கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: April 4, 2025
பார்வையிட்டோர்: 4,990 
 
 

(1957ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

அத்தியாயம்-10

ஜோதிவர்மனும் அவனுடைய கோஷ்டியாரும் பிரயாணம் செய்த படகை ஒரு சாதாரண இயந்திரப் படகு என்று சொல்லிவிடுவதற்கில்லை. அதைக் கப்பல் என் றும் வர்ணிக்கமுடியாது. தனுஷ்கோடிக்கும், தலைமன்னா ருக்கும் இடையில் போக்குவரத்து நடத்தும் நீராவிக் கப் பலைவிடச் சற்றுச் சிறியதாயும் அதே சமயம் சாதாரண இயந்திரப் படகைவிடப் பெரிதாகவுமிருந்தது அவர்களு டைய படகு. தூத்துக்குடியிலிருந்து லட்சத் தீவுகளில் ஒன்றான மினிகோய் தீவிற்கு முதலில் சென்று அங்கு ஓரிரண்டு நாள் தங்கிவிட்டுப் பிரயாணத்தை மறுபடி தொடங்குவ தென்பது அவர்களின் ஏற்பாடு. கடல் மிகவும் அமைதி யாயிருந்தபடியினால் படகுப் பிரயாணம் சுமுகமாயிருந்தது. 

“இந்தப் பக்கங்களில் கொஞ்சம் அஜாக்கிரதையாகப் படகைச் செலுத்தினால் அவ்வளவுதான். கண்ணுக்குப் புலப்படாமல் ஜலத்தில் மறைந்திருக்கும் பாறைகளில் மோதி படகு சுக்குநூறாகிவிடும்” என்றான் கப்டன் வில்லியம். 

“மற்ற இடங்களிலில்லாத கடற்பாறைகள் இந்தப் பகுதியில் மட்டும் எப்படி வந்தன?” என்று கேட்டான் பாலாஜி. 

“இப்பொழுது கடலாயிருக்கும் இப் பகுதிகளெல்லாம் ஒரு காலத்தில் பூப் பிரதேசங்களாக இருந்தனவாம். பூதத்துவ நூலின்படி சுமார் இரண்டுகோடி ஆண்டுகளுக்கு முன்னால் விந்திய மலைக்கும் இமயமலைக்கும் இடையிலுள்ள பிரதேசம் கடலாயிருந்தது. விந்தியமலையிலிருந்து குமரிவரையும் அதற்கு அப்பால் தென்துருவம் வரையிலும் ஒரே பூப்புரதேசமாயிருந்தது. அப்பொழுது இந்துமகாசமுத்திரமோ அல்லது அராபிக் கடல், வங்காளக் குடாக் கடல் ஆகியவைகளோ இல்லை. இந்தப் பூப் பிரதேசத்துக்குத் தமிழர்கள் தமிழகம் அல்லது குமரிக் கண்டம் என்று பெயரிட்டிருந்தார்கள். மேனாட்டு பூதத்துவ ஆராய்ச்சியாளர்கள் இதை லமூரியாக் கண்டம் என்று அழைத்தனர். இது தென் அமெரிக்காவிலிருந்து ஆபிரிக்கா உள்ளிட்டு அவுஸ்திரேலியா வரையிலும் வடக்கே விந்திய மலையிலிருந்து தெற்கே தென்துருவம் வரையிலும் வியாபித்திருந்ததாம். இமயமலை உள்ளிட்டு விந்தியமலைக்கு வடக்கிலுள்ள பிரதேசமெல்லாம் சமுத்திரமாக இருந்ததாம். இதற்கு ஆதாரமாக இந்து மகாசமுத்திரத்துக்கு அடியில் பழங்காலக் கோட்டை களிருப்பதாகச் சொல்லுகிறார்கள். இமயத்திலே கடலில் வாழும் ராட்சத ஜந்துக்களின் எலும்புக் கூடுகளை இன் றைக்கும் காணக்கூடியதாக இருக்கிறது.பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கடற்கோளில் லமூரியாக் கண்டத்தைக் கடல் கொண்டுவிட்டது. அவுஸ்திரேலியா, இந்தோனேஷியா, இலங்கை முதலியவை கடல் விழுங்காமல் எஞ்சியவை.இப்படித் திட்டாக பல்லாயிரக்கணக்கான தீவுகளும் கடற்கோளிலிருந்து தப்பி மிஞ்சின. அவைகளில் சில தான் லட்சத் தீவுகள். சனசஞ்சாரமற்றதாகக் கருதும் செம்பவளத் தீவை நாம் கண்டுபிடித்து அதில் மக்களும் இருந்தால் மிகமிகப் புராதனமான நாகரிகப் பண்பாடு களை நாம் தெரிந்துகொள்ளமுடியும். இந்த எண்ணத்துடன்தான், உங்கள் திட்டத்துக்கு உதவ கடற்படை என்னை அனுப்பியிருக்கிறதே தவிர தேவதேவி என்ற ஒருத்தி சிரஞ்சீவியாக அங்கு இருப்பாளென்பதை நம்பிக் கொண்டு அல்ல” என்றான் காப்டன் வில்லியம். 

முதலில் அவர்கள் லட்சத் தீவுக் கூட்டத்தில் ஒன் றான மிக்கோய் தீவில் இறங்கினார்கள். அடுத்தபடியாக எந்தத் திக்கில் போவது, எங்கே இறங்குவது என்ற நிச் சயமில்லாமல் பிரயாணத்தைத் தொடங்கவேண்டியிருந்த படியால் ஐந்தாறு மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களைச் சேகரித்துவைத்துக்கொண்டு மூன்று தினங்களுக்குப் பிறகு மிக்கோய் தீவிலிருந்து அவர்கள் புறப்பட் டார்கள். 

“பத்துத் தினங்கள் வரையில் திக்குத்திசை தெரியாத திரைகடலில் அவர்கள் பிரயாணம் செய்தார்கள். பதினோராவது நாள் படகில் ஒரு அசம்பாவிதம் நடந்தது. படகு எந்தத் திசையில் போகிறதென்பதைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு மாலுமியின் அஜாக்கிரதையினால் திசை காட்டும் கருவி உடைந்து கடலில் விழுந்துவிட்டது. இதன் பின் சூரியனையும் நட்சத்திரங்களையும் கொண்டே அவர்கள் திசையைப் புரிந்து கொண்டு படகைச் செலுத்த வேண்டியதாயிற்று. 

“திசை மானி போனால் போகட்டும். ரேடியோக் கருவி பழுதடையாமலிருக்கும்வரை நாம் பயப்படத் தேவையில்லை. உலகத்தில் எந்தப் பாகத்திலிருந்தாலும் ரேடியோக் கருவியைக் கொண்டு நாம் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டுவிடலாம் அல்லவா?” என்றான் பாலாஜி. 

இதைக் கேட்டதும் காப்டன் சிரித்தான். 

“ஏன் சிரிக்கிறாய்?” என்றான் பாலாஜி. 

“பெட்டியைக் களவு கொடுத்த மனிதன் சாவி தன்னிடமிருப்பதைப்பற்றி பெருமைப்படுத்திக்கொண்டானாம். அதைப்போலிருக்கிறது நீங்கள் சொல்லுவது. ரேடியோக் கருவியைக்கொண்டு வெளி உலகுடன் நாம் தொடர்பு வைத்துக்கொள்ளலாமென்பது உண்மைதான். ஆனால் நாம் எங்கு இருக்கிறோமென்பதைத் தெரிந்தால் தானே நமக்கு உதவிகள் வருவது சாத்தியம்? திசை மாறிப் போனபிறகு இப்பொழுது நாம் இருக்கும் இடம் நமக்கே தெரியாதே! பிறருக்கு எப்படி நாம் இருக்கும் இடத்தைத் தெரிவிக்கப்போகிறோம்?” என்றான் காப்டன். 

அடுத்தபடியாக இரண்டு தினங்கள் வரையில் விசேஷ சம்பவம் ஏதும் நடைபெறவில்லை. மூன்றாவது நாள் இடியுடன் கலந்த பெருமழை பன்னிரண்டு மணி நேரம் வரை ஓயாமல் பெய்தது. அதன்விளைவாக படகிலிருந்த ரேடியோப் பெட்டியும் பழுதடைந்துவிட்டது. 

“அட கடவுளே! ஒன்றன் பின் ஒன்றாக அல்லவா துர் அதிர்ஷ்டம் நம்மைத் தொடர்ந்து வருகிறது. நாம் புறப்பட்ட நேரம் சரியில்லைப்போலிருக்கிறது!” என்று புலம்பினான் பாலாஜி. முனிசாமியோ பாதிப் பிராணன்போய் நடைப்பிணத்தைப்போலிருந்தான். 

“ரேடியோவில் பழுது ஒன்றுமில்லை. மழையில் பாட்டரி நனைந்து போயிருக்கிறது. அவ்வளவுதான் நல்ல வெய்யில் அடித்தால் பாட்டரி சரியாகிவிடும்” என்று சமாதானம் சொன்னான் காப்டன் வில்லியம். 

மிக்கோய் தீவிலிருந்து கிளம்பிய 20 தினங்கள் வரை யில் அவர்கள் முடிவில்லாத கடலைத் தவிர வேறு எதையுமே காணவில்லை. அடிவானத்துக்கு அப்பால் படகு போய்க்கொண்டேயிருந்தது. இடையில் சில மணல் திட்டுகளை மட்டுமே அவர்கள் கண்டார்கள். ஆனால் அவைகளில் இறங்குவதற்கு அவர்களுக்குப் பயமாயிருந்தது. 

“கடலில் இப்படித்தான் சில இடங்கள் திட்டுக்களைப் போலிருக்கும். அவற்றை நம்பிக்கொண்டு இறங்கினால் மனிதனை மள மளவென்று பாதாளத்துக்கு கொண்டு போய்ச் சேர்த்துவிடும்” என்று கூறினான் காப்டன். 

“வேண்டாம் அப்பா, வேண்டாம்! பாதாளத்துக்குப் போவதைவிட படகிலேயே போய்க்கொண்டிருந்தாலாவது என்றைக்காவது ஒரு நாள் நிலத்தைப் பார்க்கலாம்” என்றான் பாலாஜி. 

அன்று மாலை படகின் விளிம்பில் நின்று அடிவானத் தைப் பார்த்துக்கொண்டிருந்த காப்டன், கிழக்குக்கோடியில் எதையோ பார்த்துவிட்டு கலவரத்துடன் ”ஜோதி! அதோ பார்! கிழக்குக் கோடியிலே உனக்கு என்ன தெரிகிறது? சரியாகக் கவனித்துப்பார்” என்றான். 

அவன் சுட்டிக்காட்டிய இடத்தைக் கவனித்த ஜோதிவர்மன், “என்ன தெரிகிறது? எனக்கு ஒன்றும் தெரியவில்லையே!” என்றான். 

“வெறுங் கண்களுக்கு சரியாகத் தெரியாது. இதோ! இந்த தூர தரிசினியைப் போட்டுக்கொண்டு பார்” என்று சொல்லி தான் அணிந்திருந்த தூரதரிசினியைக் கழற்றி ஜோதிவர்மனிடம் கொடுத்தான் காப்டன். 

தூரதரிசினியின் உதவியோடு பார்த்தபிறகும் ஜோதிவர்மனுக்கு ஒன்றும் தெரியவில்லை. 

“கிழக்கு வானத்தில் கரும்புள்ளி செம்புள்ளி வைத்தாற்போல திட்டுத் திட்டாகத் தெரிகிறதே, அதைக் கவனித்துப் பார்” என்றான் காப்டன். 

“ஆமாம்” என்று ஜோதிவர்மன் ஆமோதிக்கவும் “அது புயல் வீசப்போவதற்கு அறிகுறி! நமது படகு எப் படித்தான் இந்தப் புயலைச் சமாளிக்கப்போகிறதோ தெரியவில்லை. கடவுள்தான் நம்மைக் காப்பாற்றவேண்டும்” என்று சொல்லிவிட்டு ஒரு பெருமூச்சு விட்டான் காப்டன் வில்லியம். 

உடனேயே காற்று சற்று வேகமாக வீசத் தலைப்பட்டது.  

“புயலின் போக்கை அறிந்து சுக்கானைத் திருப்புங் கள். காற்றை எதிர்த்துக்கொண்டு போவது பேராபத்து. காற்றின் போக்கில் படகும் சென்றால் அபாயம் சற்றுக் குறையும்” என்று மாலுமிகளுக்கு காப்டன் ஒரு உத்தரவு போட்டான். அதை அனுசரித்து அவ்வளவு நேரமும்தென் திசையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த படகு காற்றின் திசையை அனுசரித்து மேற்குத் திசையில் திரும்பிச் செல்ல ஆரம்பித்தது. 

“செம்பவளத்தீவுக்குப் போக முயற்சித்தவர்களெல்லாம் இப்படித்தான் புயலில் அகப்பட்டுக் கஷ்டப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதைக் கவனித்தால் நாம் நாடிப் போகும் தீவு எங்கேயாவது பக்கத்தில்தான் இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன்” என்றான் ஜோதிவர்மன். அவன் அவ்விதம் சொல்லியது ஆபத்தான நிலைமையில்கூட தனது இலட்சியத்தை அவன் மறக்கவில்லையென்பதை எடுத்துக் காட்டுவதைப் போலிருந்தது. 

“செம்பவளத்தீவைவிட இன்னும் அருகிலிருப்பது சொர்க்கலோகம் போலத்தான் எனக்குத் தோன்றுகிறது. முட்டாள்தனமாக நாம் இந்தப் பிரயாணத்தில் இறங்கியிருக்கவே கூடாது. யாரோ எப்பொழுதோ ஏதோ எழுதி வைத்ததைப் படித்துவிட்டு பயித்தியக்காரத்தனமாகப் புறப்பட்டு வந்த நமது மூளையை மியூஸியத்துக்கு அனுப்ப வேண்டும்” என்று கசந்துகொண்டான் பாலாஜி. 

“படகு போகும் பாதையில் பாறைகள் ஏதாவது இருந்தால் என்ன கதியாகும்?'” என்று கவலையோடு கேட்டான் பாலாஜி. 

“பிரமாதமாக ஒன்றும் ஆகிவிடாது. படகு சுக்கு நூறாகச் சிதறிப்போய் நாம் கடலுக்கு அடியில் போய்க் கொண்டிருப்போம். அவ்வளவுதான்” என்றான் காப்டன் வில்லியம். 

இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு புயலின் உக்கிரம் சற்றுத் தணியவே “இனி அபாயமில்லை. புயல் நம்மைத் தாண்டிப் போய்விட்டது” என்றான் கப்டன். 

அவன் இப்படிச் சொல்லி வாய் மூடுவதற்குள் சுக்கானை இயக்கிக்கொண்டிருந்த மாலுமி படகை அப்படியே நிறுத்திவிட்டு ஓடிவந்தான். 

“என்ன? ஏன் படகு நின்றுவிட்டது?” என்று கேட்டான் காப்டன். 

“பொழுது விடியும் வரையில் படகு இதே இடத்தில் இருக்கவேண்டியதுதான் காப்டன். இரண்டு பாறைகளுக்கு மத்தியில் படகு சிக்கிக்கொண்டிருக்கிறது. எந்தத் திசையில் படகைத் திருப்பினாலும் அபாயம். பொழுது விடிந்தபிறகு பாறைகளின் அமைப்பைக் கவனித்துக் கொண்டுதான் படகை மேற்கொண்டு செலுத்த வேண்டும்” என்று மாலுமி அறிவித்தான். 

அவ்வளவு நேரமும் படகுக்குள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தவர்கள் வெளியே வந்து கவனித்தார்கள். 

“அருகில் ஏதோ ஒரு தீவு இருக்கவேண்டும் போல் தோன்றுகிறது. அலைகள் மோதி எழுப்பும் சப்தத்தைக் கேட்டாயா? நடுக் கடலில் இதுமாதிரிச் சப்தம் கேட்பதில்லையே!” என்றான் காப்டன். 

“தீவு இருந்தாலும் இருக்கலாம், அல்லது கடலுக்கு மேல் நீட்டிக்கொண்டிருக்கும் பெரிய மலைத் தொடர்கள் இருந்தாலும் இருக்கலாம். பொழுது விடிந்தால் தான் சரியாகத் தெரியும் காப்டன். இரண்டு நீண்ட பாறைகளுக்கு மத்தியிலோ அல்லது இரண்டு மலைத் தொடர்களுக்கு மத்தியிலோ படகு நுழைந்திருக்கிறது. வெளிச்சம் வந்தபிறகு படகை இந்த இடத்தைவிட்டுக் கிளப்புவதுதான் நல்லது” என்றான் மாலுமி. 

செம்பவளத்தீவின் கரையோரங்களிலே கப்பல்களை உடைத்தெறியும் பாறைகள் அதிகமென்று சந்திரிகா எழுதியிருந்தபடியினால் மாலுமி சொல்லியதைக் கேட்ட தும் ஜோதிவர்மனின் இதயம் அதி வேகமாக அடித்துக் கொள்ள ஆரம்பித்தது. இயற்கையின் கோர விளையாட்டு களையெல்லாம் சமாளித்துக்கொண்டு செம்பவளத்தீவை வந்து அடைந்துவிட்டதாகவே அவன் மனதிற்குள் பனை செய்துகொண்டு புளகாங்கிதமடைந்தான். அன்றிரவு பாக்கி நேரத்தை அவன் உறங்காமலேயே கழித்தான், மற்றவர்கள் அயர்ந்து உறங்குகையில் ஜோதிவர் மனின் கண்கள் கடலையும் கடலுக்கு அப்பால் தொடு வானத்தையும் ஊடுருவிப் பார்த்துக்கொண்டேயிருந்தன. 

தன்னையும் அறியாமல் அவன் சற்று கண்ணயர்ந்த பொழுது கூட செம்பவளத்தீவு அவன் சிந்தனையைவிட்டு அகலவில்லை. செம்பவளத்தீவை வந்தடைந்துவிட்டோம் என்ற ஒரு உள்ளுணர்வு தூக்கத்திலும் அவனைப் பரவசப் படுத்திக்கொண்டிருந்தது. 

கிழக்கு வெளுக்க ஆரம்பித்த சமயம் முதல்முதலாக ஜோதிவர்மன்தான் கண்ணை விழித்து படகின் விளிம்புக்கு வந்து பார்த்தவன் “பெரியப்பா! பெரியப்பா! காப்டன்! காப்டன்! முனிசாமி! எல்லோரும் எழுந்திருங்கள்! ஓடி வாருங்கள்! அதோ! அதோ பாருங்கள்!” என்று உணர்ச்சி வசப்பட்டு கூச்சல் போட்டான். அவன் போட்ட சப்தத்தில் படகிலிருந்த அவ்வளவு பேர்களும் அதிர்ச்சியடைந்து துள்ளி எழுந்தார்கள். ஏதோ ஒரு பெரிய அபாயம் பட்டுவிட்டதென்று எண்ணி முனிசாமி வாய்விட்டு வென்று அலறவாரம்பித்துவிட்டான். பாலாஜியோ சட்டென்று படுக்கையைவிட்டு எழுந்தவன் ஒரு அடிகூடஎடுத்து வைக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து போய் சிலையாகச் சமைந்திருந்தான். 

”பெரியப்பா! ஐயோ சீக்கிரம் வாருங்களேன் பெரியப்பா! அதோ செம்பவளத் தீவு! அதோ யானை படுத்திருப்பதைப்போன்ற மலைச் சிகரம்! இந்தப் பக்கம் எருது படுத்திருப்பதைப்போன்ற சிகரம் இதுதான் செம்பவளத் தீவு காப்டன்! கடைசியில் குறித்த இடத்துக்கு வந்துவிட்டோம் காப்டன்!” என்று வாய்விட்டுக் கத்தினான் ஜோதிவர்மன். இந்தியாவைக் கண்டுபிடிப்பதற்கு வந்த வாஸ்கோடிகாமா இந்தியக் கரையைக் கண்டவுடன் இப்படித்தான் கூப்பாடுபோட்டிருப்பானோ? திக்குத் திசை தெரியாமல் கடலில் தவித்த கொலம்பஸ் அமெரிக்க கடற் கரையைக் கண்டவுடன் இப்படித்தான் கூப்பாடுபோட் டிருப்பானோ? 

“செம்பவளத்தீவு” என்று அவன் சொல்லியதைக் கேட்டவுடன் செயலற்றுப்போயிருந்த பாலாஜியும் “அப்படியா? உண்மையாகவா?” என்று கேட்டுக்கொண்டே பரபரப்புடன் படகின் விளிம்புக்கு ஓடிவந்தான். 

அத்தியாயம்-11

ஜோதிவர்மனுக்குப் பரபரப்பில் ஒன்றுமே பேசத் தோன்றவில்லை. படகு இருந்த இடத்திலிருந்து சிறிது தூரத்துக்கு அப்பால் தெரிந்த இரண்டு மலைச் சிகரங்களை மற்றவர்களுக்கு அவன் காட்டிவிட்டு அந்தச் சிகரத்தின் மீது வைத்த விழியை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். 

சந்திரிகா விட்டுச் சென்ற ஏட்டுச் சுவடிகளில் குறிப் பிடப்பட்ட அடையாளத்தை அனுசரித்து அவ்விரு சிகரங்களில் ஒன்று பெரிய யானை கடலில் படுத்திருப்பதைப் போல தூரப்பார்வைக்குக் காட்சியளித்தது. மற்றொன்று ஒரு ரிஷபம் படுத்திருப்பதைப் போலத் தோன்றியது. செம்பவளத்தீவுக்கு இவைதான் சரியான அடையாளங்கள் என்று சந்திரிகாவும், விஜயவர்மனும் எழுதியிருந்தபடி யினால் செம்பவளத்தீவை நெருங்கிவிட்டோமென்ற உணர்ச்சி ஜோதிவர்மனை விசேஷ பரபரப்படையச் செய்திருந்ததில் ஆச்சரியமில்லையல்லவா? 

கடலில் பார்த்த காட்சி அவனைப் போலவே மற்றவர்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்திருந்தது, ஏதோ ஒரு கட்டுக் கதையை நம்பிக் கொண்டு கடற்பிரயாணத்தைத் தொடங்கி உயிரைப் பணயம் வைத்து விட்டதாக மனம், நொந்து கொண்டிருந்தவர்களுக்கு இப்பொழுது தாங்கள் கண்ணெதிரில் காண்பது கனவா அல்லது நனவா என்பதே சந்தேகமாயிருந்தது. 

காப்டன் முதல் முதலாகப் பேசவாரம்பித்து “இது மாதிரிச் சிகரங்களை இதற்கு முன் நான் பார்த்ததேயில்லை. இந்தப் பக்கங்களுக்கு இதற்கு முன் யாரும் கப்பலில் வந்து பார்த்ததாயும் நான் கேள்விப்பட்டதில்லை. ஏட்டுச் சுவடிகள் சொல்லும் அடையாளத்தின்படி அதோ தெரியும் அந்த இடம்தான் செம்பவளத் தீவாக இருக்க வேண்டும். சிகரங்களுக்கு மறுபுறம் நிலப்பரப்பாயிருக்குமென்று நம்புகிறேன்” என்றான் அவன். 

“அதுதான் செம்பவளத்தீவு, சந்தேகமேயில்லை, கட வுள் அருளால் நாம் சரியான இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டோம்” என்று சொல்லிய ஜோதிவர்மன் பாலாஜியின் பக்கம் திரும்பி, “சுவடியில் இருப்பது கட்டுக் கதைகள் என்றீர்களே! இப்பொழுது என்ன சொல்லுகிறீர்கள் பெரியப்பா! சொர்ப்பனலோகம் போலத் தோன்றிய செம்பவளத்தீவு அதோ நம் கண்ணெதிரில் நிற்கிறது. இப்பொழுதாவது ஏட்டுச் சுவடிகளில் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படுகிறதா சொல்லுங்கள் பெரியப்பா!” என்றான். 

“செம்பவளத்தீவு  என்று ஒரு இடமோ அல்லது அங்கு தேவதேவியென்ற ஒரு அரசியோ இருந்தது பொய்யாயிருக்கு மென்று நான் சொல்லவில்லையே ஜோதி! சந்திரிகா எழுதி வைத்திருக்கும் வரலாறு உண்மையாகவே இருக்கலாம். ஆனால், தேவதேவி கல்லுப் பிள்ளையார் மாதிரி இன்னும் இருப்பாளென்று நம்புவது முட்டாள்தன மென்று சொன்னேன், இப்பொழுதும் அதையே சொல்லுகிறேன். செம்பவளத்தீவை நாம் கண்டுபிடித்துவிட்டோ மென்றால் அதிலிருந்து தேவதேவி அங்கு சிரஞ்சீவியாக இருக்க வேண்டுமென்பதும் ருசுவாகியதாகி விடமாட்டாது!” என்றான் பாலாஜி. 

அவர்கள் பார்த்த சிகரங்கள் படகு இருந்த இடத்தில் இருந்து சுமார் இரண்டு மைல் தூரத்துக்கப்பால் இருக்க வேண்டும் போலத் தோன்றியது. அதன் சுற்றுப்புறங்கள் மலைப்பாங்காயிருக்க வேண்டுமென்பதையும் அவர்கள் சுலபமாக ஊகித்துக் கொள்ள முடிந்தது. 

“அந்தத் தீவின் அருகில் தமது படகு போக முடியாது மறைந்திருக்கும் பாறைகளில் படகு மோதினால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதையைப்போல முடிந்து விடும். இரண்டு மைல்களுக்கு அப்பாலிருந்தே கடலில் பாறைகள் தோன்ற ஆரம்பித்து விட்டன. ஆகையால் போகப் போகக் கடலுள் பாறைகள் அதிகமாகவே இருக்கும். ஆகையால் எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. இயந்திரப் படகு இங்கேயே இருக்கட்டும். இரண்டு பெரிய பாறைகளுக்கு மத்தியில் இயற்கையாக ஏற்பட்ட ஒரு துறைமுகத்துக்குள் இருப்பதைப்போல நமது படகு இங்கேயே பாதுகாப்பாயிருக்கும். மாலுமிகளும் படகிலேயே இருக்கட்டும். ஒரு சிறிய தள்ளுப்படகை எடுத்துக்கொண்டு நாம் மட்டும் செம்பவளத்தீவுக்குப் போய்வருவோம்” என்று காப்டன் ஒரு யோசனை சொன்னான். 

அதை மற்றவர்களும் ஆமோதித்தார்கள். ஆபத்துச் சமயங்களில் உதவுவதற்காக இயந்திரப் படகுகளின் துடுப்புகளைக் கொண்டு இயங்கும் சில படகுகளும் இருந்தன. அதில் ஒன்றை எடுத்துக் கொண்டு காப்டன் வில்லியம், ஜோதிவர்மன், பாலாஜி, முனிசாமி ஆகிய நால்வர் மாத் திரம் செம்பவளத் தீவுக்குப் போய் வருவதென்று ஏற் பாடாயிற்று. இரண்டு வாரங்களுக்குள் அவர்கள் தீவில் இருந்து திரும்பி வந்து சேராவிட்டால் மாலுமிகள் இருவர் இன்னொரு படகில் தீவுக்கு வந்து பார்ப்பதென்று அவர்கள் முடிவு செய்தார்கள். இந்த ஏற்பாட்டின்படி காலைப் போஜனம் முடிந்தவுடன் ஜோதிவர்மனும் மற்ற மூவரும் ஒரு தள்ளுப் படகில் இறங்கி செம்பவளத்தீவு இருப்பதாக எண்ணிய இடத்தை நோக்கிப் படகை மெதுவாகச் செலுத்திக் கொண்டு போனார்கள். 

நெருங்க நெருங்கத் தூரத்தில் சிறிதாகத் தெரிந்த இரு சிகரங்களும் வானத்தை முட்டிக்கொண்டு பெரிதாக வளர்ந்து கொண்டே வந்தன. தீவை நெருங்கும் சமயத் தில் படகை அவர்கள் மிக மிக எச்சரிக்கையோடு இயக்க வேண்டியதாயிருந்தது. நீர் மட்டத்துக்கு மேலே செங்குத் தான பாறைகள் பல இடங்களிலும் நீட்டிக் கொண்டு நின் றன. அவைகளுக்கு இடையில் படகை வளைத்து வளைத்து பாறையின் மீது மோதாமல் ஜாக்கிரதையாக அவர்கள் ஓட்டவேண்டியிருந்தது. 

சிகரங்களை நெருங்கியதும் இரண்டு சிகரங்களுக்கும் மத் தியிலே கடல் சுழியைப்போல குறுகலான கடல் உள் நோக்கிச் செல்வது அவர்களுக்குத் தெரிந்தது. இது கடல் ஏரியா அல்லது தீவிலிருக்கும் நதியின் சங்கமமா என் பதை அவர்களால் நிச்சயமாகத் தீர்மானிக்க முடியாம லிருந்தது. சிகரத்தின் அருகில் பறந்த பட்சிகளைப் பார்த்த மாத்திரத்தில் அந்த இடம் ஒரு தீவுதானே தவிர நிலப் பரப்பு இல்லாத மலைப்பிரதேசமல்ல என்பதை அவர்கள் நிச்சயமாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. நிலமும் மரம் செடி கொடிகளும் இல்லாத இடங்களில் பட்சி இனங்கள் உயிர்வாழ முடியாதாகையினால் சிகரங்களுக்குப் பின்னால் நிலம் இருக்கத்தான் வேண்டும் என்பதைத் தீர்மானித் துக் கொண்ட பின்னர் மலைச் சிகரங்களைச் சுற்றிக் கொண்டு மறுபுறமாகத் தீவை அடைவதா அல்லது இரண்டு சிகரங்களுக்கும் இடையிலுள்ள கடல் வழியின் வழியாகவே படகைச் செலுத்திக் கொண்டு போவதா? என்பதைப் பற்றி அவர்கள் சற்று நேரம் யோசித்தார்கள். கடைசியில் கடல் சுழியின் வழியாகப் போவது தான் குறுக்குவழி என்று தீர்மானித்துக் கொண்டு அவர்கள் பட கைச் செலுத்தினர். 

இருபுறமும் வானளாவிய மலைகள் சூழ்ந்த கடல் சுழி யில் படகு கொஞ்சத் தூரம் சென்றவுடன் பட்டப் பகலிலே பாதை இருண்டுபோய் விட்டது. இரண்டு தனிச் சிகரங்களைப்போல வெளிப்பார்வைக்குத் தென்பட்ட இந்த இடம் உண்மையில் ஒரு பெரிய மலைக்குகை என்பதையும் குகை வழியாகக் கடலில் போய்ச் சேரும் ஒரு ஆற்றல் எங்களுடைய படகு எதிர்நோக்கிப் போகிறதென்பதை யும் வெகு தூரம்வரை உட்பிரவேசத்தை நோக்கிச் சென்ற பிறகுதான் அவர்களால் உணர்ந்து கொள்ள முடிந்தது. 

“கிட்டத்தட்ட குகையின் முடிவுக்கு வந்துவிட்டோ மென்று நினைக்கிறேன். இருள் விலகுவதையும், ஆற்றின் வேகம் குறைவதையும் கவனித்தாயா வில்லியம்” என்றான் ஜோதிவர்மன். 

“ஆமாம் ஜோதி! இன்னும் கொஞ்சத் தூரம் போனால் தீவின் உட்பகுதியை நாம் காணலாம்” என்று ஆமோதித்தான் காப்டன், 

மிகவும் களைப்படைந்திருந்த அவ்விருவரையும் சிறிது ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டுப் பாலாஜியும் முனிசாமியும் துடுப்புகளைப் பிடித்தார்கள். மேலும் பத்து நிமிட நேரத்துக்குப் பின்னர் அவர்கள் குகைக்கு வெளியில் வெற்றிகரமாக வந்து விட்டார்கள். அவர்களை அவ்வளவு நேரமும் சூழ்ந்து கொண்டிருந்த இருள் முற்றாக நீங்கி விட்டதென் றாலும் நல்ல வெளிச்சத்தையோ அல்லது நிலத்தையோ அவர்கள் காண முடியவில்லை. மலைக் குகைக்கு வெளியே அடர்ந்த காட்டுப் பிரதேசத்தின் வழியாக அவர்களுடைய படகு அப்பொழுது போய்க் கொண்டிருந்தது. 

ஆற்றுவெள்ளத்தின் வேகம் இப்பொழுது வெகுவாகக் குறைந்துவிட்டபடியினால் படகைத் தள்ளுவதும் அவர்களுக்குக் கடினமாயில்லை. ஆற்றில் வளைந்து தொங்கிய மரக்கிளைகளில் சிக்கிக் கொண்டு விடாமல் கரையிலிருந்து பத்துப் பதினைந்து கஜ தூரம் தள்ளியே படகு மெதுவாகப் போய்க் கொண்டிருந்தது. மேலும் ஒரு மைல் தூரம் சென்ற பிறகு காட்டுக்கு மத்தியில் மரங்கள் அதிகமில் லாத ஒரு இடத்தை அவர்கள் கண்டார்கள். இந்த இடத்தை நெருங்கிய பொழுது அங்கு கற்களினால் ஒழுங்காகச் செப்பனிட்டுக் கட்டிய ஒரு படித்துறையைக் கண்டதும் அவர்கள் அடைந்த ஆச்சரியத்துக்கு அளவேயில்லை. 

ஜோதிவர்மன் படகிலிருந்து படித்துறையில் ஒரு மூலையில் இறங்கியதும் படித்துறையினுடைய கைப்பிடிச் சுவர் ஒன்றைப் பார்த்துவிட்டு அப்படியே ஸ்தம்பித்துப் போய்விட்டார். 

அவனைப் பின்தொடர்ந்து இறங்கிய காப்டன் வில்லியம் ஜோதிவர்மன் நின்ற நிலையைப் பார்த்து விட்டு, “என்ன ஜோதி! ஏன் ஒரு மாதிரிப் பார்க்கிறாய்?” என்று கேட்டான். 

“என்ன ஜோதி ஏன் இப்படிச் சமைந்துபோய் நிற்கிறாய்? காட்டில் ஏதாவது கண்டு பயந்து கொண்டு விட்டாயா?” என்று கவலையுடன் விசாரித்துக் கொண்டே சுற்று முற்றிலும் பார்த்தார். 

“கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லைப் பெரியப்பா. இதோ இதைப் பாருங்கள்!” என்று சொல்லி ஜோதிவர்மன் வலது கையினால் மூடிக்கொண்டிருந்த கைப்பிடிச் சுவற்றின் ஒரு பகுதியை பாலாஜிக்கும், வில்லியத்துக்கும் சுட்டிக் காட்டினான் அந்தச் சுவற்றின்மேல் சதுரமான ஒரு பலகை பதிக்கப்பட்டு இருந்தது. அந்தப் பலகையில் ஜோதிவர்மன் அணிந்திருந்த மோதிரத்தைப் போன்ற சர்ப்பச் சின்னம் அழகாகவும் தெளிவாகவும் செதுக்கப்பட்டிருந்தது. 

ஜோதிவர்மன் காட்டிய அந்தச் சர்ப்பச் சின்னத்தைப் பார்த்தவுடன் அவனைப் போலவே பாலாஜியும் காப்டன் வில்லியமும் ஆச்சரிய மேலீட்டால் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு பரபரப்படைந்தார் களென்றே கூறவேண்டும். இந்த அதிர்ச்சியில் படகிலிருந்து கடைசியாக இறங்கிய முனிசாமி படகை இழுத்துக்கட்ட மறந்துவிட்டதால் படகு ஆற்றோடு போய்விட்டது. திரும்பும் போது கட்டை மரத்தைக் கட்டிக் கொண்டு கடலுக்குப் போய்விடலாமென்று காப்டன் யோசனை சொல்லியதால் படகு பறிபோனதைப் பற்றி யாரும் அதிகமாகக் கவலைப்படவில்லை. 

பிறகு படித்துறையின் கைப்பிடிச் சுவற்றில் பார்த்த சர்ப்பச் சின்னத்தை ஜோதிவர்மன் சுட்டிக்காட்டி “இந்தச் சின்னம் எதைக் குறிப்பதாக நினைக்கிறாய் வில்லியம்” என்று கேட்டான். 

“நாம் சரியான தீவுக்கு வந்திருக்கிறோமென்பதைப் பற்றி இனிச் சந்தேகிக்க வேண்டியதில்லை. இதுதான் செம்பவளத்தீவு என்று ஏட்டுச் சுவடிகளில் குறிப்பிட்டிருக்கும் தீவாக இருக்க வேண்டும்! இதில் ஒரு ஆச்சரியம் என்ன வென்றால் இரண்டாயிரத்து ஐந்நூறுஆண்டுகளுக்கு முன்னால் இத்தீவின் ராணியாயிருந்த தேவதேவி எந்த முத்திரைச் சின்னத்தை உபயோகித்தாளோ அதே இலச்சினை இன்னமும் நடைமுறையில் இருந்து வருதுதான்!” என்றான் வில்லியம். 

“அந்த ராணியின் சந்ததியார்களே இப்பொழுதும் இத்தீவை ஆட்சி புரிந்துவரக் கூடுமென்று தோன்றுகிறது. அரச சந்ததி மாறியிருந்தால் முத்திரைச் சின்னமும் மாறி யிருக்கலாம்” என்றான் பாலாஜி. 

“ஆராய்ச்சிகள் அப்புறம் ஆகட்டும். முதலில் வயிற்றுப்பாட்டைப் பார்ப்போம். பசி குடலைப் பிடுங்குகிறது” என்று சொல்லிக் கொண்டு கிளம்பினான் காப்டன் வில்லியம். 

படித்துறையைவிட்டுப் புறப்படுகையில் முனிசாமி ஒரு நல்ல யோசனை கூறினான். 

“படகுதான் போய்விட்டது. ஒரு சமயம் கடலில் நாம் விட்டு வந்த மாலுமிகள் தேடிக் கொண்டு வந்தால் இந்தத் துறையில் நாம் இறங்கி இருப்பதற்கு அடையாளமாக எதையாவது இங்குவிட்டுச் செல்வது நல்லதில்லையா?” என்றான் அவன். 

“ஆமாம்! ஒருவிதத்தில் அதுவும் நல்லதுதான்” என்று மற்றவர்களும் ஆமோதித்தார்கள். ஆனால், தேடிக் கொண்டு வரும் மாலுமிகளுக்குத் தெரியும்படி துறையில் எதைவிட்டுச் செல்வதென்பது அவர்களுக்குப் புரியவில்லை. கடைசியில் உலர்ந்து கிடந்த மரத்துண்டை காப்டன் வில்லியம் எடுத்து அதைக் கொளுத்தினான். நன்றாக எரியும் பொழுது அதைத் தண்ணீரில் அமுக்கியவுடன் அந்தக் கட்டை ஒரு கட்டையாக மாறியது. கரித்துண்டின் உதவியைக் கொண்டு படித்துறையின் கையைப் பிடித்து சுவற்றில் தாங்கள் அங்கு வந்து இறங்கியதையும் படகு ஆற்றோடு போய்விட்டதையும் தீவுக்குள் தாங்கள் போவதாயும் வில்லியம் எழுதி வைத்தான். சிலாசாஸனம் போல அவன் இப்படி எழுதிய பின்னர் அவர்கள் கிளம்பினார்கள். 

அருகில் எங்காவது வீடுகள் இருக்குமென்ற நம்பிக்கையோடு அவர்கள் படித்துறையிலிருந்து செப்பனிட்ட ஒற்றை யடிப்பாதை வழியாகச் சென்றார்கள். காட்டு வழியாகச் சென்ற அந்தப்பாதை கால்மைல் தூரத்துக்கப்பால் ஒரு விசாலமான சம வெளியில் போய் முடிந்தது. அந்த இடத் தில் இருந்து அவர்கள் பார்த்தபொழுது கண்ணுக்கு எட் டிய தூரம்வரை ஒரே திறந்த வெளியாயிருந்ததே தவிர அருகில் எங்கும் ஜனநடமாட்டம் இருப்பதற்கான அறி குறியையே காணோம். அந்தப் பிரதேசம் புற்தரையாகக் கூட இல்லாமல் கட்டாந் தரையாகக் கிடந்தது. 

“என்ன ஆச்சரியம் பார்த்தாயா? வில்லியம்! படித் துறையையும் செப்பனிட்ட பாதையையும் பார்த்தால் அருகில் ஜனங்கள் ஏராளமாக வசிக்க வேண்டும்போல் இருக்கிறது. ஆனால், கண்ணுக்கு எட்டிய தூரம்வரை ஒரே கட்டாந் தரையாகக் காட்சியளிக்கிறதேயன்றி மனித வாடையை காணோமே? சந்திரிகாவின் கடிதத்தைப் போல இந்தத் தீவின் விவகாரமும் ஒரே மூடுமந்திரமாக அல்லவா இருக்கிறது?” என்றான் ஜோதிவர்மன். 

“வயிற்றுக்குள் ஏதாவது போகும்வரையில் என் மூளை எதைப் பற்றியும் வேலை செய்யாது. சாப்பிட ஏதாவது கிடைக்குமா என்பதை முதலில் பார்ப்போம் வா” என்று சொல்லிய காப்டன் வில்லியம் கொஞ்சத் தூரத்துக்கு அப்பால் பலா மரத்திலிருந்து பலாப் பழங்கள் தொங்குவதைப்பார்த்துவிட்டு, “அதோ பழங்கள், அவைகளை ஒரு கை பார்க்கலாம் வாருங்கள்!” என்று மற்றவர்களையும் அழைத்தான். 

மரத்தில் இருந்து இரண்டு பலாப்பழங்களை வில்லியம் பறித்து உடைக்க, அதற்கிடையில் முனிசாமி ஒரு தென்னை மரத்தில் ஏறி ஏழெட்டு இளநீர்களைப் பறித்துப் போட் டான். மரத்தில் இருந்து இறங்கியதும் “மரத்தின் மேல் இருந்து பார்த்ததில் கண்ணுக்கு எட்டிய தூரம்வரையில் வீடுகள் இருப்பதாகவே தெரியவில்லை. ஜனநடமாட்டமிருக்கும் அறிகுறிகளையும் காணோம்!” என்று அவன் அறிவித்தான். 

எப்படி இருந்தாலும் பொழுது சாய்வதற்குள் எவ்வளவு தூரம் சாத்தியமோ அவ்வளவு தூரம் தீவுக்குப் போய் பார்ப்பதென்று அவர்கள் தீர்மானித்துக் கொண்டு பலாப்பழத்தைச் சாப்பிட்டு இளநீரையும் குடித்துவிட்டுக் கிளம்பினார்கள். 

பிற்பகல் இரண்டு மணியிருக்கும், நல்ல வெயிலடித்திருந்ததால் அக் கட்டாந்தரைப் பிரதேசத்தில் அவர்கள் அடியெடுத்து வைத்திருக்கவே முடியாது. மப்பும் மந்தாரமு மாக இருந்தபடியினால் தான் உஷ்ணம் தெரியாமல் அவர்கள் கால்நடையாகச் செல்ல முடிந்தது. எதிரில் வெகு தூரத்துக்கு அப்பால் தெரிந்த ஒரு மலையை இலட்சியமாக வைத்துக் கொண்டு அவர்கள் நடந்தார்கள். நடக்க நடக்க அந்தச் சமவெளிப் பிரதேசம் முடிவில்லாததைப் போலப் போய்க் கொண்டேயிருந்தது. 

அந்தி மயக்கும் நேரத்தில் முனிசாமி வெகுதூரத்துக்கு அப்பால் எதையோ சுட்டிக் காட்டி “எஜமான்! அதோ அங்கே தெரிவது ஒரு வீடுபோல் இல்லையா?” என்றான். 

அவன் சுட்டிக் காட்டிய திசையில் மற்றவர்களும் பார்த்தார்கள். முனிசாமி சொல்லியதைப்போல வெகு தூரத்துக்கப்பால் கல் கட்டிடம் ஒன்று தெரிவதைப்போல் இருந்தது. 

“ஆமாம்! ஒரு மண்டபம் போலிருக்கிறது. இருட்டுவதற்குள் நாம் அங்கு போய்விட்டால் இரவைக் கழிக்கச் சௌகர்யமாயிருக்கும். திறந்த வெளியில் படுத்திருப்போ மானால் பொழுது விடிவதற்குள் விறைத்துப் போய்விடுவோம்!” என்றான். பாலாஜி சொல்லவே எல்லோரும் சற்று வேகமாக நடக்க ஆரம்பித்தார்கள். 

மண்டபத்தை நோக்கி அவர்கள் எவ்வளவு வேகமாக நடந்தார்களோ அவ்வளவு வேகமாக இருட்டும் அவர்களை விரட்டிக் கொண்டு வந்தது. இயற்கையின் முன்னிலையில் மனிதன் எம்மாத்திரமென்பதை அறிவுறுத்துவதைப் போல அந்த ஓட்டப்பந்தயத்தில் இருட்டே வெற்றி பெற்றது. எதிரிலிருந்த மண்டபம் இருளில் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்தது. ஆயினும் அதற்காகக் கவலைப்படாமல் மண்டபத்தின் திசையை நோக்கி அவர்கள் ஓட்டமும் நடையுமாக விரைந்து செல்லுகையில் எதிரே தென்பட்ட ஒரு காட்சி சட்டென்று அவர்களைத் திகைத்துப் போய் நிற்கச் செய்தது. 

அதிர்ச்சியும் பரபரப்பும் மிகுந்த தொனியில் ‘”வில்லியம்! அதோ அந்த மண்டபத்தில் தீவட்டி வெளிச்சம் தெரிகிறது பார்த்தாயா? நிச்சயம் அங்கு மனிதர்கள் இருக்கிறார்கள். நாம் இவ்வளவு கஷ்டப்பட்டதும் இறைவன் அருளால் வீணாகவில்லை” என்றான். 

ஆம்! அவன் சொல்லியதைப் போலவே இருட்டில் மறைந்து போயிருந்த அந்த மண்டபத்தின் வாசலில் உயரமான ஒரு கம்பத்தின் மீது தீவட்டியின் வெளிச்சம் தெளிவாக அவர்களுக்குத் தெரிந்தது. 

“அந்த மனிதர்கள் எப்படிப்பட்டவர்களாயிருப்பார்களோ எசமான்!” என்றான் முனிசாமி. நரமாமிசம் தின்னும் காட்டுமிராண்டி ஜனங்களாயிருந்தால் ஆபத்தில்லையா என்று கேட்காமல் கேட்பதைப் போலிருந்தது முனிசாமியின் இந்தக் கேள்வி. 

“எப்படிப்பட்டவர்களாயிருந்தால் தான் என்ன? என் கையில் துப்பாக்கி இருக்கிறது! தவிர இந்தத்தீவு ஜனங்கள் நீ நினைப்பதைப்போல மனித வதை செய்யும் காட்டு மிராண்டிகளாயிருப்பார்களென்று எனக்குத் தோன்ற வில்லை” என்று சொல்லிக் கொண்டு ஜோதிவர்மன் முன்னோக்கி நடக்கவும் மற்றவர்களும் அவனைப் பின்தொடர்ந்து சென்றார்கள். ஜோதிவர்மன் இடுப்பில் தொங்கிய துப்பாக்கியை ஆயத்தமாகக் கையில் எடுத்துக் கொண்டான். 

சிறிது நேரத்துக்கெல்லாம் அவர்கள் அந்த மண்டபத்தின் வாசலுக்கு வந்து விட்டார்கள். பிரகாசமான தீவட்டியின் வெளிச்சத்தில் மண்டபத்தின் அமைப்பை அவர்கள் ஓரளவுக்குப் பார்த்துத் தெரிந்து கொள்ள முடிந்தது. உறுதியான கருங்கல்லினால் கட்டியிருந்த அந்தக் கட்டிடத் தில் சில பகுதிகள் இடிந்து விழுந்து கிடந்தன. கூரையில்லாமல் சில இடங்களில் கருங்கல் தூண்கள் மட்டும் தனி யாக நின்று கொண்டிருந்தன. இது அக்கட்டிடத்தின் தொன்மையைப் பிரதிபலித்தது. அதோடு புழுதி படிந்திருந்த படிகளும் தாழ்வாரமும் அங்கு அதிக ஜனநாட்டம் இருக்க முடியாதென்பதை எடுத்துக் காட்டுவதாயிருந்தன. 

“யார் உள்ளே!” என்று எல்லோரும் சேர்ந்து உரக்கச் சப்தம் போட்டார்கள். ஆனால், அதற்குப் பதில் ஏதுமில்லை. 

“மண்டபத்தில் வேறு யாருமில்லாவிட்டால் தீவட்டியைப் பற்ற வைத்த மனிதனாவது நிச்சயம் இருக்கத்தான் வேண்டும்! ஆள் இல்லாமல் தானாகத் தீவட்டி பற்றிக் கொண்டு எரிய முடியாது. நாம் இவ்வளவு கூப்பாடு போட்டும் அந்த மனிதன் வெளியே வராததன் மர்மம் என்ன?” என்றான் காப்டன். 

“இருட்டு நேரத்தில் திடீரென்று நான்கைந்து பேர்களாகச் சேர்ந்து சப்தம் போடுவதைக் கேட்டுப் பயந்து போய்விட்டானோ என்னவோ? அவன் பதில் கொடுக்காமல் இருப்பதைப் பார்த்தால் இந்த மண்டபத்தில் அவன் மட்டும் தனியாயிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. எதற்கும் உள்ளே போய்த்தான் பார்ப்போம்!” என்றான் ஜோதிவர்மன். 

அந்த மண்டபம் நிலமட்டத்திலிருந்து சுமார் 15 அடி உயரத்தில் கட்டப்பட்டிருந்தது. மேலே ஏறிப்போக அகலமான படிகள் இருந்தன. அதன் வழியாக ஜோதி வர்மனும் மற்றவர்களும் ஏறி மண்டபத்தின் முன்புறத் தாழ்வாரத்தை அடைந்ததும் உள்ளே வெகு தூரத்துக்கப்பால் ஒரு சிறிய தீவட்டி எரிவதை அவர்கள் கண்டார்கள். தூரப்பார்வைக்கு அந்த இடம் ஒரு கோயில் கர்ப்பக்கிரகம் போலிருந்தது. 

“இது கோயில் மாதிரியல்லவா இருக்கிறது?” என்றான் காப்டன். 

“ஆமாம்! தீவின் எல்லைக் கோவிலோ என்னமோ? அப்படியானால் பூசாரி கோவிலுக்குள்ளே தானிருப்பான்! தடுக்கி விழுந்துவிடாமல் கவனமாகப் பார்த்து நடந்து வாருங்கள்!” என்று சொல்லிவிட்டு இருளடர்ந்திருந்த அம் மண்டபத்திற்குள் ஜோதிவர்மன் தட்டுத் தடுமாறிக் கொண்டு நடந்தான். ஒருவர் தோள்களை மற்றொருவர் பிடித்துக் கொண்டு மற்றவர்களும் உள்ளே பிரவேசித்தார்கள். 

கொஞ்சத்தூரம் உள்ளே சென்றதும் பலவருடகாலமாக அந்த இடத்தை யாரும் கூட்டிச் சுத்தம் செய்திருக்க மாட்டார்களென்பதற்கு அடையாளமாகப் புழுதியின் நாற்றம் மூக்கைத் துளைத்தது. நடக்கும் பொழுதே குப்பையும் கூளமும் காலில் மிதிபட்டன. தூசி கிளம்பி மூக்கில புகுந்து அவர்களைத் திணறடித்தது. கைக்குட்டையினால் மூக்கை மூடிக் கொண்டு அவர்கள் நடந்தார்கள். 

“பாழும் மண்டபம்போல் அல்லவா இருக்கிறது. பாழும் மண்டபங்களில் பேய் பிசாசுகளிருக்குமென்பார்களே!” என்றான் முனிசாமி. அவன் இப்படிச் சொல்லியது தான் தாமதம் அவர்களுடைய தலைக்குமேலே ‘கிரீச்’ என்று கேட்ட ஒரு பயங்கரமான சப்தம் மண்டபத்தில் எதிரொலி யைக் கிளப்பிச் சுற்றிச் சுழன்று வந்து அவர்கள் ரத்தத்தைச் சில்லிட்டு உறைந்துபோகச் செய்தது. பீதியில் நாவு குழற எஜமான் என்று கூச்சலிட்டுக் கொண்டே பக்கத்திலிருந்த பாலாஜியை இறுக்கிப் பிடித்துக் கொண்டான் 

முனிசாமி. முன்னால் சென்ற ஜோதிவர்மனும் காப்டன் வில்லியமும் கூட ஒரு கணம் அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டார்கள், 

”ஜோதி! எங்கே இருக்கிறாய்!” என்று குரல் கொடுத் துக் கேட்டான் பாலாஜி. ஒருவர் முகம் மற்றவர்களுக்குத் தெரியாதபடி இருள் அப்படி மண்டிக் கிடந்தது. 

