மரபணு
ஒர் அழகிய விடியற்காலை. இரவு முழுதும் வேலை செய்து விண்மீன்கள் களைத்து வானப்போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு உறங்கச் சென்றுவிட்டன. ஆனால் ஜெயவர்மனுக்கு இன்னும் தூக்கம் வரவில்லை. அவன் இருந்த மனோநிலையில் தூக்கம் சிறையைப்போல் தென்பட்டது. அதனால் விழித்திருப்பதே தன் சுதந்திரத்தைத் தக்க வைப்பதற்கான ஒரே வழி என அவன் மனம் பதை பதைத்தது. இன்று அவன் வாழ்வில் ஒரு முக்கிய நாள். ஏன்?. அவன் வாழ்வின் கடைசிநாளாகக்கூட இது இருக்கலாம் என்பதால். சூரியனுக்காய்க் காத்திருக்க அவனுக்குப் பொறுமையோ நேரமோ இருக்கவில்லை. அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் தலைக்குக்குளித்து முடித்துத் தனக்குப் பிடித்த அந்த நீல மேற்சட்டையையும் கோட் சூட்டையும் போட்டுக்கொண்டு தன் மடிக்கணினியை எடுத்து அவசரம் அவசரமாய்க் காரின் மறுஇருக்கையில் எறிந்துவிட்டு காரை செலுத்த ஆரம்பித்தான். கணப்பொழுதில் அந்தக் கார் வீதி முனையைக் கடந்து திரும்பியது. அவன் வீட்டில் மின்குமிழ்களும், மின்விசிறிகளும் அவன் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தன. ஆனால் அவன் மீண்டும் வருவானா?
ஜெயவர்மன், இளவயதினிலேயே மூலக்கூற்று உயிரியலில் சாதனைகள் பல செய்த விஞ்ஞானி. ஐன்ஸ்டைன் சொல்வார் “மர்மத்தினைப் பற்றிய உணர்வே ஒரு மனிதன் அடையக்கூடிய ஆகச்சிறந்த அழகான ஆழமான அனுபவமாகும். அதுவே மதத்திலும் அதுபோல் கலை மற்றும் விஞ்ஞானத்தின் எல்லாத் தீவிர முயற்சிகளிளும் உள்ளிருக்கும் தத்துவமும் ஆகும்.” ஜெயவர்மன் விஞ்ஞானத்தின் எல்லைக்குச் சென்ற வீரன். அதனால் மெய்ஞானத்தில் அவன் காலடிவைத்தே ஆகவேண்டும். அவன் மிகுந்த அன்பு கொண்டவன். இச்சமூகத்தின் துயரங்களைக் களையறுக்கத் தன் உயிரையும் கொடுப்பான். ஆனால் துன்பப்படவேண்டும் என்ற முடிவை மக்களே எடுக்கின்றார்கள் என்பதைத்தான் அவனால் சகித்துக்கொள்ள முடிவதில்லை.
அவன் வாழ்ந்தது இந்த அகண்ட பிரபஞ்சத்தின் இன்னொரு முனை. பூமாதேவியின் உடலில் ஒர் அங்கம். ஆனால் அப்பூமாதேவியை அங்கம் அங்கமாய்த் துண்டு துண்டாய் வெட்டி நாடு என்று அழைப்பர். அதை அவன் பொருட்படுத்துவதில்லை. அவனுக்கு முக்கியம் மனிதர்கள். அன்பு. அந்த அன்பை விரயமாக மண்மேல் கொட்டுவதை அவனால் பொறுக்கமுடிவதில்லை. எல்லைகள் இருக்கும் வரை எல்லைகளுக்காய் யுத்தங்கள் நடக்கும். என் நண்பனை நான் நம்புகிறேன் ஆனால் ஒரு பாதுகாப்பிற்காய்த் துப்பாக்கியும் என்னிடம் இருக்கட்டும் என்றால் அதன் அர்த்தம் என் நண்பனை நான் நம்பவில்லை என்பதே. யுத்தங்கள் வேண்டாம் என்றால் எல்லைகள் அழிக்கப்படவேண்டும். ஆனால் அதற்கு யாரும் உடன்படமாட்டார்கள். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்று வாழும் இம்மக்களுக்கு எவ்வாறு வழிகாட்ட முடியும் என்று அவன் மனம் விரக்தி அடைந்திருந்தது.
அவன் வாழும் நாட்டில் இரண்டு இனங்களுக்கு இடையே நீண்டகாலமாய் ஒரு யுத்தம். வரலாற்றில் நையப்புடைத்த கதை. அந்த யுத்தத்தை வைத்தே அரசியல்வாதிகள் அரசியல் செய்துவந்தனர். நரிகளாய்ப் பிறந்த போது செய்த தந்திரம் மனிதராய்ப் பிறந்த பின்பும் எடுபடத்தான் செய்கிறது. ஆனால் ஜெயவர்மன் இப்பொழுது கண்டுபிடித்திருக்கும் கண்டுபிடிப்பு அந்த அரசியலுக்கு ஆபத்தாய் அமையக்கூடியது. அதனால் அவன் உயிருக்கு எந்த நேரமும் ஆபத்து. வயது வெறும் இருபத்தியிரண்டு. ஆனால் அவன் இறப்பதைப்பற்றி அஞ்சவில்லை. ஏன் பிறந்தோம் என்றுகூட அறியாமல் இறப்பதைத்தான் அஞ்சினான்.
காலை ஒன்பது மணிக்கு நகர மண்டபத்தில் அவன் கண்டுபிடிப்பை மக்களுக்கும் ஊடகங்களுக்கும் அறிவிக்கப்போகிறான். இப்பொழுது மணி ஆறு. இன்னும் மூன்று மணிநேரம், நூற்ரெண்பது நிமிடங்கள், பத்தாயிரத்து எண்ணூறு விநாடிகள். அவன் தாய் தந்தை கிராமத்தில். அவன் காதலி இன்னும் உறங்கிக்கொண்டுதான் இருப்பாள். அவர்களிடம் பேசினால் நிச்சயம் அழுதுவிடுவான். தன் கண்டுபிடிப்பை அறிவுக்கும் முடிவையும் ரத்து செய்துவிடலாம். அதனால் அவர்களிடம் பேசவோ, சந்திக்கவோ அவன் விரும்பவில்லை. அவர்களையும் இந்த இயற்கையையும் நினைத்து நினைத்து அவன் இரவு முழுவதும் அழுதுவிட்டான். வீதியோரம் விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவனை அழைத்துத் தன் திறன்பேசியைக் கொடுத்தான். தன் பேர்சில் இருந்த பணத்தை வீதியோரம் ஒரு பெண்பிள்ளையோடு பிச்சை எடுத்துக்கொண்டிருந்த தாயிடம் கொடுத்துவிட்டு அவர்கள் காலைத்தொட்டு ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டான். பின் காரை விரைவாக ஓஷோவின் ஆச்சிரமதுக்கு விட்டான்.
ஓஷோ, ஜெயவர்மனின் ஆன்மீக குரு. ஓஷோவின் ஆச்”சிரமம். பெயரில் மட்டும்தான் சிரமம் இருந்தது. மற்றப்படி கிருஷ்ணணைப் போல் வாழ்வைக் கொண்டாடும் இடம். வறுமையும் பிச்சைக்காரர்களும் நிறைந்த அந்த நகர வீதிகளைத் தாண்டி ஆச்சிரமத்தின் வாயுள்கதவுகளை அடைந்தான். இருட்டான அறைக்குள் திரைச்சீலைகளைத் திறந்ததும் சூரியன் சிறகடித்து வருவதுபோல் கதவின் உட்பக்கம் முதல் பார்த்த அனைத்துக்கும் முரணான செழிப்பும் கொண்டாட்டமும் காணப்பட்டது. அனைவரும் ஒருவரோடு ஒருவர் சிரித்துப் பேசி மகிழ்ந்து கொண்டிருந்தனர். காற்றில் ஆடிய மரங்களின் ஓசையோடு அவர்கள் சிரிப்பொலி கலந்தது. ஒவ்வொரு மரமும் மற்ற மரங்களோடு அரட்டை அடிப்பதுபோல் இருந்தது. அம்மரங்களுக்கு இடையில் மாறி மாறிப் பறந்த குருவிகளைக் போல் மனிதர்கள் முத்தங்களைப் பரிமாறிக்கொண்டனர். வேர்களைவிட இறுக்கமான தழுவல்கள் உயிருக்கு நீர் பாய்ச்சின. ஆயிரம் கோபியர் மட்டும் அல்ல ஆயிரம் கிருஷ்ணன்களும் வாழும் நவீன பிருந்தாவனம் அது. தன் கண்டுபிடிப்பை நாட்டுக்கு உரைத்த பின் உயிரோடு இருந்தால் தன் காதலியோடு இங்கு வந்து வசிக்க ஜெயவர்மன் நினைத்திருந்தான்.
அவனை ஓஷோவின் அறைக்கு அழைத்து சென்றனர். திரைச்சீலைகள் மிகவும் சுத்தமாகத் துவைக்கப்பட்டு மாட்டப்பட்டிருந்தன. அனைத்தும் மிகவும் ஒழுங்காக அந்தந்த இடத்தில் அடுக்கப்பட்டிருந்தது. அந்த அறையை கற்கள் கொண்டு கட்டினரா இல்லை புத்தகங்கள் கொண்டு கட்டினரா என சந்தேகம் வரும் அளவுக்கு சுவர் முழுதும் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. ஓஷோவை விமர்சிப்பவர்கள் அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள குறைந்தது ஒரு நல்ல பழக்கமாவது உண்டு. அவரது வாசிப்புப்பழக்கம். “குளிர்மலை தன் வாசன்” என்று சிவனைப் பாடுவார்கள. அந்த இமயமலையைவிட்டு இங்கு வந்ததாலோ என்னவோ அறை முழுதும் குளிரூட்டி பனி போல் பொழிந்து கொண்டிருந்தது. முதுகில் ஒரு வலி இருப்பதால் ஓஷோவிற்கு என்று பிரத்தியேகமான சாய்ந்த கதிரையை அவர் சீடர்களும் ஒரு அன்பான மரமும் செய்துகொடுத்திருந்தனர். அச்சிம்மாசனத்தில் கால்களின் மேல் கால்களைப் போட்டுக்கொண்டு, உள்ளங்கைகளை மடியில் ஒன்றின் மேல் ஒன்று வைத்துக்கொண்டு கண்களை மூடி தியானத்தில் இருந்தார் ஓஷோ. சர்வ் எக்ஸ்செல் விளம்பரத்தில் வருவது போல் அவர் வேட்டியும் முழுநீள ஜிப்பாவும் மாசற்ற வெள்ளைஜோதியாகக் காட்சியளித்தன. கார்மேகங்களும் பொறாமைப்படும் கருகரு என்ற நிறத்தில் நீண்ட தாடியும் அடர்த்தியான மீசையும் இருந்தது. சகஸ்ராரம் இருக்கும் இடத்தை சுற்றி ஒரு முடிகூட இல்லாமல் மொட்டை போஸ்போல் இருந்தார். ஆனால் செவிகளுக்கு மேலும் பின்கீழ் தலையில் இருந்தும் கங்கை போல் சடாமுடி படர்ந்தது. ஒரு செருப்பு வெறுமையாகவும் மறுசெருப்பு இன்னும் பாதத்திற்குக் கீழேயும் இருந்தது. அவர் கால்களில் விழுந்து முத்தமிட்டான். முத்தத்தின் ஈரம் கண்களையும் சலனம் செய்ததுபோல் ஓஷோ கண்களைத் திறந்தார்.
“மன்னிச்சிருங்கோ மாஸ்டர், உங்கட தியானத்த குழப்பிட்டன்போல கிடக்கு”
அகண்ட ஒரு அண்டக் கொட்டாவியை விட்டுவிட்டு ஓஷோ பதிலளித்தார்.
“நான் நித்திரைதான் கொண்டுட்டிருந்தன்…”
ஜெயவர்மன் உயிர் பயத்தை மறந்து ஆத்மார்த்தமாக ஓஷோவுடன் சேர்ந்து சிரித்தான்.
“…ஆனால் எனக்கு நித்திரை, இறப்பு, தியானம் எல்லாம் ஒன்றுதான்”
சிரிப்பைத் தொடர்ந்து மௌனம் சிறிது நேரம் தன் பங்குக்குக்கு அறையை நிரப்பியது. கேட்டுவிடலாம் என முடிவுசெய்தான். ஆனால் இவன் கேள்வி கேட்கும் முன்னே அவர் விடையொன்றைக் கொடுத்தார்.
“ஜப்பானில் வாழ்ந்த எகிடோ என்ற சற்குரு மிகவும் கண்டிப்பான ஓர் ஆசிரியர். அதனால் மாணவர்கள் அவரைப் பார்த்து பயந்தனர்.
நாளின் மணியைக் கூறும் கோயில் மணியை அடிக்கும் பணியிலிருந்த மாணவன் ஒரு தடவை மணியை அடிக்க மறந்துவிட்டான். காரணம்-வாயுள் கதவைக் கடந்துசென்ற ஓர் அழகான பெண்ணைப் பார்த்துக்கொண்டிருந்தான். அந்த மாணவனுக்குத் தெரியாமல் அவன்பின் எகிடோ நின்றுகொண்டிருந்தார். தன் கைத்தடியால் எகிடோ மாணவனை அடித்தார். அந்த அதிர்ச்சி மாணவனின் இதயத்தை நிறுத்திவிட்டது. அவன் இறந்துவிட்டான்.
தன் சற்குருவுக்கு உயிரை எழுதிக்கொடுக்கும் பழைய வழமை வெறும் சம்பிரதாயமாகத் தாழ்ந்துவிட்டதால், பொதுமக்கள் எகிடோவை இழிவுபடுத்தினர். ஆனால் இச்சம்பவத்திற்குப்பின் எகிடோ பத்துத் தன்னையறிந்த வழித்தோன்றர்களை உருவாக்கினர். இது அசாதரணமான உயர்ந்த எண்ணிக்கை.
இத்தகைய நிகழ்வுகள் சென்னுக்கும் சென் சற்குருக்களுக்கும் தனித்துவமானவை. ஒரு சென் குரு மட்டுமே தன் சீடர்களை அடிப்பார். சில வேளைகளில் அச்சீடன் அடியினால் இறப்பதும் நடக்கும். சாதரணமாக இது மிகவும் கொடூரமானதாகவும், வன்முறையாகவும், பைத்தியக்காரத்தனமாகவும் தெரியும். மதம் சார்ந்தவர்களால் எப்படி ஒரு சற்குரு தன் சீடனைக் கொல்லும் அளவுக்கு மிகவும் கொடூரமாக இருக்க முடியும் என்று புரிந்துகொள்ள முடியாது. ஆனால் அறிந்தவர்கள் வேறுவகையில் உணர்கின்றனர்.
அறிந்த ஒரு மனிதனுக்கு நன்றாகத் தெரியும் யாரும் எப்பொழுதும் கொல்லப்படுவதில்லை என்று. உள்ளிருப்பது நிரந்தரமானது, அது தொடர்ந்து தொடர்ந்து சென்றுகொண்டேயிருக்கும். அது உடல்களை மாற்றலாம், ஆனால் அது வெறும் வீடுகளின் மாற்றமே, வெறும் ஆடைகளின் மாற்றமே, வெறும் வாகனங்களின் மாற்றமே. பயணி தொடர்ந்து தொடர்ந்து சென்றுகொண்டேயிருப்பான், எதுவும் இறப்பதில்லை.
இறப்பின் கணம் தன்னையறிதலின் கணமாகவும் அமையலாம், இரண்டும் மிகவும் ஒரேமாதிரியானவை.”
நாப்பத்தெட்டு நிமிடங்கள் ஓஷோவுடன் இணைந்து தியானத்தில் இருந்தான்.
இந்த நாப்பத்தெட்டு நிமிடங்களை அடைய “புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமம்” எங்கும் அலைந்துவிட்டான். ஓஷோவிடம் விடைபெற்றுக்கொண்டு நகரமண்டபத்துக்குப் புறப்பட்டான்.
ஒலிபெருக்கி ஒரு முறை ஓங்கி ஒலித்து அணைந்தது. அவன் பேசுவதற்குமுன் மண்டபத்தில் இருந்த அனைவரையும் கண்களால் ஒரு முறை நோட்டம்விட்டான். ஆழமான ஒரு மூச்சை சுவாசித்துவிட்டு அவன் முதல் வார்த்தையை, முதல் குண்டை குறிபார்த்தான். பேசத் தொடங்கினான். சிவப்பு மின்னல் மின்னியது. இடியாவது இரக்கம் பார்த்து சில கணங்கள் மௌனஅஞ்சலி செலுத்தும். துப்பாக்கி இரக்கமற்றது. விஞ்ஞானம் கண்டுபிடித்த துப்பாக்கியாலேயே விஞ்ஞானம் மீண்டும் ஒரு முறை அரசியலுக்குப் பலியாக்கப்பட்டது.
ஜெயவர்மனின் உடலும் மனமும் தரையில் விழுந்தது. ஆனால் விழும்முன் தான் பதிவு செய்துவைத்திருந்த ஒலிநாடவை ஒலிக்கச்செய்தான்.
“வணக்கம்
நீண்ட நாட்களாக எம் நாட்டில் இரண்டு இனங்களுக்கு இடையில் யுத்தம் நிகழ்கிறது. என் மரபணு ஆராய்ச்சியில் நான் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளேன். இந்த இரண்டு இனங்களும் வேறு வேறு இனங்கள் அல்ல. அழிந்து போன ஓரு பழைய இனத்தின் இரண்டு பிள்ளை இனங்கள்தான் இவையிரண்டும்.
அவ்வாறு இல்லாமல் இருந்திருந்தால்கூட நாம் ஒன்றை மறக்கக்கூடாது.
என்றும் நாம் ஓர் இனம் மட்டும்தான்-மனித இனம்.”
-ஓஷோ சிறிரதி
ஓஷோ பேசுவதாக அமைந்த எகிடோ பற்றிய பந்தி ஓஷோவின் “A Bird on the Wing” புத்தகத்தில் இடம்பெற்ற பந்தியின் என் தமிழாக்கம்.
http://www.osho.com/iosho/library/read-book/online-library-unbridgeable-ordinarily-body-9da1b789-a15?p=9416f4662f01b9b56f676b6b3facf313
“புல்லாகிப் பூடாய் புழுவாய்…”-சிவபுராணம்
ஜெயவர்மன் என்பது சென் மார்க்கத்தை (சான் பௌத்தம்) சீனாவிற்கு எடுத்துச்சென்ற போதிதர்மனின் இயற்பெயர். இவர் ஒரு மருத்துவரும்கூட. இரபத்தியிரண்டு வயதில் தன்னையறிந்தார்.