மழைக்குறி





(1975ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-13
அத்தியாயம் ஏழு
ஆலங்கட்டிகள் வீழ்வதைப் போலச் சளசளவென மழை பெய்து கொண்டிருந்தது. ஆயினும் சூரியன் மறையவில்லை. முகிலிடையே துல்லியமாய்த் தெரிந்தது. நான்கு தடவைகளாக மரியாவத்தை டிஸ் பென்சரிக்குச் சென்று மருந்து போட்டதால் கல்லெறிபட்ட ரணம் ஆறிப் போயிருந்தது.

சின்னத்தம்பி மழைக்காக மைக்கலின் கறாஜில் ஒதுங்கி நின்றான். பழைய கால மடுவத்தில் ஆக்கிய கறாஜ். சில தண்டவாளங்களை முண்டு கொடுத்து உயர்த்தப்பட்ட கூரையிலே துருப்பிடித்த தகரத் தட்டுகள், நிலத்திலே கன்னங் கரேலென்ற ஓயில் திட்டுகள் பார்க்கின்ற இடங்கள் எல் லாமே நைந்து போய்த் துருப்பிடித்த இயந்திர உதிரிப் பாகங்கள் தான். இயேசுநாதரின் திருவுருவச்சிலை ஒன்று மூலையிலிருந்த கம்பி வலையிட்ட அறைக்குள்ளேயிருந்தது. அதன் கீழே ஸீறே வட் பல்ப் அழுது தொழுத வண்ணம் ஒளிர்ந்தது. அந்தக் கம்பிவலை அறையினுள்ளே சதிரை மேசை சகிதம் ஓர் பழைய பீரோவும் இருந்தது.
றீகல் தியேட்டர் மனேஜரும் அவரோடு இன் னொரு வருமாகக் குடை பிடித்தபடி நனைந்தும் நனையாமலுமாய் கறாஜுள் வந்தனர்.
இருவரும் வெகு ஆடம்பரமான உடை உடுத்திருந்த னர். கறாஜூள் வேலை செய்பவர்களின் உடைகளிலே மிகுந்த அழுக்குப் படிந்திருந்தது.
“கார் வேலை முடிஞ்சுதோ?”
“இல்ல தொரை. றேடியேற்றரில் லீக்”
“இப்ப கார் தந்து ரண்டு கிழமையாய்ப் போச்சு. எங்களுக்கு எத்தினை வேலையளுக்குக் கார் தேள்வையெண்டு தெரியுமெல்லே. தெரிஞ்சு கொண்டும் இப்புடிக் கடத்தி றியே. சீக் நடந்து நடந்து கால்லை உளுக்கு வந்திட்டுது”
“டோன்ற் குவாறல் வித் கூலிஸ், தே ஆர் நவ் ரிபெல்ஸ்”
மனேஜரேரடு கூடவந்தவர் சொன்னார்.
“யேஸ் மென். நவ் ஏ டேயிஸ் திஸ்டோக்ஸ் நெவர் வென்சர் ரு டூ புறப்பொ வேக் பற் தே வான்ற் ஸ்டூபென்டஸ் வேஜஸ்”
இவர்களது குழுஊக்குறி மைக்கலிற்கு விளங்கிய போதும் விளங்கியது போலக் காட்டிக் கொள்ளாமல் சின்னத்தம்பியைப் பார்த்துச் சாடைசெய்து சிரித்தான். சின் னத்தம்பிக்குப் பேசியது புரியவில்லை.
“சேர் அட்டுவான்ஸ் காசு தந்திட்டா நல்லது”
“என்ன அட்டுவானஸ்
“புது றேடியேற்றார் கண்டீல இருந்துதான் வாங்கியரணும்.
“அதெல்லாம் வேலை முடிஞ்சாப் பிறகு”
“காசில்லாம எப்பிடி றேடியேற்றார் வாங்கிறது, வேல் செய்யிறது”
“அட்டுவான்ஸ் எவ்வளவு வேணும்”
“நூறு றூவா”
“நூறு ரூவாய் என்னட்டை ஏது? பத்துப் பதினைஞ்சு எண்டாத தாறன்”
“பத்து றூவாக்கு றேடியேற்றரில்லை தொரை”
“நக்கலடிக்கிறியே”
“நான் ஏன் தொரை நக்கலடிக்கிறன்”
“பின்னை என்ரை மாசச் சம்பளத்தில அரைவாசி கேட்டால்; நான் என்ன செய்யிற”
“இவ்வளவு சம்பளத்தில ஏன் கார் ஓடவேணும்?”
மனேஜருக்குப் பெருத்த அவமானமாகப் போய்விட்டது. நிர்வாணக் கோலத்தோடு நிற்பது போன்ற உணர்வு பிறக்கக் கூனிக் குறுகினார். முகமும் சிவந்தது.
“நான் கார் ஓடுறதைப் பத்திக்கேட்க நீ ஆர்”
பதிலளிக்க முடியாத கேள்வியைக கேட்டு விட்ட பெரு மிதம் அவர் முகத்துலே தொக்கி நின்றது.
சின்னததம்பியின் பார்வை மனேஜரை எடைபோட்டது.
“உங்கடை நன்மைக்குத்தான் சொன்னன்.”
“நன்மை தீனமை பத்தி எல்லாம் எனக்குத் தெரியும். நீ ஒண்டும் காது குத்தவேண்டாம்.”
மனேஜரோடு கூட வந்தவர் திடீரெனத் தன்னுடைய ஸிப் போட்ட பெர்சிலிருந்து ஒரு நூறு ரூபாய்த் தாளை எடுத்து மைக்கலிடம் நீட்டினார்.
“வட் இஸ்த மீனிங் ஒஃப் திஸ்?”
“இற் டஸின்ற் மட்டர். யூ குட் ரிட்டேன் இற் அற் எனி கொன்வீனியன்ற் செக்கமஸ்டன்ஸ். வீ கான புஸ் ஓன்.”
இருவரும் வெளியேறினார்கள்.
சின்னத்தம்பியின் சிந்தனை இருவரையும் இரைமீட்டது.
மைக்கல் வலைபோட்ட அறையைத் திறந்து நூறுரூபாய்த் தாளை பீரோவுள் வைத்தான்.
அந்த பீரோவின் மேலே துகிலுரியப்பட்ட இயேசு நாதரை சிலுவையில் அறைந்திருந்தார்கள். ஆணி பாய்ந்த மேனியில் கட்டி கட்டியாக இரத்தம் உறைந்திருந்தது. இயேசுவின் தலையிலே முட்கிரீடம். கண்களிலே சோர்வு கலந்த கருணையின் கீற்று.
“ஏய் லமயா”
கார் வந்த வேகத்திலேயே குரலும் வந்தது. தெரு முழு வதும் சகதியை அள்ளித் தெளித்து விட்ட கம்பீரம் காரின் வேகத்திலிருந்தது.
மைக்கல் அவசரம் அவசரமாக வாசலண்டை மழையில் நனைந்த வண்ணம் ஓடினான்.
உள்ளேயிருந்தவர் காரின் கண்ணாடிகளைக் கீழே இறக்கினார்.
கழுத்திலே நீலநிறப் பட்டி. உடலிலே சுத்தமான வெள்ளை வெளேரென்ற நஷனல் வேட்டி. மணிக்கட்டில் ஜொலிப்பான கைக்கடிகாரம்.
உள்ளிருந்த அந்த மனிதர் ஏதோவெல்லாம் உரத்த குரலில் சொன்னார்.
உடனே மைக்கல் காரின் முன்புறமாக ஓடிச் சென்று பனெட்டைத் திறந்து உள்ளே தலையை விட்டு ஏதோவெல் லாம் தட்டிக் கொட்டினான்.
“ஹரி”
பனெட்டை மைக்கல் மூடியதும் கார் பறந்து மறைந்தது.
“ஏயா கவுத”
சின்னத்தம்பி கேட்டான்.
‘தன்னிநத்த. ஏயா தமாய் அபே மந்திறிதுமா”
சின்னத்தம்பி சிரித்தான்.
“மொக்கத ஹினாவெனவா?”
“ஹினாவென்ன நதிம இன்ட பரி நிசா ஹினாவெனாவா”
இப்போது மைக்கலும் சேர்ந்து சிரித்தான்.
மழை ஓய்ந்தது. ஆயினும் துவானம் விடவில்லை. ஓட்ட மும் நடையுமாக சின்னத்தம்பி கடையை நோக்கி விரைந்தான்.
அத்தியாயம் எட்டு
சைக்கிளின் சக்கரங்கள் வேகமாகச் சுழன்று கொண் டிருந்தன பின்பக்கக் கரியரிலே க ட் டப்பட்டிருந்த சோடாப் பெட்டியிலிருந்த பலரக வர்ணச் சோடாப் போத் தல்கள் ஒன்றோடொன்று உரசி ஓசையெழுப்பிற்று பெடல் கள் நிலையற்றுச் சுழன்றன.
சின்னத்தம்பி தொளஸ்பாகை றோட்டில் சைக்கிள் ஓடிய வண்ணமிருந்தான். சோமசெற் எஸ்டெட்டில் உள்ள கடைகளுக்குச் சோடா விநியோகித்துத் திரும்பும்படி முத லாளியார் கட்டளையிட்டிருந்தார்.
தெருவின் இருமருங்கிலும் தேயிலைச் செடிகள் பச்சைப் பசேலெனக் குளுமை ததும்ப நின்று அழகு காட்டின. சுற் றியுள்ள தேயிலை மலைகளும் பக்ரரிகளும் மிக இரம்மியமான காட்சியளித்துக் கொண்டிருந்தது. வரிசை வரிசையாகத் தேயிலைக் கொழுந்து கிள்ளும் கருப்பு முகங்கள் பச்சைச் செடிகளுடன் கலந்திருந்தன. கண் பராக்கிலே ஈடுபட்டா லும் சுறுசுறுப்புக் குறையாத கைகள்.
அன்று காலை கடையில் நடந்த உரையாடல் அவனு டைய சிந்தனையில் மீண்டும் எதிரொலித்தது.
புசல்லாவைத் தமிழாசிரியர் திரு.கணபதிப்பிள்ளை வந்திருந்தார்.
“மாஸ்டர். என்ரை ரேட் உங்களுக்குத் தெரியும் தானே. நான் நூற்றுக்கு இருபது வாங்கிறன். அதுவும் கொண்டிசன் றான்ஸ்வோ மேசனிலைதான். ஒரு வரிய வட் டியை முதலிலை பிடிச்சுப் கொண்டு தர்றம். அதுக்கு முந் தித் தந்தால் ரண்டாம் வரிய வட்டி கட்டத் தேள்வை யில்லை. சம்மதமே.
“என்ன நீங்கள் இப்புடிச் சொல்லுறியள்”
முதலாளியார் வாயிடை கைகளை வைத்தார். “பின்னை எப்படிச் சொல்லுற”
”நானும் யாப்பாணம். நீங்களும் யாப்பாணம். என்னாலை முடியக் கூடிய கெதியிலை உங்கடை காசிலை ஒரு சதம் எண் டால் தன்னும் மிச்சம் விடாமைத் தருவன். தயவுசெய்து வட்டியில்லாக் கடனாய்த் தாருங்கோ.”
”உலகத்திலை என்ன நடக்குது எண்டு தெரியாமல் பேசுறியள்”
“இல்லைப் பாருங்கோ. ஈடு வைச்ச காணி மூழிறதுக்கு முன்னாலை மீட்காட்டி என்ரை பிள்ளை குட்டியள் நடுத்தெரு விலை தான் நிற்குங்கள். வட்டியும் முதலுமாய் இப்ப ஐஞ் சுக்குக் கிட்ட வளர்ந்திட்டுது. வைச்சது இரண்டுக்குத்தான்.’”
“உந்தக் கதை எனக்கு என்னத்துக்கு”
“ஈடு பிடிச்சவன் பத்துப் பதினைஞ்சு தரம் காயுதங்கள் போட்டுட்டான். இனியும் மீளாட்டி சோலி சுறட்டுத் தான் வருமாம். வழக்காடப் பணமிருந்தா நான் ஏன் குடுக்காம லிருப்பன். நீங்கள் எப்பன் எண்டாலும் இரக்கம் காட்டுங்கோ”
“உங்களின்ரை கதையிலை ஒரு உப்புமில்லை புளியுமில்லை.”
“நீங்கள் ஒரு ஐஞ்சை வட்டியில்லாக் கடனாய்த் தந்தால் சரி”
“இங்கினேக்கை கடை வைச்சிருக்கிற ஆர் எண்டாலுஞ் சரி காசு தட்டுப்படுகுது எண்டால் உடனை என்னைச் சந்திப் பினம். ஆயிரமாய் வாங்கிப் போட்டு விரல் விட்டு ஐஞ்சு நாள் எண்றதுக்கு இடையிலை ஆயிரத்து இருநூறாய் திருப்பித் தருவினம். ஐஞ்சுநாளுக்கு மேற்பர்ற ஒவ்வொரு மணித்தி யாலத்திற்கும் இருநூறு; மாஸ்டர். அப்பிடிக்காசு புரளுற இடத்திலை வட்டியில்லாமைக் கடன் குடுக்கியது எண்டா அரோகரா தான்”
“புசல்லாவையிலை இருந்து உங்களைத்தான் நம்பி தந்த னான். நீங்கள் கொஞ்சம் பாவம் எண்டாலும் காட்டுங்கோ.’
“மாஸ்ரர். தயவு செய்து தொந்தரவு கொடுக்க வேண் டாம். நான் சொன்னா ஒரே சொல்தான்.’
“கொண்டிசனிலை ஈடெழுத என்ரை மாமிக்காறி விட மாட்டா. அதாலை தான் நெஞ்சிடி.”
“கொண்டிசனிலை ஈடு பிடிக்காமை இந்தக் காலத்திலை ஒருத்தன் எண்டாலும் ஒரு சதம் தன்னும் தருவானே.”
“நீங்கள் என்னிலை நல்லாய் நம்பலாம். என்ரை வீடு கூட உங்களுக்குத் தெரியுமெல்லே”
“நம்பிக்கை வேறை மாஸ்டர். காசு விசயத்திலை கணக் கும் எழுத்தும் தான் நம்பிக்கை. அப்பிடி வடிவாய்க் கணக் கெழுதினாக் கூட அடிபிடி சண்டையிலை தான் முடியுது. வீடில்லாத பள்ளருக்குப் பாவங்கள் எண்டு காணியைக் குடுத் தால் காசும் தந்து குத்தகை முடிக்காமல் காணியையும் விடாமல் வைக்கோல் பட்டடை நாயள் மாதிரி நாட் டாண்மை விடிற காலம் இந்தக் காலம். பள்ளரை எழுப் பேலாமல் எத்தினை பேர் அங்கை அந்தரப்படுகினம் எண்டு எனக்குத் தெரியும். குத்தகைக்கு ஐம்பது நூறு ரூபாக்கு விட்டே இந்தக் கரைச்சல் எண்டால் நாலு ஐஞ்சுக்குத் தரேக்கை எவ்வளவு கரைச்சல் எண்டு சொல்லுங்கோ பாப்பம்.”
“பள்ளர் ஒரு சாத்திற்கும் வழியில்லாதவை. அவங்களும் நானும் ஒண்டே”
“நான் உங்களைக் சொல்லேலை மாஸ்டர். ஊரிலை நடக் கிறதைச் சொல்றன்.”
”ஊரிலை உலகத்திலை நடக்கிற விசயத்தை எங்களுக் கேன். உங்களுக்கு என்னிலை நம்பிக்கை இருக்கோ இல்லையோ?””
“நிறைய நம்பிக்கை இருக்கு”
“அப்ப பேந்தென்ன”
“நம்பிக்கை கோட்டுக்குச் சாட்சி சொல்ல வருமே!”
“உதிலும் பாக்க நம்பிக்கை இல்லையெண்டு சொல்லுங் கோவன்”
கணபதிப்பிள்ளையர் விருட்டென எழுந்து வெளியேறி னார். அவர் கொண்டு வந்த பையொன்று மேசையிலே கிடந்தது. மயில்வாகனம் அதைத் தூக்கி உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்த பின்னர் இக்பாலை ஏவிக் கொடுத்து விட்டு வரும்படி சொன்னான்.
“உந்த மனிசனுக்கு மீசைக்கும் ஆசை. கூழுக்கும் ஆசை”
மயில்வாகனம் விமரிசித்தான்.
“நோகாமல் நரைச்ச மயிர் பிடுங்கிக்கத் திரியிறார். நாங்கள் ஏதோ மினக்கெட்ட அம்பட்டன்கள் எண்டு நினைச் சிருக்கிறாராக்கும்”
முதலாளியார் சொன்னார்.
தொடர்ச்சியாக ஐந்தரை மைல்கள் தூரம் சைக்கிள் உளக்கிய உடல் இளைத்தது. சேட் கொலரை சற்று மேலே தூக்கி விட்டான். வெயில் மிக அகோரமாய் இல்லா மல் சற்றே இதமாய்த் தான் இருந்தது. வேர்வையும் இல்லை.
மூன்று மொழிகளிலேயும் அம்பாள் கபே’ என்று போடப்பட்ட போட் தொங்கிக் கொண்டிருந்தது. கடை யின் ஓரத்தில் ஸ்ராண்டை மடக்கிச் சைச்கிளை நிறுத்தினான்.
வாசலில் ரீமேக்கர் மூக்கையா வாயெல்லாம் பல்லாக வரவேற்றான். சின்னத்தம்பியும் பதிலுக்குச் சிரித்துக் கொண்டான்.
உள்ளே றாக்கியில் அடுக்கப் பட்டிருந்த வெற்றுப் போத் தல்கள் பதினெட்டையும் இரண்டு கை – விரல் இடுக்குகளி டையில் அலக்காகத் தூக்கிக் கொண்டு போய்ப் பெட்டியில் விட்டுப் பதிலாகச் சோடாவுள்ள போத்தல்களைத் தூக்கினான்
வர்ணப் பானங்கள் றாக்கியில் அணிவகுத்தன.
”ஆ முதலாளி! பதினெட்டிலை ஆறு பொடலோ ரண்டு நெக்ரோ மிச்சம் பார்ளி.
“அப்புறம் ஒண்ணு ரண்ணாயினும் பிளேன் குடுப்பா”
”போத்தல்”
“அதுக்குத் தான் சல்லியாக் குடுத்துப்பிறனே”
“சரி”
மேலும் பானங்கள் றாக்கியில் ஏறின. முதலாளி தந்த பணத்தைப் பெற்றுக்கொண்டு வெளியே வந்தான்.
பொன்னுச்சாமி வந்து கொண்டிருந்தான்.
“பொன்னுச்சாமி எப்பிடிப் போகுது? இப்ப என்ன வேலை நடக்குது?”
“புல்லு வெட்டுறன். கடையில எல்லாரும் சொகமா”
“ஓமோம்”
“இம்புட்டுத் தொரம் வந்திட்டாய் தானே. பணியக் கணக்கில நம்மோடை காம்பறாவுக்கு வந்திட்டுப்போயேன்”
“அதுக்கென்ன வாறன்”
சைக்கிளைக் கடையின் உட்புறத் தாழ்வாரத்தில் விட்டு விட்டுப் பொன்னுச்சாமியோடு நடந்தான்.
முதலாளியாருடன் முண்டிக் கொண்டு கடையை விட்டு வெளியேறிய பொன்னுச்சாமியின் நினைவுகள் அவனது மனத் திரையில் மின்னி மறைந்தது. உடைப் பெட்டியுள் முட்டைக் கோதுகள் இருந்தமையால் வெளியேற்றப்பட்ட வேடிக் கையை எண்ணி மனத்துள் நகைப்புக் கொண்டான்.
செம்மண் பாதை வளைந்தும் நெளிந்தும் போய்க் கொண் டிருந்தது… ஒரே சீரில் கப்பாத்துப் பண்ணி வெட்டிய தேயிலைச் செடிகள் பசுமையாக நிலத்தினை மூடியிருந்தன. தேயிலைச் செடிகளின் இடையில் மிக நீண்டு வளர்ந்த மரங்கள் மெலிந்து தனித்து நின்றன. மேல் கணக்கிலே யுள்ள லயங்கள் செம்மண் பாதையில் போய்க் கொண்டிருக் கும் போது மெல்ல மெல்ல உயர்ந்தது. எனினும்; அந்தக் கணக்கிலுள்ள கோபுரச் சிகரம் உயர்வாகவே இருக்கவில்லை. நடுக்கணக்கின் லயங்களையும் பக்டரியையும் மலையில் காண வில்லை. வெள்ளை வெளேரென்ற நுரையும் சலசலவென்ற சத்தமுமாய் ஒரு சிற்றாறு.
”உன்ரை கொப்பர் கொம்மாவும் இங்கான் வேலையா?”
“அப்பர் புல்லு வெட்றார். அம்மாவும் ரெண்ணு தங் கச்சியளும் கொளுந்தெடுக்கிறாங்க”
“பெரிய தொரையர் இப்பவும் வெள்ளைக்காரன் தானே”
“ஆமா”
“ஸ்ரோரில் வேலைக்குப் பதிஞ்சியா?”
“பதிஞ்சு எம்புட்டு நாளாச்சு. இன்னும் ஒண்ணுமே கிடைக்கல”
லயத்தின் ஓரத்திலே உள்ள ஓடையிலே, எலும்புருக்கி நோயால் பிணிக்கப்பட்டுள்ள சிறுவன் ஒருவன் மலங் சழித்துக் கொண்டிருந்தான். அவனுக்குப் பக்கத்திலே கன்னங்கரே லென்ற கருப்பு நிறமான, ஆந்தை விழியான நாயொன்று சிறுவன் கழிக்கப் போகும் மலத்தை ஏப்பம் விடுவதற்காகக் காத்துக்கொண்டு நின்றது. அந்தக் கறுப்புநிற நாய் தனது குட்டிகளை எல்லாம் உறுமிக் கலைத்திருக்கக் கூடும். அதனாலே தான் அந்தக் குட்டிகள் தூரத்திலே நின்று கொண்டே நாவைத் தொங்க விட்டு வாயூறின. முலைகள் எல்லாம் தொய்ந்து போய் தனது கன்னிமைப் பெருமையை முற்றாக இழந்து கொண்ட அந்தப் பெட்டை நாய்க்கும் ஒரு தவிப்பு. வேறு யாதாயினும் கடுவன் நாய்கள் வந்திட்டால் தன் வயிற்றுக்கும் அடியாச்சே.
பள்ளிக்குச் செல்லாத சிறார் கூட்டம் ஒன்று நின்று கொண்டு கோலி விளையாடிக் கொண்டிருந்தது. குழி பறித்த இடத்தை மெய்த்துக் கொண்டு முழு நிர்வாணச் சிறுவர்கள் குழுமியிருந்தார்கள். கோடு கீறிய இடத்திலிருந்து ஒவ்வொருவருமாய் குண்டுகளை உருட்டினர்.
‘டே வீரய்யா! எனக்கு நாலு குண்டு கடன் குடுடா” “எல்லாத்தையும் தோத்துப் புட்டு எங்கிட்ட கடன் கேக்கிறியா”
“பாரு இந்தத் தடவை நிச்சயமா ஜெயிச்சுப்பிடுவன்'”
“சொம்மா போ ஓய்”
சின்னத்தம்பியும் பொன்னுச்சாமியும் அந்தச் சிறார் கூட் டத்தைத் தாண்டி நடக்கவும் அந்த உரையாடலின் எச்சம் செவியுள் விழாமற் போய் விடுகின்றது.
சில காம்பறாக்களின் முன்புறத்தில் தேயிலைக் கொழுந்து சேர்க்கும் ஆளுயுரக் கூடைகள் தொங்கவிடப்பட்டிருந்தன.
ஒரு காம்பறாவின் சுவரிலே சிவப்பு நிறத்தில் கத்தியும், சுத்தி யும் தீட்டப்பட்டிருந்தது. அநேகமான காம்பறாக்களின் கத வங்கள் மூடப்பட்டே கிடந்தன. இன்னொரு காம்பறாவின் வாயிலோரம் ஒரு கிழவர் கிடந்தார். அவரது உடம்பினைத் தடித்த கருப்புத் துணி மூடி மறைத்திருந்தது. பாயில் கிடந்த வண்ணமே மிகவும் எரிச்சலோடு இருமித் துப்பிக் கொண்டார்.
சாறு பிழிந்து விட்டுத் தூக்கி எறியப்பட்ட சக்கை.
“இந்தத் தாத்தா தான் நம்மோட அப்பரை வளத்தாரு”
பொன்னுச்சாமி சொன்னான்.
“உவருக்கென்ன வருத்தம்?”
“ரி.பி .”
“எஸ்ரேற் டிஸ்பென்ஸரியிலை மருந்து கொடுத்தாங்களா?”
“டிஸ்பென்சருக்கு லஞ்சம் கொடுக்க சல்லியில்லை. மிச்சம் நல்லா மருந்து வாங்கச் சல்லியேது’
இன்னொரு காம்பறாவின் உள்ளே பகாவன் ஸ்ரீ சத்திய சாயிபாபாவின் படம் ஒட்டப்பட்டிருந்தது. அந்தக் காம்பறா வின் உள்ளே வானொலியும் இருக்க வேண்டும். அதனாலே தான் மேலே இணைக்கப்பட்ட கம்பிகள் கூரையின் ஊடு கீழே இறங்கியிருந்தது. ஒரு வேளை உணவைத் திருப்தியாக உண்ண இயலாத இலட்சணத்திலே, லயவாசிகளின் வாட் டத்திலே வானொலி வேறு.எல்லாம் பகவானின் அருள் சுரக்கும் கருணைதான். அந்தக் காம்பறாவிலிருந்து வெளிவந்த பஞ்சைத்தலைக் கிழவி அரிசியைப் புடைத்தாள். தவிடும். குறுணியும் தரையில் வீழ்ந்து சிதறவும் காக்கையும் கரைந்து வந்து கொறித்தது. இந்த லயத்துக் காம்பறாக்களில் இதை விட ஆடம்பரமான காம்பற இருக்க முடியாது. அரிசி புடைக்கும் அளவுக்கு ஆடம்பரம்.
கரிக்கோச்சி வண்டி தூங்கி விழுந்து அசைவது போல காம்பறாக்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து சின்னத்தம்பியின் கவனத்தைக் கவர்ந்தது. அந்த அசுத்தமய லயங்களிடையே யும் ஓர் அழகுத்தன்மை துயில் பயின்றது.
குப்பைமேனியும் செவ்வரத்தையும் குறோட்டன் செடி களும் லயங்களிடையே நின்றன. டுரியன் மரத்தின் மீதி ருந்த குருவியொன்று பழுத்த பழம் ஒன்றினைக் கொத்தித் தின்றது.
“ஏன் உந்தப் பழங்களைப் பிடுங்கேல்லை”
“அது தொரை பங்களாவுக்கு”
“நீங்கள் பிடுங்கினால் என்ன”
“அப்புறம் லயின விட்டே காலி பண்ணிட வேண்டி யது தான்.”
பொன்னுச்சாமி தனது காம்பறாவின் கதவுகளைத் தள் ளித் திறந்தான். உக்கித் தேய்ந்து போன கதவுகளின் அழுக்குமட்டும் ஒரு கதவாய் உருவம் தந்தது. சுண்ணக் காவியைக் கண்டே வெகுகாலமாகி விட்ட தாகம் சுவருக்கு. அந்தச் சுவரில் லட்சுமி, முருகன் படங்கள் இரண்டும் தோட்டத் துரையின் படமும் தொங்கிக் கொண்டிருந்தது. ஓரமாகப் போட்டிருந்த தும்புச் சாக்குக் கட்டிலிலே உட் காரவும் அந்தக் கட்டில் கிரீச்சிடுகிறது. சுவரிலிருந்த பல்லி யொன்று பறந்து கொண்டிருந்த வண்டை லபக்கடிக்க குறி பார்த்து நாவில் உரமேற்றியது.
“இதாற்றை புத்தகங்கள்”
“தம்பிக்காறனோது. ஸ்கூல்ல எஸ். எஸ். ஸி. படிக்கிறான்.”
“எப்பிடிப் படிக்கிறானே”
“அவனும் புல்லு வெட்டத் தான் வருவான்”
”ஏன்”
“மேலபடிக்கிறதுன்னா எத்தினை பொஸ்த்தகம் செலவு. சல்லி நெறைய வேணும், தொரை வீட்டுப் பையங்களாச் சினும் மூடன்களும் பெரிய படிப்பாளியாவாங்க. ஏணண்டா அவங்ககிட்ட சல்லியிருக்கு. நம்மளைப் பத்தி யாரு பாக்கிறாங்க? எல்லாமே சல்லி தான். அதில்லேன்னா ஒண்ணு மில்ல.”
“உங்கள்ளை எத்தினை பேர் வேலை செயிறியள்”
“வாரத்தில ரெண்ணு நாள் வேலை. மூணு ரூபா சம் பளம். நாலு பேரும் வேலை செய்யிறாங்கதான். ஆனா நாலு வயிறு இருக்கே ”
“உங்களின்ரை ஒருநாள் சம்பளத்தை விட தொரை வீட்டு மகன் போட்டிருக்கிற கால் சப்பாத்துப் பொலிஷ் விலை கூட”
பொன்னுச்சாமி எழுந்து சென்று கேத்திலைக் கழுவினான்.
“தேயிலை தாறன். கொண்டு போய்க் கடைல வைச்சுக் குடிச்சுக்க”
“சீ வேண்டாம். உந்தத் தேயிலையைக் கொண்டு போய் என்ரை பெட்டிக்கை வைச்சிருந்தன் எண்டால் பேந்து முதலாளியார் சோதிக்கேக்கை எங்கடை பெட்டி யளைக் கட்டாயம் பார்ப்பார் பிறகு களவு எடுத்த நான் எண்டு நினைப்பர். தொந்தரவு தான் வரும். சமாளிச்சா லும் என்ரை சம்பளக் காசிலை பிடிப்பார்.”
“நீ பயப்பிடுகிறாய்”
“உவக்குப் பயந்தால் நான் எப்பவோ செத்திருப்பன்”
பொன்னுச்சாமி நொடிப் பொழுதில் தேநீர் வைத்துத் தந்தான்.
“இந்தா கொய்யாக்கா ”
“ஏது”
“பணிய மரமிருக்கு”
சின்னத்தம்பி கொய்யாக் கனிகளை பற்களிடையே நொறுக்கிக் கடித்தான். பலகாலத்தின் பின்னர் சுவைபட்ட கொய்யாக்கனி இனிக்கவே இனித்தது. சில விதைகள் சூத் தைப் பல்லிடை அடைபட்டுக் கொண்டது. கீழே குனிந்து ஒரு குச்சியைத் தேடிச் சூத்தைப் பற்களிடை யே குச்சி யைச் செலுத்தி அடைபட்ட விதைகளை விடுவித்துத் துப்பினான்.
“உங்கடை எஸ்ரேற்றிலை செங்கொடிச் சங்கம் இல்லையா?”
“எப்பாலும் யாராச்சும் கூட்டம் போடுவாங்க”
“நீ போறேல்லையா”
பொன்னுச்சாமி மௌனமாகச் சிரித்தான்.
“ஏன் சிரிக்கிறாய்”
“செங்கொடிச் சங்கம்ணா கேட்கத் தேவையில்ல. அந்தக் கூட்டத்தில் பேசிறவங்க, கூட்டத்துக்குப் போறவங்க எல்லோரையுந் தொரை ஆள்வைச்சு நோட் பண்ணுவார். அப்புறம் ஏதாயினும் குற்றம் கொறை சொல்லி வேலையை விட்டே நீக்கிப் புடுவாரு. அதனாலே யாராச்சும் போறதிக்கு இஷ்டப்படுறதில்லை”
“இந்த முரண்பாட்டைப் பாவிச்சு நாங்கள் வெல்ல வேணும்”
சின்னத்தம்பி முணுமுணுத்தான்.
அப்போது லயத்து ஓடை வழியாக நடந்துவந்த கந்த சாமி சின்னத்தம்பியைக் கண்டு வியப்புற்றவனாய் நின்றான்.
“எங்கை இந்தப் பக்கத்தாலை”
சின்னத்தம்பி கேட்டான்.
“என்ரை பெண்சாதியின்ரை தம்பிக்காறப் பொடியன் இந்த எஸ்ரேற்றிலை கிளார்க் வேலை செய்யிறான். அவனைப் பாத்திட்டுப் போறதுக்கு வந்தனான்”
கந்தசாமி பதிலளித்தான்.
“நீ இப்ப பெரிய குடும்பகாறன் எல்லே. எப்பிடிப் பெண்டில் பாடு”
“கடையிலை உழைக்கிற சம்பளம் ஒண்டுக்கும் பத்தாது. அதுதான் ஏதாவது வயித்தைக் கழுவுறதுக்கு ஏத்த உத்தி யோகமாய்த் தேடுறன். நல்ல வேலையள் ஒண்டு தன்னும் இந்தப் பிறப்பிலை கிடைக்காது போலான் இருக்குது. என்ன, அரசியல் பேசிக்கொண்டிருக்கிறாயாக்கும்”
“எங்கடை சனமெல்லாம் உண்மையளை உணர்ற வரைக் கும் எல்லாம் கஷ்டங்கள் தான்.”
“உன்னட்டை கனநாளாய் ஒருவிஷயம் கேட்க வேணும் கேட்கவேணும் எண்டிருந்த நான்”
கந்தசாமி தயங்கினான்.
“என்ன விஷயம் கேளன்”
சின்னத்தம்பி கிண்டினான்.
“நீ ஏன் கொம்யூனிஸ்டாய் இருக்கிறாய்?'”
“உலகத்திலையுள்ள சனங்களிலை எல்லாரையும் ஏழை பணக்காறர் எண்டு பிரிக்கலாமோ இல்லையோ'”
“ஓம் பிரிக்கலாம்”
“ஏழையள் எண்டா அவையள் கஷ்டப்பட்டு உழைக் கிறவையாயும் பணக்காறர் எண்டா அந்த உழைப்பை நடத்திக்கிறவையாயும் அந்த உற்பத்திச் சாதனங்களை எல் லாம்’ உடமையாய் வைச்சிருக்கிறவையளாயும் இருக்கினம். இந்த ஆளும் பணக்கார வர்க்கம் பாராளும் பாட்டாளி யளின்ரை உழைப்பை நேரடியாயும் மறைமுகமாயும் சுரண் டுது. தொழிலாளியள் தங்கடை உரிமையளைக் கேட்டவுடனை பொலிஸ் மில்றிரி நேவி ஆயுதபலங் கொண்டு அடக்குது”
“என்னெண்டு இது நடக்குது”
“அந்தப் பணக்காறக் கும்பல் தன்ரை அரசு இயந்திரம் ஒண்டைக் கட்டிவைச்சுச் சுரண்டல், பலவந்தத்தைத் தன்ரை எதிர் வர்க்கமான தொழிலாளியள்ளை திணிக்குது. கொடுமையைத் தாங்கேலாதவை குமுறிக் கொந்தளிச்சு அரசு இயந்திரத்தோடை முட்டினால் அவையளின்ரை உயிரையும் பொலிஸைக் கொண்டு எடுப்பிக்குது. பொலிசிட்டை துவக் கில்லாட்டி சுரண்டல் ஒரு செக்கனுக்கும் நடக்காது”
“முதலாளிமார் கொஞ்சப்பேர் தானே. தொழிலாளி யள் தானே கூட”
“அது மட்டுமில்லை. தொழிலாளியளின்ரை பக்கம்தான் நூற்றுக்கு நூறு நீதியும் நேர்மையும் சத்தியமும் இருக்குது. எங்களை அடக்கி ஒடுக்கிற அரசு இயந்திரத்தைப் பலத்காரத் தாலை சுக்கு நூறாக்கி அது இருந்தவிடத்திலை பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை வைச்சால் தான் ஏழைச் சனத் துக்கு நீதியும் நல்ல சீவியமும் கிடைக்கும். புரட்சியாலை முதலாளிமாற்றை சர்வாதிகாரத்தை தொழிலாளியளின்ரை சர்வாதிகாரம் ஆக்கினாத்தான் விடிவு.
”இலச்சனிலை கொம்யூனிஸ்டுகளை அனுப்பிப் புரட்சியைச் சாதிக்கேலாதா”
“சட்டீக்குள்ளை கடலைக் கொண்டர முடியுமே”
“முடியாது”
“அது போலை தான் வெள்ளைக்காறத்துரைமார் போட் டுத் தந்த அரசியல் தண்டவாளத்தை மாத்தாமல் சுரண்டலை ஒழிக்கேலாது.”
“சுரண்டல் சுரண்டல் எண்டு சொல்லுறாய் சுரண்டல் எண்டால் என்ன? உண்மையிலை சுரண்டல் எண்டால் என்ன வெண்டு எனக்குத் தெரியாது”
“பொங்கை பார்!”
சின்னத்தம்பி தன்னுடைய சுட்டுவிரலினைக் காம்பறாவின் வாயிலூடு சுட்டிக் காட்டினான்.
அவனுடைய விரலுக்கு நேராகத் துரையின் பங்களா. காம்பறாவிலிருந்து பார்க்கவே பங்களாவிலே கொலுவிருந்த சொகுசின் அழகு புலனாயிற்று. இம்பாலா கார்ஒன்று பங்க ளாவின் போர்ட்டிக்கோவை நிறைத்துக் கொண்டு நின்றது. இன் கேட்டிலிருந்து அவுட்கேட்வரை உள்ளேயிருந்த ரஸ்தா வின் வளைவிலே அழகுபதிய வெட்டப்பட்டிருந்த பச்சைப் புயூடிக்கா மரக் கொடிகள் படர்ந்திருந்தன. ஒவ்வொரு செடி கொடிகளிலும் மலர்த்தலைகள். ‘குட்டி’ ஹக்கலைப் பூந்தோட் டம். ன்னல் கதவுகளிலும் வாசல் கதவுகளிலும் பிளாஸ்ரிக் திரைவிரிப்புக்கள் சளசளத்தது. சம்மர் ஹவுஸில் பஷன் புரூட் மரம் படர்ந்து தூண்களைக் கூட மறைத்தது.
‘”அது துரைமார் இருக்கிற பங்களா.”
கந்சாமியின் பதிலில் பக்தியுமிருந்தது.
“உந்த பங்களாவையும் இந்த லயின் காம்பறாவையும் ஒப்பிட்டுப்பார் இரண்டு பேரும் மனிசர் தான். இவையள் சுரண்டப்பட்ட படியாலைதான் இப்புடிப் புறாக்கூண்டுகள்ளை அடைபட்டுக் கிடக்கினம். அவன்சுரண்டின படியாலைதான் அப்புடி மாளிகையிலை இருக்கிறான். உற்பத்திச் சாதனங்கள் அவன்ரை உடமை எண்டபடியாத் தான் இந்தபேதம். அதை எங்கடை யாக்கினாப் பேதமில்லை.”
“ஏன் நாங்கள் எல்லாரும் சேந்து கேட்டாத் தந்திடு வங்கள் தானே’
கந்தசாமி அப்பாவியாகக் கேட்டான்.
“நல்ல கதை நீளமில்லை. உவ்வளவு சொகுசாய் பஞ்சு மெத்தையில ஸ்பிறிங் கட்டிலிலை புரளுறதை அவை லேசிலை விடுவாங்களோ”
பொன்னுச்சாமி இருவரது உரையாடலையும் கேட்டுக் கொண்டு நின்றான்.
கந்தசாமி பேச்சைத் திசை திருப்பினான்.
“எனக்குப் போகப்போகவெல்லே ஒரு சங்கதி தெரிய வருகுது. ”
“என்ன சங்கதி”
“என்ரை மனிசி எங்களைவிட இளக்கமானவை. கோவியர் அதாலைதான் கட்டியடிச்சவை”
சின்னத்தம்பி வாய்விட்டுச் சிரித்தான்.
“நீ ஏமாந்திட்டாய்”
“ஆர் ஏமாந்ததெண்டு பாப்பம். சீதனக்காசுக்கு வட்டி யும் பொறுப்பும் தந்த காணிக்கு இப்பவே அரிப்பட்டிசெய் யத் தொடங்கப் போறன்.”
வஞ்சினமும் நபுஞ்சகமும் கந்தசாமியின் வார்த்தையில் கலந்திருந்தன.
சின்னத்தம்பி மீண்டும் சிரித்தான்.
“உனக்கு விசர்”
கந்தசாமியே சொன்னான்.
அத்தியாயம் ஒன்பது
முன் பக்கத்துக் கதவுகளையும் அடைத்து விட்டிருந்த காரணத்தால் காற்றோட்டம் முற்றாகத் தடை பட்டிருந்ததுஓகே,. இரவு எட்டரை மணி இருக்கலாம்.
தேவராசாவும் ரணசிங்காவும் புதிதாக வந்திருந்த கேஸுகளை ஆணிகழற்றித் திறந்த வண்ண மிருந்தனர்.
பெட்டிகளின் உள்ளேயிருந்த மீன்ரின்கள், பால்மா பவுடர்டின்கள் முகப்பௌடர் டின்கள் முதலியவற்றுக்கும் கறுப்பு நிறச்சாயத்தால் விலைகுறித்துக் கொண்டிருந்தார்கள் இக்பாலும் சின்னத்தம்பியும்.
சிறிய குச்சியைக் கொண்டு அந்தக் குப்பியில் நிறைந்து கறுத்திருந்த சாயத்திலே தேய்த்துத் தேய்த்துத் தனலட்சுமி ஸ்டோர்ஸ்சின் விலையடையாளத்தை ஒவ்வொரு ரின்களிலே யும் ஓரமாக எழுதிக் கொண்டனர். தரையெங்கும் பரவி யிருந்த புதுரின்களின் வாசனை கடையெங்கும் பரவியது.
கணக்கப்பிள்ளை மயில்வாகனம் ஃபில்றர் ரிப்சிகறெட்டை ஊதிய வண்ணம் ஏதோ சுவாரசியமான மர்மக்கதையில் மூழ்கிப்போயிருந்தான். எனினும் இடைக்கிடை இவர்கள் செய்து கொள்ளுகின்ற வேலைஒழுங்கு நடவடிக்கைகளையும் கவனிப்பான்.
ரின்களின் கவர்ச்சிகரமான லேபல்கள் தரையில் சித றுண்டு கிடந்தமை பல்வகைப் பூக்களைக் குவித்துக் கொட்டி யமை போலிருந்தது. தேவராசாவிற்கு ஓடிப்போய் அந்த முதலாளியார் மேசையருகேயிருந்த சுழல் மின்விசிறியைச் சுழல விடவேண்டும் போலத் தோன்றியது. அத்தனை தூரம் மூச்சுத் திணறியது, வேர்வை கொட்டியது. ரணசிங்கா சற்று முன் மின்விசிறியைப் போட்டதற்காக மயில்வாகனம் பேசிய தூஷணம் தேவராசாவின் கையைக் கட்டிப்போட்டு விட்டது. சின்னத்தம்பி, நுதலில் அரும்பிய முத்தான வியர்வைத்துளி களை வழித்தெறிந்து கொண்டான் இக்பால் வாயிலே மென்று கொண்டிருந்த லேகியம் சுற்றாடலையே மறக்க வைத்தது.
“ஏன் உந்தக் கதவுகளைத் திறந்தால் என்ன. புழுங்கி அவியுது’”
தேவராசா மயில்வாகனத்தை விளித்தான்
“சொப்- அக்ட் சட்டத்திற்கு மாறாய்த் திறக்கக் கூடாது.”
மயில்வாகனம் பதிலளித்தான்.
“பெருஞ் சுத்தக்காறர். இங்கை வெக்கையுக்கை கிடந்து நாங்கள் அவியுறம். சிகறட்புகையும் ஊதிவிடுறியள். காத்து வாறதுக்கும் சட்டம் காத்துப் போறதுக்கும் சட்டம்.”
தேவராசா சொல்லிக் கொண்டே நழுவினான்.
“எங்கை போறாய்”
“எனக்கு வேர்க்குது. வெளியிலை போய் காத்துப்பட நிண்டு போட்டுவாறன்,,
தேவராசா மறைந்தான்.
மயில்வாகனம் ஆத்திரத்தோடு எச்சரித்தான்.
“ரின் ஸ்ரொக் எல்லாம் நாளைக்கு விக்கிறதுக்கு வேணும். உந்த வேலையளை இப்பவே முடிக்காட்டி நாளைக்கு முதலாளி யாரிட்டைத் தப்ப மாட்டியள்”
மீண்டும் மர்மக்கதையுள் நுழைந்து விட்டான் மயில்வாகனம்.
“உன்ரை தங்கச்சியாரை நெடுக இப்புடியே விதவை யாய்த்தான் வைச்சிருக்கப் போகிறியா?”
சின்னத்தம்பி இக்பாலைப் பார்த்துக் கேட்டான்.
அக்கேள்விக்குப் பதிலாக இக்பால் பார்த்த பார்வையிலே ஆயிரமாயிரம் அர்த்தங்கள் கொழுவியிருந்தன. உனக்குஏன் அனாவசியமான தலையீடுஎன்று கேட்பதைப் போலிருந்தது இக்பாலின் நயனங்கள். கேள்வி பிறந்த க்ஷணத்திலேயே இக்பால் வேலையிலிருந்து ஸ்தம்பித்தான். சிந்தனையாழத்தில் இருப்பவன் போல் மகரிஷியின் பாவனை அவனிடமிருந்தது.
சின்னத்தம்பி முதற்கேள்வி பிறப்பித்த சூட்டோடு இரண்டாவது கேள்வியையும் பிறப்பித்தான்.
“தேவராசாவை அவளுக்குக் கட்டினால் என்ன”
சின்னத்தம்பியின்கைகள் வேலையிலேயே முனைந்திருந்தது.
“மெய்ய சொல்லன்”
சின்னத்தம்பி சீண்டினான்.
கெந்தகித்துக் கொந்தளித்தது இக்பாலின் மனோநிலை.
“சீ அவனுக்கா, அவளையா? கூடாது. கூடவே கூடாது”
இக்பாலின் உணர்வுகள் வார்த்தைகளாயின.
“ஏன்?”
“அப்படித்தான். இதுக்குமேல இதைப்பத்தி கேட்டி யெண்ணா வீண் கஜால்”
சின்னத்தம்பி மௌனமான புன்னகையோடு ரின்களை எடுத்து றாக்கியிலே அடுக்கினான். இக்பால் திடுதிப்பென அரசியலுக்கு தாவினான். அப்படித் தாவினால் சின்னத்தம்பி யின் சிந்தனையைப் புரட்டிவிடலாம் என்று எண்ணினான்.
“அப்பலோ பதினொண்டு போட்டுவந்திட்டுது. இப்ப பாத்தியா அமெரிக்கன் மூளையை? சீனாவில அப்பேலோ சந் திரனுக்குப் போட்டுவந்ததைப் பத்திஏதேனும் சிறுகுறிப் பெண்டாலும் சொன்னாங்களா?
“இண்டைக்கு எங்களுக்கு ஒருபிடி சோறு வேணுமோ? ஒருபிடி மண் சந்திரனிலையிருந்து வேணுமோ? எது முக்கியம்” “எத்தனை பெரிய சாதனை உனக்கு எப்பவும் வயிறு தான் முக்கியம்.
“சந்திரனைக் கடவுள் எண்டு கும்பிட்டவங்கள் இப்ப அங்கை போயிருந்து கொண்டு பூமியையும் கடவுள் எண்டு கும்பிடப் போறாங்கள்”
கடவுள்என்ற சொல்லைக் கேட்டதுமே இக்பால் வெற்றி கரமாகப் பின்வாங்கினான். சந்திர யாத்திரைப் பேச்சுக்கே அந்தளவில் முற்றுப்புள்ளி கிடைத்தது.
இக்பால் வேறு மார்க்கத்தில் தாக்கினான்.
“இந்தோனீசியாவில உள்ள கொம்யூனிஸ்ற் எல்லாரை யும் சுட்டது போல உலகத்தில உள்ள எல்லாக் கொம் யூனிஸ்ற்களையும் சுட்டாத்தான் சுதந்திரமும் ஜனநாயகமும் நிலைக்கும். அப்பாடியோ! கொம்யூனிஸம் எண்டா எவ்வளவு சர்வாதிகாரம்? பேசக் கூடாது. எழுதக் கூடாது. நினைச் சாலே பயங்கரம். ஜனநாயகம் எண்ணா அன்பு.”
“என்ரை தங்கமூளைக் குஞ்சு இக்பாலே. மெய்லேய் எண்ட வியட்னாம் ஊரிலை உலக – ஜனநாயகக் காவலர்கள் எண்டு சொல்லுற அமெரிக்கர் வெறிவிசர் நாயள் மாதிரி கண்ட கிண்ட எல்லாரையும் சுட்டுப் பொசுக்கினாங்கள். நீ தலைக்குமேலை தூக்கிக் கொண்டாடிற அமெரிக்கங்கள் சர்ப்பிணி மனுஷி ஒருத்தின்ரை வயித்தைக் கிழிச்சுப் பிள்ளையை வெளியாலை எடுத்து நசிச்சாங்களாம். அப்பிடிப் பட்டது உன்ரை அமெரிக்கன்ரை அன்படா”
“கொம்யூனிசப் பயங்கரம் பரவவிடாமத் தடுக்கிறதுக் குத் தானே இவ்வளவு சண்டை”
“எங்கையேயுள்ள அமெரிக்கனுக்கு வியட்னாமிலை என்ன வேலை?”
“மற்ற நாடு கஷ்டப்படேக்கை கைகட்டிக் கொண்டு பேசாமலிருக்கிறது ஜனநாயகமில்ல அது கொம்யூனிஸம்”
“ஏறப்பிளேனிலை இருந்து கீழே வியட்னாம் மகனை தள்ளு றதுக்குத் தான் ஆயிரக்கணக்கான மைலைத் தாண்டி வந்த வங்களே. ஒரு வியட்னாமியனைக் கொல்லுறதுக்கு அமெரிக்கா ஒன்பது கோடி சிலவழிக்குதாம். அப்பிடி யிருந்தும் இப்ப ஐஞ்சடிமனிசன் ஏழடிமிருகங்களுக்கு போட்ட அடிதான் அது களைக் கம்போடியாக்கும் தாவ வைச்சுது”
“பிரிட்டினும் ஒஸ்ரேலியாவும் தென்வியட்னாம் அரசுக் குச் சப்போற் பண்ற மாதிரி சீனாவும் ரஷயாவும் வியட்கொங் கொறில்லாக்களுக்கு சப்போற் பண்ணுது தானே.”
‘‘ஓம்’’
“அது பிழையில்லியா?”
“நீதியும் நியாயமும் சத்தியமும் எந்தப் பக்கத்திலை இருக்குது?”
“ஜனநாயகம் தான் நீதி. கொம்யூனிசம் தான் அநீதி”
சூடேறும் வாதத்தால் வேலையைக் கண்ணோட்டம் விட்ட மயில்வாகனம்; அவர்கள் இருவரதும் கைகள் வேலையைச் செய்து கொண்டிருப்பதுடன் வாய் மட்டுமே பேசிக் கொண் டிருப்பதால் வாளாதிருந்து|a|கொண்டான்.
“முதலாளித்துவத்தை நீ ஜனநாயகம் எண்டு நினைச்சுக் கொண்டு மயங்குகிறாய். ஜனநாயகம் இதில்லை. இதுக்குப் பேர் பணநாயகம். பொதுவுடமையிலை தான் புதிய ஜ நாயகம் வரப்போகுது.”
“ஜனநாயகத்தில புதிசும் பழசும் எண்டில்லை. சர்வாதி காரம் ஒருநாளும் ஜனநாயகமாகாது. பொய்யை மெய் யெண்ணு சொல்லி கொம்யூனிஸத்தை ஜனநாயகம் எண்டு நீங்கள் தான் மயக்கிறீங்க. மக்களிடை சமய நம்பிக்கை எல்லாத்தையுமே மழுங்கடிக்கிறீங்களப்பா. காலேல பூத்து மாலேல வாடிற பூக்கூட நல்ல வாசம் தரணும் எண்டு பூக்குது பாத்தியா. சமயம் இல்லாட்டிப் போன மனிஷ ஜீவியமும் மணமில்லாப் பூத்தான். ஒட்டுறவு இல்லாத ஜீவியமாயிடும். அது நமக்கேன்”
இக்பால் தத்துவ விசாரத்தில் இறங்கினான்.
“எல்லாச் சமயங்களும் சொல்ற முழுவிஷயத்தையும் சாராம்சமாக்கி அதை நடைமுறைப்படுத்த கொம்யூனிஸத் தாலை தான் முடியும்.”
பக்கத்து ஜஸீமா ஜுவலரி மார்ட்டிலிருந்து ஜமால்டீன் இவர்களது உரையாட்டினை இரசித்துக் கொண்டே பின்புறக் கதவிடுக்கால் உள்ளே வந்தான்.
அவன் பொடி போட்டான்.
”நல்லாச் சொல்லு இக்பாலின்ர காதைக் குடைஞ்சு சொல்லு.”
சின்னத்தம்பி சிரித்தபடி சொன்னான் ;
“உதெல்லாம் கழுதைக்கு உபதேசம். கல்லிலை நார் பிடுங்கிற வேலை.”
ஜமால்டீனும் சேர்ந்து சிரித்தான். அவன் சிரித்தது மயில்வாகனத்திற்குப் பிடிக்கவில்லை.
“சங்க விஷயமா இன்னும் யோசிக்கலையா?'”
ஜமால்டீன் தன்னுடைய வழமையான வாஞ்சையை வெளியிட்டான்.
“கடையுக்கை காரணம் இல்லாமை ஒருத்தரும் வரக் குடாதெண்டு முதலாளியார் கடும் உத்தரவு போட்டிருக்கி றார். ஜமால்டீன் நீ கோவியாமை வெளியாலை போ. கதைக் கிற விஷயங்களைப் பகல்லை ஓய்வாய் நிக்கிற நேரங்கள்ளை பாத்துக் கதைக்கலாம். இப்ப இவங்களுக்கு எல்லாம் வேலை குடுத்திருக்குது. அண்டைக்கொரு நாள் ராவிலை கடைக்கே வந்து நிண்டிட்டு போன அப்புத்துரை அருளாமல் நாலு பாக் கர் கோல்ட்கப் பேனையளை எடுத்துக்கொண்டு போட்டான். இந்த ஊரிலையே நாங்கள் தான் இந்தப் பேனைக்கு ஏஜன்ட் என்டபடியால் தான் அப்புத்துரையின்ரை முதலாளியார் அவன்ரை பெட்டிக்கை கண்டு சமுசியப்பட்டு என்னட்டைச் சொன்னார். அதுக்குப் பிறகு பில் புத்தகங்களை புரட்டிப் பாக்கேக்கை தான் நாலு பேனையளுக்குக் கணக்கைக் காணம். முதலாளியார் விஷயத்தைக் கேள்விப் படுறதுக்கு முன்னர் அப்புத்துரை பேனையளைத் திருப்பித் தந்திட்டான். இல் லாட்டி என்ரை வேலை பறந்திருக்கும். அப்புத்துரையன் தான் எடுத்தது பத்தாதெண்டு சும்மா பகிடிக்குத் தான் நான் எடுத்தன் எண்டு கேந்தி மூட்டுகிறான். அப்ப எப்பிடிக்கொத்த காலம், ஆய்!”
மயில்வாவனம் லெச்சரை நிறுத்தினான்.
“பனங்கொட்டை சூப்பி வேசமோன்'”
முனுமுனுத்த வண்ணம் கேட்டும் கேளாதவன் போல் வந்த வழியே திரும்பினான் ஜமால்டீன்.
ரணசிங்கா உடைத்த பெட்டிகளை தைத்த போது ஆணி யில் படவேண்டிய சுத்தியல் கையில் பட்டுக் கொண்டது. சுத்தியல் பட்ட இடம் பூராவும் கட்டியான இரத்தத்தால் சிவந்து போனது.
”என்ன சுத்தியலாலை அடிச்சுப் போட்டியே. உனக் கொரு நிதானமில்லை”
சின்னத்தம்பி அனுதாபத்தைத் தெரிவித்தான்.
ரணசிங்கா கையைத் தூக்கிப் பிடித்தான்.
மயில்வாகனத்துக்கு மருமக்கதை சலித்துப் போய் விட் டதோ என்னமோ அந்த ஐம்பதுசத அட்டைப்படக் கவர்ச் சியைத் தூக்கி வீசினான். அன்றைய தினசரிப் பத்திரிகையுட் தலையை விட்டான்.
“என்ன சின்னத்தம்பி! சங்கானையிலை நளவங்கள் தேத் தண்ணிக் கடைக்குள்ளை புகுந்து தேத்தண்ணியும் குடிக்கிற தாய்ப் படம் போட்டிருக்குது? உன்னைப்போல அலுகோசு கள் தானாம் புத்தி சொல்லுகினம். உந்தக் கொழுப்புக்கு எல்லாமாய்க் கடவுளின்ர தீர்வை நிச்சயமாக் கிடைக்கும்.”
“எண்டாலும் அடுத்த லெக்சனிலை எங்கடை தமிழரசு சீற்றுகளை இடதுசாரி ஆட்கள் உவையள் ஒருத்தராலையும் ஒண்டும் செய்யேலாது.”
இடைநுழைந்தான் தேவராசா.
“கொங்கிறசுக்கு இந்த முறை மூண்டு நாலு எண்டா லுங் கூடக்கிடைக்கும். தமிழரசு நல்லாய் விழும்.”
மயில்வாகனம் அனுகூலித்தான்.
”உதிலை வேலையில்லை”
தேவராசா பிரதிவாதித்தான்.
“தமிழரசு என்னத்தைச் சாதிச்சுது? மூண்டரை வரிய மாய் கவுண்மேன்ரோடை சேர்ந்திருந்து மாவட்ட சபை இந்தா வருகுது பொந்தா வருகுது எண்டு தமிழர் எல்லாரை யும் பேக்காட்டு பேக்காட்டெண்டு பேக்காட்டிப் போட்டுது. வழுக்கல் மண்டை மந்திரியார் தன்னோடை மோளுக்கு இந்தியாக்காரனை கட்டிறதுக்குத் தான் ஒருக்காத் தமிழா ராச்சி மாநாட்டுக்கும் போட்டு வந்தார். இதை விட வேறை என்னத்தைச் சாதிச்சார்?N.ஆனையிறவுக்கு அங்காலை வந்து தமிழ் தமிழ் எண்டு கத்துவினம். பேந்து கருவாக்காட்டிலை சிங்களம் சிங்களம் எண்டு கொண்டாடுவினம்.
“உவ்வளவாவது பொன்னர் கட்சி செய்துதா”
“நீ வோட்டைப் போட்டுப் பார். ஓராள் ரண்டாளை மட்டும் வைச்சுக் கொண்டு என்னத்தைப் பிடுங்கலாம்?”
“அரைச் சபாநாயகர் பதவி பிடுங்கலாம்.”
“தமிழ்ச் சாதி எல்லாம் ஒண்டு சேந்து கொங்கிறஸை அனுப்பிச்சினம் எண்டால் தான் தமிழுக்கும் நல்ல காலம் வரும். சமஷ்டி எண்டால் சிங்களவர்கள் ஒருநாள் எண்டா லும் ஒத்து வராயினம்.”
“சமஷ்டியாலை தான் தமிழன் தலை நிமிர்ந்து வாழலாம். ஒற்றையாட்சி ஒரு குப்பைக் கூடை. தமிழன் அதிலை அடிமை.”
“நாட்டைக் கூறு போட்டுப் பிரிக்கிறது சரியான தேசத் துரோகம்.”
“ஒரு நாட்டிலை வாழுற தேசிய இனத்தை இரண்டாந் தரப் பிரசைகளாய் நடத்திறதும் எவ்வளவு பெரிய துரோகம்.”
“நாட்டைப் பிரிச்சால் இன ஒற்றுமை குலையும். இன வேற்றுமையெல்லா வரும்?”
“நாங்கள் ஒண்டும் நாட்டைப் பிரிக்கேல்லை. மத்திய அரசாங்கம் ஒண்டாயே இருக்கும். சமஷ்டி எண்டா என்ன வெண்டு தெரியாதவை தான் உப்புடிக் கொத்த கதைகள் பேசினம். தமிழ் இன விடுதலை உணர்ச்சி என்ற சாமான் இருந்தா உந்த எண்ணம் வராது.”
“தனிச்சு நிண்டதாலைதான் தமிழன் இவ்வளவு சீரழிஞ்சு போனவன் எண்ட உண்மை தெரியாமைத் தான் சமஷ்டி எண்டு கழுதை போலக் கத்துகினம். ஒன்றுபட்டாத் தான் உண்டு வாழ்வு.”
“பௌத்த சிங்களவனோடை தமிழனுஞ் சேர்ந்து சிங்கள வனாகிப் பேந்து புத்த சமயமாகினால் எங்களின்ரை இனம் எண்ட ஒண்டு வருங்காலத்திலை இல்லையெண்டு நிச்சயமாய்ச் சொல்லலாம். இலங்கை முழுவதும் ஒரே சிங்கள பௌத்த மயமாயிடும். தமிழ் எண்டோ சிறுபான்மையின்ரை சமய மெண்டோ ஒண்டிராது.”
“இனத்தை அழிக்காமைப் பாதுகாக்கிறதுக்குத் தான் அவையளோடை நாங்கள் சேருகிறது. ஒற்றுமையாய் நிண் டால் எல்லாஞ் செய்யலாம்”
“பாலையும் வெறுந் தண்ணியையும் கலந்து போட்டு பால் வேறை வெறுந் தண்ணி வேறை எண்டு சொல்ல எலுமே. தமிழன் எண்டால் ஒரு தனியான இனம். அது உரோசமில்லாதவைக்கு பொன்னற்றை வால்ப்பிடியளுக்கு ஏனிந்தப் பாடு?”
“அவரைப் போலைப் பெரிய மூளைசாலி ஆர் இருக்கிறாங்கள்?'”
“ஓ அது சரி! அவ்வளவு மூலைசாலி எண்ட படியாலை நாச்சிமாகோயிலடியிலை போட்ட அறுபத்தைஞ்சு பவுண் சங்கிலியையும் வயித்துக்கை அமுக்கினவர். இருபது இலட்சத்திற்குத் தன்ரை மோளுக்குச் சீதனம் கொடுத்தவர்”
“தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி நீ ஏன் கதைக்கிறாய்?”
“பின்னை நீங்கள் என் அவற்றை தனிப்பட்ட மூளையைப் பற்றிக் கதைக்கிறியள்.”
“சரி சரி. வாய் காட்டினது போதும். வேலையைச் செய்யன்.”
சின்னத்தம்பி இருவரது போராட்டத்தையும் கூர்மை யாகக் கேட்டு விட்டுத் தேவராசாவைப் பார்த்துச் சிரித்தான்.
தேவராசா முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டான்.
அவ்வேளை பூட்டப்பட்டிருந்த முன்புறக் கதவுகளின் ஊடாக கனகசபை மாஸ்டர் குரல் வந்தது.
“சின்னத்தம்பி ஒரு றாத்தல் பட்டர் தா”
சின்னத்தம்பி எழுந்து சென்று குளிரூட்டும் பெட்டியைத் திறந்து ஒரு ருத்தல் பட்டரைப் பையுள் போட்டுப் பிற் புறக் கதவால் தெருவோரம் வந்தான்.
“பட்டர் பூசாட்டி பாண் வயித்துக்குள்ளை இறங்காதோ”
சின்னத்தம்பி கேலி பண்ணிக் கேட்டான்.
“நான் பழங்குழம்போடையும் தொட்டுத் திண்டு போடு வன். மனுஷி குழந்தையளுக்கு பட்டர் இல்லையெண்டால் உலகமில்லை எண்டு பட்டினி கிடந்து விடுவினம். இந்தா காசு”
சின்னத்தம்பி பணத்தை வாங்கி வைத்துக் கொண்டான். கனகசபை மாஸ்டர் சாம்பல் வர்ணத்தில் றொௗசரும் நீல நிறத்தில் புஸ்-சேட்டும் போட்டிருந்தார். அரை மீசை.
“என்ன உங்கடை ரொக்ஸீயவாதிகள் எஎலாரும் இப்ப நிரந்தரப் புரட்சி பற்றி வாயலை எண்டாலும் பேசிறதை விட்டிட்டினமா? ஒரு சிலவனையும் பேப்பரிலை காணவில்லை”
சின்னத்தம்பி கேட்டான்.
“உண்மையிலை ரொக்ஸீயவாதி தான் சரியான மார்க் ஸீயவாதி. உன்னைப் போலை மார்க்ஸீய நுணுக்கங்களைப் படித்துணராத மிலேச்சப் புத்திசீவி யள் பொய்யை உண்மை யாய் நினைக்கிறவையள்.”
கனகசபை மாஸ்டரின் விளக்கத்தைக் கேட்டதுமே சின்னத்தம்பி மென்நகை செய்தான்.
“நூறு மலர்களை மலர விட்டால் தான் நல்ல பிரகாச முள்ள மலரின் பெருமை புலப்படுமோ?”
அவனுடைய உள்ளம் கேட்டது.
யாரோ மாமேதையின் மேற்கோள் நினைவில் அலை மோதியது.
“என்ன சிரிக்கிறாய்? பொருள்முதல் வாதத்திலை மந்த புத்தி இருக்கிறதாலை தான் உனக்கு உந்தச் சிரிப்பு வருகுது.”
சின்னத்தம்பி இப்போது வெடிச் சிரிப்புச் சிரித்தான்.
“இந்தப் பட்டரைப் பார். ஒஸ்ரேலியாவிலை செய்து இங்கை தரகு முதலாளியலாலை இறக்கப்பட்டு உன்ரை குட்டி முதலாளியாலை என்னிலை சுரண்டப்படுகுது. உலகம் முழுக்க இப்புடித் தான் சர்வதேச முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் இருக்குது இதை சர்வதேச தொழிலாளப் புரட்சி எண்ட ஒண்டாலை தான் சுக்கு நூறாக்கலாம் ஒருசில நாட்டிலை மட் டும் புரட்சி வந்தாப் போலை முதலாளியம் சாகப்போற தில்லை. அது வெட்ட வெட்டத் தளைக்கிறது. அதாலை தான் இண்டைக்கு ரஷ்யாவிலை பியட் கொம்பனி எழும்புது. உலகப் புரட்சி நடந்தால் தான் நிச்சயமாய் எல்லாப் பிற்போக்கும் தவிடு பொடியாகும்”
கனகசபை மாஸ்டர் சொன்னார்.
“எந்த மார்க்ஸீயவாதி உலகப் புரட்சியை எதிக்கிறான்? ஒருவருமில்லையே”
சின்னத்தம்பி கேட்டான்.
“உதட்டளவிலை தான் எல்லா நாட்டிலையு முள்ள தொழி லாளியலை றொக்ஸியத்துக்குக் கீழை ஐக்கியப்படுத்திக் கொண் டாத் தான் உலகப்புரட்சி வரும்.”
‘”இல்லாட்டி?”
”உலகப் புரட்சியும் இல்லை”
“அப்ப சீனாவிலையும் ரஷ்யாவிலையும் நடந்த புரட்சி யெல்லாம் என்ன?”
“அதெல்லாம் வெறுங் கலகத்தாலை ஏற்பட்ட அரசு மாற்றம். குறுகிய; மலையாலையும் கடலாலையும் பிரிக்கப்பட்ட நாடுகளை தொழிலாளி நாடு அல்லது பாட்டாளி வர்க்கச் சர்வாதிகார நாடு எண்டு கூடச் சொல்றது பிழையானது. பாட்டாளி வர்க்கம் முழுப் பாராளும் வர்க்கம் என்பது தான் சரியான மார்க்ஸீயச் சிந்தனை. உலகப் புரட்சிக்குப் பிறகு தான் பாட்டாளி வர்க்க ஜனநாயகம் வரும.”
“உதெல்லாம் கற்பனா வாதம்”
“எது கற்பனாவாதம் எண்டதைக் காலம் பதில் சொல்லத் தான் போகுது.”
அதீதமாய் நினைச்சுக் கொண்டு ஆகாயத்தில இருந்து புரட்சி வா எண்டா வருமே”
“உதெல்லாம் எதிர்ப் புரட்சி வாதம்”
“ஒவ்வொருதரும் ஒவ் வொரு மாதிரியாய் இருக்கிறது போலைத் தெரிந்தாலும் எல்லாததுக்கும் பினனாலை வர்க்கம் இருக்குது மாஸ்டர்”
உறுத்தினான் சின்னத்தம்பி.
”உது உன்ரை சித்தாந்தம். பார் ஒவ்வொரு தனி நாடு களையும். இப்பவும் வியட்னாம் வேறை. சீனா வேறை கொரியா வேறை.”
“ஏகாதிபத்ய நாடுகளும்; ஜப்பான் வேறை அமெரிக்கா வேறைதானே”
“அவங்கள் வேறை எண்டாப் போலை நாங்களும் வேறையே”
“றொக்ஸீயம் எண்டா அது தொழிலாளியளின்ரை பாதைக்கை வந்திட்ட பெற்றி – பூஷ்வாப்பதை தான் மாஸ்டர்”
“விவாதிக்க வலுவில்லாத படியால் மிகச் சுருக்கமாய் எங்களைப் பெற்றி – பூஷ்வா எண்டு சொல்லித் தப்புங்கோ”
“ஏன் எங்கடை ஆளும் பாலிமென்ரிலை தேசீய முத லாளியளோடை உங்கடை வர்க்க நிலைப்பாடு வெளிச்சமாயிட்டுத்தானே”
பிற்புறக் கதவுகளால் எட்டிப் பார்த்துக் குரல் கொடுத் தான். மயில்வாகனம்.
“நெடுக அங்கை கதைச்சால் இங்கை வேலை இல்லையோ”
“சரி பேந்து சந்திப்பம்”
விடை பெற்று இருளினுள் மறைந்தார் கனகசபை மாஸ்டர்.
– தொடரும்…
– மழைக்குறி, முதற் பதிப்பு: ஜனவரி 1975, ஆர்.எஸ். அச்சகம், யாழ்ப்பாணம்.