மழை பெய்தும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 8, 2025
பார்வையிட்டோர்: 73 
 
 

(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ராத்திரி ஊர்முழுதும் தட்டான்கள் கண்டபடி குருட்டுத் தனமாய்ப் பறந்தன. ஈசானத்தில் விட்டு விட்டு மின்னல்கள் மேகத்தைக் கிழித்தன. காற்று வாசங்கொண்டு மாறிமாறி அடித்தது. ஆகாச நிலைமை பூமி இருப்பு எல்லாம் மாறி வந்து கொண்டி ருந்தன. மேகத்தைப் பார்த்து நிதானிக்க முடியாமல் ஆட்கள் காடு காட்டுக்குப் பேசிக் கொண்டிருக்கை யில் குப்பு பிள்ளை சொன்னார்: “விடியிறதுக்குள்ளெ மழை பெய்யும். ரெண்டு வருசக் கஞ்சியைச் சேத்துக் குடிக்கலாம்டா பயகளா”. 

விடியுமுன்னால் நிதானமாய் ஆரம்பித்தது. முதல் தூறலின் மெல்லிய சத்தத்திலும் வாசனையிலும் அநேகமான பெண்கள் எழுந்து வாசலைத் திறந்து வைத்தார்கள். ரெண்டு வருஷங் கழித்து முதல் முறை யாக இன்று மேகம் அவர்களுக்காக வாசல் தெளிக்கிறது. 

உலகம்மா வாசலைத் திறந்து விட்டு கையை நீட்டி மழையை வாங்கியதும் அடுத்த வீட்டைப் பார்த்து சத்தம் கொடுத்தாள், 

“ராமுத்தாயீ!”. 

அடுத்த வீட்டிலிருந்து மறு சத்தம் வந்தது, “நான் எந்திருச்சி ரொம்ப நேரமாச்சு” விசேஷங்களின் போது காலையில் எழுந்து வாசலுக்கு வந்தவள் போல் நின்றாள். 

எல்லா வீட்டு வாசல்களிலும் முடிச்சு முடிச்சாய்த் தலைகள் அசைந்தன. மாடுகளை அவிழ்த்துத் தொழுவங்களுக்கு, இழுக்கும் ஆம்பிளைகள் சத்தம் தெருப் பூராவும் கேட்டது. கூம்புக் கூடைகளுக்குள் கிடந்த கோழிகளும் சேவல்களும் செட்டைகளை அடித்து ஓசை கிளப்பின. கிழவிகள் காலை நீட்டித் திண்ணைகளில் உட்கார்ந்து புகையிலைக் கட்டை களை வாய்க்குள் சொருகினார்கள். உமிழ்நீர் கலக்கி உற்சாகமாய்க் கன்னங்களுக்குக் கொண்டு போனார் கள். அந்த இருட்டு எல்லார் மனசுகளிலும் வெளிச்சம் போட்டது. ஒவ்வொரு மின்னலின்போதும் வீடுகளில் குவியலாக ஆள்கள் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. 

விடியும் போது நிதானமாகவும் அழுத்தமாகவும் மழை பெய்து கொண்டிருந்தது. ஊரின் அசுத்தங்கள் கரைந்து இதமான வாசனையானது. ஊர் மணம் விடிகாலையில் நாசிகளில் நிறைந்தது. உலகம் பூராவும் மழை பெய்து காண்டிருப்பது போல் மழை ஓசை மற்ற எல்லா உலக சப்தங்களையும் அமுக்கப் பேரிரைச்சலாய்க் காதுகளில் வந்தது. 

கண்மாய், கரை, வயல், வரப்பு, திடல், திட்டு, ஊருணி, வாய்க்கால், தெரு, தொழுவம், மரம், செடி, குப்பைமேடு, லாந்தர் கம்பம் எல்லாவற்றின் மேலும் பொழிகிறது மழை. கொடிக் கயிறுகளில் முத்து முத்தாய் ஊர்வலம் போகிறது. மரக்கிளை களும் இலைகளும் வாங்கி வைக்க இடமில்லாமல் மன மின்றி அடிக்கொரு தரம் உதிர்த்து விட்டன. வானத் திலிருந்து சரஞ்சரமாயிறங்கி வேகம் வேகமாய் ஒன்றுசேர்கின்றன. சின்னச் சின்ன  வாய்க்கால் களாய் சுயமாக உடனுக்குடன் வடிவம் பெறு கின்றன. ரெண்டு வருஷங்கழித்து வந்ததில் ரொம்ப வெட்கப்பட்டு வேகம் வேகமாய் திசை தெரியாமல் ஓடுகின்றன. கூடில்லாப் பறவைகள் ஈரஞ்சோர்ந்த மயிற்கற்றையோடு பாரமாகி விட்ட இறகுகளை உலுப்பிக் கிளைமாறி உட்கார்ந்தன. 

