மாணவியா?!… மனைவியா..?!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 20, 2018
பார்வையிட்டோர்: 6,325 
 
 

நவீன் கல்லூரி ஓய்வறையைவிட்டு கடைசியாக வெளியே வந்த போது வாசலில் காயத்ரி. இவனுக்குள் லேசான மின்னதிர்ச்சி.

அவளுக்குள்ளும் சின்ன சங்கடம், சங்கோஜம்.

”…..நா..நான் உங்ககூட கொஞ்சம் பேசனும்…..” தட்டுத்தடுமாறி மென் குரலில் சொன்னாள்.

நவீனுக்குள் இவள் என்ன பேசப்போகிறாள் ?! என்பது புரிந்தது. அது நேற்று நடந்தக் கதை.

அன்னபூரணி மகன் நவீனுக்குச் சல்லடைப் போட்டு பெண் தேடுகிறாள். அது என்னவோ இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் மாப்பிள்ளைக்குப் பெண் கிடைப்பதென்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. பெண் சிசுக்களையெல்லாம் கருவிலேயே அழித்துவிட்டார்களா? இல்லை…. பிறந்ததும் கள்ளிப்பால் கொடுத்து கொன்று விட்டார்களா? இல்லை முடிவாய்.. பெண் பிள்ளைப் பிறப்பையே தடை செய்து விட்டார்களா?… தெரியவில்லை. அவ்வளவு தட்டுப்பாடு.

அன்னபூரணி திருமணத் தகவல் மையத்தில் சாதகம் வாங்கி, பொருத்தம் பார்த்து, விலாசம் விசாரித்துக் கொண்டு மகனை அழைத்துக் கொண்டு சரியாகத்தான் போனாள்.
பெண் முகம் தெரியாதவரை யாரோ எவரோ என்று அமர்ந்திருந்த நவீனுக்கு ஆளைப் பார்த்ததும்தான் அதிர்ச்சி. இவன் வகுப்பு மாணவி. குப்பென்று வியர்வை. அடுத்த விநாடி… இவனுக்கு அங்கு இருக்கப் பிடிக்காத இம்சை. நெருப்பின் மேல் அமர்ந்திருப்பது போல் ஒரு தகிப்பு.

இவ்வளவிற்கும் காயத்ரி முகத்தில் அதிர்வோ அதிர்ச்சியோ இல்லை. அவள் அலங்காரத்தில் தாயுடன் வந்து சாதாரணமாக நின்று சென்றாள்.

அவள் தலை மறைந்த அடுத்த நொடி எழுந்தான்.

அன்னபூரணி, ”போய் பதில் சொல்றோம் !”  சொல்லி  கிளம்பினாள்.

வீட்டிற்கு வந்து, ”அவள் என் மாணவி. மனைவியாய்ப் பார்க்க முடியலை, முடியாது !” திட்டவட்டமாகத் தாயிடம் தெரிவித்தான். அவளும் அதை அப்படியே பெண் வீட்டிலும் உடன் சொல்லி விட்டாள்.

இதோ அவள் !

”சரி வா.” எதிரே உள்ள பூங்காவை நோக்கி நடந்தான்.

இவளும் தொடர்ந்தாள். எதிர் எதிர் சிமெண்ட் இருக்கையில் அமர்ந்தார்கள்.

”நேரடியாவே விசயத்துக்கு வர்றேன். நீங்க மறுப்பு சொன்னதுக்கு நிஜக்காரணம்…நீங்க சொன்னதுதானா இல்லே…. என்னைப் பிடிக்கலையா ?” ஏறிட்டாள்.

”நான் சொன்னதுதான் சரியான காரணம். ராத்திரி முழுக்க… எப்படி யோசிச்சும் முடியலை. மனசுல உன் உருவத்தை என் உருவததுக்கு அருகில் நிறுத்திப் பார்த்தும் முடியலை. ”

”நன்றி. உங்களை வாசல்ல பார்த்ததும் எனக்கும் அப்படித்தான் மின்னல். குப்புன்னு வியர்வை. என் அம்மா, ‘என்ன? என்னடி?’ அதட்டினாங்க. உண்மையைச் சொன்னேன். ‘இதுக்கா பயம், வியர்வை.!? இப்போ அவர் உனக்கு மாப்பிள்ளை,  நீ மணப்பெண். இந்த நிலையில் மனசை வைச்சு இரு, பாரு.  பிடிச்சிருக்கா பிடிக்கலையா  சொல்லு ?’ ன்னு அந்த பிரச்சனைக்கு ரொம்ப சுலபமா தீர்வு சொன்னாங்க. மனசு தெளிவாய் ஆகிடுச்சு. அப்படியே வந்தேன், நின்னேன், போனேன். உங்க பதில்ல நீங்களும் இதே குழப்பத்திலேதான் இருக்கீங்க தெரிஞ்சுது.  என் தெளிவை உங்களுக்குத் தெரியப்படுத்தத்தான் இப்போ இந்த சந்திப்பு.” நிறுத்தினாள்.

நவீன் பேசவில்லை. முகத்தில் யோசனை.

”இதுவரை வந்த வரன்கள் எல்லாம் எனக்கு அறிமுகம் இல்லாதது. முன்பின் பார்க்காதவங்க. நீங்க அறிமுகம். குணநலமும் தெரியும். எனக்குப் பிடிச்சிருக்கு. கல்லூரி பாடத்தைச் சொல்லிக் கொடுக்கும் உங்க கிட்ட வாழ்க்கைப் பாடமும் படிக்க விருப்பம். என் விருப்பத்தைச் சொல்லிட்டேன். உங்களுக்கு மனசு மாறலைன்னாலும் வருத்தப்படமாட்டேன். கிளம்பறேன்.” எழுந்தாள்.

”நன்றி காயத்ரி. நீ போ. நான் நம்ப கலியாணப்பத்திரிக்கையோட வீட்டுக்கு வர்றேன்” என்றான்  நவீன் தெளிவாக.

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *