக்கணும்?” பாலுவுக்குப் புரியவில்லை.
“அங்கேதான் ரகசியமே அடங்கியிருக்கு. ‘மேலதயான்’ தயாரிப்புகளை வைச்சி எலிகள் மூலம் என்ன கண்டு பிடிக்கப் போறான் இந்த ஆள்?”
“அதை நாம தெரிஞ்சக்கணும்னா அவன் ‘ரிசர்ச் நோட்ஸ்’ எல்லாம் நம்ம கைக்கு வரணும்” பாலு தீர்மானித்துவிட்டான்.
பிரபுவின் ஆபீஸ் பெரிய அறையாக இருந்தது. அறைவாசலை அவர் பார்க்கும்படியாக அவருடைய மேசை, வசதியான ‘குஷன் சேர்’ என்று களையுடன் இருந்தது. சுவரில் பிரபுவின் பட்டப் பத்திரங்கள் அழகாக மாட்டப்பட்டிருந்தன. அவர் சில பிரமுகர்களுடன் பெரிய எடுத்துக்கொண்ட படங்கள் இருந்தன. ஒரு ‘கோத்ரெஜ்’ ஃபைல் கேபினட் முக்கிய விவரங்களைப் பாதுகாக்க வைக்கப்பட்டிருந்தது.
பிரபுவின் இடது பக்கத்தில் ஒரு கம்ப்யூட்டர், பிரிண்டர் என இத்யாதி ஆபீஸ் விவரங்கள். பிரபு அடிக்கடி கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவார் – பயன்படுத்தாத நாளே இல்லையென்றுகூட சொல்லலாம். ஆராய்ச்சி அறையிலிருந்து எடுத்து வரும் குறிப்புகள் அனைத்தையும் கம்ப்யூட்டரில் போட்டு, ‘டிஸ்கில்’ பதித்து வைத்துவிடுவது அவர் வழக்கம். குறிப்புப் புத்தகம், ‘டிஸ்க்’குகள் அனைத்தையும் கவனமாகக் காக்க வேண்டியது பெரும் பொறுப்பு. அவை காணாமல் போனாலோ, திருடப்பட்டாலோ அத்தனை ஆராய்ச்சியும் பயனில்லாமல் போய்விடும். ஏன்- ஆராய்ச்சிக்கூடத் தையே மூட வேண்டி வருமே!
அன்று காலையும் அறைக்குத் திரும்பியதும் காபிக்குச் சொல்லிவிட்டு, கம்ப்யூட்டரைத் துவக்கினார். கேபினட்டில் பூட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு ‘டிஸ்’கை எடுத்து அதில் அன்றைய விவரங்களைப் பதிவு செய்ய ஆரம்பித்தார்.
ஆராய்ச்சியை எப்படிச் செய்ய வேண்டும், எந்தக் கட்டத்தில் எந்தப் பரிசோதனைகள் செய்தால் என்னென்ன முடிவுகளை எதிர்பார்க்கலாம் என்பதையும் விவரமாக ஏற்கெனவே குறிப்பிட்டு இருந்தார். ‘டிஸ்க்’கின் முதல் பாகத்தில் அது இருந்தது. அதை ஒரு ‘காபி’ பிரிண்ட்டில் எடுத்துக் கொண்டார். ஆராய்ச்சி அறையில் மும்முரமாக வேலை செய்யும்போது அடிக்கடி ஓடிவந்து கம்ப்யூட்டரில் பார்ப்பது சாத்தியமில்லை. ‘பிரிண்ட்’டான தாள்களை குறிப்புப் புத்தகத்தில் வைத்து, அதைக் கைப்பையில் வைத்துக்கொண்டார். கம்ப்யூட்டர் டிஸ்க்கை வெளியே எடுத்துவிட்டு, கம்ப்யூட்டரை நிறுத்தினார். அப்போது அவருடைய காரியதரிசி பானு உள்ளே நுழைந்தாள்.
“சார்… ரிப்போர்டர் நீலான்னு ஒரு பெண் போனில் இருக்காள்- உங்களைப் பார்த்துப் பேசணுமாம்… எப்ப வரச் சொல்லலாம்?”
தன்னுடைய காலண்டரைப் பார்த்தார். அந்த வாரம் அதிக நேரமிருப்பதாய்த் தெரியவில்லை. தள்ளிப் போடுவதைவிட அன்றே முடித்துவிடலாம் என்ற தீர்மானத்துடன், “நீலாவை இன்னக்கி நாலு மணிக்கு வரச் சொல்லிடு… இன்னக்கித் தவறினால் அடுத்த வாரம்தான். சரியா?” பானு வெளியேறினாள்.
காலண்டரில் பகல் 4-00 மணிக்கு எதிரே ‘நீலா’ என்று குறித்துக் கொண்டார்.
பிரபு மீண்டும் ஆராய்ச்சி அறைக்குப் போனபோது பாலு, சாலமன் வேலைகளைச் சீராக முடித்திருந்தார்கள். பிரபுவுக்குத் தேவையான எல்லாம் வழக்கமான மேசையில் வைக்கப்பட்டிருந்தன. பாலுவுக்கு வேறொரு வேலை கொடுத்துவிட்டு, சாலமனைத் தன்னுடன் அழைத்துச் சென்றார் பிரபு.
“சாலமன், அந்த ‘பிரபரேஷனை’ எடுத்து அதிலிருந்து இரண்டு மில்லிமீட்டர் இதிலே போடுங்க. நல்லா கலந்துட்டு, நூறு மைக்ரோ லிட்டர் ‘சிறிஞ்’களில் ஐந்து தயார் செய்யுங்க” என்று கடகடவென்று சொன்னார்.
அடுத்த இருபது நிமிடங்களில் பிரபு கேட்ட நூறு மைக்ரோலிட்டர் அளவுகளைத் தயார் செய்து அவரிடம் தந்தான் சாலமன்.
ஒரு கூண்டிலிருந்த ஐந்து ஆண் எலிகள் ஒவ்வொன் றிற்கும் நூறு மைக்ரோ லிட்டர் அளவான திரவத்தைச் செலுத்தினார் டாக்டர் பிரபு. தன் குறிப்புப் புத்தகத்தில் எழுதிக்கொண்டார். சாலமன் அந்தக் குறிப்புப் புத்த கத்தைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
பிரபு அங்கிருந்து வேறொரு எலிக் கூண்டுக்குப் போய் சில விவரங்களை எழுதிக் கொண்டார். ஒரு டெக்னிஷியனிடம் ஏதோ கேட்டார். அவன் காட்டிய திசையில் பிரபு நடந்தபோது, பிரபுவின் காரியதரிசி பானு ஆராய்ச்சி அறைக்குள் நுழைந்தாள். அவளுடைய நடையில் ஒரு வேகம். ஏதோ அவசரமாகச் சொல்ல வேண்டி பிரபுவைத் தேடினாள்.
பாலு அவளைப் பார்த்துவிட்டு, “பானு, ஏன் இப்படி அவசரமா ஓடி வர்றே? டாக்டர் பிரபுவைப் பார்த்து ஏதாவது சொல்லுணுமா?”
“ஆமாம், டாக்டர் பாலு… அவர் எங்கே இருக்கார்னு தெரியுமா?”
“என்கிட்டே சொல்லேன்… நானே அவரைப் பார்த்துச் சொல்லிடறேன்.”
“அதுவும் சரிதான்… நான் உடனே ஆபீசுக்குத் திரும்பணும்… டாக்டர் பிரபுவைப் பார்க்க மாலதின்னு ஒரு பெண் வந்திருக்காங்க. உடனே பார்க்கணுமாம். பார்க்காம போகமாட்டாங்களாம். இதுதான் செய்தி” பானு பதிலுக்குக் காத்திராமல் திரும்பி ஆபீசை நோக்கி நடந்தாள்.
‘சரி சொல்லிடறேன்’ என்று பாலு சிறு குரலில் தனக்கே சொல்லிக் கொண்டான்.
அடுத்த சில நிமிடங்களில் அங்கு வந்த டாக்டர் பிரபுவை பாலு கூப்பிட்டு நிறுத்தினான்.
“என்ன பாலு? எல்லாம் சரியாத்தானே போய்க்கிட்டு இருக்கு?”
“எனக்கு எல்லாம் சரியாத்தான் போய்க்கிட்டு இருக்கு, டாக்டர் பிரபு. உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி. யாரோ மாலதின்னு ஒரு பெண் உங்களைப் பார்க் கணும்னு உங்க ஆபீஸ்லே காத்துகிட்டு இருக்காங்களாம்.”
பிரபு பதில் சொல்லவில்லை. பேசும் நிலையில் அவர் இல்லை. மாலதி இத்தனை உறுதியுடன் தன்னைப் பார்க்க வரவேண்டிய காரணம் என்ன என்பதை அவர் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அவர் முகத்தில் வியர்வைத் துளிகள் பளபளத்தன. சிரித்த முகம் வாடியது. பாலுவை ஒருமுறை பார்த்தார். எதுவுமே பேசாமல் தன்னுடைய அறைக்கு விரைந்தார்.
பாலுவுக்கு அந்தக் காட்சி ஒருவித திருப்தியைத் தந்தது. பிரபு ஏதோ ஒரு விஷயத்தில் சிக்கிக்கொண் டிருப்பதாக ஊகித்தான். உடனே சாலமன் வேலை செய்து கொண்டிருந்த இடத்துக்குப் போனான்.
“சாலமன், பிரபு விஷயம் தெரியுமா?”
“என்னடா பாலு அதுக்குள்ளயா? ‘மேலதயான்’ ஆராய்ச்சியைப் பத்தி நீ கண்டுபிடிச்சுட்டியா?”
“அதைவிட சுவாரசியமான விவரம் ஒண்ணைக் கண்டுகிட்டேன்.”
“அப்படியா… எனக்குச் சொல்ல நாள் பாத்துகிட்டு இருக்கியா?”
“பிரபுவைத் தேடி மாலதின்னு ஒரு பெண் வந்திருக்காளாம். பிரபுவிடம் சொன்னதும் ஆள் வியர்த்துக் கொட்டி ஓட ஆரம்பிச்சான் தெரியுமா?”
“தெரிஞ்சுகிட்டேன்” சாலமன் கிண்டலாகச் சொல்லிச் சிரித்தான்.
“அப்ப, நான் நினைக்கிறதைத்தான் நீயும் நினைக் கிறியா?”
“நீ நினைக்கிறது எனக்குத் தெரியாது… நான் என்ன நினைக்கிறேன்னா… பிரபு ஏதோ சிக்கலிலே மாட்டியிருக்கான்.
“அதைத்தான் நானும் நினைக்கிறேன், சாலமன்.”
“நம்ப இரண்டு பேர் மூளையும் ஒரே மாதிரி வேலை செய்யுதே..என்ன பொருத்தம் பாருடா பாலு” என்று சாலமன் சொன்னதும் பாலு சிரித்தான்.
“அப்ப நாம பிரபு அறைப்பக்கம் போய் வரலாமா?” என்று கண்ணடித்தான் சாலமன்.
பிரபு அறைக்குள் நுழைந்ததும் அங்கு உட்கார்ந் திருந்த மாலதி சட்டென்று எழுந்து நின்றாள்.
பிரபுவும் மாலதியும் ஒருவரை யொருவர் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டனர். அப்போது அங்கு வந்த பானுவின் குரல்கள் அவர்களை இந்த உலகத்துக்கு அழைத்தது.
“நான் என்ன சொல்லியும் இவங்க கேக்காம தீர்மானமாய் இங்கேயே உக்காந்திட்டாங்க, சார்” பானு அழாத குறைதான்.
“பரவாயில்லை பானு… நீ எதுவும் செய்திருக்க முடியாது” என்று பிரபு சொன்னதும் பானு தன்னிடத்துக்குத் திரும்பினாள். பானுவின் பெருமூச்சு பிரபுவின் காதில் துல்லியமாக விழுந்தது.
“என்னாலேயே ஒன்றும் செய்ய முடியவில்லையே” என்று தன்னையே நொந்து கொண்டார்.
“ஹலோ, மாலதி” என்றார் சுருக்கமாக.
“ஹலோ, பிரபு” மாலதியும் அதே பாதையில் தொடர்ந்தாள்.
“இத்தனை வருஷத்துக்கப்புறம் என்ன இப்படி?” “காரணத்தோடதானே வந்திருக்கேன், பிரபு.”
“அப்படியென்ன காரணம் மாலதி?”
“காரணத்துக்குப் பெயர் கோபு… வயசு ஒன்பது… உங்கள் பையன்.”
மாலதியின் சொல் ஒவ்வொன்றும் பிரபுவைத் துளைத்தது. அவர் கையிலிருந்த குறிப்புப் புத்தகத்தை மேசைமேல் போட்டார். தடுமாறி ஒரு நாற்காலியில் உட்கார்ந்தார். அவருக்குத் தலை சுற்றியது. காட்சிகள் வேகமாச் சுழன்றன. சாந்தி… பையன், பெண்… மாலதி… மாலதியின் பையன் கோபு… இல்லை பிரபுவின் பையன் கோபு… பிரபுவின் இன்னொரு பையன் கோபு… பிரபு கைகளால் தன் தலையைப் பிடித்துக் கொண்டார்.
அத்தியாயம்-4
பாலுவும் சாலமனும் பிரபுவின் அறை முன் வாசலை அடைந்தபோது உள்ளே பானு உட்கார்ந் திருப்பது தெரிந்தது. பாலுவை வெளியே நிற்கும்படி சொல்லிவிட்டு சாலமன் மட்டும் உள்ளே நுழைந்தான்.
“பானு, டாக்டர் பிரபுவைப் பார்க்கணுமே” என்றான் சாலமன்.
“இப்போது அவர் யாரிடமோ பேசிக்கொண்டிருக் கிறாரே. நீங்கள் வந்ததாய்ச் சொல்லட்டுமா?”
“எப்போது பார்க்க முடியும்?”
“கேட்டுத்தான் சொல்ல வேண்டும். ஒண்ணு செய்யலாமா? நான் லஞ்சுக்குப் போவதற்கு முன்னால் வந்து சொல்லிவிட்டுப் போறேனே” என்றாள் பானு.
அவர்கள் பேசிக்கொண்டேயிருக்கும் போதே பிரபுவும் மாலதியும் வெளியே வந்தனர். அங்கு சாலமன் நின்றிருப்பதைப் பிரபு பார்த்ததும் அவர் முகம் மாறியது.
“என்ன சாலமன், என்னிடம் ஏதாவது பேச வேண்டுமா?”
“ஆமாம் டாக்டர் பிரபு… நான் பிறகு வந்தால் நல்லதுன்னு நினைக்கிறேன்” என்றான் ஒருமுறை மாலதியைப் பார்த்துவிட்டு.
பிரபு சில வினாடிகள் மௌனமானார். மாலதி மெல்ல நகரத் தொடங்கினாள்.
“நான் நேராக ‘லாப்’பில் வந்து உங்களிடம் பிறகு பேசுகிறேன். பரவாயில்லையா?” பிரபு தன் அவசரத்தை உணர்த்தினார்.
“அப்படியே செய்யலாம் சார்” சாலமன் விடை கொடுப்பதுபோல் சொன்னான்.
பிரபு மாலதியைப் பின்தொடர்ந்து காரை நோக்கி இருவரும் சென்றார்கள். பிரபு ஒருமுறை திரும்பிப் பார்த்தபோது யாரும் தன்னைக் கவனிக்கவில்லை என்று தெரிந்தது. காரில் மாலதி உட்கார்ந்ததும் பிரபு காரைக் கிளப்பி கட்டடத்துக்கு வெளியே வலதுபுற சாலையில் ஓட்டினார். அந்தப் பகுதியைத் தாண்டி எங்கேயாவது போய் லஞ்சு சாப்பிட்டுக்கொண்டே மாலதியிடம் விவரம் பேசவேண்டும் என்ற துடிப்பில் அவர் வழக்கத்தைவிட கொஞ்சம் வேகமாகவே ஓட்டினார்.
பாலு தான் ஒளிந்திருந்த புதரின் மறைவிலிருந்து வெளியே வருவதற்கும் சாலமன் பிரபுவின் முன் அறையிலிருந்து வரவும் சரியாக இருந்தது.
“சாலமன், அந்த மாலதியை காரில் ஏத்திகிட்டு ஐயா சவாரி போயிட்டார்டா.”
“பாலு, அவன் போன வேகத்தைப் பார்த்தா விஷயம் பெரிசு போல இருக்கு… அவன் எப்போ வருவான்னு தெரியலை… ஒருவேளை…”
“ஒருவேளை அவன் ‘ரிசர்ச் நோட்புக்’ உள்ளேயே வைச்சுட்டுப் போயிருப்பானோ… இதைத்தானே சொல்ல வர்றே.”
“ஆமாம்… வழக்கமான கைப்பையை அவன் எடுத்துகிட்டுப் போகலையே” சாலமன் குறிப்பாகச் சொன்னான்.
“அப்படின்னா நாம் இப்பவே ‘நோட்ஸ்’ எடுத்துகிட்டு போய் ஜெராக்ஸ் செஞ்சிடலாமா?” பாலுவின் ஆர்வம்தான் எவ்வளவு!
“வேண்டாம்… அவன் திடீர்னு வந்துட்டா ரொம்ப தகராறு ஆயிடும்.. பானு வெளியே லஞ்சுக்குக் கிளம்பிகிட்டு இருக்கா. நாம் ஏதோ சாக்குபோக்கு சொல்லி பிரபு அறைக்குள்ளே போயிடுவோம்… முடிஞ்சவரை படிப்போம்… யார் உள்ளே வந்தாலும் சமாளிக்கலாமே” சாலமன் முடித்தபோது பாலு அவனுடைய தோளில் தட்டினான். ‘அடடா என்ன கச்சிதமான திட்டம்டா” என்று பாலு புகழ்ந்தான்.
“சரி, சரி வா உள்ளே போவோம்” என்று தன் பையில் சுருட்டி வைத்திருந்த சில தாள்களை வெளியே எடுத்துக்கொண்டே மீண்டும் பானு இருந்த அறையில் நுழைந்தான்.
பானு தன்னுடைய வண்ணக் கைப்பையை எடுத்துக் கொண்டு புறப்பட ஆரம்பித்தாள்.
“பானு, இந்தத் தாள்களை என்னை அவருடைய மேசையில் வைக்கச் சொன்னார். கொஞ்சம் நோட்ஸ் எழுதச் சொல்லிட்டுப் போனார்” என்றான் சாலமன்.
“நான் இப்போ வெளியே போகணுமே.”
“அதனால் என்ன பானு, நாங்களே அறையைப் பூட்டிடறோம்… உள்ளே எல்லாம் பூட்டிதானே இருக்கு” என்று பாலு சாதாரணமாகச் சொன்னான்.
“நான் பாத்துட்டு வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே போன பானு சில நிமிடங்களில் வெளியே வந்தாள். “சரி… நீங்க வேலையை முடிச்சிட்டு அவருடைய அறையைப் பூட்டி சாவியை இங்கே வைச்சிடுங்க” என்று ஓர் இடத்தைக் காட்டினாள்.
“நிச்சயம், பானு, அப்படியே உன் அறைக்கதவையும் சாத்திடறோம், சரியா?” என்றான் சாலமன்.
“தேங்க்ஸ்… நான் இரண்டு மணிக்குள் வந்துடுவேன். பிரபுவும் வந்துடணும்; அவரைப் பார்க்க ஒருத்தர் வர்றாங்க” என்று சொல்லிக்கொண்டே பானு அறையை விட்டுப் போனாள்.
அவள் பார்வையிலிருந்து மறையும்வரை காத் திருந்துவிட்டு பாலு, சாலமன் இருவரும் பிரபுவின் அறைக்குள் நுழைந்தனர்.
பிரபுவின் மேசைமேல் அவருடைய கைப்பை இருந்தது! அதில் பருமனான அந்தக் குறிப்புப் புத்தகமும் இருந்தது!
பாலுவும் சாலமனும் எம்பிக் குதிக்காத குறைதான்.
“பாலு கதவைச் சாத்திவிடு” என்று சாலமன் எச்சரித்தது நல்லதாகப் பட்டது. கதவு சாத்தப்பட்டது.
சாலமன் குறிப்புப் புத்தகத்தை மட்டும் வெளியே எடுத்தான். அதைத் திறந்தபோது சில தாள்கள் கம்ப்யூட்டர் பிரிண்ட் அவுட்டுடன் இருந்தவை – அவன் கவனத்தைக் கவர்ந்தன. அவற்றை எடுத்துக்கொண்டு, குறிப்புப் புத்தகத்தை பாலுவிடம் தந்தான்.
பாலு குறிப்புப் புத்தகத்தை ஒவ்வொரு பக்கமாகப் புரட்டினான். அதில் நிறைய அட்டவணைகளும், பாலு- சாலமன் தயாரித்த ‘பிரபரேஷன்’ விவரங்களும் இருந்தன. அதிகமாக ஒன்றும் ஆராய்ச்சி பற்றி எழுதப்படவில்லை. பாலுவுக்கு ஆர்வம் குறைந்து ஓரிரு முறைகள் ‘ஹும்’ என்றுகூட முனகினான். கடிகாரம் மணி 1-15 என்று காட்டியது. இன்னும் அரை மணிக்குள்ளாவது வெளியே ஓட வேண்டும். இது ஆபத்தில் முடியக்கூடிய திருட்டுச் செயல் என்று பாலுவுக்கு பயம் எடுக்கத் தொடங்கியது.
சாலமன் கம்ப்யூட்டர் தாள்களை ஒன்றுவிடாமல் படிப்பதில் தன்னை மறந்து ஈடுபட்டிருந்தான். பிரபு சுருக்கமான, ஆனால் நல்ல குறிப்புகளை வைத்திருந்தார். ‘மேலதயான்’ என்கிற பூச்சிக்கொல்லி பற்றிய தற்போதைய ஆராய்ச்சித் திட்டங்கள் விவரமாக, படிப்படியாக அவைகளில் இருந்தன. பாலுவும் சாலமனும் தேடிய விவரம் அவர்களுக்கு இவ்வளவு விரைவில் கிடைக்கும் என்று சாலமன் அன்று காலை நினைக்கக்கூட இல்லை.
“பாலு.. பாலு… இங்கே பார்…” என்று கூவி பாலு இருக்குமிடம் சாலமன் பார்த்தபோது பாலு அங்கே இல்லை. சாலமன் திடுக்கிட்டு எழுந்தபோது அவனுடைய தலை பாலுவின் முகவாயில் ‘டக்’ என்று இடித்தது. பாலுவும் சாலமனின் பின்புறமாகக் குனிந்து நின்று கம்ப்யூட்டர் தாள்களைப் படித்துக் கொண்டிருந்தான்.
“அம்மாடி… உன் தலை ரொம்ப கனமானது சாலமன்” என்று தன் முகவாயைப் பிடித்துத் தடவிக்கொண்டே உட்கார்ந்தான் பாலு.
“உன் முகவாய் எலும்பு மட்டும் என்ன பஞ்சால் செய்ததா?” என்று சாலமன் தலையைத் தடவிக் கொண்டே கம்ப்யூட்டர் தாள்களை பாலுவிடம் நீட்டினான்.
“நானும் ஏற்கெனவே நிறையப் படிச்சிட்டேன்… முன் பகுதியை மட்டும் பார்க்கிறேன், கொடு” என்று பாலு அந்தத் தாள்களை வாங்கினான்.
சில நிமிடங்களில் பாலு படித்து முடித்தான். சாலமனின் முகத்தைப் பார்த்தான்.
“சாலமன், நமக்குக் கிடைக்க வேண்டியது கிடைச் சாச்சு… இதை மட்டும் ‘ஜெராக்ஸ்’ எடுக்க முடியலே யேன்னுதான் வருத்தம்” பாலு உண்மையிலேயே வருந்தி னான்.
“பாலு… இப்ப நாம படிச்ச இந்த ஆராய்ச்சிக் குறிப்புகளிலேருந்து என்ன நிச்சயமாகுது தெரியுமா?”
“நான் சொல்றேன்… சரியான்னு பாரு.” பாலுவும் சாலமனும் பேசிக்கொண்டதைப் பார்த்தால் அவர்கள் கல்லூரியில் தேர்வுகளுக்கு முன்னால் விஞ்ஞானம் படித்தபோது ஒருவரையொருவர் எப்படி ‘டெஸ்ட்’ செய்துகொண்டார்களோ அதுபோல் இருந்தது.
பாலு தொடர்ந்து பேசினான். “மேலதயான்’ என்கிற பூச்சிக்கொல்லியை எலிக்குக் குறிப்பிட்ட அளவிலே உணவில் கொடுக்கும்போது சில மாற்றங்கள் ஏற்படு கின்றன.”
“எலிக்கா, மருந்துக்கா?” என்றான் சாலமன் சிரித்துக் கொண்டே.
எலியின் எடை குறைகிறது; மில்லிகிராம் அளவில் கொடுக்கும்போது எலியின் வளர்ச்சியும் தடைபடுகிறது. குறிப்பாக, ஆண் எலிகள் பாதிக்கப்படும். அவைகளின் தைராய்டு சுரப்பியின் வேலை தடுக்கப்படுகிறது… சரிதானே” பாலு நிறுத்தினான்.
“அது சரிதான்… நீ ஏன் இவ்வளவு உரத்த குரலில் பேசுகிறாய்” என்று சாலமன் கொஞ்சம் கோபமாகவே கேட்டான்.
“ஐம் சாரி சாலமன்… ஆராய்ச்சிக் குறிப்புத்தாள்கள் கிடைத்ததும் எனக்கு ‘எக்சைட்மெண்ட்’ அதிகமாயிடுச்சு” இன்னும் உரக்கப் பேசினான் பாலு.
“நீ முக்கிய விவரம் ஒன்றை இந்த குறிப்புகளிலேருந்து தெரிஞ்சுக்கலையா?” சாலமன் கேட்டதும் பாலு விழித்துக் கொண்டான்.
“என்ன அது சாலமன்? நானும்தான் படிச்சேனே.”
“சொல்லட்டுமா? ஆண் எலிகளின் உயிரணுக்கள் எண்ணிக்கையில் குறையலாம் என்பது முக்கிய விளைவு இல்லையா?” சாலமனின் குரலும் ஏறியது.
“அதனால் என்ன? எலிப் பெருக்கம் குறையும்” என்று பெரிதாகச் சிரித்தான் பாலு.
சாலமனும் சிரித்துவிட்டு, “மேலதயான்’ பூச்சிக் கொல்லிக்கு இப்படிப் பலவித ‘எஃபக்ட்’ இருக்குன்னு எனக்கு இன்னிக்கித்தான் தெரியும்.”
“இதைத்தான் பிரபு ரொம்பப் பெரிய விஷயம்னு சொல்லிகிட்டு திரியறானோ?” என்றான் பாலு அலட்சியமாக.
“இருக்காது… பிரபுவை நீ ரொம்ப சாதாரண விஞ்ஞானின்னு நினைத்துப் பேசறதை விட்டுடு… அவன் நிறைய விஞ்ஞான அறிவுடையவன்… அதிலே எனக்கு சந்தேகமேயில்லை.”
“சரி, சாலமன்… மணி ஒண்ணே முக்கால். நாம் மரியாதையாய் வெளியே போயிடணும்” என்று பாலு துரிதப்படுத்தினான். சாலமன் தாள்களை குறிப்புப் புத்தகத்தில் முன்னிருந்தபடியே வைத்துவிட்டு, புத்தகத்தைப் பையில் வைத்தான். இரண்டு பேரும் மாற்றி மாற்றி பெருமூச்சு விட்டார்கள். பிரபுவின் அறைக் கதவைத் திறந்து வெளியே வந்தபோது அங்கே நீலா உட்கார்ந்திருந்தாள்!
பாலு, சாலமன் இருவரும் திடுக்கிட்டனர். ‘இவள் எங்கே இப்போது வந்தாள்? யாரோ வரப் போவதாய் பானு சொல்லிவிட்டுப் போனாளே. அது நிருபர் நீலா தானா? அடக்கடவுளே! நாம் பிரபுவின் அறையிலிருந்து வருவதை இவள் பார்த்துவிட்டாளே!’ என்று அவர்கள் ஒன்றுபோல நினைத்தது ஒவ்வொருவரின் முகத்திலும் தெரிந்தது.
“ஹலோ, டாக்டர் பாலு, டாக்டர் சாலமன்… நான் டாக்டர் பிரபுவைப் பார்க்க வந்தேன். நீங்க இரண்டு பேரும் இங்கே இருப்பது இன்னும் நல்லதாய்ப் போச்சு”
“ஏன்? எதுக்கு?” பாலு கொஞ்சம் தடுமாறினான்.
“டாக்டர் பிரபுவை ஒரு பேட்டி எடுக்க வந்தேன். நீங்களும் ஏதாவது இங்கே நடக்கிற ஆராய்ச்சிகள் பற்றிச் சொன்னால் இன்னும் நல்ல கட்டுரையா எழுத முடியும்” நீலா தொடர்ந்தாள்.
“டாக்டர் பிரபுவே எல்லாம் சொல்லிடுவாரே மேடம்… நாங்க வேறே எதுக்கு?” சாலமன் நழுவப் பார்த்தான்.
“நேற்றைய பாராட்டு விழாவில் உங்கள் இருவரைப் பற்றியும் டாக்டர் பிரபு புகழ்ந்து சொன்னாரே… ஆனால் நீங்கள் இவ்வளவு அடக்கமானவர்கள்னு எனக்குத் தெரியாதே… நிச்சயம் உங்கள் உதவி இல்லாமல் டாக்டர் பிரபு இந்த அளவு வெற்றிகரமான ஆராய்ச்சிகளைச் செய்ய முடியுமா என்ன?” அளவாக ஆங்காங்கே பாலுவுக்கும் சாலமனுக்கும் தூண்டுதலைத் தந்தாள் நீலா,
“நீங்க சொல்றதும் ஒரு விதத்துலே சரிதான்… டாக்டர் பிரபு செய்த, செய்துவரும் ரிசர்ச் பிராஜக்ட்டிலே எங்களுக்கும் பெரிய பொறுப்பு, பங்கு உண்டு…” என்று பாலு ஆரம்பித்தான்.
“இதுவரை எத்தனை ‘ரிசர்ச் ஆர்ட்டிகிள்’ நீங்க மூன்று பேரும் எழுதியிருக்கீங்க?” நீலா குறிப்பாகக் கேட்டாள்.
“ஏழு எழுதி அனுப்பி, அதிலே நாலு ஏற்கெனவே வெளியாயிடுச்சு… வெளிநாட்டு ஜர்னல்களில் மூன்றும், இந்தியாவில் ஒன்றும் வந்திருக்கு” சாலமன் விவரம் சொன்னான். அதற்குள் பாலு நீலாவின் அடுத்த சீட்டில் உட்கார்ந்திருந்தான். சாலமன் நின்றுகொண்டே பேசினான்.
“உங்கள் ஆராய்ச்சி எல்லாம் பூச்சிக்கொல்லி மருந்துகள் பற்றினவையா?”
“தொண்ணூறு சதவீதம் அதுபோல்தான்” பாலு முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டே சொன்னான்.
“இப்ப எந்த பிராஜக்ட்டிலே இருக்கீங்க? ஒரே நேரத்துலே மூணு, நாலு பிராஜக்ட்ஸ் டாக்டர் பிரபு செய்வார்னு நான் கேள்விப்பட்டேன்.” நீலா அவசரமில்லாமல் குறிப்பெடுத்துக் கொண்டே கேட்டாள்.
“இப்ப நாங்க மூணு பிராஜக்ட்ஸ்லே ஈடுபட்டிருக் கோம்.” சாலமன் சுருக்கமாகவே சொன்னான்.
“முக்கியமாக ‘மேலதயான்’ என்கிற பூச்சிகொல்லி பற்றின ரிசர்ச்தான் ரொம்ப மும்முரமாய் நடக்குது” என பாலு முடிக்குமுன், சாலமன் குறுக்கிட்டு, “அதைப் பற்றியெல்லாம் நீங்க நேரடியாக டாக்டர் பிரபுவிடம் கேட்கிறது நல்லது… இல்லையா பாலு?” என்றான்.
பாலுவுக்கு முகம் மாறியது. சட்டென்று எழுந்து புறப்பட்டான். “எங்களுக்கு வேலையை முடிக்கணும். நாங்க சொன்ன ‘இன்பர்மேஷன்’ உபயோகமாக இருக்கும்னு நினைக்கிறேன்” என்று முடித்தான் சாலமன்.
அவர்கள் அறையைவிட்டு வெளியே வந்ததும் அங்கே போட்டோகிராபர் மூர்த்தி நின்றிருந்தான். அவன் காமிரா சகிதம் இருந்ததைப் பார்த்ததும் பாலுவுக்குக் கொஞ்சம் சபலம் தட்டியது. அதைத் தெரிந்துகொண்டவன் போல் மூர்த்தியும், ‘உங்க இரண்டு பேரையும் ஒரு போட்டோ எடுத்துக்கலாமா? செய்திக் கட்டுரை எழுதும் போது அதைச் சேர்த்துப் போட்டா நல்லா இருக்கும்” என்றான்.
பாலு, சாலமன் இருவரும் ‘போஸ்’ கொடுக்க, மூர்த்தி ஒன்றுக்கு இரண்டாகத் தட்டிக் கொண்டான்.
“ரொம்ப தேங்க்ஸ்… டாக்டர்ஸ்” என்று மூர்த்தி சொன்னதும் பாலு, சாலமன் தங்கள் ஆராய்ச்சி அறையை நோக்கி நடந்தார்கள்.
மூர்த்தி உள்ளே திரும்பியதும் நீலா, “மூர்த்தி… அந்த இரண்டு பேரும் இவ்வளவு நேரம் டாக்டர் பிரபுவின் அறையிலே இருந்தாங்க தெரியுமா?”
“நாமே அரைமணிக்கு முன்னால்தானே வந்தோம்.”
“வந்ததும் நீ சிகரெட் பிடிக்க வெளியே போயிட்டே. நான் இங்கே உட்கார்ந்துகிட்டு இருந்தபோது உள்ளே யிருந்து குரல்கள் கேட்டன. இது ‘இன்வெஸ்டிகேடிவ் ரிப்போர்ட்டிங்’ இல்லையா?”
“அதனாலே கொஞ்சம் ஒட்டுக் கேட்டியா?” என்று மூர்த்தி சிரித்தான்.
“ஆமாம்… கேட்டது நல்லதாப் போச்சு… பாலு உரத்த குரலிலே பேசினதெல்லாம் காதிலே விழுந்தது. சாலமன் சொன்னது அரைகுறையாய் விழுந்தது. ஆனால் விவரம் புரிஞ்சிடுச்சு” என்றாள் நீலா.
“அப்ப… டாக்டர் பிரபுவிடம் அதிகமாகப் பேச வேண்டாம். ஆபீசுக்கு நாம் நேரத்தோட திரும்பலாம் இல்லையா?” மூர்த்தி கேட்டுக் கொண்டான்.
பானு லஞ்சிலிருந்து திரும்பியதும் நீலா ஏற்கெனவே அங்கு மூர்த்தியுடன் காத்திருப்பதைப் பார்த்தாள்.
“நான்தான் ரிப்போர்ட்டர் நீலா… இது போட்டோ கிராபர் மூர்த்தி.. “சென்னை செய்தியிலிருந்து வருகிறோம். கொஞ்சம் சீக்கிரமே வந்துட்டோம்… பரவாயில்லையா?” என்றாள் நீலா.
“அதனாலென்ன… மணி இரண்டாயிடுச்சே. டாக்டர் பிரபு வர்ர நேரம்தான்… அடடே அவருடைய அறைக்கதவு திறந்திருக்கிறதே” என்று பானு பதற்றப்பட்டாள்.
‘இப்போதுதான் டாக்டர் பாலு, டாக்டர் சாலமன் இரண்டு பேரும் இங்கிருந்து போனார்கள். அவர்கள் டாக்டர் பிரபுவின் அறையிலிருந்துதான் வந்தார்கள்’ என்று சொல்லத் துடித்தாள் நீலா. அப்போது மூர்த்தி அவள் நோட்டு புத்தகத்தில் மெல்லத் தட்டினான். அவன் முகத்தைப் பார்த்த நீலா புரிந்து கொண்டாள்.
“நாங்கள் வந்தபோது கதவு திறந்துதான் இருந்தது. யாரும் உள்ளே போகவோ வெளியே வரவோ இல்லை” என்றான் மூர்த்தி.
“அப்படின்னா அவங்க இரண்டு பேரும் கவனக் குறைவாத்தான் பூட்டாமப் போயிருப்பாங்க” என்று பானு சொல்லிக்கொண்டே பிரபுவின் அறைக்குள் போனாள். அங்கு எல்லாம் இருக்கவேண்டிய நிலையில் இருக்கிறதா என்று பார்த்தாள். அப்போதுதான் மேசைமேல் இருந்த டாக்டர் பிரபுவின் கைப்பையும், பையுனுள் குறிப்புப் புத்தகமும் அவள் கண்ணில் பட்டது.
‘ஐயையோ! ரிசர்ச் ரெக்கார்டை பிரபு மறந்து இங்கேயே வைச்சிட்டாறே. நானும் கேபினட்டில் அதை வைச்சுப் பூட்டலையே’ என்று அவசரமாக அதை எடுத்து உள்ளே வைத்துப் பூட்டினாள். தன்னுடைய பொறுப்பில் தவறியதற்காகத் தன்னையே திட்டிக கொண்டாள். ‘இன்னக்கி எனக்கு ரொம்ப மோசமான நாள்… வேலைக்கே வந்திருக்கக் கூடாது’ என்று முணுமுணுத்துக் கொண்டே பிரபுவின் அறைக்கதவைச் சாத்திக்கொண்டு வெளியே வந்தாள்.
நேரம் நகர்ந்து கொண்டேயிருந்தது. மூர்த்தியும் அரை பாக்கட் சிகரெட்டுகளை ஊதியாயிற்று. நீலாவோ அங்கிருந்த ‘பாப்புலர் சயின்ஸ்’ போன்ற பத்திரிகையைப் புரட்டியாயிற்று. பிரபு வந்தபாடில்லை. மணி நாலரை யாயிற்று.
“நாம புறப்படலாம் நீலா… இன்னொரு நாள்தான் இண்டர்வியூ” என்றான் மூர்த்தி. அவன் சொல்வதை ஆமோதிப்பதைப் போல நீலாவும் எழுந்து பானுவிடம் விடை பெற்றாள். இருவரும் கட்டடத்தை விட்டு வெளியே வந்தனர்.
அப்போது பிரபு வெளியே ஒரு பக்கமாய் காரை நிறுத்தியிருந்தது தெரிந்தது. மாலதியும் பிரபுவும் பேசிக் கொண்டிருந்தனர். மாலதி கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தாள். இதைப் பார்த்த நீலாவும் மூர்த்தியும் பிரபுவின் பார்வையில் படாமல் நகர்ந்தனர். பிரபுவுக்கு என்ன பிரச்சினையோ!
– தொடரும்…
– கல்கி வார இதழ் 14.5.1995 ல் தொடங்கி 30.7.1995 வரை பன்னிரண்டு இதழ்களில் தொடராக வந்தது.
– மாண்புமிகு கம்சன் (விஞ்ஞான நாவல்), முதற்பதிப்பு: 2014, வானதி பதிப்பகம், சென்னை.