“பக்கத்தில் தானிருக்கிறேன் பெரியப்பா. அந்தச் சப்தத்தைக் கேட்டுப் பயந்து விட்டீர்களா? ஆந்தை கத்துகிறது பெரியப்பா! வேறொன்றுமிலலையே!” என்று சமாதானம் சொன்னான் ஜோதிவர்மன். 

“ஆமாம்! அது ஆந்தையின் கூக்குரல்தான். இருட்டில் முனிசாமியின் பேச்சுக் குரலைக் கேட்டதும் தனது எல்லைக்குள் ஆபத்து வந்துவிட்டதாக எண்ணி அலறுகிறது!” என்றான் வில்லியம். 

ஜோதிவர்மனும் வில்லியமும் தொடர்ந்து உள்ளே செல்ல மற்றவர்களும் மனதைத் திடப்படுத்திக் கொண்டு பின்னால் போனார்கள். மறுபடி இரண்டு தடவை அதே போல ஆந்தை கத்திய பொழுதும் அவர்களுக்குச் சற்றுப் பயமாயிருந்ததென்றாலும் முதல் தடவையைப்போல அவர்கள் பரபரப்பும் அதிர்ச்சியும் அடைந்துவிடவில்லை ஆந்தை குரல் கொடுத்ததைக் கேட்டு உள்ளேயிருந்த மனிதன் உஷாராயிருக்க வேண்டும். லேசாக எரிந்து கொண்டிருந்த விளக்கின் பக்கத்தில் ஒரு பிரகாசமான தீவட்டி இப்பொழுது தென்பட்டது. அதை ஒரு மனிதன் பிடித்துக் கொண்டு நிற்பதும் இப்பொழுது தெளிவாகத் தெரிந்தது. ஜோதிவர்மன் துப்பாக்கியைச் சற்று உறுதியாகப் பிடித்துக் கொண்டு தீவட்டியை நோக்கி வேகமாகச் சென்றான். 

அருகில் சென்றதும் தீவட்டியுடன் நின்ற மனிதன் உயிருள்ள மனிதனா அல்லது கருங்கல் சிலையா என்பதைச் சுலபமாகத் தெரிந்து கொள்ள முடியாமலிருந்தது. அவன் பக்கத்தில் ஒரு ஆள் உயரத்துக்கு ஒரு பெரிய சிலையிருந்தது. அதன் கழுத்தில் மாலையும் தலையில் கிரீடமும் அணியப் பட்டிருந்தன. அதன் அமைப்பைப் பார்த்த பொழுது அது ஒரு பெண் தெய்வத்தின் சிலையாயிருக்க வேண்டும் என்று தோன்றியது. சிலையின் பாதங்களில் புதிதாகப் பறித்த புஷ்பங்கள் கிடந்தன. பக்கத்தில் ஒரு தட்டிலே வாழைப்பழமும் பிலாச்சுளைகளும் உரித்து நைவேத்தியம் செய்யத் தயாராக வைக்கப்பட்டிருந்தன. 

இவைகளைப் பார்த்ததும் சற்று நேரத்துக்கு முன்புவரை சிலையின் பக்கத்தில் இன்னொரு சிலையைப்போல தீவட்டியுடன் நின்ற மனிதன் பூஜை செய்து கொண்டிருக்க வேண்டுமென்று ஜோதிவர்மன் தீர்மானித்தான். 

“ஐயா பெரியவரே! இந்த இடம் ஒரு கோயிலா? நீங்கள் தான் இக்கோயிலின் பூசாரியாரோ?” என்று ஜோதிவர்மன் மரியாதையாக விசாரித்தான். சிலை போலிருந்த அம்மனிதன் இதற்கு உடன் பதில் சொல்லவில்லை. நான் உங்களெல்லோரையும்போல மனிதன் தான். கற்சிலை இல்லை என்பதைக் காட்டிக் கொள்வதற்குக் கண்களை மட்டும் உருட்டி எதிரில் நிற்பவர்களைப் பார்த்தான். தீவட்டியின் வெளிச்சத்தில் அவன் அப்படிப் பார்த்தது கொஞ்சம் இளகிய மனம் படைத்தவர்களை உளறியடித்துக் கொண்டு ஓடச் செய்திருக்கும். 

அந்த மனிதன் வாலிபனாகவோ அல்லது வயோதிபனாகவோ இரண்டுமில்லாமல் நடுத்தர வயதுடையவனாக இருந்தான்! ஆயினும் கத்தியைக் கண்டிராத அவனுடைய தாடியும் மீசையும் சுருண்டு தோள்களின்மீது விழுந்திருந்த கேசமும் அவனுடைய வயதைக் கொஞ்சம் அதிகரித்துக் காட்டின. அவன் பதில் பேசாமல் கண்களை உருட்டிப் பார்ப்பதைக் கண்டதும் அவனுக்குத் தங்களுடைய பாஷை தெரியாமலிருக்குமோ என்று ஜோதிவர்மன் சந்தேகித்தான். 

“நான் கேட்பது உங்கள் காதில் விழவில்லையா பெரிய வரே! நாங்கள் வெளிநாட்டவர்கள். உங்களுடைய உத வியை நாடி வந்திருக்கிறோம்” என்று ஜோதிவர்மன் மீண் டும் சொன்னான். 

இப்பொழுது அம்மனிதன் தீவட்டியுடன் பக்கத்தில் இருந்த சிலைக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். போகும்பொழுது மற்றவர்களையும் தன் பின்னால் வரும்படி அவன் சமிக்ஞை செய்துவிட்டுப் போனான். தீவட்டியின் உதவியைக் கொண்டு ஜோதிவர்மனும் மற்றவர்களும் அவன் பின்னால் போனார்கள். குறுகிய ஒரு வராந்தையின் வழியாக அவர்களை அழைத்துச் சென்ற மனிதன் மண்டபத்தின் மத்திய பாகத்தையடைந்ததும் கற்தூண்களில் தொங்கிக் கொண்டிருந்த நான்கு தீவட்டிகளைக் கொளுத்தி இருளடைந்திருந்த அவ்விடத்தை ஒளிமயமாக்கினான். வெளிச்சம் ஏற்பட்டவுடன் அங்கு சுருங்கல்லினால் அமைத்த பெஞ்சுகளும் ஸ்ரூல்களும் இருந்தன. ஒரு கதிரை ஸ்ரூவில் நான்கு மரத்தட்டுகளில் பழங்கள் இருந்தன அவற்றின் பக்கத்தில் நான்கு பித்தளைக் கோப்பைகளிலே பாலும், ஒரு பெரிய பாத்திரத்தில் குடி தண்ணீரும் வைக்கப்பட்டிருந்தன. 

அன்றிரவு பாழும் மண்டபத்துக்குச் சரியாக நான்கு பேர்கள் வரப் போகின்றார்கள் என்பதை எதிர்பார்த்து இந்த ஏற்பாடுகளைச் செய்து வைத்திருப்பதுபோலத் தோன்றியது. அவைகளைப் பார்த்ததும் ஜோதிவர்மனும் மற்றவர்களும் ஆச்சரியமடைந்ததோடு மட்டுமல்லாமல் கொஞ்சம் கலவரமும் அடைந்தார்கள். 

“நாம் இங்கு வரப்போவது இம்மனிதனுக்கு எப்படித் தெரியும்? சரியாக நான்கு பேர்களுக்கு ஆகாரம் தயாரித்து வைத்திருக்கிறானே!” என்றான் ஜோதிவர்மன். 

“ஆகாரம் மட்டுமா? அதோ பார் படுக்கையும் தயார் செய்து வைத்திருக்கிறான்” என்று சொல்லி கொஞ்சத் தூரத்துக்கு அப்பால் கருங்கல் பெஞ்சுகள் மீது படுப்பதற்கு வசதியாகப் புலித்தோல் விரித்து வைத்திருப்பதையும் வில்லியம் காண்பித்தான். புலித்தோல் விரித்த படுக்கையும் நான்கு பேர்களுக்குத் தயார் செய்யப்பட்டிருந்தது. 

“இந்தத் தீவில் எல்லாமே மாயமாய் இருக்கிறது! உண்மையைச் சொல்லப் போனால் இந்தப் பழங்களைச் சாப்பிடுவதற்குக் கூட எனக்குப் பயமாயிருக்கிறது” என்றான் பாலாஜி. 

“எஜமான்! முதலில் நான் சாப்பிடுகிறேன். எனக்கு ஒன்றும் ஏற்படாவிட்டால் பிறகு நீங்கள் சாப்பிடுங்கள். தயவு செய்து முதலில் நீங்கள் சாப்பிடாதீர்கள்!” என்றான் முனிசாமி. 

தீவட்டியுடன் நின்ற மனிதன் அவர்கள் பேசுவதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தானே தவிர அந்தப் பாஷையை அவன் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. பழத்தட்டுகளைக் காண்பித்து அவைகளைச் சாப்பிடுமாறு சமிக்ஞை செய்துவிட்டு அவன் கொஞ்சம் விலகி உட்கார்ந்து கொண்டான். 

மண்டபத்தின் சூழ்நிலையும் தீவட்டி மனிதன் செய்திருந்த முன்னேற்பாடுகளும் அவர்களுக்கு மனக் குழப்பத்தை உண்டு பண்ணிய பொழுதிலும் அந்த மனிதனின் போக்கும் மரியாதையும் பண்பும் அவனிடம் சந்தேகத்தை உண்டுபண்ணுவதாயில்லை. பாவம் தங்களுடைய பாஷை தெரியாதபடியினால்தான் அவன் தங்களோடு பேச முடிய வில்லையென்று அவர்கள் நினைத்தார்கள். நல்ல பசியுடன் இருந்தபடியால் அவர்கள் பழத்தட்டுக்களைக் காலி செய்து பாலையும் குடித்தனர். 

அவர்களுடைய சாப்பாடு முடிந்ததும் தீவட்டி மனிதன் எழுந்து வந்து புலித்தோல் விரித்திருந்த படுக்கையைக் காட்டினான். “நிம்மதியாகப் படுத்துத் தூங்குங்கள். பொழுது விடிந்தபிறகு மறுபடி வருகிறேன்” என்று சமிக்ஞையினால் சொல்லிவிட்டு அவன் அவ்விடத்தைவிட்டுப் போய்விட்டான். 

அவன் போவதை இமைகொட்டாமல் கவனித்துக் கொண்டிருந்த ஜோதிவர்மன், “இந்த மண்டபத்தில்தான் அவனும் தங்கியிருப்பானென்று நினைக்கிறேன். அவன் தனியாக இருக்கிறானா அல்லது அவன் கூட. இன்னும் யாராவது இருக்கிறார்களா என்பது தெரிய வேண்டுமே! சப்தம் செய்யாமல் அவனைப் பின் தொடர்ந்து போய்ப் பார்த்தால் என்ன?” என்று காப்டனை ஜோதி வினவினான் 

அத்தியாயம்-12

மண்டபத்து மனிதனைப் பின்தொடர்ந்து போய்ப் பார்ப்பதாக ஜோதிவர்மன் சொல்லியது வில்லியத்துக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. 

“நம்மை அன்போடு அன்போடு வரவேற்று உபசரித்த மனிதனின் நடமாட்டத்தை அவனுக்குத் தெரியாமல் உளவு பார்ப்பது சரியில்லை ஜோதி! தவிர மண்டபத்தில் அவனைத் தவிர வேறு யாரும் இருப்பார்களென்றும் எனக்குத் தோன்றவுமில்லை” என்றான் வில்லியம். 

“நீ நினைப்பது தவறு வில்வியம்! அந்த மனிதனின் போக்கும் ஏற்பாடும் எனக்குச் சந்தேகமாயிருக்கின்றன. நாம் தீவில் வந்திறங்கி இருப்பதும் இந்த மண்டபத்துக்கு வரப் போவதும் அவனுக்கு எப்படித் தெரிந்தது? சரியாக நான்கு பேர்களுக்குச் சாப்பாடும் படுக்கையும் அவன் தயார் செய்து வைப்பானேன்? இதில் நிச்சயம் ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் அவனுக்கு நாம் பேசும் பாஷை கூடத் தெரிந்திருக்க வேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறது. பாஷை புரியாதவனைப்போல தக்க காரணங்களைக் கொண்டு அவன் நடிக்க வேண்டும். இந்த மண்டபத்தில் அவனைத் தவிர இன்னும் யாரோ ஒருவர் இருக்க வேண்டும். என்றும் அந்த நபரின் உத்தரவுப்படியே இவன் நம்மை வரவேற்று உபசரிக்க வேண்டுமென்றும் எனக்குத் தோன்றுகிறது. அந்த இன்னொரு நபர் யார் என்பதைத் தெரிந்து கொண்டால் நாம் சற்று எச்சரிக்கையோடிருப்பதற்கு உதவியாயிருக்கும்!” என்றான் ஜோதிவர்மன். 

“அப்படியானால் நீ தனியாகப் போகவேண்டாம். நானும் கூட வருகிறேன்!'” என்று வில்லியம் சொல்லிய பொழுது “ஒருவருக்கு இருவராகப் போவதுதான் நல்லது” என்று பாலாஜியும் ஆமோதித்தான். 

“வேண்டாம் பெரியப்பா! சந்தடி செய்து சந்தே கத்தைக் கிளப்புவது நல்லதில்லை. என் கையில் துப்பாக்கி இருக்கிறது. கவலைப்படாமல் இருங்கள். விரைவில் திரும்பி விடுகிறேன்.” என்று சொல்லிவிட்டுத் தீவட்டிடன் சென்ற மனிதன் போன திசையை நோக்கிய ஜோதிவர்மன் தனியாகப் புறப்பட்டான். 

தீவட்டி ஏந்தியமனிதன் மறைந்துவிட்ட பொழுதிலும் அவன் சென்ற திசையிலிருந்து ஒரு நூலிழையைப்போல மெல்லிய வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. அந்த வெளிச்சத்தை ஜோதிவர்மன் நெருங்கியதும் ஒரு அறைக்குள்ளிருந்து சுவற்றிலிருந்த வெடிப்பின் வழியாக அந்த வெளிச்சம் வருவதை ஜோதிவர்மன் தெரிந்து கொண்ட பின் பூனையைப்போல, சந்தடி செய்யாமல் அடிமேல் அடியெடுத்து நடந்து சுவற்றில் தெரிந்த வெடிப்பின் வழியாக அவன் உள்ளே நோக்கினான். அவன் பார்த்த இடம் ஒரு சதுரமான சிறிய அறை. அதன் ஓரத்தில் இருந்த கயிற்றுக் கட்டிலின் மீது தீவட்டியுடன் வந்த மனிதன் படுத்திருந்தான். அவனுக்கு எதிரில் கருங்கல் தூண் ஒன்றில் தீவட்டி செருகி வைக்கப்பட்டிருந்தது. அந்த அறையில் அவனைத் தவிர வேறு யாருமில்லை. இரண்டு மூன்று மண் சட்டிகளைத் தவிர வேறு சாமான்களும் அந்த அறையில் இல்லை. 

இதைப் பார்த்துவிட்டு ஜோதிவர்மன் திரும்பநினைத்த சமயத்தில் அறைக்குள் யாரோ கொச்சைத் தமிழில் பேசும் சப்தம் அவனுக்குக் கேட்டது. முன்பின் தெரியாத தீவாந்திரத்தில் தமிழ்ச் சொற்கள் கேட்டதும் ஜோதிவர்மனுக்குப் பெரிய பரபரப்பு உண்டாயிற்று. அறையில் ஒரே மனிதனைத் தவிர வேறு யாருமில்லாம லிருக்கையில் பேச்சுக்குரல் எங்கிருந்து வருகிறது? யாருடன் இம்மனிதன் பேசுகிறான்? தனக்குத்தானே பேசிக் கொள்ளுகிறானோ? தமிழ் தெரியாததைப் போலச் சற்று முன்னால் அவன் நடித்தானே? 

ஜோதிவர்மனுக்கு ஒரே குழப்படியாயிருந்தது. சுவற்றிலிருந்த வெடிப்பின் வழியாக அவன் மறுபடியும் உள்ளே கவனித்துப் பார்த்தான். 

”பவானி! பவானி! உன்னைத்தான் கூப்பிடுகிறேன்! அதற்குள் தூங்கிவிட்டாயா?” 

அறைக்குள் இப்படிக் கேட்டது ஒரு குரல். அது யார்? யாரை யார் கூப்பிடுகிறார்கள்? பேசியது கட்டிலில் படுத்திருந்த மனிதன் அல்லவென்பது ஜோதிவர்மனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. ஏனெனில் அந்த மனிதன் உண்மையாகவே உறங்கிவிட்டதைப்போல ஆடாமல் அசையாமல் படுத்திருந்தான். அவனைத் தவிர அந்த அறையில் வேறு எவருமில்லாமலிருக்கையில் ‘பவானி!’ என்று பெயர் சொல்லியழைக்கும் மனிதன் யார் என்பது ஜோதிவர்மனுக்கு விளங்காத மர்மமாயிருந்தது. 

”பவானி!” என்று சற்று அதட்டும் தொனியில் அதே குரல் மீண்டும் அழைக்கவே கட்டிலில் படுத்திருந்த மனிதன் அடித்துப் புரண்டு கொண்டு எழுந்தான். உயரே கூரையை நோக்கிய வண்ணம் இரண்டு கைகளையும் கூப்பிக் கொண்டு “எஜமான்! மன்னிக்க வேணும் எஜமான்!” என்று கெஞ்சும் குரலில் மன்றாடினான். 

“அதற்குள்ளாகவா தூங்கிவிட்டாய்” என்று கேட்டது மர்மக் குரல். 

“கொஞ்சம் கண் அயர்ந்துவிட்டேன் எஜமான்! இந்த ஏழையை மன்னிக்க வேண்டும்!” என்று கூரையை நோக்கியவாறு சொன்னான் பவானி என்று அழைக்கப்பட்ட அம் மனிதன். 

பேசாமடந்தையைப்போல ஜாடை காட்டிய அம்மனி தன் தமிழில் பேசியதைக் கேட்ட ஜோதிவர்மன் அந்த மனிதனைப் பற்றி நான் கொண்டிருந்த சந்தேகமும் அபிப்பிராயமும் ஊர்ஜிதமாகிவிட்டதை எண்ணி தன்னைத் தானே மெச்சிக் கொண்டான். 

“பவானி விருந்தாளிகள் சாப்பிட்டார்களா? அல்லது பயந்து கொண்டு சாப்பிடாமல் இருந்துவிட்டார்களா?” என்று விசாரித்தது மர்மக் குரல். 

“சாப்பிட்டார்கள் எஜமான்! அவர்கள் சாப்பிடும் வரையில் நானும் கூடவேயிருந்தேன்!” என்றான் பவானி. 

“இப்பொழுது அவர்கள் என்ன செய்கிறார்கள்?”

“படுக்கச் சொல்லிவிட்டு வந்தேன்!”

“சொல்லிவிட்டு வந்தாயா?”

“இல்லை எஜமான்! படுக்குமாறு சமிக்ஞை காட்டி விட்டு வந்தேன்!” 

“அதுதான் கேட்டேன்! பேசாதவனைப்போல நடிக்க வேண்டுமென்று சொல்லியதை மறந்துவிட்டாயோ என்று நினைத்தேன்.”

“எஜமான்! உத்தரவை நான் மறப்பேனா?” 

“அவர்களை மிக மிக ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்! அவர்கள் மகாராணியின் விருந்தினர்கள், தெரியுமல்லவா?” 

“தெரியும் எஜமான்! அவர்களுக்கு ஒரு குறையுமில்லாமல் நான் கவனித்துக் கொள்ளுகிறேன்!” 

“நல்லது. காலையில் நாங்கள் வருகிறோம்.” 

“சரி எஜமான்!” 

இப்படிச் சொல்லிவிட்டுப் பவானி என்ற மனிதன் கட்டிலில் திரும்பிவந்து உட்கார்ந்தான். 

அதே சமயம் சுவற்றில் வெடிப்பு வழியாக இந்தச் சம்பாஷணையைக் கவனித்துக் கொண்டிருந்த ஜோதிவர்மனுக்குத் தோள்களின் மீது யாரோ இரண்டு கைகளையும் வைத்து அழுத்தினாற் போலிருந்தது. பவானியின் பேச்சை ரகசியமாகக் ஒட்டுக் கேட்கிறோமென்ற நினைப்புமில்லாமல் ஜோதிவர்மன் பீதியில் “வீல்” என்று கத்திவிட்டான். அவன் போட்ட அந்தக் கூச்சல் பாழ் மண்டபத்தில் இடி யோசையைப்போல எதிரொலித்தது. 

ஜோதிவர்மனைக் கலவரமடையச் செய்தது வேறு யாருமில்லை. காப்டன் வில்லியம்தான். 

ஜோதிவர்மன் போனபிறரு அவனைத் தனியாக அனுப்பியது பெரும் தவறென்று பாலாஜி குறைபட்டுக் கொண்டான். அவரைத் திருப்திப்படுத்துவதற்காக ஜோதிவர்மனைப் பின் தொடர்ந்து காப்டனும் வந்தான். இருட்டில் அவன் வந்ததை ஜோதிவர்மன் கவனிக்கவில்லை. பேசத் தெரியாதவனைப்போல நடித்த பவானி தமிழில் பேசியதைக் கேட்டதும் ஜோதிவர்மனைப் போலவே வில்லியமும் ஆச்சரியமடைந்தான். அந்தச் சம்பாஷணையை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த சுவாரஸ்யத்தில் ஜோதிவர்மனுக்குத் தெரியாமல் பின்தொடர்ந்து வந்ததையும் மறந்து நண்பன் தோள்மீது கைபோட்டுவிட்டான். 

ஜோதிவர்மன் கூச்சல்போடவும் “ஜோதி! நான் தானப்பா!” என்று குரல் கொடுத்தான் வில்லியம். 

“அடபாவி! நீயா யாரோ என்றல்லவா பயந்தே போனேன்!” என்றான் ஜோதிவர்மன்! பயம் தெளிந்த பிறகும் அவன் உடல் வெட வெடவென்று நடுங்கியது. 

“நல்ல பயங்கரக் கொள்ளியப்பா நீ! பேய் பிசாசு என்று பயந்துவிட்டாய் போலிருக்கிறது” என்று வில்லியம் சொல்லவும் “இல்லை வில்லியம்! கூரையிலிருந்து பேசிய மர்ம மனிதன்தான் வந்துவிட்டானோவென்று பயந்தேன்” என்றான் ஜோதி. 

அவன் இதை சொல்லிக் கொண்டிருக்கையில் “பவானி! பவானி!” என்று முன்பு அழைத்த அதே குரல் மீண்டும் அவர்களுக்குக் கேட்டது. 

இருவரும் மறுபடி உள்ளே நடப்பதை வெடிப்பின் வழியாகக் கவனித்தார்கள். இதற்குள் வெளியில் பிறந்த சப்தத்தைக் கேட்டுக் குழப்பமடைந்த பவானியும் தீவட்டியை எடுத்துக் கொண்டு வெளியே புறப்படுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். கூரையின் மேலிருந்து அழைக்கும் குரல் கேட்கவே “எஜமான்! என்ன எஜமான்?” என்றான் அவன். 

 “ஏதோ பெரிய சப்தம் கேட்டதே அது என்ன சப்தம்?” என்று விசாரித்தான் மர்ம மனிதன். 

“ஒன்றுமில்லை எஜமான்! ஆந்தை கத்துகிறது! அவ்வளவுதான்!” என்றான் பவானி. 

“நாம் பேசியதை அந்த மனிதர்கள் கேட்கவில்லையே” 

“இல்லை எஜமான்! அவர்கள் நன்றாகக் குறட்டைவிட்டுத் தூங்குகிறார்கள்!” என்று ஒரு பொய் சொல்லி வைத்தான். 

“சரி படுத்துக் கொள்!” என்று மர்ம மனிதன் உத்தர விட்டான். 

“வில்லியம்! பவானி தீவட்டியை எடுத்துக் கொண்டு வெளியே வரப்போகிறான் போலிருக்கிறது! நாம் அவனை முந்திக் கொண்டுவிட வேண்டும்!” என்று சொல்லிய ஜோதிவர்மன் வில்லியத்தைத் தர தரவென்று இழுத்துக் கொண்டு வந்த வழியாகவே திரும்பினான். 

ஜோதிவர்மன் எதிர்பார்த்ததைப் போலவே தீவட்டியுடன் பவானி வந்த பொழுது ஜோதியும் மற்றவர்களும் படுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் முகங்களுக்கு நேராகத் தீவட்டியைக் காட்டி எல்லோரும் நன்றாகத் தூங்குகிறார்கள் என்பதைத் திருப்தியாகத் தெரிந்து கொண்டு பவானி திரும்புகையில் “பவானி! பவானி?” என்று அழைத்தான் ஜோதிவர்மன். 

பவானி சட்டென்று திரும்பிப் பார்த்தான். ஆனால், அவன் திரும்பும்பொழுது ஜோதிவர்மன் கண்களை இறுக மூடிக்கொண்டிருந்தான். பவானிக்கு ஒன்றுமே புரியவில்லை. தீவட்டியுடன் அவன் சிலைபோல அங்கேயே சிறிது நேரம் நின்று கொண்டிருந்தான். பவானி என்று பெயர் கொடுத்தழைத்தது படுத்திருப்பவர்களில் ஒருவரா அல்லது அந்தச் சப்தம் வீண் பிரமையா என்பதைத் தீர்மானித்துக் கொள்ள அவன் தயங்கி நின்று யோசித்திருக்க வேண்டும். 

கொஞ்ச நேரம் அங்கேயே நின்று பார்த்துவிட்டு அவன் போனபிறகு ஜோதியும் வில்லியமும் பவானியின் அறையில் தாங்கள் பார்த்ததையும் கேட்டதையும் பாலாஜிக்குச் சொன்னார்கள். 

“நம்மை மகாராணியின் விருந்தாளிகளென்று மர்ம மனிதன் வர்ணித்தான். மகாராணி என்றால் அவள் யார்? இத்தீவின் அரசியாயிருப்பாளோ?” என்றான் பாலாஜி. 

“ஆமாம்,இந்தச் சின்னஞ்சிறு தீவில் மகாராணி என்பவள் ஒருவளைத் தவிர எவ்வளவு பேர்களிருக்க முடியும்? ஒரு சமயம் அவள் தேவதேவியாகவே இருப்பாளோ என்றுகூட நான் நினைக்கிறேன்!” என்றான் ஜோதி. 

“உனக்குத் தேவதேவி பைத்தியம் சரியாகப் பிடித்திருக்கிறது ஜோதி” என்றான் பாலாஜி. 

“கூரையிலிருந்து பேசிய மனிதன் எங்கிருந்து பேசுகிறான் என்பது தான் எனக்கு ஆச்சர்யமாயிருக்கிறது. அவனுக்கு நாம் இத்தீவுக்கு வருவது எப்படித் தெரிந்தது!” என்றான் வில்லியம். 

“அவனுக்கு இல்லை வில்லியம், அவளுக்கு என்று சொல்லு! கூரையிலிருந்து பேசிய மனிதன் அவனுடைய மகாராணியின் உத்தரவுப்படி நடக்கிறான். ஆகவே இருவருக்கும் சூத்ரதாரியான ராணி யார்? எங்கிருக்கிறாள்? நாம் தீவுக்கு வந்திருப்பதை அவள் எப்படித் தெரிந்து கொண்டாள் என்பதுதான் ஆச்சர்யம்!” என்றான் ஜோதி. 

“நாம் இருவருமாகச் சென்று பவானியை மிரட்டிப் பார்த்தாலென்ன?” என்று வில்லியம் ஒரு யோசனை சொல்லிய பொழுது, “ஏன் வீணாகத் தூக்கத்தைக் கெடுத்துக் கொள்கிறீர்கள். நீங்கள் தேடிப்போகும் விவரங்களை நாளைக் காலை வலுவில் அவர்களே வந்து சொல்லப் போகிறார்கள். மகாராணியின் விருந்தினர்களாகிய நாம் அதற்குத் தகுந்தபடி மதிப்பாக நடந்து கொள்ள வேண்டாமா?” என்றான் பாலாஜி. 

“இல்லை பெரியப்பா! இந்தத் தீவின் மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை முன்னதாகவே பவானியின் மூலம் தெரிந்து கொள்வது உபயோகமாயிருக்கும். நாளைக் காலை பவானியும் எஜமானும் அவனுடைய ஆட்களும் வந்து நம்மை அழைத்துப்போக இருப்பதாய்த் தெரி கிறது. பலரைச் சமாளிக்க நேரிடுவதன் முன்னால் ஒருவனைச் சமாளித்து விஷயத்தைக் கிரகித்துக்கொள்வது நல்லதில்லையா?” என்று ஜோதிவர்மன் சொன்னான். 

அவன் சொல்லியதும் ஒரு விதத்தில் நல்லது தானென்று பாலாஜிக்குத் தோன்றியதால்“ ஜாக்கிரதையாகப் போய் வாருங்கள். தூக்கத்தைக் கெடுத்துக் கொள்ளாமல் விரைவில் வந்துவிடுங்கள்” என்று அவர் சொல்லி அனுப்பினார். 

ஜோதிவர்மனும் வில்லியமும் மறுபடி பவானியின் அறைக்குச் சென்று சுவற்றிலிருந்த வெடிப்பின் வழியாக உள்ளே பார்த்தார்கள். முன்போல பவானி தீவட்டியைத் தூணில் மாட்டிவிட்டு கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தாள். 

ஜோதிவர்மன் லேசாகக் கதவைத் தட்டவே பரபரப்படைந்த பவானி பளிச்சென்று எழுந்து கட்டிலில் உட்கார்ந்தாள். இதற்குள் ஜோதியும் வில்லியமும் அந்த அறைக்குள்ளேயே நுழைந்துவிட்டார்கள். 

“பவானி!” என்று ஜோதிவர்மன் பேசுவதற்கு ஆரம்பித்த பொழுது அந்த மனிதனின் சரீரம் பயத்தில் வெட வெடவென்று நடுங்கவாரம்பித்துவிட்டது. தன்னைக் கண்ட வுடன் அவன் ஏன் அவ்வளவு பயப்படவேண்டுமென்று ஜோதிக்கும் வில்லியத்துக்கும் புரியவில்லை. 

“உனக்கு ஒரு தீங்கும் செய்ய மாட்டோம் பவானி! உன்னுடைய உதவியை நாடியே நாங்கள் வந்திருக்கிறோம்” என்று சொல்ல விரும்பிய ஜோதிவர்மன், “உனக்கு!” என்று மறுபடி பேச ஆரம்பித்தவுடன் பவானி, “இங்கு பேசாதே! வாயை மூடு!” என்று சொல்லும் முறையில் சமிக்ஞை காட்டிவிட்டு தீவட்டியைக் கையிலெடுத்துக் கொண்டான். 

“என் பின்னால் வாருங்கள்! வெளியே போய்ப் பேசுவோம்” என்று பொருள்படும்படி சமிக்ஞை செய்துவிட்டு பவானி அந்த அறையிலிருந்து வெளியே வரவும் ஜோதிவர்மனும் வில்லியமும் அவனைப் பின்தொடர்ந்து வெளியே வந்தார்கள். 

ஜோதிவர்மனையும் வில்லியத்தையும் வெளியே அழைத்துக்கொண்டுவந்த பவானி,  ”ஏன்? என்ன வேண்டும்?” என்று கேட்கும் பாவனையில் சமிக்ஞைசெய்து விசாரித்தான். அவன் உடல் குளிர் காய்ச்சல் கண்டவனைப் போல நடுங்குவதை தீவட்டியின் வெளிச்சத்தில் ஜோதிவர்மனும் வில்லியமும் கவனித்தார்கள். 

“பவானி! ஏன் இப்படிப் பயப்படுகிறாய்? எங்களோடு பேசக் கூடாதென்று உனக்கு உத்தரவிடப்பட்டிருப்பதை நாங்கள் அறிவோம்! எங்களுடைய பாஷை தெரியாதவனைப் போல நீ நடித்தபொழுதிலும் உனக்கு நன்றாகத் தமிழ் பேசத் தெரியுமென்பதையும் நாங்கள் அறிவோம். உன்னிடம் உண்மையை ஏன் மறைக்கவேண்டும்? உன் அறையில் ஆகாசவாணியோடு நீ பேசியது முழுவதையும் நாங்கள் இருவரும் கேட்டுக் கொண்டு தானிருந்தோம். உன்னைக் காட்டிக் கொடுத்து விடுவோமோ என்று பயப்படுகிறாய் போலிருக்கிறது. நாங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பவானி. உயிர் போவதானாலும் நம்பியவனைக் காட்டிக் கொடுக்கும் துரோகத்தை ஒருக்காலும் செய்யமாட்டோம். நீ எங்களிடம் பயப்படத்தேவையில்லை!” என்று பவானிக்குத் தைரியம் சொன்னான் ஜோதிவர்மன். 

“அய்யா! என் அறையில் ரகசியமாக நான் பேசியதை நீங்கள் ஒட்டுக்கேட்டது எனக்குத் தெரியும்! நீங்கள் தூங்குகிறீர்களா என்பதைப் பார்க்க வந்த பொழுது பவானி என்று என் பெயரைச் சொல்லி நீங்கள் அழைத்ததைக் கேட்டவுடனேயே இதைத் தெரிந்து கொண்டுவிட்டேன். உங்களோடு நான் ஏதும் பேசக்கூடாதென்பது தளபதி உக்கிரசேனர் உத்தரவு. அதை நான் மீறிவிட்டேன். இந்த நாட்டில் உத்தரவை மீறுகிறவர்களுக்கு ஒரே ஒரு தண்டனை தான் உண்டு! அதுதான் மரண தண்டனை!” என்றான் பவானி. இதைச் சொல்லுகையில் அவன் குரல் தழுதழுத்தது. 

”உத்தரவை நீ மீறியது உக்கிரசேனருக்குத் தெரிந்தால்தானே மரண தண்டனை?” என்று ஜோதி கேட்ட பொழுது, “அவருக்குத் தெரியாமல் இந்தப் பக்கத்தில் ஏதும் நடக்கமுடியாது” என்றான் பவானி. 

”உன் எஜமானின் சாமர்த்தியத்தில் நீ அழுத்தமான நம்பிக்கை வைத்திருக்கிறாய் பவானி. நான் உன்னுடைய அறையிலிருந்து பேசினால் ஒரு சமயம் அவருக்குத் தெரிந்து போகலாம். இங்கிருந்து பேசுவதை நிச்சயம் அவர் கண்டுபிடிக்க முடியாது. வீணாகக் கவலைப்படாதே! உக்கிரசேனர் எங்கிருக்கிறார்?” என்று கேட்டான் ஜோதி! 

“அவர் இங்கிருந்து நாலாவது மலையிலிருக்கிறார். அவர் இருப்பிடம் ஏழு மணிநேரப் பிரயாண தூரத்திலிருக்கிறது. தென்பகுதி ராஜ்யத்துக்கு அவர்தான் தலைவர்! அவரைப் போல இன்னும் மூன்று தலைவர்கள் ராஜ்யத்தின் மற்ற மூன்று திசைகளிலுமிருக்கிறார்களாம். அவர்களை திக்கு பாலகர்கள் என்று அழைப்பது வழக்கம். அவர்கள் வைத்ததுதான் சட்டம்” என்றான் பவானி. 

வில்லியம்:- நாங்கள் இந்த ராஜ்யத்துக்கு வருவது உக்கிரசேனருக்கு எப்படித் தெரிந்தது? 

பவானி:- அது எனக்கு எப்படித் தெரியும்? அவருக்கே மகாராணி சொல்லித்தான் தெரியுமென்று நினைக்கிறேன். மகாராணியின் உத்தரவின்படியே உங்களை வரவேற்று உபசரிக்கும்படி உக்கிரசேனர் ஆக்ஞையிட்டிருக்கிறார். 

ஜோதி:- உங்கள் மகாராணி எங்கேயிருக்கிறாள்? 

பவானி:- நீங்கள்தான் சற்று முன்னால் பார்த்தீர்களே அவர்தான் எங்கள் அரசியார். 

ஜோதி- நாங்கள் பார்த்தோமா? எங்கே பவானி? 

பவானி:- பூஜை அறையில்! இந்த நாட்டில் ராணிக்குத்தான் பூஜை! அவர்தான் எங்களுக்கு மாதா, பிதா, தெய்வம் எல்லாம்! 

ஜோதி:- ஓ! பூஜை அறையிலிருந்த சிலையையா சொல்கிறாய்? ராணியின் அரண்மனை எங்கே இருக்கிறது? 

பவானி:- இங்கிருந்து எட்டு நாள் பிரயாண தூரத்திலிருப்பதாகச் சொல்கிறார்கள். 

ஜோதி: அப்படியானால் நீ அங்கு போனதில்லையா? ராணியை நீ பார்த்ததே கிடையாதா? 

பவானி:- ராணியைப் பார்ப்பதா? திக்கு பாலகர்களையும் அரண்மனையிலிருப்பவர்களையும் தவிர வேறு யாருமே ராணியைப் பார்க்க முடியாது. பார்க்கவும் கூடாது. இங்கிருந்து 14-வது மலைச் சிகரத்திலிருக்கிறது மகாராணியின் அரண்மனை. எட்டாவது மலையைத் தாண்டி திக்கு பாலகர்களைத் தவிர வேறு யாரும் போகப்படாது. 

ஜோதி:- அவ்வளவு தூரத்திலிருக்கும் உங்கள் மகாராணிக்கு நாங்கள் இத்தீவில் வந்து இறங்கியது எப்படித் தெரிந்தது? 

பவானி:- அதுவா? ராணிக்குத் தெரியாமல் இந்தநாட்டில் ஒன்றும் நடக்க முடியாது. அவர் அமானுஷ்யமான சக்தி படைத்தவர். 

வில்லியம்:- உங்கள் ராணியைக் கடவுளென்றே சொல்லி விடுவாய் போலிருக்கிறதே! 

பவானி: யார் இல்லையென்று சொல்ல முடியும்? கடவுளைப்போல எங்கள் ராணிக்குப் பிறப்புமில்லை, இறப்புமில்லை. 

ஜோதி:- இறப்புமில்லையா? 

இதைச் சொல்கையில் ஜோதிவர்மன் அர்த்தபுஷ்டியோடு தனது நண்பன் வில்லியத்தைப் பார்த்தான். வில்லியமும் ஆச்சர்யமடைந்தவனைப் போல ஜோதியைப் பார்த்தான். இவர்கள் இப்படிப் பார்த்துக் கொண்டதைக் கவனியாத பவானி, “ஆம்! எங்கள் ராணிக்கு மரணமே கிடையாது. எவ்வளவோ ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அவர் இந்தநாட்டை ஆண்டு வருகிறார்” என்றான். 

“உங்கள் ராணியின் பெயரை நான் சொல்லட்டுமா! அவள் பெயர் மலைக்கன்னி! தேவதேவியென்றும் அவளுக்கு இன்னொரு பெயர் உண்டு! இல்லையா?” என்று ஜோதிவர்மன் கேட்டபொழுது பவானி அப்படியே அசந்து போய் விட்டான். 

“ஏன் பவானி! நான் சொல்லியது சரிதானே! இல்லையா?” என்று ஜோதிவர்மன் கேட்டபொழுது அவனுடைய தொனியில் ஒரு அவசரமும் பதட்டமும் பிரதிபலித்தது. செம்பவளத் தீவின் ராணி தேவதேவி சாகா வரம் பெற்றவரென்றும், அவருக்கு அழிவே கிடையாதென்றும் ஏட்டுச் சுவடிகளில் சந்திரிகா எழுதிவைத்திருந்தது போல தங்களுடைய ராணிக்கும் மரணமேயில்லையென்று பவானி சொல்லியதையும் ஒப்பிட்டுப் பார்த்தபொழுது தேவதேவியின் அமரத்துவம் வாய்ந்த வரலாறு கடைசியில் உண்மையாகவே இருந்துவிடுமென்று ஜோதிவர்மனுக்குத் தோன்றியது. இந்தக் கதையைக் கொஞ்சம்கூட நம்பாத வில்லியம் கூட, “எங்கள் ராணிக்கு மரணமே கிடையாது” என்று பவானி சொல்லக் கேட்டதும் திகைத்துப்போனான். 

பவானி என்ன பதில் சொல்வானோ என்று அவர்கள் இருவரும் ஆவலுடனும் துடிப்புடனும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் பவானியின் மௌனம் அவர்களுடைய ஆவலை மேலும் பன் மடங்கு அதிகரித்தது. 

“சொல்லு பவானி! உங்கள் ராணியின் பெயர் மலைக் கன்னி இல்லையா?” என்று மீண்டும் கேட்டான் ஜோதிவர்மன். 

“ஆமாம்! அது உங்களுக்கு எப்படித் தெரியும்? தேவ தேவியின் புகழ் வெளி உலகமெல்லாம் பரவியிருக்கிறதா?” என்று ஒரு பதில் கேள்வியைப் போட்டான் பவானி. 

ஜோதிவர்மனும் வில்லியமும் எதை எதிர்பார்த்தார்களோ அதையே பவானி சொல்லியது அவர்களுக்குப் பெரிய பரபரப்பை உண்டுபண்ணியது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு சரித்திர ரகசியத்தை, கற்பனைக்கும் விஞ்ஞானத்துக்கும் பகுத்தறிவிற்கும் அப்பாற்பட்ட அமானுஷ்யமான ஒரு தேவ ரகசியத்தை அவ்வளவு காலமும் கட்டுக்கதையென்று கருதிவிட்டு திடீரென்று அவ்வளவும் உண்மைதானென்பதை அறிய நேரிட்டால் எத்தகைய பரபரப்பும் திகைப்பும் ஏற்படுமோ அந்த நிலையிலிருந்தார்கள் வில்லியமும் ஜோதிவர்மனும். ஆனால், வில்லியமுக்கு மாத்திரம் பவானியின் கூற்று முன்னேற்பாடான ஒரு சதித் திட்டமாயிருக்குமோ என்ற ஒரு சந்தேகம் உள்ளூர இருந்து கொண்டிருந்தது. 

“தேவதேவியின் புகழ் உலகமெல்லாம் பரவியிருக்கிறதா?” என்று பவானி கேட்டபொழுது “ஆமாம்! எங்கள் தமிழ்நாட்டிலே தேவதேவியின் மகிமையைப் பற்றி எல்லோரும் புகழுகிறார்கள். சிரஞ்சீவி வரம்பெற்ற அந்த அதிசய ராணியைப் பார்க்கவே நாங்கள் வந்திருக்கிறோம்” என்றான் ஜோதி. 

இதைக் கேட்டதும் பவானி லேசாகச் சிரித்தான். 

“ஏன் சிரிக்கிறாய்?” என்று கேட்டான் ஜோதி, 

பவானி:- மலைக்கன்னியைப் பார்க்க வந்திருப்பதாகச் சொன்னீர்களே, அதைக் கேட்டதும் சிரிப்பு வந்தது. 

ஜோதி:- இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது? 

பவானி:- மலைக்கன்னியை யாரும் பார்க்க முடியாது. பார்க்க முயற்சிப்பவர்கள் பிழைத்து திரும்பி வரவும் முடியாது. திக்கு பாலகர்களும் குறிப்பிட்ட ஒரு சிலரும் மட்டும்தான் அரண் மனைக்குப் போக முடியும். அவர்கள்கூட மகாராணியை நேருக்கு நேராகப் பார்த்ததில்லையாம். மகாராணி நேரில் வர நேரிட்டால் அவருடைய ஜோதியில் மனிதன் எரிந்து சாம்பலாகிவிடுவானென்று கேள்வி. 

வில்லியம்:- தேவதேவி எப்படிச் சாகாமல் சிரஞ்சீவியாக இருக்கிறாள்? 

பவானி:- அவள் தேவாம்சம்! நாம் மனித அம்சம்! 

ஜோதி:-உக்கிரசேனர் நாளை வருவதாகச் சொன்னாரே எப்பொழுது வருவார்? 

பவானி:- காலையில் வருவாரென்று நினைக்கிறேன். நீங் கள் மகாராணியின் விருந்தினர்களென்று சொல்லியதால் அநேகமாக உங்களை அவர் அரண்மனைக்கு அழைத்துச் செல்லலாம். அவர் வரும்பொழுது தயவு செய்து நான் உங்களோடு பேசியதாக அவரிடம் சொல்லிவிடாதீர்கள் ஐயா! இந்த ஏழையின் உயிர் மயிரிழையில் தொங்குகிறது எனக்கு உயிர்ப் பிச்சையளித்து உதவவேண்டும். 

பவானி இப்படி உருக்கமாகச் சொல்லியபொழுது அவன் உண்மையில் மரணத்தின் வாசலில் நின்று புலம்புவதைப் போலவேயிருந்தது. 

“உன்னைக் காட்டிக்கொடுக்க மாட்டேன் பவானி! இது சத்தியம்!” என்று ஜோதிவர்மன் உறுதி கூறி அவனை அனுப்பிவிட்டு வில்லியமை அழைத்துக்கொண்டு பாலாஜியும் முனிசாமியும் படுத்திருந்த இடத்துக்கு வந்தான். மறு நாட் காலை உக்கிரசேனர் வந்த பிறகு தாராளமாக மனம் விட்டுப் பேசமுடியுமோ அல்லது முடியாதோ என்று எண்ணி பாலாஜியை ஜோதிவர்மன் எழுப்பி பவானியிட மிருந்து தெரிந்துகொண்டு வந்த விஷயங்களைச் சொன்னான். 

“உங்களைப்போல எல்லாம் பொய்யென்று நினைக்க நான் தயாரில்லை. அதே சமயம் தேவதேவி சிரஞ்சீவியா யிருப்பாளென்று நம்பவும் நான் தயாராயில்லை. இவ்விஷயத்தில் உலகத்துக்குத் தெரியாத ஒரு பெரிய பரபரப்பான மர்மம் இருக்கிறது. அந்த மர்மத்தின் ஆழத்தைக் கண்டு பிடிக்கும் பொழுது நாம் ஆச்சரியப்பட்டுப் போவோம். இதில் இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். தேவதேவியின் பெயரில் ஆட்சி நடத்துகிறவர்கள் தலை சிறந்த விஞ்ஞான மேதைகளாயிருக்க வேண்டுமென்பதிலும் சந்தேகமில்லை. ரேடியோ வசதிகளையும் ஒலிபெருக்கி வசதிகளையும் இந்நாட்டின் அதிகார வர்க்கம் சரளமாக உபயோகிக்கின்றது. அதே சமயம் இந்த விஞ்ஞான அறிவை மந்திரம், மாயம் என்ற போர்வையில் ஒரு சிறு கூட்டத்தின் ஏகபோக உரிமையாக பரம ரகசியமாகவும் வைத்திருக்கவேண்டும்” என்றான் வில்லியம். 

“நம்முடைய புராண இதிகாச காலங்களிலே விமானங்களும் நீர்மூழ்கிகளும் அதிபயங்கரமான அணுகுண்டு போன்ற யுத்த உபகரணங்களும் இருந்ததாக நாம் படிக்கிறோம். அவை கட்டுக் கதைகளாயில்லாமல் உண்மையா யிருக்கவேண்டுமென்பதற்கு அத்தாட்சியாக அவைகளைப் பற்றிய தத்ரூபமான வர்ணனைகளையும் பழம்பெரும் மகா காவியங்களில் வாசிக்கிறோம். அப்படியிருந்தும் அந்த விஞ்ஞானப் பேரறிவு வாழையடி வாழையாக நமக்குக் கிடைக்காமல் போனதற்கு ஒரு சிறு குழுவின் சுயநலனே காரணமா யிருந்திருக்கின்றது. அறிவைப் பலருடனும் பகிர்ந்து கொள்ளாமல் மர்மத்தையும் மந்திரங்களையும் மாய சக்திகளையும் சொல்லிக்கொண்டு ஒரு குழு இந்த விஞ்ஞானப் பேரறிவைத் தனது ஏகபோக உரிமையாக்கிக் கொண்டு உலகை ஆட்டிவைக்க முயற்சித்ததின் பலன் அந்தக் குழு மறைந்தவுடன் அதன் ரகசியங்களும் நசிந்துபோய்விட்டன. இதையே இன்று செம்பவளத் தீவிலும் நாம் காண்கிறோம் என்று நினைக்கிறேன். கூரையிலிருந்து உக்கிரசேனன் பேசும் குரல் எப்படி வருகிறதென்பது பவானிக்குத் தெரியவில்லை. ஏதோ ஒரு தெய்வீக சக்தி அல்லது மாய சக்தியைக் கொண்டு வெகு தூரத்திலிருக்கும் உக்கிரசேனன் தன்னுடன் பேசுவதாக பவானி எண்ணிக்கொண்டிருக்கிறான். இதைத் தவிர தேவதேவியின் அரண்மனையில் சக்தியுள்ள தூரதரிசினி இருக்கவேண்டுமென்றும், அதன் உதவியைக் கொண்டு தீவு முழுவதையும் பார்ப்பது சாத்தியமா யிருக்கவேண்டுமென்றும் நினைக்கிறேன். இது மாதிரி தூர தரிசினியின் உதவியைக் கொண்டே இத்தீவில் நாம் வந்து இறங்கியதை தேவதேவி பார்த்திருக்கவேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறது” என்றான் ஜோதிவர்மன். 

“தேவதேவியின் பெயரைச் சொல்லி நீ ஜபம் செய்வதைப் பார்த்தால் உனக்காகவேனும் அவள் சிரஞ்சீவியா யிருக்கக்கூடாதா என்று தோன்றுகிறது!” என்றான் பாலாஜி. 

“ஏன் இருக்கக்கூடாது? சந்திரிகா எழுதியிருப்பதைப் போல மற்ற எல்லா விவரங்களும் கிட்டத்தட்ட நிஜமாகி விட்டன. எவ்வளவோ நூற்றாண்டுகளுக்கு முன்னால் நடந்த சந்திரிகாவின் கதையையும் அதைச் சரிபார்க்க நாம் வருவதையும் உலகத்தோடு தொடர்பு இல்லாத பவானியும் அவனுடைய எஜமானர்களும் அறிந்திருக்க நியாயமே யில்லை. நாம் எதற்காக செம்பவளத்தீவுக்கு வந்திருக்கிறோ மென்பது தெரிந்திருந்த பவானி நம்மிடம் கதை அளப் பதைப்போல நீங்கள் ஏன் சந்தேகிக்கவேண்டும்? தேவ தேவி மரணத்தை வென்றவளென்று பவானி எதற்காக நம்மிடம் சொல்லவேண்டும்? இதில் ஏதோ ஓரளவு உண்மையிருக்கிறது. விரைவில் அதைநாமும் பார்க்கத்தான் போகிறோம்!” என்றான் ஜோதி. 

இவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில் இரவு பன்னிரண்டு மணிக்கு மேலாகிவிட்டது. மறு நாள் உக்கிரசேனன் வரும்பொழுது இரவில் கண் விழித்திருந்ததாகக் காட்டிக்கொள்ளக்கூடாதென்று எண்ணி அவர்கள் சற்றுக் கண்ணயர்ந்தார்கள். 

அதிகாலையில் ஏராளமான ஆட்கள் மண்டபத்துக்கு வெளியில் நடமாடும் சப்தமும் இரைச்சலும் கேட்டு அவர்கள் திடு திப்பென்று கண் விழித்தபொழுது ஒரு பெரிய சேனை அந்தப் பாழ் மண்டபத்தைச் சுற்றி வளைத்து முற்றுகையிட்டுக் கொண்டிருப்பதைப்போல அவர்களுக்குத் தோன்றியது. 

– தொடரும்…

– 1957ம் வருட ம்,மார்ச் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை மலைக்கன்னி என்ற தலைப்பில் இக்கதை வீரகேசரி நாளிதழில் பிரசுரமாயிற்று. ‘SHE’ என்ற ஆங்கில நாவலை தழுவி எழுதியது. வீரகேசரியில் பிரசுரமாகிய கதை ஓட்டத்தைப் பாதியாமலும் சுவை குன்றாமலும் சிறிது சுருக்கி மாற்றி எழுதியிருக்கிறேன்.

– மலைக்கன்னி, முதற் பதிப்பு: ஜூலை 1980, வீரகேசரி பிரசுரம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *