மயிலும் வான்கோழியும்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 7, 2018
பார்வையிட்டோர்: 6,606
(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
காட்டில் இருந்த பறவைகள் எல்லாம் ஒரு பெரிய மாநாடு கூட்டின. அந்த மாநாட்டுக்கு எல்லாப் பறவைகளும் வந்திருந்தன. பறவைகள் முன்னேற்றத்தைக் குறித்துப் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டு முடிவில் ஒரு நடன அரங்கேற்றம் ஏற்பாடாகியிருந்தது. திட்டப்படி கடைசியில் மாநாட்டு மேடையின் மீது ஏறி மயில் நடனம் ஆடியது. நீலப்புள்ளிகள் நிறைந்த அழகிய பச்சைத் தோகையை விரித்து மயில் ஆடிய நடனம், பார்க்கப் பார்க்க இன்பமளிக்கும் காட்சியாயிருந்தது. பறவைகள் மயிலை மிகவும் பாராட்டின. அதன் அற்புதமான நடனத் திறனைக் குறித்து அவை புகழ்ந்து பேசின. பல பரிசுகளும் மாநாட்டின் சார்பில் மயிலுக்கு வழங்கப் பெற்றன.
இவற்றையெல்லாம் ஒரு வான்கோழி பார்த்துக் கொண்டிருந்தது. மாநாட்டுத் தலைவரிடம் போய், “நானும் நடன அரங்கேற்றம் நடத்த அனுமதி கொடுங்கள்” என்று கேட்டது.
“நீயா?” என்று வியப்புடன் கேட்டது மாநாட்டுத் தலைவராக இருந்த பருந்து.
“ஏன், ஆச்சரியப்படுகிறீர்கள்? என்னையும் ஆடவிட்டுப் பாருங்கள். வாய்ப்புக்கு கொடுத்தால் தானே திறமை இருக்கிறதா இல்லையா என்று தெரிந்து கொள்ளலாம்?” என்று அடித்துப் பேசியது வான்கோழி.
மாநாட்டுத் தலைவர் பருந்து, அனுமதி கொடுத்து விட்டது.
வான்கோழி மேடையின்மீது ஏறியது, வால் போல் நீண்டிருந்த தன சிறகுகளை விரித்துக் கொண்டு, அது நடனம் ஆடியது வேடிக்கையாக இருந்தது. எல்லாப் பறவைகளும் கேலி செய்து சிரித்தன. அவமானம் தாங்க முடியாமல் வான்கோழி மேடையை விட்டு இறங்கி ஓடிவிட்டது.
கருத்துரை: மயில் ஆடுவதைப் பார்த்த வான்கோழி தானும் அது போல் ஆடமுடியும் என்று கருதியது; இது தவறு. கல்வியில்லாதவர்கள் கவிதை எழுத முயல்வது வான்கோழியின் செயல் போன்றதுதான்.
– நல்வழிச் சிறுகதைகள் – முதல் பாகம், முதற் பதிப்பு: ஜனவரி 1965, வானதி பதிப்பகம், சென்னை.