மரமும் மனிதனும்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 20, 2024
பார்வையிட்டோர்: 678
(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஓர் ஊரில் ஒரு மனிதன் இருந்தான். அவனுக்கு உள்ளூரில் வேலை கிடைக்கவில்லை. அதனால், பக்கத்து ஊருக்கு வேலை தேடிச் சென்றான். கட்டுச் சோற்று மூட்டையுடன் புறப் பட்டான். பக்கத்து ஊருக்குச் சென்று அவன் பிற்பகல் முழுவதும் வேலை தேடியும் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை. மனச்சோர்வுடன் தன் ஊருக்குத் திரும்பினான்.
திரும்பி வரும் வழியில் வெயில் கொளுத்தியது. அவனுக்குக் களைப்பாக இருந்தது. பசியெடுத் தது. எங்காவது நிழல் கிடைக்குமா என்று தேடினான். சிறிது தூரத்தில் ஒரு பூவரசு மரம் இருந்தது. நேரே அந்தப் பூவரசு மரத்தை நோக்கி நடந்தான். அதன் அடி நிழலில் உட்கார்ந்தான். கட்டுச் சோற்று மூட்டையை அவிழ்த்து வயிறாரச் சோறு உண்டான். பிறகு கையைத் தலைக்கு வைத்துக் கொண்டு அங்கேயே படுத்து விட்டான்.
மரத்தின் அடியில் படுத்திருக்கும் போதே அவனுக்கு ஓர் எண்ணம் பிறந்தது.
எங்கு தேடியும் வேலை கிடைக்கவில்லை. இந்த மரத்தை வெட்டி விறகாக விற்றால் பணம் கிடைக்குமே என்று அவன் எண்ணினான் உடனே தன் ஊருக்குப் புறப்பட்டுச் சென்றான். ஒருவரிடம் கோடரி வாங்கிக் கொண்டு வந்தான். அடுத்து பூவரசு மரத்தின் கிளைகள் சிலவற்றை வெட்டி னான். ஊரினுள் சென்று விற்றான். மறுநாளும் வந்து வேறு சில கிளைகளை வெட்டினான்.
மரத்தை வெட்டிக் கொண்டிருக்கும்போதே வெயில் உச்சிக்கேறியது. அவன் சிறிது நேரம் தன் வேலையை நிறுத்திவிட்டு, மிகுந்திருந்த கிளை களின் கீழே நிழலில் உட்கார்ந்து சாப்பிட்டான். பிறகு தூங்கினான். மறுபடியும் எழுந்து கிளைகளை வெட்டினான்.
இப்படி ஐந்தாறு நாட்கள் அதன் நிழலிலேயே படுத்துக்கொண்டு, மீண்டும் மீண்டும் அதன் கிளை களை வெட்டினான். ஒரு வாரத்தில் மரம் முழுவதும் வெட்டி விற்று முடிந்தது.
ஒரு வாரத்திற்குப் பின் மீண்டும் அவன் ஒரு வேலை தேடிப் பக்கத்து ஊருக்குச் சென்றான் வேலை கிடைக்கவில்லை. சோர்வுடன் திரும்பி வந்தான். வெயில் கொளுத்தியது. ஆனால் களைப்பாற உட்காருவதற்கு நிழல் இல்லை. அந்த மரம் இருந்த இடத்திற்கு வந்தான்.
வெட்டித் தீர்க்கும்வரை தனக்கு அந்தப் பூவரசு மரம் நிழல் தந்தமையை நினைத்தான். ஏழு நாள் பிழைப்புக்காகத் தான் செய்த தீமையை எண்ணி வருந்தினான்.
கருத்துரை : நல்லறிவுடைய பெருமக்கள் தாம் சாகுமட்டும் தமக்குத் தீமை செய்துவருவோர்க்கும் தம்மாலானவரை அந்தத் தீயவர்களையும் காப்பாற்றவே செயலாற்றுவார்கள்.
– நல்வழிச் சிறுகதைகள் – முதல் பாகம், முதற் பதிப்பு: ஜனவரி 1965, வானதி பதிப்பகம், சென்னை.