கூரைவீட்டுக் காரர்கள் ஏணங்களைத் தூக்கி ஒழுக்கு விழும் இடங்களில் வைக்கிறார்கள். அப்படியும் பல ஒழுக்குகள் தரையில் குழி பறிக்கின்றன. தரையும் வீடுகளும் சொதசொதவென்று ஆகத் துவங்கின. கூரை ஒழுக்குகள் பிள்ளைகளை உசுப்பி விட்டன. 

கண்ணைக் கசக்கக் கூட நேரமில்லாமல் விழித் தெழுந்த பிள்ளைகள் மழை முகம் பார்க்கத் தாழ் வாரங்களுக்கு ஓடி வந்தன. கூரை மூலையில் கை நீட்டி உள்ளங்கை நிறைய பழுப்பு நீரை வாங்கி விரல் இடுக்குகளில் ஒழுக விட்டுக் கொண்டிருந் தான் ஒருவன்: கொஞ்ச நேரந்தான். எதிர் வீட்டுக் கூரையடியில் கை நீட்டி மழை வாங்கும் சேக்காளி யோடு சேர மழையிலும் பெருமிதத்திலும் நனைந்து கொண்டே ஓடுகிறான். 

ஒருவன் ஓட ஆரம்பித்ததும் அநேக பையன்கள் இப்படி ஓடி நனைவதும் வீட்டிற்குள் போய் அம்மா மாரிடம் வசவு வாங்குவதுமாயிருந்தார்கள். ரெண்டு வருஷமாய் ஒரு சிலேட்டுக் குச்சி வாங்கக் காசு கேட்டாலும் “மழையுமில்லெ, தண்ணியுமில்லெ. மூதி. பகுசி கொலையுது,” என்று ஏசியதை ஓடி நனைந்து பரிகாசமாக்கினார்கள். 

நன்றாய் விடிந்து விட்டது. நிதானத்திலிருந்து மழை பிறழவில்லை. ஓசையில் பிசிறில்லை. விடியாத பொழுதைப் போல் மந்தாரம் பூமியில் கவிழ்ந்து கிடந்தது. ஆம்பிளைகள் கூரை யடியில் குனிந்து மேகக் கூரு பார்த்தார்கள். தலையில் துண்டுகளைப் போட்டுக் கொண்டு வெளியில் நனைந்து வானத்தை அண்ணாந்தார்கள். பொட்டு வெள்ளையில்லை. பெரு மூச்சுகளுடன் வீடுகளுள் வந்து ஈரம் துடைத் தனர். வீடுகளும் தரையும் மேலும் மேலும் ஈர மாகிக் கொண்டிருந்தன. 

ராமையா தாழ்வாரத்தில் கிடந்த மண்வெட்டிக் கணையைத் தடவினார். சோப்புக் கட்டியைப் போல் வழு வழுவென்றிருந்தது. பனையங் காட்டுப் புஞ்சை யில் பனித் தூத்தல் விழுந்து பயிர் ஒரு சாண் வளர்ந்து விட்டது. காட்டோடை இவர் புஞ்சையைத் தொட்டுக் கொண்டு ஓடுகிறது. புஞ்சை வாமடையைத் திறந்து வைத்து ரொம்ப நாளா கிறது. நேற்று சாயங்காலங் கூட பார்த்த ஞாபகம். 

திறந்துதான் கிடந்தது. ஆனாலும் நிம்மதியில்லை. ஓடிப் போய்ப் பார்க்க வேண்டும். திறந்து கிடந்தால் தான் ஓடைத் தண்ணீர் புஞ்சைக்குள் பாயும். இந்த மழைக்கு அரை வரப்புக்காவது தண்ணீர் நிறுத்தி யாக வேண்டும். சாக்கை எடுத்துத் தலையில் கொங் காணி போட்டு மண்வெட்டியைத் தூக்கிக் கொண்டு வேகம் வேகமாய்த் தெருவிலிறங்கினார். 

கனகுத் தேவர் மேற்கேயே பார்த்துக் கொண்டிருந் தார். மேற்கே நாலு மைல் தள்ளி அவருக்குப் பூர்வீகக் காடு. வீடு மட்டும்தான் இங்கே. மேற்கில் விளைந்து வந்தால் தான் பூவா. மேற்கிலிருந்து யார் நடந்து வந்தாலும் “கொத்தங் குளத்திலே மழை உண்டா” என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். பத்துக் கீதாரி களுக்கு மேற்குத் தெருவில் வீடுகள். கொங்காணி போட்டு அவர்களில் யாரும் கனகுத் தேவர் வீட்டைத் தாண்ட முடியவில்லை. 

“நான் கார்மேகம் மாமா. கொத்தங்குளத்துத் தாக்கல் தெரியலியே” என்று சொல்லிக் கொண்டு போனார் கீதாரி. 

ஆறுமுகம் பிள்ளை அடக்கி அடக்கிப் பார்த்தார். கடைசியாய்ப் பரணில் ஏறி பொணையல் தும்பு களை’ இறக்கினார். ரொம்பக் கால முந்தி அறு வடைக்கு இறக்கியது. பதமாய் ஒவ்வொரு தும்பை யும் எடுத்துப் பிரிந்து கிடக்கிறதா என்று அரை வெளிச்சத்தில் நுட்பமாய்ப் பார்த்துக் கொண்டிருந் தார். பார்வதி அம்மாளுக்கு வெட்கம். இன்னும் நாத்துப் பாவலை. நாப்பது கலமா அம்பது கல மான்னு கணக்கு ஓடுது. யாராச்சிம் பார்த்தா சிரிக்கப் போறாக. தும்புகளைத் தூக்கிப் பரணிலெ போடுங்க’ என்றாள். 

தெருப் பூராவுக்கும் சேர்த்து ஒரே ஒரு ஓட்டு வீடு. மாரியப்ப பிள்ளை வீடு. நடுவில் முற்றம். முற்றத்துக்கு மேல் ஓட்டில் நாலு மூலைகளிலும் தகர வளைவுகள் உண்டு. எல்லா ஓடுகளிலும் சேர் கிற தண்ணீர் இந்த நாலு வளைவுகளிலும் வந்து விழும். நல்ல மழைக்கு நாலு அருவிகள் வெளேரென்று முற்றத்தில் கொட்டும். ஓலை வீடுகளில் கூரை வாரித் தண்ணீர் பழுப்படைந்து போய் வரும். 

உலகம்மாள் தலையில் முந்தானையைப் பேருக்குப் போட்டுக் கொண்டு சருவத்தோடு தெருவில் இறங் கினாள். அவள் மழையில் இறங்கியதைப் பார்த்ததும் பொம்பிளைகள் ஒவ்வொருவராய்க் குடத்தோடும் சருவத்தோடும் மாரியப்ப பிள்ளை வீட்டுக்கு சிரிப்பும் கனைப்புமாய் வந்தனர். கொஞ்ச நேரத்தில் பிள்ளை களும் ஓடி வந்து சேர்ந்து கொண்டார்கள். 

தெருவில் பெரிய இளவட்டம் மாரியப்ப பிள்ளை மகன். இன்னும் கல்யாணம் ஆகவில்லை. கைலியோடு இறங்கி முற்றத்தில் நின்று கொண்டான். பொம்பிளை களிடமிருந்து குடங்களை வாங்கி நாலு வாரியிலும் வைத்துத் தண்ணீர் பிடித்து முற்றத்தின் ஓரத்தில் நிற்கும் பொம்பிளைகளிடம் குடங்களைத் தூக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தான். இடைவெளிகளில் வாரியில் நின்று குளித்துக் கொண்டான். அவனைப் பார்க்கப் பார்க்க வேடிக்கைக்கு வந்த மற்ற இள வட்டங்களுக்கும் ஆசை வந்து விட்டது. சந்திரா நானும் வரட்டா” என்று கேட்டுக் கொண்டே ரண்டு மூன்று பேர் இறங்கிப் பொம்பிளைகளிடம் ங்களை வாங்கினார்கள். நனைவதும் குளிப்பதும் குடந்தூக்குவதுமாய் இளவட்டங்கள் அட்டகாசம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். 

அம்மாமார் வசவுகளையும் சட்டை இழுப்புகளையும் மீறி சின்னப் பயல்கள் சிலபேர் முற்றத்தில் குதித்தார் கள். முற்றம் திணறியது. தூம்பாக் குழியை இரண்டு மூன்று பேர் சேர்ந்து பழைய துணிகளை அமுக்கி அடைத்து விட்டார்கள். முற்றத் தண்ணீர் உயர்ந்து கொண்டே வந்தது. சின்னப் பயல்கள் சில பேர் கழுத்தளவு வந்து விட்டது. பயல்கள் நீச்சலடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.  மாரியப்ப பிள்ளையும் அவர் சம்சாரமும் எவ்வளவு தான் கார்வார் பண்ண முடியும். வீடு முச்சூடும் சகதியாகிக் கொண்டிருந்தது. 

பூமியில் நடந்து கொண்டிருந்த அமளிகளையும் ஆர வாரங்களையும் மழை பொருட் படுத்திய தாகவோ நின்று யோசித்ததாகவோ தெரியவில்லை. ஒரே கதி யில் பெய்து கொண்டிருந்தது. 

நாச்சரம்மாக் கிழவி திண்ணையில் உட்கார்ந்து மழையை உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். இன்று ஒரு நாள் போய் நாளை விடிய வன்னியக் காட்டுக்குப் போக வேண்டும். விதம் விதமாய்க் காளான்கள் அங்கே முளைத்துக் கிடக்கும். வெஞ் சனக் காளான் எது விசக் காளான் எது என்று அவளுக்குத் தெரியும். காட்டுக் கீரை பறிக்க ஒரு ஒலைப் பெட்டியை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆட்டுக் கறி கோழிக்கறிக் குழம்பை விட ருசியானது காளான் குழம்பு. வன்னிக் காட்டுக் கீரை மலைத் தேனுக்குச் சமம். 

அன்னமயில் வீட்டுக் கொல்லையைப் போய்ப் பார்த்துக் காண்டு நின்றாள். மழை நின்றதும் ஆம்பிளையிடம் சொல்லி வட்டம் வட்டமாய் வெட்டிப் பயிர்க்குழி போட வேண்டும். மூடி வைக்க ஓலைகளை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். மூன்றாம் நாள் பாகல் பீர்க்கு புடலை பூசனி எல்லாம் இரண்டு கனத்த இலைகளோடு ஈர மண்ணை முதுகில் தள்ளி வெளி வரும். இந்த வருஷம். கஞ்சிக்குப் பஞ்சம் வந்தாலும் காய்க்குப் பஞ்சம் வரக்கூடாது. 

காளிமுத்து பத்தையைத் தூக்கிப் போட்டிருந்த பழைய குளுமையை எட்டிப் பார்த்து விட்டு வந்து உட்கார்ந்தார். முப்பது வருஷம் விட்டு மழை பெய்தாலும் பெய்த அன்றைக்கே அயிரை உற்பத்தி யாகி விடும். நாலு நாள் கழித்து தாவு மடை முக்கில் பெரிய வாய்க்காலை அடைத்துப் பத்தை போட வேண்டும். விடிவதற்குள் நாலு ஓலைப் பெட்டி நிறைய அயிரை மீன்களை அள்ளி விட வேண்டும். 

ராசாக் கண்ணுப் பயல் ரோட்டைத் தாண்டி தூரப் பகுதிகளுக்கு நோட்டம் விட்டான். நாளை விடிய அரசமரப் பொட்டலுக்குப் பயல்களைச் சேர்த்துக் கொண்டு போக வேண்டும். அரசமரத்தடியில் சீங் கினிப் புல் சில்லென்று வந்திருக்கும். பட்டைத் தொட்டது போலிருக்கும் புல் கூட்டத்தில் கை பட்டால், கொத்தாய்ப்பிடுங்கினால் ஈரமணல்பஞ்சாய் உதிரும். அடியில் முட்டை முட்டையாய்க் கிழங் கிருக்கும். லேஸ் இனிப்பும் புல் வாசனையுமாய் கிழங்குகள் ருசியாயிருக்கும். 

பொட்டல் தாண்டி தேங்காய்ப் பூச்செடிகள் வெள்ளை வெளேரென்று பூத்துக் கிடக்கும். காட்டுச் செடிகளுக்குள் தேடினால் சீமைத் தக்காளிச் செடி கிடைக்கலாம். உபயோகமில்லாத மற்ற செடிகளுக்கு மத்தியில் சீமைத் தக்காளிச் செடியைப் பார்க்கும் பாது மனசு துள்ளும். பிடுங்கிக் கொண்டு வந்து கால்லையில் தனித் தோட்டம் வைக்க வேண்டும். சொடக்குத் தக்காளிச் செடிகள் முளைத்திருக்கிற இடங்களை நாளைக்கே பார்த்து வைத்துக் கொள்ள வேண்டும். 

வெகு நேரமாகியும் மழை ஓயவில்லை. எட்டு மணி சாயல்குடி பஸ் ரொம்பத் தாமதமாய் வந்து போய் விட்டது. பொங்கி ஆரவாரித்து மழை இப்போது பெய்து கொண்டிருந்தது. 

தொழி உழவுக்கு வயலில் நிறையத் தண்ணீர் வேண்டும். மண் வெட்டியும் கையுமாய் ஆம்பிளை கள் வயல்களை பார்க்க நடந்து கொண்டிருந்தார் கள். ஓலைக் கொங்காணிகளும் சாக்குக் கொங்காணி களும் மழையில் நனைந்து தெருவில் அசைந்தன. 

‘வெட்டுக்குழி நெறஞ்சு கம்மாய் பெருகிக்கிட்டு வருது சித்தப்பு” என்று கண்மாய்ப் பக்கம் போய் வந்த ஆள் திண்ணையிலிருந்த ஒரு வயசாளிக்குச் சொல்லிக் கொண்டு போனார். காடு பார்க்க கரை பார்க்க என்று ஆம்பிளைகள் அநேகமாய் எல்லோரும் மழைக்குள் இறங்கி விட்டார்கள். 

ஆம்பிளைகள் ஒவ்வொருவராய்த் திரும்பி வரும்போது மழை அடங்கி வந்தது. லேஸ் தூறல்கள் பூமி நீரைச் சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்தன. பிள்ளைகள் தூறலில் நனைந்து வாய்க்கால் வெட்டியும் வரப்பு கட்டியும் விளையாடினார்கள். 

கண்ணாயிரம் பிள்ளை வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தால் தெருப் பூராவும் தெரியும். கண்ணாயிரம் பிள்ளையும் அவர் பெண் சாதியும் திண்ணையில் வந்து உட்கார்ந்தார்கள். ‘வாங்களேன். சங்கதி பேசலாம்” என்பது போலிருக்கும் அவர்கள் வந்து உட்காரும் தோரணை “அத்தே மழை எப்பிடி?” என்றபடி உலகம்மாள் வந்து உட்கார்ந்தாள். ‘“என்ன அங்கெ மகா நாடு ஆரம்பிச்சாச்சா?” என்று கேட்டுக் கொண்டே ஒவ்வொரு பொம்பிளையாய் உட்கார்ந்தார்கள். 

நனைந்த தலை மயிர்கள் பிரிந்து கிடந்தன. கண்ணா யிரம் பிள்ளை வீடு கூரை ஒழுக்கில் சொத சொத வென்று கிடந்தது.தெருப் பூராவு முள்ள வீடுகள் தரை கள் ஈர நசிப்பில் கிடந்தன. ஆம்பிளைகள் பிள்ளைகள் நனைந்து கூதல் வாங்கிக் கைகளைக் கட்டி நெஞ்சுக் கூட்டுக்குள் கொண்டு போக முயற்சி செய்தார்கள். பலருக்குப் பல் வரிசைகள் தாளம் போட்டு ஆட ஆரம்பித்தன. 

உலகம்மா புருஷன் திண்ணையடியில் நின்று கத் தினான். “ஏய் கஞ்சியை ஊத்திப் புட்டுப் போய்ப் பேசு” 

உலகம்மாள் எழுந்து அவள் வீட்டிற்குப் போனாள். பழைய கஞ்சிப் பானைக்குள் கையை வைக்கவும் கை விறைத்துக் கொண்டு போனது. புருஷன் கஞ்சி குடித்ததும் மறுபடி கண்ணாயிரம் பிள்ளை வீட்டுத் திண்ணைக்கு வந்தாள். 

நனைந்த உடம்புகள் திண்ணையில் கதை கதை யாய்ப் பேசிக் கொ ண்டிருந்தன. தெற்குக் காற்று கூதலாய் மாறி வீசியது மழை மூணா வருஷ ஏழாவருஷ, மழை யைப் பற்றி ஒவ்வொரு பொம்பிளையும் காது மூக்கு வைத்துப் பேசிவந்தார்கள். உலகம்மாள் இடை மறித்து “இந்த கூறலுக்கும் மழைக்கும் சுடச்சுட பொரி கடலை வாங்கித் தின்னா எப்பிடி இருக்கும்?” என்றாள். 

மறுமழை ஆரம்பித்துப் பெய்யத் துவங்கியது.

– சாசனம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1991, அன்னம் பி.லிட், சிவகங்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *