மலை வீடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: January 11, 2025
பார்வையிட்டோர்: 18,933 
 
 

(1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எழுத்தாளனின் படைப்பு வெற்றி பெற கருவும், உருவும் திருவுடன் அமைந்தால் மட்டும் போதா; அந்தப் படைப்பு உயிருடனும் இயங்க வேண்டும். அவ்வாறு கருவும், உருவும், திருவும், உயிரும் சேர்ந்த படைப்பே படிப்பாளனின் உணர்ச்சியைத் தூண்டி அவனையே தன்னுள் ஈர்த்து கொள்ளும்; கதையின் – படைப்பின் – முதலிலிருந்து இறுதி வரை கதையை அவன் பிடித்துச் செல்லாமல், கதையே அவன் கையைப் பிடித்து அவன் இதயத் துடிப்பைப் பிடித்து தன்னுடன் அழைத்துச் செல்லும். கடை முடிந்ததும் படித்தவன் “ஐயோ! இவ்வளவு நேரம் நம்முடன் இருந்தவர்களை காணவில்லை” என்று திகைக்கும்படி வைக்கும். 

எல்லாவற்றிற்கும் மேலாக, எத்தனை ஆண்டுகள் கழித்துப் படித்தாலும் நிகழ்காலத்தில் கண்முன் நடப்பது போன்ற உணர்ச்சியினைப் படிப்பவன் உள்ளத்தில் கிளர்ந்தெழச் செய்தல் வேண்டும். 

மேலே கூறிய அத்தனை ஆற்றல்களையும் ‘மலை வீடு’ சிறுகதை பெற்றுள்ளது. அதனால்தான், சுமார் அறுபதாண்டுகளுக்குப் பிறகும் இக்கதையைப் படிக்கும்போது இரவில் வீசும் இதமான குளிர் காற்றை சுகமாக உணர்கிறோம். 

செவ்வாய் தோஷம் உள்ள ஒரு பெண் காதலில் தோல்வியுற்று தற்கொலைச் செய்து கொள்கிறாள். அவள் ஆவி அவ்வீட்டில் இரவில் உலாவருவது போன்ற கற்பனை. எனினும், ஓர் ஆவியின் திகில் கதையா இல்லாமல், அற்புதமான சிந்தனைக் கதையாகவும் அருமையான காதல் கதையாகவும் மனத் தத்துவத்தின் அடிப்படையில் ஆசிரியர் இதவை உருவாக்கியுள்ளார். 

மூட நம்பிக்கையின் அடிப்படையில் சமுதாய மக்களின் சிந்தனை வாழ்க்கை அவலமாக்கி விடுகிறது என்ற உள்ளுறையைக் கொண்ட அற்புதமான மனோதத்துவக் கதை இது. கதை ஆசிரியர் தம் பதினெட்டு வயதில் எழுதிய இந்தச் சிறுகதை, காலத்தை வெல்லும் படைப்பு என்ற கூறலாம். 

– தாமரைக்கண்ணன்

மலை வீடு

பரங்கி மலையிலிருந்து மீனம்பாக்கம் போகும் சாலை. அமைதிக்குத் துணையாக அந்தச் சாலையிலே அடர்ந்து செழித்து வளர்ந்த அரச மராங்களும், ஆல மரங்களும் இருபுறமும் கோட்டையைப் போல் விளங்கின. 

அந்தச் சாலையில் காரில் போகிறவர்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாகத் தனித்து நிற்கும் சிறு வீடொனறைப் பார்க்காமலிருக்க முடியாது. 

அமைதி குடிகொண்ட அந்தச் சாலையில், களையிழந்து தனிமையாக திற்கும் அந்தப் பங்களாவைப் பார்க்கும் எவருக்கும் ஒருவித யண்ணம் தோன்றாமல் போகாது. 

நான்கு வருடங்களாக அந்த வீட்டுக்கு யாரும் குடி வரவில்லை. காரணம், வீடு ஊருக்கு ஒதுக்குப் புறமாயிருப்பதாலோ, தனிமையாக இருப்பதாலோ என்றுதான் முதலில் எண்ணினேன். அந்த வீட்டில் ‘பேய், பிசாசு’ குடியிருக்கிறது என்ற வதந்தியை நான் கேலி செய்தேன். 

அந்த வருஷம்தான் நான் சென்னையில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தேன். ‘காலேஜ் ஹாஸ்டலை’க் கண்டாலே எனக்குப் பிடிப்ப நில்லை. என்னை அறிந்த நண்பர்களுக்கு நான் தனிமையை விரும்பு நிறவன் என்பது நன்கு தெரியும். நான் வருவதற்கும் குடியிருக்க வீடு கிடைக்காத திண்டாட்டம் சென்னையில் உண்டாவதற்கும் சரியாக இருந்தது. எனவே நான் வந்தது முதல் வீடு தேடாத நாளேயில்லை என்று சொல்லலாம். 

ஒருநாள் செங்கல்பட்டுக்கு சைக்கிளிலேயே செல்ல வேண்டும் என்று நாங்கள் மூன்று பேர் முடிவு செய்து கொண்டோம். என்னைப் போல் அவர்களும் வீட்டிற்காக அலைபவர்கள்தாம். வழவழவென்று நார் போடப்பட்ட மவுண்ட்ரோட்டில் சைக்கிளில் போவது மிக இன்பமாக இருந்தது. அப்படிப் பரங்கி மலையைத் தாண்டிப் போகும் போதுதான் மேற்படி வீடு என் கண்ணுக்குப்பட்டது. 

நல்ல களை பொருந்திய வீடுதான். சுற்றிலும் தோட்டம். வெள்ளைக் தாரர்களுடைய நாகரிகத்திற்குத் தக்கபடி அந்த வீடு கட்டப்பட்டிருந்தது. கவனிப்பாரில்லாததால் ஒட்டடையும், தூசியும் படிந்து காட்சியளித்தது ‘வீடு குடிக்கூலிக்கு விடப்படும்’ என்று போடப்பட்டிருந்த மர பலகையொன்று மழையிலும் வெயிலிலும் காய்ந்து தொங்கிக் கொண்டிருந்தது. மேற்படி வீட்டு வாயிலில் பொறிக்கப்பட்டிருந் ‘மலை வீடு’ என்னும் பொருள் கொடுக்கும் ‘மவுண்ட் ஹவுஸ்’ என்னும் ஆங்கில எழுத்துகள் பழைமையின் காரணமாகச் சரியாக புலப்படவில்லை. 

வீட்டு வேட்டையில் இறங்கியவர்களுக்கு ‘மலை வீடு’ கிடைத்ததி, மகிழ்ச்சி கொஞ்ச நஞ்சமன்று. வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது. அருகே அரை மைல் தொலைவிற்கு வீடோ, குடிசையோ, கடையே! ஒன்றுமேயில்லை. அந்த ‘டுலெட்’ போர்டின் அடியிலே மங்கி எழுத்துகளில் விசாரிக்க வேண்டியவர் முகவரியும் எழுதப்பட்டிருந்தது அதைக் கண்டுபிடிப்பதற்கு நாங்கள் பட்ட பாடு, பெரும் பாடாய் போய் விட்டது. 

அம்மன் கோயில் வடக்குத் தெருவை நோக்கிப் புறப்பட்டோம். அந்த முகவரியில் குறிப்பிட்டிருந்த ஆசாமியும் அகப்பட்டார். அவர் கிழவர் எங்களை முக மலர்ச்சியுடன் வரவேற்றார். வீட்டு விஷயத்தைப் பற்றிச் சொன்னோம். அவர் முகத்தில் அர்த்தமில்லாத புன்னகை தோன்றி மறைந்தது. ‘பட்டணத்தில் வேறு வீடு அகப்படவில்லையா?” என்ற கேட்டார். 

“எதற்குச் சொல்கிறேன் என்றால், இந்த வீட்டில் நாலு வருஷமா யாரும் நிலைத்துக் குடியிருந்ததே இல்லை. இப்போது ஒரு வருஷமா யாரும் குடி வரவேயில்லை. அப்படிக் குடி வந்தவர்கள் இரவிலே யாரோ பாட்டுப் பாடும் குரலைக் கேட்கிறார்களாம். அதனால் ஏதாவது ‘பிசா கிசாசு’ இருக்குமோ என்று பயந்து போய் விடுகிறார்களாம். இந்த வீட்டை விலைக்கு வாங்கினபோது நான்கூட ‘வீடு இருக்கிற இடம் நல்ல அமைதியான இடம். தொந்தரவில்லை’ என்றுதான் வாங்கினேன் ஆனால், ஒரு வருஷத்துக்குள் என் வீட்டில் ஒவ்வொருவரும் ‘இரவில் ஏதோ பாட்டின் சப்தம் கேட்கிறது’ என்றே சொல்லி வந்தனர். எள் அருமை மகன், இருபத்திரண்டு வயதிருக்கும். ஒருநாள் இப்படித்தால் சொன்னான். ‘போடா, பைத்தியக்காரா!’ என்று அவனைக் கேலி செய்து விட்டு சும்மா இருந்துவிட்டேன். ஆனால், ஒருநாள் காலையில் அவள் செத்துக் கிடந்தான். எப்படி என்று தெரியவில்லை. 

பிரேத பரிசோதனை செய்த டாக்டர், ‘கழுத்தை அழுத்திக் கொலை செய்யப்பட்டிருக்கிறான்’ என்று கூறிவிட்டார். 

என் அருமை மகனை இழந்த பிறகு எனக்கு அந்த வீட்டில் ஏதோ ஒரு கெட்ட தேவதை இருக்கிறதென்பது நிச்சயமாகிவிட்டது. வீட்டை வாடகைக்கு விட்டுப் பார்த்தேன். இடத்தையும் சுற்றிலுமுள்ள தோட்டத்தையும் கண்டு ஆசை கொண்டு பலர் குடி வந்து ஒரு மாதம் கூட நிற்காமல் காலி செய்து கொண்டு போய்விட்டனர். ஒரு வெள்ளைக்காரக் குடும்பம் வந்தது. இந்த வீட்டைப் பற்றி வாயாரப் புகழ்ந்தது. இதே வீட்டை இன்னும் அழகாகச் செப்பனிட்டுத் தரும்படி கேட்டார்கள். 

நான் கவலையுடனே எல்லாவற்றையும் செய்தேன். அந்த வெள்ளைக்காரக் குடும்பத்துக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. 

ஒருநாள் அந்த வெள்ளைக்காரத் துரை நேராக என் வீட்டிற்கு வந்து ஆங்கிலத்தில், ‘நல்ல வீடு இது. இரவிலே இனிய காற்று வீசுகிறது. நடு இரவிலே அழகான கீதம் ஒன்று எங்கிருந்தோ கேட்கிறது. நான் தினமும் நல்ல இன்பக் கனவுகள் எல்லாம் காண்கிறேன்’ என்றார். 

எனக்கு ஒரு பக்கம் சிரிப்பும் மற்றொரு பக்கம் பயமும் உண்டாயின. அந்த வெள்ளைக்காரர் அவ்வீட்டைத் தனக்கு விற்று விடும்படி கூறினார். உடனே மறு பேச்சில்லாமல் நல்ல விலைக்கு விற்று விட்டேன். ஐயோ! பெரும் பாவம் செய்து விட்டேன் எனலாம். அந்த வெள்ளைக்காரர் தன் அருமை மனைவியையும், குழந்தைகளையும் விட்டு விட்டுத்திடீரென ஒருநாள் மாண்டுவிட்டார். இரவு நன்றாகத்தான் இருந்தாராம். படுத்தாராம். காலையிலே இறந்து கிடந்தாராம். 

அந்த வெள்ளைக்காரச் சீமாட்டி கொஞ்ச நாள் வருத்தப்பட்டாள். பின்பு நீலகிரிக்குப் போய்விட்டாள். போகும்பொழுது அந்த வீட்டை என் மேற்பார்வையில் விட்டுவிட்டு, வாடகை வந்தால் தன் பெயருக்கு அனுப்பச் சொல்லிச் சென்றாள். ஆனால், என் மனம் அந்த வீட்டில் வேறு யாரையும் குடி வைக்கத் துணியவில்லை. 

வாடகைக்கு வருபவர்களை நான் குடி வைப்பதில்லை. ஒரு வருஷமாக அப்படியே கிடக்கிறது. நீங்களோ சிறு பிள்ளைகள் ஊரை விட்டு ஊர் வந்து, இந்த வீட்டில் அகால மரணமடைய வேண்டாம். பட்டணத்திலேயே வேறு வீடு பார்த்துக் கொள்ளுங்கள்!” என்றார். 

என் நண்பர்கள் அவர் சொன்னவற்றைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். எனக்குச் சிரிப்புத் தாளவில்லை. ‘மெடிக்கல் காலேஜ்’ மாணவன் நான். 

”பெரியவரே! பிசாசு, மோகினி, துர்தேவதை இவற்றில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. உங்கள் மகன் அதிகமாகச் சாப்பிட்டு இரவில் படுக்கையில் புரண்டதனால் மாண்டிருக்கலாம். அதிகமாகக் குடித்து விட்டு புரையேறி மாரடைப்பால் அந்த வெள்ளைக்காரத் துரை மரணமடைந்திருக்கலாம். எலும்புக்கூட்டுடனும், இறந்த பிணத்துடனும் கொலையுண்ட மனித உடலுடனும் பாடம் கற்கும் எங்களுக்குப் பய ஏது? தைரியமாக நாங்கள் இருக்கிறோம். பயப்பட வேண்டாம்” என்றோம். 

அவர் விகார முகத்துடன், “அப்பா! இந்தக் காலத்துப் பிள்ளை களுக்குப் பயமில்லைதான்; எனினும் அந்த வீட்டை நான் வாங்குமுன் ஒரு பெண்துர்மரணமடைந்தாளாம். அவள்தான் இரவில் பாடுகிறாளாம் தனக்கு இஷ்டப்பட்டவர்களைக் கொன்று விடுகிறாளாம்!” என்றார் 

என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. “வீணாகப் பயப் படாதீர்கள். எங்களுக்கோ வீடே கிடைக்கவில்லை. கல்லூரியில் இன்னும் ஐந்து வருடங்கள் படித்தாக வேண்டும். எப்படியாவது நீங்கள் வாடகைக்கு விட்டுத்தான் ஆக வேண்டும்” என்று வற்புறுத்திக் கேட்டேன். பெரியவர் ஏதேதோ சமாதானம் சொல்லிப் பார்த்தார். நாங்கள் கேட்கவில்லை. கையிலிருந்த முப்பது ரூபாயை அட்வான்ஸாகக் கொடுத்து உடனே அந்த வீட்டின் சாவியைக் கொடுக்கும்படி கேட்டோம். மறு பேச்சு பேசாமல் அவர் சாவியைக் கொடுத்து விட்டார். 

நாங்கள் குடிவந்து இரண்டு இரவுகள் கழிந்தன. என் நண்பர்களில் இருவர் மட்டும் இரவில் பாயோடு பாயாக ஒண்டிக் கொண்டு கிடப்பார்கள். நானும் மற்ற இரண்டு பேரும் மட்டும் அரட்டை அடித்து விட்டுக் கடைசி வண்டியான திருச்சி பாஸஞ்சர் போகும் ஓசை கேட்ட பிறகுதான் படுக்கச் செல்வோம். 


அன்று எனக்கு மனதே சரியில்லை. வீட்டுக்காரப் பெரியவர் சொன்ன கதை என் மனத்தில் தோன்றித் தோன்றி மறைந்து கொண்டே இருந்தது.அதை மறப்பதற்காகக் கதைப் புத்தகம் ஒன்றை எடுத்துப் படித்துக் கொண்டிருந்தேன். அந்த அமைதியான இரவில் கடிகாரம் ‘டக்டக்’கென்று அடிக்கும் ஓசையும் ‘டங்டங்’கென்று அரை மணிக்கு ஒருமுறை மணியடிக்கும் சப்தமும் தெளிவாகக் கேட்டன. 

என்னையறியாமல் தூக்கம் வந்தது. விளக்கை அணைத்தேன். காற்று வருவதற்காக ஒரு ஜன்னல் கதவைத் திறந்து வைத்து விட்டுப் படுத்தேன். 

குழப்பமான என் மன நிலையுடன் தூக்கத்தின் தாக்கத்தால் சுழலும் கண்களும் சேர்ந்து என்னைக் குறட்டை விடச் செய்தன. 

மணி அப்பொழுது என்ன இருக்குமோ தெரியாது. பயங்கர நிசப்தம் இங்கும் சூழ்ந்திருந்தது. 

அந்த நிசப்தத்தைப் பிளந்து கொண்டு,

‘தூண்டிற் புழுவினைப் போல் வெளியே
சுடர் விளக்கினைப் போல் 
நீண்ட பொழுதாக எனது நெஞ்சம் துடித்ததடி’ 

என்று மெல்லியக் குரலில் ஒரு பட்டு இளங்காற்றிலே மிதந்து வந்து அந்தப் பங்களா எங்கும் வியாபித்தது. 

என் நண்பர்கள் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தனர். என்னால் படுக்கையை விட்டு எழுந்திருக்கவும் முடியவில்லை. இமைகளை மூடவும் முடியவில்லை. 

வரவர அந்தப் பாட்டின் ஓசை அருகிலிருந்து கேட்பது போலிருந்தது. படார் என்று காற்றில் ஜன்னல் கதவு சாத்திக் கொண்டது. பாட்டின் ஒலி நின்று விட்டது. யாரோ அறையில் நடமாடும் ஓசை கேட்டது. என் இதயமே நின்றுவிட்டது போன்ற உணர்ச்சி அடைந்தேன். காலடி ஓசை என்னருகே கேட்டது. ‘ஓ’வென்று சுந்தலாமென எண்ணினேன். நெஞ்சு வறண்டு போயிருந்ததால் அப்படிச் செய்ய முடியவில்லை. 

அந்தக் காரிருளில், அழகொளி வீச நிற்கும் ஒரு பெண்ணின் உருவம் தோன்றியது. 

அவ்வுருவம் என் பாதத்தருகே சிறிது நேரம் மௌனமாக நின்றது. பிறகு என்னை நெருங்கி வந்து என்னுடைய மார்பருகே குனிந்தது. எங்கிருந்தோ அந்த அறையில் மங்கிய வெளிச்சம் ஒன்று வீசியது. 

நாக்குழற, “நீ யார்?” என்று வினயமாகக் கேட்டேன். 

அந்தப் பெண்ணின் கண்களிலிருந்து இரு சொட்டுக் கண்ணீர் உதிர்ந்தது.அதேசமயத்தில் மெல்லிய சிரிப்பின்சப்தமும்அவளிடமிருந்து கேட்டது. 

”நான்… யாரா? சொல்லட்டுமா?” என்றாள் அவள். 

அது பேயினுடைய குரலாயில்லை; பூதத்தினுடைய பேச்சாயில்லை; மோகினி என்ற அஞ்சத்தக்க உருவத்தின் ஓசையாகவும் இல்லை. யாழினின்று எழும் இன்பகீதம் போன்றிருந்தது; குழலின் இனிய நாதமாயிருந்தது. அந்த இனிய பேச்சின் ஒலி என் பயத்தைச் சிறிது போக்கியது. முன்பே உள்ளத்திலிருந்த ஆவல், அவள் பதிலைக் கேட்பதற்குத் தூண்டியது. 

“இப்பொழுது என்னைக் கண்டு நீங்கள் பயப்படுகிறீர்கள். நான் உங்களைத் தழுவிக் கொள்கிறேன் என்றால் அலறுகிறீர்கள். ஆனால் பத்து வருஷத்துக்கு முன்னால் நான் நல்ல நிலையில் இருந்தபோது என்பெற்றோருடன் இருந்தபோது என்னைப் பார்த்தீர்களானால் நீங்கள் என்னை அடையத் துடித்திருந்திருப்பீர்கள். ஐயோ! அது ஒரு காலம்| இது ஒரு காலம்! 

எனக்கு எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கும்போது என் தந்தை இந்த வீட்டைக் கட்டினார். கட்டும்போதே பலவிதத் தடைகளைக் கூறினார்களாம். ‘ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கிறது’, ‘தனியாக இருக்கிறது’ என்றெல்லாம் கூறினார்களாம். என் தந்தை ஒரே பிடிவாதமாகத் தனிமையை விரும்பி இங்கே கட்டினார். நிலைப்படி சரியில்லை. ஜன்னல்கள் சரியில்லை என்று கூறினார்கள். இப்பொழுது இருப்பது போல் இவ்வளவு அழகாக எப்பொழுதுதான் இருந்தது! இவ்வளவு அழகான தோட்டம் உண்டா? இந்தச் சாலையில் இவ்வளவு அடர்த்தியாக மரங்கள்தாம் வளர்ந்திருக்குமா? வீடு எப்பொழுதும் ‘கலகல’வென்று இருக்கும். 

நான் சிறுவயதிலேயே மிகவும் அழகாக இருப்பேனாம். பிறகு என் அழகை நானே வியந்தேன் என்றால் ஆச்சர்யமல்லவா? குடும்பத்துக்கு ஒ ஒரே பெண். அதனால் சிறப்பாக வளர்க்கப்பட்டேன். நான் பிறந்த நாளிலிருந்தே என் தந்தை என் கல்யாணச் செலவுக்காகப் பணம் சேர்த்துக் கொண்டே வந்தாராம். என்னுடைய பதினாறாவது வயதில் சுமார் இருபதினாயிரம் ரூபாய் கல்யாணத்திற்காக மட்டும் சேர்ந்து விட்டது. 

வான் தேட அப்பா முற்பட்டார். ஒன்றும் சரியாக அமையவில்லை. காரணம், எனக்குச் செவ்வாய் தோஷமாம்! அது என்ன தோஷம் என்று இன்னமும் விளங்கவில்லை. அப்பா பார்க்கும் வரன் ஒன்றுகூடப் பிடிக்கவில்லை. என் அண்ணனுடன் அடிக்கடி ஒருவர் என் வீட்டிற்கு வருவார். அழகாய் இருப்பார். தன் கரத்தில் எப்பொழுதும் பாரதியாரின் ‘கண்ணன் பாட்டு’ புத்தகத்தை வைத்துக் கொண்டிருப்பார். அந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்தேன். 

எனக்குள்ள குரல் வளத்தால் இனிமையாகப் பாடினேன். பாட்டைக் கேட்கவே அவர் தினமும் என் வீட்டிற்கு வருவார். ‘தூண்டிற் புழுவினைப்போல்’ பாட்டை எப்பொழுதும் பாடுவேன்.எனக்கு அவரைப் பிடித்திருந்தது. வீட்டுக்குத் தெரியாமல் நான் அவரைச் சந்திப்பேன். எங்களிடம் காதல் அரும்பியது. தந்தையிடம் சொல்லி அவரையே மணந்து கொள்வது, அல்லது ஒருவருக்கும் தெரியாமல் இருவரும் ஓடிவிடுவது என்று முடிவு செய்து கொண்டோம். 

இதன் இடையில்தான் இந்தப் பாழும் ஜுரம் என்னைப் படுத்த படுக்கையாக்கிவிட்டது. நாளுக்கு நாள் அது அதிகமாயிற்று. என் தந்தை எவ்வளவோ டாக்டரை வரவழைத்துப் பார்த்தார். ஆனால், ஒரு மாதம் வரை காய்ச்சல் என்னை ஆட்டிவிட்டு மறைந்தது. நானும் மெல்ல எழுந்து பழைய நிலையை அடைந்தேன். அவரைப் பார்க்க வெண்டுமென்ற அவா எனக்கு அதிகமாகியது. தைரியமாக என் அண்ணனிடமே ‘அவர் ஏன் வருவதில்லை?’ என்று கேட்டு விட்டேன். 

‘என்னை நல்ல வழியில் திருப்ப வேண்டுமானால் கட்டாயம் சனக்கு இன்னும் ஒரு மாதத்தில் கல்யாணம் செய்து விட வேண்டும்’ என்று என் அத்தைமார்கள் பிடிவாதமாய் நின்றனர். நான் முடியவே முடியாதென்று பிடிவாதம் பிடித்தேன். ஆனால், எனக்குக் கல்யாணம் நடப்பதற்கு வேண்டிய பலமான ஏற்பாடுகள் நடந்தன. 

உண்மைக் காரணத்தை என் அண்ணனிடம் சொன்னேன். அவன் சிரித்துக் கொண்டே, ‘உன் காதலன் ஒருவருக்கும் சொல்லிக் கொள்ளாமல் ஊரை விட்டே ஓடி விட்டான்’ என்றான். நான் மனம் மாறி விடுவேன் என்னும் எண்ணத்தில் அப்படிச் சொல்லியிருக்கிறான். விடிந்தால் கல்யாணம். இரவெல்லாம் யோசித்தேன். இந்த உடலும் உயிரும் இனி யாருக்காக என்று என்னையே கேட்டுக் கொண்டேன். ஒரு கணம் சிந்தித்தேன். ஒருவருக்கும் தெரியாமல் தோட்டத்திற்குச் சென்றேன். கல்யாணத்தன்று இரவு எல்லாரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். இப்பொழுதாவது கிணறு பாழடைந்து கிடக்கிறது. அப்பொழுது தண்ணீர் நிரம்பி மிக அழகாய் இருந்தது. தடாலெனக் குதித்து விட்டேன். இன்னும் நன்றாக நினைவிருக்கிறது. இரண்டு முறை மேலுக்கு வந்தேன். கரையேறிவிட எத்தனித்தேன். முடியவில்லை. மூழ்கியே போய்விட்டேன். அவ்வளவுதான் தெரியும். 

பிறகு ஒரு வாரம் சழித்து எனக்கு உயிர் வந்தது. நேரே வீடு வந்தேன். ஆனால், என்னை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. என் தந்தையிடம் நின்றேன். தாயிடம் போனேன். என்னை நினைத்து எல்லாரும் அமுது கொண்டிருந்தனர். ‘அழாதே அம்மா!’ என்றேன். அவர்களுக்கு என்னை அடையாளமே தெரியவில்லை. 

பகலெல்லாம் எங்கெங்கோ சுற்றியலைவேன். பொழுது போகாது நான் முன்பு காதலித்தவரைத் தேடி அலைந்தேன். பழைய காதலனைக் கண்டு பிடித்து விட்டால் என்றும் பிரியாமல் கூடியிருப்பேன். என் இதயத்தில் உள்ளதை யாரிடமாவது சொல்லி மனக் குறையை நீக்க வேண்டுமென்பது என் அவா. ஆனால், இந்த வீட்டுக்குக் குடிவரும் எல்லாரும் என்னைக் கண்டவுடன் நடுங்குகிறார்கள். நான் யார் மேல் ஆசை வைத்து என் கதையைச் சொல்லலாமென்று போகிறேனோ அவர்கள் என்னை வேண்டாமென்று தள்ளி விடுகிறார்கள். கோபம் வந்தால் நான் அவர்கள் கழுத்தை அமுக்கி…” என்று கூறிக் கொண்டே அந்த உருவம் என்னை நெருங்கியது. என்னை அறியாமல் ‘ஓ’வெனக் கூவிவிட்டேன். 

“என்ன… என்ன… என்ன சமாசாரம்?” என்று கேட்டுக் கொண்டே எழுந்தோடி வந்தார்கள் நண்பர்கள். கண்களை நன்றாகத் துடைத்துக் கொண்டு பார்த்தேன். 

“எல்லாரையும் கேலி செய்த நான் ஏமாந்து விட்டேனே! நல்ல பெண் மோகினியப்பா!” என்றேன். “நன்றாய்ச் சொன்னே! பெண்ணாவது மோகினியாவது! இந்த வீட்டை வாடகைக்கு விட்டவன் அளந்த கதையை நினைத்துக் கொண்டே தூங்கினால் மோகினியும் வரும் மோகமும் வரும். போப்பா; போய்ப் படுக்கலாம்” என்றான் ஒரு நண்பன். 

“தூண்டிற் புழுவினைப்போல்… பாட்டின் குரல் இனிமையாகக் கேட்டதே. அது எப்படி?” என்று நான் மறுபடியும் நண்பனைக் கேள்விக் கேட்டேன். 

“சரிதான்… நேற்று பாரதி விழாவில் சிறுமியொருத்தி பாடினாளே, அந்தப் பாட்டை இரவெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தாயோ என்னவோ? உன்னைப் போன்ற ஆசாமிகளுக்கு ஏற்ற கதையைத்தான் அந்தப் பரங்கிமலை ஆசாமி சொல்லியிருக்கிறான்!” என்றான் என் நண்பன் கேலியாக. 

“சரி, இந்த மலை வீட்டில் இருப்பதா வேண்டாமா?” என்று கேட்டேன். “பொழுது விடிந்ததும் பேசிக் கொள்ளலாம்” என்றான் நண்பன். 

விடிவெள்ளி அப்பொழுதுதான் முளைத்துக் கொண்டிருந்தது. 

– 1946, வெள்ளிமணி.

– செவ்வந்திப்பூ சிங்காரி, கலைமாமணி விக்கிரமன் எழுதிய சமூகச் சிறுகதைகள், தொகுதி-1, முதல் பதிப்பு: 2010, யாழினி பதிப்பகம், சென்னை.

விக்கிரமன் கலைமாமணி விக்கிரமன் (மார்ச் 19, 1928 - டிசம்பர் 1, 2015) நன்கறியப்பட்ட தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக உள்ளார். 54 ஆண்டுகள் தொடர்ந்து "அமுதசுரபி" மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றியபின் இலக்கியப் பீடம் மாத இதழின் ஆசிரியரானார். இவர் வரலாற்றுப் புதின ஆசிரியருமாவார். முதலில், வேம்பு என்ற புனைப்பெயரில் எழுதத் தொடங்கி, பின்னர், விக்கிரமன் என்று மாற்றிக் கொண்டார். ஆக்கங்கள் உதயசந்திரன்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *