கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: June 7, 2025
பார்வையிட்டோர்: 866 
 
 

(1995ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18

13. சலனம் 

அந்தப்புரத்தில் மேகலா மிகுந்த மனச் சஞ்சலத்துக் குள்ளாகியிருந்தாள். 

அச்சுதப்பட்டரின் உறவினருக்கு நிலமளிக்க அவள் ஏற்பாடு செய்தது பெரும் குழப்பத்தை உண்டாக்கி விட்டதாகக் கிடைத்த செய்தி அவள் கோபத்தைக் கிளறியது. 

இவையெல்லாவற்றிற்கும் மேல் அவளுடைய மனதை மிகவும் அலைக்கழித்தது, இரவு அவள் கண்ட காட்சிதான். இரவு தூங்கிக் கொண்டிருந்த வேளையில் ஏதோ ஓர் இனிமையான கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த போது, சாளரத்தின் வழியே ஓர் அழகனின் முகம் தெரிந் ததை எண்ணி யெண்ணிக் குழம்பினாள். தான் கண்ட காட்சி கனவிலா அல்லது நனவிலா என்பதை முடிவு செய்ய முடியவில்லை. அந்த அழகான முகம், சாளரத்தின் வழியே அவளை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்ததாக உணர்ந்தாள். அவள் தூக்கக் கலக்கத்திலிருந்து முற்றும் விடுபட்டு எழுவதற்குள் அந்த முகம் மறைந்துவிட்டது. எழுந்து விளக்கை ஏந்தியவாறு பக்கத்து அறைக்குச் சென்று பார்த்தாள். அங்கு யாரும் இல்லை. சுரங்கப் பாதையின் வாசலை சோதித்துப் பார்த்தாள். வாசலை அடைத்திருந்த கல், அடைத்தபடியே இருந்தது. தாதிகளை எழுப்பி விசாரித்தாள். அந்தப்புரம் முழுவதையும் சோதிக்கச் சொன்னாள். ஒரு தடயமும் இல்லை. எல்லாம் கனவின் கோளாறு தான் என்று முடிவு செய்தாள். ஆனாலும், அந்த அழகனின் முகத்தை அவளால் மறக்க முடியவில்லை, நினைவில் குறுகுறுத்துக் கொண்டேயிருந்தது. 

நிஜமான மனித முகம் போலல்லவா தெரிந்தது! எவ்வளவு அழகு! கண்களில் தாம் எவ்வளவு காந்தம்… 

ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள். கொஞ்ச நாட்களாகவே ஹம்ஸத்தூளிகா மஞ்சம் கூட அவளைத் துன்புறுத்தியது. அவளுடைய இளமையும் தெம்பும் மனத்தில் குறுகுறுப்பை உண்டாக்கிக் கொண்டிருந்தன. அவள் மாபெரும் பல்லவசாம்ராஜ்யத்தின் இளவரசனின் மனைவி. வருங்கால மகாராணி. அவளுடைய கண் அசைப்பிற்கு சாம் ராஜ்யமே நடுங்கும். 

பூர்விகத்தில், அவள் ஒரு சாதாரண நாட்டியக்காரி. அரண்மனை வாழ்வு கிட்டிய பிறகு அவளுக்கு ஏற்பட்டு விட்ட ஆணவமும் திமிரும்… ஓ ! பல்லவ சாம்ராஜ்யமே அவளுடைய சொல்லுக்குக் கட்டுண்டு கிடக்க வேண்டும் என்ற பேராசை, ஏழைக் குடும்பத்தில் பிறந்து வறுமையே துணையாக வளர்ந்தவள் தான். அதிர்ஷ்டம், அவளை அரண்மனைக்கு இழுத்து வந்தது. 

கடந்த காலத்தை எவ்வளவு இலகுவில் மறந்து விட்டாள்! தன்னுடைய வாழ்க்கையை அவள் வகுத்துக் கொண்ட சாமர்த்தியத்தில்தான் அவளுக்கு எவ்வளவு நம்பிக்கை! 

நான்கு ஆண்டுகளுக்கு முன் சேரநாட்டிலிருந்து ஒரு குறிக்கோளுடன் தான் அவளைப் பல்லவ நாட்டிற்கு அழைத்து வந்தாள் அவளுடைய தாயார், கோமளவல்லி. 

காஞ்சிநகர், கலைகளுக்குப் புகழ்பெற்றிருந்ததால் அங்கு வளமான வாழ்வு கிட்டும் என்ற நம்பிக்கையில் வந்தார்கள். நம்பிக்கை வீண்போகவில்லை. மேகலாவின் நாட்டியத்திற்குக் காஞ்சிநகரில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. 

ஒரு நாள், கைலாசநாதர் கோயில் உற்சவத்தின்போது முன் மண்டபத்தில், சந்நிதிக்கு எதிரே மேகலா நடனமாடிக் கொண்டிருந்தாள். அன்று பல்லவ சக்கரவர்த்தி திடீரென்று கோயிலுக்கு விஜயம் செய்தார். கூடவே இளவரசன் சித்திரமாயனும் சென்றிருந்தான். 

அப்படி ஒரு சந்தர்ப்பத்தைத் தான் மேகலாவின் தாயார் கோமளவல்லி எதிர்பார்த்திருந்தாள். மன்னரும் இளவரசரும் ஆசனங்களில் அமர்ந்தபோது, மகளின் கையைக்கிள்ளி, “சாமர்த்தியமாக நடந்துகொள்” என்று அறிவுரை கூறினாள். 

மேகலா, சக்கரவர்த்தியைப் பணிந்து வணங்கிவிட்டு இளவரசனை வணங்கக் குனிந்தபோது பார்வையால் அவனை மெல்ல வருடினாள். மண்டபத்தினுள் வந்ததிலிருந்தே மேகலாவின் ஒய்யாரத்தையும், கட்டுடலையும் கண்டு கிறங்கிப் போயிருந்தான், சித்திரமாயன். வணங்கும் பாவனையில் மேலாக்கை மெல்ல நழுவ விட்டு, கண்களால் அவனை வளைத்தபோது, சித்திரமாயன் குழைந்தான். 

அவளுடைய தந்தக் கடைசல் மேனியழகும், பூசி யிருந்த வாசனையின் சுகந்தமும் அவனை மயக்கின. அவனுடைய பாதங்களைத் தொட்டு வணங்குவதற்குக் குனிந்த மேகலா, நிமிர்ந்தபோது, வேண்டுமென்றே தோள்கள் இரண்டையும் குறுக்கினாள். 

ஓ… ! அப்போது, கச்சையில் சிக்குண்டு இறுகியிருந்த கலசங்கள் இரண்டும் கழுத்துக்குக் கீழே திமிறியவாறு வெளியே புடைத்தன. அந்தக் காட்சியில் சிக்குண்ட சித்திரமாயனின் கண்களில் போதை ஏறத் தொடங்கியது. 

ஒரு கணந்தான். மறு கணம், மேகலா எழுந்து, மண்டபத்தின் நடுவே நடனமாடும் சதுக்கத்தில் போய் நின்றாள். சற்று நேரத்தில் சக்கரவர்த்தி எழுந்து விடவே, சித்திரமாயனும் கூடவே எழுந்து செல்ல வேண்டி வந்து விட்டது. 

அன்று இரவே சித்திரமாயனுக்காக மேகலாவிடம் வாணராயன் தூது சென்றான். இந்த மாதிரிக் காரியங்களில் எல்லாம் மேகலாவின் தாயாருக்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியும். வாணராயனைக் கடிந்து பேசி அனுப்பி விட்டாள். அவளுடைய எண்ணமெல்லாம் இளவரசனைக் கொஞ்சம் அலைக்கழித்துப் பின் சம்மதிக்க வேண்டும் என்பதுதான். சித்திரமாயனைத் தங்கள் வலைக்குள் நிரந்தரமாகச் சிக்குண்டு கிடக்கும்படிச் செய்துவிட வேண்டும் என்ற பேராசை அவளுக்கு. 

“ஓ…! ஒரு நாட்டியக்காரிக்கு அவ்வளவு திமிரா!” என்று சீறினான், சித்திரமாயன். 

“கலைக்காகவே வாழ்கிறவளாம்” என்றான், வாணராயன். 

“ஆ…கலை…இதுவும் ஒரு கலைதான் என்று சொல்ல வேண்டியதுதானே?” 

“நான் எவ்வளவோ சொன்னேன். தாய்க்காரியிடம் பல்லவராஜகுலத்தின் அபிமானம் கிடைத்தால் ராஜபோகத்தில் வாழலாம் என்றேன்.” 

“அதற்கு அவள் என்ன சொன்னாள்?” 

“கலைதான் வாழ்க்கையாம். நாட்டியக் கலைக்காக அவளுடைய குடும்பம் வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறதாம்.” 

“சீச்சீ…உனக்கு வெட்கமாயில்லை. இதைச் சொல்ல. கேவலம் ஒரு நாட்டியக்காரி என்னை அவமதித்திருக்கிறாளே” என்று கோபத்தில் இரைந்தான் சித்திரமாயன். 

“இளவரசே, இன்று மட்டும் பொறுத்திருங்கள். நாளை இரவு, மேகலா உங்கள் அந்தரங்க மண்டபத்தில் வந்து சேர்வாள். எப்படியும் அவளைக் கொண்டு வந்து சேர்க்கிறேன்” என்று உறுதி கூறிவிட்டுச் சென்றான், வாணராயன். 

இந்த விஷயத்தில் சித்திரமாயன் அவசரப்பட்டு விட்டான். கொஞ்சம் பொறுத்திருந்தால் மேகலா தானாகவே அவனை நாடி வந்திருப்பாள். அவனுடைய அவசரப் புத்தியும், ஆத்திரமும் பல்லவ நாட்டு வரலாற்றையே திசை திருப்பிவிடும் என்று அப்போது அவன் உணரவில்லை. மேகலாவின் சௌந்தர்யம் அவனுடைய அறிவை மழுங்க வைத்துவிட்டது. 

மறுநாள் இரவு, வாணராயன் தன் சொல்லை நிறை வேற்றிவிட்டான். மேகலாவைப் பலாத்காரமாகக் கடத்திக் கொண்டு போய் சித்திரமாயனிடம் ஒப்படைத்து விட்டான். 

தன்னுடைய அந்தரங்க மண்டபத்தில் மேகலாவிடம் வெறியைத் தணித்துக் கொண்ட சித்திரமாயன், அந்த விஷயம் வழக்கம் போல் யாருக்கும் தெரியாமலே போய் விடும் என்று தான் எண்ணினான். ஆனால், கோமளவல்லி, தன் மகளுடன் பல்லவ மன்னரிடமே நீதி கேட்டு வந்த போது சித்திரமாயன் திடுக்கிட்டான். அந்தச் சம்பவம் இப்படித் திசை திரும்பும் என்று தெரிந்திருந்தால் மேகலாவின் உடலை அரண்மனை அகழியில் வீசியெறிந்து முதலைகளுக்கு இரையாக்கியிருந்திருப்பான். அதற்கு முன் எத்தனையோ பெண்கள் கற்பழிக்கப்பட்டு அப்படித்தான் யாருக்கும் தெரியாமல் மறைந்து போனார்கள். 

உண்மையை அறிந்த பல்லவ சக்கரவர்த்தி திகைத்தார். அரண்மனையில் மன்னரின் முன்னிலையில் அந்தரங்கமாக விசாரணை நடைபெற்றது. முதன் மந்திரி தரணிகொண்ட போசர் மட்டுமே உடனிருந்தார். மேகலா தலைவிரி கோல மாக நின்றாள். கோமளவல்லி மிகுந்த பிரயாசைப்பட்டுக் கண்ணீரை வரவழைத்துக் கொண்டிருந்தாள். இந்தச் சம்பவத்தைக் காரணமாக வைத்துப் பெரும் பொருளை மன்னரிடமிருந்து பெற்று விட வேண்டும் என்பது தான் அவளுடைய திட்டம். 

மன்னர், மேகலாவைப் பார்த்துச் சொன்னார் : “பெண்ணே, உனக்குப் பெரும் அநீதி நேர்ந்துவிட்டது. இதற்குப் பிராயச்சித்தமாக நீ என்ன வேண்டுகிறாயோ அதைச் செய்கிறேன்.”

இதைக் கேட்டதும் கோமளவல்லி பரபரப்படைந்தாள். என்ன கேட்பது, எவ்வளவு கேட்பது என்று புரியாமல் தவித்தாள். யானை அளவுக்குப் பொன் கேட்கலாமா? ஒரு சிறு ராஜ்யத்தையே கேட்கலாமா?… 

தன் மகள் என்ன கேட்கப் போகிறாளோ என்பதை அறிய மிகுந்த ஆவலுடனும் பரபரப்புடனும் மேகலாவைக் கூர்ந்து பார்த்தாள். 

மேகலா ஏதும் சொல்லாமல் மௌனமாக நின்றாள். மன்னர், மீண்டும் சொன்னார். “சொல் பெண்ணே, உனக்கு வேண்டியதைக் கேள். இதற்கு நான் எப்படிப் பிராயச்சித்தம் செய்யட்டும்? பல்லவ நாட்டில் நீ இழக்கக் கூடாததை இழந்து நிற்கிறாய். இதற்கு என்ன செய்து நான் ஈடு செய்ய முடியும்? பல்லவ நாட்டுப் பொக்கிஷம் பூராவும் வேண்டுமா, கேள். நிலம் வேண்டுமா, கேள் பெண்ணே…” 

மன்னரை மெல்ல நிமிர்ந்து பார்த்தாள், மேகலா. 

“அரசே, நான் இழந்ததை மீட்டுத் தாருங்கள் போதும்” என்றாள். 

பல்லவ மன்னர் புரியாமல் விழித்தார். கோமளவல்லி திடுக்கிட்டாள். மகளின் காதருகே குனிந்து இரகசியமாக, “அட முட்டாள் பெண்ணே, புத்தி கெட்டுப் போய் எதையோ கேட்கிறாயே, மலையளவு பொன் கேள், மாடமாளிகை கேள்” என்றாள். 

மேகலா தாயாரின் சொல்லை லட்சியம் செய்யாமல், மன்னரையே கூர்ந்து நோக்கினாள். 

மன்னர், குழம்பினார். “பெண்ணே! நடக்க முடியாத தைப் பற்றிப் பேசுகிறாயே. உடலை விட்டுப் போன உயிரை மீண்டும் தர முடியுமா? அதுபோல் தானே கற்பும். உனக்கு நேர்ந்து விட்ட இழப்பு, கொடுமையானது. ஆனால் இழந்து போனதை எப்படி அம்மா…?” என்றார். 

மேகலாவின் பார்வையில் தீவிரம் தோன்றியது. “அரசே, போன உயிரை மீள வைக்க முடியும். சாவித்திரி சாதித்திருக்கிறாளே. அரசே, நான் இழந்ததையும் மீட்க முடியும்” என்றாள். 

அவளுடைய பேச்சின் அர்த்தம் புரியாமல் மன்னர் குழம்பினார். ஆனால், முதன் மந்திரி தரணி கொண்ட போசர் புரிந்து கொண்டு திகைப்படைந்தார். மன்னரின் காதருகே குனிந்து, “அரசே! அவசரப்பட்டு எதையும் வாக்களித்து விட வேண்டாம்” என்றார். 

“மந்திரியாரே, இந்தப் பெண்ணுக்கு நீதி வழங்க வேண்டிய கட்டத்திலிருக்கிறேன். இவள் எது கேட்டாலும் நாம் கொடுத்துத் தீர வேண்டிய நிலையில் நம்மை வைத்துவிட்டான், சித்திரமாயன்” என்று மன்னர் கூறிவிட்டு, மேகலாவிடம் திரும்பி, “பெண்ணே நீ இழந்ததை மீட்டுத் தரும் சக்தி கடவுளுக்கே இல்லை” என்றார். 

“அரசே, அந்தச் சக்தி தங்களுக்கு இருக்கிறது” என்றாள் மேகலா. 

“ஓ! அப்படி நீ நம்பினால், என்னால் முடியுமானால் நான் இந்தப் பல்லவச் சாம்ராஜ்யத்தையே பணயமாக வைத்தேனும் உன் எண்ணத்தை நிறைவேற்றி வைக்கிறேன். நன்றாகச் சிந்தித்துப் பேசு பெண்ணே. இழந்த கற்பை மீண்டும் பெறுவதாவது?” 

“பெற முடியும்” என்றாள் மேகலா உறுதியுடன். 

“வழிசொல்” என்றார், மன்னர். 

தரணி கொண்ட போசர் இடைமறித்தார். “பெண்ணே, நீ என்ன கேட்பதாயிருந்தாலும் அது, பல்லவ குலத்திற்கோ, சாம்ராஜ்யத்திற்கோ கேடு விளைவிப்பதாக இருக்கக் கூடாது” என்றார். 

மேகலா கோபத்துடன் அவரை உறுத்துப் பார்த்தாள். 

“மந்திரி அவர்களே, உயிரினும் மேலான மானத்தை இழந்து நீதி கேட்டு நிற்கிறேன். இந்த வேளையில் உங்களுக்குக் குலப் பெருமையும் ஆட்சியும்தாம் முக்கியமாகத் தோன்றுகிறது. பல்லவ குலத்தின் பெருமை, எனக்கிழைத்திருக்கும் கொடுமையிலேயே தெரிகிறதே!” என்று கூறி அலட்சியமாகச் சிரித்தாள். 

பல்லவ மன்னர், கூசிக் குறுகித் தலை கவிழ்ந்தார். தரணி கொண்ட போசர், அவளுடைய ஆவேசத்தைக் கண்டு துணுக்குற்றார். தன்னுடைய குலத்தைப் பற்றி ஒரு நாட்டியக்காரி பேசும்படி ஆகிவிட்டதே என்ற எண்ணத்தில் மன்னர் மனம் வெதும்பினார். 

“பெண்ணே, மந்திரி அவருடைய கடமையைச் செய்கிறார். அவருக்கு இந்நாடும், பல்லவ குலமும்தான் முக்கியம். கோபம் கொள்ளாதே. என்ன பிராயச்சித்தம் என்பதை மட்டும் சொல்” என்றார். 

“மன்னர் பிரானே, கற்பிழந்தவள் என்னும் பழியிலிருந்து என்னை விடுவியுங்கள். இதுதான் நான் கேட்கும் பிராயச்சித்தம்” என்றாள், மேகலா. 

அப்போதுதரணி கொண்ட போசர் குறுக்கிட்டு ஏதோ சொல்ல முனைந்தார். மன்னர் கையமர்த்தி அவரைத் தடுத்து விட்டு, மேகலாவைப் பார்த்து, “எப்படி என்று இன்னும் சொல்லவில்லையே” என்றார். 

“யாரிடம் நான் கற்பை இழந்தேனோ அவரை எனக்குக் கணவராக்கி விடுங்கள்” என்றாள், மேகலா. 

இதைக் கேட்டு மன்னர் திகைத்துப் போய் அவளை வெறிக்கப் பார்த்தார். அவருடைய உடல் சிறிது நடுங்கியது. பேச்சு எழவில்லை. பெரும் அதிர்ச்சியினால் தாக்குண்டவர் போல் ஓய்ந்து விட்டார். 

கோமளவல்லிக்கு வியப்புத் தாளவில்லை. தன் மகளின் சாதுர்யத்தை எண்ணி உள்ளூரப் பெரு மகிழ்ச்சி யடைந்தாள். தரணி கொண்ட போசர் கோபத்துடன் மேகலாவை நெருங்கிச் சென்று, “பெண்ணே நீ என்ன கேட்கிறாய் என்பதைப் புரிந்து கொண்டுதானே கேட்கிறாய்?” என்று கேட்டார். 

“மந்திரி அவர்களே! இதைவிட வேறு வழி இருக்கிறதா? என் மீதுள்ள கறையைத் துடைக்க இதைவிட வேறு நல்ல வழி இருந்தால் தாங்களே மன்னர்பிரானிடம் கூறுங்களேன்” என்றாள் மேகலா. 

அவளுடைய சாதுரியத்தை எண்ணி முதன் மந்திரி மலைத்தார். அவரால் பதில் கூற இயலவில்லை. சற்று நேரம் மெளனம்நிலவியது. மன்னனின் மனம் மிகுந்த குழப் பத்தில் சிக்கியிருந்தது. தரையைப் பார்த்தவாறே அமர்ந் திருந்தார். யாருக்கும் அங்கு நிலவிய அமைதியைக் குலைக் கும் தைரியமில்லை. 

மன்னர் மெல்லத் தலை நிமிர்ந்தார். அவருடைய முகம் களையிழந்து சோம்பியிருந்தது. மேகலாவைப் பார்த்து, “பெண்ணே, உன் எண்ணத்தை நிறைவேற்றி வைக்கிறேன்” என்றார். 

மேகலா பாய்ந்து சென்று தரையில் வீழ்ந்து மன்னரின் பாதங்களை வணங்கி எழுந்தாள். மன்னர் அவள் தலை மீது கையை வைத்து ஆசீர்வதித்தார். 

அந்த திருமணத்திற்கு அரச சபையிலும், அரண்மனையிலும் மிகுந்த எதிர்ப்பு எழுந்தது. ஆனால் மன்னரின் ஆணையை யாரும் மீற முடியாதே. தரணி கொண்ட போசர் மட்டும் மன்னரைத் தனியே சந்தித்துப் பேசினார். 

“அரசே, எந்த ஸ்தானத்திற்கும் ஒரு தகுதி வேண்டும். அந்தப் பெண் தங்களுடைய மருமகளாக மட்டும் வரவில்லை; இந்நாட்டின் வருங்கால மகாராணியாகவும் ஆகப் போகிறவள். ஒரு கூத்தாடியை மகாராணியின் அந்தஸ்தில் வைப்பது நாட்டுக்கும் நல்லதல்ல. அவளுடைய தகுதிக்கேற்ற புத்திதான் அவளுக்கு இருக்கும்” என்றார். 

மன்னர் சிரித்தார். “மந்திரி அவர்களே, நம்மையெல்லாம் ஒரு இக்கட்டான நிலையில் கொண்டு வந்து நிறுத்தி, தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொண்டாளே! இதி லிருந்தே அவளுடைய சாதுர்யம் தெரியவில்லையா” என்றார். 

“வெறும் சாதுர்யம் ஆபத்தானது அரசே. அவளுடைய மனம் பேராசை கொண்டது. நல்ல மனமும், குணமும் குலத்தோடு வளர்பவை. இவள், சேரநாட்டிலிருந்து பிழைப்பைத் தேடி இங்கு வந்தவள். சாதாரண நாட்டியக்காரி.” 

“மந்திரியவர்களே, இனி நாம் செய்வதற்கு ஒன்று மில்லை. ஒரு கூத்தாடிதான் அரியணையில் அமர வேண்டும் என்று இந்த நாட்டின் தலைவிதி இருக்குமானால், யாரால் மாற்றியமைக்க முடியும் ?” என்றார், மன்னர். 


மேகலாவின் அதிர்ஷ்டமும், சாமர்த்தியமும் அவளுக்கு உயர்ந்த அந்தஸ்தை அளித்தன. இளவரசனின் மனைவி, வருங்கால மகாராணி என்பதால், ஆட்சியில் பலர் அவளுடைய அபிமானத்தைப் பெற முயன்றனர். மெள்ள மெள்ள அவளும் ஆட்சியில் தலையிட முனைந்தாள். அவளுடைய கவர்ச்சியிலும், பேச்சு சாதுர்யத்திலும் கட்டுண்டு கிடந்த சித்திரமாயன், அவளுடைய சொல்லுக்குத் தடையேதும் கூறவில்லை. 

சக்ரவர்த்தி, போர்க்களம் புறப்பட்டபோது, ஆட்சிப் பொறுப்பை மகாராணி பிரேமவர்த்தினியிடம் ஒப்படைத்ததைக் கண்டு மேகலா உள்ளூரப் பொருமினாள். 

“கிழட்டு வயதில் இளைய ராணியின் மோகம் மன்னருக்கு இன்னும் தணியவில்லை. இளவரசர் நீங்கள் இருக்கும் போது ஆட்சிப் பொறுப்பை உங்கள் சின்னம்மாவிடம் ஒப்படைப்பானேன்? உங்கள் தந்தைக்கு உங்கள் மீது அவ்வளவு நம்பிக்கை” என்றாள். 

சித்திரமாயனின் தன்மானம் கிளர்ந்தெழுந்தாலும், சக்ரவர்த்தியின் ஆணையை மீற முடியாதே. “எல்லாம் எவ்வளவு காலத்திற்கு? கொஞ்சம் பொறு. நான் பட்டம் சூட்டியதும் நீதானே மகாராணி” என்று சமாதானப்படுத்தினான். பிறகு சொன்னான், “இப்போதே நீ மகாராணி மாதிரி தானே ஆணைகளைப் பிறப்பிக்கிறாய்.” 

“நான் என்ன கட்டளையிட்டாலும் சின்னம்மாவின் அனுமதி இருந்தால்தானே இந்நாட்டில் நிறைவேறும்” என்று அலுத்துக் கொண்டாள், மேகலா. 

அவளுக்கு அப்போதே தான் மகாராணியாகி விட வேண்டும் என்னும் பேராசை கொழுந்துவிட்டு எரிந்தது. பல்லவ நாட்டு மக்கள் அவளை விரும்பவில்லை என்பதை யும் உணர்ந்திருந்தாள். சேர நாட்டிலிருந்து பிழைக்க வந்த ஒரு கூத்தாடி, தங்களுக்கு மகாராணியாக வரப்போவதை மக்கள் விரும்பவில்லை. வீதியில் அவள் பல்லக்கில் செல்லும் போது மக்களின் முகங்களில் தோன்றிய வெறுப்பும், அலட்சியமும் அவளுக்குக் கோபத்தை மூட்டின. மகாராணி பிரேமவர்த்தினியோடு அவள் நகருக் குள் செல்ல வேண்டிய சந்தர்ப்பங்களில், மக்கள் அவளை அலட்சியப்படுத்திவிட்டு மகாராணியிடம் காட்டும் மரியாதையைக் கண்டு மனம் புழுங்குவாள். 

மேலும், அவளுக்கு மகாராணியின் அழகிலும், கம்பீரத்திலும் பொறாமை எழுந்தது. மேகலாவிற்கு ஒரு நாட்டியக்காரிக்கு வேண்டிய நளினமும், உடற்கட்டும் இருந்தனவே தவிர, ஒரு சாம்ராஜ்யத்தின் மகாராணிக்கு இருக்க வேண்டிய ஒய்யாரமும், கம்பீரமும் அவளுக்கு இல்லை. ஒரு அழகுப் பொம்மையைப் போலிருந்தாள். சித்திரமாயன் விளையாடுவதற்கு ஏற்ற பொம்மைதான். ஆனால் நாட்டின் மகாராணிக்குள்ள தகுதி இல்லையே. மகாராணி பிரேமவர்த்தினியின் கம்பீரம் அவளை அச்சுறுத்தும். 

”உம்… நான் இந்நாட்டின் மகாராணியாக முடி சூட வெகு காலம் ஆகாது. அப்போது இந்தப் பிரேமவர்த்தினியை வைக்கும் இடத்தில் வைக்கிறேன். என் காலில் விழுந்து கெஞ்ச வைக்கிறேன்” என்று கறுவினாள்- 

பல எண்ணங்களால் அலைக்கப்பட்டு கண்ணயர்ந்த மேகலா, கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த போது தான் உதயசந்திரனின் முகம் சாளரத்தின் ஊடே தெரிந்தது. 

ஓ! அந்த முகத்தைக் கண்டதுமே மனம் ஏன் அப்படித் துள்ளியது? பரவசமான உணர்வு உடல் முழுவதும் பரவிய விந்தை தான் என்ன? அந்த முக தரிசனம் கூட ஒரு கணம் தானே கிடைத்தது. 

அன்று இரவு, அதன் பின் அவளால் உறங்க முடியவில்லை. அந்த முகத்தை எண்ணி எண்ணி உள்ளூர ஓர் ஆனந்த நிலையில் லயித்தாள். காலையில் மஞ்சத்திலிருந்து எழுந்த போது சோர்வு அவளைப் பீடித்திருந்தது. 

14. குழப்பங்கள் 

மகாராணி பிரேமவர்த்தினி, மனச் சோர்வடையும் போதெல்லாம் யோகி பரமாச்சாரியின் உரையாடலில் ஈடுபடுவாள். காஞ்சியில் ஆங்காங்கே மக்கள், தங்கள் அதிருப்தியைத் தெரிவிக்கும் வண்ணம் சிறுசிறு குழப்பங் களை உண்டாக்கியதாகச் செய்திகள் வந்து கொண்டி ருந்தன. புது வரிகளை எதிர்த்து கால்நடை ஊர்வலம் நடத்தி, அரசாங்கப்பண்டார அதிகாரியிடம் தங்கள் எதிர்ப் பைத் தெரிவித்தார்கள். சில இடங்களில் காவல் வீரர்களை மக்கள் தாக்கியதாகவும் தகவல் வந்திருந்தது. மகாராணி மனம் குழம்பியிருந்தாள். பரமாச்சாரியிடம் சற்று நேரம் உரையாடிக் கொண்டிருந்தால் மனம் சாந்தியடையும் என்று எண்ணினாள். 

யோகியிடம் அவளுக்கு ஏற்பட்டிருந்த ஈடுபாடு அபரிமிதமானது. எதையும் யதார்த்தபூர்வமாக ஏற்று, சூழ் நிலைக்குத் தகுந்தபடி வாழுமாறு போதிக்கும் அவருடைய அடிப்படைத்தத்துவம் அவளை மிகவும் கவர்ந்திருந்தது. 

ஒரு நாள் அவர் கூறியது அவள் மனத்தில் ஆழப் பதிந்திருந்தது – “நம்முடைய உணர்வுகளை நாம் எதிர்க்க வேண்டியதில்லை. இன்று தோன்றியுள்ள மதங்கள் அத்தனையுமே எதிர்ப்பின் விளைவுகள். அதைச் செய்யாதே, இப்படி நடக்காதே, இதை விரும்பாதே என்று, இயல்பான மனித அடிப்படை உணர்வுகளைக் கட்டுப்படுத்தியே வளர்ந்திருக்கின்றன. மனிதன் தன் சுதர்மப்படியேதான் இயற்கையோடு ஒட்டி வாழ வேண்டும். சுதர்மத்துக்கு எதிராக வாழ வேண்டியதில்லை” என்று சொன்னார். 

அப்போது பிரேமவர்த்தினி கேட்டாள். 

“சுவாமி, எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்கிறீர்களே, கொலைகாரனாகவும், காமுகனாகவும்கூட வாழலாம் என்கிறீர்களா?” 

“கொலைகாரன், காமுகன் என்பதெல்லாம் வெறும் வார்த்தைகளே. பிரபஞ்சத்தில் அப்படி யாருமே இல்லை. கொலை நடைபெறும்போது, தன்வசம் இழந்து விடுகிறான். உணர்ச்சிகள், நம்மை ஆளும்படி விட்டுவிடக் கூடாது. நம்மைப் பற்றிய நினைவை மறந்துவிடக் கூடாது. தன்னுணர் வோடிருந்தால், கோபம் நெருங்காது. ஒரு சிறு உயிருக்குக்கூடத் தீங்கிழைக்க நேராது. என்னுடைய தியான முறையைப் பின்பற்றினால், கொலைக்கும், காம வக்கிரங்களுக்கும் இடமேது?” 

ருத்திர பரமாச்சாரி சொன்னவற்றில் சில புரிந்தன; சில குழப்பின. அவர் சொன்னவற்றில் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது, வாழ்க்கை அனுபவிப்பதற்கே என்ற தத்து வந்தான். 

காம நுகர்ச்சியை மற்ற மதங்கள் ஒதுக்கும்படிக் கூறி அலறிக் கொண்டிருக்கும் வேளையில், அந்த உணர்வை அனுபவித்து, அதன் மூலமாகவே கடவுளை உணரலாம் என்கிறாரே…. ! ஓ, மனித உணர்வுகளோடு ஒட்டிப் பேசும் இவருடைய தத்துவங்கள், எவ்வளவு இயற்கையாக இருக்கின்றன !யோகமும் போகமும் ஒன்றுதான் என்றாரே! 

ஒரு நாள் பிரேமவர்த்தினி கேட்டாள்: 

“காதல் உணர்வு, இந்த உடலைச் சேர்ந்ததாயிற்றே; வெறும் உடல் உணர்வைக் கொண்டு கடவுளை அறிய முடியுமா, சுவாமி?” 

”உணர்வு என்பதே உடலின் ஓர் அம்சம்தானே. கடவுளை உணர்வது என்பதும் இந்த உடல் மூலமாகத்தான் முடியுமே தவிர, உணர்வை இழந்து விட்ட பிரேதத்தால் முடி யாது. கடவுள் என்பதே ஓர் பேரானந்த உணர்வு தான். உணர்வு என்றாலே அது உடலோடு ஒட்டியது தான். இந்த உடலோடு கடவுளை உணர்ந்தவர்கள் தாம் அநுபூதிகள். உடல் இல்லையென்றால் எந்த உணர்வும் இல்லை” என்றார், யோகி. 

ஓ! இந்த உலகத்தை முழுமையாக அனுபவித்து இன்புற வழிவகுக்கும் இந்த நெறி எவ்வளவு எளிமையானது! யதார்த்தப்பூர்வமானது…! 

பிரேமவர்த்தினி காலைவேளையில் பல எண்ணங்களால் சூழப்பட்டு படுக்கையில் இருந்தபோது, அரண்மனை வாயிலில் மக்கள் பெருங்கூட்டமாகக் கூடி ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தார்கள். வரிப் பளுவைக் குறைக்க வேண்டும் என்று கோரி மகாராணியைக் காண வந்திருந்த கூட்டத்தை அரண்மனை வீரர்கள் சமாளிக்க முடியாமல் திணறினார்கள். 

மக்களின் இரைச்சலைக் கேட்டு வெளியே வந்த மேகலா, கையை உயர்த்தி மக்களை அமைதியாக இருக்குமாறு கூறினாள். 

“மகாராணியைக் காண வேண்டும். மகாராணியிடம் முறையிட வேண்டும்” என்று கூட்டத்தில், ஒருவன் இரைந்து கூறினான். 

“உங்கள் குறையை என்னிடம் கூறுங்கள். வேண்டியதைச் செய்கிறேன்” என்றாள், மேகலா. 

“மகாராணியிடம்தான் கூற வேண்டும்” என்று பலர் ஒரே சமயத்தில் இரைந்தனர். 

கோபத்தினால் மேகலாவின் முகம் சிவந்தது. “உங்கள் குறை என்ன?” என்று கேட்டாள். 

“இவளிடம் என்ன பேச்சு, இவளா மகாராணி” என்று கூட்டத்திலிருந்து ஒரு குரல் எழுந்தது. 

மேகலாவின் உடல் கோபத்தால் நடுங்கியது. “கூற இஷ்டமில்லையென்றால் விலகிச் செல்லுங்கள்” என்று சீறினாள்.

“மகாராணியைக் காணாமல் போகமாட்டோம்” என்று ஒருவன் இரைந்து கூறினான். 

அப்போது மேகலாவின் அருகே பாதுகாவலாக நின்று கொண்டிருந்த அரண்மனைக் காவல் படைத் தலைவன், கூட்டத்தினரை நோக்கி, “சின்ன ராணியாரிடம் உங்கள் குறையைக் கூறலாம். வருங்காலத்தில் இவர்தாம் மகாராணி” என்றான். 

“உள்ளே போ… உள்ளே போ…. மகாராணியைக் கூப்பிடு” என்று கூட்டம் இரைந்தது. 

கூட்டத்திலிருந்து ஒரு குரல், “நாட்டியக்காரியை உள்ளே போகச் சொல்” என்று தெளிவாகக் கேட்டது. 

