கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: June 15, 2025
பார்வையிட்டோர்: 3,023 
 
 

(1995ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 22-24 | அத்தியாயம் 25-27 | அத்தியாயம் 28-30

25. அப்பர் தொடங்கிய சுதந்திரப் போராட்டம்

பிரேமவர்த்தினியின் முகத்தில் கவலை தோய்ந் திருந்தது. எதிரே அமர்ந்திருந்த சித்திரமாயன் கோபத் தோடிருந்தான். கடிகை மாணவர்களின் இறுதிச் சடங்கில் கலந்துவிட்டுக் கோட்டைக்குள் திரும்பிய கூட்டத்தினரில் சிலர், அரசுக்குச் சொந்தமான சில கட்டடங்களில் கல் லெறிந்து, பலரைக் காயப்படுத்தியதாகவும், வீதியில் தென் பட்டசில வீரர்களை அடித்துக் காயப்படுத்தி, வீதியிலேயே போட்டு விட்டதாகவும் செய்தி எட்டியிருந்தது. 

கூட்டத்தின் ஒரு பகுதி அச்சுதபட்டரின் மாளிகைக் குச் சென்று, மாளிகைத் தோட்டத்தை நாசப்படுத்திய தாகவும், மாளிகையின் காவலாளிகளை அடித்துக் காயப்படுத்தியதாகவும், மந்திரியின் மாளிகையின் மீது கல்லெறிந்து சேதப்படுத்தியதாகவும் ஓர் ஒற்றன் வந்து தெரிவித்தான்.

“நம்முடைய வீரர்கள் கடிகையில் அளவு மீறித்தான் நடந்திருக்கிறார்கள். அதனுடைய எதிரொலிதான் இது” என்றாள், மகாராணி. 

“ஆணை மீறியவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வில்லையென்றால், பிறகு எப்படித்தான் ஆட்சி நடத்த முடியும்?” என்றான் சித்திரமாயன். 

“நம்முடைய வீரர்களால் அடக்க முடிந்ததா? மயான ஊர்வலத்துக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய மக்கள் காவல் வீரர்களைத் துரத்தி விரட்டியிருக்கிறார்களே.” 

“இதற்குப்பழி வாங்கியே தீர வேண்டும். ஊர்க்காவல் படைத்தலைவர் ஜெயவர்மர், முதன்மந்திரியின் சொல்லைக் கேட்டுத் தம்முடைய படையை கலகம் செய்தவர்கள் மீது ஏவாமலிருந்துவிட்டார். அவருக்குப் பாடம் புகட்ட வேண்டும்”. 

“மக்களே நமக்கு எதிரிகளாக மாறும் நிலை வந்தால், ஆட்சியைப் பாதித்துவிடுமே” என்று மகாராணி பயத்துடன் கூறினாள். 

“நீங்கள் கவலைப்படாதீர்கள், சின்னம்மா. இந்த மக்கள் வெறும் செம்மறியாட்டுக் கூட்டங்கள். இவர் களைத் தூண்டிவிடுபவர்களை முதலில் ஒழித்துவிட்டால், பிறகு மக்கள் அடங்கிவிடுவார்கள்.” 

“மக்கள் அடங்குவதாகத் தெரியவில்லையே. மந்திரி அச்சுதபட்டரின் மாளிகையையும் அல்லவா மக்கள் தாக்கியிருக்கிறார்கள்! இந்த மக்கள், அரண்மனையைத் தாக்க வர எவ்வளவு நேரமாகும்?” 

சித்திரமாயன் சிரித்தான். “சின்னம்மா, அவ்வளவு தைரியம் மக்களுக்கு கிடையாது. அரசுக்கு எதிராக மக்கள் போராட முடியுமா? இதெல்லாம் தெருச் சலசலப்புகள். இதை முளையிலேயே கிள்ளிவிடலாம். அந்த மயான ஊர்வலத்தையே கலைத்திருக்க வேண்டும். ஜெயவர்மர் வேண்டுமென்றே சும்மாயிருந்திருக்கிறார். அவருக்கு நம்மீது அபிமானமில்லை.” 

“நீ கொஞ்சம் அவசரப்பட்டுக் காரியங்களைச் செய்து விடுகிறாய். அதனால்தான் இப்படியெல்லாம் குழப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன” என்றாள் மகாராணி. 

“என்ன அவசரப்பட்டுவிட்டேன்? அரசின் கட்டளை களுக்குப் பணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுத்தேன். அரசை அலட்சியம் செய்பவர்களைத் தண்டிக்காமல் என்ன செய்வது?” என்று படபடத்தான் சித்திரமாயன். 

“மக்கள் மதிப்பு வைத்திருந்த ஏரிவாரியத் தலை வரையும், தோட்ட வாரியத் தலைவரையும் சிறையிலிட்டி ருக்கிறாய். புகழ்பெற்ற சமஸ்கிருத கடிகையைத் தாக்கிருக் கிறாய். இரு மாணவர்கள் கொலையுண்டு போனார்கள். அச்சுதபட்டர் இருபதினாயிரம் பொற்காசுகளைக் கையூட் டாக கடிகைத் தலைவரிடம் கேட்டிருக்கிறார். இவை யெல்லாம் மக்களை நம்மீது வெறுப்படையத்தானே செய்யும்” என்றாள், மகாராணி. 

“என் மீது குற்றம் சாட்டுகிறீர்களா? இதற்கெல்லாம் நீங்கள் தானே சம்மதித்து ஆணைகளைப் பிறப்பித்தீர்கள்?” என்றான் சித்திரமாயன் கோபத்துடன். 

“ஐயோ, நான் உன்னைக் குற்றம் சாட்டவில்லை, சித்திரமாயா. என்னுடைய ஆணைகளை நிறைவேற்றும் போது நீ கொஞ்சம் நிதானமாக நடந்துகொள்ள வேண்டும் என்று தான் சொல்கிறேன். நீ சொன்னாய் என்று தோட்ட வாரியத்துக்கும், ஏரி வாரியத்துக்கும் ராஜபரம்பரையைச் சேர்ந்த உன் நண்பர்களை நியமித்தேன். அவர்கள் லஞ்சம் பெற்றதாக நேற்று ஒற்றர் படை வீரன் தகவல் கொண்டு வந்தான். விலைவாசிகள் மிகவும் ஏறிவிட்டதாகத் தகவல் வந்திருக்கிறது. நீதான் சில வணிகர்களுக்குச் சலுகை காட்டச் சொன்னாய். அதன் பலன் தான் விலைவாசி ஏற்றம். இதையெல்லாம் நாம் கொஞ்சம் நிதானமாக யோசித்துச் செய்திருக்க வேண்டும். இப்படியே மக்களின் அதிருப்தி கூடிக் கொண்டே போனால், நாட்டில் அமைதி எப்படி நிலவும்?” 

“சின்னம்மா, நீங்கள் ரொம்ப பயந்து போயிருக் கிறீர்கள். பதவியில் இருப்பவர்களில் சிலர் ஆங்காங்கே லஞ்சம் வாங்கத்தான் செய்வார்கள். சிலரைக் கண்டிக்க வேண்டும். திறமையானவர்களை நாம், கண்டும் காணாத மாதிரி இருந்து கொள்ள வேண்டும். ஆட்சியில் கட்டுக் கோப்புத்தான் நமக்கு முக்கியம். இந்த மக்களை அடக்குவது பெரிய காரியமில்லை. நம் படைகளின் பெரும்பகுதி சக்கரவர்த்தியோடு போர்க்களம் சென்று விட்டதால், மக்களின் கூட்டம் தெம்படைந்து, கலகம் செய்கிறது. நம் மீது அபிமானம் கொண்டிருக்கும் குறுநில மன்னரான பல்லவகுடிஅரையரை, படையுடன் காஞ்சியில் வந்து தங்கும்படி தூது அனுப்பியிருக்கிறேன். அரையர் வந்து விட்டால், இரணியவர்மர் அடங்கி விடுவார். ஒருவேளை, காஞ்சியை விட்டுக்கூட வெளியேறிவிடுவார். அரையரின் படை வந்து சேரட்டும்; காஞ்சியில் கலகம் செய்பவர்களை ஒரே நாளில் ஒழித்துக் கட்டுகிறேன்” என்றான், சித்திர மாயன். 

“மக்களைப் பழி வாங்குவதை நிறுத்தும்படி முதன் மந்திரி வேண்டினார். அடக்குமுறை மேன்மேலும் மக்க ளுக்கு வெறுப்பைத்தான் உண்டுபண்ணும் என்றார். எனக்கும் அவர் சொல்வது சரியாகத்தான்படுகிறது. கொஞ் சம் விட்டுப் பார்ப்போமே” என்றாள், மகாராணி. 

“சின்னம்மா, முதன்மந்திரி, சதி செய்கிறார். அவருடைய வலையில் விழுந்து விடாதீர்கள். அவருக்கும் இரணியவர் மருக்கும், இன்னும் சில தலைவர்களுக்கும் நம் மீது அபிமானம் கிடையாது. இப்போது இரணியவர்மரின் படை காஞ்சியில் இருக்கிறது. இந்தச் சமயத்தில், சதிகாரர்கள் நம்மீது ஏதாவது ஒரு பழியைச் சுமத்திவிட்டுத் திடீரென்று ஆட்சியைக் கைப்பற்றினாலும் ஆச்சரியப்படுவதற் கில்லை. ஊர்க்காவல் படையின் தலைவர் ஜெயவர்மருக் கும் நம் மீது பொறாமை, இந்தச் சூழ்நிலையில், மக்களைத் தூண்டிவிடுபவர்களே அவர்கள்தாம் என்று எண்ணு கிறேன். மக்களின் கிளர்ச்சியை ஒங்கவிட்டால், உள்நாட்டில் கலகங்கள் பெருகும், அதைப் பயன்படுத்தி விரோதிகள், நமக்கு எதிராகச் செயல்படலாம். சக்கரவர்த்தி இல்லாத இந்தச் சந்தர்ப்பத்தை துரோகிகள் எப்படியும் பயன்படுத்தப் பார்க்கலாம். நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றான் சித்திரமாயன். 

பிரேமவர்த்தினிக்கு அவன் சொன்னதிலும் உண்மை இருப்பதாகத் தோன்றியது. சித்திரமாயனை நம்பும் அளவுக்கு அவளால் முதன் மந்திரியையோ, அல்லது வேறு தலைவர்களையோ நம்ப முடியவில்லை. மேலும், ஆங் காங்கே மக்கள் செய்த கலகங்கள், அவள் கோபத்தையும் தூண்டியிருந்தன. 

“நமக்கு யார் மீது சந்தேகம் எழுகிறதோ அவர்களை யெல்லாம் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, நம் மீது அபிமானம் உள்ளவர்களை நியமித்துவிடுகிறேனே” என்றாள், மகா ராணி. 

“பொறுங்கள். பதவியிலிருந்து நீக்கி விட்டால் மட்டும் போதாது. பதவியிழந்தவர்கள், நம்மை எதிர்க்கச் சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருப்பார்கள். பதவியிலிருந்து நீக்கியதுமே அவர்களை ஒழித்து விட வேண்டும். முதலில் நம்மீது விசுவாசமுள்ளவர்கள் யார் என்பதை கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறேன். சில வாரியத் தலைவர்களும், சில குறுநில மன்னர்களும் நம் மீது அபிமானத்துடனிருக் கிறார்கள். அவர்கள் எல்லாரையும் இங்கே வரவழைத்துப் பேசியபின், நாம் நடவடிக்கை எடுக்கலாம். இப்போதே எடுத்தால், இரணியவர்மர் ஏதாவது இடைஞ்சல் செய்யலாம்.” 

“போர் முடிந்து சக்ரவர்த்தி விரைவில் திரும்பிவிடுவார். நாம் செய்திருக்கும் எற்பாடுகள் அவர் மனதுக்கு உசிதமாகப் படுமோ என்னவோ?” என்று, பயத்துடன் கேட்டாள், மகாராணி. 

“சக்கரவர்த்தி இங்கே திரும்பி வரும்போது, அவரிடம் முறையிட இவர்கள் எல்லோரும் உயிரோடிருக்கமாட் டார்கள். அவர் வந்து கேட்கும்போது, ‘இவர்கள் எல்லாரும் மகாராணிக்கு எதிராகச் சதி செய்தார்கள், ஒழித்துவிட் டோம்’ என்று கூறிவிடலாம். சின்னம்மா, நீங்கள் என்ன சொன்னாலும் தந்தையார் நம்புவார்” என்றான், சித்திர மாயன். 

அப்போது,ஒற்றர் படையைச் சேர்ந்த வீரன் ஒருவன் வந்தான். உதயசந்திரன் எப்படியோ தப்பிவிட்டான் என்றும் காஞ்சியில் அவன் தென்படவில்லையென்றும் சொன்னான். 

சித்திரமாயன் கோபத்தில் இரைந்தான். “அவன் தப்பியிருக்கவே முடியாது. காஞ்சிக்குள் தான் ஒளிந்திருக் கிறான். காஞ்சி எல்லைப் பாதைகள் முழுவதிலும் எச் சரிக்கை அனுப்பியாகிவிட்டது. உடனே ஊரில் பறை யறையச் சொல். உதயசந்திரனுக்குத் தங்க இடமளித்தாலோ, உணவு அளித்தாலோ மரண தண்டனை வழங்கப்படும் என்று எச்சரிக்கச் சொல்.” 

ஒற்றர் படை வீரன் வணங்கிவிட்டு வெளியேறினான். 

“ஒருவேளை தப்பிப் போயிருப்பான். அவனை வீணாகத் தேடுவானேன். ஓடிப் போனால் போகிறான்” என்றாள் பிரேமவர்த்தினி. 

“அவன் தப்பியிருக்க முடியாது. அவனைக் கழுவேற் றியே தீரவேண்டும். போட்டி மைதானத்தில் என்னை அவ மானப்படுத்தினானே” என்று கோபத்துடன் இரைந்து விட்டு சித்திரமாயன் தன் மாளிகையை நோக்கி விரைந் தான். 

சித்திரமாயனைக் கண்டதும் மேகலா, “ஒடிப்போன அந்த வீரனைப் பிடித்து விட்டார்களா?” என்று ஆவலு டன் கேட்டாள். 

“எப்படியோ தப்பியிருக்கிறான். சீக்கிரம் அகப்பட்டு விடுவான். அவனுக்குச் சீனச்சேரியில் ஒரு காதலி இருக் கிறாள். எப்படியும் அவளைத் தேடிப் போவான். சீனச் சேரியைச் சுற்றிலும் ஒற்றர்களை நிறுத்தியிருக்கிறேன்” என்றான். 

“ஒ… காதலி இருக்கிறாளா?”-மேகலாவின் முகம் வாடி யது. “அவள் என்ன சிறந்த அழகியோ ? சீனப் பெண்களின் கண்கள், இடுங்கிப்போய் அழகாயிராது என்று கேள்விப் பட்டிருக்கிறேன்” என்றள். 

“அவள் எப்படி இருப்பாளோ, இவன் அடிக்கடி அவளைச் சந்திக்கச் சீனச்சேரிக்குப் போவானாம்” என்றான், சித்திரமாயன். 

மேகலாவின் மனத்தில் சங்கடம் தோன்றியது. பொறாமை உள்ளூரக் கனியத் தொடங்கியது. உதய சந்திரனின் நினைவு அவளுடைய தவிப்பை அதிகப் படுத்தியது. 

சித்திரமாயன் சென்றதும், தன்னுடைய அறைக்குள் சென்று படுக்கையில் அமர்ந்தாள். அந்தரங்க மெய்க்காப் பாளனை வரவழைத்து, உதயசந்திரனைப் பற்றி விசாரித் தாள். அவன் இன்னும் அகப்படவில்லை என்ற செய்தியை மெய்க்காப்பாளன் சொன்னான். 

“ஜாக்கிரதை. அவனுக்கு எவ்வித ஆபத்தும் நேராமல் பிடித்து இங்கே கொண்டு வர வேண்டும்” என்றாள். 

மெய்க்காப்பாளன் வணங்கிவிட்டு வெளியேறினான். மேகலாவிற்கு உடல் முழுவதும் பரபரத்தது. உதயசந்திர னுக்கு ஒரு காதலி இருக்கிறாள் என்ற செய்தி முள் மாதிரி மனத்தில் உறுத்திக் கொண்டிருந்தது. அவளை உடனே காணவேண்டும் என்ற தவிப்புக்கு ஆளானாள். நெஞ்சில் கிளர்ந்த மோக அலைகள் அவளுடைய அங்கமெல்லாம் படர்ந்து, படுத்தின. அவன் தீண்டிய இடங்கள் எல்லாம் உணர்ச்சிக் கொந்தளிப்பில் தத்தளித்தன. கண்களை மூடிய படி கற்பனையில் அவனை வலிய இழுத்தாள். மஞ்சத்தில் மெய் மறந்து கிடந்தாள். 

திடீரென்று தாதி ஒருத்தி ஓடி வந்த ஓசை கேட்டு கற்பனையிலிருந்து விடுபட்டாள். கோபம் எழுந்தது. கற்பனையில் காதல் லீலையின் உன்னதமான கட்டத்தில் லயித்திருந்ததைத் தாதி கலைத்து விட்டாளே என்ற கோபத்தில், தாதியை உறுத்துப் பார்த்தாள். 

போர்க்களத்திலிருந்து ஏதோ அவசரச் செய்தி வந்திருப்பதாகவும், தூதர்கள் மகாராணியின் அந்தப்புரத் திற்கு விரைந்திருப்பதாகவும் தாதி கூறினாள். 

மகாராணியின் அந்தப்புரத்தில் தூதர்கள் வந்திருக்கும் செய்தி கேட்டு பிரேமவர்த்தினி எழுந்து, அடுத்த அறைக்குச் சென்றாள். அங்கு இரு வீரர்கள் மிகுந்த பயத்துடனும், பரபரப்புடனும் நின்று கொண்டிருந்ததைக் கண்டு துணுக்குற்றாள். ஏதோ ஓர் அதிர்ச்சி தரக்கூடிய செய்தியைச் சொல்லப் போகிறார்கள் என்பதை யூகித்துக் கொண்டாள். 

மகாராணியைக் கண்டதும் ஒரு வீரன் வணங்கி விட்டு நாக்குழறச் செய்தியை ஒப்புவித்தான்- 

போர்க்களத்தில் சக்கரவர்த்தி வீர மரணமடைந்தார் என்றும் பல்லவப் படை பின் வாங்கி, காஞ்சிக்குத் திரும்புகிறது என்றும் அவன் கூறியதைக் கேட்டுப் பேரதிர்ச் சிக்குள்ளாகிக் கல்லாய்ச் சமைந்துவிட்டாள் மகாராணி. 

அப்போது சித்திரமாயன், அவளைக் காணப் பரபரப் புடன் ஓடிவந்தான். 


தரணிகொண்ட போசர் தம்முடைய மாளிகையின் பேட்டி அறையில் தம்மைப் பேட்டி காண வருபவர்களுக் காக அமர்ந்திருந்தார். காவல் வீரன் அவரிடம் ராஜன் நம்பூதிரியை அழைத்துவந்தான். அவனைக் கண்ட முதன் மந்திரி, அவனைக் கண் இமைக்காமல் பார்த்தார். அவனு டைய சாமுத்திரிகா லக்ஷணங்களைக் கண்டு வியந்தார். அவனுடைய பரந்த நெற்றியையும், கண்களில் வீசிய ஒளியையும், உயர்ந்த நாசியையும் கூர்ந்து கவனித்தார். மார்பில் கிடந்த முப்புரி நூலையும் கண்டார். சிறந்த கல்விமான் என்பதைப் புரிந்து கொண்டார். 

அவரை வணங்கிவிட்டு பவ்வியமாக நின்றான் ராஜன் நம்பூதிரி. அவனை அருகே இருந்த ஆசனத்தில் அமரும்படிக் கூறினார் மந்திரி. ராஜன் நம்பூதிரி கூசியபடியே நின்றான். 

“உட்கார்” என்றார், மீண்டும். ஆசனத்தில் அமர்ந்தான். “இளைஞனே, உன் பெயர் ஸ்ரீ ராஜன் நம்பூதிரி தானே” என்று கேட்டார் மந்திரி. 

“ஆமாம்” என்றான், ராஜன் நம்பூதிரி. 

“உன்னைப் பற்றி சோமயாஜி கூறியிருக்கிறார். முன்பே உன்னைக் காணவேண்டும் என்றுதான் நினைத் தேன். மயானத்தில் நீ ஏதோ பேசினாயாமே?” 

“பேசக்கூட பல்லவ நாட்டில் சுதந்திரம் இல்லையா மந்திரி அவர்களே?” என்று வெடுக்கென்று கேட்டான், ராஜன் நம்பூதிரி. 

மந்திரியின் முகத்தில் முறுவல் தோன்றியது. 

“இளைஞனே, இன்னும் அந்த அளவுக்கு இந்த நாடு இழிநிலையை அடைந்துவிடவில்லை” என்றார், முதன் மந்திரி. 

“அப்படியானால், ஏதோ ஓர் அளவுக்கு இழிநிலை யடைந்திருக்கிறது என்று நினைக்கிறீர்களா?” என்று கேட்டான், ராஜன் நம்பூதிரி. 

மந்திரி அவனை உற்றுப் பார்த்தார். அவனுடைய சாதுர்யத்தை மனதுக்குள் மெச்சிக்கொண்டார். 

“நீ அப்படி எண்ணுகிறாயா?” என்று கேட்டார். ராஜன் நம்பூதிரியின் முகத்தில் ஒரு சோகப்புன்னகை தோன்றியது. “ஒரு நாட்டின் மந்திரிக்குத் தெரியாத நிலைமை யையா ஒரு பிரஜை எண்ணிவிட முடியும்?” என்றான். 

“நாட்டின் நிலையை மந்திரிக்கு உணர்த்தத்தான் மயானத்தில், மக்களைப் போர்க்கோலம் பூணும்படி தூண்டி விட்டாயோ?” என்று மந்திரி கேட்டார். 

ராஜன் நம்பூதிரி திகைத்தான். “மந்திரி அவர்களே, மயானத்தில் என் மனக் குமுறலைக் கொட்டித் தீர்த்தேன். அவ்வளவு தானே தவிர, யாரையும் நான் போர்க்கோலம் பூணச் சொல்லவில்லை. என் வார்த்தைகள் அப்படித் தூண்டி இருக்குமானால், அதற்குப் பொறுப்பாளியும் நானல்லன். என்னைப்பேசத் தூண்டிய சம்பவங்கள் தாம்” என்றான். 

“ஓ, அப்படியானால் உண்மையான குற்றவாளிகள் அந்தச் சம்பவம் நடைபெறக் காரணமாயிருந்தவர்கள்தாம் என்கிறாயா?” என்று கேட்டுச் சிரித்தார் மந்திரி. 

“வேறென்ன?” 

“நாட்டில் யாரோ ஒரு பிரஜைக்குத் துன்பம் நேர்ந்திருக் கிறது. அதன் பொருட்டு ஓர் அரசையே எதிர்ப்பதா?” 

“மந்திரி அவர்களே, அந்த யாரோ ஒரு பிரஜை, மனித இனந்தான். இங்கு பறி போயிருப்பது மனிதனின் சுதந்திரம். ஆட்சிப் பீடத்தில் இருப்பவர்களுக்குத் தனி மனிதனின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் ஆற்றலும் கிடையாது, அக்கறையும் கிடையாது.” 

“அரசுக்கு சமுதாயத்தைப் பற்றித்தான் அக்கறை உண்டு.” 

“சமுதாயம் என்பதே தனிமனிதனின் கூட்டமைப்புத் தான்.தனிமனிதன், சமுதாயத்தின் ஆணிவேர்.’ 

“நாடு,ஆட்சி என்பதெல்லாம் ஒரு தத்துவத்தின் அடிப் படையில் இயங்குபவை. அந்த இயக்கத்தின் லட்சியத்தைச் சிதையாமல் காக்க முனையும்போது, சில வேளைகளில் தனிப்பட்டவர்களை ஒழிக்க வேண்டிய கடமை அரசுக்கு ஏற்படுவதுண்டு” என்றார் மந்திரி. 

“வறட்டுத் தத்துவங்களைக் காரணம் காட்டி லட்சக் கணக்கில் தம் நாட்டு பிரஜைகளையே கொன்று குவிப்பது கூட நியாயந்தான் என்று அதிகார பீடத்திலிருப்பவர்கள் எண்ணினாலும் வியப்பில்லை. இப்படிப்பட்ட கொடுமை யாளர்கள் அதிகார வெறி கொண்டு ஆட்சி பீடத்தில் இருக் கும்வரை, மனிதர்களுக்குச் சுதந்திரம் ஏது ?” என்று ராஜன் நம்பூதிரி,ஆத்திரத்துடன் கூறினான். பிறகு தொடர்ந்து, “மந்திரி அவர்களே, தனிமனிதனின் உணர்வுகள்தாமே ஒரு சமுதாயத்தின் நாகரிகமும் கலாச்சாரமும். அவனுடைய சுதந்திரத்தைப் பறித்து, அடிமைப்படுத்தி நலியவைத்து விட்டால், பிறகு, இந்தச் சமுதாயத்திற்கு என்ன பெருமை? நலிந்தவர்களைக் கொண்ட சமுதாயமும் சோகை பிடித்துப் போயிருக்கும். வலுவிழந்த ஆண்மையற்ற சமூகத்தை ஆள்வது ஆட்சியாளர்களுக்குச் சுலபம். ஆனால் அதில் என்ன பெருமை? இதைவிட, ஆட்டுமந்தையை ஆளலாமே. பல்லவ நாடே ஒரு மாபெரும் சிறைச்சாலை என்ப தில் பெருமைப்படப்போகிறீர்களா?” என்றான். 

“இளைஞனே, உன் மனவேதனையை நான் உணர் கிறேன். ஆட்சியில் இப்படி ஏதாவது ஓர் அசம்பாவிதம் எப்போதாவது நேர்வதுண்டு. அதற்காக அரசையே எதிர்ப்பது தற்கொலைக்கு ஒப்பாகும். நம் கையே நம் கண்ணைக் குத்திவிட்டால், கையை வெட்டி விட முடியுமா?” 

“கை புரையோடி அழுகி, வேதனை கொடுத்தால், அதை வெட்டி எறிந்து விடுவதுதானே சிறந்த மார்க்கம்” என்றான் ராஜன் நம்பூதிரி. 

அவனை அன்போடு தோளில் தட்டினார் மந்திரி. “தம்பி, உன்னுடைய பேச்சு மக்களை எழுப்பி விட்டிருக் கிறது. இதனுடைய எல்லை எதுவாக இருக்கும் என்று எண்ணுகிறாய்? சிந்தித்துப் பார்த்தாயா?” என்று கேட்டார். 

“மந்திரி அவர்களே, மக்கள் உண்மையாகவே விழித் துக் கொள்வார்களேயானால், இதனுடைய எல்லை, இந்த ஆட்சியின் முடிவுதான்.” 

“நீ எங்காவது கேள்விப்பட்டிருக்கிறாயா அல்லது படித்தாவது இருக்கிறாயா, இப்படி மக்களின் சக்தி, ஓர் ஆட்சியை எதிர்த்து நின்று முடிவுக்குக் கொண்டுவந்தது என்பதை?” 

“ஐயா, அரசவையில், ஒரு பெண்ணின் பேச்சு, பாண்டிய மன்னனின் உயிரை, அந்த இடத்திலேயே வாங்கி விட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இவ்வளவுக்கும் மன்னன், மக்களுக்கு எதிராகக் கூடச் செயல்படவில்லை. அந்தப் பெண்ணின் கணவனைத்திருடன் என்று தவறாக எண்ணி, மரணதண்டனை கொடுத்தான். ஒரே ஒரு உயிரை அநியாயமாகக் கொன்றதற்கு, பாண்டியனுக்கு நேர்ந்த கதி அது ! ஒரு அபலைப் பெண்ணின் பேச்சுக்கு அவ்வளவு சக்தி இருக்குமானால், ஒரு நாட்டு மக்களே ஒன்று திரண்டெழுந்தால்… 

“மக்களை திரட்ட முடியும் என்று நம்புகிறாயா?” 

“முடியும், நாட்டில் எல்லாருமே கோழைகள் அல்லர். எல்லாருமே அறிவிலிகள் அல்லர். துணிவுள்ளவர்களும், சிந்தனையாளர்களும் கொஞ்சப் பேராவது இருப்பார்கள். அவர்கள் போதும். அவர்களை விழிக்க வைத்துவிட்டால் போதும் மந்திரி அவர்களே.” 

“இளைஞனே, உன்னுடைய உற்சாகத்தையும் நம்பிக் கையையும் கண்டு நான் பெருமைப்படுகிறேன். உன்னு டைய சொல்லுக்குச் சக்தி இருக்கிறது. ஆனால் உன் பேச்சில் மயங்கி மக்கள் கிளர்ச்சியில் இறங்கினால் அவர்களுக்கு என்ன நன்மை கிடைத்துவிடும் ? உன்னுடைய மயானப் பேச்சினால் நிகழ்ந்ததென்ன? காஞ்சி நகர் கட்டடங்களைச் சேதப்படுத்தினார்கள். அவையெல்லாம் அவர்களுடைய வரிப்பணத்தில் கட்டியவைதாம். நாட்டில் சேதப்படுத்தி நஷ்டத்தை உண்டு பண்ணினால், அதை ஈடுசெய்ய இதே மக்கள்தாமே இன்னும் வரி கொடுக்க வேண்டியிருக்கும்.” 

“ஒரு கொடுமையை எதிர்த்துப் போராடும்போது ஏற்படும் துயரங்களை அனுபவிக்க வேண்டியதுதான். ஒரு பெரிய துன்பத்திலிருந்து மீள சிறு துன்பத்தை ஏற்பதில் என்ன தவறு?” 

“தம்பி, உன்னுடைய தத்துவங்கள் கேட்பதற்கு நன் றாக இருக்கின்றன. ஆனால்,நடைமுறைக்கு உதவாதவை. திட்டம் இல்லாமல் எந்தக் காரியமும் வெற்றியடையாது. மேலும் சக்தி இல்லாதவர்களிடம் திட்டமிருந்தும் பய னில்லை. சக்தி வாய்ந்த அரசை தெருக்கிளர்ச்சிகளால் பணிய வைக்க முடியாது. மக்கள் தாம் முடிவில் பலியா வார்கள். கிளர்ச்சிக்கு நீதான் காரணம் என்று அரசு அறியு மானால், உனக்கும் ஆபத்துத்தான்” என்றார் மந்திரி. 

“ஆபத்தைப் பற்றி நான் அக்கறை கொள்ளவில்லை” என்றான் ராஜன் நம்பூதிரி உறுதியாக. 

“மக்களை அரசுக்கு எதிராகத் தூண்டுவது ராஜத் துரோகம் என்பது உனக்குத் தெரியுமே.” 

“மந்திரி அவர்களே, என்னைப் பயமுறுத்துகிறீர்களா? நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம் என்று முதன் முதலில் ஒரு தனிமனிதன், அரசை எதிர்த்து சுதந்திரக் குரல் கொடுத்தது இந்தப் பல்லவ நாட்டில்தான். இன்னும் அந்த உணர்வு இங்கு கொஞ்சமாவது இருக்கும். அதை என்னால் திரட்டி, கொடுமையை எதிர்த்து நிற்க முடியும். மகாராணி, மக்களின் தர்மகர்த்தாவாக அல்லாமல், சுய நலமிக்க கொடிய சர்வாதிகாரியாகும் போது, அவளுக்குக் கீழிருந்து வதைப்படுவதைவிட, அவளை எதிர்த்து உயிரை விடுவதுமேல். இந்த முயற்சியில் என் உயிர் போவதைப் பற்றி நான் அக்கறை கொள்ளவில்லை” என்றான் ராஜன் நம்பூதிரி. 

முதன் மந்திரி அவனை வியப்புடன் பார்த்தார். அவனு டைய கண்களில் தெரிந்த சுதந்திர வேட்கையும், பேச்சில் தொனித்த தன்னம்பிக்கையும் அவரைச் சிலிர்க்க வைத்தன. அவனுடைய தோளில் வாஞ்சையுடன் கையை வைத்து அழுத்தியவாறு, “உயிரை அசட்டுத்தனமாக இழப்பதில் பெருமை இல்லை. நிதானமாகச் செயல்பட வேண்டும். உன்னை எச்சரிக்கத்தான் இங்கே அழைத்துவரச்செய்தேன். உன்னுடைய நண்பனை வீரர்கள் தேடிக்கொண்டிருக் கிறார்கள். நீயும் ஆபத்தில் சிக்கிக் கொள்ளாதே. நாட்டில் இப்போது காணப்படும் சூழ்நிலை தற்காலிகமானதே. சக்ரவர்த்தி திரும்பி வந்தால், எல்லாம் சரியாகிவிடும். பொறுமையாக இரு. எச்சரிக்கையாகவும் இரு” என்றார் மந்திரி. 

அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது, ஒரு காவல் வீரன் விரைந்து வந்து, போர்க்களத்துக்குச் சென்ற தூதன் திரும்பி வந்திருப்பதாக அறிவித்தான். அதைக் கேட்டு முதன் மந்திரி திடுக்கிட்டார். மன்னரிடம் தூது சென்றவன் அதற் குள் எப்படித் திரும்பி வந்திருக்க முடியும் என்று சந்தேகித் தார். ராஜன் நம்பூதிரியை அனுப்பிவிட்டு, தூதனை உள்ளே அழைத்துவர உத்தரவிட்டார். உள்ளே வந்த தூதன் கொண்டு வந்த செய்தியைக் கேட்டு மந்திரி பதறிப்போனார். 

“நான் பாதிவழி சென்றபோதே எதிரில், போர்க்களத் திலிருந்து இரண்டு தூதர்கள் மன்னரின் மரணச் செய்தியைத் தாங்கி வந்துவிட்டார்கள்” என்றான் தூதன். 

“அந்தத் தூதர்கள் இதற்குள் அரண்மனையில் செய்தி யைச் சொல்லியிருப்பார்களா?” என்று மந்திரி கேட்டார். 

“நானும் அவர்களும் ஒன்றாகத்தான் கோட்டைக்குள் வந்தோம். இந்நேரம் அவர்கள் அரண்மனையை அடைந்திருப்பார்கள்” என்றான், தூதன். 

முதன்மந்திரி உடனே தன்னுடைய இரதத்தில் இரணிய வர்மரின் மாளிகைக்கு விரைந்தார். 

26. விநாசகாலே விபரீத புத்தி 

மாலையில் அந்தி மயங்கும் நேரத்தில், கோட்டை வாயிலைக் கடந்து வெளியே சென்று கொண்டிருந்த கூட்டத்தோடு ஒரு காபாலிகன், கழுத்தில் மண்டை யோட்டு மாலையை அணிந்து கொண்டு, கையில் ஒரு மண்டை ஒட்டையும் ஏந்தியவாறு சென்று கொண்டிருந் தான். கூட்டத்திலிருந்து சிலர் அவனிடம் குறும்பு பண்ணத் தொடங்கினர். 

“என்ன சாமியாரே, கையிலிருக்கும் மண்டையோட் டுக்குச் சொந்தக்காரன் யாரோ?” என்று கேட்டான் ஒருவன். “உன்னைப் போல் ஒரு முட்டாள்தான்” என்றான், காபாலிகன். 

அதைக் கேட்டுப் பலர் சிரித்தார்கள். இன்னொருவன் கேட்டான், “உன் மண்டையோட்டுக்கு எந்த முட்டாள் சொந்தக்காரன் ஆவானோ?” 

“நீயே ஆகிக் கொள்ளேன். இப்போதே வேண்டுமா னாலும் உனக்கு உரிமை ஓலை எழுதித் தந்து விடுகிறேன்” என்றான்,காபாலிகன். 

“சாமியாரே, தனியாகப் போகிறீரே, உம்முடைய காபாலிகை எங்கே?” என்றான் ஒருவன். 

“அவளைத் தேடித்தான் சாமியார் போகிறார் போலிருக் கிறது” என்றான் மற்றொருவன். 

“அவளை எங்கே போய்த் தேடுவார்? இவருடைய பைரவர் தாண்டவமாடும் மயானத்திலா?” என்று கேட்டு ஒருவன் சிரித்தான். 

“அவளும் மயானத்தில் மண்டை ஓடுகளை பொறுக்கப் போயிருக்கிறாளோ என்னவோ?” என்று ஒருவன் கூறியதும் கூட்டத்திலிருந்தவர்கள் சிரித்தார்கள். 

“நீங்களும் ஒரு நாள் சுடுகாட்டில் மண்டை ஓடுகளை இழக்க வேண்டியவர்கள்தாம்” என்றான் காபாலிகன். 

“அப்போது நீர் வந்து பொறுக்கிக் கொள்ளும்” என்று ஒருவன் கூறியதும், எல்லாரும் சிரித்தார்கள். 

கோட்டையை விட்டு அகழிப் பாலத்தின் வழியே வெளிவந்த காபாலிகன், அகழியின் ஓரமாகவே நடந்து சென்றான். சீனச் சேரியில் ஓரிரண்டு வீடுகளில் பிச்சை ஏற்றுக் கொண்டு டெங்லீயின் வீட்டுவாசலில் போய் நின்ற போது, லீனா மருக்கொழுந்து செடிகளிருந்த மண் பானை களில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள். காபாலிகனைக் கண்டதும் அவனுக்குப் பிச்சை போடுவதற்காக அரிசி எடுக்க வீட்டினுள்ளே அவள் சென்றபோது, காபாலிகனும் அவளைப் பின் தொடர்ந்து சென்றான். வீட்டுக்குள் காபாலிகன் வந்ததைக் கண்டு திகைத்த லீனா, பயந்து போய் கூச்சலிட எத்தனித்த போது, காபாலிகன், அவள் வாயைப் பொத்தி, “லீனா,இரைந்து விடாதே. நான் தான்” என்றான். 

குரலை அடையாளம் கண்டு கொண்ட லீனா, வியப் பும், பரபரப்பும் ஒருங்கே அடைந்தவளாய், காபாலிகனின் தலையிலிருந்த லிங்க மகுடத்தைத் தட்டி விட்டாள். 

“இப்படி மாலையில், இவ்வளவு வெளிச்சம் இருக்கும் போது வந்திருக்கிறீர்களே, ஆபத்தில்லையா?” என்றாள் மிகுந்த கவலையுடன். 

“இருட்டிய பிறகு வந்தால்தான் சந்தேகம் தோன்றும். எப்படி வேஷம்? அடையாளமே தெரியவில்லையல்லவா?” என்றான், உதயசந்திரன். 

“சீக்கிரம் குளியுங்கள், உடலெல்லாம் ஒரே சாம்பல். மண்டை ஓட்டைக் கழற்றுங்கள். பார்க்கவே பயமாயிருக்கிறது” என்றாள். லீனா. 

அன்று இரவு பத்திரமாக அங்கு தங்கிவிட்டு மறுநாள் வெளியேறுவது என்று முடிவு செய்திருந்தான். எந்தச் சமயத் திலும் ஒற்றர்கள் அவனைத் தேடி அங்கு வரலாம் என்ப தால், தோட்டத்திலுள்ள குடிசையில் அவன் தங்கு வதென்றும், மறுநாள் அவனையும் லீனாவையும் பத்திரமாக மாமல்லபுரம் அழைத்துச் சென்று, சீனத்துக்குக் கப்பலேற்றி விடுவதென்றும் டெங்லீ முடிவு செய்தார். ஆனால், உதய சந்திரன் அதற்குச் சம்மதிக்கவில்லை. 

இனி அவனால் பல்லவ நாட்டில் வாழ முடியாது என்பது அவனுக்குத் தெரியும். அவன் அகப்பட்டால் கழுவேற்றப்பட்டு விடுவான். அதற்காக கடல் கடந்து, மொழி தெரியாத சீன நாட்டுக்குச் செல்லவும் அவன் விரும்ப வில்லை. பாண்டிய நாட்டுக்கோ அல்லது சோழ நாட்டுக்கோ போய்விட எண்ணினான். அவன் எவ்விதம் முடிவு செய்தாலும் லீனா ஏற்கத் தயாராயிருந்தாள். அவளி டம் நிறையத் தங்கம் இருந்தது. அதைக் கொண்டு எந்த நாட்டிலும் சுகபோகமாக வாழமுடியும். 

முடிவாக இருவரும் பாண்டிய நாட்டுக்குப் போய் விடத் தீர்மானித்தார்கள். பாண்டிய நாட்டில், கொற்கைக் கடற்கரையில் ஒரு சீனக் குடியிருப்பு இருந்தது. அங்கு போய் குடியேறுவது என்று முடிவு செய்தார்கள். மறுநாட் காலையில் உதயசந்திரனும் ஒரு சீனப்பெண்ணைப்போல் வேடம் அணிந்து கொண்டு லீனாவுடன் புறப்படுவது என்றும், டெங்லீ உடன் சென்று, பாண்டிய நாட்டில் அவர் களைக் குடியமர்த்திவிட்டுத் திரும்பவுதென்றும் முடிவா கியது. 

அன்று இரவு, உணவுக்குப் பின், உதயசந்திரனை தோட்டத்துக் குடிசைக்கு டெங்லீ அழைத்துச் சென்றார். அவர் கையிலிருந்த சிறு விளக்கின் வெளிச்சத்தின் உதவி யால் இருவரும் தோட்டத்தினுள் நடந்தனர். அப்போது அருகாமையில் ஒரு புதருக்கு அடியில் சலசலப்புக் கேட்கவே உதயசந்திரன் திகைத்துநின்றான். 

“ஒன்றுமில்லை பயப்படாதே. இந்தத் தோட்டத்தில் வாழும் ராஜநாகம்தான். ஒன்றும் செய்யாது. லீனாவுடன் நன்கு பழகி விட்டது. அதோ…” என்றவாறு விளக்கை உயர்த்திப் பிடித்தார்,டெங்லீ. 

புதருக்கு அருகில் நாகம் ஊர்ந்து சென்றது விளக்கு வெளிச்சத்தில் தெரிந்தது. 

“கொடிய நாகம் கூட அன்புக்குக் கட்டுப்படுகிறது. இந்நாட்டு இளவரசன் நாகத்தை விடக் கொடியவனாயிருக்கிறான்” என்று முணுமுணுத்தபடியே கோபத்தினால் பற்களைக் கடித்தான், உதயசந்திரன். 

இருவரும் குடிசையை நோக்கி நடக்கத் தொடங்கினர். ஒரு மரத்திலிருந்து ஏதோ சலசலப்புக் கேட்கவே, உதய சந்திரன் திடுக்கிட்டுநின்றான். 

“ஒன்றுமில்லை. காற்றில் கிளைகள் ஆடுகின்றன” என்றார், டெங்லீ. 

உதயசந்திரன், மரத்தை அண்ணாந்து பார்த்தான். இருளில் ஒன்றும் தெரியவில்லை. சற்று தூரம் சென்றதும் இன்னொரு மரத்திலிருந்து சலசலப்புக் கேட்கவே, “காற்றின் சலசலப்பாகத் தெரியவில்லையே. யாரோ மரத்தின் மீது, ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்குத் தாவுவது போலிருக்கிறதே” என்றான், உதயசந்திரன். 

“இரவு வேளையில் மரங்களில் அப்படித்தான் சப்தம் கேட்கும். இந்த விளக்கு வெளிச்சத்தைக் கண்டு காட்டுப் பூனையோ அல்லது குரங்கோ கிளை தாவியிருக்கும். வேறொன்றும் இல்லை” என்றார், டெங்லீ. 

தோட்டத்தின் நடுவே இருந்த ஒரு குடிசைக்குள் உதயசந்திரன் சென்றதும், அது விருந்தினர்கள் தங்குவதற்கு எல்லா வசதிகளும் கொண்ட இடம் என்பதைப் புரிந்து கொண்டான். 

“இது பாதுகாப்பான இடம். இங்கே யாரும் தேடி வரமாட்டார்கள். அடர்த்தியான மரங்களினூடே இருக்கும் இந்தக் குடிசை யார் கண்களிலும் படாது. தனியாக இருப் பாயா அல்லது நானும் துணைக்கு இருக்கட்டுமா?” என்று கேட்டார், டெங்லீ. 

“எனக்குப் பயமில்லை. நீங்கள் வீட்டுக்குப் போங்கள். பெண்கள் அங்கே தனியாக இருப்பார்கள்” என்றான், உதயசந்திரன். 

டெங்லீ கைவிளக்கை அந்தக் குடிசையில் வைத்து விட்டு வெளியேறினார். குடிசைக் கதவைச் சாத்திவிட்டுக் கயிற்றுக் கட்டிலில் படுத்த உதயசந்திரனுக்கு உறக்கம் வரவில்லை. பாண்டிய நாட்டில் போய்க் குடியேறுவது பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். 

இலங்கையிலிருந்து அவன் தாய்நாடு திரும்பியோது, தன்னுடைய வருங்காலத்தைப் பற்றி எவ்வளவோ கற்பனை செய்திருந்தான். இப்போது தாய்நாடு அவனை வேட்டையாடுகிறது. பாண்டிய நாடும் தமிழ் பேசும் மண் தானே. அதுவும் புகழ்பெற்ற நாடுதான். தமிழுக்குச் சங்கம் வளர்க்கும் நாடல்லவா! அங்கே சிறக்க வாழ வகை யில்லாமலா போய்விடும் ? லீனாவுடன் அங்கே புது வாழ்வு தொடங்க வேண்டியதுதான்… 

லீனாவின் நினைவு வந்ததும் அவனுள் உற்சாகம் தோன்றியது. குடிசைக்கு அவனை டெங்லீ அழைத்து வந்ததைவிட, லீனா அழைத்து வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். தானே கொண்டு விடுவதாக லீனா சொல்லத்தான் செய்தாள். ஆனால் கிழவர்தாம் விவரம் புரியாமல், இருட்டு வேளையில் கன்னிப்பெண் தோட்டத் துப் பக்கம் போகக்கூடாது என்று தடுத்து, அவள் கையி லிருந்த விளக்கைத் தாம் வாங்கிக் கொண்டார். பாவம், லீனாவின் முகம் ஏமாற்றத்தால் வாடிவிட்டது. அவளை உதயசந்திரன் திரும்பிப் பார்த்தபோது அவள் சிணுங்கிய படியே அவனைப் பார்த்து முகத்தை வலித்தாளே… 

உதயசந்திரன் அதை நினைத்து ரசித்தபடியே படுத்துக் கிடந்தான். குடிசைக்கு வெளியே ஏதோ தொப்பென்று விழுந்த ஒலி கேட்டது, எழுந்து, சன்னல் வழியே எட்டிப் பார்த்தான். இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. உள்ளு ணர்வு அவனை எச்சரித்தது. சற்று நேரம் ஓரமாக நின்ற வாறே கூர்ந்து கவனித்தான். குடிசைக்கு வெளியே ஏதோ விவரமில்லாத ஒலிகள் கேட்டன. உதயசந்திரன் எச்சரிக்கை யடைந்தான். குடிசையினுள்ளே எரிந்து கொண்டிருந்த விளக்கை அணைத்தான். வாசற்புறத்தில், நாலைந்துபேர் நிற்பது தெரிந்தது. மெல்ல நகர்ந்து, அறையின் பின்புறச் சன்னல் வழியாகப் பார்த்தான். குடிசையின் பின்புறத்திலும் நாலைந்து பேர் நிற்பது தெரிந்தது. அவர்களிடம் ஆயுதம் இருக்கிறதா இல்லையா என்பதை இருட்டில் அனுமானிக்க முடியவில்லை. நட்சத்திரங்களின் ஒளியில் மிக மங்கலாக ஆட்களின் உருவங்கள் மட்டுமே தெரிந்தன. 

தான் வசமாக அகப்பட்டுக் கொண்டதை உணர்ந் தான். ஒரு கணம் தன்னுடைய நிலையை எண்ணிப் பச்சாதா பமடைந்தான். 

இப்படி அகப்பட்டுக் கழுவேறிச் சாகவா தாய் நாட்டுக்குப் புறப்பட்டு வந்தேன்… ? எப்படியாவது தப்பிக்க வேண்டுமே… 

மெல்ல வாசற்கதவின் தாழை அகற்றினான். கதவை ஒட்டி நின்று கொண்டான். சற்று நேரத்தில் கதவு அசைந்தது தெரிந்தது. ஒருவனுடைய தலை, உள்ளே எட்டிப் பார்த்தது. பிறகு அவன், மெல்ல உள்ளே காலடி வைத்தான். மறுகணம், உதயசந்திரனின் கை, அவனுடைய கழுத்தில் ஓங்கி விழுந்தது. அடியை வாங்கியவன் தள்ளாடி குடிசைக் குள் விழுந்ததுமே உதயசந்திரன் குடிசையை விட்டு வெளியே பாய்ந்தான். அப்போது வெளியே நின்றவன், அவனுடைய தோளைப்பற்றினான். உதயசந்திரன் துள்ளி, அவனைக் காலால் உதைத்தான். உதைபட்டவன், அலறிய படியே தூரப் போய் விழுந்தான். ஆனால் உதயசந்திர னுக்குப் பின்னாலிருந்து பலர் பாய்ந்து அவனை அழுத்திப் பிடித்துக்கொண்டனர். 

“தப்ப முயற்சிக்காதே. இந்த இடத்திலேயே பிணமாகி விடுவாய்” என்று கூறியவனின் வாள், உதயசந்திரனின் நெஞ்சைத் தொட்டுக் கொண்டிருந்தது. இனி தன்னால் தப்ப இயலாது என்பதை அறிந்ததும், உதயசந்திரன் சலனமற்று நின்றான். 


இரணியவர்மரின் மாளிகையில், காஞ்சி நகரின் பல வாரியத் தலைவர்களும், மந்திரிகளும் கூடியிருந்தனர். முதன் மந்திரி எல்லாருக்கும் மிக ரகசியமாக அழைப்பு அனுப்பி,இரணியவர்மரின் மாளிகையில் கூட்டியிருந்தார். இரண்டாவது மந்திரி அச்சுதபட்டரை அழைக்கவில்லை. கூடியிருந்தவர்கள் எல்லாருடைய முகங்களிலும் ஆழ்ந்த கவலை படர்ந்திருந்தது. 

போர்க்களத்தில் சக்கரவர்த்தி இறந்துவிட்டார். இனி அரியணையில் முடி சூட வேண்டியவன் சித்திரமாயனே அதை எண்ணித்தான் பலருடைய உள்ளங்களில் கொந் தளிப்பு ஏற்பட்டிருந்தது. 

“இனி இளவரசுக்குப் பட்டம் சூட்டவேண்டியதைக் கவனிக்க வேண்டியதுதானே” என்றார், முதன்மந்திரி. 

யாரும் பதில் கூறாமல் மௌனமாயிருந்தனர். 

“இனி யோசிப்பதற்கு என்ன இருக்கிறது?” என்றார், முதன்மந்திரி. காஞ்சிநகர் காவல் தலைவர் ஜெயவர்மர், ஏதோ கூறநினைத்து, வெளியே சொல்ல முடியாமல் நெளிந் தார். 

அரசாங்கப் பண்டாரத் தலைவர், ஸ்கந்த குமாரர், மெல்லச் சொன்னார்: – “மகாராணிதாம் இப்போது அரியணையில் இருக்கிறாரே. இளவரசர் வயதில் சிறியவர். சில நாள் மகாராணியாரே ஆட்சிப் பொறுப்பில் இருந்தா லென்ன?” 

“எல்லாம் ஒன்றுதான்” என்றார், ஜெயவர்மர், எரிச்சலுடன். 

“சக்கரவர்த்தியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி ஆகிவிட்டதே” என்றார், மூன்றாவது மந்திரி. 

“பல்லவடி அரையரைப் படையுடன் காஞ்சிக்கு வரும் படி இளவரசர் உத்தரவு அனுப்பியிருக்கிறார். இன்னும் சில குறுநில மன்னர்களுக்கும், கோட்டத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்” என்றார், முதன்மந்திரி. 

“எதற்காக இப்போது அழைப்பு” என்று கேட்டார், ஜெயவர்மர். 

“இளவரசர் என்ன திட்டம் போடுகிறார் என்பது தெரிய வில்லை. சரி, இப்போது உடனடியாக நடக்க வேண்டியதை நாம் கவனிப்போம்” என்றார், முதன் மந்திரி. 

“மன்னரின் மரணச் செய்தியை மகாராணி இன்னும் நமக்குத் தெரிவிக்கவில்லையே” என்றார், நான்காவது மந்திரி, விஷ்ணுசர்மன். 

“செய்தி மாலையே வந்துவிட்டது. இதற்குள் மந்திரி சபையைக் கூட்டியிருக்க வேண்டுமே” என்று இரணிய வர்மர் முதன் மந்திரியிடம் கேட்டார். 

“மகாராணி என்ன நினைத்து, செய்தியை வெளியிடச் சுணங்குகிறாரோ?” என்றார், தரணிகொண்ட போசர். 

“எப்படியும் மக்களுக்கு உண்மை தெரிய வேண்டுமே. எவ்வளவு நாட்களுக்கு மறைக்க முடியும் ? போர்க் களத்தி லிருந்து திரும்பி வந்து கொண்டிருக்கும் படை, இன்னும் சில தினங்களில் காஞ்சி நகரை வந்தடைந்துவிடும். வேண்டு மானால், செய்தியை அதுவரை மறைக்கலாம்” என்றார், விஷ்ணுசர்மன். 

சற்று நேரம் யாரும் பேசவில்லை. ஒவ்வொருவர் மனத்திலும் பல சிந்தனைகள் குழப்பிக் கொண்டிருந்தன. 

“மன்னரின் மரணச் செய்தி மக்களிடையே ஏதாவது மனமாற்றத்தை ஏற்படுத்துமோ என்று மகாராணி அஞ்சு கிறாரோ என்னவோ” என்றார், ஸ்கந்த குமாரர். 

“அப்படி என்ன மாற்றந்தான் ஏற்படுகிறது என்பது தெளிவாகிவிடட்டுமே” என்றார் விஷ்ணுசர்மன். 

முதன் மந்திரி, “இப்போது இங்கேயே மந்திரிசபை கூடி யிருக்கிறது. இரண்டாவது மந்திரி ஒருவர்தாமே இல்லை. மன்னரின் மரணச் செய்தியை மக்களிடையே அறிவிக்கநாம் உத்தரவு அனுப்புவோம்” என்றார். பிறகு, ஜெயவர்மரை நோக்கி, “இப்போது, இருட்டுகிற சமயமாகிவிட்டது. நன்றாக இருட்டி விடுவதற்குள் காஞ்சிநகர் முழுவதிலும் பறையறைந்து, மன்னரின் மரணச் செய்தியை அறிவிக்கச் சொல்லுங்கள். மந்திரி சபையின் மணியையும் ஒலிக்கச் செய்யுங்கள். இரவில் உங்கள் காவல் படையினரை எச்சரிக் கையாகநகரைச்சுற்றிவரச் செய்யுங்கள். செய்தியை மக்கள் எப்படி ஏற்கிறார்கள் என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ளலாம்” என்றார். 

முதன் மந்திரியின் உத்தரவை மற்ற மூன்று மந்திரிகளும் ஆமோதித்தார்கள். மன்னரின் மரணச் செய்தியை ஓலையில் எழுதி, தம்முடைய முத்திரையை இட்டு, ஜெயவர்மரிடம் முதன்மந்திரி கொடுத்தார். 

சற்று நேரத்தில் எல்லாரும் விடைபெற்றுச் சென்றனர். கடைசியில் முதன்மந்திரி, இரணியவர்மரிடம் விடைபெற்ற போது, “மகாராணியும், இளவரசரும் மனதில் என்ன எண்ணுகிறார்கள் என்பது தெரியவில்லை. ஏதோ நடை பெறப்போகிறது என்று என் உள்மனம் கூறுகிறது. எதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டியதுதான்” என்றார். 

“அப்படி என்னதான் நடந்துவிடும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?” 

“மக்கள் ஒருவேளை இளவரசர் அரியணையில் ஏறு வதை விரும்பவில்லையென்றால்?” 

“ஓ…!அப்படியும் நடைபெறுமா என்ன? பாரம்பரியப் படி அரியணை ஏறவேண்டிய ஒரு இளவரசனைத் தடுத்து நிறுத்த மக்களால் முடியுமா என்ன? அப்படி எங்காவது நடந்ததாகக் கேள்விப்பட்டதுகூட இல்லையே” என்று வியப்புடன் சொன்னார் இரணியவர்மர். 

“கேள்விப்படாத விஷயங்கள் எல்லாம் நடக்க முடி யாது என்று அர்த்தமா? மக்கள் சக்தி அபரிமிதமானது. இது வரை எந்தநாட்டிலும் மக்கள் தங்கள் சக்தியை உணர்ந்து செயல்படவில்லை. இங்கு சில தினங்களாக மக்கள், ஆங்காங்கே திரண்டு தங்கள் சக்தியைக் காண்பித்திருக் கிறார்கள். அன்று, வடமொழிக் கடிகையின் மாணவ னுடைய பேச்சு மக்களின் சக்தியை விழிக்க வைத்து விட்டதே! இரண்டாவது மந்திரியின் மாளிகையைத் தாக்கும் துணிவு மக்களுக்கு வந்திருக்கிறதே! இது போதாதா?” என்றார் முதன்மந்திரி. 

“என்னால் கற்பனைகூடப் பண்ணிப் பார்க்கமுடிய வில்லை. அரியணைக்கு எதிராக மக்கள் செயல்பட முடியுமென்று.” 

“முடியும் என்று சிலர் சிந்திக்கத் தொடங்கிவிட்டால்?” 

“புதுமைதான், இப்படி ஏதாவது நடைபெறலாம் என்று எதிர்பார்த்துதான், பல்லவடி அரையரைப் படையோடு வருமாறு இளவரசன் உத்தரவு அனுப்பியிருக்கிறானோ?” 

“இருக்கலாம். அதற்குள் மன்னரின் மரணச் செய்தி கேட்டு எப்படிச் சிந்திக்கிறார்கள் என்று கவனிக்கலாம். மக்களுக்குச் செய்தி தெரிந்துவிட்டதை அறிந்து மகாராணி யும், இளவரசரும் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதையும் கவனிப்போம்” என்று கூறிவிட்டு விடைபெற்ற தரணிகொண்ட போசர், அரண்மனையை நோக்கி நடந்தார். 


முதன்மந்திரி அரண்மனையை அடைந்தபோது, அவர் எதிர்பார்த்ததைப் போல் மகாராணி இல்லை. அவள் சோகமே வடிவாக, தலைவிரிகோலத்துடன் கண்ணீர் பெருக அவரை வரவேற்பாள் என்று எதிர்பார்த்துச் சென்ற வர் ஏமாந்து போனார். 

அவர் சென்ற போது, பிரேமவர்த்தினி படுக்கையறை யில் இருந்தாள். முதன் மந்திரி வந்திருக்கும் தகவல் தெரிந்த தும் அவள் வெளியே வந்தாள். சோகத்தை மிகச் சிரமப் பட்டு வரவழைத்துக் கொண்டு வந்தாள். அவளைக்கண்ட தும், முதன்மந்திரி, “மகாராணி அவர்களே, பேரிடி விழுந்து விட்டதே, இந்நாடே அநாதையாகி விட்டது, தேவியாரே” என்றார். 

பிரேமவர்த்தினி வியப்புடன், “உங்களுக்கும் செய்தி தெரியுமா? எப்போது செய்தி வந்தது. யார் செய்தி கொண்டு வந்தார்கள்?” என்று கேட்டாள். அவளிடம் காணப்பட்ட பயத்தையும் பரபரப்பையும் முதன்மந்திரி கவனித்தார். 

“சற்று முன்தான் செய்தி வந்தது. தெரிந்த உடனே தங்களைக் காண விரைந்து வந்தேன், இது யாரும் எதிர்பாராத அதிர்ச்சி” என்றார். 

“என்ன செய்வது, கடவுள் சித்தம் அப்படி” என்றாள், பிரேமவர்த்தினி. பிறகு, “இனி நடக்க வேண்டியதைக் கவனிக்க வேண்டும். பல்லவப் படை திரும்பியதும் சித்திர மாயனுக்கு மகுடம் சூட்டுவதற்கான ஏற்பாட்டைக் கவனிக்க வேண்டும். அரியாசனம் காலியாக இருக்கக் கூடாது” என்றாள். 

“மன்னரின் ஈமக் கிரியைகள் முடிந்த பிறகு, மூன்று நாட்கள் துக்கம் அனுஷ்டித்த பிறகுதான் மற்ற விஷயங் களைக் கவனிக்க வேண்டும். மேலும் அரியாசனம் இப் போது காலியாகவும் இல்லை. இப்போது தாங்கள்தாம் அலங்கரிக்கிறீர்களே.’ 

“எனக்கு இந்தப் பொறுப்பு வேண்டாம். உரிமை உள்ள வன் சித்திரமாயன். பல்லவப்படை வந்ததும் அவனை அரியணையேற்றி விட வேண்டும். தாமதம் வேண்டாம்” என்று மகாராணி கூறிவிட்டு, வேறு பேச்சின்றி முதன் மந்திரிக்கு விடை கொடுத்து அனுப்பினாள். 

மகாராணி பட்டென்று பேச்சை நிறுத்திவிட்டுத்தம்மை அனுப்பி விட்டதை எண்ணி முதன்மந்திரி, உள்ளூரக் குமைந்தார். தம்முடைய மாளிகைக்குத் திரும்பிய பின், இரவு முழுவதும் உறங்காமல் மனம் உழன்று கொண்டிருந் தார். 

பல்லவ சாம்ராஜ்யம் அப்போது, பல ஆபத்துக்களை எதிர்நோக்கியிருந்தது. தெற்கு எல்லையில், பாண்டிய மன்னரால் தொந்திரவு இருந்தது. வடக்கே, சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தன், பழைய பரம்பரைப் பகை யைப் புதுப்பித்துக் கொள்ள சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி யிருந்தார். இந்தச் சூழ்நிலையில், பல்லவச் சக்ரவர்த்தி, கங்க நாட்டுப் போர்க்களத்தில் உயிர் நீத்தது பேரதிர்ச்சியா யிருந்தது. இவ்வளவு பிரச்னைகள் பல்லவ சாம்ராஜ்யத் தைச் சூழ்ந்திருந்த போது, சித்திரமாயன், தன் மக்களையே பகைத்துக் கொடுமைப்படுத்திக் கொண்டிருப்பதை எண்ணி முதன்மந்திரி, மனம் நொந்தார். 

பல்லவ சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தியாகப்பதவி ஏற்க சித்திரமாயனுக்கு அருகதை கிடையாது என்பதை உணர்ந்து கொண்ட முதன் மந்திரி, அந்தச் சிக்கலை எப்படித் தீர்ப்பது என்பதைப் பற்றிய சிந்தனையிலேயே இரவைக் கழித்தார். 

இதற்குள் காஞ்சி நகரில் மன்னரின் மரணச் செய்தியை ஜெயவர்மர் பரப்பியிருப்பார். காலையில் இந்தச் செய்தி மக்களிடையே என்ன மனப்பான்மையை உண்டுபண் ணும் என்பதைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்தார். நாட்டு மக்க ளைப் பற்றித் திட்டவட்டமான ஒரு முடிவுக்கும் அவரால் வரமுடியவில்லை. மக்கள் ஒரு செம்மறியாட்டுக் கூட்டம். அதைத் திறம்பட மேய்க்க வேண்டுமே என்ற கவலைதான் மிகுந்திருந்தது. 

அதிகாலை நேரத்தில் கண்ணயர்ந்தார். ஆனால் சற்று நேரத்தில் அவரைத் தேடி இரணியவர்மர் வந்தார். அவர் வந்திருக்கிறார் என்று காவல்வீரன் தெரியப்படுத்தியதுமே, முதன்மந்திரி புரிந்துகொண்டார். ஏதோ ஒரு கெட்ட செய்தி வந்திருக்கிறதென்று. 

“நாட்டில் அராஜகம் ஆட்சி புரியத் தொடங்கிவிட்டது. இரவோடிரவாகக்காஞ்சி நகரில் பலதலைவர்களைச் சிறைப் பிடித்துப் போய்விட்டார்கள். ஜெயவர்மரையும், வட மொழிக் கடிகைத் தலைவரையும் கூட சிறையிலடைத்து விட்டார்கள். உங்கள் மந்திரி மண்டலத்தைச் சேர்ந்த மந்திரி விஷ்ணுசர்மனையும் சிறைப்படுத்தியிருக்கிறார்கள்” என்றார், இரணியவர்மர். 

முதன்மந்திரி திகைப்பினால் சற்று நேரம் மெளனமா யிருந்தார். “விநாசகாலே விபரீத புத்தி” என்று முனகிய வாறே, நீண்ட பெருமூச்சு விட்டார். 

27. பெண்மைக்கு நேர்ந்த அவமானம் 

முதன் மந்திரி இரதத்தில் அரண்மனைக்குச் சென்று கொண்டிருந்தபோது, வீதிகளில் மக்களின் நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன என்பதைக் கவனித்தார். மக்கள் ஆங் காங்கே கும்பல் கும்பலாகக் கூடி நின்றார்கள். முதன் மந்திரி யின் இரதத்தைக் கண்டதும், வழக்கம்போல் மரியாதையாக விலகினார்களே தவிர, அவரைக் கண்டதும் எப்போதும் காண்பிக்கும் உற்சாகத்தைக் காண்பிக்கவில்லை. எல்லா ருடைய முகங்களிலும் பீதியின் சாயல் படிந்திருந்ததைக் கண்டார். மக்களின் மதிப்புக்கும், அபிமானத்துக்கும் உரிய பல துறைகளைச் சேர்ந்த தலைவர்கள், இரவில் இரகசிய மாகச் சிறையிலடைக்கப்பட்ட செய்திகளைக் கேட்டு மக்கள் பீதியடைந்திருந்தனர். அரச வீதியிலும் தேரோடும் பெரிய வீதிகளிலும் குதிரை வீரர்கள் மக்களைக் கூட்டம் கூட விடாதபடி விரட்டிக் கொண்டிருந்தனர். 

எல்லாவற்றையும் கவனித்தவாறே அரண்மனையை அடைந்த முதன் மந்திரிக்கு அங்கும் ஓர் அதிர்ச்சி ஏற்பட்டது. அரண்மனையில், மகாராணியின் எதிரே, மந்திரி மண்டலத் தைச் சேர்ந்த மற்ற நான்கு மந்திரிகளுள் மூன்று மந்திரிகள் அமர்ந்திருந்தனர். இரண்டாவது மந்திரி அச்சுதபட்டர் ஒருவர் தாம் உற்சாகமாயிருந்தார். மற்ற இரு மந்திரிகளும் பதற்றமடைந்திருந்தனர். கண்களில் பீதியின் சாயல் தெரிந் தது. வழக்கமாக முதன் மந்திரியைக் கண்டதும் உற்சாக மடையும் அந்த இரு மந்திரிகளும், அப்போது முதன் மந்திரி யைக் கண்டதும், தலையைக் குனிந்து கொண்டனர். மகாராணியின் அருகில் இளவரசன் சித்திரமாயன் அமர்ந் திருந்தான். 

மகாராணிக்கும் இளவரசருக்கும் சம்பிரதாயமாக வணக்கம் செலுத்திவிட்டுத் தம்முடைய ஆசனத்தில் அமர்ந்தார் முதன் மந்திரி. 

“மகாராணி அவர்களே, நான் கேள்விப்படுவது உண்மைதானா? மந்திரி விஷ்ணுசர்மனைச் சிறையிலிட்டி ருக்கிறீர்களாமே?” என்று கேட்டார். 

உடனே சித்திரமாயன் குறுக்கிட்டு, “துரோகியை வேறு என்ன செய்வது?” என்று கேட்டான். 

முதன் மந்திரியின் கண்களில் கோபத்தின் சாயல் தென்பட்டது. “துரோகியா…. ? விஷ்ணுசர்மனா துரோகி? இளவரசே, விஷ்ணுசர்மன் துரோகி என்றால், இந்நாட்டில் தேசப்பற்றுள்ளவன் எவனுமே இல்லை என்று அர்த்தம். இந்நாட்டுக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராக உள்ளவர் விஷ்ணுசர்மன். அவர் செய்த துரோகம்தான் என்ன என்ப தைத் தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டார். 

“எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டுதான் மகா ராணி கட்டளைகளைப்பிறப்பிக்க வேண்டுமோ?” என்று கோபத்துடன் கேட்டான், சித்திரமாயன். 

“பல்லவ சாம்ராஜ்யத்தில் தர்ம நியாயம் என்று ஒன்றுண்டு. பல்லவச்சக்கரவர்த்திகள் யாரும் தர்மநியாயம் தவறியதில்லை. எதைச் செய்தாலும், அது தர்மத்தை ஒட்டியதாக இருக்க வேண்டும் என்பதுதான் ஆட்சியின் நியதி. ஒரு மந்திரியையே அரசு தண்டிக்கிறதென்றால், அதன் காரணம் மக்களுக்குத் தெரிய வேண்டும். இல்லையென் றால், ஒரு காரணமும் இல்லாமல் அரசு அராஜகமாக ஒரு நல்லவரைப் பழிவாங்குகிறது என்று பீதியடைவார்கள்.” 

“தெரிய வேண்டிய சமயத்தில் மக்கள் தெரிந்து கொள்வார்கள்.” 

“இளவரசே, நான் கேட்பதற்கு மன்னிக்க வேண்டும். மந்திரி மண்டலத்தின் தலைவன் என்கிற முறையில், என்னுடைய சகாவான ஒரு மந்திரி சிறைப்பட்டதன் காரணத்தை நானாவது அறியலாமா?” என்று கேட்டார், முதன் மந்திரி. 

அப்போது மகாராணி குறுக்கிட்டு, “முதன் மந்திரி அவர்களே, மன்னரின் மரணச் செய்தியை என்னுடைய உத்தரவின்றி மக்களுக்குத் தெரிவிக்க ஏற்பாடு செய்தார் விஷ்ணு சர்மன்” என்றாள். 

“மக்களுக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டிய செய்தியைத்தானே தெரிவித்திருக்கிறார்?” 

“மன்னரின் மரணச் செய்தியை உடனே சொல்லி, மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்க வேண்டாம் என்று எண்ணி யிருந்தோம். கொஞ்சம் பொறுத்து வெளியிட முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், என்ன காரணத்தாலோ என் னிடம் ஆலோசனை கேட்காமல் மக்களுக்கு அறிவிக்க ஏற் பாடு நடந்திருக்கிறது” என்றாள் மகாராணி. 

“மகாராணி அவர்களே, அந்த ஏற்பாடு அவர் ஒரு வரைச் சேர்ந்ததல்ல. மந்திரி சபையின் கூட்டு ஏற்பாடு” என்றார், முதன் மந்திரி. 

“இல்லை, மந்திரிசபையின் கூட்டு எற்பாடல்ல என்று இந்த மந்திரிகள் மறுக்கிறார்களே” என்று சித்திரமாயன் கூறி, அங்கிருந்த மற்ற மூன்று மந்திரிகளையும் சுட்டிக் காட்டினான். 

முதன்மந்திரி அதிர்ந்துவிட்டார். முந்தினநாள் இரணிய வர்மரின் மாளிகையில் அவருடன் கூடியிருந்த மற்ற இரு மந்திரிகளும் அப்போது தலையைக் குனிந்தபடி அமர்ந் திருந்தனர். அச்சுதபட்டரின் கண்களில் குறும்புச் சிரிப்பு தோன்றியது. முதன் மந்திரிக்குச் சூழ்நிலை புரிந்துவிட்டது. அவரோடு இணக்கமாயிருந்த இரு மந்திரிகள் இப்போது, சித்திரமாயனின் வலையில் வீழ்ந்துவிட்டனர் என்பதைத் தெரிந்து கொண்டார். 

“விஷ்ணுசர்மன் மறுக்கவில்லையா? அவரும் மறுத் திருக்கலாமே” என்றார். அவருடைய குரலில் விரக்தி தொனித்தது. 

“கேட்டதற்கு எவ்வளவுதிமிராகப் பதில்சொன்னாராம் தெரியுமா? மந்திரியின் கடமையை ஆற்றினேன் என்றாராம். மக்களுக்குத் தெரியக்கூடாத இரகசியம் ஒன்றுமில்லை என்றாராம். மக்களுக்கு எது, எப்போது தெரியவேண்டும் என்பதை மகாராணிதான் முடிவு செய்யவேண்டுமே தவிர, மந்திரிகள் அல்ல” என்றான் சித்திரமாயன் கோபத்துடன். 

மகராணியைப் பார்த்து முதன்மந்திரி சொன்னார்: “மகாராணி அவர்களே, ஒரு மந்திரி எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படித்தான் விஷ்ணுசர்மன் நடந்து மந்திரி பதவிக்குப் பெருமை அளித்திருக்கிறார், என்னுடைய சம்மதத்தின் பேரில்தான் மந்திரிசபை செயல்பட்டது. இதற்கு விஷ்ணுசர்மன் மட்டும் பழிவாங்கப்படுவது தர்மம் அல்ல. மேலும், என்னுடைய மந்திரி சபையிலுள்ள ஒரு மந்திரி சிறைப்பட்டிருக்கும்போது, அந்தச் சபைக்குத் தலைமை தாங்கும் அருகதை எனக்கில்லை.” இவ்விதம் கூறிவிட்டு, முதன்மந்திரி தம்முடைய தலைப்பாகையையும், முத்திரை மோதிரத்தையும் கழற்றி, மகாராணியின் காலடியில் வைத்தார். 

பிரேமவர்த்தினி திகைப்புற்றவாளய் கால்களைப் பின்னுக்கிழுத்தாள். அவள் ஏதோ கூற முன் வந்தாள், அதற்குள் சித்திரமாயன் குறுக்கிட்டு, “முதன்மந்திரியின் விருப்பம் அதுதானென்றால், இந்த அரசு, அதை ஏற்றுக் கொள்கிறது. நீங்கள் இதுகாறும் இந்நாட்டுக்கு ஆற்றியுள்ள சேவைக்காக இந்த அரசு மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறது” என்றான். 

மற்றவர்கள் எல்லாரும் திகைப்புடன் இருந்தார்கள். தரணிகொண்டபோசர், முகத்தில் எவ்வித உணர்வையும் காட்டிக் கொள்ளாமல், மெல்ல எழுந்து, மகாராணிக்கும் இளவரசருக்கும் தலைதாழ்த்தி வணக்கம் செலுத்திவிட்டு வெளியேறினார். 

அரண்மனை வாயிலை அடைந்ததும், இரதசாரதி இரதத்தை அவரருகே கொண்டு வந்து நிறுத்தினான். அவரை நிமிர்ந்து பார்த்த இரதசாரதி திடுக்கிட்டான். மந்திரி யின் தலையில் வழக்கமாகக் காணப்பட்ட தலைப்பாகை யைக் காணாது குழம்பினான். அவனிடம் தரணிகொண்ட போசர், “சாரதி,நான் இப்போது மந்திரி அல்ல. இந்த இரதம், முதன் மந்திரிப் பதவியை வகிப்பவர்களுக்குள்ளது. நான் பதவியிலிருந்து விலகிவிட்டேன், இரதத்தை மந்திரி மண்டலத்தின் மணி மண்டபத்துக்கு ஓட்டிச் சென்று ஒப்படைத்து விடு” என்றார். 

இரதசாரதி திகைத்து நின்றான். அவனுடைய கண் களில் கண்ணீர் மல்கியது. அழுகையை அடக்கியவாறு, தரணி கொண்ட போசரை வணங்கியபடி நின்றான். 

தரணிகொண்ட போசர் அரண்மனையிலிருந்து தம் முடைய மாளிகையை நோக்கி நடந்துசென்றார். 


உதயசந்திரனை இரண்டு வீரர்கள் மேகலாவின் அந்தப்புரத்துக்கு அழைத்து வந்தனர். உதயசந்திரனின் கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்தன. அவனை அந்தப் புரத்தாதிகளிடம் வீரர்கள் ஒப்படைத்தனர். தாதிகள் இருவர் அவனை மேகலாவின் அறைக்குள் அழைத்துச் சென்று, அவளுக்கு எதிரே விட்டுவிட்டு வெளியேறினர். 

அவனைக் கண்டதும் மேகலாவின் முகம் மலர்ந்தது. ஆவலோடு நோக்கினாள். உதயசந்திரன், முகத்தில் எவ்வித உணர்ச்சியையும் காட்டிக் கொள்ளாமல் அவளைப் பார்த்துக் கொண்டு நின்றான். 

“உன்னை இப்படி இங்கே கொண்டு வந்து நிறுத்தி யிருப்பதை எண்ணிக் கோபம் கொள்கிறாயா?” என்று கேட்டபடியே மேகலா அவனை நெருங்கி வந்து அருகே நின்றாள். அவனுடைய முகத்தை மிகுந்த வேட்கையுடன் உற்று நோக்கினாள். 

“தன்னுடைய பிரஜையை ஒரு ராணி எப்படி வேண்டு மானாலும் நடத்தலாமே” என்றான் உதயசந்திரன். 

“என்னுடைய உத்தரவின் பேரில்தான் நீ பத்திரமாக இங்கே வந்து சேர்ந்திருக்கிறாய். இல்லையென்றால், உன்னைத் தாக்கிக் குற்றுயிராக்கி இளவரசரிடம் ஒப்படைத் திருப்பார்கள்” என்றாள். 

உதயசந்திரன் மெல்லச் சிரித்தான். 

“எதை எண்ணிச் சிரிக்கிறாய்?”- சின்னராணி கேட்டாள்.  

“என்னுடைய உடல் உங்களுக்குத் தேவை. வடுப் படாமல் கொண்டு வர உத்தரவிட்டிருப்பீர்கள்” என்றான் உதயசந்திரன். 

”உண்மைதான்.நீ, எனக்கு முழுமையாக வேண்டும். அதனால்தான், உன்னை மிகவும் பத்திரமாக இங்கே கொண்டு வரச் செய்தேன். இல்லையென்றால், இளவரசர் உன்னைக் கழுவேற்றியிருப்பார்.” 

“இளவரசரிடமிருந்து எத்தனை நாட்களுக்கு நீங்கள் என்னைக் காப்பாற்றி விட முடியும்?” என்று அலட்சியமாகக் கேட்டான். 

“நான் நினைத்தால், ஆயுள் முழுவதும் உன்னைக் காப்பாற்ற முடியும்” என்று கூறிக்கொண்டே அவனுடைய தோள்களைப் பற்றினாள். அவனைக் கூர்ந்து பார்த்தாள். அவன் உடல் சிலிர்த்து அடங்கியதைக் கவனித்தாள். 

“என்னை நீ புரிந்து கொண்ட பிறகும் அன்று பதறி ஓடி விட்டாயே?” என்றாள். குரலில் இருந்த ஏக்கத்தை அவனால் உணர முடிந்தது. 

“மகாராணி, தாங்கள் எங்கே, நான் எங்கே? ஏதாவது பொருத்தம் உண்டா?” என்றான் உதயசந்திரன். 

“நான் இன்னும் மகாராணியாகவில்லை” என்றாள், மேகலா. 

“வருங்கால மகாராணிதானே…” 

“மனம் பொருந்தி விட்டால் பிறகு, அந்தஸ்து எதற்கு? உதயசந்திரா, நீ விரும்பினால் இந்த அரண்மனையை விட்டே வெளியேறி விடுகிறேன். இந்த அதிகாரமும் அரண் மனையும் எனக்கு வேண்டாம்” என்றாள் மேகலா. 

அதைக் கேட்டு உதயசந்திரன் வியப்புடன் அவளைப் பார்த்தான். அவளுடைய கண்களில் தெரிந்த இச்சை அவ னைச்சங்கடப்படுத்தியது. மோக மயக்கத்தில் அவள் உளறு வதாக எண்ணினான். அவள் மீது அவனுக்குப் பச்சாதாபம் எழுந்தது. 

ஒரு சாம்ராஜ்யத்தின் வருங்கால மகாராணி, உணர்ச்சி களின் பிடியில் சிக்கி, அறிவிழந்து அந்தஸ்திழந்து எவ்வளவு பாமரத்தனமாக நடந்து கொள்கிறாள்! ஓ… இந்தக் காமவெறிக்கு விவஸ்தையே கிடையாதா…? 

அவளுடைய கண்கள் அவனைக் கொஞ்சம் கொஞ்ச மாகச் சுவைப்பதை உணர்ந்து உடல் கூசினான். அவனு டைய தோள்களைப் பற்றியிருந்த அவளுடைய கைகள், மெல்ல மெல்ல அவனுடைய புஜங்களை வருடின. அப் போதுதான் அவனுடைய கைகள் பின் பக்கமாகக் கட்டப் பட்டிருந்ததை உணர்ந்தாள். கட்டுகளை அவிழ்த்து விட் டாள். கட்டப்பட்டிருந்த கயிறு கழன்று கீழே விழுந்தது. விடுபட்ட உதயசந்திரன் சலனமில்லாமல் சிலை போல் நின்று கொண்டிருந்தான். 

“என்னிடமிருந்து தப்பிக்க நினையாதே. இங்கிருந்து எங்கும் ஓடி விட முடியாது” என்றாள். 

உதயசந்திரன் மெளனமாக நின்றுகொண்டிருந்தான். அந்த அறையிலிருந்த ஹம்ஸதூளிகா மஞ்சம் அவனுடைய பார்வையில் பட்டது. அதற்கு அருகே இருந்த சாளரத்தைப் பார்த்தான். 

அந்தச் சாளரத்துக்கு மறுபக்கத்திலிருந்து, ஒருநாள், அவள் தூங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்த சம்பவம் நினைவுக்கு வந்தது. அவனுடைய சிந்தனை தீவிர மடைந்தது. ஆனால், அவனை மேற்கொண்டு சிந்திக்க விடாமல் மேகலாவின் கரங்கள், அவனைச் சுற்றி வளைத்து இறுக்கின. அவன் மரமாக நின்றான். மரத்தின்மீது கொடி பற்றிப் படர்வது போல் படர்ந்தாள். தழுவினாள். அவளு டைய தவிப்பை ஒவ்வொரு அசைவிலும், அழுத்தத்திலும் உணர்ந்தான். அவன் தன்னுடைய உணர்ச்சிகளைச் சிதறவிடாமல் சாட்சி பூதனாக இருந்து கவனித்தான். 

ஒரு பெண் வலிந்து அணையும்போது ஏற்படும். உணர்வுகள், அவனைச் சுற்றிச்சூழ்ந்தன. இரு கைகளையும் தொய்வாகத் தொங்க விட்டவாறு, சலனமற்று நின்றவன், தன்னுடைய உடலை அவளுடைய ஆட்சிக்கு ஒப்படைத் தான். அவளுடைய பெருமூச்சுகளும், முனகல்களும் அந்த அறையில்கேட்டுக் கொண்டிருந்தன. அவளுடைய ஒவ் வொரு அசைவும் உணர்த்திய கொச்சையான அந்தரங்க சமிக்ஞைகளை உணர்ந்தான். உணர்ச்சிகளின் ஆக்கிரமிப் பில், ஒரு பெண்ணின் உடல் தவித்த தவிப்பை, அவனு டைய உடல் பதிவு செய்து கொண்டிருந்தது. அந்த அனு பவம் அவனுக்குப் புதுமையாக இருந்தது. அதே சமயம், கழிவிரக்கமும் தோன்றியது. ஜடமாக நின்றான். 

திடீரென அவனை உதறித் தள்ளினாள் மேகலா. வேண்டாத பொருளைத் தூர எறிவது போல் அவனை எறிந் தாள். அவன் தள்ளாடியபடி மஞ்சத்தின் மீது சாய்ந்தான். மறுகணம் எழுந்து நின்றான். என்னதான் ஒரு பெண் முயன் றாலும், ஆணுடைய மனமும் இசையவில்லை என்றால், அந்த ஆண், அவளுக்குப் பயன்படமாட்டான் என்பதை மேகலா உணர்ந்தபோது, அவள் உள்ளத்தில் தோன்றிய வன்மம், அவளுடைய கண்களில் தெரிந்தது. தோல்வியைத் தாங்க முடியாமல் மனம் கொதித்தாள். மூச்சு இரைத் தது. மார்பகம் விம்மித் தணிந்தது. 

அந்தச் சந்தர்ப்பத்தில், ஒரு பெண் உணரும் அவ மானம்,ஒ, ஏழேழு ஜன்மங்களுக்கும் அதை ஒரு பெண்ணால் மறக்க இயலுமா? 

வலிய அவனை அணைந்த அவளுடைய உணர்வு களைப் பிரதிபலிக்காமல், அவன் நடத்திய நாடகம்… எவ் வளவு கேவலமான நடத்தை…! ஒரு பிணத்தைத் தழுவி யதைப் போன்ற அருவருப்பான உணர்வினால் மனம் கூசி னாள். தன்மான உணர்வினால் கொதித்தாள். அவனை வெறுப்புடன் பார்த்தாள். கோபத்தினால், மூச்சு இரைத்தது. வாசலை நோக்கி கைகளைத் தட்டினாள். இரண்டு பணிப் பெண்கள் உள்ளே விரைந்து வந்தனர். 

“இவனை வாணராயனிடம் ஒப்படையுங்கள்” என்று பணிப்பெண்களுக்குக் கட்டளை இட்டுவிட்டு, அந்த அறையைவிட்டுக் கோபத்தோடு வெளியேறினாள், மேகலா. 

இரண்டு பணிப்பெண்களும் கீழே கிடந்த கயிற்றை டுத்து, உதயசந்திரனின் கைகளைக் கட்ட விரைந்தனர். 

“நான் நினைத்தாலும் இந்த அரண்மனையிலிருந்து தப்பமுடியாது. ஏன் வீணாகச் சிரமப்படுகிறீர்கள்? என்னை அழைத்துச் செல்லுங்கள், வருகிறேன்” என்றான். 

பணிப்பெண்கள் சற்று தயங்கினர். ஒருத்தி கையைத் தட்டிகாவல் வீரனை அழைத்தாள். வாணராயனை உடனே அழைத்து வரும்படி அவனை ஏவினாள். காவல் வீரன் வெளியேறியதும் உதயசந்திரன் பணிப்பெண்களிடம், “நாம் அடுத்த அறைக்குப் போய் விடுவோம், வாணராயன் வரும்போது, ராணியின் படுக்கையறையில் இருக்க வேண்டாம்” என்றான். 

பணிப்பெண்கள் அவனை அழைத்துக் கொண்டு அடுத்த அறைக்குள் சென்றதும், அந்த பெண்கள் இருவரை யும் ஒரே சமயத்தில் தாக்கினான். அவனுடைய அடி இலே சாகத்தான் பிடரியில் விழுந்தது. உடனே பணிப்பெண்கள் மயங்கிச் சாய்ந்தனர். உதயசந்திரன் தென் பகுதிக்குப் பாய்ந்து சென்று, சுரங்கப் பாதையை அடைத்திருக்கும் கல்லை நகர்த்தத் தொடங்கினான். கல்லைப் புரட்டி, சுரங்கப் பாதையின் பொந்தினுள் அவன் நுழைந்தபோது, அறைவாசலில் வாணராயன் ஓடி வந்தது தெரிந்தது. சுரங்கப் பாதையின் படிகளில் இறங்கி ஓடத் தொடங்கி னான். உள்ளே இருட்டாயிருந்ததால் பாதை தெரியவில்லை. உத்தேசமாகப் பழைய நினைவைக் கொண்டு விரைந்து செல்ல முயன்றான். ஆனால், உள்ளே இருந்த பெரிய தூண் களின் நினைவு வரவே, ஓடினால் அவைகளின் மீது மோத நேரிடும் என்பதை உணர்ந்து, குருடன் நடப்பது போல் கைகளை முன்னே நீட்டியபடி எச்சரிக்கையாக நடக்கத் தொடங்கினான். திரும்பிப் பார்த்தான். 

பின்னால், சுரங்கப் பாதையின் வாசலில் தீவட்டி களின் ஒளி தெரிந்தது. தன்னை வாணராயன் தொடர்கிறான் என்பதை புரிந்துகொண்டான். அந்த ஒளி, உதயசந்திரனுக்கு ஓரளவு உதவியாயிருந்தது. மங்கிய ஒளியில் தட்டுத் தடுமாறி ஓடத் தொடங்கினான். தீவட்டிகளின் ஒளி, அவனைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. 

திடீரென்று சுரங்கப் பாதை ஒரு கற்சுவரில் போய் முடி வடைந்தது. உதயசந்திரன் திகைத்தான். வேறுபாதை இருப்ப தாகவும் தெரியவில்லை. தொடர்ந்து வந்தவர்களை எதிர்த்துச் சமாளிக்க முடியுமா என்று பார்த்தான். நாலைந்து பேர் அவனைத் துரத்திக் கொண்டு வந்தது தெரிந்தது. ஆயுதங்களைத் தாங்கி வந்த அத்தனை பேரையும் மிகக் குறுகலான அந்தச் சுரங்கப் பாதையில் ஒரே சமயத்தில் எதிர்க்க இயலாது என்பதை உணர்ந்ததும் மனச் சோர்வ டைந்தான். 

ஐயோ, வசமாக மாட்டிக் கொண்டோம். வாணரா யனும், அவனுடைய ஆட்களும் இன்று என்னை ஒழித்து விடுவார்கள்… இன்றோடு என் கதை முடிந்தது… 

திடீரென்று ஒரு நினைவு வந்தது. சுரங்கப்பாதை இரு கூராகப் பிரிந்து ஓர் இடத்தில் சேர்வதுநினைவுக்கு வந்ததும் உற்சாகமடைந்தான். பரபரப்புடன் சுவரைத் தொட்டு ஆராய்ந்தான். ஒரு கல் அசைந்ததை அறிந்து வேகமாகச் செயல்பட்டான். தீவட்டிகளின் ஒளி அதிகமாகிக் கொண்டி ருந்தது. சுவரில் அசைந்த கல்லைப் பெயர்த்து நகர்த்தி விட்டு, உள்ளே நுழைந்தான். மீண்டும் பாதையை அடைத்துவிட நினைத்தான், திரும்பிப் பார்த்தான். வாண ராயன் முன்னே ஓடி வர, அவனைத் தொடர்ந்து நான்கு வீரர்கள் தீவட்டிகளை ஏந்தியபடி ஓடிவந்து கொண்டி ருந்தனர். ஆகவே உதயசந்திரன் சுரங்கப் பொந்தை அடைக் கும் முயற்சியை விட்டுப்பாதையில் ஓடத் தொடங்கினான். 

சுரங்கப்பாதையின் மறுமுனையை அடைந்து, வெளி யேறும் துவாரத்தை அடைத்திருந்த கல்லைப் புரட்டித் தள்ளி விட்டு, வெளியே வந்த போது, அங்கிருந்த பெரிய சிவலிங்கத்தின் அருகே, கோயில் பூசாரி, ஒரு வாளை ஏந்தியபடி, வியப்புடன் பார்த்துக் கொண்டு நின்றான். துவாரத்திலிருந்து வெளியே வந்த உதயசந்திரனை இறுகப் பற்றிக் கொண்ட பூசாரி, “யார் நீ?” என்று கேட்டான். 

“மகாராணியிடமிருந்து வருகிறேன். அவசரம். விடு என்னை” என்றான், உதயசந்திரன். 

பூசாரி நம்பவில்லை. சந்தேகத்தோடு பார்த்தான். உதய சந்திரன் மடியிலிருந்த வெள்ளி முத்திரை மோதிரத்தை எடுத் துக்காட்டினான். பூசாரி பதற்றமடைந்தவனாய் அவனுக்கு வணக்கம் செலுத்தினான். 

“மகாராணியின் கட்டளை, நன்றாகக்கவனி. சுரங்கப் பாதையில்ஒரு பயங்கர எதிரி வந்து கொண்டிருக்கிறான். நீ இங்கேயே நின்று, சுரங்கத் துவாரத்திலிருந்து அவன் தலையை வெளியே நீட்டியதும், உன் வாளினால் ஒரே போடு போட்டு விட வேண்டும். தாமதிக்காதே. இது மகா ராணியின் கட்டளை” என்றான், உதயசந்திரன். 

பூசாரி கட்டளையை நிறைவேற்ற வாளை ஓங்கியபடி சுரங்கப் பாதையின் பொந்தின் அருகே பதுங்கி நின்றான். உதயசந்திரன் அவனிடம், “ஜாக்கிரதை. அவன் தலை, பொந்தின் வழியே தெரிந்ததுமே தாமதியாமல் வாளை வீசிவிடு. அவன் வெளியே வந்துவிட்டால், உன்னைத் தீர்த்து விடுவான் ” என்று கூறிவிட்டு, கோயிலை விட்டு வெளியேறி, தோப்புக்குள் சென்று மறைந்தான். 

– தொடரும்…

– 1985, தினமணி கதிரில் தொடர்கதையாக வெளிவந்தது.

– மருக்கொழுந்து மங்கை (சரித்திர நாவல்), முதற் பதிப்பு: மே 1995, திருவரசு புத்தக நிலையம், சென்னை.

ர.சு.நல்லபெருமாள் ர.சு.நல்லபெருமாள் (ரவணசமுத்திரம் சுப்பையா பிள்ளை நல்லபெருமாள்) (நவம்பர் 1930 - ஏப்ரல் 20, 2011) தமிழ் நாவலாசிரியர். திருநெல்வேலியில் வாழ்ந்தவர். காந்தியக் கொள்கைகளையும் சைவசித்தாந்த நோக்கையும் கொண்டு எழுதியவர். மார்க்ஸியத்துக்கு எதிரான வலதுசாரி பொருளியல் சிந்தனைகளும் ஃப்ராய்டிய உளவியல் ஆய்வுமுறைமையும் கொண்டவர். வழக்கறிஞராகப் பணியாற்றினார். சிந்தனைகளை நேரடியாக வெளிப்படுத்தும் பொதுவாசிப்புக்குரிய நூல்களை எழுதியவர். 1945-ல் தன் 15 வயதில் எழுதிய வீண்வேதனை அவருடைய முதல் படைப்பு. கல்கி இதழில் இரு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *