மலைக்கன்னி






(1957ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15
அத்தியாயம்-13

ஜோதிவர்மனும் அவனுடைய சகாக்களும் கண் விழித்த பொழுது சற்றுத் தூரத்துக்கப்பால் பவானி கன்னத்தில் கை வைத்துக் கொண்டு கவலை தோய்ந்த முகத்துடன் உட்கார்ந்திருந்தான். தங்களோடு அவன் பேசக் கூடாதென்று உக்கிரசேனர் போட்டிருந்த உத்தரவை மீறிவிட்டது அவருக்குத் தெரிந்துவிடுமோ என்று அவன் கவலைப்படுவதைப்போல ஜோதிவர்மனுக்குத் தோன்றியது. அவர்கள் வந்துவிட்டார்களா பவானி என்று ஜோதி கேட்க நினைத்த பொழுது அந்தக் கேள்விக்கே இடம் இல் லாதபடி பாழ் மண்டபத்தின் பல திசைகளிலிருந்தும் புற்றீசல்களைப்போல ஒரு பெரிய பட்டாளம் திரு திருவென்று வந்து அவர்களைச் சூழ்ந்து கொண்டுவிட்டது. ஜோதியும் அவன் சகாக்களும் எழுந்திருக்காமலே உட்கார்ந்தபடி தங்களைச் சூழ்ந்து கொண்ட விசித்திரமான மனிதர்களை இமைகொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆஜானுபாகுவாக ஆறேழு அடி உயரத்துக்கு வளர்ந்து, கடோற்கஜனையும் மார்சனையும் இடும்பனையும் மதுரை வீரனையும்போல கன்னங்கரேலென்றும் காட்டுமிராண்டிகளைப் போலவும் தென்பட்ட அவர்களுடைய தோற்றம் அச்சுறுத்துவதாக இருந்தது.
”சிகப்பா! அந்த மனிதர்கள் எழுந்துவிட்டார்களா?” என்று அதிகார தோரணையில் விசாரித்தது பின்னாலிருந்த ஒரு குரல்.
அந்த மனிதன் நல்ல தமிழில் பேசியதிலிருந்து இத் தீவில் இருப்பவர்கள் எவ்லோருக்குமே தமிழ் தெரிந்திருக்க வேண்டுமென்பதை ஜோதியின் கோஷ்டியார் அறிந்து கொண்டனர். இது அந்த நெருக்கடியான கட்டத்திலும் அவர்களுக்குச் சற்று மன ஆறுதலையும் தைரியத்தையும் கொடுப்பதாயிருந்தது.
ஈட்டியுடன் முன்னால் நின்ற ஒரு மனிதன் “எல்லோரும் எழுந்துவிட்டார்கள் தளபதி!” என்று பதில் கொடுத்தான். சிகப்பா என்று பெயர் சொல்லியழைக்கப்பட்ட அந்த மனிதன் மற்றவர்களைக் காட்டிலும் அதிகம் கறுப்பா யிருந்தான்! மதுரை வீரன் மீசையைப்போல கறுத்து வளர்ந்து தொங்கிய அவன் மீசை இயற்கையாக பயங்கர மாயிருந்த அம்மனிதனின் தோற்றத்தின் ஒரு கொடூரத் தன்மையையும் பிரதிபலித்துக் காட்டியது.
“அவர்கள் நிறம் என்ன?” என்று திரும்பவும் விசாரித்தான் தளபதி.
“ஒருவன் நல்ல சிகப்பு. இருவர் மாநிறம். மற்றொரு வன் நல்ல வெள்ளை!” என்று உரத்த குரலில் பதிலளித்தான் சிகப்பன்.
“வெள்ளையா? ஒருவன் வெள்ளை நிறமென்றா சொன்னாய்?” என்று மறுபடி கேட்டான் தளபதி.
“ஆமாம் தளபதி! அவனைத் தீர்த்துக்கட்டி விடட்டுமா? மகாராணியின் ஆக்ஞை எப்படித் தளபதி.”
சிகப்பன் இப்படிக் கேட்டபொழுது வில்லியத்துக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. தொண்டையில் ஏதோ ஒரு பெரிய பந்து அடைத்துக் கொண்டு விட்டதைப்போல மூச்சு விடவே அவன் கஷ்டப்பட்டான். சிகப்பன் கேட்ட கேள்விக்குத் தளபதியிடமிருந்து உடனே பதில் வரவில்லை. அந்தப் பதில் எப்படியிருக்கும் என்பதை எதிர்பார்த்தவர்களைப் போல காட்டுமிராண்டி வீரர்களில் சிலர் வில்லியம் நெஞ்சுக்கு நேராகக் கூர்மையான ஈட்டிகளை நீட்டிக் கொண்டு நின்றார்கள்.
“வெள்ளையனைப் பற்றித் தெளிவான உத்தரவில்லை!” என்று தளபதியிடமிருந்து பதில் வரவே வில்லியத்தின் நெஞ்சு உலர்ந்து போயிற்று. ஜோதியோ ஆப்த நண்பனைக் கண் காணாத தீவாந்தரத்துக்கு அழைத்து வந்து பலி கொடுக்க நேரிட்டுவிடுமோவென்று கலங்கினான். பாலாஜிக்கு கண்கள் இருண்டு பஞ்சடைந்து போய்விட்டன. முனிசாமிக்கு முக்கால்வாசி பிராணன் போய் கால்வாசிப் பிராணன் மட்டும் உடம்பில் ஒட்டிக் கொண்டிருந்தது.
“வேண்டாம்! அநியாயமாக அம்மனிதனைக் கொல்லாதீர்கள்!” என்று சொல்லிக் கொண்டு ஜோதிவர்மன் எழுந்திருக்கவே, “உட்கார். அப்படியே இருந்த இடத்திலேயே உட்கார்!” என்று பற்களை நற நறவென்று கடித்துக் கொண்டு உறுமினான் சிகப்பன். அதற்குள் “வெள்ளையனையும் கொல்ல வேண்டாம்! நான் வந்து பார்க்கிறேன்” என்ற உத்தரவு பிறந்தது தளபதியிடமிருந்து.
அந்த உத்தரவு வந்தவுடன் சுற்றி வளைத்துக் கொண்டு நின்ற அந்த காட்டுமிராண்டி ஜனங்களுக்கிடையில் ஒரு சிறு பாதை திறப்பதைப் போலிருந்தது. அந்தப் பாதை வழியாக உருவிய வாளுடன் இருவர் முன்வர அவர்களுக்குப் பின்னால் தளபதியென்று அழைக்கப்பட்ட மனிதன் வந்தான் உக்கிரசேனர் என்ற திக்குப்பாலகர் அவராகவே இருக்க வேண்டுமென்று ஜோதிவர்மன் தனக்குள் எண்ணிக் கொண்டான். அம்மனிதன் மற்றவர்களைப்போல கறுப்பாயிராமல் சற்று மாநிறமாயிருந்தான். கிட்டத்தட்ட அறுபது வயதுக்கு மேலிருக்கும் போலிருந்தது. பதவிக்கு உரிய மிடுக்கு இருந்த போதிலும் வயோதிபத்தின் சாயல் தெளிவாக அவன் முகத்தில் பிரதிபலித்தது. அந்த முகத்தில் கொடூரத்துக்குப் பதில் சாந்தமும் கருணையும் நிறைந்திருந்ததாக ஏனோ ஜோதிவர்மன் மனதுக்குத் தோன்றியது.
அருகில் வந்த ஜோதியையும் அவனுடைய சகாக்களை யும் கூர்ந்து பார்த்த தளபதி தனக்குள் என்ன தீர்மானித்துக் கொண்டானோ தெரியவில்லை. இரண்டு கைகளையும் பலமாகத் தட்டி ஏதோ சமிக்ஞை கொடுத்தான்.
தளபதி உக்கிரசேனரின் சமிக்ஞை எதைக் குறிக்கிற தோவென்றெண்ணி ஜோதியும் அவன் சகாக்களும் கலவரமடைந்து கொண்டிருக்கையில் காட்டுமிராண்டி ஜனங்கள் ஐந்தாறு அடி பின்னால் நகர்ந்து கொண்டு ஒரு பக்கமாக விலகி நின்றார்கள். மண்டபத்துக்கு வெளியிலிருந்து வேறு யாருடைய வரவையோ எதிர்பார்ப்பதைப்போல அவர்கள் எல்லோருடைய பார்வையும் மண்டபத்துக்கு வெளியே திரும்பின.
சற்றுத் தூரத்துக்கு அப்பாலிருந்து “ஜல் ஜல்” என்று சதங்கை ஓசை கேட்டது. ஜோதிக்கும் அவன் சகாக்களுக்கும் எல்லாம் ஒரே கண் கட்டு வித்தையைப்போல, பயங்கரமான கனவைப்போல இருந்தது. தளபதி கைதட்டிச் சமிக்ஞை கொடுத்ததற்கும் சதங்கை ஓசை கேட்டதற்கும் என்ன சம்பந்தமென்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு சமயம் பாதசரம் அணிந்து மலைக்கன்னிதான் அங்கு வருகிறாளோ என்று ஜோதிவர்மன் நினைத்தான்.
அவளை யாரும் பார்த்ததில்லை என்று முதல் நாள் இரவு பவானி சொல்லியது அவன் ஞாபகத்துக்கு வரவே சதங்கை ஒலி மலைக்கன்னியாயிருக்க முடியாதென்று அவன் தீர்மானித்துக் கொண்டான். அப்படியானால் வருவது யார்?
சில நிமிடங்களுக்குள் இந்த மர்மம் துலங்கிவிட்டது. நான்கு பல்லக்குகளைத் தூக்கிக் கொண்டு சிலர் மண்டபத்துக்கு வெளியேயிருந்து வந்தார்கள். மரத்தினால் செய்திருந்த அந்தப் பல்லக்கு ஒவ்வொன்றையும் நால்வர் சுமந்து கொண்டு வந்தனர். அவற்றின் இருபுறமும் ஈட் டிகளோடு இருவர் நடந்து வந்தனர்
இந்தப் பல்லக்கில் உட்கார வைத்து நம்மைத் தூக்கிக் கொண்டு போக வந்திருக்கிறார்கள் போலிருக்கிறது என்று ஜோதிவர்மன் நினைத்தான். தங்களை அவர்கள் என்ன செய்யத் திட்டமிட்டிருந்த பொழுதிலும் காட்டிலும் மலையிலும் இழுத்தடித்து நடத்தி அழைத்துச் செல்லாமல் சுகமாகத் தூக்கிச் செல்லுவது ஒருவிதத்தில் நல்லது தானென்று ஜோதிவர்மன் எண்ணினான்.
பல்லக்குத் தூக்கிகள் தளபதியிருக்குமிடத்தை அடைந்ததும் பல்லக்குகளைக் கீழே வைத்துவிட்டு நின்றார்கள்.
தளபதி உக்கிரசேனர் ஜோதிவர்மனையும் அவனுடைய சகாக்களையும் பார்த்து “பல்லக்குகளில் ஏறி உட்கார்ந்து கொள்ளுங்கள்” என்றார்.
”எங்களை எங்கே அழைத்துப் போகிறீர்கள்? தயவு செய்து அதை எங்களுக்குச் சொல்லலாமா?” என்று மரியாதையாக ஜோதி வினவினான். இப்படி அவன் பவ்வியமாகக் கேட்டது உக்கிரசேனருக்கு மிகுந்த திருப்தியை அளித்ததைப் போலிருந்தது.
“உங்களுடைய நாட்டில் கூட எங்கள் பாஷை சொல்லிக் கொடுக்கிறார்களா?” என்று உக்கிரசேனர் வினவினார்.
“ஆம் பெரியவரே! நாங்கள் தமிழர்கள். தமிழ் பேசும் நாட்டிலிருந்து வந்தவர்கள்!’ என்றான் ஜோதிவர்மன்.
“இனிய தமிழ் மொழியுடன் மரியாதையாகப் பழகவும் உங்கள் நாட்டில் சொல்லிக் கொடுக்கிறீர்கள் போல் இருக்கிறது. நல்லது. பல்லக்கில் ஏறிக் கொள்ளுங்கள்” என்றார் உக்கிரசேனர்.
“எங்களை எங்கே அழைத்துப் போகிறீர்களென்பதைத் தயவு செய்து சொல்லக் கூடாதா?” என்று மறுபடியும் கேட்டான் ஜோதி.
“மகாராணி தேவதேவியிடம், அவளுடைய ஆக்ஞை யின்படியே பல்லக்கு வந்திருக்கிறது” என்று சொல்லிய உக்கிரசேனர் அதற்குமேல் ஏதும் சொல்ல விரும்பாததைப்போல பல்லக்குத் தூக்கிகளின் பக்கம் திரும்பி, “பல்லக்குகளை ஜாக்கிரதையாகத் தூக்கி வாருங்கள். இவர்கள் மகாராணியின் விருந்தினர்கள்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.
இதன் பிறகு வேறு வழியில்லாமல் ஜோதியும் மற்றவர்களும் பல்லக்குகளில் ஏறிக் கொள்ள நான்கு பல்லக்குகளுக்கும் முன்னும் பின்னும் பட்டாளம் சென்றது. எல்லோருக்கும்முன்னால் தளபதி உக்கிரசேனர் ஒரு வெண்புரவியில் சென்றார். நடந்து வருவோருக்குச் சரியாக அவருடைய குதிரையும் மெதுவாகச் சென்றது. பல்லக்கில் கட்டியிருந்த சதங்கைகளின் ஒலிக்குத்தகுந்தபடி பல்லக்குத் தூக்கிகள் ஏதோ பாடிக் கொண்டு நடந்தார்கள்.
ஜோதிவர்மன் கோஷ்டியாரைத் தூக்கிச் சென்ற வாகனத்தைப் பல்லக்கு என்று சொல்வதற்குப் பதிலாக பெட்டகம் என்று வர்ணித்தால் பொருத்தமாயிருக்கும். ஆட்கள் தூக்கிச் செல்லும் ஒரே காரணத்தை முன்னிட்டே அதைப் பல்லக்கு என்ற கௌரவமான பெயர் கொடுத்துச் சொல்ல வேண்டியிருந்தது. இதைத் தவிர பார்வைக்கு ஒரு ஆள் தாராளமாக நீட்டிப் படுத்துக் கொள்ளக் கூடிய அளவு பெரிய மரப் பெட்டகமாக அது தோன்றியது. இந்தப் பெட்டக பல்லக்கு உள்ளே போக ஒரே ஒரு கதவுமட்டுமிருந்தது. பல்லக்கினுள் வைக்கோலைப் பரப்பி அதன் மீது மான்தோலைப் போட்டுப் படுப்பதற்கு மிருதுவாயிருக்கும்படி செய்திருந்தார்கள். பல்லக்கு கொஞ்சத் தூரம் சென்ற பின்னர் ஜோதிவர்மன் சுகமாகக் காலை நீட்டிக் கொண்டு படுத்தான்.
பல்லக்கில் தனியாக விடப்பட்டதினால் ஜோதியின் சிந்தனை தங்களுடைய நிலையைப் பற்றி நிதானமாக ஆராய்ந்து மதிப்பிடுவதில் ஈடுபட்டது. பல்லக்குத் தூக்கிகளையும் மற்றக் குட்டி வீரர்களையும் போலில்லாமல் தளபதி உக்கிரசேனர் சற்று மனிதப் பண்பும் கருணையும் உடையவராகத் தென்பட்டது. ஜோதிவர்மனுக்கு ஆறுதலாயிருந்தது. மற்றவர்களைப் போல அவர் புலித்தோலை உடுத்தியிருக்கவில்லை. அதற்கு மாறாக அவர் பருத்தி வேஷ்டியில் கச்சமும் தலையில் ஒரு பெரிய முண்டாசும் கட்டியிருந்தார். கழுத்தில் நீலக் கற்கள் பதித்த ஒரு நீண்ட சங்கிலி தொங்கியது. ஒரு கையில் ஈட்டியும் மற்றொரு கையில் குதிரைச் சவுக்குமாக முதல் முதலாக அவரைப் பார்த்த பொழுது ஒரு தலை சிறந்த போர் வீரனைப்போல அவர் ஜோதிவர்மன் திருஷ்டியில் தோன்றினார்.
பவானியைப் போலவே உக்கிரசேனரும் தேவதேவியின் பெயரைச் சொல்லியது ஜோதிவர்மனுக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கவேயில்லை. அடுத்தடுத்து நிகழ்ந்த பல பரபரப்பான சம்பவங்களினால் மரத்துப் போயிருந்த அவன் மனம் ஆச்சரியப்படும் சக்தியையே இழந்து போய் இருந்தது. சந்திரிகா எழுதி வைத்திருத்த கதை கடைசியில் அப்படியே உண்மையாகிவிடுமோ என்ற கேள்வியை அவன் மனம் திருப்பித் திருப்பி அவனைக் கேட்டுக்கொண்டு வந்தது.
பல்லக்கு அசைந்து அசைந்து ஆடிக் கொண்டே சென்றதால் உள்ளே படுத்திருந்த ஜோதிக்குச் சுகமாகப் படுக்க வைத்து தொட்டில் ஆட்டுவதைப் போலிருந்தது. அந்தச் சுகத்தில் அவன் மனம் போனபடியெல்லாம் சிந்தனையிட்டுக் கொண்டே தன்னை மறந்து தூங்கிவிட்டான்.
சுமார் இரண்டு மணி நேரம்தான் அவன் தூங்கியிருப்பான். கண்களை விழித்துப் பார்த்த பொழுது சதங்கை ஒலியுடன் பல்லக்குப் போய்க் கொண்டிருந்தது. ஆனால், முன்னுக்குப் பின்னும் அதிக இரைச்சலைக் காணோம். பல்லக்குத் தூக்கிகள் கூடச் சப்தமில்லாமல் பல்லக்கைச் சுமந்து போய்க் கொண்டிருந்தார்கள். பல்லக்கில் எழுந்து உட்கார்ந்து மெதுவாக அவன் வெளியே எட்டிப் பார்த்தான். பல்லக்குகளின் முன்னால் இரண்டு டஜன் ஆட்களும் பின்னால் இரண்டு டஜன் ஆட்களும் மட்டுமே நடந்து வந்து கொண்டிருந்தனர். மற்றவீரர்களைக் காணவில்லை.
பல்லக்கின் கதவுக்கு வெளியே நடந்து வந்த மனிதன் எதையோ பார்த்துவிட்டுப் பரபரப்புடன் பின்னால் ஒதுங்குவதை ஜோதிவாமன் கவனித்தான். அவன் ஏன் அப்படி ஒதுங்குகிறான் என்பதைப் பற்றி ஜோதி யோசிப்பதற்குள் தளபதி உக்கிரசேனர் பல்லக்கின் அருகில் வந்தார்.
“விழித்துக் கொண்டிருக்கிறாயா தம்பி?” என்று அவன் அருகில் வந்து ஆதரவாகக் கேட்டார்.
“சற்று உறங்கினேன்! இப்பொழுதுதான் கண் விழித்தேன் அய்யா” என்றான் ஜோதி.
“எவரும் ஆக்கிரமிக்கத் துணியாத எங்கள் நாட்டுக்கு நீங்கள் ஏன் வந்தீர்கள்? வாழ்க்கை உங்களுக்குக் கசந்து போய்விட்டதா தம்பி” என்று மறுபடியும் கேட்டார் உக்கிரசேனன்.
“நாங்கள் ஆக்கிரமிப்பாளர்களில்லை அய்யா! ஆக்கிரமிப்பு நடத்துவோர்களை அறவே வெறுக்கும் பண்புடைய தேசத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள்! தமிழகத்திலிருந்து நாங்கள் வருகிறோம்!” என்றான் ஜோதி.
“தமிழகம்! தமிழகம்!” என்று உக்கிரசேனர் தனக்குள் இரண்டு தடவை சொல்லிக் கொண்டார். பிறகு “அது எங்கேயிருக்கிறது?” என்று அவர் கேட்டார்.
“அதை எப்படிச் சொல்லுவதென்று எனக்குத் தெரியவில்லை அய்யா! இங்கிருந்து சுமார் முப்பது நாள் பிரயாண தூரத்திலிருக்கிறது. புதிய விஷயங்களை ஆராய்ந்து அறிவதற்காக நாங்கள் கப்பலில் புறப்பட்டோம். கடல் விபத்துக்குள்ளாகி இத்தீவுக்கு வந்து சேர்ந்தோம்! நாங்கள் சாகத்தான் போகிறோமென்றால் சாவதன் முன்னால் இத் தீவின் வரலாற்றையாவது எங்களுக்குச் சொன்னால் நிம்மதியாக உயிரை விடுவோம் அய்யா!” என்றான் ஜோதிவர்மன்.
உக்கிரசேனர் இதைக் கேட்டுத் தனக்குள் சிரித்துக் கொண்டதைப்போல ஜோதிக்குத் தோன்றியது.
“தேவதேவி உனக்குக் கருணை கூர்ந்து சமுகங் கொடுத்தால் அவரிடமே இக்கேள்வியைக் கேளு தம்பி!” என்றார் உக்கிரசேனர்.
“இந்த நாட்டின் பெயர் என்னவென்பதையாவது சொல்லுவீர்களா அய்யா?” என்று கேட்டான் ஜோதிவர்மன்.
உக்கிரசேனர்:- “செம்பவளத்தீவு!”
ஜோதி:- மகாராணியின் அரண்மனை எங்கே இருக்கிறது? பக்கத்தில்தான் இருக்கிறதா?
உக்கிரசேனர்:- பக்கத்திலா? அதற்கு மூன்று நாள் பிரயாணம்!
ஜோதி:- இப்பொழுது நாம் அரண்மனைக்குத்தான் போகிறோமா?
உக்கிரசேனர்:- இல்லை!
ஜோதி:- அப்படியென்றால், நாங்கள் மகாராணியின் விருந்தினர்களென்று சொன்னீர்களே.
உக்கிரசேனர்:- ஆமாம்! மறு உத்தரவு வரும்வரையில் உங்களைப் பத்திரப்படுத்தி வைத்து உபசரிப்பது என் பொறுப்பு. முதலில் நீங்கள் என் குகைக்கு வருகிறீர்கள். உத்தரவு வந்தவுடன் அங்கிருந்து அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
இப்படிச் சொல்லிவிட்டு உக்கிரசேனர் அப்பால் போய் விட்டார். அவர் சென்றதும் ஈட்டியுடன் ஒதுங்கி நின்ற வீரன் மீண்டும் பல்லக்கின் அருகில் நடந்து வந்தான். அவ்வளவு நேரமும் மலைப்பாங்கான பிரதேசத்தில் போய்க் கொண்டிருந்த அவர்கள் ஒரு கணவாய்க்குள் பிரவேசித்துத் திரும்பினார்கள். திரும்பியதும் வெயில் தகிக்கும் பாலை வனத்திலிருந்து ஒரு பசுமையான சோலைக்குள் பிரவேசிப்பதைப் போலிருந்தது ஜோதிவர்மனுக்கு. பார்த்த இடமெல்லாம் ஒரே கல்லும் மண்ணும் பாறைகளும் தென்பட்ட காட்சி மாறி தளதளவென்று பசுமையான செடிகள் பூத்துக்குலுங்கும் ஒரு நந்தவனம் எதிரே தோன்றியது. அங்கிருந்து கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் பூமி பசுமையாயிருந்தது. அந்தத் தீவில் முதல்முறையாக ஆடு மாடுகளை அங்குதான் ஜோதிவர்மன் கண்டான். மந்தை மந்தையாகக் கால்நடைகள் புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தன. சற்றுத் தூரத்துக்கு அப்பால் வயல் களில்நெற்கதிர்கள் அறுவடைக்குத் தயாராயிருந்தன. அவற்றுக்கு நீர்ப்பாய்ச்ச ஒழுங்காக வெட்டியிருந்த ஓடைகளில் சலசலவென்று தெள்ளிய நீர் ஓடிக் கொண்டிருந்தது.
இப்பொழுது அவர்களுடைய பல்லக்கு மலையடி வாரத்தைவிட்டுக் கீழே இறங்கி நெல்வயல்களின் மத்தியில் இருந்த ஒரு ஒற்றையடிப் பாதை வழியாகப் போய்க் கொண்டிருந்தது. சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு நாகரிகத்தின் சாயல் தென்பட்ட இந்தப் பசுமையான காட்சிகள் மறுபடி மறைந்தன. பரந்த வயலின் மறுபுறத்தை அடைந்ததும் அவர்கள் மற்றொரு காட்டுக்குள் பிரவேசித்தார்கள். அந்தக் காடு சம நிலமாயில்லாமல் பல்லக்கு மேல் நோக்கிச் செல்வதைக் கவனித்த ஜோதிவர்மனுக்குத் தாங்கள் இப்பொழுது ஒரு மலை மீது ஏறிக் கொண்டிருக்க வேண்டுமென்று தோன்றியது. உக்கிரசேனர் குறிப்பிட்ட குகை அந்த மலையில்தான் இருக்க வேண்டுமென்றும் ஜோதிவர்மன் நினைத்தான்.
மேலும் கொஞ்சத் தூரம் சென்றதும் மரங்கள் அதிகம் இல்லாத ஒரு மலைப்பிரதேசத்தில் சிறிது நேரம்வரை அவர்கள் சென்றார்கள். பிறகு பல்லக்குகள் சட்டென்று கீழே வைக்கப்பட்டன. ஈட்டியுடன் வந்த வீரன், “இறங்கலாம்!” என்றான்.
ஜோதிவர்மன் பல்லக்கைவிட்டு இறங்கியதும் அவனைப் போலவே, வில்லியம், பாலாஜி, முனிசாமி ஆகியவர்களும் பல்லக்குகளிலிருந்து இறங்கி ஜோதியின் பக்கத்தில் வந்து நின்றுகொண்டார்கள். பல்லக்குகளை வைத்த இடமும் இப் பொழுது அவர்கள் நின்று கொண்டிருந்த இடமும் தரை மட்டத்திலிருந்து நான்கைந்து அடி உயரத்தில் கட்டிய ஒரு விசாலமான மேடைபோலிருந்தது. மேடையின் இடது பக்கத்தில் பாழ் மண்டபத்துக்கு வந்திருந்த ஈட்டி வீரர்கள் அவ்வளவு பேர்களுமிருப்பதை அவர்கள் கண்டார்கள். மேடையின் வலது பக்கத்தில் திரும்பிப் பார்த்த பொழுது ஜோதிவர்மனுக்கு அவனுடைய கண்களையே நம்பமுடியவில்லை.
அவனைப்போலவே அவனுடைய சகாக்களும் ஆச்சரியமடைந்தார்கள் என்று கூறினால் சிறிதும் மிகையாகாது. அவர்களுடைய ஆச்சரியத்துக்குக் காரணம் ஒழுங்காகவும் வரிசை வரிசையாகவும் அணிவகுத்து நிற்கும் பெண் பட்டாளங்களைப்போல அழகு அழகான இளம் பெண்கள் தலை நிமிர்ந்து கம்பீரமாக நின்றதுதான். கன்னங்கரேலென்று காக்காய்க் கறுப்புள்ள அந்தக் காட்டுமிராண்டி ஜனக் கூட்டத்தில் இவ்வளவு அழகான பெண்கள் இருக்க முடியு மென்பதை ஜோதிவர்மனும் அவனுடைய சகாக்களும் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை. அந்தப் பெண்மணிகளின் சௌந்தர்யத்தைக் காட்டிலும் அவர்கள் நின்ற தோரணையும் முகத்தில் பிரதிபலித்த கம்பீரமும் தான் அவர்களை அதிகம் கவர்ந்ததென்று கூற வேண்டும்.
அந்தப் பெண்களில் ஒரு சிலர் நல்ல சிவப்பாயிருந்தார்கள். மற்றவர்கள் அவ்வளவு சிவப்பாயில்லாவிட்டாலும் ஆண்களைப்போல அட்டைக் கரியாயில்லாமல் மாநிறமாக இருந்தனர். அநேகமாக ஏழெட்டுப் பேர்களைத் தவிர மற்றவர்களெல்லோரும் பார்வைக்கு நல்ல லட்சணமாகவும் திடகாத்திரமாகவும் இருந்தார்களென்றே கூறவேண்டும். பெரும்பாலான பெண்கள் இடுப்பில் மிருதுவான மான்தோலைச் செப்பனிட்டுப் பதப்படுத்தித் தாவணி போல அணிந்திருந்தனர். அந்தத் தாவணியும் புலித் தோலில் தைத்த ரவிக்கையும் புதுமலர்களைக் கொய்து தொடுத்துக் கழுத்தில் அணிந்திருந்த மாலைகளும் அவர்களுடைய இயற்கையான கவர்ச்சிக்கு மெருகு கொடுத்துச் கொண்டிருந்தன.
அவர்களை ஜோதிவர்மன் எப்படித் திறந்த கண்களை மூடாமல் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டு நின்றானோ அதேபோல அந்தப் பெண்களும் அவனைப் பார்த்து அதிசயித்தார்களென்று சொல்ல வேண்டும். அவனுடைய கம்பீரமான தோற்றமும் சிவந்த மேனியும் இளமையும் இன்முகமும் அந்தப் பெண்களின் மனதை அவ்வளவு தூரத்துக்குக் கவர்ந்திருந்தன.
என்ன நடக்கிறது என்பதை மற்றவர்கள் சரிவர உணர்ந்து கொள்வதற்குள் மேடையின் ஓரமாக முன்வரிசையில் நின்று கொண்டிருந்த பெண்களில் ஒருத்தி அருகிலிருந்த இன்னொரு பெண்ணின் கழுத்திலிருந்து இரண்டு மலர் மாலைகளைக் கழற்றி எடுத்துக் கொண்டு மேடையின் மீது தாவி ஏறினாள். புள்ளிமான் துள்ளியோடுவதைப் போல ஒரே ஓட்டமாக ஜோதிவர்மன் அருகில் வந்து நின்று ஒரு மாலையை லாகவமாக அவன் கழுத்தில் போட்டாள். இன்னொரு மாலையை அவன் கையில் கொடுத்து குவிந்த கரங்களுடன் அவன் முன்னால் தலை குனிந்து நின்றாள். கையில் கொடுத்த மாலையை என்ன செய்வதெனத் தெரியாமல் ஜோதிவர்மன் ஒரு கணம் தயங்கினான்! ஆம் ஒரே ஒரு கணம்தான் அவன் தயங்கி நின்றான். “அதை என் கழுத்தில் போடு! இதுதான் செம்பவளத்தீவின் சம்பிரதாயம்!” என்று சொல்லுவதைப்போல அந்த இளம் பெண் ஜோதியை நிமிர்ந்து பார்த்து ஒரு இளமுறுவல் செய்துவிட்டு மீண்டும் தனது அழகான கழுத்தை நீட்டினாள். அவளுடைய அந்த ஒரு புன்முறுவலுக்கு மலர்மாலை யன்ன, இந்த மண்டலத்தையே அவளுடைய காலடியில் காணிக்கையாகச் சமர்ப்பிக்கலாம் போலிருந்தது ஜோதிவர்மனுக்கு! ஒன்றும் பேசாமல் மறுகணம் மலர் மாலையை அவள் கழுத்தில் ஜோதிவர்மன் அணிவித்தான். அவன் பக்கத்தில் நின்ற பாலாஜியை நகரச் சொல்லிவிட்டு ஜோதிவர்மன் அருகில் நின்று கொண்டு பெண்கள் கூட்டத்தை நோக்கி அவள் ஒரு வெற்றிப் புன்னகை பூத்தாள்.
இவ்வளவும் ஒரு நொடியில் நடந்து விட்டது. மேடைக்கு ஓடியவள் என்ன செய்கிறாளென்பதை உணர்ந்து கொள்வதற்குள் அவளும் ஜோதிவர்மனும் மாலை மாற்றிக் கொண்டு புதுமணத் தம்பதிகளைப்போல பூமாலைகளுடன் ஒருவர் பக்கத்தில் ஒருவராக நின்றார்கள். இக்காட்சியைக் கண்டதே பெண்களின் கூட்டத்தில் சல சலப்பு ஏற்பட்டது. ஆண்களின் கூட்டம் ஆக்ரோஷத்துடன் உறுமியது.
நடுமத்தியான வெயிலில் பள பளவென்று பிரகாசித்த கூர்மையான ஈட்டிகளை நீட்டிப்பிடித்துக் கொண்டு ஒரு டஜன் வீரர்கள் மேடையின் மீது தாவிக் குதித்தார்கள். கோபம் கொதிக்க ஜோதிவர்மனையும் அவனுக்கு மாலையிட்ட மங்கையையும் குத்திப் பிளந்து கிழித்துவிட விரும்புவதைப்போல அவர்கள் சீறிக் கொண்டு வந்தார்கள். அவர்கள் மேடை மீது ஏறியதுதான் தாமதம், பெண்களின் கூட்டம் அப்படியே திரண்டு எழுந்து வருவதைப்போல “நிறுத்து! நிறுத்து!” என்று கர்ஜித்துக் கொண்டே மேடையின் மீது ஏறிப் பாய்ந்து வந்தது. அவர்கள் அவ்வளவு பேர்களுடைய மிருதுவான கைகளிலும் கூர்மையான பிச்சுவாக் கத்தி பிரகாசித்தது இடுப்பில் சொருகிக் கொண்டிருந்த கத்தியை எடுத்துக் கொண்டு போருக்குப் புறப்பட்ட வீராங்கனைகளைப் போல அவர்கள் மேடையின் மறுதிசையிலிருந்து வரவும் ஈட்டி வீரர்கள் ஒரு கணம் தயங்கி நின்றார்கள். அவர்களில் ஒருவன் ஜோதியின் பக்கத்தில் பெருமிதத்துடன் நின்ற பெண்ணைப் பார்த்து,
”சித்ரா, என்ன இது?” என்று அதட்டிக் கேட்டான்.
“எது என்ன?” என்று அலட்சியமாகக் கேட்ட சித்ரா என்ற அப்பெண்மணி ஜோதியின் வலது கையைப் பிடித்து தன்னிரு கரங்களிலும் வைத்துக் கொண்டு குளுமையாகவும் அமைதியாகவும் தன் இனத்தவர்களை நோக்கினாள்.
“ஒரு நாடோடிக்கு நீ மாலையிடுவதை நாங்கள் பார்த்துக் கொண்டிருப்போமென்று நினைக்கிறாயா? நமது சமூகத்தில் இவ்வளவு பெரிய இழிவான காரியம் நடப்பதை ஒருக்காலும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்! கைதியொருவனுக்கு மாலையிட்டதன் மூலம் எங்கள் எல்லோரையும் நீ அவமானப்படுத்தி விட்டாய்? தளபதியின் பெண் என்றால் எதை வேண்டுமென்றாலும் செய்யலாம் என்பது உன் நினைப்பா? நிச்சயம் தளபதியே உன் கேவலமான செய்கையை ஆமோதிக்க மாட்டார்!” என்று மீசை துடிக்க முழங்கினான் அந்த ஈட்டி வீரன். சித்ரா என்ற அந்தப் பெண்ணையும் ஜோதிவர்மனையும் ஸ்தலத்திலேயே கிழித்துப்போட ஈட்டியைப் பிடித்திருந்த அவன் கைகள் துடித்துக் கொண்டிருந்தன.
“அவள் தான் ஏதோ தெரியாத்தனமாக நடந்து கொண்டு விட்டாளென்றால் அந்தக் கயவனின் துணிச்சலைப் பார்த்தாயா? பதிலுக்கு அவள் கழுத்தில் மாலைபோட அவனுக்கு எவ்வளவு துணிவு?” என்றான் இன்னொரு ஈட்டி வீரன்.
சித்ரா செய்த காரியம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ எப்படியிருந்த பொழுதிலும் அவள் கொடுத்த மாலையைத் தெரியாத்தனமாக அவளுடைய கழுத்தில் அணிவித்தது எவ்வளவு பெரிய விபரீதத்தில் முடிந்துவிட்ட தென்பதை எண்ணி ஜோதிவர்மன் நெஞ்சு டக்டக் என்று அதிவேகமாக அடித்துக் கொண்டது. ஆனால், அவன் பக்கத்தில் நின்ற சித்ராவோ கொஞ்சம் கூடக் கலவரமோ அல்லது பதட்டமோ அடையவில்லை. ஜோதிவர்மனைத் தனது முதுகுப்புறமாக மறைத்துக் கொண்டு இரண்டு அடி முன்னால் நகர்ந்து வந்து சுட்டு எரித்து விடுவதைப் போல ரௌத்ரகாரமாக அந்த ஈட்டி வீரர்களை அவள் ஏறத்தாழப் பார்த்தாள். பிறகு “போங்கள்! மரியாதையாகக் கீழே இறங்கிப் போங்கள்! என் நடத்தையைப் பற்றிக் குற்றம் குறைசொல்ல நீங்கள் யார்? உங்களுக்கு யார் அந்த அதிகாரத்தைக் கொடுத்தது? என்னைத் தடை செய்ய இங்கு யாருக்கும் உரிமையில்லை. உங்களுடைய ஆர்ப்பாட்டங்கள் நமது விருந்தாளிகளை வேண்டுமானால் பயமுறுத்தலாம். ஆனால், அது என்னை ஒன்றும் செய்யாது” என்று முழங்கினாள்.
சித்ரா இப்படிப் பேசியதைக் கேட்டதும் ஜோதிவர்மனும் அவனுடைய சகாக்களும் மலைத்துப் போய் விட்டார்கள். மிருதுவான ஒரு பெண்ணா பயங்கரமான ஈட்டி வீரர்களை எதிர்த்து இப்படி முழங்குகிறாள்? என்றெண்ணி அவர்கள் அதிசயித்தார்கள். அவள் இப்படிச் சொல்லி வாய் மூடுவதற்குள் “போ! போ! கீழே இறங்கிப் போ!” என்று அலைமோதுவதைப் போன்ற ஆர்ப்பாட்ட கோஷம் பெண்கள் மத்தியில் இருந்து கிளம்பியது. ஆற்று வெள்ளம் அடித்துக் கொண்டு வருவதைப்போல இடித்து நெருக்கிக் கொண்டு வந்த அந்தப் பெண்கள் மேடையின் மீது நின்ற ஈட்டி வீரர்களைச் சூழ்ந்து கொண்டு கேலி செய்து நகைத்தார்கள். பாவம்! அந்த வீரர்களுக்கு எப்படியாவது அவர்களிடமிருந்து தப்பிக் கொண்டு கீழே இறங்கி விட்டால் போதும் போலாகிவிட்டது.
இதற்குள் ”ஜெய் தேவதேவி!” என்ற ஒரு கிண் என்ற சப்தம் பின்னாலிருந்து கிளம்பியது. அந்தச் சப்தத்தைக் கேட்ட மாத்திரத்தில் பெண்கள் ஒரு புறமாகவும் ஆண்கள் மற்றொரு புறமாகவும் முன்போல ஒதுங்கி நின்று கொண்டார்கள்.
உருவிய வாளுடன் இருவர் முன்வர அவர்களுக்குப் பின்னால் தளபதி உக்கிரசேனர் மேடை மீது ஏறிவந்தார்.
“இந்தப் பாவி மனிதன் என்ன சொல்லப் போகிறானோ?” என்று கவலைப்பட்டான் ஜோதிவர்மன். பயத்தில் அவன் கரங்களும் உதடுகளும் வெடவெடவென்று நடுங்குவதைக் கவனித்த சித்ரா ஆதரவாக அவனை நெருங்கி “ஏன் கவலைப்படுகிறீர்கள்? இந்த ராஜ்யத்தில் எங்கள் பேச்சுக்கு மறுபேச்சுக் கிடையாது! பயப்படாதீர்கள். அப்பா வருகிறார்! வரட்டும் நான் பேசிக் கொள்ளுகிறேன்!” என்றாள். சற்று முன் மகாளியைப்போல ஆக்ரோஷத்துடன் கர்ஜித்த அதே சித்ராவின் குரல் இப்பொழுது மிக மிக இனிமையாயிருந்ததைக் கேட்டதே ஜோதிக்கு ஒன்றுமே சொல்லத் தோன்றவில்லை.
இதற்குள் அவர்கள் நின்ற இடத்தை அணுகிய உக்கிரசேனர் சித்ராவின் தோள்களை அன்பாகத் தடவிக் கொடுத்து “இதெல்லாம் என்ன கலவரம் குழந்தை! நம் இனத்தவர்கள் மனம் நோகும்படி நீ செய்யலாமா? கொஞ்சம் ஆர அமர யோசனை செய் அம்மா!” என்றார்.
“என் சொந்த விஷயத்தில் தலையிட இவர்கள் யார் அப்பா! மானமும் மரியாதையும் பிறர் கொடுத்து வருவதில்லை! அது அவரவர்களின் நடத்தையைப் பொறுத்தது. நாட்டில் சட்டத்துக்கும் சம்பிரதாயத்துக்கும் விரோதமாக நான் ஏதும் செய்துவிடவில்லையே! வேண்டுமானால் என்னைப் பற்றி மகாராணியிடம் இவர்கள் புகார் கொடுக்கட்டும். சட்டத்தையும் தர்மத்தையும் நிலை நிறுத்தும் கன்னிமாதா நான் செய்தது தவறு என்று கருதினால் அவர் அளிக்கும் தண்டனையைச் சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறேன்” என்றாள் சித்ரா.
”ஜெய் தேவதேவி!” என்று இன்னொரு தடவை உக்கிரசேனர் உரக்கக் கோஷித்தார். அவர் இப்படிச் சொல்லி முடித்ததும் அங்கிருந்தவர்கள் அவ்வளவு பேர்களும் ஒரு குரலில் “ஜெய் தேவதேவி!” என்று பதிலுக்குக் கோஷித்தார்கள். உக்கிரசேனர் தனது கையை நீட்ட, மோதிர விரலில் அவர் அணிந்திருந்த சர்ப்ப மோதிரத்தை சித்ரா முத்தமிட்டு ஜோதியையும் அவ்விதமே செய்யச் சொன்னாள். உக்கிரசேனரின் முகம் சாந்தமாகவும் சுமுகமாகவும் இருப்பதைப் பார்த்துத் தைரியமடைந்த ஜோதிவர்மன் சித்ரா சொல்லியபடியே செய்த பொழுதுதான் உக்கிரசேனர் விரலில் இருக்கும் மோதிரம் தான் அணிந்திருக்கும் சர்ப்ப மோதிரத்தைப் போலிருப்பதைக் கவனித்தான்.
இதன்பின் மேடையைச் சுற்றியிருந்தவர்கள் மூலைக்கு சிறு சிறு கூட்டமாகக் கலைந்து போனார்கள்.
”சித்ரா! இவர்களை உள்ளே அழைத்துப்போய் சாப்பிடுவதற்கு ஏற்பாடு செய் அம்மா. நேற்றிலிருந்து இவர்கள் உபவாசம்! பிரயாணத்தில் மிகவும் களைப்படைந்திருப்பார்கள்” என்று தளபதி சொல்லிவிட்டுப் போனார்.
“என் பின்னால் வாருங்கள்!” என்று வாயினால் சொல்லாமல் குளுமையான பார்வையினால் அழைத்துவிட்டுச் சென்ற சித்ராவைப் பின்தொடர்ந்து ஜோதியும் அவனுடைய சகாக்களும் சென்றனர்.
கொஞ்சத் தூரத்துக்கு அப்பால் ஒரு பிரமாண்டமான சிங்கம் வாயைப் பிளந்து கொண்டு நிற்பதைப்போல ஒரு குகை வாசல் தென்பட்டது.
“அதுதான் நாம் போகும் குகை வாசலா?” என்று ஜோதிவர்மன் சித்ராவிடம் கேட்டான்.
“வாசல் சிறிதாயிருப்பதைப் பார்த்துப் பயந்து போய் விட்டீர்கள் போலிருக்கிறது! உள்ளே விசாலமாயிருக்கும்” என்றாள் அவள்.
“எல்லோரும் இந்தக் குகைக்குள்ளேதான் வசிக்கிறார்களா?” என்று அவன் மீண்டும் கேட்டான்.
”இல்லை! பத்துக் குடும்பங்கள் இருக்கின்றன!” என்றாள் சித்ரா.
“மற்றவர்கள்?” என்று ஜோதி கேட்ட பொழுது “மற்றவர்களுக்கு வேறு குகைகளிருக்கின்றன!” என்றாள் சித்ரா.
“அப்படியானால் எல்லோருமே குகைகளில்தான் வசிக்கிறார்களா?” என்று கேட்டான் ஜோதி.
“உள்ளே போய்ப் பார்த்தால் வீடு மாதிரித்தானிருக்கும்!” என்றாள் சித்ரா.
“மகாராணியின் அரண்மனையும் இப்படிப்பட்ட குகை தானா?” என்றான் ஜோதி.
“இல்லை! அமரபுரியில் ஆகாயத்தை முட்டும் மாளிகைகள் இருக்கின்றனவாம்!” என்றாள் சித்ரா.
“மகாராணியிருக்கும் ஊரின் பெயர் அமரபுரியா?” என்று ஜோதி கேட்கவே ஆமாம் என்று அவள் தலையை அசைத்தாள்.
இதற்குள் அவர்கள் குகையின் வாசலை அடைந்துவிட்டார்கள். சித்ரா முன்னே செல்ல அவளைப் பின் தொடர்ந்து ஜோதியும் அவன் சகாக்களும் குகைக்குள் நுழைந்தனர்.
உள்ளே நுழைந்ததும் எதிரில் விசாலமான ஒரு பெரிய மண்டபம் போலத் தென்பட்டது. மண்டபத்தின் நான்கு பக்கத்துச் சுவர்களிலும் ஒரு ஆள் நுழையக் கூடிய அளவுக்குக் கதவு இல்லாத நிலைகளிருந்தன. அந்த நிலைகளுக்கு மட்டும் கதவுகள் போடப்பட்டிருந்தால் மண்டபத்தைச் சுற்றிலும் பல அறைகளை அமைத்தது போலிருக்கும். மண் டபத்தின் வடக்குக் கோடியிலிருந்த ஒரு நிலைக்குள் சித்ரா முதலில் பிரவேசிக்க அவளுக்குப் பின்னால் மற்றவர்களும் சென்றார்கள். உட்புறம் பத்து அடி நீளமும் இருபது அடி அகலமும் உள்ள ஒரு சிறு அறைபோலக் காணப்பட்டது. அந்த அறையின் மேற்புறத்தில் ஜன்னல்போல மலையைக் குடைந்து காற்றும் வெளிச்சமும் உள்ளே வருவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.
ஜோதியைத் தவிர மற்றவர்களை அந்த அறையில் விட்டு விட்டு “வாருங்கள் போகலாம்” என்று ஜோதியை அழைத்த வண்ணம் சித்ரா அவ்வறையிலிருந்து வெளியே வந்தாள்.
ஜோதியை மாத்திரம் அவள் அழைத்துக் கொண்டு போவதைக் கண்டு கலவரமடைந்த பாலாஜி “ஜோதி நீ எங்கே போகிறாய்? தனியாக அவளுடன் போகிறாயா ஜோதி!” என்று கேட்டுக் கொண்டே அவனை இறுகப் பிடித்துக் கொண்டான்.
அத்தியாயம்-14
”இந்த மனிதர் யார்? உங்களுக்கு இவர் என்ன வேண்டும்?” என்று ஜோதியிடம் அவள் விசாரித்தாள்.
“இவர் பெயர் பாலாஜி. என்னுடைய வளர்ப்புத் தகப்பனார்” என்று பாலாஜியை சித்ராவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான் ஜோதி. வில்லியத்தை தனது நண்பனென்றும் முனிசாமியை தனது குடும்பத்தின் நம்பிக்கைக்குப் பாத்திரமான பணியாளென்றும் ஜோதிவர்மன் அறிமுகப்படுத்தினான்.
சித்ரா பாலாஜியின் பக்கம் திரும்பி. “உங்கள் பிள்ளையை நான் எங்கோ அழைத்துக்கொண்டு போகிறேனேயென்று பயப்படுகிறீர்கள் போலிருக்கிறது. அவர் என்னுடனிருக்கும் வரையில் அவரைப் பற்றி நீங்கள் சிறிதும் பயப்படவேண்டியதில்லை. அடுத்த அறையில்தான் அவர் இருப்பார். விரும்பியபொழுது நீங்கள் அவரை வந்து பார்க்கலாம். இருவரும் இஷ்டப்பட்ட சமயமெல்லாம் பார்க்கலாம். உங்கள் சுதந்திரத்திற்கு இங்கு எவ்விதமான கட்டுப்பாடும் இருக்காது” என்றாள். உடனே எதையோ நினைத்துக் கொண்டு, “மறந்தே போய்விட்டேன். நீங்கள் எல்லாம் பசியாயிருப்பீர்கள். சாப்பாடு கொண்டுவரச் சொல்கிறேன்” என்று அவள் சொல்லிவிட்டுப்போனாள்.
கொஞ்ச நேரத்திற்கெல்லாம் சமையற்காரர்களைப் போலத் தென்பட்ட இரண்டு பேர்கள் நான்கு தட்டுகளில் சாப்பாடு கொண்டுவந்து வைத்துப் போனார்கள். தங்களுடைய வழக்கமான பகல் போஜனத்தைப் போல சோறு, கறி, சாம்பார், துவையல், ஊறுகாய் முதலியவைகளெல்லாம் தட்டிலிருந்தன. ஆனால் அவற்றின் ருசிமாத்திரம் சற்று மாறுபட்டதாயிருந்தது. இறைச்சி உணவு சாப்பிட்டுப் பழகிய வில்லியத்துக்கு மரக்கறிச் சாப்பாடு சாப்பிடுவது சற்றுக் கடினமாயிருந்ததென்றாலும் தாங்களிருந்த நிலைமையை உத்தேசித்து ஒருவிதமாக அவனும் சமாளித்துக் கொண்டான்.
அவர்கள் சாப்பிட்டு முடிந்தபிறகு அங்கு வந்த சித்ரா, சாப்பாட்டைப்பற்றி விசாரித்த பொழுது வில்லியம் ஒருவனைத் தவிர மற்றவர்களுக்கு சாப்பாடு ஒத்துக்கொண்டு விட்டதாயும் வில்லியத்துக்கு மட்டும் அவனுடைய வழக்கமான இறைச்சி உணவு கிடைக்காமற் போய்விட்டதென்றும் ஜோதிவர்மன் சொன்னான்.
“இந்தக் குகையில் எல்லோரும் மரக்கறி உணவு தான் சாப்பிடுவது. நாளை முதல் உங்கள் நண்பருக்கு அடுத்த குகையிலிருந்து இறைச்சி உணவு தருவித்துக் கொடுக்கிறேன்” என்று சித்ரா சொன்னாள். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் செம்படவர்கள் போலத் தென்பட்ட இருவர் இரண்டு மூடைகளை அங்கு கொண்டு வந்து இறக்கி தாங்கள் மீன் பிடிக்கச் சென்ற பொழுது ஆள் இல்லாமல் ஆற்றோடு ஒரு படகு போய்க் கொண்டிருந்ததாயும் அப் படகைக் கரையில் கொண்டு வந்து கட்டிவிட்டு அதிலிருந்த சாமான்களை மூட்டை கட்டிக்கொண்டு வந்ததாயும் கூறி விட்டுப் போனார்கள். சாக்குப் பைகளை வில்லியம் அவிழ்த்துப்பார்த்து அதற்குள் தங்களுடைய சாமான்களும் சுழல் துப்பாக்கிகளும் பத்திரமாக இருப்பதாகச் சொன்னான்.
இந்தச் சந்தர்ப்பத்தில் அங்கு வந்த தளபதி உக்கிரசேனர் ஜோதியும் மற்றவர்களும் சாப்பிட்டாகிவிட்டதா என்று விசாரித்தார். சாப்பாடு முடிந்துவிட்ட தென்று ஜோதிவர்மன் பதில் சொல்லவும் “உன் பெயரென்ன? தம்பி!” என்றும் அவர் கேட்டார்.
ஜோதிவர்மன் தன்னையும் தனது நண்பர்களையும் தளபதிக்கு அறிமுகப்படுத்தி வைத்தான்.
“உன்னுடைய பேச்சும் போக்கும் எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது ஜோதி!” என்று சொல்லி ஜோதியைத் தட்டிக் கொடுத்துவிட்டுப் போனார் உக்கிரசேனர்.
அவர் போனபிறகு “வாருங்கள்! உங்களுடன் சற்றுத் தனிமையில் பேசவேண்டும்!” என்று ஜோதியை அழைத்தாள் சித்ரா.
இதற்குள் பயம் தெளிந்துபோன பாலாஜி சித்ராவுடன் ஜோதிவர்மன் போனதை இப்பொழுது ஆட்சேபிக்கவில்லை. ஜோதிவர்மனை அடுத்த அறைக்கு அழைத்துச் சென்ற சித்ரா அங்கு போட்டிருந்த ஒரு கயிற்றுக் கட்டிலில் ஜோதியை உட்காரச் சொல்லி அவன் பக்கத்தில் கீழே உட்கார்ந்து கொண்டு, “உங்கள் தேசத்தைப் பற்றிச் சொல்லுங்கள். உங்கள் நாட்டைப்பற்றியும் நாட்டு மக்களைப்பற்றியும் அறிய எனக்கு எவ்வளவு ஆவலாயிருக்கிறது தெரியுமா?” என்றாள்.
ஜோதிவர்மன் தமிழ் நாட்டைப்பற்றி எவ்வளவு கவர்ச்சிகரமாக வர்ணிக்க முடியுமோ அப்படி வர்ணித்தான். சுவாரஸ்யமான ஒரு கதையைக் கேட்பதைப் போல அதை சித்ரா ஊக்கமாகக் கேட்டுக்கொண்டிருந்தாள். கடைசியில், “உங்களுடைய ராணியின் பெயர் என்ன? அவளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவளுடைய அரண்மனை மிக மிகப் பெரிதாயிருக்குமோ?”’ என்று அவள் கேட்டாள். ஒரு ராணி இல்லாமல் எந்தத் தேசத்திலும் ராஜாங்கம் நடக்க முடியாதென்ற உறுதியான நம்பிக்கையுடன் அவள் இப்படிக் கேட்பதைப் போலத் தொனித்தது ஜோதிவர்மனுக்கு.
சித்ராவின் அஞ்ஞானத்துக்கு அனுதாபப்பட்ட ஜோதிவர்மன் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல், “எங்கள் நாட்டுக்கு ராணி கிடையாது சித்ரா. ஜனங்களாகப் பார்த்து தேர்ந்தெடுக்கும் ஒருவரை ஜனாதிபதியாக நாங்கள் நியமிக்கிறோம். ஆட்சி நடத்துவது அவரில்லை. ஆட்சிப் பொறுப்பு பிரதம மந்திரியிடமிருக்கிறது!” என்று இந்திய ஆட்சி முறையைச் சித்திராவுக்குப் புரியும்படி சுருக்கமாகவும் அவளுக்குத் தெரியவேண்டிய அளவிற்கும் சொல்லி விட்டு, “உங்கள் தேசத்து ராணி மரணத்தை வென்ற சிரஞ்சீவியென்கிறார்களே அது நிஜம்தானா சித்ரா?” என்றான்.
இக்கேள்வியை அவன் கேட்டவுடன் அவனை ஏறத்தாழப் பார்த்த சித்ரா, “உங்களுக்கு இப்படி யார் சொன்னது?” என்று கேட்டாள்.
ஜோதிவர்மன் ஒரு கணம் யோசித்தான். பிறகு, “செம்பவளத்தீவின் ராணிக்கு சாவு கிடையாது என்று சரித்திரக் கதைகளில் படித்திருக்கிறேன். ஆனால் அது எவ்வளவு தூரம் உண்மையென்பது எனக்குத் தெரியாது” என்றான்.
“அது ஒரு பெரிய கதை! அந்த வெட்கக்கேட்டை ஏன் கேட்கிறீர்கள்? உங்களுக்கு அவசியம் தெரியத்தான் வேண்டுமென்றால் சொல்லுகிறேன்!” என்று ஒரு பெரிய வெடிகுண்டைத் தூக்கிப்போட்டாள் சித்ரா.
பிறகு சித்ரா அக்கம் பக்கங்களில் பார்த்துக்கொண்டு தாழ்ந்த தொனியில் பின்வருமாறு சொன்னாள்:-
“அது ஒரு பெரிய கதை. ஆனால், அதை வெளியே சொன்னால் தலைபோய்விடும். இந்த நாட்டில் மகாராணியின் பேச்சுக்கு மறுபேச்சில்லை. அவள் தான் சட்டம், நியாயம், மாதா, பிதா, தெய்வம் எல்லாம். செம்பவளத்தீவின் நடுமத்தியில் மலைச்சிகரத்தின் மீதிருக்கும் அமரபுரியில் மகாராணி இருக்கிறாள். திக்கு பாலகர்களையும் வேறு ஒரு சிலரையும் தவிர மகாராணியை நேரில் பார்த்தவர்கள் யாரும் கிடையாது. இவர்கள்கூட மகாராணியை நேருக்கு நேராக அருகில் நின்று பார்த்ததில்லையாம். உச்சியிலிருந்து உள்ளங்கால் வரையில் மகாராணி ஒரு நீண்ட சால்வையை அணிந்திருப்பாளென்றும் அவளுடைய முகம் தெரிந்தும் தெரியாததுமாயிருக்கு மென்றும் தூரத்தில் நின்று கொண்டு தான் மகாராணியைத் தரிசிக்க வேண்டு மென்றும் அப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன்.”
“அமரபுரியிலிருந்து வருகிறவர்கள் மூலம் மகாராணியைப்பற்றி ஒரு தகவலும் கிடைப்பதில்லையா?” என்று கேட்டான் ஜோதி.
“அமரபுரியிலிருப்பவர்கள் யாரும் மலையிலிருந்து இறங்கிக் கீழே வருவதில்லை. தப்பித்தவறி அப்படி யாராவது மகாராணி அனுப்பி வந்தாலும் அவர்கள் மூலம் எதையும் தெரிந்துகொள்ள முடியாது. அமரபுரியில் அரண்மனை சேவகத்தில் இருப்பவர்கள் எல்லோரும் ஊமைகள். அவர்களால் பேசவே முடியாது. அரண்மனை ஊழியர்களுக்குக் குழந்தை பிறந்தவுடனேயே பேச முடியாதபடி நாக்கைத் துண்டித்து எடுத்துவிடுவதாக வதந்தி. இது எவ்வளவு தூரம் உண்மையென்பது யாருக்கும் தெரியாது. ஆனால் அமரபுரியில் சேவகம் செய்பவர்கள் அனைவரும் ஊமைகளென்பது மட்டும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். மகாராணியின் அந்தரங்கங்களைப் பாதுகாக்கவே இந்த ஏற்பாடென்பது பொதுவான நம்பிக்கை” என்றாள் சித்ரா.
“இதெல்லாம் இருக்கட்டும் சித்ரா! மகாராணி தேவ தேவி மரணத்தை வென்றவள் என்பது உண்மைதானா?” என்று கேட்டான் ஜோதி.
சித்ரா அறைக்கு வெளியேவந்து யாரும் ஒட்டுக் கேட்கவில்லையென்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர், “இதை நான் நம்பவில்லை. மகாராணி இறப்பதே யில்லையென்பதை யார் கண்டார்கள்?” என்றாள்.
சித்ரா இப்படிச் சொல்லியது ஜோதிவர்மனுக்கு அவன் கொண்டிருந்த அபிப்பிராயங்களையெல்லாம் குரூரமாகச் சீர்குலைப்பதைப் போலிருந்தது. “அதென்ன அப்படிச் சொல்லிவிட்டாய். கொஞ்சம் விளக்கமாகக் சொல்லு சித்ரா” என்றான் அவன்.
“மகாராணி தனக்கு இஷ்டமான புருஷனை வைத்துக் கொண்டு ஒரே ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் அந்தப் புருஷனை மலையிலிருந்து உருட்டித் தள்ளிக் கொன்றுவிடுகிறாளாம். மகாராணி இறந்தவுடன் யாருக்கும் தெரியாமல் அவளுடைய பெண் தாயின் பெயரையே வைத்துக் கொண்டு மகாராணியாகி விடுகிறாளாம். இந்த ராஜ குடும்ப விவகாரம் பரம ரகசியமாயிருப்பதாயும் இதைப் பற்றி யாருக்கும் ஏதும் தெரியக் கூடாதென்பதற்காகவே அமரபுரியில் ஊமைகளையே சேவையில் அமர்த்தியிருப்பதாயும் பேசிக் கொள்கிறார்கள்!” என்றாள் சித்ரா.
“இதெல்லாம் உனக்கு எப்படித் தெரிந்தது?” என்று ஜோதிவர்மன் கேட்டபொழுது. “நாடோடியாகவும் அந்தரங்கமாகவும் பெண்களுக்கிடையில் அடிபடும் பேச்சுக்களைக் கொண்டே இதைக் சொல்கிறேன். ஆனால் நிச்சயமாக யாருக்கும் ஏதும் தெரியாது” என்றாள் சித்ரா.
சித்ரா அங்கிருந்து வெளியேபோன சிறிது நேரத்திற்குப் பின்னர் உக்கிரசேனர் மீண்டும் ஜோதிவர்மனைத் தேடிக்கொண்டு வந்தார்.
வந்தவர், “உன் பெயர் என்னவென்று சொன்னாய்?” என்று விசாரித்தார்.
“ஜோதிவர்மன்” என்றான் ஜோதி.
”ஜோதி! உங்களை இங்கு அழைத்துவந்து வைத்திருக்கும்படிதான் மகாராணியின் உத்தரவு. அரண்மனைக்கு எப்பொழுது அழைத்துவருவதென்பதைப்பற்றி உத்தரவு ஏதும் வரவில்லை!” என்றார் தளபதி.
“அப்படியானால் உங்களை எப்பொழுது அரண்மனைக்கு அழைத்து வருவதென்று நீங்களும் இங்கிருந்து கொண்டே மகாராணியிடம் கேட்கக்கூடாதா?” என்று கேட்டான் ஜோதி.
“கூடாது தம்பி! மகாராணி அவர்களாகப் பேசினா லொழிய நாமாக அவர்களுடன் பேசக்கூடாது. உத்தரவு வந்தவுடன் உங்களை அரண்மனைக்கு அழைத்துப் போகிறேன். அதுவரையில் நீங்கள் இங்கு சௌக்கியமாயிருக்கலாம். பார்த்தால் நீ மிகவும் நல்லவனாயிருக்கிறாய். இங்கு ஏன் வந்தாய் தம்பி?” என்றார்.
“நல்லவர்கள் இங்கு வரவே கூடாதா அய்யா!” என்று ஜோதிவர்மன் பளிச்சென்று கேட்டான்.
“மகாராணிக்குத் தெரியாமல் யாரும் இந்த நாட்டுக்குள் அடியெடுத்துவைக்க முடியாது. அடியெடுத்து வைத்தவர்கள் உயிரோடு சொந்த நாட்டுக்குத் திரும்பிப் போனது மில்லை. என் தாத்தா, கொள்ளுத் தாத்தா காலத்திலிருந்து அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் எவரையும் மகாராணி உயிரோடு வெளியே அனுப்பியது கிடையாது தம்பி!” என்றார் தளபதி.
“உங்கள் தாத்தா, கொள்ளுத் தாத்தா காலத்திலிருந்து என்றா சொன்னீர்கள்? அவ்வளவு ஆண்டுகளாக ஒரே ராணி எப்படி ஆட்சி நடத்தி வரமுடியும் பெரியவரே!” என்றான் ஜோதிவர்மன்.
”உஸ்! உரக்கப் பேசாதே?” என்று எச்சரித்த தளபதி, “எங்கள் ராணிக்கு மரணமே கிடையாது. அவர்கள் நம்மைப் போல சாதாரண மனிதப்பிறவியில்லை. சாகாவரம் பெற்ற தேவதேவதை! ஒருக்கால் உன் மனைவியிடம் கருணை வைத்து உன்னை மகாராணி உயிரோடு விட்டாலும் விடலாம். உன் தலையெழுத்து எப்படியிருக்கப் போகிற தென்பது யாருக்குத் தெரியும்?” என்றார்.
“என் மனைவியா? எனக்கு இன்னும் கல்யாணமே ஆகவில்லை பெரியவரே!” என்றான் ஜோதி.
இவன் இப்படிச் சொல்லவும் அவனை அதிசயத்துடன் பார்த்த தளபதி, “கல்யாணமாகவில்லையா? சற்று முன் நடந்ததை அதற்குள் மறந்துவிட்டாயா? சித்ராவுக்கு மாலையிட்டு முத்திரை மோதிரத்தை முத்தமிட்டு பிரதிக்ஞை யெடுத்துக்கொண்ட தெல்லாம் பொய்யா?” என்றார்.
இதைக் கேட்டதும் ஜோதிவர்மனுக்கு என்ன சொல்வ தென்று தோன்றவில்லை. அவளுக்கு மாலையிட்டு முத்திரை மோதிரத்தை முத்தமிட்டு பிரதிக்ஞை செய்யவில்லையா என்று உக்கிரசேனர் கேட்ட பொழுது அவனுக்கு உண்மை பளிச்சென்று உதயமாயிற்று. செம்பவளத்தீவில் இதுதான் திருமணச் சம்பிரதாயம் போலிருக்கிறதென்று அவன் நினைத்தான். தன்னை அறியாமலே தனக்கு சித்ரா மனைவியாகிவிட்டதை நினைத்தபொழுது அவனுக்கு உள்ளூர வியப்பாயிருந்தது.
காலஞ்சென்ற தனது தகப்பனாரின் அபிலாஷையை அனுசரித்து உலக சரித்திரத்தில் விசேஷமான ஆராய்ச்சிகள் நடத்திய ஜோதிவர்மன் பல நாட்டு மக்களின் பழக்க வழக்கங்களையும் நன்கு அறிந்திருந்தான். நாட்டுக்கு நாடு ஏன் ஒரே நாட்டுக்குள் வகுப்புக்கு வகுப்பு விவாக சம்பிர தாயங்களும் விவாகரத்துச் சட்டதிட்டங்களும் மாறு பாடாயிருப்பது அவனுக்குத் தெரியும்.
“இல்லை! நான் சித்ராவை மனம் அறிந்து மாலை யிட்டு மனைவியாக ஏற்றுக்கொள்ளவில்லை. எனக்கு உங்கள் நாட்டுப் பழக்கம் தெரியாததினால் ஏற்பட்ட விபரீதம்தான் இது” என்று உக்கிரசேனரிடம் முகத்தில் அடித்த மாதிரிச் சொல்லிவிடுவதா அல்லது நாங்கள் அப்பொழுதிருந்த நிலைமையை உத்தேசித்து உக்கிரசேனரைப் பகைத்துக் கொள்ளாமலிருக்க சித்ராவைப் பெயரளவில் மனைவியாக ஏற்றுக்கொள்வதா என்ற ஒரு பெரிய பிரச்சினைக்கு ஜோதிவர்மன் அரை நொடியில் முடிவு செய்யவேண்டியிருந்தது. மகாராணிக்குத் தெரியாமல் அந்நியர்கள் யாரும் செம்பவளத்தீவுக்கு வரமுடியாதென்றும் அப்படி வந்தவர்கள் உயிரோடு சொந்த நாட்டுக்குத் திரும்பியதில்லையென்றும், ஒரு சமயம் சித்ராவை உத்தேசித்து வேண்டுமானால் மகாராணி உயிர்ப்பிச்சை கொடுக்கலா மென்றும் உக்கிரசேனர் சொல்லியது சித்ராவைத் தற்காலிகமாகவேனும் மனைவியென்று ஒப்புக்கொள்வதுதான் புத்திசாலித்தனமென்பதை அறிவுறுத்திக்காட்டுவதைப் போலிருந்தது.
“என்ன யோசிக்கிறாய் தம்பி?” என்று உக்கிரசேனர் மறுபடியும் கேட்டார்.
“நீங்கள் சொல்லியதைப்போல சித்ரா எனக்கு மாலை யிட்டதும் சித்ராவுக்கு நான் மாலையிட்டதும் பிறகு முத்திரை மோதிரத்தை முத்தமிட்டதும் வாஸ்தவம்தான். ஆனால் இதுதான் திருமண சங்கற்பம் என்பது எனக்குத் தெரியாது. எங்கள் நாட்டுப் பழக்கம் வேறு பெரியவரே!” என்றான் ஜோதிவர்மன்.
தளபதி உக்கிரசேனர் ஒரு நிமிடம் மௌனம் சாதித்தார். பிறகு, “தேசத்துக்குத் தேசம் திருமண முறைகள் மாறுமென்பதை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். எது எப்படியானாலும் எங்கள் நாட்டுச் சட்டத்தின்படி சித்ரா உன் மனைவி. இந்த நாட்டில் ஒரு பெண்ணை மகள் என்று சொல்லிக்கொள்ளும் உரிமை நான்கு திக்கு பாலகர்களுக்கு மட்டுமேயுண்டு. அந்தப் பெருமை வாய்ந்த என் மகள் உன்னுடைய மனைவி. என்ன யோசிக்கிறாய் ஜோதி! சொல்லு. உன் மனதிலிருப்பதை ஒளிக்காமல் சொல்லு” என்றார்.
அவருக்குப் பதில் சொல்ல ஜோதிவர்மன் அதிகம் தயங்கவில்லை. சித்ராவை மனைவியாக ஏற்றுக்கொள்ளுவதா இல்லையா என்பதைப் பற்றி இதற்குள் அவன் தீர யோசித்து ஒரு முடிவுக்கு வந்திருந்தான். ஆகவே உக்கிரசேனர் என்ன யோசிக்கிறாய் என்று கேட்டவுடன், “சித்ராவை மனைவியாகப் பெற நான் எவ்வளவோ பாக்கியம் செய்திருக்கவேண்டும் ஐயா! உலகத்தில் அவளுக்கு நிகரான ஒரு அழகியும் குணவதியும் இருப்பார்களென்று நான் நம்பவில்லை. ஆனால்…!” என்று சொல்லி விட்டுச் சற்று நிறுத்தினான்.
“என்ன ஆனால்…? சொல்லு தம்பி!” என்றார் உக்கிரசேனர்.
“மகாராணியைப் பார்க்க அரண்மனைக்குப் போனால் நான் உயிரோடு திரும்பி வருகிறேனோ இல்லையோ. திரும்பி வராமல் போனால் பாவம் சித்ரா ஏமாந்து போவாளே என்பதை நினைக்கும் பொழுதுதான் எனக்குத் துக்கமா யிருக்கிறது” என்றான் ஜோதிவர்மன்.
உக்கிரசேனர் நிலத்தைப் பார்த்துக் கொண்டே சிறிது மெளனம் சாதித்தார். பிறகு, ”இது சித்ராவுக்கும் தெரிந்திருக்க வேண்டும். அப்படியிருந்தும் அவள் உன்னைத் தன் கணவனாக வரித்துவிட்ட பின் யார் என்ன செய்ய முடியும்? ஒரு சமயம் அவளுக்கு அதிர்ஷ்டமிருந்தால் அது உன் உயிரைக் காப்பாற்றலாம் தம்பி!” என்று அவர் சொல்லிவிட்டுப் போனார்.
சுத்த நீரில் ஸ்நானம் செய்து ஒரு மாதத்துக்கு மேலாகியதால் ஓடை இருக்கும் இடத்தை விசாரித்துக் கொண்டு அன்று மாலை ஜோதிவர்மனும் அவனுடைய சகாக்களும் சென்றார்கள். அவர்கள் போகும் பொழுதும் ஓடையில் ஸ்நானம் செய்து கொண்டிருக்கையிலும் குகைவாசிகள் இடைவிடாமல் அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்ததோடு யாராவது ஒருவன் கூடவே இருந்தபடியினால் அவர்கள் அந்தரங்கமாக ஒன்றும் பேச முடியவில்லை.. மற்றவர்களைக் காட்டிலும் வில்லியத்தையே அந்த ஜனங்கள் அதிக குறிப்பாகக் கவனித்ததாய் தோன்றியது.
அன்றிரவு சாப்பாடு முடிந்ததும் சித்ராவின் திருமணத்துக்காக விசேஷமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூத்தைப் பார்க்க எல்லோரும் போனார்கள். உக்கிரசேனர் அரண்மனைக்குக் கிளம்பிப் போனார்.
“இங்கு கல்யாணங்கள் நடந்தால் கூத்துக்களும் நடக்குமா?” என்று கேட்டான் ஜோதி.
“பெரிய இடத்துக் கல்யாணங்கள் நடந்தால் கூத்துக்கு ஏற்பாடு செய்வது வழக்கம். இன்றிரவு அப்பா இல்லாமல் திடீரென்று அரண்மனைக்குப் போக நேர்ந்ததில் எல்லோருக்கும் வருத்தம். ஆயினும் மகாராணியின் ஆக்ஞையை யார் மீறமுடியும்!” என்றாள் சித்ரா.
“உன்னிடம் ஒரே ஒரு விஷயம் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும் சித்ரா! இந்த நாட்டில் தன்னுடைய சொந்தப் பெண்ணை மகள் என்று சொல்லிக்கொள்ளும் உரிமை திக்கு பாலகர்களுக்கு மட்டும்தான் உண்டு என்று தளபதி சொன்னார். அதன் அர்த்தமென்ன?” என்று கேட்டான்.
“ஓ, அதுவா ! இந்த நாட்டில் தாய்க்குத்தான் முதல் ஸ்தானம். எல்லோரும் அவர்களுடைய தாயின் பெயரைச் சொல்லியே அவளுடைய பெண், அல்லது பிள்ளை என்று தங்களைச் சொல்லிக்கொள்ளுவார்கள். தகப்பனை தகப்பனா ரென்று யாரும் சொல்லிக்கொள்ளுவதில்லை. குடும்பத்தின் தலைவி தாய். அவளுக்கே குடும்பத்தில் அதிகாரமும் முதல் மரியாதையும். அதேபோல குடும்பப் பொறுப்புக்களும் அவளுக்குத்தான்!” என்றாள் சித்ரா.
“ஒரு தகப்பனை அப்பா என்று அழைப்பதில்லையா?” என்று கேட்டான் ஜோதி.
”இல்லை! குழந்தைகளுக்குத் தாயார்தான் தகப்பன் தாய் எல்லாம்! இதற்குக் காரணம் தாயின் கணவர் அடிக்கடி மாறலாம். குழந்தைகளின் தாயார் மாறமுடியுமா?” என்றாள் சித்ரா.
ஜோதி: உன் தாயார் எங்கே சித்ரா?
சித்ரா: நான் சிறுவயதிலிருக்கும்பொழுதே என் அம்மா இறந்துவிட்டாளாம்.
ஜோதி:- அதன் பிறகு உன் தகப்பனார் மறுமணம் செய்துகொள்ளவில்லையா?
சித்ரா: சட்டப்படி செய்துகொள்ளலாம். ஆனால்ஏனோ அப்பா மறுபடி கல்யாணம் செய்துகொள்ளவில்லை.
ஜோதி: ஏன் என்று எனக்குத் தெரியும்.
சித்ரா: ஏன்?
ஜோதி: உன்னிடம் வைத்திருக்கும் அன்பை இன்னொருவருடன் பகிர்ந்துகொள்ள அவர் விரும்பவில்லை. தனது அன்பு முழுவதையும் உன்னிடம் சொரிந்து அருமையாக உன்னை வளர்த்திருக்கிறார்.
சித்ரா: ஆமாம்! அது உண்மை, அப்பாவுக்கு என்னிடம் உயிர். அதேசமயம் வாரிசு உரிமைக்கு ஒரு பிள்ளை யில்லையே என்ற குறையும் அப்பாவுக்கு ரொம்ப உண்டு. மகாராணி மட்டும் மனம் வைத்தால் அப்பாவின் அந்தக் குறையும் நீங்கிவிடும்.
ஜோதி: உன் அப்பாவிற்குப் பிள்ளையில்லையென்றால் மகாராணி மனது வைப்பதில் என்ன இருக்கிறது? அப்பாவிற்குப் பிறகு திக்கு பாலகர் பதவியில் உன்னையே நியமிக்கலாமென்கிறாயா?
சித்ரா: இல்லை! உங்களை.
இதைச் சொல்கையில் சித்ராவின் கண்களிலே சிவப்பேறிப் போயிற்று.
கூத்து முறையாக ஆரம்பித்தது. வெள்ளைக்காரர் சிப்பாய்கள் சிலர் செம்பவளத்தீவில் படையெடுத்து வருவதைப்போலவும், அவர்கள் குகை வாசிகளைக் கொடுமைப் படுத்துவதுபோலவும், குகை வாசிகள் பிறகு ஒன்று சேர்ந்து வெள்ளைக்காரர்களைத் தூக்கில் போட்டு ஊஞ்சலாட்டுவதைப் போலவும் கூத்தின் கதை அமைந்திருந்தது.
“வெள்ளைக்காரர்களைக் கண்டால் உங்களுக்கு ஏன் இவ்வளவு துவேஷம்?” என்று சித்ராவிடம் ஜோதிவர்மன் மெதுவாக விசாரித்தான்.
“அதுவா? ஒரு பெரிய கதை! கொஞ்சக் காலத்துக்கு முன்னால் தோணியில் சில வெள்ளைக்காரர்கள் இந்நாட்டுக்கு வந்து ஜனங்களை ரொம்ப கொடுமைப்படுத்தி விட்டார்கள். அவர்களிடம் நெருப்பைக் கக்கும் ஒரு புது மாதிரியான ஆயுதமிருந்தது. அந்த ஆயுதங்களைக் கொண்டு எங்கள் ஜனங்களில் அநேகரை அவர்கள் கொன்றுவிட்டார்கள். கடைசியில் தந்திரமாக அந்த வெள்ளைக்காரர்களை என் அப்பா பிடித்துக் கட்டிப்போட்டார். அளவுக்கு மீறிய ஆத்திரமடைந்திருந்த ஜனங்கள் எல்லா வெள்ளைக்காரர்களையும் தூக்கில் மாட்டிக் கொன்றுவிட்டார்கள். அது முதல் வெள்ளைக்காரர்களென்றால் எங்கள் ஜனங்களுக்கு கடும் துவேஷம்!” என்றாள் சித்ரா.
கொஞ்ச நேரம் கழித்து “எதற்கும் உங்கள் நண்பரை கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லுங்கள்” என்று அவள் எச்சரித்தாள்.
அன்றிரவு கூத்து முடிந்து சித்ராவுடன் ஜோதியும் அவனுடைய சகாக்களும் குகைக்குத் திரும்பிய பொழுது நள்ளிரவிற்கு மேலாகிவிட்டது.
”ஜோதி! தனியாகவா அடுத்த அறையில் நீ படுத்துக் கொள்ளப் போகிறாய்? இரவு எங்களுடனேயே இரேன்!” என்றான் பாலாஜி. இப்படிக் கேட்கும்பொழுது சித்ராவைப் பார்த்து அவளுடைய அனுமதியைக் கேட்பதைப் போலச் சொன்னான்.
“உங்கள் ஜோதி தனியாக இல்லையே! என்னோடு கூடத்தானே இருக்கிறார்” என்றாள் சித்ரா.
அன்று விடியற்காலையிலிருந்து பாலாஜியுடனும் வில்லியத்துடனும் தனித்துப் பேசச் சந்தர்ப்பமே கிடைக்காத படியினாலும் அன்று நடந்துள்ள பரபரப்பான பல விஷயங்களைப் பற்றியும் வாய்விட்டு அவர்களோடு பேச வேண்டும் போல ஜோதிவர்மனுக்குத் தோன்றியதினாலும் அவன் சற்றுத் தயங்கிவிட்டு “அதற்குச் சொல்லவில்லை சித்ரா! பெரியப்பா என்னைவிட்டு ஒரு நிமிஷம் கூடப் பிரிந்திருந்த தில்லை. ஆகையால்தான் வாஞ்சையில் இப்படிச் சொல்லுகிறார். போகப் போக எல்லாம் சரியாய்ப் போய்விடும். பெரியப்பா விருப்பத்தின்படி இன்றிரவு அவரோடுதான் இருக்கிறேனே!” என்றான்.
“உங்களுடைய விருப்பத்துக்கு நான் தடையில்லை! நான் அடுத்த அறையில்தான் இருக்கிறேன். வேண்டும் போது கூப்பிடுங்கள்!” என்று சொல்லிவிட்டுச் சித்ரா மளவென்று அங்கிருந்து போய்விட்டாள். அவளுடைய குரலில் ஏமாற்றமும் துக்கமும் துயரமும் தொனிப்பதைப்போல் ஜோதிவர்மனுக்குத் தோன்றியது.
“என்ன ஜோதி ஏன் ஒருமாதிரியாய்ப் பார்க்கிறாய்?” என்று கேட்டான் பாலாஜி. இக்கேள்வியைக் கேட்ட பொழுது ஜோதிவர்மனுக்கும் சித்ராவுக்குமிடையில் புதிதாக ஏற்பட்டுள்ள நட்பின் ஆழத்தைப் பாலாஜி தெரிந்து கொள்ளாவிட்டால்கூட அவன் மனதிலிருந்த சந்தேகத்தை அந்தக் கேள்வி பிரதிபலித்துக் காட்டுவதா யிருந்தது. தனக்கும் சித்ராவுக்கும் அந்த நாட்டு முறைப்படி திருமணம் நடந்து விட்டதை விபரமாக ஜோதி எடுத்துச் சொன்னான்.
பாலாஜி குறுக்கிட்டு, “சித்ரா உன்னுடைய மனைவி! நீ சித்ராவின் கணவன்! உனக்குப் பயித்தியம் ஏதாவது பிடித்துவிட்டதா ஜோதி!” என்றான்.
செம்பவளத் தீவின் திருமண சம்பிரதாயங்களைப் பற்றித் தளபதி உக்ரசேனரும் சித்ராவும் சொல்லி விபரங்களை ஜோதிவர்மன் பாலாஜிக்கு விபரமாகச் சொல்லி “தங்களுடைய நாட்டுப் பழக்கத்தின்படி என்னைத் தன்னுடைய கணவனென்று சித்ரா நினைக்கிறாள். இப்படியே அவளுடைய ஜனங்களும் நினைக்கிறார்கள். இதனால் நமக்கு நன்மையேற்படும் பட்சத்தில் அவர்கள் எப்படி நினைத் தாலும் அதை நாம் ஏன் ஆட்சேபனை செய்ய வேண்டும்? ஆனால் ஒன்று மட்டும் சொல்லுகிறேன். நவநாகரிகத்தில் மூழ்கி சூதுவாதுகள் நிறைந்த பெரும்பாலான நம் நாட்டுப் பெரிய இடத்துப் பெண்களோடு ஒப்பிடுகையில் கள்ளம் கபடமறியாத சித்ரா லட்சம் மடங்கு மேலானவள். நான் இப்படிச் சொல்லுவதிலிருந்து அவளை நானும் மனைவி யாக ஏற்றுக் கொண்டுவிட்டேனோ என்று எண்ணிக் கலவரமடைந்து விடாதீர்கள். அதிமுக்கியமான இவ்விஷயத்தில் உங்களுக்குத் தெரியாமலும் உங்கள் சம்மதமில்லாமலும் நான் ஒரு முடிவும் செய்துவிட மாட்டேன். இதை நீங்கள் உறுதியாக நம்பலாம் பெரியப்பா! சித்ராவின் மூலமாக நமக்குப் பல உதவிகள் கிடைக்கக் கூடும். உண்மையில் இன்று நாம் உயிரோடு இருப்பதே அவள் தயவில் தான். அவளைச் சரியாக நமது லட்சியத்துக்குப் பயன் படுத்திக் கொள்ள நான் நடிக்கும் நாடகத்தை நிஜம் என்று நினைத்துவிடாதீர்கள்!” என்றான்
பிறகு தேவதேவியைப் பற்றி சித்ரா வெளியிட்ட அபிப்பிராயங்களை அவன் சொல்லியபொழுது, “அவள் சொல்லுவது உண்மையாக இருக்குமென்றே எனக்கும் தோன்றுகிறது ஜோதி! தேவதேவி என்ற பெயரில் சென்ற 25 நூற்றாண்டுகளாக இந்த நாட்டில் அரசு செலுத்தி வருவது சந்திரிகா குறிப்பிட்டிருக்கும் தேவதேவியின் வம்சத்தைச் சேர்ந்தவர்களாக இருக்குமே தவிர, அதே ஆசாமி யாயிருக்க முடியாது. இல்லாவிட்டால் அரசி அந்தரங்கமாக அரண்மனையைவிட்டு வெளியே வராமலும் யாருடைய கண்களிலும் படாமலும் மறைந்து வாழ்வானேன்? தன்னுடைய அந்தரங்கங்களைப் பாதுகாக்க ஊமைகளையும் செவிடுகளையும் அரண்மனைச் சேவகத்தில் அமர்த்திக் கொண்டிருப்பானேன்? இதையெல்லாம் கவனிக்கும் பொழுது சித்ராவின் அபிப்பிராயம் சரியாயிருக்குமென்று நான் நினைக்கிறேன். இது இருக்கட்டும் வில்லியத்தை இந்தக் காட்டுமிராண்டி ஜனங்கள் பார்க்கும் பார்வையை நினைத்தால் எனக்குப் பயமாகத்தானிருக்கிறது!” என்றார் பாலாஜி
“என்னைப் பற்றி நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். இதுமாதிரியான அபாயங்களில் இதற்கு முன் பல தடவை நான் அனுபவப்பட்டிருக்கிறேன். கையில் துப்பாக்கியும் இடுப்புக் கச்சையில் ரவைகளும் இருக்கும்வரையில் என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதேயில்லை!” என்று சற்று அமித நம்பிக்கையோடு கூறினான் வில்லியம். யினும் அவனைத் தனியாக எங்கும் போக வேண்டா மென்று பாலாஜியும் ஜோதியும் பலமாக எச்சரித்தார்கள்.
அடுத்த மூன்று தினங்கள் வரையில் எவ்விதமான விசேஷ சம்பவங்களும் நிகழவில்லை. ஜோதியும் அவன் சகாக்களும் அரண்மனைக்குச் சென்ற தளபதி உக்ரசேனரின் வரவிற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருந்தார்கள். இந்த மூன்று தினங்களும் அவர்களுக்கு நிம்மதியாகவே கழிந்தது. சித்ரா அவர்கள் கூடவேயிருந்து சைத்ரோபசாரங்கள் செய்தாள். சற்று நெருங்கிப் பழக சந்தர்ப்பம் கிடைத்தவுடன் பாலாஜிக்குக்கூட சித்ராவை ரொம்பப் பிடித்துப் போய்விட்டது. தன்னலம் கருதாமல் விருந்தினர்களை உபசரிக்கும் அவளுடைய பண்பை பாலாஜி ஒருநாள் வாய்விட்டே புகழ்ந்து பேசினான். காட்டில் வேட்டையாடுவதற்குப் போன பொழுது கூட ஜோதியை அவள் நிழல்போலப் பின்பற்றிக் கொண்டு வந்தது பாலாஜிக்கு உண்மையில் ஆச்சர்யமாயிருந்தது.
“நானும் எவ்வளவோ பெண்களைப் பார்த்திருக் கிறேன். ஆனால் சித்ராவைப்போல அடக்கமும் உயர்ந்த பண்புகளும் கொண்ட ஒருத்தியை நான் எங்கும் கண்டதே யில்லை. சித்ரா மாதிரி ஒரு பெண்ணைப் பார்க்க ராதை எவ்வளவு சந்தோஷப்படுவாள் தெரியுமா?” என்றான் பாலாஜி ஒருநாள்.
“உங்களுக்கும் பிடித்திருந்தால் போகும்பொழுது சித்ராவை நம்கூடவே அழைத்துக் கொண்டு போய் விடுவோம்!” என்று சிரித்துக் கொண்டே சொன்னான் ஜோதி.
“என்னைக் கேட்டால் சித்ராவை நாட்டுப் பெண்ணாகப் பெறுவதற்கு உன் பெரியப்பா எவ்வளவோ பாக்கியம் செய்திருக்க வேண்டுமென்று நான் சொல்லுவேன்!” என்று ஜோதியைப் பார்த்துச் சொன்னான் காப்டன் வில்லியம்.
“ஆமாங்க எஜமான்! ரொம்ப நல்ல பொண்ணு தானுங்க, சத்தியவான் சாவித்திரி கதை மாதிரி சின்ன எஜமானை விடமாட்டேன்னு எங்கு போனாலும் துரத்திக்கிட்டு வருதுங்க அம்மா!” என்றான் முனிசாமி.
“சரி சரி! அதோ அந்தப் பொண்ணு வருகிறது. உன் வாயைக் கொஞ்சம் மூடிக் கொள்!” என்று சொல்லி அந்தப் பேச்சுக்கு அத்துடன் பாலாஜி முற்றுப்புள்ளி வைத்து விட்டான்.
நான்காவது நாள் காலை ஜோதியும் அவன் கோஷ்டி யினரும் பொழுது போக்குவதற்காக மறுபடியும் வேட்டைக்குக் கிளம்பிய பொழுது சித்ராவுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. “இன்று காட்டுக்குப் போக வேண்டாமே! எப்படியும் மாலைக்குள் அப்பா திரும்பிவிடுவார்! அமரபுரிக்குப் பிரயாணப்படுவதின் முன்னால் ஒரு நாள் பூரண ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லதில்லையா?” என்றாள்.
அவள் பேச்சைக் கேட்காமல் நடுப்பகலுக்குள் திரும்பி விடலாமென்று சொல்லிக் கொண்டு அவர்கள் காட்டுக்குச் சென்றார்கள். வேறு வழியில்லாமல் சித்ராவும் அவர்கள் கூடவே சென்றாள்.
ஒரு புலியைத் துரத்திக் கொண்டு மூலைக்கு ஒருவராக ஓடியபொழுது திசை தெரியாத காட்டில் அவர்கள் பிரிந்து போய் விட்டார்கள்! சித்ரா மாத்திரம் ஜோதியை விடாமல் பின்பற்றிச் சென்று கொண்டிருந்தாள். பாலாஜியும் வில்லியமும் முனிசாமியும் போன இடம் தெரியவில்லை.
வெகுநேரம் கழித்துப் பாலாஜியும் முனிசாமியும் ஜோதி இருந்த இடத்திற்குத் திரும்பி வந்து சேர்ந்தார்கள். அங்கு வில்லியமைக் காணவில்லை என்றவுடன் பாலாஜி பதை பதைத்துப் போய்விட்டான்.
“வில்லியம் போன திசையை நோக்கி குகைவாசிகளில் சிலர் ஈட்டிகளோடு ஓடியதைப் பார்த்தேன். வில்லியமுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருக்குமோ என்னவோ தெரியவில்லையே!” என்று கலவரத்துடன் பாலாஜி கேட்ட பொழுது “எங்கள் ஜனங்களா போனார்கள்? நீங்கள் நிச்சயமாகப் பார்த்தீர்களா? அந்தக் கூட்டத்தில் கொஞ்சம் தடித்த மனிதனும் போனானா?” என்று சித்ரா வாய்குழற வினவினாள்.
”ஆமாம்! நீ குறிப்பிடும் அந்த மனிதனும் போனான். சுமார் இருபது பேர்கள் அந்தத் திசையில் ஓடினார்கள்!” என்றான் பாலாஜி.
“அப்படியானால் ஓடிவாருங்கள்! அவர்களிடமிருந்து வில்லியம் பிழைத்திருந்தால் உங்கள் அதிர்ஷ்டம். வெள்ளைக்கார னென்பதற்காக வில்லியத்தைத் தீர்த்துக் கட்டச் சிலர் திட்டம் போட்டு வந்தது எனக்குத் தெரியும். ஆகையால்தான் வில்லியத்தைத் தனியே எங்கும் போகவிடாதீர்கள் என்று எச்சரித்தேன். என் பேச்சைக் கேட்காததால் வந்த விபரீதம் இது! வில்லியம் எந்தத் திசையில் போனார்? போய்ப் பார்ப்போம் வாருங்கள்!” என்றாள் சித்ரா.
ஜோதியும் சித்ராவும் பாலாஜியும் முனிசாமியும் வில்லியம் ஓடிய திசையை நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்றார்கள். ஆனால் அவர்கள் வில்லியம் இருக்கும் இடத்திற்கு வந்து சேருவதற்கு முன்பாகவே செம்பவளத்தீவு அதனுடைய முதலாவது பலியை வாங்கிக் கொண்டு விட்டது. நடுக்காட்டில் காப்டன் வில்லியமின் பிரேதம் ஒரு மரத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டிருப்பதையும் வில்லியமின் உடம்பு பூராவும் ஈட்டிகள் பாய்ந்து ரத்தம் ஆறாகப் பெருகி வடிந்து கொண்டிருப்பதையும் கண்டு ஜோதியும் அவன் கோஷ்டியாரும் கற்சிலைகள் போலச் சமைந்து போனார்கள்.
“தேவ தேவிக்கு முதல்பலி வில்லியம்! அடுத்த பலி நம்மில் யாரோ!” என்று பாலாஜி கொஞ்ச நேரம் கழித்துச் சொல்லியபொழுது அவன் தொண்டை கனத்துப் போயிருந்தது.
அத்தியாயம்-15
சித்ரா, “வில்லியம் தலைவிதி இப்படி முடிய வேண்டு மென்று இருந்தால் அதைத் தடுக்க நாம் யார்? தலையெழுத்து நன்றாயிருந்தால் அவர் நம்சொற்படி நடந்திருப்பார். அவரை வெள்ளைக்காரரென்று நினைத்து ஜனங்கள் ஆத்திரமடைந்திருப்பதாயும் தனியாக எங்கும் போக வேண்டாமென்றும் எவ்வளவு முறை நான் எச்சரித்தேன்? இன்று காலை வேட்டைக்குப் போகவேண்டா மென்று கூட குறுக்கே நின்று முடிந்த வரையில் தடுத்துப் பார்த்தேன், என் பேச்சை யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. சொன்னதைக் கேளாமலும் நிலைமையை உணராமலும் வில்லியம் தனியாகப் போய்ச் சாவை வலுவில் தழுவிக் கொண்டார். அவருடைய பிடிவாதமும் முரட்டுத் தைரியமும் அவருக்கு எமனாக வந்து சேர்ந்துவிட்டன. இதற்கு யார் என்ன செய்ய முடியும்?” என்றாள் சித்ரா.
”பெரியப்பா! அநாகரிகமான இந்தக் காட்டு ஜனங்கள் தோற்றத்தில் முரடர்களாயிருந்தாலும் பழிபாபங்களுக்குப் பயந்தவர்களா யிருப்பார்களென்று நினைத்தேன். மிலேச்சத்தனமான இந்தப் படுகொலை செய்தவர்களை லேசில் விடக்கூடாது. இதனால் என்ன நேரிட் டாலுல் சரி. என் அருமை நண்பனைக் கொலை செய்தவர்களை நான் என்ன பாடுபடுத்துகிறேனென்று பாருங்கள். ஒரு உயிருக்கு ஐந்நூறு உயிர்களைப் பலிவாங்காவிட்டால் என் பெயர் ஜாதிவர்மனில்லை. வெடிமருந்து இருக்கும்வரை சுட்டுத் தீர்த்து இந்தக் குகை ஜனங்கள் அவ்வளவு பேர்களையும் துவம்சம் செய்கிறேன்!” என்று ஜோதிவர்மன் முழங்கினான்.
கண்கள் சிவக்கக் கோபத்துடன் இப்படி வார்த்தைகளைச் சிந்திய ஜோதிவர்மனிடம் சித்ரா பக்கத்தில் போவதற்குக் கூடச் சிறிது பயந்தாள். சற்று எட்டி நின்று கொண்டே “உங்கள் துக்கத்தில் ஏதேதோ தாறுமாறாகப் பேசுகிறீர்கள். காலம் முடிந்து வில்லியம் விதியைத் தழுவிக் கொண்டார். அவருடைய முட்டாள்தனம் அவர் உயிரைக் குடித்தது. இந்தப் படிப்பினைக்குப் பிறகு நீங்களும் வில்லியம் வழியிலேயே போகத் தீர்மானித்தால் பலாத்காரமாகவேனும் உங்களைத் தடுப்பது என்னுடைய கடமை. உங்களைப் போலத்தான் வெள்ளைக்காரர்களும் எங்களுடைய ஜனங்களை அழிக்கக் கிளம்பி அட்டகாசம் செய்தார்கள். கடைசியில் அவ்வளவு பேர்களும் மரத்தில் தொங்கினார்கள். அன்று வெள்ளைக்காரர்கள் செய்த அநியாயமே இன்று வில்லியம் தலையிலும் வந்து விழுந்தது! மூவாயிரத்துக்கு மேற்பட்ட ஒரு பெரிய சேனையை நீங்கள் மூவராக நின்று போராடி அழிக்கப் போகிறீர்களா? மலையின் மீது முட்டிக் கொண்டால் மலை உடையாது. மண்டைதான் உடையும்! எங்கள் ஜனங்களின் ஆத்திரத்தைக் கிளப்பி அழிவைத் தேடிக் கொள்ளாதீர்கள். வில்லியமைக் கொன்றவர்கள் தப்பி விடமாட்டார்கள். நீங்கள் தலையிடாமலே இந்த அநியாயத்தைச் செய்தவர்கள் துடித்துத் துடித்துச் சாகப் போகிறார்கள். அப்பா வந்தவுடன் என்ன நடக்கப் போகிறது என்பதை நீங்களே பார்க்கத்தான் போகிறீர்கள். உங்களைப் போலவே வில்லியமும் மகாராணியின் விருந்தாளி. மலைக்கன்னியின் விருந்தாளியைக் கொலை செய்தவர்களுக்கு மனதினாலும் நினைக்க முடியாத அதிபயங்கரமான மரணம் காத்திருக்கிறது. ஆத்திரத்தில் அறிவை இழந்து அழிவைத் தேடிக் கொண்டுவிடாதீர்கள்!”
சித்ரா இவ்வாறு முறையிட்ட பொழுது ஜோதிவர்மனோ பாலாஜியோ குறுக்கே பேசவில்லை. இதற்கிடையில் முனிசாமி மரத்தின் மீது ஏறி வில்லியமின் பிரேதத்தை மெதுவாகக் கீழே இறக்கினான்.
சித்ரா சுருக்கமாகவும் அப்போதைய நிலைமையை அனுசரித்தும் பேசியதை நிதானமாக யோசித்துப் பார்த்த பாலாஜி “ஆமாம் ஜோதி! சித்ரா சொல்லுவதில் நியாயமிருக்கிறது. மலைமீது முட்டிக் கொள்ளுகிறவர்களுக்கு மண்டைதான் உடையும். நூற்றுக் கணக்கிலிருக்கும் இந்தக் குகை ஜனங்களை எதிர்க்க முற்படுவது வீரமில்லை. முட்டாள்தனம். தவிர வில்லியமை கொலை செய்தவர்கள் யார் என்பது நமக்கு நிச்சயமாகத் தெரியாது. யாரோ சிலர் துவேஷம் பாராட்டி மிருகத்தனமாக இந்தக் காரியத்தைச் செய்ததற்காக அவர்களுடைய வம்சத்தையே அழிக்க நினைப்பது அசுரத்தனம். அது மனிதப் பண்புமில்லை. வில்லியம் மீது குகைவாசிகளுக்கு வெறுப்பு இருப்பதைப் பற்றி சித்ரா பலதடவை எச்சரித்திருக்கிறாள். தனியாக எங்கும் போக வேண்டாம் என்று வில்லியமை எவ்வளவு தடவை நாம் எச்சரித்தோம். விதி அவனை இந்தக் காட்டுக்குள் கொண்டு வந்து பலிவாங்கிய தென்றால் அதற்கு யார் என்ன செய்ய முடியும்? நடந்தது நடந்து விட்டது. மேற்கொண்டு நடக்க வேண்டியதைக் கவனிப்போம். வில்லியமை இங்கு அடக்கம் செய்து விடுவதுதான் நல்லது பிரேதத்தைக் குகைக்குக் கொண்டு போய் குகைவாசிகளின் ஆத்திரத்துக்கு மறுபடியும் தூபம் போட வேண்டாம்!” என்றான்.
ஜோதிவர்மனுக்கும் பாலாஜி சொல்லியதுதான் சரி என்று பட்டது.
ஜோதிவர்மனும் பாலாஜியும் முனிசாமியுமாகச் சேர்ந்து ஒரு பெரிய சவக்குழியை வெட்டி அதில் வில்லியமை அடக்கம் செய்தார்கள். வில்லியத்தின் மத சம்பிரதாயத்தை அனுசரித்து இரண்டு மரக்கிளைகளை ஒரு சிலுவையைப் போலக் கட்டி பிரேத அடக்கம் செய்த இடத்தில் நாட்டி அதை வணங்கிவிட்டு சித்ராவுடன் குகைக்கு அவர்கள் திரும்பினார்கள்.
குகைக்கு வந்த பொழுது அவர்களுடைய வரவுக்காகத் தளபதி உக்ரசேனர் குகைவாசலில் காத்திருந்தார்.
“அப்பா!” என்று கத்திக் கொண்டே சித்ரா ஓடிப் போய் தகப்பனைக் கட்டிக் கொண்டாள்.
“நீங்கள் இல்லாத சமயம் இங்கு ஒரு பெரிய அக்கிரமம் நடந்து விட்டது அப்பா! அந்த அக்கிரமம் செய்தவர்களை எண் கண்கள் எதிரில் அணு அணுவாகப் பிய்த்தெடுக்காதவரையில் நான் ஜலபானம் கூடச் செய்யப் போவதில்லை. இது சத்தியம்” என்று அவள் சபதம் போட் டுக் கொண்டிருக்கையில் ஜோதியும் பாலாஜியும் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டே அங்கு வந்து சேர்ந்தார்கள்.
“நான் இல்லாத சமயம் என்ன அக்கிரமம் நடந்தது சித்ரா? சொல்லு? அந்த அக்கிரமத்தைச் செய்தவர்கள் யார்?” என்று சித்ராவிடம் கேட்ட உக்ரசேனர் ஜோதிவர்மன் பக்கம் திரும்பி “நீங்கள் ஏன் கவலையோடு இருக்கிறீர்கள்? நான் அமரபுரிக்குப் போயிருந்த சமயம் இங்கு என்ன நடந்தது? உங்களுடைய இன்னொரு நண்பர் எங்கே? ஒருக்கால் அவருக்கு ஏதாவது……!” என்று வாக்கியத்தை முடிக்காமல் நிறுத்தினார்.
”அவரைக் கொன்றுவிட்டார்கள் அய்யா? நீங்கள் இல்லாத சமயம் பார்த்து வில்லியமை ஈட்டியால் குத்தி கொடூரமாகக் கொலை செய்து மரத்தில் தொங்கவிட்டு விட்டார்கள், இறந்தவனை இப்பொழுதுதான் அடக்கம் செய்துவிட்டு வருகிறோம்” என்றான் ஜோதி.
“உங்கள் நண்பர் கொலை செய்யப்படுகையில் நீங்கள் எங்கே இருந்தீர்கள்! சித்ரா எங்கே போனாள்? ஏன் சித்ரா! உன் எதிரிலா இந்த மாதிரி அநியாயம் நடந்தது? அவ்வளவு துணிச்சல் உள்ளவன் எவன்? சொல்லு அவன் பெயரை! உங்கள் எதிரில் அவனை அணு அணுவாக வெட்டிப் போடுகிறேன்! யார் சித்ரா அந்தக் கயவன்?” என்று மகாகோபத்துடன் கேட்டார் உக்கிரசேனர்.
“யார் என்று தெரியவில்லை அப்பா! எங்கள் முன்னிலையில் இந்த அக்கிரமம் நடக்கவில்லை” என்று சொல்லி வில்லியம் எப்படிக் கொலை செய்யப்பட்டான் என்பதைச் சுருக்கமாகத் தெரிவித்தாள் சித்ரா
“வில்லியம் வெள்ளைக்காரனாகையால் வெறிகொண்ட என் ஜனங்கள் அவனைக் கொன்றிருக்கிறார்கள். தவிர, வெள்ளைக்காரனை என்ன செய்வதென்பதைப் பற்றி மகாராணியிடமிருந்து தெளிவான உத்தரவில்லாததுதான் இந்தப் பாதகத்தைச் செய்ய அவர்களுக்குத் தைரியமளித்திருக்கிறது. வில்லியம் என்ன நிறமுடையவனாயிருப்பினும் அவன் மகாராணியின் விருந்தாளி. தேவதேவியின் விருந்தாளியைக் கொன்றவர்கள் யாராயிருந்தாலும் அவர்களுடைய சாவு அதிபயங்கர மானதாயிருக்கும். மலைக்கன்னியைப் பார்த்துவிட்டு இப்பொழுது தான் நானும் வருகிறேன். உங்கள் நால்வரையும் அரண்மனைக்கு அழைத்துவர வேண்டுமென்பது தேவதேவியின் ஆக்ஞை. நாலாவது விருந்தாளியான வில்லியமிற்குப் பதிலாக அவனைக் கொலை செய்த பாதகர்களை ராணியின் முன்னிலையில் நான் ஆஜர் செய்தாக வேண்டும். நாளை அதிகாலையில் நாம் அமரபுரிக்குப் புறப்படுகிறோம். நீங்கள் குகைக்குப் போங்கள். குற்றவாளிகள் யார் என்பதைக் கண்டு பிடித்து விட்டுப் பிறகு வந்து உங்களைச் சந்திக்கிறேன்” என்று சொல்லிவிட்டுப் போனார் உக்கிரசேனர்.
அன்றிரவு பாலாஜியும் ஜோதியும் சரியாகச் சாப்பிடவேயில்லை. அவர்கள் இருவரும் வில்லியம் நினைவாகவே இருந்தார்கள். அவர்கள் துக்கப்படுவதைப் பார்த்து சித்ராவும் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். அன்றிரவு அவள் ஜலபானம் கூடச் செய்யவில்லை.
“நீ ஏன் அம்மா பட்டினி கிடக்கிறாய்? எங்களுக்குத் தான் சாப்பாடு வேண்டியிருக்கவில்லை. நீயாவது சாப்பிடக் கூடாதா?” என்றான் பாலாஜி.
“நீங்கள் சாப்பிடாத பொழுது எனக்கு மட்டும் எப்படிச் சாப்பிடத் தோன்றும்?” என்று சொல்லி அவள் சாப்பிட மறுத்துவிட்டாள். அவளுடைய பிடிவாதமான போக்கும் துக்கத்தைக்கூடத் தங்களோடு அவள் பகிர்ந்து கொண்டதும் பாலாஜியின் திருஷ்டியில் சித்ராவின் மதிப்பை மேலும் பன்மடங்கு அதிகரித்தது.
“நீ ஒரு விசித்திரமான பெண் சித்ரா! உன்னைப் போன்ற உயர்ந்த பண்புகள் உன் ஜனங்களிடமும் இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்? இந்தக் குகை வாசிகளுக்கு மத்தியில் நீ தவறிப்போய் பிறந்துவிட்டாய்?” என்று பாலாஜி வாய்விட்டுச் சொன்னான்.
“நீங்கள் நினைப்பது தவறு அய்யா. எங்கள் ஜனங்கள் தோற்றத்தில் கடின சித்தம் படைத்தவர்களைப்போல இருந்தாலும் சுபாவத்தில் நல்லவர்கள். கெட்டவர்கள் ஏதோ ஒரு சிலர் இருக்கலாம். எல்லாச் சமூகத்திலும் தான் தீயவர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களைக் கொண்டு பொதுப்படையாக எல்லோரையும் கொடியவர்கள் என்று சொல்லிவிட முடியுமா?” என்று தன்னுடைய இனஜனங்களையும் விட்டுக் கொடுக்காமல் சொன்னாள் சித்ரா.
அன்றிரவு வெகுநேரமாகியும் தளபதி உக்கிரசேனர் குகைக்குத் திரும்பி வந்து சேரவில்லை.
“பொழுது விடிந்தால் நீண்ட தூரப் பிரயாணத்தை ஆரம்பிக்க வேண்டும். ஆகையால் கொஞ்சம் படுத்துத் தூங்குங்கள். அப்பா வந்த பிறகு எழுப்புகிறேன்” என்று சித்ரா சொல்லிய பொழுது “அப்பா வந்த பிறகு எழுப்புவதற்காக நீ மட்டும் கண் விழித்துக் கொண்டு காவல் காக்கப் போகிறாயா? தளபதியுடன் காலை பேசிக் கொள்ளலாம். பேசாமல் நீயும் படுக்கப்போ!” என்று சொல்லிச் சித்ராவை அனுப்பிவிட்டு ஜோதிவர்மன் படுத்தான்.
மறுநாள் அதிகாலையில் சித்ராவும் உக்கிரசேனரும் வந்து எழுப்பும் வரையில் பாலாஜியும் ஜோதியும் நன்றாகத் தூங்கினார்கள்.
“பல்லக்கு தயாராயிருக்கிறது. பல் துலக்கி ஏதாவது சாப்பிட்டுவிட்டு வாருங்கள்!” என்று சொல்லி சித்ராவை விட்டு விட்டு உக்கிரசேனர் போய் விட்டார். முதல் நாள் நடந்த சம்பவங்களைப் பற்றி அவர் ஒன்றுமே பேசாமல் போனது ஜோதிவர்மனுக்கு ஏமாற்றமாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது.
பல்துலக்கி பலகாரம் சாப்பிட்டு விட்டுக் கிளம்புகையில் ‘சித்ரா! மகாராணியைப் பார்த்துவிட்டு நாங்கள் விரைவில் வந்து விடுகிறோம்” என்று பிரியாவிடை பெற்றுக் கொள்ளும் முறையில் சித்ராவிடம் சொன்னான் ஜோதி.
“நானும் உங்களுடன் வருகிறேன்” என்று சித்ரா சொல்லியபொழுது “நீயும் வருகிறாயா? எங்கே? அரண்மனைக்கா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான் ஜோதி.
”ஆமாம்! அரன்மனைக்குத் தான்! உங்களைத் தனியாக அங்கு அனுப்பும் உத்தேசமில்லை. நான் வருவதுதான் உங்களுக்கும் நல்லது!'” என்றாள் சித்ரா.
”நீ வரப்போகிறாயென்பது தளபதிக்குத் தெரியுமா?” என்று கேட்டான் ஜோதி.
“தெரியும்!” என்று ஒரே வார்த்தையில் சித்ரா பதில் சொன்னாள்.
“இதைத் தளபதி ஆட்சேபிக்கவில்லையா?” என்று கேட்டான் ஜோதி.
“ஆட்சேபித்தார்! உங்களுடன் நான் வருவதை மகாராணி விரும்பமாட்டாளென்றும் அப்பா சொன்னார்.”
“ஊம், பிறகு?”
“மகாராணியினால் உங்களுக்கு ஏதோ அபாயம் நேரிடப் போவதாக நான், அந்தராத்மா எனக்கு அறிவுறுத்து வதை அப்பாவிடம் சொன்னேன். தவிர கணவனுடன் மனைவி போவதைத் தடுக்க மகாராணிக்கோ அல்லது வேறு யாருக்குமோ உரிமையில்லை என்பதையும் சொல்லி விவாதித்தேன். மகாராணி கோபப்பட்டால் அதன் பலனை அனுபவிக்கத் தயாராயிருப்பதாயும் மன்றாடினேன். கடைசியில் நான் சொல்லுவதிலும் கொஞ்சம் நியாயமிருப்பதாக உணர்ந்து அரை குறை மனதுடன் அப்பா சம்மதித்தார்.”
நீ வருவதில் எனக்குப் பரம திருப்தி சித்ரா. நீ பக்கத்தில் இருந்தால் ஏனோ என் மனதுக்கு உற்சாகமாகவும் கொஞ்சம் தைரியமாகவுமிருக்கிறது! செம்பவளத் தீவில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பும் பொழுதுகூட உன்னை இந்தக் குகை ஜனங்கள் மத்தியில் விட்டுச் செல்லப் போவதில்லை. கூடவே அழைத்துக் கொண்டு போய்விடப் போகிறேன்!” என்று சொல்லிக் கொண்டே சித்ராவின் இரு கரங்களையும் பற்றி நாணத்துடன் தலை கவிழ்ந்து கொண்டிருந்த அவள் முகத்தைக் கூர்ந்து நோக்கினான் ஜோதி.
சில வினாடி நேரம் வரையில் மௌனமாயிருந்த சித்ரா ஜோதியின் கைகளை உதறிவிட்டு “ஏன் கை இப்படி தணலாய் தகிக்கிறது?” என்றாள். அவன் நெற்றியையும் மார்பையும் தொட்டுப் பார்த்துவிட்டு “கடுமையான காய்ச்சல் அடிப்பதைப் போலிருக்கிறதே!” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கையில் வெளியே போயிருந்த பாலாஜி ”காய்ச்சலா? யாருக்கு காய்ச்சல் சித்ரா! உனக்கா?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான்.
சித்ரா ஜோதியைச் சுட்டிக் காட்டி “இவருக்குத்தான் அய்யா! தொட்டுப் பாருங்கள். உடம்பு நெருப்பாய்க் கொதிக்கிறது!” என்றாள் பாலாஜியிடம்.
பாலாஜியும் ஜோதியைத் தொட்டுப் பார்த்துவிட்டு “ஆமாம் ஜோதி! ஜுரமடிப்பதைப் போலிருக்கிறதே! அதோடு நாம் எப்படிப் பிரயாணம் செய்வது?” என்றான்.
“கொஞ்சம் ஜுரம் மாதிரி இருக்கிறது பெரியப்பா! பிரமாதமாக ஒன்றுமில்லை. இதற்காகப் பிரயாணத்தை நிறுத்த வேண்டாம். பல்லக்கில்தானே போகிறோம் பரவாயில்லை!” என்றான் ஜோதி.
இதற்குள் வெளியேபோன சித்ரா தளபதி உக்கிரசேனரை அங்கு அழைத்து வந்தாள்.
உக்கிரசேனர் ஜோதியைத் தொட்டுப் பார்த்துவிட்டு ”ஆமாம் சித்ரா! நீ சொல்லுவதைப் போல விஷ ஜூரமாக இருக்குமோ என்றுதான் எனக்கும் பயமாயிருக்கிறது. நேற்று நீங்கள் போன அந்தக் காட்டுக்குப் போயிருக்கவே கூடாது. அங்கு போகிறவர்களுக்கெல்லாம் ஒரு மாதிரியான விஷ ஜூரம் வருவதாகக் கேள்வி. எப்படி யிருந்தாலும் நம்முடைய பிரயாணத்தை ஒத்தி வைப்பதற்கில்லை. இன்று விடியற்காலை புறப்பட்டு நாளை மறுதினம் மாலைக்குள் அமரபுரியை வந்தடைய வேண்டுமென்பது மகாராணியின் ஆக்ஞை. எதற்கும் வாடைக் காற்றுப் படாமல் ஜோதியின் பல்லக்கை மூடிக் கொண்டு போவோம். விஷ ஜுரத்துடன் இங்கிருப்பதை விட அரண்மனையிலிருந்தால் பல விதத்திலும் நல்லது!” என்றார்.
அவர்கள் குகைக்கு வெளியே வந்ததும் நான்கு பல்லக்குகளுடன் பல்லக்குத் தூக்கிகள் பிரயாணத்திற்கு ஆயத்தமாக நின்றார்கள். அவர்களுக்குப் பின்னால் யமகிங்கரர்களைப்போல கொடூர தோற்றமுடைய ஐந்து பேர்கள் ஒருவரோடொருவர் பலமான இரும்புச் சங்கிலிகளினால் பிணைக்கப்பட்டு நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் உடம்பெல்லாம் ஒரே ரத்தக் காயமாயிருந்தது. அந்தக் காயங்களிலிருந்து ரத்தம் கசிந்து கொண்டும் இருந்தது.
அவர்களைப் பார்த்த மாத்திரத்தில் வில்லியமைப் படுகொலைசெய்த பேர்வழிகள் அவர்களாகத்தானிருக்க வேண்டும் என்று ஜோதியும் பாலாஜியும் சொல்லாமலே தெரிந்து கொண்டு விட்டார்கள். வில்லியமைக் கொன்றவர்கள் மீது அவர்கள் அடங்காக் கோபம் கொண்டிருந்த பொழுதிலும் ரத்தக் காயங்களோடு பரிதாபகரமான தோற்றத்துடன் நின்ற மனிதர்களைப் பார்த்ததும் “அய்யோ பாபம்!” என்றுதான் அவர்களுக்குச் சொல்லத் தோன்றியது.
“பாபமா? எது பாபம்? இந்தக் கயவர்களை இன்னும் உயிரோடு வைத்திருப்பதையா பாபமென்கிறீர்கள்? வாஸ்தவம். மகாராணியின் விருந்தாளியைக் கபடமாகக் கொலை செய்த இந்த ரத்த வெறியர்களை உயிரோடு வைத்திருப்பது பாபம்தான். ஆயினும் இந்நாட்டில் உயிரைப் போக்க மகாராணியைத் தவிர வேறு யாருக்கும் உரிமையில்லை. ஆகையால் தான் இவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள். தேவதேவியின் முன்னிலையில் தீர்ப்புக்கு இவர்கள் ஆஜர் செய்யப்படும் பொழுது என்ன நடக்கிறதென்பதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்! நேரமாகிறது. பல்லக்கில் ஏறுங்கள்'” என்று சொல்லிவிட்டு தன்னுடைய குதிரையில் ஏறிக்கொண்டார் உக்கிரசேனர்.
அவரிடம் அந்த நிலைமையில் பேச்சுக் கொடுப்பது புத்திசாலித்தனமல்ல வென்று ஜோதிவர்மனிடம் சித்ரா ஜாடையாக எச்சரிக்கை செய்தாள். அவள் பேச்சைத் தட்டி நடந்தால் விபரீதமேற்படுவது நிச்சயமென்பதை அனுபவத்தில் அறிந்திருந்த ஜோதிவர்மன் ‘உக்கிரசேனரிடம் இப்பொழுது ஒன்றும் கேட்காதீர்கள். பிறகு பேசிக் கொள்ளலாம்’ என்று பாலாஜியிடம் சொல்லிவிட்டுப் பல்லக்கில் ஏறிக் கொண்டான். மற்றவர்களும் பல்லக்குகளில் ஏறிக் கொள்ள அமரபுரியை நோக்கி அவர்களுடைய பிரயாணம் ஆரம்பமாயிற்று.
எல்லோருக்கும் முன்னதாக உக்கிரசேனர் குதிரையில் சென்றார். அவருக்குப் பின்னால் ஜோதிவர்மனின் பல்லக்கும் அதையடுத்து சித்ரா, பாலாஜி, முனிசாமி ஆகியவர்களின் பல்லக்குகளும் ஒன்றன் பின் ஒன்றாக சென்றன. பல்லக்குகளுக்கு அடுத்தபடியாகச் சங்கிலிகளினால் பிணைக்கப்பட்டிருந்த மனிதர்களும் அவர்களை வளைத்துக்கொண்டு இரண்டு டஜன் ஈட்டி வீரர்களும் கால்நடையாக நடந்து வந்தனர்.
போகும் பாதையில் சில இடங்கள் பொட்டல் வெளிகளாகவும் வேறு சில இடங்கள் பசுமையான தோட்டங்களாகவும் இன்னும் சில இடங்கள் மரங்களடர்ந்த காடுகளாகவும் இருந்தன. வழியில் தென்பட்ட காட்சிகள் இப்படி மாறி மாறிக் காட்சியளித்துக் கொண்டிருந்தன. கிராமங்கள் போலத் தென்பட்ட சில பகுதிகளில் கூட்டம் கூட்டமாக ஆண்களும் பெண்களும் வெளியே வந்து பல்லக்குகள் போவதைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.
இந்தக் காட்சிகளையெல்லாம் பாலாஜியும் முனிசாமி யும் பார்த்துக் கொண்டு வந்தார்களே தவிர ஜோதிவர்மன் பிரயாணத்தை ஆரம்பித்த சிறிது நேரத்துக்கெல்லாம் பல்லக்கில் படுத்து நன்றாகத் தூங்கிவிட்டான். நேரம் ஆக அவனுடைய ஜூரத்தின் வேகமும் அதிகரித்திருக்கவேண்டும். நடுப்பகலில் மத்தியானச் சாப்பாட்டுக்காக ஒரு மண்டபத்தில் பல்லக்குகள் இறக்கப்பட்ட பொழுது சித்ரா முதலில் கீழே இறங்கி ஓடோடியும் வந்து ஜோதிவர்மனைப் பார்த்தாள்.அயர்ந்து தூங்கும் ஜோதியை தொட்டுப் பார்த்து விட்டுத் தளபதி உக்கிரசேனரையும் பாலாஜியையும் அழைத்து “ஜுரத்தின் வேகம் கடுமையாக இருக்கிறதே! எப்படி அனலாகத் தகிக்கிறது பாருங்கள்!” என்றாள் கவலையுடன்.
கூடவந்த ஆட்கள் கையில் எடுத்து வந்த சாமான்களை இறக்கிச் சமைப்பதற்கு ஆயத்தம் செய்கையில் அவர்களில் ஒருவனை உக்கிரசேனர் அழைத்து “மருந்துப் பெட்டியை இங்கே கொண்டு வா!” என்றார்.
மருந்துப் பெட்டி வந்தவுடன் அதிலிருந்து ஒரு சிறிய மண்கலயத்தை உக்கிரசேனர் வெளியே எடுத்தார். மண்கலயத்தில் தைலம் போன்ற ஒரு திராவகப் பொருள் இருந்தது. கொஞ்சம் தைலத்தை ஜோதிவர்மனின் மார்பிலும் நெற்றியிலும் தடவிப் பலமாக அவர் தேய்க்கையில் ஜோதிவர்மன் தூக்கம் கலைந்து லேசாகக் கண்களை விழித்தான்! ஆயினும் அவனால் எழுந்திருக்க முடியவில்லை. உடல் முழுவதும் பொறுக்க முடியாமல் வலிப்பதைப் போல் இருந்தது.
கலங்கிய கண்களுடன் சித்ராவும் பாலாஜியும் பக்கத்தில் நிற்பதைப் பார்த்துவிட்டு “எனக்கு ஒன்றுமில்லை. வீணாகக் கவலைப்படாதீர்கள்!” என்று ஹீனஸ்வரத்தில் அவன் சொன்னான். அவனுடைய குரல் கிணற்றுக்கு அடியில் இருந்து பேசுவதைப் போலிருந்தது.
“உடம்பு வலிக்கிறதா தம்பி!” என்று ஆதரவாகக் கேட்டார் உக்கிரசேனர்.
“ஆமாம் அய்யா! உடம்பு முழுவதும் வலிக்கிறது. தலைவலியையும் தாங்க முடியவில்லை. இரண்டு கண்களிலும் எரிச்சல் இருக்கிறது!” என்று சொல்லிவிட்டு அவன் பல்லக்கில் எழுந்து உட்கார முயற்சித்தான்.
“எழுந்திருக்க வேண்டாம் தம்பி! உடம்பை அலட்டிக் கொள்ளாமல் படுத்திரு. தைலம் தடவியிருக்கிறேன். விஷஜுரத்துக்கு இது கைகண்ட ஒளஷதம். பொழுது சாய்வதற்குள் ஜூரத்தின் வேகம் தணிந்துவிடும். பசியிருக்கிறதா தம்பி! கொஞ்சம் கஞ்சி போடச் சொல்லட்டுமா?” என்றார் உக்கிரசேனர்.
“வேண்டாம் எனக்குக் கொஞ்சம் கூடப் பசியில்லை!” என்றான் ஜோதி.
“பசியில்லாவிட்டாலும் பரவாயில்லை! வயிற்றுக்கு ஒன்றும் சாப்பிடாவிட்டால் தலையில் கிறுகிறுப்பு ஏற்பட்டு விடும்!” என்று சொல்லிவிட்டுத் தனது ஆட்களில் ஒரு வனை அழைத்துக் கொஞ்சம் அரிசிக் கஞ்சி தயாரிக்க உத்தரவிட்டார் உக்கிரசேனர்.
கொஞ்ச நேரம் கழித்து ஒருவன் பித்தளைச் செம்பில் கஞ்சியுடன் வந்த பொழுது சித்ரா ஜோதியை எழுப்பி. ”கொஞ்சம் கஞ்சி குடியுங்கள்! ஆகாரம் இல்லாவிட் டால் ஆயாசம் அதிகமாகிவிடும்” என்றாள்.
“நீ சாப்பிட்டு விட்டாயா?” என்று ஒரு கேள்வியைப் போட்டான் ஜோதி.
”இல்லை!'” என்று சித்ரா சொல்லவும், “ஏன் இல்லை?” என்றான் மீண்டும் அவன்.
“எனக்குப் பசியேயில்லை! நீங்கள் கஞ்சியைக் குடியுங் கள்” என்றாள் சித்ரா.
”உனக்குப் பசியிருக்காது, என் உடல்நிலை சரியாகும் வரை உனக்குப் பசி, தாகம் ஒன்றுமே இருக்காதென்பது எனக்குத் தெரியும்” என்றான் ஜோதி.
இதற்குள் “ஜோதி என்ன சொல்லுகிறான்” என்று உக்கிரசேனர் கேட்டுக் கொண்டுவரவும், “சித்ரா நேற்றிரவு கூடச் சாப்பிடவில்லை அய்யா! இப்பொழுதும் பசி இல்லை என்கிறாள். முதலில் அவளை ஏதாவது சாப்பிடச். சொல்லுங்கள். பிறகு நான் கஞ்சி குடிக்கிறேன்” என்றான் ஜோதி,
“ஆமாம் அய்யா! சித்ரா நேற்றிரவு கூடச் சாப்பிட வில்லை” என்றான் பாலாஜி.
உக்கிரசேனர் சித்ராவை ஆதரவாகத் தடவிக் கொடுத்து “இவர்கள் சொல்லுவது உண்மைதானா சித்ரா? ஜோதியைச் சரியாகக் கவனித்துக் கொள்வதற்காகவேனும் நீ சாப்பிட்டு ஆரோக்கியமாயிருக்க வேண்டாமா?” என்றார். பிறகு ஜோதியின் பக்கம் திரும்பி “சித்ராவை நான் சாப்பிடச் சொல்லுகிறேன் ஜோதி! முதலில் நீ கொஞ்சம் கஞ்சிகுடி” என்றார்.
சித்ரா சாப்பிடாமல் கஞ்சி குடிக்கப் போவதில்லை என்று ஜோதிவர்மன் பிடிவாதம் செய்யவும் சித்ராவின் சாப்பாடு அங்கேயே தருவிக்கப்பட்டது. சித்ரா வேண்டா வெறுப்புடன் சாப்பிடுகையில் ஜோதிவர்மன் பல்லக்கில் எழுந்து உட்கார்ந்து மெதுவாகக் கஞ்சியைக் குடித்தான். திடீரென்று சந்தித்த அவ்விருவருக்குள் நெடுநாள் பழகியதைப் போன்ற பரஸ்பர அன்பும் பரந்தவ்யமும் ஏற்பட்டு விட்டதை நினைத்துப் பாலாஜியும் உக்கிரசேனரும் அதிசயித்துப் போய் அவர்கள் சாப்பிடுவதை இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.
நடுப்பகல் போஜனத்துக்காகத் தளபதி உக்கிரசேனரும் மற்றவர்களும் சுமார் இரண்டு மணி நேரம்தான் அந்த மண்டபத்தில் தங்கியிருந்திருப்பார்கள். சாப்பிட்டு சற்றுச் சிரம பரிகாரம் செய்து கொண்ட பின்னர் அவர்களுடைய பிரயாணம் மீண்டும் ஆரம்பமாயிற்று. இப்பொழுது ஜோதிவர்மன் வழிநெடுகக் கண்காணித்துக் கொண்டு வருவதற்காக அவன் பல்லக்கின் பக்கத்தில் சித்ராவின் பல்லக்குச் சென்றது. முன்னால் சென்ற உக் கிரசேனர் அடிக்கடி சித்ரா அருகில் வந்து ஜோதிவர்மனைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார்.
மாலை ஐந்து மணிக்கு வெய்யில் இறங்கியதும் பல்லக்கில் உட்கார்ந்து அலுத்துப் போன பாலாஜி சற்றுக் கீழே இறங்கி நடந்துவர ஆரம்பித்தான். அதைப் பார்த்ததும் உக்கிரசேனரும் குதிரையை விட்டு இறங்கிப் பாலாஜியோடு பேசிக் கொண்டே வந்தார்.
சிறிது நேரம் கழித்து அவர்கள் ஒரு பெரிய குகைவாசலை யடைந்தார்கள். குகையின் வாசல் ஒரு பெரிய மரக்கதவினால் பூட்டப்பட்டிருந்தது. கதவுக்கு வெளியே கருங்கற்களில் கைதேர்ந்த சிற்பிகளைக் கொண்டு செதுக்கிய அழகான பல சிலைகள் மூலைக்கு ஒன்றாக இருந்தன. அவற்றுக்கு மத்தியில் ஆறடி உயரமும் மூன்று அடி அகலமும் உள்ள ஒரு சிங்கத்தின் சிலை அதிபயங்கரமான கோரைப் பற்களைக் காட்டிக் கொண்டு நிற்பதைப்போல ஒரு பீடத்தின் மீது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. வெளித்தோற்றத்துக்கு அந்த இடம் ஒரு குகைக் கோவிலைப் போலத் தென்பட்டது, பவானியின் பாழ் மண்டபத்திலிருந்ததைப் போலவே அங்கும் மலைக்கன்னியின் சிலை உள்ளே இருக்க வேண்டுமென்று தீர்மானித்த பாலாஜி “இது என்ன கோவிலா? பார்த்தால் கோவில் மாதிரியிருக்கிறதே!” என்றான்.
“கோவில் இல்லை, குகை!” என்று சுருக்கமாகப் பதிலளித்துவிட்டு உக்கிரசேனர் நடந்தார்.
“குகையாயிருந்தால் இரவு நாம் இங்கேயே தங்கலாமே” என்றான் பாலாஜி.
“அய்யய்யோ! இதற்குள்ளே யாரும் போகக்கூடாது. இந்தக் குகைக்குள் இறந்தவர்களின் பிரேதங்களிருக்கின்றன, புதிய பிரேதங்களை வைக்கும்போது மட்டுமே கதவு திறக்கப்படும். திறந்தாலும் ராஜகுரு ஒருவரைத்தவிர உள்ளே வேறு யாரும் போகக் கூடாதென்பது மகாராணியின் ஆக்ஞை” என்றார் உக்கிரசேனர்.
“அப்படியானால் உங்கள் நாட்டில் இறந்தவர்களை எரிப்பதோ அல்லது புதைப்பதோ இரண்டுமில்லையா? பிரேதங்களைப் பத்திரப்படுத்தி வைப்பதுதான் உங்கள் வழக்கமா?’” என்று கேட்டான் பாலாஜி.
உக்கிரசேனர்:- சாதாரண ஜனங்கள் பிரேதங்களை மண்ணில் புதைத்துவிடுவார்கள். உயர் ஜாதியைச் சேர்ந்தவர்கள் யாராவது இறந்தால் அரண்மனைக்குத் தகவல் கொடுக்க வேண்டும். உடனே ரா ஜகுருவின் ஆட்கள் வந்து பல்லக்கில் பிரேதத்தை எடுத்துச் செல்வார்கள். இறந்தவர்களின் அந்தஸ்துப்படி அதை எங்கே வைப்பதென்று ராஜகுரு தீர்மானிப்பார்.
“இந்த நாட்டில் பட்டினங்கள், கடை வீதிகள் முதலியவைகளெல்லாம் கிடையாதா?” என்று கேட்டான் பாலாஜி.
“ஓ! இல்லாமலென்ன? அமரபுரி பெரிய பட்டினம் தான். அங்கு பெரிய பெரிய கடைகள் இருக்கின்றன. வேறு சிறிய பட்டினங்களும் அநேகமிருக்கின்றன. என்னுடைய எல்லையிலேயே நான்கு பட்டினங்களிருக்கின்றன. அவசியம் ஏற்படும் பொழுதுதான் நாங்கள் பாசறையை விட்டுப் பட்டினத்துக்குப் போவோம். ஆனால் பட்டின வாசிகள் பாசறைகளுக்கு வருவதில்லை” என்றார் உக்கிரசேனர்.
“உங்கள் பாசறை எங்கிருக்கிறது?” என்று பாலாஜி கேட்ட பொழுது “எங்கிருக்கிறதா? அங்கிருந்து தானே இப்பொழுது நாம் வருகிறோம்!” என்றார் உக்கிரசேனர்.
“ஓ! அந்தக் குகைதான் பாசறையா?’ என்றான் பாலாஜி.
உக்கிரசேனர்: ”ஆமாம்!”
பாலா:- அரண்மனை அமரபுரிப் பட்டினத்தில்தானிருக்கிறதா?
உக்கிரசேனர்:- அமரபுரியிலிருக்கிறது. ஆனால் அமரபுரிப் பட்டினத்தில் இல்லை.
பாலாஜி:- நீங்கள் சொல்லுவதின் பொருள் எனக்கு விளங்கவில்லையே!
உக்கிரசேனர்:- அமரபுரிப் பட்டினத்துக்கு வடக்கில் வானத்தை முட்டிக் கொண்டிருக்கும் ஒரு மலை மீதிருக்கிறது அரண்மனை. நாம் அங்கு போவதுகூட பட்டினத்தின் வழியாக இல்லை. வேறு ரகசிய வழியாக அரண்மனைக்குப் போரும் வழி அமரபுரி ஜனங்களுக்குக் கூடத் தெரியாது.
இவர்கள் இப்படிப் பேசிக்கொண்டு நடந்து செல்லுகையில் இருட்டும் அவர்களை அதிவேகமாக விரட்டிக் கொண்டு வந்தது. பல்லக்குகளுக்குப் பின்னால் வந்த ஈட்டி வீரர்கள் பெரிய தீவட்டிகளைப் பற்றவைக்க ஆரம்பித்தார்கள். தீவட்டிகளுடன் இருவர் முன்னாலும் மற்றவர்கள் பின்னாலும் செல்ல மலைப்பிரதேசத்தின் வழியாக இவர்கள் தொடர்ந்து பிரயாணம் செய்கையில் “வழியிலே நாம் சிறிது நேரம் பேசிக் கொண்டு பொழுதைப் போக்கியிரா விட்டால் இருட்டுக்கு முன் மண்டபத்தை அடைந்திருக்கலாம். இருட்டில் இந்தப் பக்கம் பிரயாணம் செய்வது அபாயமானது. கவனமாகப் பார்த்து நடந்து வாருங்கள். பள்ளங்களில் விழுந்து வைக்காதீர்கள்!” என்று உக்கிரசேனர் பாலாஜியையும் தன்னுடைய ஆட்களையும் எச்சரித்தார்.
அவர்கள் மேலும் சிறிது தூரம் சென்றபின் தூரத்தில் எங்கிருந்தோ ஒருமாதிரியான சப்தம் வருவதைப்போல் இருந்தது. அந்த சப்தம் கேட்டது தான் தாமதம், பல்லக்குத் தூக்கிகள் அப்படியே பல்லக்குகளைக் கீழே வைத்தார்கள். உக்கிரசேனர் சித்ரா உட்பட அந்த மனிதர்கள் அவ்வளவு பேர்களும் தரையில் குப்புற விழுந்து தலையை மட்டும் லேசாக உயர்த்திக் கொண்டு “தேவதேவி! தேவதேவி! தேவதேவி!” என்று மந்திரோச்சாடனம் செய்தார்கள்.
அந்தக் காட்டு ஜனங்களின் விசித்திரமான போக்கிற்கும் தூரத்தில் கேட்ட சப்தத்திற்கும் தேவதேவிக்கும் ஏதோ சம்பந்தமிருக்க வேண்டுமென்று எண்ணிய பாலாஜி. சப்தம் பிறந்த திசையில் திரும்பிப் பார்த்தபொழுது அவனுடைய கண்களை அவனாலேயே நம்ப முடியாதபடியாக ஒரு அதிசயக் காட்சி அங்கு தென்பட்டது. மிக மிக உயரத்தில் வானத்திலே பிரகாசமான ஒரு நெருப்புப் பந்தம் உருண்டு கொண்டு போவதையும் நெருங்க நெருங்க அதிலிருந்து வரும் சப்தம் பலமாகக் கேட்பதையும் இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டு பிரமித்துப் போய் நின்றான் பாலாஜி.
இந்தச் சப்தத்தின் வேகம் அதிகரிக்க அதிகரிக்கக் கட்டாந்தரையில் குப்புறக் கிடந்து தேவதேவியின் பெயரைச் சொல்லி ஸ்மரனை செய்யும் காட்டு ஜனங்களின் தொனியும் உச்சஸ்தாயியை அடைந்தது.
நேர்த்திக் கடன் கழிக்க ஆலயப் பிரகாரங்களில் அங்கப்பிரதட்சணம் செய்யும் பக்த கோடிகளைப்போல குகை வாசிகள் குப்புறப்படுத்து குவித்த கரங்களுடன் தேவ தேவியின் நமஸ்மரனை செய்வதையும், வான மண்டலத்தில் ஒரு தீப்பந்து உருண்டு வருவதையும் இமைகொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த பாலாஜிக்கு ஒரு சமயம் உயரத் தோன்றுவது விமானமாக இருக்குமோ என்ற ஒரு சிறு சந்தேகம் ஏற்பட்டது. இந்தச் சந்தேகத்தைத் தீப்பந்திடமிருந்து வந்த சப்தமும் ஊர்ஜிதம் செய்வதாயிருந்தது. விமானம் பறந்து வரும்பொழுது ஏற்படுவதைப் போன்ற அதே மாதிரியான சப்தத்தைக் தெளிவாகக் கேட்ட பாலாஜி, விமானங்களைக் கண்டறியாத குகை வாசிகள் அரண்டு போய் அதற்குத் தெய்வாம்சம் கற்பித்து வழிபடுவதாயிருக்க வேண்டுமென்று தனக்குள் நினைத்துக் கொண்டான்.
சிறிது நேரத்துக்கெல்லாம் உயரே சற்று அருகாமையில் தீப்பந்து போலத் தெரிந்த பொருள் வந்த பொழுது தெளிவாக அதைப் பாலாஜி பார்க்க முடிந்தது. பறந்து வருவது விமானமாக இருக்க வேண்டுமென்று நினைத்த அவன் இப்பொழுது பெருத்த ஏமாற்றத்துக்குட்பட வேண்டியதாயிற்று. பல மாதிரியான விமானங்களைப் பல இடங்களில் அவன் பார்த்திருப்பதினால் இப்பொழுது பார்ப்பது அவைகளைப் போன்ற விமானமில்லை யென்பதைச் சந்தேகமின்றித் தெரிந்து கொள்ள முடிந்தது. பிரமாண்டமான ஒரு அன்னப்பறவை இரண்டு சிறகுகளையும் அடித்துக் கொண்டு பறப்பதைப்போலிருந்தது அந்தக் காட்சி. அதன் மூக்கிலிருந்து ஒரு தீப்பந்தம் தொங்கிக் கொண் டிருந்தது. தீப்பந்தத்திலிருந்து சுடர்கள் விழுவதும் தெளி வாகத் தெரிந்தது. பறந்துவரும் அப்பட்சியின் மீது யாரோ ஒருவர் உடகார்ந்திருந்தார். அவர் யார்? ஆணா பெண் மனிதரா தேவரா? என்பதை நிர்ணயிக்க முடியவில்லை. மகா விஷ்ணு கருடவாகனருடராய் வானமார்க்கத்தில் பறந்து வந்து பக்தர்களுக்குக் காட்சி கொடுக்கும் காட்சியை நாடகங்களிலும், சினிமாக்களிலும் பார்த்திருக்கும் பாலாஜிக்கு இப்பொழுது அதே காட்சியைக் கண்ணெதிரில் தத்ரூபமாகக் காண்பதைப் போலிருந்தது. ஒரு கணம் நாம் குரூரமான கனவு காண்கிறோமா என்றுகூட அவன் நினைத்தான்.
மறுகணம் இதில் ஏதோ ஒரு மாயமிருக்கிறது. கருடனாவது, வாகனமாவது பறந்து வருவதாவது! யாரோ ஒரு மாயாவி கல்வி அறிவில்லாத இந்தக் குகை ஜனங்களை நன்றாக ஏமாற்றி ஆட்சி நடத்துகிறான் இந்த மாயாவியின் “குட்டை” இந்த ஜனங்களுடைய கண்ணெதிரிலேயே அம்பலப்படுத்த வேண்டும், இப்படி நினைத்து பாலாஜி பறவை மீது ஆரோகணித்துப் பறந்து வரும் மனிதனைச் சுட்டுத்தள்ள சட்டைப்பைக்குள் கையை விட்டுத் துப்பாக்கியை எடுத்தான். உடனே அவனுடைய அந்தராத்மா, “முட்டாளே துப்பாக்கியைச் சட்டைப் பைக்குள் போடு! அகிலத்தையே பிரதட்சணம் செய்து வரும் ராட்சத விமானங்களைச் சிருஷ்டித்துள்ள உன் உலகத்திலே இது மாதிரிப் பட்சிகளின் மீது பறந்து வரும் மேதாவிகள் இருக்கிறார்களா? புராண இதிகாச காலத்திய கருட வாகனத்தைப்போல ஆச்சரியகரமானதொரு வாகனத்தில் வானமண்டலத்திலே பவனி வந்த மனிதன் உன்னை விட எவ்வளவு சிறந்த மேதாவியாயிருப்பான்? உன் குண்டு அவனைச் சுட்டு வீழ்த்தாமல் அவன் தப்பிப்போய் விட்டால் பிறகு உன்னுடைய கதி என்ன ஆகும்? உன்னை அவன் சுட்டுப் பொசுக்கித் தள்ளிவிட மாட்டானா? அவன் என்ன, அவனைத் தெய்வமாக வழிபடும் உக்கிரசேனரும் அவருடைய ஆட்களும் உன்னைக் கிழித்துத் தோரணம் கட்டிவிட மாட்டார்களா? சித்ராவும் உக்கிரசேனரும் உன்னையும் உள்நாட்டு மக்களின் பண்பையும் பற்றி எவ்வளவு கேவலமாக நினைப்பார்கள்?” இப்படிப் பாலாஜியை அவனுடைய அந்தராத்மா இடித்துக் காட்டுவதைப்போல் இருந்தது. இதற்குள் உக்கிரமான பேரிரைச்சலுடன் தலைக்கு மேலே வந்த விசித்திரமான விமானம் வெகு தூரத்துக்கப்பால் சென்று மறைந்து விட்டது. அதன் சப்தம் நின்ற பிறகுதான் உக்கிரசேனரும் மற்றவர்களும் தரையிலிருந்து எழுந்திருந்தார்கள்.
எழுந்ததும் “ஜெய் தேவதேவி!” என்றுமுழங்கினார் உக்கிரசேனர். அதைப் பின்பற்றி மற்றவர்களும் “ஜெய் தேவ தேவி” என்று முழங்கி விட்டுத் தரையில் நட்டு வைத்திருந்த தீவட்டிகளைக் கையில் எடுத்துக் கொண்டார்கள்.
“நாம் வருகிறோமா என்பதைப் பார்ப்பதற்குத்தான் தேவதேவி வந்தாளா அப்பா” என்று கேட்டாள் சித்ரா.
“ஆமாம் குழந்தை! நாம் வருவதைப் பார்க்கவே கன்னிமாதா வந்திருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். மண்டபத்தை அடைந்ததும் வெளியே தீவட்டிகளை வைத்திருக்க வேண்டுமென்று ராஜகுரு முன்னரே எனக்குச் சொல்லியனுப்பியிருந்தார். நீ போய் பல்லக்கில் ஏறிக் கொள். மண்டபம் இன்னும் கொஞ்சத் தூரம்தானிருக்கிறது!” என்றார் உக்கிரசேனர்.
சித்ரா பல்லக்கில் ஏறிக் கொள்ளவே அவர்களுடைய பிரயாணம் தொடர்ந்து ஆரம்பமாயிற்று.
“ஆகாயத்தில் வந்தது கன்னிமாதா தேவதேவியா?” என்று உக்கிரசேனரிடம் பாலாஜி விசாரித்தான்.
“ஆமாம்! ஆகாயமார்க்கமாக நினைத்த இடத்துக்குப் போகும் சக்தி கன்னிமாதா ஒருவருக்கு மட்டும்தான் உண்டு” என்றார் உக்கிரசேனர்.
பாலாஜி:- இப்படி அடிக்கடி அவர் பறந்து வருவது உண்டா?
உக்கிரசேனர்:- ஓ! பல தடவை நாங்கள் பார்த்திருக்கிறோம். பகல் நேரமாயிருந்தால் இன்னும் தெளிவாகத் தெரிந்திருக்கும். இரவு நேரமாகையால் உங்களுக்கு அவ்வளவு தெளிவாகத் தெரிந்திருக்காது.
பாலாஜி:- வானத்தில் தேவதேவி எப்படிப் பறந்து வருகிறார்?
உக்கிரசேனர்:- அது நமக்கு எப்படித் தெரியும்? தெரிந்தால் நமக்கும் தேவதேவிக்கும் பிறகு என்ன வித்தியாசம்?
பாலாஜி:- இல்லை அய்யா! எங்கள் நாட்டிலே ஆகாயத்தில் பறப்பது ரொம்ப சகஜம்.
உக்கிரசேனர்:- என்ன? உண்மையாகவா?
பாலாஜி:- ஆமாம் அய்யா! அதை விமானம் என்று நாங்கள் சொல்லுகிறோம். சுமார் இருபது வருடங்களுக்கு முன்னால் விமானங்களில் பறப்பதை ஆபத்தானதென்று சிலர் எண்ணிக் கொண்டிருந்தார்கள். இன்றோ விமானப் பிரயாணம் எங்களுக்குத் தண்ணீர்பட்டபாடு. ஆயினும் கன்னிமாதா பறந்து வந்ததைப் போன்ற விமானத்தைப் புராணங்களிலும் இதிகாசங்களிலும் படித்திருக்கிறேனே தவிர கண்ணால் காண்பது இதுதான் முதல் தடவை.
உக்கிரசேனர்:- அப்படியானால் உங்கள் நாட்டில் எப்படி ஆகாயத்தில் பறக்கிறீர்கள்?
தற்கால விமானங்களையும் விமான யாத்திரைகளையும் பற்றி பாலாஜி சுருக்கமாக உக்கிரசேனருக்குச் சொல்லிவிட்டு சுமார் 100 பேர்கள் வரை உட்கார்ந்து பிரயாணம் செய்யக் கூடிய விமானங்களும் ஒரு பெரிய பட்டினத்தையே நிர்மூலமாக்கிவிடும் அதிபயங்கரமான வெடி குண்டுகளைப் போடக் கூடிய போர் விமானங்களும் இருப்பதை அவன் அபிநயங்களோடு விளக்கிச் சொன்னான். அவற்றைத் திறந்தவாய் மூடாமல் உக்கிரசேனர் கேட்டுக் கொண்டு வந்தார்.
கடைசியில் இரவு எட்டுமணி சுமாருக்கு அவர்கள் அன்றிரவு தங்க வேண்டிய மண்டபத்தை அடைந்தார்கள்.
மண்டபத்தை அடையும் வரையில் ஜோதிவர்மன் கண் விழிக்கவேயில்லை. அவன் இருந்த நிலைமை தூக்கமா அல்லது மயக்கமா என்பதையே கண்டு பிடிக்க முடியாமல் இருந்தது. வழியில் அவனுக்கு ஒன்றுமே தெரியாது. மண்டபத்தில் பல்லக்கை இறக்கிய பின்னர் ஜோதியின் அருகில் சென்று இரண்டு மூன்று தடவை குரல் கொடுத்து அழைத்த பொழுதுதான் அவன் லேசாகக் கண்ணைத் திறந்து பார்த்தான். பிறகு மயக்கம் தெளியாத நிலைமையிலிருப்பதைப்போல அவன் மறுபடியும் கண்களை மூடிக் கொண்டு விட்டான்.
பாலாஜியும் உக்கிரசேனரும் ஜோதியைத் தொட்டுப் பார்த்துவிட்டு ஜூரத்தின் வேகம் கடுமையாயிருப்பதைப் பற்றிப் பேசிக் கொண்டார்கள்.
“அவன் கண்களைத் திறக்காமல் உடம்பைப் போட்டு வளைத்து முறித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு உடலெல்லாம் கடுமையாக வலிக்க வேண்டும் போலிருந்தது. ஓயாமல் அவன் முனங்கிக் கொண்டே இருந்தான். சித்ராவின் பெயரையும் தேவதேவியின் பெயரையும் அவன் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தது, அவனுடைய மனதை அவ்விருவரும் எவ்வளவு தூரத்துக்குக் கவர்ந்து விட்டார்களென்பதை எடுத்துக் காட்டுவதாயிருந்தது.
இதற்குள் அடுப்பு மூட்டிச் சமைக்கச் சென்றவர்கள் முதலில் கொஞ்சம் கஞ்சி வைத்துக் கொண்டு வந்தார்கள். ஜோதிவர்மன் படுத்தபடியே கொஞ்சம் கஞ்சி குடித்தான். மத்தியானத்தைப் போல இப்பொழுது சித்ரா சாப்பிட்டாளா என்று அவன் கேட்கவில்லை. சித்ராவும் மற்றவர்களும் தன்னைச் சுற்றி நிற்பதை அவன் கவனித்ததாகவும் தெரியவில்லை. கிட்டத்தட்ட சுயநினைவையே அவன் இழந்துவிட்டதைப் போலிருந்தது. அவனுடைய பெயரைச் சொல்லி சித்ராவும் பாலாஜியும் அழைத்தபொழுது “ஊம்! ஊம்!” என்று அவன் பதில் கொடுத்தானே தவிர இதற்குமேல் அவன் ஏதும் சொல்ல வில்லை! ஆனால் அவன் பேச விரும்புகிறா னென்பதையும் பேச முடியாமல் தொண்டையில் ஏதோ அடைப்பதினால் திணறுகிறா னென்பதையும் அவர்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.
“தேவதேவியின் கிருபையினால் அரண்மனைக்குப் போய்ச் சேரும்வரையில் ஜோதிக்கு ஒன்றுமில்லாம் லிருக்க வேண்டுமே!” என்று சித்ரா அங்கலாய்த்தாள்
“கன்னி மாதாவின் நாமத்தை ஸ்மரிக்கிறான் சித்ரா. ஒன்றுமே பேசமுடியாத நிலைமையிலிருந்தும் உன் பெயரையும் தேவதேவியின் பெயரையும் மட்டும் இடைவிடாமல் ஸ்மரனை செய்கிறான். கன்னி மாதா நிச்சயம் அவனைக் கைவிடமாட்டாள் குழந்தை!” என்று தளபதி உக்கிரசேனர் தனது மகளைத் தேற்றித் தைரியம் சொன்னார்.
“இந்தக் கிழவனை உத்தேசித்து இல்லாவிட்டாலும் உள்ளன்போடு உருகிக் கொண்டிருக்கும் சித்ராவை முன்னிட்டாவது ஜோதியைக் காப்பாற்றமாட்டாயா?” என்று கடவுளிடம் பாலாஜி முறையிட்டான். தளபதி உக்கிரசேனரோ தனது அருமை மகள் படும் வேதனையைக் கண்டு கொண்டு பார்க்கச் சகிக்காமல் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தார்.
இரவில் ஜோதிவர்மன் ஏதேதோ பிதற்றினான். நாக்குச் சரிவரப் புரண்டு கொடுக்காதபடியினால் அவன் உளறுகிறானென்பது தெரிந்ததே தவிர என்ன சொல்லுகிறானென்பது யாருக்கும் தெரியவில்லை. தேவதேவியைப் பழிவாங்கவே நாங்கள் வந்திருக்கிறோமென்று சுயநினை வில்லாத நிலைமையில் ஏதாவது உளறிக் கொட்டி வைப்பானோ என்று அஞ்சிக் கொண்டிருந்த பாலாஜிக்கு ஜோதி பேசுவது தெளிவாக இல்லாமலிருந்தது, அந்தத் துன்ப நேரத்திலும் சற்று ஆறுதலளிப்பதாயிருந்தது.
முடிவில்லாமல் நீண்டு கொண்டே போவதைப் போலிருந்து அந்த இரவு கடைசியில் ஒரு முடிவுக்கு வந்து கீழ்வானம் வெளுத்த பொழுது சகல ஜீவராசிகளையும் காக்கும் பிரத்யட்ச தெய்வமான சூரிய தேவனை வணங்கப் பாலாஜி வெளியே வந்தான். மண்டபத்தின் வெளி வராந்தாவிலிருந்த வண்ணம் வெளியே நோக்கிய பொழுது எதிரில் கண்ட காட்சி அவனை மலைத்துப்போய் அப்படியே ஸ்தம்பித்து நிற்கச் செய்துவிட்டது.
ஆச்சரிய மேலீட்டினால் இமை கொட்டாமல் மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்த பாலாஜிக்குப் பின்னால் “ஏன் இப்படி சமைந்து போய் நிற்கிறீர்கள்? பாழடைந்த புராதனப் பட்டினத்தைப் பார்த்து மலைத்துப் போய்விட்டீர்கள் போலிருக்கிறது?” என்று யாரோ கேட்பதைப் போலிருந்தது.
கனவு கண்டு விழித்ததைப்போல பாலாஜி திரும்பிப் பார்த்தான். தன்னிடம் கேள்வி கேட்டவர் தளபதி உக்கிரசேனர் தானென்பதை அறிந்தே “ஆமாம் அய்யா! எவ்வளவு அழகாக இருக்க வேண்டிய குபேர பட்டினம் எப்படி நிலை குலைந்து குரூரமாகச் சிதைந்து கிடக்கிறதென்பதைப் பார்க்கும் பொழுது துக்கமாக இருக்கிறது அய்யா! இதே போல காலதேவனுக்குப் பலியான பல இடங்களை எங்கள் நாட்டில் நான் பார்த்திருக்கிறேன். மாடமாளிகைகளுடனும் கூடகோபுரங்களுடனும் அடியோடு மண்ணில் புதைந்து போன நகரங்கள் பலவற்றைப் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் சமீப காலத்துக்கிடையில் தோண்டியெடுத்திருக்கிறார்கள். பழம் பெருமையைப் பற்றிக் கம்பீரமாக நிற்கும் அந்தப் புதைபொருள்கள் மௌனமாகக் கதை கதையாகச் சொல்லுகின்றன. அதே போன்ற பாழடைந்த பட்டினங்களை உங்கள் நாட்டிலும் பார்க்கும் பொழுது காலமென்ற மகாசக்தி விளைவிக்கும் பயங்கரமான நாசம் வேதனையைத் தருகிறது” என்றான்.
தளபதி உக்கிரசேனர் ஒரு நெடுமூச்செறிந்தார். பிறகு அவர் சொன்னார்:- “இது ஒரு பெரிய சோகக்கதை. இந்த நாட்டின் புராதன சரித்திரங்களைப் பற்றி அரண் மனை புத்தகசாலையில் ஆயிரக் கணக்கான ஏட்டுச் சுவடிகளிருக்கின்றன. அவைகளைப் படித்துப் பார்த்தால் எப்படியெல்லாம் இருந்த செம்பவளத்தீவு இன்று எப்படி நிலை குலைந்து போயிருக்கிறதென்பதும், இந்த சர்வ நாசத்துக்கு எப்படி ஒரேயொரு தனி மனிதன் காரணமாயிருந்தானென்பதும் தெரியும். இறைவன் பிரதிநிதியாக எங்கள் மகாராணி தேவதேவி இந்நாட்டுக்கு வந்த சமயம் நம்மைப்போல எலும்பும் தோலும் உள்ள ஒரு சாதாரண மனிதன், சாவை வெல்லும் சக்தியற்ற ஒரு சர்வ சாதாரணமான மனிதன், எல்லாரையும் போல நானும் ஒரு மனிதன் என்பதை மறந்து கடவுளாக முயற்சித்தான். சினம் கொண்ட இறைவன் அந்தப் பேராசைக்காரனையும் அவனுடைய ராஜ்யத்தையும் மிக மிகக் கொடூரமாகத் தண்டித்து விட்டார்”.
“கடவுள்களுடன் போட்டியிட்ட அந்த மமதை பிடித்த மனிதன் யார் அய்யா?” என்று கேட்டான் பாலாஜி.
அவனுக்குப் பதில் சொல்லுவதா அல்லது வேண்டாமா என்பதைப் பற்றி உக்கிரசேனர் ஒருகணம் யோசித்திருக்க வேண்டும், அவர் சற்றுத் தயங்கிவிட்டுச் சொன்னார்:
“அய்யா! இந்தத் தீவுக்கு வரும் அந்நியர்களிடம் நாங்கள் அதிகமாகப் பேசுவதில்லை. அவர்களுடன் நெருங்கிப் பழகுவதுமில்லை. எங்களிடம் கேள்விகள் கேட்க அவர்களுக்குத் தைரியம் இருப்பதும் கிடையாது. இதற்கெல்லாம் மாறாக உங்களுடன் சரளமாக நான் பேசுவதும் பழகுவதும் எனக்கே ஆச்சரியமாயிருக்கிறது. உங்கள் கோஷ்டியிலுள்ள ஒருவனுக்கு என் மகள் மாலையிட்டது தான் இதற்குக் காரணமா? அல்லது நீங்கள் நல்லவர்களாயிருப்பது காரணமா? என்பது எனக்கே புரியவில்லை. இந்நாட்டின் புராதன சரித்திர வரலாறுகளை நானே அரண்மனைப் புத்தகசாலையில் படித்திருக்கிறேன்.
சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்னால் சிம்மேந்திர பூபதி என்ற ஒரு மன்னர் இந்நாட்டை ஆண்டு வந்தார். அவருடைய காலத்தில் செம்பவளத்தீவு மகோன்னதமான நிலைமையிலிருந்தது. இந்நாட்டைப் போலொத்த செல்வம் கொழிக்கும் பூமி உலகில் வேறு எங்குமே இருந்ததில்லை. கடல் வாணிபத்தில் செம்பவளத்தீவு மக்கள் முன்னணியிலே நின்றார்கள். அம்மட்டல்ல; அற்புதமானதும் சுலபத்தில் நம்ப முடியாததுமான பல சாதனைகளைச் செய்யும் சித்தர்களின் உதவியைக் கொண்டு சிம்மேந்திரபூபதி அசகாய சூரனாக விளங்கினார். சித்தர்கள் நிர்மாணித்த பறக்கும் குதிரைப்படை தேர்ப்படைகள் கூட சிம்மேந்திர பூபதியின் சேனையிலிருந்தனவாம்.
அவருடைய காலத்தில் நிலத்தில் நடப்பது எவ்வளவு சகஜமாயிருந்ததோ அப்படியிருந்ததாம் வானமண்டலத்திலே சஞ்சரிப்பதும், நூதனமான படைக்கலங்களையும் பயங்கரமான போர்க் கருவிகளையும் கொண்டு சிம்மேந்திர பூபதி அண்டையிலுள்ள அநேகம் நாடுகளைப் பிடித்து சக்கரவர்த்தியாக மகுடாபிஷேகம் செய்து கொண்டார். ஆனால் அவருடைய மண் ஆசை அவரை அதோடுவிடவில்லை. தானே கண்கண்ட தெய்வமென்றும் தன்னையே தனது பிரஜைகள் கடவுளாக மதித்துக் கோயில் கட்டிக் கும்பிட வேண்டுமென்றும் அவர் ஆக்ஞையிட்டார். அக்கால மக்கள் தொழுது வந்த தெய்வங்களையெல்லாம் அவர் உடைத் தெறிந்து அந்த இடங்களில் தன்னுடைய சிலைகளை அவர் பிரதிஷ்டை செய்ய உத்தரவிட்டார். இவ்விதம் கடவுளுடனேயே போட்டியிட்ட சிம்மேந்திர பூபதியைக் கடவுள் சரியாகத் தண்டித்துவிட்டார்.
இந்த நிலைமையில்தான் இறைவனால் அனுப்பப்பட்டு தேவதேவி எங்கள் நாட்டுக்கு கடல் வழியாக வந்தார். அவர் வந்த பொழுது அவர் இறைவன் தூதரென்பதோ அல்லது சிம்மேந்திர பூபதியைத் தண்டித்து நாட்டை ரட்சிப்பதற்காக வந்தவரென்பதோ யாருக்கும் தெரியாது.
இதற்கு மாறாக சிம்மேந்திர பூபதியின் வெறியாட்டங்களுக்குத் தூபம் போடவந்த ஒரு பெண் பிசாசு என்று தான் மகா ஜனங்கள் முதலில் நினைத்தார்களாம்.
ஒருநாள் படைப்பலம் ஏதுமில்லாமல் சிம்மேந்திர பூபதியும் தேவதேவியும் மாத்திரம் உலக நாடுகளை ஜயிக்கப் புறப்படப்போவதாகப் பறை சாற்றப்பட்டது. அவ்விருவரும் விமானத்தில் புறப்பட்டார்கள். போகும் பொழுது எதிரிகளை நிர்மூலமாக்கச் சித்தர்கள் தயாரித்துக் கொடுத்த ஒரு திராவகக் கலயத்தையும் கூட எடுத்துச் சென்றார்கள். அவர்கள் புறப்பட்ட சில வினாடிக்குள்ளாகவே திராவகக் கலயம் விமானத்திலிருந்து தவறிக் கீழே விழுந்துவிட்டது. செம்பவளத் தீவைத் தாண்டி எங்கோ வெகுதூரத்துக்கப்பால் கடலில் தான் அது விழுந்தது. ஆயினும் கடலில் இருந்து ஏற்பட்ட அதிர்ச்சியில் செம்பவளத் தீவில் ஒரு அதிபயங்கரமான பூகம்பம் ஏற்பட்டது. பல இடங்களில் பூமி பிளந்து பெரிய பெரிய பட்டினங்கள் அப்படியே பூமிக்குள் புதையுண்டு போய்விட்டன. மலைகள் வெடித்து அக்கினிக் குழம்பு பீறிட்டுக் கொண்டு கிளம்பி ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. காட்டுக்குள் இருந்த சில ஜனங்களைத் தவிர நகரவாசிகளும் அரண்மனை வாசிகளும் படைகளும் சித்தர்களும் அந்தப் பிரளய பூகம்பத்துக்குப் பலியாகி கூண்டோடு சர்வ நாசமாகி விட்டார்கள். சிம்மேந்திர பூபதியுடன் பறக்கும் தேரில் சென்ற தேவதேவி பூபதியைக் கடலுக்கு அர்ப் பணித்துவிட்டுச் செம்பவளத் தீவுக்குத் திரும்பியதும் அங்கு ஏற்பட்டிருந்த சர்வ நாசத்தைக் கண்டு திடுக்கிட்டுப் போனார். இறைவன் சித்தப்படி தேவதேவி அன்று முதல் செம்பவளத்தீவின் ராணியாகவும் காக்கும் தெய்வமாகவும் விளங்கி வருகிறார்.”
“நீங்கள் கோபப்படாமலிருந்தால் இன்னும் ஒரே ஒரு சந்தேகத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் அய்யா! கடவுளுடன் போட்டி போட்டு கடவுளுடைய ஸ்தானத்தில் தன்னை வைத்து மகாஜனங்கள் வணங்க வேண்டும் என்று அகங்காரம் பிடித்து அலைந்ததால்தான் சிம்மேந்திர பூபதி அழிந்தாரென்று சொன்னீர்கள். அதே போல இப்பொழுது கடவுளின் ஸ்தானத்தில் உங்கள் மகா ராணி தேவதேவியை வைத்து நீங்கள் வழிபடவில்லையா? இதுமட்டும் எப்படிச் சரியாகும்?” என்று கேட்டான் பாலாஜி.
“நீங்கள் இப்படிக் கேட்காமலிருந்தால்தான் நான் ஆச்சரியப்படுவேன்! தேவதேவியைக் கடவுளாக நாங்கள் வழிபடவில்லை – கடவுளின் பிரதிநிதியாக, கடவுளி டம் எங்களுக்காக மன்றாடும் தூதராகவே நாங்கள் வழி படுகிறோம். அரசி தெய்வாம்சம், தெய்வத்தின் பிரதிநிதி என்பது எங்கள் நம்பிக்கை. எங்கள் மதக் கோட்பாடுகளின் அடிப்படையே இதுதான். சிம்மேந்திர பூபதியைப் போல எங்கள் மகாராணி உலகெல்லாம் ஜெயித்து சக்கிராதிபத்தியம் நடத்த விரும்பும் பேராசைக்காரியல்ல. எங்களுக்கு எந்த விதமான குறையையும் அவர் வைக்கவும் இல்லை. தவிர தேவதேவி இறைவன் பிரதிநிதியென்பதும் சிரஞ்சீவியாயிருந்து இந்நாட்டு மக்களை இரட்சிக்க இறைவன் அனுப்பிய தூதர் என்பதும் எங்கள் நம்பிக்கை” என்றார் உக்கிரசேனர்.
“நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. உலகத்தில் அக்கிரமம் தலையெடுத்துத் தர்மம் அழியும் போதெல்லாம் சாதுக்களை ரட்சித்துக் கொடியவர்களைத் தண்டிக்க இறைவனே இப்புவியில் அவதரிக்கிறார் என்பதை நாங்களும் நம்புகிறோம். இந்த உண்மையை நாங்கள் தெய்வமாக வழிபடும் கண்ணபரமாத்மா கீதையிலே-
பரித்ராணாய சாதுனாம் வினாசாயச துஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தானனார்த்தாயா சம்பவாமி யுகே யுகே என்று சொல்லியிருக்கிறார்” என்றான் பாலாஜி
பாலாஜி இப்படி வடமொழியில் ஒரு பாசுரத்தைச் சொல்லிய பொழுது உக்கிரசேனர் மந்திரத்தினால் கட்டுண்டவரைப்போல இரண்டு கண்களையும் மூடிக்கொண்டு கரங்குவித்துக் கொண்டிருந்தது பாலாஜிக்கு ஆச்சரியமாக இருந்தது. “உங்களுக்குத் தேவ பாஷை தெரியுமா அய்யா? நீங்கள் சூரிய குலத்தவரா” என்று வினவினார் உக்கிரசேனர்.
“நான் சூரியகுலமுமில்லை. சந்திர குலமுமில்லை. இப் பொழுது நாம் சொல்லிய பாசுரம் சம்ஸ்கிருதப் பாசுரம். இம்மொழியில் என்னைவிட ஜோதி மகாபண்டிதன்” என்றான் பாலாஜி.
“எங்கள் மகாராணிக்கு இந்த தாய் மொழிதான் மொழி. தேவ பாஷையில் ஆயிரக்கணக்கான ஏட்டுச் சுவடிகள் அரண்மனையிலிருக்கின்றன” என்றார் உக்கிரசேனர்.
எல்லோரும் காலைப் போஜனம் செய்தபின்னர் அவர்கள் மண்டபத்தை விட்டுக் கிளம்பினார்கள். ஜோதியைப் பல்லக்கில் தனியாக விடுவது உசிதமில்லையென்று சொல்லி அவனுடைய பல்லக்கிலேயே சித்ராவும் ஏறி உட்கார்ந்து கொண்டாள். காடு, மலை, வனாந்திரங்களின் வழியாக அவர்கள் தொடர்ந்து பிரயாணம் செய்தார்கள்.
நண்பகல் பன்னிரண்டு மணிக்கு ஒரு மரத்தடியில் ஒரு மணி நேரம் தங்கி மத்தியானச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு மீண்டும் பிரயாணத்தை ஆரம்பித்தனர். மாலை ஐந்தரை மணி சுமாருக்கு உக்கிரசேனர் பாலாஜியின் பல்லக்கு அருகில் வந்து, “இன்னும் சிறிது நேரத்தில் நாம் அமரபுரியை அடைந்துவிடுவோம்!'” என்று சொல்லிய பொழுது கதைகளிலும் காவியங்களிலும் காணும் கற்பனைகளையெல்லாம் மிஞ்சிய ஒரு அதிசயமான பட்டினத்தை அடையப்போகிறோமென்ற நினைப்பில் பாலாஜி விசேஷ பரபரப்பு அடைந்திருந்தான். அந்த அதிசய உணர்ச்சியில் பங்கெடுத்துக்கொள்ள ஜோதிவர்மன் சுயநினைவுடனில்லையே என்பதுதான் அவனுக்குத் துக்கத்தைக் கொடுத்துக் கொண்டு வந்தது.
சிறிது நேரத்துக்கெல்லாம் பல்லக்குகள் சாலையை விட்டு விலகி ஒரு குறுகிய பாதையின் வழியாக மலைப் பிரதேசத்தை நோக்கிச் செல்லவாரம்பித்தன.
அருகில் குதிரையிலே வந்துகொண்டிருந்த உக்கிரசேனரிடம், ”நாம் நகரத்துக்குப் போகவில்லையா?” என்று பாலாஜி வினவினான்.
“இல்லை! நாம் அரண் மனைக்குப் போகிறோம். அமரபுரி அதோ அந்தப் பக்கத்திலிருக்கிறது. சாலையோடு போனால் அமரபுரிக் கடை வீதியை அடையலாம். நாம் நகரத்துக்குப் போகாமல் வேறு வழியாக அரண்மனைக்குச் செல்கிறோம். அதோ தெரிகிறது பாருங்கள். அந்த மலையின் மீது தான் இருக்கிறது. தேவதேவியின் அரண்மனை” என்று சொல்லி மரம் செடி, கொடி, ஏதுமில்லாமல் மேகமண்டலத்தை மூட்டிக்கொண்டு நின்ற ஒரு மலையை உக்கிரசேனர் பாலாஜிக்குக் காட்டினார்.
“அந்த மலையின் மேலேயா இருக்கிறது அரண் மனை? அவ்வளவு உயரத்துக்கு நாம் ஏறிப்போயாகவேண்டுமா?” என்று கேட்டார் பாலாஜி.
“மலை உச்சியை அடைய குறுக்குப் பாதை இருக்கிறது. உங்களுக்கு ஒரு சிரமமும் இல்லாமல் நம் எல்லோரையும் மலை உச்சியில் கொண்டுபோய் வைத்துவிடுவார்கள்” என்றார் உக்கிரசேனர்.
”யார்? நம்மை அழைத்துப்போக அரண்மனையிலி ருந்து யாராவது வருவார்களா?” என்று பாலாஜி கேட்கவும், “ஆம்! பார்த்துக்கொண்டேயிருங்கள்!” என்றார் உக்கிரசேனர்.
இதற்குள் அவர்கள் மலையடிவாரத்தில் தகரக் கொட் டகை ஒன்றை வந்தடைந்தார்கள். பல்லக்குகளை யெல்லாம் கீழே வைக்கும்படி அவர் உத்தரவிட்டுவிட்டு தனது ஆட்களைப் பார்த்து, “நீங்கள் இனி அமரபுரிக்குப் போய் ராஜாங்க சத்திரத்தில் தங்கியிருங்கள். மறு உத்தரவு கிடைக்கும் வரையில் நீங்கள் சத்திரத்திலேயே இருக்கலாம்” என்றார்.
பல்லக்குத் தூக்கிகளும் கூடவரும் ஈட்டி வீரர்களும் விடைபெற்றுக்கொண்டு சென்ற பின்னர் உக்கிரசேனர். பாலாஜி, சித்ரா, ஜோதிவர்மன், முனிசாமி ஆகியவர்களும் இரும்புச் சங்கிலிகளினால் பிணைக்கப்பட்டிருந்த கைதிகளும் மட்டுமே பாக்கியிருந்தனர். கைதிகளை ஒரு கம்பத்துடன் சேர்த்துக் கட்டிய உக்கிரசேனர் பாலாஜியைப் பார்த்து, “நீங்கள் எல்லோரும் சற்று நேரம் இங்கேயே இருங்கள். இதற்கு மேல் அரண் மனை வீரர்கள்தான் நம்மை அழைத்துப்போக வேண்டும். அவர்களுக்குத் தகவல் தெரிவித்துவிட்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு குதிரையில் சென்றார்.
கண்மூடித் திறப்பதற்குள் உக்கிரசேனர் மலையின் மறுபக்கத்தில் மறைந்துவிட்டார்.
“இந்த இடத்துக்கு இதற்கு முன் எப்பொழுதாவது வந்திருக்கிறாயா சித்ரா?” என்று கேட்டான் பாலாஜி.
“நானா? அப்பாவைத் தவிர வேறு யாருமே இந்த மலையடிவாரத்துக்கு வந்ததில்லை. எப்பொழுதாவது அந்நியர்களை அழைத்து வரும்பொழுது பல்லக்குத் தூக்கிகளும் ஈட்டி வீரர்களும் வழித்துணைக்கு இவ்வளவு தூரம் வருவார்கள். அவர்கள்கூட அரண்மனை வீரர்கள் வரும் பொழுது இங்கிருக்கமாட்டார்கள்” என்றாள் சித்ரா.
இதற்கிடையில் மலையின் திருப்பத்திற்கு அப்பால் குதிரைகள் வேகமாக வரும் குளம்புச் சப்தம் அவர்களுக்குத் தெளிவாகக் கேட்டது. சிறிது நேரத்திற்கெல்லாம் தளபதி உக்கிரசேனர் முன்னால் வர ஆறு அரண் மனை வீரர்கள் ஆறு வெண்புரவிகளில் பின்னால் வந்தார்கள், அவர்கள் ஒவ்வொருவருடைய கையிலும் பள பளவென்று பிரகா சிக்கும் கூர்மையான ஈட்டிகளிருந்தன. கழுத்திலிருந்து கணுக்கால்வரை எஃகுக் கவசம் அணிந்து தலையிலும் கிரீ டம் போன்ற எஃகுத் தொப்பியணிந்திருந்த அவர்களைப் பார்த்தபொழுது ஜூலியர் சீஸர் காலத்திய பிரக்யாதி வாய்ந்த ரேக்க வீரர்களின் கம்பீரமான தோற்றமே ஞாபகத்திற்கு வருவதாயிருந்தது.
குதிரைகளில் வந்தவர்கள் கீழே இறங்க, அவர்களுக்கு பாலாஜியையும் மற்றவர்களையும் உக்கிரசேனர் காண்பித்து, “இவர்கள்தான் மகாராணியின் விருந்தாளிகள். ஒருவர் கடுமையான நோயுடன் பேச்சு மூச்சில்லாமல் பல்லக்கில் படுத்திருக்கிறார். அவரை மட்டும் பல்லக்கோடு தூக்கிக்கொண்டு போகவேண்டும்” என்றார்.
அரண் மனை வீரர்களில் தொப்பியிலே மயில் இறகு சொருகிக்கொண்டிருந்த ஒருவன் பாலாஜியையும், சித்ரா, முனிசாமி ஆகியவர்களையும் ஏறத்தாழப் பார்த்தான். பிறகு பல்லக்கின் அருகில் சென்று உள்ளே படுத்திருந்த ஜோதிவர்மனையும் அவன் குனிந்து பார்த்தான்.
இந்தப் பரிசோதனை முடிந்ததும் பாலாஜியிடம் வந்து, ”தயவுசெய்து உங்கள் கண்களைக் கட்டி அழைத்துச் செல்ல அனுமதிக்கவேண்டும். அரண்மனைக்குப் போகும் பாதை அந்நியர்களுக்குத் தெரியக் கூடாதென்பதற்காக இப்படிச் செய்யவேண்டியிருப்பதற்கு மன்னிக்க வேண்டும்” என்றான் அந்த வீரன்.
“நீங்கள் எங்களுடைய கண்களைக் கட்டினாலும் சரி, கால்களைக் கட்டினாலும் சரி ஆட்சேபனையில்லை. தாமதமில்லாமல் அரண் மனைக்குப் போய்விட்டால் போதும். பல்லக்கிலிருக்கும் என் மகன் ஜோதிவர்மன் மிகவும் அபாயகரமான நிலைமையிலிருக்கிறான்” என்றான் பாலாஜி.
ஈட்டி வீரன் ஒரு சமிக்ஞை கொடுக்க இன்னொரு வீரன் முன்னால் வந்து பாலாஜி, சித்ரா, முனிசாமி ஆகிய மூவருடைய கண்களையும் கறுப்புத் துணிகளினால் இறுகக் கட்டினான். ஜோதிவர்மன் பிரக்ஞையற்ற நிலைமையிலிருந்தபடியினால் அவனுடைய கண்களைக் கட்டவேண்டிய அவசியமிருப்பதாக அவர்களுக்குத் தோன்றவில்லை.
இரண்டு வீரர்கள் பல்லக்கைத் தூக்கிக்கொண்டு முன்னால் செல்ல பாலாஜியையும் முனிசாமியையும் மற்றும் இரண்டு வீரர்கள் கையைப் பிடித்து அழைத்துப்போனார்கள். தளபதி உக்கிரசேனர் சித்ராவை அழைத்துச் சென்றார். மற்ற வீரர்களும் கால் நடையாகக் குதிரைகளை நடத்திக்கொண்டு பின் தொடர்ந்தார்கள்.
அவர்கள் மலையின் திருப்பத்தில் போய்த் திரும்பி மேலும் கொஞ்சத் தூரம் நடந்துசென்றார்கள். பிறகு அவர்கள் மலையைச் சுற்றிக்கொண்டு போகும் ஒரு பாதை வழியாக மலையின் மீது ஏறுவதைப் போலப் பாலாஜிக்குத் தோன்றியது. அரைமணி நேரத்திற்கு அதிகமாக அவர்கள் இப்படிச் சுற்றுப் பாதையின் வழியாகச் சிகரத்தின் மீது ஏறியிருக்கவேண்டும். அந்தப் பாதையின் திருப்பங்களி லொன்றை அவர்கள் அடைந்த பொழுது கொஞ்சத் தூரத்திற்கு அப்பாலிருந்து “நில்” என்று கனத்த தொனியில் ஒருவர் உத்தரவிடும் சப்தமும் மலைப்பாறையின் மீது ஈட்டியினாலோ அல்லது வேறு ஏதோ ஒரு இரும்பு ஆயுதத்தினாலோ ஓங்கித் தட்டும் சப்தமும் பாலாஜிக்குக் கேட்டது.
உடனே பல்லக்கு நின்றது. பாலாஜியின் கோஷ்டி யாரும் பளிச்சென்று நின்றார்கள்.
“இதோ தென் திசை திக்குப் பாலகர் தளபதி உக்கிரசேனர் தேவியின் கட்டளைப்படி சில விருந்தாளிகளை அரண் மனைக்கு அழைத்து வந்திருக்கிறார்!” என்று ஈட்டி வீரர்களில் ஒருவன் சொன்னான். மயில் இறகு சொருகிக்கொண்டிருந்த வீரனே இவ்விதம் சொன்னானென்பதை அவனுடைய குரலிலிருந்து பாலாஜி தெரிந்துகொண்டான். வீரர்கள் தாழ்ந்த குரலில் பிறகு ஏதோ பேசிக்கொண்டார்கள். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை பாலாஜியினால் புரிந்துகொள்ள முடியவில்லை. தவிர, அவர்கள் எட்டிப் போய் நின்றுகொண்டு பேசுவதைப் போலவும் அவனுக்குத் தோன்றியது.
இதன் பின் ஒலிபெருக்கிக்குள் பேசுவதைப்போல ஒருவன் உரக்கக் கூவினான். அந்தச் சப்தத்துக்கு வேறு எங்கிருந்தோ எதிரொலி கிளம்பி வந்தது. சில நிமிடங்களுக் கெல்லாம் மலையிலிருந்து ஒரு பிரமாண்டமான பாறை பிளந்துகொண்டு நகருவதைப்போல கட கடவென்று சப்தம் கேட்டது.
“இனி நீங்கள் போகலாம்!” என்று உத்தரவு பிறப்பித்தான் முன்னர் “நில்லு!” என்று உத்தரவிட்ட அதே வீரன். பல்லக்கு முதலில் நகர அதைத் தொடர்ந்து மற்றவர்களும் நகர்ந்தார்கள். இப்போது முன் போல மலைப் பாதையில் போகாமல் ஒரு குகைக்குள்ளே போவதைப் போன்ற உணர்ச்சி பாலாஜிக்கு ஏற்பட்டது. இதை ஊர்ஜிதப்படுத்த கொஞ்ச நேரத்திற்கு முன்னால் பிளந்து கொண்டு நகர்ந்த மலைப்பாறை திரும்பவும் நகர்ந்து குகை வாசலை மூடிக் கொள்வதைப் போன்ற ஒரு சப்தம் அவர்களுக்குக் கேட்டது.
“நாம் குகைக்குள்ளே போகிறோமா? குகை வாசல் மூடிக்கொண்டால் சுவாசம் விட காற்று எங்கேயிருந்து வரும்?” என்று தன்னைப் பிடித்து அழைத்துச் சென்ற வீரனிடம் பாலாஜி விசாரித்தான். ஆனால் அதற்கு வீரன் பதில் சொல்லவில்லை. பாலாஜி கேட்டதைக் காதில் வாங்கிக் கொண்டதாகவும் அவன் காட்டிக் கொள்ளவில்லை.
அருகில் வந்த உக்கிரசேனர், “கேள்விகள் ஏதும் கேட்காதீர்கள்! அரண் மனை உத்தியோகஸ்தர்கள் அவர்களுடைய கட்டளைப்படி காரியங்கள் செய்பவர்கள். உங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்ல மாட்டார்கள்” என்று மெதுவாகச் சொன்னார்.
அவர் இப்படிச் சொல்லிக்கொண்டிருக்கையில் கரடு முரடான கற்பாதையைத் தாண்டி சலவைக் கல் போன்ற வழுவழுப்பான தரையை அடைந்தார்கள்.
“எல்லோரும் தயவுசெய்து அப்படியே உட்காருங்கள்” என்று ஒரு வீரன் உத்தரவிட்டான்.
“ஏன் அரண்மனைக்கு வந்துவிட்டோமோ?” என்று கேட்டான் பாலாஜி.
“கேள்வி கேட்காதீர்கள் என்று சற்று முன்புதானே சொன்னேன்! சொல்லியபடி செய்யுங்கள்! தயவு செய்து அப்படியே தரையில் உட்காருங்கள்!” என்றார் உக்கிரசேனர்.
உக்கிரசேனர், சித்ரா, பாலாஜி, முனிசாமி, பல்லக் குடன் ஜோதிவர்மன், பல்லக்கைத் தூக்கிவந்த இரண்டு வீரர்கள், சங்கிலியில் பிணைத்துக் கொண்டு வரப்பட்டவர்கள் ஆகியவர்களைத் தவிர மற்றவர்கள் உக்கிரசேனரிட மிருந்து விடை பெற்றுக் கொண்டு போவதாகப் பாலாஜிக்குத் தோன்றியது. அவர்கள் ஏன் போகிறார்கள்? நம்மை எங்கே விட்டுப் போகிறார்கள்? என்பதைப் பற்றி பாலாஜி யோசித்துக் கொண்டிருக்கையில் தலைக்கு மேலேயிருந்து கனமான இரும்புச் சங்கிலிகள் ஓசைப்படுத்திக் கொண்டு கீழே இறக்கப்படுவதைப் போல பாலாஜிக்குக் கேட்டது. உட்கார்ந்தபடியே அவன் தரையைத் தடவிப் பார்த்தான். வழ வழப்பான அந்த இடம் சினிமாப் படங்களில், நாடகக் காட்சிகளிலே காணும் பளிங்கு மண்டபத்தின் தள வரிசையைப்போல அவனுக்குத் தோன்றியது. மலையைக் குடைந்து அதற்குள்ளே இவ்வளவு அழகான மண்டபத்தை அமைத்திருப்பவர்கள் எவ்வளவு நாகரிகமடைந்தவர்களாயிருக்க வேண்டுமென்று அவன் எண்ணிக் கொண்டிருக்கையில், “இது மண்டபம் இல்லை அப்பனே! உன்னை உயரே தூக்கிக் கொண்டுபோகும் பளிங்கு ஊஞ்சல்” என்று சொல்லுவதைப்போல பாலாஜி உட்கார்ந்திருந்த இடம் அசைந்து கொடுத்தது. பிறகு உடனே அந்த இடம் மெதுவாக மேலே நோக்கிச் செல்லவாரம்பித்தது. சங்கிலி இணைப்பின் உதவியைக் கொண்டு தங்களைத் தரையோடு மேலே இருப்பவர்கள் உயரே இழுக்கவேண்டு மென்பதற்கு அடையாளமாகச் சங்கிலியை இழுக்கும் சப்தம் கேட்டது.
சங்கிலி ஊஞ்சல் நின்றவுடன் அரண்மனையை அடைந்து விடலாமென்று பாலாஜி ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்க ஆமை நகருவதைப் போல சங்கிலி ஊஞ்சல் மிக மிக மெதுவாகவும் அதே சமயம் “கட முடா” என்று பிரமாதமான சப்தம் செய்து கொண்டும் முடிவில்லாமல் மேலே போய்க்கொண்டிருந்தது.
(தொடர்ச்சியை ”ஜீவஜோதி”யில் படிக்கவும்)
– 1957ம் வருட ம்,மார்ச் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை மலைக்கன்னி என்ற தலைப்பில் இக்கதை வீரகேசரி நாளிதழில் பிரசுரமாயிற்று. ‘SHE’ என்ற ஆங்கில நாவலை தழுவி எழுதியது. வீரகேசரியில் பிரசுரமாகிய கதை ஓட்டத்தைப் பாதியாமலும் சுவை குன்றாமலும் சிறிது சுருக்கி மாற்றி எழுதியிருக்கிறேன்.
– மலைக்கன்னி, முதற் பதிப்பு: ஜூலை 1980, வீரகேசரி பிரசுரம், கொழும்பு.
அடுத்த பகுதி / அத்தியாயம் பதிவிடுங்கள் pls