மரணம்
(இதற்கு முந்தைய ‘அத்தை’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது).
“அனந்து நீ சொல்றது முற்றிலும் சரிதான். எனக்கும் அது தெரியாமல் இல்லை. அவள் உயிர் வைத்துகொண்டிருப்பதே எனக்காகத்தான். தனக்கு என்று ஒருநாள் கூட அவள் வாழ்ந்தது கிடையாது. சிறுவயது முதற்கொண்டு இன்று வரையில், நான் வீட்டுக்கு வர சிறிது தாமதமாகி விட்டாலும் துடித்துப் போய் விடுவாள்…
பத்து நாளைக்கு முன், ஒருநாள் ரொம்பக் குளிராக இருந்தது. அன்னிக்கு அம்பின்னு என்னைக் கூப்பிட்டாள். என்னம்மா என்று அருகில் சென்றேன். என்னமோப்பா எனக்கு ஒரு மாதிரியா இருக்கு என்றாள். டாக்டரை கூப்பிடட்டுமா என்றதற்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டு சற்று நேரம் எதையோ யோசித்தாள்.
எனக்கு ஏதாவது ஆயிடுத்து என்றால், நீ இந்தக் குளிரில் பச்சைத் தண்ணீர்ல குளிக்க வேண்டி வருமே, உனக்கு உடம்புக்கு ஒத்துக் கொள்ளாதே. சித்திரை, வைகாசி மாசத்திலேகூட நீ வெந்நீரில் குளிப்பவனாச்சே… அதுதான் எனக்கு கவலையாயிருக்கு என்று சொல்லிக் கண்ணீர் விட்டாள். எனக்கு மனசு மிகவும் சங்கடமாகிவிட்டது. சரி சரி உனக்கு இப்ப ஒன்றும் நேராதும்மா, கவலையில்லாமல் தூங்கு என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன்..”
“பார்த்தாயா அத்தான், அவள் தான் போறதுக்குக் கூட கவலைப் படவில்லை. நீ பச்சைத் தண்ணீரில் குளிக்கனுமேன்னுதான் கவலை. பிள்ளைப் பாசம். நீ வேணுமானால் பாரு, அத்தை மண்டையைப் போட்டால்கூட திரும்ப உனக்கு பேத்தியா வந்து பொறந்து விடுவாள்!”
“போதும் போதும் அம்மாஞ்சி. நான் உங்க அத்தையிடம் பட்ட கஷ்டங்கள் போதும். என் பிள்ளைக்கும் அந்தக் கஷ்டம் தொடர வேண்டாம்.”
“ஏன் அத்தாமன்னி, அத்தை என்ன கெடுதல் உனக்குப் பண்ணியிருக்கா? நீதான் மாட்டுப் பொண்ணா வரணும்னு பிடிவாதம் பிடிச்சு உன்னையே கல்யாணம் செய்து கொள்ளச் செய்தாள். அத்தான் உன்மேல கோபப்படும் போதெல்லாம், அதையெல்லாம் தன்மேல் வாங்கிப் போட்டுக் கொண்டாள், இல்லையா?”
“வாஸ்தவம்தான்… ஆனால் அத்தைக்கே என்மேல் கோபம் வரும்போது அப்ப அத்தானும் அத்தையுடன் சேர்ந்து கொள்வாரே? அப்போது நான் பட்ட பாடு, போதும் போதும் ஏழேழு ஜன்மத்துக்கும் போதும். நான் முதல் முதலாக இந்த வீட்டில் காலடியெடுத்து வைத்தேனே, அப்ப புடிச்ச கஷ்டம் இன்னமும் தீர மாட்டேங்கறது…”
“நீங்க இரண்டு பேரும் ஏதோ அத்தை கங்கணம் கட்டிக்கொண்டு இம்சைப் படுத்துவது போலப் பேசறேள். அத்தையின் மனோ பாவத்தையும் கொஞ்சம் புரிந்து கொள்ளணும்…”
“என்ன புரிந்து கொள்ளணும்?”
“அத்தை திடமாயிருக்கிறபோது அவளைக் கேட்காமே நீ ஏதாவது செய்ததுண்டா? அவளுக்கு எதிரிடையா பேசியதுண்டா?”
“நன்னாயிருக்கு! உங்க அத்தான்தான் அம்மா பிள்ளையாச்சே!! அம்மா கீறின கோட்டுக்கு அந்தண்டை போக மாட்டாரே. வீட்டிலே உங்க அத்தையம்மா அட்டகாசம்தானே?”
“இவ என்னை அம்மா பிள்ளைன்னு சொல்லிட்டுப் போகட்டும்… அம்மாவுக்கு உலக அறிவு அதிகம். நான் குழம்பிப் போன போதெல்லாம், ஏண்டா இப்படிச் செய்யேன் என்பாள். கடைசியில் அதுதான் ரொம்பப் பொருத்தமாக இருக்கும்.”
“அதைத்தான் அத்தான் சொல்றேன். இதுவரைக்கும் இந்த வீட்டிலே எஜமானியாக ஆட்டம் போட்டிருக்கிறாள். இப்போது சீந்துவாரற்றுக் கிடக்கிறாள். அதுவே ஒரு பெரிய குறை. அதனால்தான் தன்னை சரியாகக் கவனிக்கவில்லை, அலட்சியம் செய்கிறார்கள் என்ற எண்ணம் வந்து விடுகிறது. அதனால்தான் இந்தக் குற்றச்சாட்டெல்லாம்…”
“இருக்கலாம்.”
“சரி மன்னி, இந்தப் பழங்கதை எல்லாம் விட்டுத்தள்ளு… அடடே வெங்கிட்டு வரானே, என்னப்பா ஜோஸ்யரே, சவுக்யமா?”
“நீ எப்ப வந்தே அனந்து?”
“இன்னிக்கிதான் வந்தேன். நீ பெரியம்மாவைப் பார்க்க வந்தாயா? உங்கண்ணா ஜாதகத்தைப் பார்த்தாயா?”
“இன்னும் இல்லை…”
“அது இருக்கட்டும். ஆனா உன்னோட அத்தை வெங்கிட்டுவைப் பார்த்துக் கேட்கிற கேள்வி, என் பிள்ளைக்கு கர்மத்துக்கு எப்போது அதிகாரம் வரும்னுதான். போனதடவை வெங்கிட்டு வந்தபோது, பெரியம்மா மார்கழி அமாவாசையைத் தாண்ட மாட்டாள்னு சொன்னான்… மார்கழியும் ஆச்சு, தை, மாசி, பங்குனி, சித்திரையும் வந்தாச்சு, மாசம் ஆயிண்டே இருக்கு…”
“இன்னும் ஒரு வருஷத்துக்கு அவளை அசைக்க முடியாது அண்ணா.”
“என்னடா நீளமா ஒத்திப்போடரே?”
“உனக்கு குரு நல்ல இடத்துக்கு வந்து விட்டார். அதனால் இந்த வீட்டில் ஒரு அமங்கலமான காரியமும் நடக்காது.”
“வெங்கிட்டு நீ மொதல்ல சொன்ன ஜோசியம் பலிக்கல. இப்ப நீ சொன்னது பலிச்சா எனக்கு நல்லதுதான். அவளுக்கு செய்ய வேண்டிய காரியத்துக்கு கொஞ்சம் பணம் சேர்த்துவிடுவேன்… இப்பவே போயிட்டால் என்னிடம் பணம் கிடையாது…”
“என்ன அத்தான், அத்தையின் சாவு கடைசியில் பணத்தில் வந்து நிற்கிறது?”
“பணத்தின் ஊடுருவல் இல்லாமல் எந்தக் காரியம்தான் நடக்கிறது சொல்லு? தூக்குகிறவன் இனாமா தூக்கப் போறானா? ருத்ர பூமியிலிருப்பவன் சும்மா விடுவானா? பணம்தானே உலகத்திலே விபக்தமான தெய்வமாயிருக்கு?”
“அதுசரி அத்தான், ஒன்று கேட்கிறேன். தப்பா நினைக்காதே. சாதரணமாக மரணம் என்கிற விஷயம் மிகவும் உணர்ச்சி மயமானது. இப்போது அத்தை மரணப்படுக்கையில் இருக்கிறாள். அவள் மரணத்தைப்பற்றி சாதாரண விஷயம் போலப் பேச எப்படி முடிகிறது உனக்கு? அவளிடம் உனக்கிருந்த அன்பு போய்விட்டதா?”
“அதெல்லாம் இல்லை அனந்து. இப்பகூட அவள் மரணித்தால் துக்கம் வரத்தான் செய்யும். அந்த ஜீவனுக்கும் நமக்கும் இனித் தொடர்பு இல்லை என்ற எண்ணம் துக்கத்தை கொண்டு வரத்தான் செய்யும்…
ஆனால் உலகத்திலே அநேகருக்கு ஏற்படுகிற துக்கம் சுயநலத்தினால் ஏற்படுவதுதான். உன் அத்தை இப்போது ஓடியாடிக் கொண்டிருந்தால், கறிகாய்கள் வாங்கிவந்து கொண்டிருந்தால்; அப்போது எனக்கு இனி வீட்டுக்கு யார் காய்கறிகள் வாங்கிப் போடுவார்கள் என்கிற எதிர்பார்ப்பால் துக்கம் பீறிக்கொண்டு வரும்.
ஆனால் இப்போது அத்தை எந்த நிலையில் இருக்கிறாள்? தானும் அவஸ்தைப் படுகிறாள்; பிறருக்கும் அவஸ்தையைக் கொடுக்கிறாள். அப்போது மரணம் வரவேற்கத்தக்கதாகி விடுகிறது. நீட்ஷே சொன்னான், die at the right moment என்று…
நம் இந்திரியங்கள் நம் வசம் இருக்கும்போதே மரணமடைவதுதான் சிறப்பு. சரீரம் மடியும்போதுதான் மரணம் என்பதில்லை.
இந்த உலகத்திலே பிறந்த ஒவ்வொருவரும் குடும்பத்திற்கோ, சமூகத்திற்கோ, தேசத்திற்கோ உபயோகமாக இருக்க வேண்டும். அவ்விதம் ஒருவருக்கும் பயனில்லாது வாழ்பவனும் மரித்தவன்தான். நான் யாருக்கும் உபயோகமுள்ளவனாய் இருக்கும்போதே; என் இந்திரியங்கள் என் வசம் இருக்கும்போதே இறக்க விரும்புகிறேன்…”
“அத்தையைப் போன்றவர்கள் உபயோகமில்லாதவர்கள் என்று எப்படிச் சொல்வது?”
“நான் அப்படிச் சொல்ல வரவில்லை, இவர்களை ஷேக்ஸ்பியர் சொன்னானே, Second childishness and there oblivion — Sans teeth, sans eyes, sans taste, sans everything என்று. அவர்கள் குழந்தைக்கு சமானம். குழந்தையைக் கவனிப்பதுபோல, அவர்களைக் கவனிக்க வேண்டும்.
“அத்தான் நீ இதைத்தான் செய்ய வேண்டும். சரி அத்தான், வெங்கிட்டு நான் போயிட்டு வரேன்… நேரமாச்சு.”
அத்தையிடம் சென்று, “அத்தை நான் போயிட்டு வரேன், உடம்பை பாத்துக்கோ.”
“நானும் போயிட்டு வரேண்டா அனந்து…”
“நீ இப்போ ஒன்றும் போகமாட்டியாம்… உனக்கு ஆயுசு கெட்டின்னு வெங்கிட்டு இப்பதான் சொன்னான்.”
“அவன் ஜோஸ்யம் தப்புடா…”
அனந்து செருப்பை மாட்டிக்கொண்டு கிளம்பினான்.
பஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தபோது மொபைல் சிணுங்கியது…
அட வெங்கிட்டு. ‘எதையாவது மறந்துவிட்டு வந்து விட்டோமோ’
“டேய் அனந்து, அண்ணா நம்மை விட்டுப் போயிட்டாண்டா.” அலறினான்.
பதற்றத்துடன் ஆட்டோ பிடித்து மறுபடியும் வீட்டிற்குள் நுழைந்தான்…
அத்தானை கூடத்தில் கிடத்தியிருந்தார்கள்.
டாக்டர் வந்து பார்த்துவிட்டு ‘மாஸிவ் ஹார்ட் அட்டாக்’ என்றாராம்.
“எனக்கு கொள்ளி போடாமலே போயிட்டியேடா கடங்காரா” என்று தலையில் அடித்துக்கொண்டு அத்தை கதறினாள். புத்திரசோகம் அவளை வாட்டியது.
அத்தாமன்னி, ‘இனி எப்படி அத்தையை வைத்துக்கொண்டு தனியாக சமாளிப்பது’ என்று விரக்தியில் அழுதாள்.
உறவினர்கள் மெதுவாகக் கூட ஆரம்பித்தனர்.
சமீப காலத்தில் இவ்வளவு சிறப்பான குடும்பக்கதை நான் படித்ததில்லை. கதையின் ஆழமும், வீச்சும் பிரமாதம். ஆசிரியருக்கு பாராட்டுக்கள். லாவண்யா, மேட்டூர் டேம்.