மேகலாவின் கோபம் கொந்தளித்தது. படைத் தலைவனை நோக்கி, “இந்த முட்டாள் கூட்டத்தை அடித்து விரட்டு” என்று ஆணையிட்டாள். படைத் தலைவன் ஆணையை நிறைவேற்றுவதற்கு ஆயத்தமான போது, தரணி கொண்ட போசரின் இரதம் அங்குவரவே மக்கள் வழி விட்டு விலகி நின்றனர். 

முதன் மந்திரியைக் கண்டதும் கூட்டத்தில் பரபரப்புத் தோன்றியது. மக்களைத் துரத்துவதற்காகக் குதிரை வீரர்களை ஆயத்தப்படுத்த முனைந்த படைத் தலைவனை மந்திரி தடுத்து நிறுத்தினார். மேகலாவிடம், “தாங்கள் அரண்மனைக்குச் சென்று விடுங்கள். நான் இவர்களைக் கவனித்துக் கொள்கிறேன்” என்றார். 

“ஒழுங்கில்லாமல் இப்படி அரண்மனை வாயிலில் வந்து கூச்சலிடும் இந்த முரடர்களைக் குதிரைகளைக் கொண்டு தான் விரட்டியடிக்க வேண்டும்” என்று கோபத்தில் குமுறினாள், மேகலா. 

“இளவரசியாரே, தயவு செய்து தாங்கள் இப்போது உள்ளே செல்லுங்கள். இவர்களை நான் கலைந்து போகும்படிச் செய்கிறேன். தாங்கள் இங்கிருந்தால் குழப்பம் வரும். தயவு செய்து அரண்மனைக்குள் சென்று விடுங்கள்” என்று தரணிகொண்டபோசர் உறுதியுடன் கூறினார். 

மேகலாவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தன்னை அலட்சியப்படுத்தும் மக்கள் கூட்டத்தைச் சிதறி ஓடும்படி அடித்து விரட்ட வேண்டும் என்னும் வெறி அவளை ஆட்கொண்டிருந்தது. ஆனால், தரணிகொண்ட போசர் உறுதியாக இருக்கவே, கோபத்துடன் திரும்பி அரண்மனைக்குள் சென்று மறைந்தாள். 

சற்று நேரத்தில் இளவரசன் சித்திரமாயன் அங்கு வரவே கூட்டத்தில் மீண்டும் சலசலப்புத் தோன்றியது. மகாராணியை அழைத்து வர ஒரு தாதி அந்தப்புரத்திற்கு ஓடினாள். 

படுக்கையில் சோர்வுடன் பல எண்ணங்களால் குழம்பிக் கிடந்த மகாராணி பிரேமவர்த்தினியின் சிந்தனையைக் கலைத்தாள், தாதி. 

“அரண்மனை வாசலில் உங்களைக் காணப் பெருங் கூட்டம் கூடியிருக்கிறது” என்றாள். 

“ஏன்?” 

“மகாராணியாரைக் காணவேண்டுமென்று பிடிவாத மாயிருக்கிறார்கள். வரி விதிப்பு விஷயமாகத் தங்களிடம் முறையிட வேண்டுமாம்.” 

“கூட்டத்தை விரட்டி ஓட்டச் சொல்” என்றாள் மகாராணி கோபத்துடன். 

“இளவரசர் கூட்டத்தைக் கலைக்க முயன்று கொண்டிருக்கிறார். முதன்மந்திரியும் வந்துவிட்டார். கூட்டம் கலைய மறுக்கிறது,” என்றாள் தாதி. 

அப்போது இன்னொரு தாதி வந்து, “முதன் மந்திரியார் தங்களைக் காண வந்திருக்கிறார்” என்றாள். 

மகாராணி, தன் அறையைவிட்டு வெளியே வந்து மந்திரியைச் சந்தித்தாள். 

“தாங்கள் ஒருமுறை மக்களுக்குத் தரிசனம் கொடுத்தால் சமாதானமடைந்து விடுவார்கள்” என்றார், தரணிகொண்ட போசர். 

“வரிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மக்களை நான் சந்திக்கத் தயாராக இல்லை. குதிரை வீரர்களைக் கொண்டு கூட்டத்தைக் கலையுங்கள்.’ 

“அதற்கே அவசியம் இல்லை, தேவி. தாங்கள் மக்களுக்குத் தரிசனம் கொடுத்தாலே அடங்கி விடுவார்கள்.” 

“என்னுடைய கட்டளைகளை மதிக்காதவர்களை நான் சந்திக்கமாட்டேன்” என்றாள், மகாராணி பிடிவாதமாக. 

“மக்கள் தங்கள் குறைகளைக் கூற மகாராணியைச் சந்திக்க வந்திருப்பதில் தவறு ஏதும் இல்லை.” 

“வரி விதிப்பது ஒரு குறையா, மந்திரியாரே?” 

“வரி விதிப்பு மக்களைப் பெரிதும் பாதித்திருப்பதால் தான் உங்களையே நேரில் காண வந்து விட்டார்கள். இப் போது விதித்திருக்கும் வரிகள் நியாயமற்றவை என்று முன்பே தங்களிடம் கூறியிருந்தேன்” என்றார், முதன் மந்திரி.

“வருமானத்தில் தானே வரி விதித்திருக்கிறேன்.” 

“தொழிலாளரின் தொழில் மீது வரி போடப்பட்டிருக்கிறது. உடலால் உழைத்து அன்றாடம் ஈட்டும் பணத்தை நாம் பெறுவது நியாயமில்லையல்லவா?” 

“நியாயமோ நியாயமில்லையோ; அரசின் கட்டளையை முதலில் மதிக்கத் தெரியவேண்டும். மதிக்கத் தெரியாதவர்களை நான் சந்திக்க மாட்டேன்” என்ற மகாராணி, பிடிவாதமாக மறுத்து விட்டாள். 

முதன் மந்திரி, மகாராணியைச் சந்தித்துவிட்டு அரண்மனை வாசலை அடைந்தபோது, பெருங்குழப்பம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியிருந்தது. குதிரை வீரர்கள், மக்களை விரட்டத் தயாராக அணிவகுத்திருந்தனர். முதன் மந்திரியைக் கண்டதும் கூட்டத்தின் ஆரவாரம் அதிகரித்தது. 

“அமைதியாகக் கலைந்து செல்லுங்கள், மகாராணி யாருக்கு உடல் நலமில்லை. இன்னொரு சமயம் உங்களைச் சந்திப்பார். இப்போது கலைந்து செல்லுங்கள்” என்றார், முதன்மந்திரி. 

கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்புக் கேட்டது. சிலர் அவநம்பிக்கையுடன் முணுமுணுத்தனர். 

“வரிகளைக் குறைக்க வேண்டும். தொழிலுக்கு வரி போடக் கூடாது” என்று கூட்டத்திலிருந்து உரத்த குரல் ஒன்று கேட்டது. 

“மகாராணியாரிடம் கூறியிருக்கிறேன். போர்க்கால மாதலால் நீங்களும் அரசுக்கு உதவ வேண்டும். விரைவில் வரிகளைக் குறைப்பதற்கான முயற்சி எடுக்கப்படும். இப்போது கலைந்து செல்லுங்கள்” என்று முதன்மந்திரி கூறியதும், அவர் சொல்லுக்கு இணங்கி கூட்டம் மெல்லக் கலையத் தொடங்கியது. 

மந்திரியின் அருகில் நின்று கொண்டிருந்த இளவரசன், “இவர்களிடம் என்ன வேண்டுவது? குதிரை வீரர்களைக் கொண்டு விரட்டியிருக்கலாம்” என்றான். 

“தானாகக் கலைந்து செல்பவர்களை வீணாகத் தாக்கு வானேன்” என்று கூறிவிட்டுத் தம்முடைய பல்லக்கை நோக்கி நடந்தார், முதன்மந்திரி. 

15. போட்டி அரங்கம் 

காஞ்சி நகர் விழாக்கோலம் பூண்டிருந்தது. வீதி களெல்லாம் நீர் தெளிக்கப்பட்டு சுத்தமாயிருந்தன. தோரணங்கள் எல்லா வீதிகளையும் அலங்கரித்தன. மக்கள் மிகுந்த களிப்புடன் போட்டி மைதானத்தை நோக்கி அதிகாலையிலேயே செல்லத் தொடங்கிவிட்டனர். வரிச்சுமை யினாலும், மகாராணியின் சர்வாதிகாரக் கெடுபிடியினாலும் வதங்கிப் போயிருந்த மக்களுக்கு வீரப்போட்டி சிறிது உற்சாகமளித்திருந்தது. 

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வந்த வீரப்போட்டி அன்று ஆரம்பமாக இருந்தது. போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு உயர்ந்த பரிசுகள் வழங்கப் படுவதாலும் அந்தப் போட்டிகளில் வெற்றி பெறுவதை உலகம் பெருமையாகக் கருதியதாலும் பல நாடுகளிலிருந்து வீரர்கள் போட்டியில் பங்குபெற வந்திருந்தனர். 

பல்லவச் சக்ரவர்த்தி, போர்க்களத்தில் இருந்ததால் மகாராணி பிரேமவர்த்தினியின் தலைமையில் போட்டி நடைபெற இருந்தது. போட்டி மைதானத்தில் ஆண்களுக் கும் பெண்களுக்கும் தனி இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. அதிகாரிகளுக்கும், பிரமுகர்களுக்கும் அந்தஸ்துக்குத் தகுந்தவாறு இருப்பிடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பல கடிகைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கென்று தனிமேடை யில் இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும், மிக உயர் பதவிகளை வகித்தவர்களுக்கும் தனி மேடை அமைக்கப்பட்டிருந்தது. மகாராணிக் கும், இளவரசனுக்கும் தனியாக ஒரு அலங்கார மேடை அமைக்கப்பட்டு, அலங்கார ஆசனங்கள் போடப்பட்டி ருந்தன. 

உதயசந்திரனும், ராஜன் நம்பூதிரியும் மைதானத்துக்குள் வந்ததுமே உதயசந்திரன், மைதானத்தின் அமைப்பை ஆராயத் தொடங்கினான். போட்டி வீரர்கள் மைதானத்துக்குள் வருவதற்காக அமைக்கப்பட்டிருந்த வாசலை ஒட்டிய மேல்புறத்து மேடையைப் பார்த்தான். அந்த மேடை நன்கு அலங்கரிக்கப்பட்டு, உயர்ந்த ஆசனங்கள் போடப்பட்டிருந்தன. 

மூன்றாவது ஆசனத்தில் அமரப்போகிறவர் யார் ?… அந்த ஆசனத்துக்கு எதிர்த்திசையில் கவனித்தான். மைதானத்துக்கு வெளியே, ஒரு பெரிய கல்லால மரமும், அதற்குப் பின்னே இருந்த புளிய மரமும் தெரிந்தன. கல்லால மரம், புளிய மரத்தை நன்கு மறைத்துக்கொண்டிருந்தது. உதய சந்திரன் உற்றுப் பார்த்தான். 

ஒரு சிறு இடைவெளி கிடைத்தால்கூடப் போதும் சுகததாசாவுக்கு. நிச்சயம் அந்த ஆசனத்துக்கு நேரே கிளைகளினூடே சிறு இடைவெளி இருக்கும். இல்லாமலிருந்தால் இதற்குள் உண்டு பண்ணியிருந்திருப்பான்… 

“என்ன அந்த மரத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டி ருக்கிறாய்? அதன் மீது ஏறி இருந்து வேடிக்கை பார்க்கலாம் என்று நினைக்கிறாயா?” என்று கேட்டான், ராஜன் நம்பூதிரி. 

“ஊஹும்… அங்கும் ஜனங்கள் ஏறியிருக்கிறார்களோ என்று பார்த்தேன்” என்றான், உதயசந்திரன். 

“அங்கிருந்து போட்டி நடைபெறும் அரங்கு நன்கு தெரியாது. அங்கிருந்து பார்த்தால், மேடையில் அமர்ந்திருப் பவர்கள்தாம் தெரியும்” என்றான் ராஜன் நம்பூதிரி. 

“ஆமாம்” என்று தலையை ஆட்டிவிட்டு உதய சந்திரன் பார்வையைச் சுழலவிட்டான். 

பிரமுகர்களிருந்த மேடையிலிருந்து டெங்லீ, அவனைப் பார்த்து கையை அசைத்தது தெரிந்தது. அவருக்கு அருகே லீனாவும், டெங்லீயின் குடும்பத்தினரும் அமர்ந்திருந்தனர். உதய சந்திரனை மேடைக்கு வருமாறு கையை அசைத்துக் கூப்பிட்டார். மேடையில் அவருக்கு அருகில் அமர வருமாறு சைகை செய்து அழைத்தார். ராஜன் நம்பூதிரியையும் அழைத்துக் கொண்டு உதயசந்திரன் மேடையை நோக்கிச் சென்றான். மேடையை நெருங்கியதும் அங்கு நின்ற ஒரு காவல் வீரன், அவர்களை மறித்து வேறு பக்கம் போகும்படிச் சொன்னான். டெங்லீ அங்கு விரைந்து சென்று, அவர்கள் இருவரையும் வரவேற்று அழைத்துக் கொண்டு மேடைக்குச் சென்றார். அவருக்கு அருகே இருந்த ஆசனங்களில் இருவரையும் அமரச் செய்தார். 

டெங்லீயின் மனைவிக்கு அருகே இருந்த லீனா, உதயசந்திரனிடம், “உங்களை வெகுநேரமாகத் தேடிக் கொண்டிருக்கிறோம்” என்றாள். 

“இப்போதுதான் உள்ளே வந்தோம். கூட்டத்தில் ஒரே நெருக்கடி” என்றான், உதயசந்திரன். 

அந்த இடத்திலிருந்து அலங்கார மேடையிலிருந்த மூன்றாவது ஆசனம் தெரிகிறதா என்று கவனித்தான். நன்கு தெரிந்தது. 

திடீரென்று கொம்பு ஊதிய ஒலி கேட்டது. தொடர்ந்து பல மங்கள வாத்தியங்களின் ஒலிகளும் கேட்கத் தொடங்கின. “ராஜவம்சத்தினரும் உயர் அதிகாரிகளும் வரப் போகிறார்கள்” என்றார், டெங்லீ. 

மைதானத்தில் அமைதி நிலவியது. சற்று நேரத்தில் மேடை அமைந்திருந்த வாயில் வழியாக ஒவ்வொருவராக வரத்தொடங்கினர். ஒவ்வொருவரையும் அவருடைய மெய்க்காப்பாளர்கள் அழைத்து வந்து, ஆசனங்களில் அமரச் செய்துவிட்டுப் பின்னால் நின்று கொண்டார்கள். டெங்லீ, அங்கே வந்தவர்களைப் பற்றிய விவரங்களைச் சொன்னார். 

அப்போது மேடையில் சிறுவன் பல்லவமல்லன் முன்னே வர, அவனைத் தொடர்ந்து இரணியவர்மர் கம்பீர மாக வந்ததைப் பார்த்த உதயசந்திரன், “அவர் கோட்டைத் தளபதிதானே? இரதத்தில் அவர் போனதைப் பார்த்தேன்” என்றான். 

“ஆமாம், ஆனால் இப்போது அவர் கோட்டைத் தளபதியாக இல்லை என்று கேள்வி. அவருக்கு அருகே இருப்பவன், அவருடைய கடைசி மகன் பல்லவமல்லன். காஞ்சி நகரத்தின் செல்லப்பிள்ளை. ராஜ வம்சத்தைச் சேர்ந்தவனானாலும் கர்வமின்றி எல்லோரிடமும் பழகு வான். சீனச் சேரிக்கு அடிக்கடி விஜயம் செய்து, சீனச் சிறுவர்களோடு அளவளாவுவான். புத்திசாலியான பையன்” என்றார் டெங்லீ. 

“சுறுசுறுப்பாயிருக்கிறான். அவன் வந்ததும் அந்த மேடையே கலகலப்பாய் விட்டதே!” என்றான் உதய சந்திரன். பிறகு அவன் கவனம், அவன் கண்காணித்த அந்த மூன்றாவது ஆசனத்தின் மீது நிலைத்தது. 

அந்த ஆசனம் இன்னும் காலியாகவே இருந்தது. அந்த நபர் வராமலேயே இருந்துவிட்டால் நல்லது என்று எண்ணினான். அந்த குறிப்பிட்ட அலங்கார மேடை, அனேகமாக நிரம்பிவிட்டது. உதயசந்திரனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. 

“அதோ! மகாராணியின் மேடைக்கு அருகேயுள்ள அந்த அலங்கார மேடையில், முன் வரிசையில் இன்னும் யாரும் வரவில்லையே” என்றான். 

“ஆமாம். அது யாருக்கென்று தெரியவில்லை. மந்திரிகளுக்காக இருக்கலாம். அதோ, மந்திரிசபைக் குழுவே வருகிறதே” என்றார், டெங்லீ. 

உதயசந்திரன் பரபரப்படைந்தவனாய் உன்னிப்பாகக் கவனித்தான். மெய்க்காவலர்கள் வழி காட்ட, மந்திரிகள் மேடையில் வந்து ஆசனங்களில் அமர்ந்தனர். 

ஓ…! மூன்றாவது ஆசனத்தில் கம்பீரமாக ஒரு வயோதிகர் அமர்கிறாரே… 

உதயசந்திரன் திரும்பி டெங்லியைப் பார்த்து, “அந்த ஐந்து ஆசனங்களில் நடுவில் உள்ள ஆசனத்திலிருக்கிறாரே, அவர் யார்?” என்று கேட்டான். 

“அவர் தாம் பல்லவ நாட்டின் முதன் மந்திரி தரணி கொண்ட போசர். கேள்விப்பட்டிருப்பாயே. பக்கத்தில் இருபுறமும் இருப்பவர்கள் அவருடைய சகமந்திரிகள்.” 

“அவர் மிகவும் பொல்லாதவரோ ?” 

“இந்த சாம்ராஜ்யமே தரணி கொண்ட போசருடைய விரலசைவுக்கு ஆடும். மிகுந்த சாமர்த்தியசாலி, சக்ரவர்த்தியே இவரிடம் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். இப்போ திருக்கும் சக்ரவர்த்தியின் தந்தை இராச சிம்ம பல்லவர் காலத்திலிருந்தே இவர் தாம் முதன் மந்திரி. இவர் போட்ட கோட்டை சக்கரவர்த்தி தாண்ட மாட்டார். அவ்வளவு மரியாதை இவருக்கு” என்றார், டெங்லீ. 

உதயசந்திரன் கூர்ந்து முதன் மந்திரியைப் பார்த்தான். உள்ளூர அவனுடைய மனதில் வலி எடுத்தது. நாளை தானே சதித்திட்டத்தின்படி முயற்சி நடக்கும். அதற்குள் எப்படியும் அவரை எச்சரித்து விடலாம். இன்று இரவே அவருடைய மாளிகைக்குச் சென்று எச்சரித்து விடவேண்டும் என்று முடிவு செய்தான். 

திடீரென்று போட்டி மைதானத்தில் பரபரப்பு ஏற் பட்டது. ஒரே சமயத்தில் பல கொம்புகளும் வாத்தியங்களும் முழங்கின. மைதானத்தில் கூடியிருந்த அனைவரும் மரியாதையுடன் எழுந்து நின்றனர். 

“மகாராணி வருகிறார்” என்றார், டெங்லீ. 

உதயசந்திரனுக்குத் திடீரென்று சுரங்கப்பாதையின் நினைவு வந்தது. மஞ்சத்திலே சயனித்திருந்த அழகியும் அங்கே வரலாம் என்று எதிர்பார்த்தான். 

அலங்கார மேடையின் வாயிலில் மகாராணி தோன்றி யதுமே உதயசந்திரன் பிரமித்துப் போனான். ஒ…! மகா ராணி!எவ்வளவு ஒய்யாரம்! என்ன கம்பீரம்! 

மகாராணியைத் தொடர்ந்து பின்னே வந்த பெண்ணைக் கண்டு உதயசந்திரன் திடுக்கிட்டான். 

ஒ…சுரங்கப்பாதையில் அவன் சென்றபோது அன்று மஞ்சத்தில் அவன் கண்ட பெண்ணல்லவா அவள்! 

வைத்தப்பார்வையை விலக்காமல், தாளாத வியப்புடன் அவளை வெறிக்கப் பார்த்தவாறு இருந்தான். சில வினாடிகளுக்கு அவனுடைய நினைவில் அவள் மஞ்சத்தில் கிடந்த கோலம் தோன்றியது. 

ஒரு பெண்ணுக்கு இவ்வளவு வசீகரம் தேவைதானா? தேவலோகத்திற்கு வேண்டுமானால் இந்த அழகு, இந்திரசபைக்குத் தேவைப்படலாம். மனித உலகில் இவ்வளவு அழகும் வசீகரமும் எதற்கு? மனிதனைப் பைத்தியமாக்குவதற்கா? யார் இவள் ?… 

டெங்லீ அவன் காதருகே குனிந்து, “மகாராணிக்குப் பின்னே வருகிறாளே, அவள் தான் சின்ன ராணி. இளவரசனின் மனைவி” என்றார். 

இதைக் கேட்டதும் உதயசந்திரனின் முகம் சட்டென்று வாடியது. அவன் மனம் முணுமுணுத்தது. ‘அட கடவுளே, இவ்வளவு அழகிய பெண்ணுக்கு அந்த இளவரசன் கொஞ்சங் கூட அருகதை இல்லையே. கெடுமதி யாளர்களிடம் கடவுள் செல்வத்தை அள்ளிக் கொடுப்பது போல், அந்தக் கயவனிடம், கடவுள் இந்த அழகியைச் சிக்க வைத்திருக்கிறாரே…’ 

உதயசந்திரனின் மனம் மேகலாவிற்காக இரங்கியது. மேகலாவின் பின்னே இளவரசன் சித்திரமாயன் வந்தான். 


அரச குடும்பத்தினர், ஆசனங்களில் அமர்ந்ததும் மற்றவர்களும் அமர்ந்தார்கள். போட்டி அறிவிப்பாளர், மகா ராணியின் அருகே வந்து வணங்கிவிட்டுப் போட்டியின் விதிமுறைகளையும், என்னென்ன போட்டிகள் அன்று நடைபெறும் என்பதையும் உரத்த குரலில் அறிவித்தார். 

வில்லாளிகளுக்கான போட்டியும், குதிரை வீரர்களுக் கான போட்டியும், வேல் வீச்சுப் போட்டியும் மறுநாள் நடைபெறும் என்று அறிவிப்பிலிருந்து அறிந்ததும், உதய சந்திரனின் நினைவு சுகததாசாவிடம் சென்றது. 

நாளை அவன் இங்கே வந்து போட்டியில் கலந்து கொள்ளவா போகிறான்? புளிய மரத்தின் மீதல்லவா அமர்ந்திருப்பான்… 

உதயசந்திரன் சட்டென்று திரும்பி முதன் மந்திரியை பார்த்தான். அவருடைய பரந்த முகமும் கூரிய பார்வையும், புன்முறுவலும் அவரிடம் அவனுக்கு மரியாதையை உண்டாக்கின. அன்று இரவே அவருடைய மாளிகைக்குப் போய் எச்சரித்துவிடவேண்டும் என்னும் எண்ணம் உறுதிப்பட்டுவிட்டது. 

பார்வையாளர்களின் மேடைகளுக்கு நடுவே, போட்டி நடைபெறும் அரங்கு, வட்டமாக அமைந்திருந்தது. போட்டியில் கலந்துகொள்ள வந்திருந்த வீரர்கள், தங்கள் நாட்டுக் கொடிகளை ஏந்தியவாறு அரங்கில் தோன்றிய போது, பார்வையாளர்களிடமிருந்து பெருத்த ஆரவாரம் எழுந்தது. வீரர்கள் வரிசையாக மகாராணியின் முன்பாக வந்து வணங்கி சென்றபோது, அறிவிப்பாளர், அந்த வீரர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிவித் தார். இலங்கை வீரர்களை அறிமுகம் செய்தபோது, உதய சந்திரன் உரத்த குரலில் ஆரவாரம் செய்தான். அவனுடைய குரலை அடையாளம் கண்டுகொண்ட இலங்கை வீரர்கள் அவனிருந்த திசையில் திரும்பி அவனை நோக்கி உற்சாகத்துடன் கைகளை அசைத்தனர். வீரர்கள் அனைவரும் மைதானத்தின் உள்ளே இருந்த ஆசனங்களில் அமர்ந்த பிறகு ஒவ்வொரு போட்டியாக நடைபெறத் தொடங்கியது. 

ஆரம்பத்தில் சிலம்பப் போட்டி நடைபெற்றது. போட்டி, ஆரம்பத்திலேயே நல்ல விறுவிறுப்படைந்து விட்டது. பாண்டிய நாட்டுச் சிலம்படி வீரன், தன்னை எதிர்த்த அனைவரையும் வெற்றி கொண்டான். அவனுடைய தாக்குதலால் சோழநாட்டுச் சிலம்படி வீரன் ஒருவனும் பல்லவ நாட்டு வீரன் ஒருவனும் கையொடிந்து சாய்ந்தனர். 

சிலம்படிக்குப் பிறகு, மற்போர் ஆரம்பமாயிற்று. வீரர்கள் ஆவேசத்துடன் போரிட்டனர். நான்கு வீரர்களை ஒருவர் பின் ஒருவராக மற்போரில் வெற்றிகொண்ட இலங்கை வீரன் களுபந்தா, ஐந்தாவது ஆட்டத்தில் சாளுக்கிய நாட்டு வீரனிடம் தோல்வியுற்றான். அவனுடைய தோல்வி, உதயசந்திரனுக்கும், ராஜன் நம்பூதிரிக்கும் வருத்தத்தைக் கொடுத்தது. தன்னுடைய சகா தோல்வி யுற்றதைக் கண்ட தேவசோமா, கோபத்துடனிருந்தான். 

அடுத்து வாட்போர். அந்தப் போட்டியில் மிகுந்த ஆவேசத்துடன் பாய்ந்தான், தேவசோமா. அவனுடைய வாள் வீச்சின் உக்கிரம் தாங்காமல் சேரநாட்டு வீரன் பின்வாங்கியே சென்று, வாசலை நெருங்கியதும் வெளியே ஓடி விட்டான். பார்வையாளர்கள், கரகோஷம் எழுப்பி னார்கள். பாண்டிய நாட்டு வீரனின் வாள், தேவசோமா வின் வீச்சில் எகிறிப்போய் தூர விழுந்தது. கடைசியில் சாளுக்கிய வாள் வீரனைச் சந்தித்தபோது, களுபந்தாவைத் தோற்கடித்த சாளுக்கிய வீரனைச் சார்ந்தவன் அவன் என்பதை அறிந்து, தேவசோமா மிகவும் உக்கிரத்தோடு தாக்கினான். பார்வையாளர்கள் திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். போர் மிகப் பயங்கரமாயிருந்தது. ஒவ்வொரு வீச்சின்போதும் வாளிலிருந்து எழுந்த ஒலி, எல்லோருக்கும் திகிலைக் கொடுத்தது. சாளுக்கிய வீரன் தன் முழு பலத்தையும் திரட்டி தேவசோமாவின் மீது பாய்ந்தான். தேவசோமா தொலைந்தான் என்று மக்கள் நினைத்தபோது, அவன் மிக சாமர்த்தியமாகச் சாளுக்கிய னின் தாக்குதலைத் தவிர்த்து, அதே வேகத்தில் இமைக்கும் நேரத்துக்குள் தன் வாளை அவனுடைய கழுத்தில் வீசினான். மறுகணம், சாளுக்கிய வீரனின் தலை வெட்டுண்டு தரையில் விழுந்து துள்ளியது. மக்களிடமிருந்து பெருத்த ஆரவாரமும், பீதியின் அலறலும் கலந்து வந்தன. 

“ஆ…பிரமாதம்!” என்றான், இளவரசன். 

லீனா, அருவருப்பினாலும், பயத்தாலும் கண்களை மூடிக்கொண்டாள். “என்ன கொடுமை” என்று முனகினாள்.

“பயமாயிருக்கிறதா?” என்று கேட்டான், உதய சந்திரன். 

கண்களைத் திறந்தாள் லீனா. “ஊம்…ஏன் கொல்ல வேண்டும்.பாவம்” என்றாள். 

“இதெல்லாம் போட்டியில் தவிர்க்க முடியாதது. தேவ சோமா அவனைக் கொல்லவில்லை என்றால், அவன் தேவ சோமாவைக் கொன்றிருப்பான்” என்றான் உதயசந்திரன். 

வெற்றி பெற்ற தேவசோமா, இரத்தம் கொட்டிக் கொண்டிருந்த வாளை ஏந்தியபடி மகாராணியின் எதிரே வந்து தலை குனிந்து வணக்கம் செலுத்திவிட்டுச் சென்றான். 

அறிவிப்பாளரின் குரல் கேட்டது, “இனி வலிந்தழைக்கும் போர் நடைபெறும். வீரர்கள் இந்தப் போரில் இஷ்ட பாணியில் போரிடலாம். ஆனால், பின் பக்கமிருந்து மட்டும் தாக்கக் கூடாது.” 

அறிவிப்பைத் தொடர்ந்து ஒரு முரட்டுப் பல்லவவீரன் அரங்கில் தோன்றினான். போட்டி மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அரங்கில் வந்து நின்ற பல்லவ வீரன் சவால் விட்டான். அவனுடைய கையில் சிறு குத்துவாள் மட்டும் இருந்தது. அவனுடைய உருவமும் முகத்தோற்றமும் மிகப் பயங்கரமாய் இருந்தன. மைதானம் முழுவதும் திடீரென்று அமைதி நிலவியது. எல்லோரும் வியப்புடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தனர். கீழே அரங்கில் ஆணவத்தோடு நின்று கொண்டிருந்த பல்லவ வீரன், போட்டிக்கு வந்திருந்த மற்ற வீரர்களைப் போருக்கு வலிந்தழைத்துக் கொண்டிருந்தான். 

“என்னை எதிர்க்க யார் வருகிறீர்கள்? கையில் குத்து வாள் மட்டும் கொண்டு இஷ்ட பாணியில் போரிடலாம். மீசையுள்ள வீரன் யாராவது வருகிறீர்களா?” என்று கூவியழைத்தான். 

வீரர்கள் மத்தியிலிருந்து யாரும் எழுந்திருக்கவில்லை. இஷ்டபாணி போர் என்பது பயங்கரமான ஒரு போர் முறை. இஷ்டப்படி எப்படி வேண்டுமானாலும் தாக்கலாம். கட்டுத் திட்டம் கிடையாது. மிகுந்த துணிவும் திறமையும் உள்ளவர் கள் மட்டுமே அந்த வகைப் போட்டியில் ஈடுபடத்துணிவர். பல்லவ வீரனின் சவாலை ஏற்க யாரும் முன் வரவில்லை. 

அப்போது மேடையிலிருந்த இளவரசன் எழுந்து நின்றான். “இந்த வீரனை எதிர்க்க இங்கு யாரும் இல்லையா?” என்று கேட்டான். ஒருவரிடமிருந்தும் பதில் வரவில்லை. “ஏன் நீயே, எதிர்க்க வேண்டியதுதானே. உன் வீரத்தைக் காட்டேன்” என்று முனகினான் உதயசந்திரன். 

சித்திரமாயன் மைதானம் முழுவதும் தன் பார்வையை சுழலவிட்டான். பிறகு மகாராணியிடம் குனிந்து மெல்லப் பேசினான். அவள் தலையசைத்தாள். சித்திரமாயன், பின்னால் திரும்பி, வாணராயனிடம் ஏதோ கூறினான். வாண ராயன் மேடையின் விளிம்பில் சென்று நின்றுகொண்டு உரத்த குரலில், “இந்த வீரனை வெல்பவருக்கு ஆயிரம் பொற்காசுகளைப் பரிசாக பல்லவ மகாராணியார் வழங்குவார்கள்” என்று அறிவித்தான். 

கூட்டத்திலிருந்து வியப்பொலிகள் எழுந்தன. அரங்கில் நின்று கொண்டிருந்த பல்லவ வீரன், குத்துவாளை ஏந்திய வண்ணம் அரங்கினுள் சுற்றி நடந்தான். அவனை எதிர்க்க யாரும் முன்வரவில்லை. ஒரு சுற்று நடந்துவிட்டு நின்றான். “யாருமே தயாரில்லையா? உங்கள் உயிர் என்ன அவ்வளவு உயர்வானதா? ஆண் பிள்ளை யாருமே இல்லையா?” என்று கூவினான். 

பார்வையாளர்களில் மாணவர்களின் மேடையி லிருந்து எக்காளச் சிரிப்பொலி எழுந்தது. மக்களின் ஆரவார ஒலி, வானை எட்டியது. 

திடீரென்று உதயசந்திரன் எழுந்தான். அவன் எழுந்து நின்றதைக் கண்ட லீனா துணுக்குற்றாள். ராஜன் நம்பூதிரி திகைத்தபடி இருந்தான். 

“யார் வேண்டுமானாலும் எதிர்க்கலாமா?” என்று உதயசந்திரன் இரைந்து கேட்டான். மைதானத்தில் திடீரென்று அமைதி நிலவியது. எல்லாருடைய பார்வையும் வியப்புடன் உதயசந்திரன் மீது விழுந்தது. 

“எதிர்க்க வரலாம்…ஓ…! நீ ஒரு முயல்-குட்டி. அழகான முயல் குட்டி” என்று ஏளனமாகச் சிரித்தான் பல்லவ வீரன். 

“யானையைத் தாக்க வருகிறேன்” என்று கூவிய படியே மேடையிலிருந்து அரங்கில் குதித்தான், உதய சந்திரன். 

“ஐயோ” என்று வீறிட்டாள் லீனா. 

ராஜன் நம்பூதிரி திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந் தான். டெங்லீ, பதறிப் போனார். ராஜன் நம்பூதிரியிடம், “உன் நண்பனைக் கூப்பிடு” என்றார் படபடப்புடன். 

மக்கள் உதயசந்திரன் மீது பரிதாபப்பட்டனர். அவனுடைய அழகும் கட்டுடலும், கண்களில் வீசிய ஒளியும் அத்தனை பேரையும் கவர்ந்தன. “ஐயோ, இந்த இளைஞன் முரடனோடு மோதப் போகிறானே” என்று எல்லோரும் பதைபதைத்தனர். 

– தொடரும்…

– 1985, தினமணி கதிரில் தொடர்கதையாக வெளிவந்தது.

– மருக்கொழுந்து மங்கை (சரித்திர நாவல்), முதற் பதிப்பு: மே 1995, திருவரசு புத்தக நிலையம், சென்னை.

ர.சு.நல்லபெருமாள் ர.சு.நல்லபெருமாள் (ரவணசமுத்திரம் சுப்பையா பிள்ளை நல்லபெருமாள்) (நவம்பர் 1930 - ஏப்ரல் 20, 2011) தமிழ் நாவலாசிரியர். திருநெல்வேலியில் வாழ்ந்தவர். காந்தியக் கொள்கைகளையும் சைவசித்தாந்த நோக்கையும் கொண்டு எழுதியவர். மார்க்ஸியத்துக்கு எதிரான வலதுசாரி பொருளியல் சிந்தனைகளும் ஃப்ராய்டிய உளவியல் ஆய்வுமுறைமையும் கொண்டவர். வழக்கறிஞராகப் பணியாற்றினார். சிந்தனைகளை நேரடியாக வெளிப்படுத்தும் பொதுவாசிப்புக்குரிய நூல்களை எழுதியவர். 1945-ல் தன் 15 வயதில் எழுதிய வீண்வேதனை அவருடைய முதல் படைப்பு. கல்கி இதழில் இரு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *