மழலை இன்பம்





(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஆந்தை கத்துவது போலவும், காக்கை கரைவது போலவும் மற்றவர்களுக்குக் கேட்க முடியாத ஒலியாக இருந்தாலும் பெற்றவர்களுக்கு அது குழந்தையின் மழலை. அதனால் அவர்கள் அடையும் இன்பமே தனி. உவமை கூற முடியாத இன்பம் அது.
ஒரு சமயம் அதியமான் என்ற வள்ளலிடம் இந்த மழலை இன்பத்தைப் பற்றி விளக்கிக் கூற வேண்டிய அவசியம் ஒளவை யாருக்கு ஏற்பட்டது. ‘வீரனாகவும் வள்ளலாகவும் விளங்கும் அதியமானுக்குத் தம்முடைய பாட்டுக்கள்கூட ஒருவகை மழலைதான்’ என்று சாதுரியமாகக் கூறியிருக்கிறார் ஒளவையார். குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாகப் பேணி அவர்கள் மழலை கேட்டு இன்புறும் பெற்றோர்களைப்போல் புலவர்களைக் கண்ணும் கருத்துமாகப் பேணி அவர்கள் கவிதைகளைக் கேட்டு இன்புறும் அதியமானை நமக்குச் சித்திரித்துக் காட்டுகிறது ஒளவையாரின் பாட்டு!
ஒளவையாருக்கும் அதியமானுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலைக் கேட்போம்.
“அதியர் கோவே! குழந்தைகளின் மழலை என்று பெற்றோர்கள் தேனாகவும் பாலாகவும் கருதி வானளாவப் போற்றுகிறார்களே… யாழ் வாசிப்பதைப்போல அவ்வளவு இனிமையா மழலை மொழிகளில் நிறைந்திருக்கின்றது?” ஒளவையார் ஒரு தினுசாக நகைத்துக் கொண்டே கேட்டார்.
“இருந்தாற்போலிருந்து திடீரென்று மழலையைப் பற்றி ஏன் இப்படிக் கேட்கிறீர்கள்? அதில் தங்களுக்குத் தெரியாதது எனக்கென்ன தெரியப்போகிறது?” என்றான் அதியமான்.
“அதற்குச் சொல்ல வரவில்லை அதியா! அதில் வேறு ஒரு தத்துவம் அடங்கியிருக்கிறது. அதை விளக்குவதற்காகவே உன்னிடம் இதைப் பற்றிக் கேட்டேன்.’ ஒளவையார் அதியமானைக் கூர்ந்து நோக்கினார்.
“அப்படியானால் எனக்கும் மகிழ்ச்சிதான் தாயே! அந்தத் தத்துவத்தை நானும் விளக்கமாகத் தெரிந்து கொள்ளவே ஆசைப்படுகிறேன்” அதியமான் குழைவான குரலில் வேண்டிக் கொண்டான்.
“கலை, கவிதை, கற்பனை இவைகளில் ஈடுபட்டுச் சுவைப்பதற்கு என்ன இருக்கிறது என்று சிலர் இவற்றை வெறுக்கிறார்கள். ஏட்டுச் சுரைக்காய் என்று இகழவும் செய்கின்றார்கள். குழந்தையின் மழலையில் யாழைப் போன்ற இனிமை இல்லை. சொற்களையோ எழுத்துக்களையோ, மாத்திரை, காலம், ஒலி வரம்பு இவைகளையோ மீறியே உச்சரிக்கின்றன குழந்தைகள். உளறிக் குழறும் அந்த ஒலிகளுக்குப் பொருளும் கிடையாது. ஆனால் இவ்வளவு குறைபாடுகளும் நிறைந்த அந்த மழலை மொழிகள் பெற்றோர்க்கு மட்டும் தேவகானமாகத் தோன்றுகின்றன. இது ஏன் அதியா? உன்னால் கூறமுடியுமா?”
“குழந்தைகள் மேல் பெற்றோருக்குள்ள அன்பும் பாசமுமே பெரும்பான்மையான காரணம்! தவிர, முற்றாத அந்த இளம் மொழிகளில் ஒருவகைக் கவர்ச்சியும் இருக்கிறது. எனக்குத் தோன்றும் காரணம் இவ்வளவுதான் தாயே?”
“நல்லது! அப்படியானால் கலையையும் கவிதையையும், கற்பனையையும் இரசிக்க வேண்டுமானாலும் அவைகளை இயற்றும் கவிஞர்களின்மேல் அன்பும் பாசமும் இருந்தால்தானே முடியும்? கவிஞர்களையும் சிற்பிகளையும் அன்போடும் ஆதரவோடும் போற்றிப் பேணத் தெரியாதவர்கள், கவிதை களையும் சிற்பங்களையும் எப்படி மெய்யாக ரசிக்க முடியும்? குழந்தையின்மேல் பெற்றோருக்கு இருக்கிற பாசமும் அன்புமே குறைபாடுகள் நிறைந்த அதன் மழலையைச் சுவையோட கேட்கச் செய்யும் உணர்வை உண்டாக்குகின்றன. கலைஞர்களின்மேல் மெய்யான அன்பும் பாசமும் அனுதாபமும் இல்லாதவர்கள் கலைகளை ஏட்டுச் சுரைக்காய் என்று கூறாமல் வேறென்ன செய்வார்கள்? என்ன, நான் சொல்வது விளங்குகிறதா?”
“விளங்குகிறது தாயே! கவிதை முதலிய கலைகளை மழலை மொழிகளோடு ஒப்பிடுகிறீர்கள். கவிஞர் முதலியோரைச் சூது வாதற்ற குழந்தைகளாக உருவகப்படுத்துகிறீர்கள். இரசிகர்கள் பெற்றோர்களைப் போன்ற அன்பும் பாசமும் கொண்டவர்களாக இருந்தாலொழிய எந்தக் கலைக்கும் நல்ல பாராட்டும் வாழ்வும் கிடைக்க இயலாது என்று கூறுகிறீர்கள். ஆகா! அற்புதமான தத்துவம்! என்ன உன்னதமான கருத்து? எவ்வளவு அருமையாக ஒப்பிட்டு விளக்கிவிட்டீர்கள்!”
“அதியா! நான் சொன்னால் நீ கோபித்துக் கொள்ள மாட்டாயே..? சொல்லட்டுமா?”
“தாங்கள் கூறி நான் எதற்குக் கோபித்துக் கொண்டிருக்கிறேன் தாயே! அஞ்சாமல் கூறுங்கள். கேட்க ஆவலாயிருக்கிறேன்.”
“கவிஞர்களைத் தன் குழந்தைகள்போலக் கருதி அன்பும் பாசமும் அனுதாபமும் கொண்டு பேணக்கூடிய பொறுப்பு உணர்ந்த அரசன் இந்தத் தமிழ்நாட்டில் ஒரே ஒருவன்தான் இருக்கிறான்.அந்த ஒருவனுக்குக் கவிதைகள் என்றால் தான் பெற்ற குழந்தைகளின் அமிழ்தினும் இனிய மழலையைக் கேட்பது போன்ற இன்பம்தான். கவிஞர்கள் என்றால் அவனுக்கு உயிர். ‘கவிதையைவிடக் காவிய கர்த்தா உயர்ந்தவன். காவிய கர்த்தாவைவிட அவன் ஆன்மா உயர்ந்து விளங்குவது. காவிய கர்த்தாவும் அவன் ஆன்மாவும் இல்லை என்றால் கவிதையே இல்லை’ என்பதையெல்லாம் நன்றாக அறிந்தவன் அந்த ஒரே ஒரு அரசன்தான்..”
“அந்த மகாபாக்கியசாலி யார் தாயே? நான் அறிந்து கொள்ளலாமோ?”
அதியமானின் குரலில் ஏக்கம் இழையோடியது.
“அந்தப் பாக்கியசாலியின் பெயர் அதியமான் என்று சொல்வார்கள்” ஒளவையார் கலகலவென்று வாய்விட்டு நகைத்துக்கொண்டே கூறினார்.
அதியமான் நாணித் தலைகுனிந்து விட்டான். பணிவின் வெட்கம் அவனைத் தலைவணங்கச் செய்துவிட்டது!
யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணரா
பொருளறி வாரா ஆயினும் தந்தையர்க்கு
அருள் வந்தனவால் புதல்வர்தம் மழலை
என்வாய்ச் சொல்லும் அன்ன ஒன்னார்
கடிமதில் அரண்பல கடந்த
நெடுமான் அஞ்சிநீ அருனன் மாறே! (புறநானூறு -92)
புணரா = சேர்ந்திரா, புதல்வர் = குழந்தைகள், மழலை = குழந்தை மொழி, ஒன்னார் = பகைவர், மதில் = கோட்டைச் சுவர்.
– புறநானூற்றுச் சிறுகதைகள், இரண்டாம் பதிப்பு, டிசம்பர் 2001, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை