மன நெருக்கம்!





‘திருமணத்துக்கு முன் வருங்கால கணவனுடன் நிறைய பேச வேண்டும். திருமணத்துக்குப் பின் புகுந்த வீட்டில் எப்படி நடந்து கொண்டால் எல்லோருக்கும் நம்மைப்பிடிக்கும்? இதற்கு முன் எந்தப்பெண்ணையாவது அவர் காதலித்திருக்கிறாரா? எத்தனை பிரேக்கப்? நண்பிகள் இருக்கிறார்களா? வாங்கும் சம்பளத்தில் செலவு போக மாதம் எவ்வளவு சேமிக்கிறார்? நமக்குப்பிடிக்கும் விசயங்களில் ஐம்பது சதவீதமாவது அவருக்கு பிடித்திருக்கிறதா? அதற்கும் குறைவு என்றால் முடியாது என சொல்லி விட வேண்டும். நூறு சதவீதமும் ஒத்துப்போகுமென எதிர்பார்க்கவும் முடியாது. இப்படி எல்லாவற்றையும் மனம் விட்டு பேசி விட்டால் தான் திருமணத்துக்கு பின் பிரச்சினை வராது’ எனும் யோசனையால் காலையில் அலுவலகம் செல்வதற்கு முன் உள்ளூர் பெருமாள் கோவிலில் பெண் பார்த்து முடிவான முதல் நாளான இன்று யோசித்ததில் உறக்கமின்றி விழித்திருந்தாள் லயா.
“மாப்பிள்ளைய உனக்கு பிடிச்சிருக்கா…? அவருக்கு உன்னப்பிடிச்சிருக்கிறதா அவங்க வீட்ல இருந்து சாயங்காலம் நாலு மணிக்கே கூப்பிட்டு என்கிட்ட சொல்லிட்டாங்க. நீ ஆபீஸ்ல இருந்து வந்த பின்னாடி சொல்லிக்கலாம்னு தான் போன்ல கூப்பிட்டு சொல்லலே. இப்பவே மண்டபம் புக் பண்ணினாத்தான் ஒரு வருசத்துக்குள்ளே கல்யாணத்தப்பண்ண முடியும். இப்ப நடந்த குரு பெயர்ச்சியால சோசியர் சொன்ன மாதிரியே உன்னோட ராசிக்கு குரு பலம் வந்ததால நல்ல எடம் அமைஞ்சிருக்கு. அடுத்த குரு பெயர்ச்சி சரியில்லாம போயிருச்சுன்னா….? அதுக்குள்ள கல்யாணத்த பண்ணிடோணும். மறுபடியும் குரு மாறிட்டா, அவங்க மனசு மாறிட வாய்ப்பு இருக்கு. அப்படி நடந்துட்டா என்ன பண்ணறது? நாங்க நல்லா விசாரிச்சிட்டோம். நல்ல குடும்பம். வரதட்சணையா ஒரு பைசா கூட கேட்கல. கட்டுன சேலையோட வந்தா கூட ஓகே வாம். அதக்கூட எங்க மருமகளுக்கு நாங்க எடுத்துக்கொடுத்திடறோம்னு சொல்லறாங்க. நீ ஒல்லியா அழகா இருக்கறதுனால போட்டோவப்பார்த்தே மாப்பிள்ளை பையனுக்கு புடிச்சுப்போச்சாம். நேர்ல பார்த்து பேசினதும் ரொம்ப, ரொம்ப புடிச்சுப்போச்சாம். இத்தனைக்கும் நான் அனுப்பின போட்டோதான் காரணம். நீ வர்கலா டூர் போயிருந்தப்ப எடுத்து எனக்கு அனுப்பின போட்டோவத்தான் வாட்ஸ்அப்பில் அனுப்பியிருந்தேன்” மகிழ்ச்சியாகச்சொன்ன தாய் காமினியை கோபமாக ஏறிட்டாள்.
“அந்தக்கருடன் சிலைக்கு பக்கத்துல முடிய விரிச்சுப்போட்டுட்டு நின்னிருந்தனே… அதுவா…?”
“ஆமா. அதுக்கென்ன? ஶ்ரீ தேவில எடுத்த ரோஸ் கலர் சுடிதார்ல நல்லாத்தானே இருக்கறே….?”
“அதை எதுக்கம்மா அனுப்புனே….? எனக்கு சுத்தமா புடிக்கிலே…” பொய் கோபத்துடன் சிணுங்கினாள்.
“உனக்கு புடிக்கிலேன்னா என்னடி? மாப்பிள்ளைக்கு புடிச்சுப்போய் தான் பொண்ணு பார்க்கவே வந்திருக்காங்க. பையனும் உனக்கேத்த ஜோடி. ஸ்மார்ட்டா இருக்கான். பெங்களூர்ல ஐடி கம்பெனில மாசத்துக்கு ரெண்டு லட்சம் சம்பாதிக்கறானாமே. என்ன அம்பதாயிரம் பக்கமா டேக்ஸ் போயிடுதாமா? வீட்டு வாடகை, கார் பெட்ரோல் செலவு அது, இதுன்னு முழுசா ஒன்னு போயிரும்போல. ஆனா ஒன்னு மிச்சமாகுதில்ல. அது போதாதா? பெங்களூர்லயே ஒரு பிளாட் வேற அவனோட பேர்ல கடனே இல்லாம வாங்கியிருக்கான்னு சொன்னாங்க. புது கார் வெச்சிருக்கான். அவனோட அப்பா கட்டுன வீடும் நல்லாதான் இருக்கு. காந்திபுரத்துல சென்டர் சிட்டில அதுவும் நாலு கோடி மதிப்பு. அமெரிக்காவுல இருக்கற அவனோட அக்காவுக்கு வேணுங்கிறத கொடுத்து செட்டில் பண்ணிட்டாங்களாம். வீட்டுல பங்கு கேக்க வரமாட்டாள்னு சொன்னாங்க” எப்படியாவது மகளை சம்மதிக்க வைக்க வேண்டுமென முடிவு செய்து பேசினாள் லயாவின் தாய்.
“எனக்கு தூக்கம் வரல. தனியா யோசிக்கனம்னு தோணுது. என்ன தனியா விடறியா…?”
“சரி. நான் ஹால்ல பெட்சீட்ட விரிச்சு படுத்துக்கறேன். உங்க அப்பாவோட கொரட்டை சத்தத்துல அவரு கூடவும் படுத்து நிம்மதியா தூங்க முடியாது. உன்ற காலுக்கு வெச்சிருக்கிற தலகினியக்குடு” கேட்டவள் பிடுங்கிச்சென்றாள்.
“அம்மா….” கத்தினாள் லயா. “அந்தப்போன ஆப்பண்ணி வெச்சிட்டு இன்னைக்காச்சும் நீயும் குரட்டை உடாம தூங்கு. உன்னோட லட்சணத்துக்கு அப்பாவை குறை சொல்லறே…. அப்பறம் எப்பப்பார்த்தாலும் யூடியூப்லயே இருக்கே. அப்பாவும் கண்டிக்கிறதே இல்லை. என்னோட ரூம் கதவ சாத்திட்டா காத்து வர மாட்டேங்குது. ஜன்னல சாத்தி, கொசு வலை போட்டு, ஸ்கிரீன் க்ளாத் போட்டு அடைச்சு வெச்சிருக்கே. ஏஸி வாங்கச்சொன்னா வாங்காம நகைய மட்டுமே ஓடியோடி வாங்கறே….” பேசிக்கொண்டிருக்கும் போதே தாயிடமிருந்து குரட்டைச்சத்தம் வர ஆரம்பித்ததும் ‘எப்படித்தான் உன்னால மட்டும் கண்ணை மூடினதும் தூங்க முடியுதோ தெரியல…?’ என நினைத்தவளுக்கு அயனின் ஞாபகம் வர தனது அலைபேசியை கையில் எடுத்தாள் லயா.
காலையில் தன்னைப்பெண் பார்க்க வந்திருந்த வரன் அயனிடம் அலைபேசி எண்களை வாங்கியிருந்தாள். ‘நடு இரவில் போன் பண்ணினால் தவறாக எடுத்துக்கொள்வாரோ…?’ என யோசித்தாலும் ‘வாழ்க்கை பிரச்சினை. பேசறதுல என்ன தப்பு இருக்கு?’ என நினைத்தவள் போன் பண்ணினாள்.
லயாவின் போனுக்காகவே காத்திருந்தவன் போல ஒரே ரிங்கில் அடுத்த நொடி போனை எடுத்த அயன், “ஹலோ ” என்று சொல்லாமல் “இன்னும் தூக்கம் வர… லயா…?” என ஒரு வார்த்தையிலேயே தனது பெயரை நிறுத்தி பிரித்து முடிவில் உச்சரித்த விதத்தால்’இப்படி வார்தையில் ஜாலங்காட்டுகிறவனைத்தானே இத்தனை நாட்களாகத்தேடிக்கொண்டிருந்தேன்’ என நினைத்தவள் ஐசாகக்கரைந்தே போனாள்.
“எனக்குத்தூக்கம் வரல… உங்களுக்கும் வரலயா?”
“ஆமா….”
“ஏனோ….?”
“உன்னோட ஞாபகமாவே இருந்தது. நானாக கூப்பிடலான்னு யோசிச்சேன். நீ தூங்கி இருப்பியோ… உங்க வீட்ல யாராவது எடுத்தா இந்த நேரத்துக்கு கூப்பிடறான்னு தப்பா நெனைச்சிடுவாங்களோன்னு தான் கூப்பிடல”
“மெஸேஜ் பண்ணியிருக்கலாமே….? குரல் உடையுது. இது வரைக்கும் பொண்ணுங்க கூட அதிகமா பேசியிருக்க மாட்டீங்க போல”
“ஆமா. கல்யாணம் பிக்ஸ் ஆனதால மெஸேஜ் பண்ணறத விட முதலா உன் கூட பேசனம்னு தான் தோணுச்சு. உன்னோட வாய்ஸ் கேக்கனம்னு ஏக்கமா இருந்தால தூக்கமே வரலே…”
” ஒரு தடவ பார்த்ததுல அவ்வளவு காதலா…? அது சரி. காலைல நீங்கதானே உங்களப்பத்தியே பேசிட்டு இருந்தீங்க. என்னை எங்க பேச விட்டீங்க? அதுக்குள்ள என்னோட அம்மா வந்து கல்யாணத்துக்கப்புறம் பேசறதுக்கு ஏதாவது மிச்சம் இருக்கட்டும் வான்னு கூப்பிட்டாங்க. நாளைக்கு ஆபீஸ்க்கு ஆப்டே லீவு போடறேன். வி. ஓ. சி பார்க் வந்திடுங்க. உங்களுக்கு ஆபீஸ் லீவு தானே…?”
“இருக்கு. வொர்க் பிரம் ஹோம். ஆனா, நீ சொல்லற டைம் பிரச்சினையில்ல. வந்திடறேன்”
“நிறைய பேசனம். இப்ப வெச்சிடறேன்” ஒரு விதமான பதட்டத்துடன் அலைபேசியை துண்டித்தவள், தாயின் இருமல் சத்தம் கேட்டவுடன் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு மனச்சோர்வால் உடல் சோர்வுற உறங்கிப்போனாள்.
பார்க்கில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து வெட்கப்பட்டவன் போல் தலை கவிழ்ந்த வாறு சுண்டலைச்சுவைத்துக்கொண்டிருந்தான் அயன்.
யாரும் அருகில் இல்லாததால் அவனை முழுமையாகப்பார்த்து ரசித்தாள் லயா.
“பரவாயில்லையே கால்ல, கைல நகமெல்லாம் வெட்டி மெயிண்டன் பண்ணுவீங்க போல….? எப்பவுமே இப்படித்தானா? இல்ல இன்னைக்கு மட்டுமா?”
“எப்பவுமே இப்படித்தான். நீ கூட மேக்கப் எதுவும் பெருசா போடாம வந்திருக்கே….?”
“பவுடர் கூட போடற பழக்கம் இல்ல. பங்ஷன்னா மட்டும் மேக்கப்பாக்ஸ திறப்பேன். ஏன் நான் அழகா இல்லையா?”
“அப்படி சொன்னனா….? தேவதை மாதிரி இருக்கே…?”
“அப்படியா…? என்னோட அம்மா எப்பவுமே ராட்சசி மாதர பண்ணாதடின்னு திட்டுவாங்க. எனக்கு ரெண்டு தடவ பிரேக்கப் கூட ஆயிருக்குன்னு சொன்னா நம்புவீங்களா?”
“நம்பமாட்டேன். எனக்கும் இது வரைக்கும் யாரோடையும் காதல் வரலே. நீதான் பர்ஸ்ட்…”
“பர்ஸ்ட்னா நெக்ஸ்ட் யோசனை ஏதாச்சும் இருக்கா….? ” கலாய்த்தாள்.
“நோ….” என சீரியஸாக அடுத்த நொடி அயன் கூறியதைக்கேட்டு மிரண்டவள் பின் மகிழ்ந்தாள்.
“நீ வந்து சாமுத்திரிகால சித்தினி வகை. காதலோ, கல்யாணமோ ஒருத்தரோட தான் இருப்பேன்னு உன்னோட போட்டோவ பார்த்தப்பவே கண்டு பிடிச்சிட்டேன். உனக்கு கவிதை ரொம்பப்பிடிக்கும் தானே….?”
“நிச்சயமா…. இதையும் சாமுத்திரிகாவ வெச்சுத்தான் கண்டு பிடிச்சீங்களா…? அதுவும் கவிதைய யாராவது சொல்லிட்டே இருந்தா சோறு, தண்ணிய மறந்து கேட்பேன். நீங்க சொல்லுவீங்களா?” ஆர்வத்துடன் கேட்டாள்.
“தாராளமா?”
“உதாரணத்துக்கு இப்ப ஒரு கவிதை சொல்லுங்களே….”
“அரிவாளால் வெட்டப்பட்டதால் காயப்பட்ட இளநீருக்கு முத்தத்தால் முதலுதவி…. எப்படி?”
“வாவ்…. இது வரைக்கும் இது மாதிரி ஹைக்கூ நான் படிச்சதில்லை. கேட்டதில்லை. சொக்கிட்டேன். உடனே ஒரு இளநீர் வாங்கி அதுக்கு முத்தம் கொடுக்கனம்னு தோணுது. அதோட இனிமே இளநீர் வாங்கினா ஸ்ட்ரா போட்டு உறிஞ்சமாட்டேன். முத்தம் கொடுத்து தான் குடிக்கப்போறேன். ஒரு கவிதை ரசிக்கிறதுக்கு மட்டும்னு தான் நினைச்சிட்டு இருந்தேன். இப்பத்தான் புரியுது. நம்ம வாழ்க்கையைக்கூட மாத்திடற சக்தி அதுக்கு இருக்குன்னு. அதனால தான் மகாகவியோட கவிதைகள் மக்களுக்கு சுதந்திர தாகத்தை ஏற்படுத்தியிருக்கு. ஆமா, நீங்களே கவிதை எழுதுவீங்களா….?”
“ஐஐயோ…. அவ்வளவு பெரிய ஆளு நானில்லை. நெட்ல படிச்சது. படிச்சது எனக்கு புடிச்சிருந்தா மனப்பாடம் பண்ணி எனக்கு மாதிரியே கவிதையப்புடிச்சவங்களுக்கு சொல்லுவேன்”
என அயன் பேசிய போது ‘மற்றவர்கள் எழுதிய கவிதையை தான் எழுதியதாகச் சொல்லும் இக்காலத்தில் தான் எழுதவில்லை என உண்மையைப் பேசுகிறாரே.… இவர்தான் நமக்குப் பொருத்தமானவர். நம்ம மனசோட ஒத்துப்போகிற ஒத்த மனசுள்ளவர். இவர் நமக்கு கிடைத்தது நாம் செய்த புண்ணியம்’ என நினைத்ததில் பூரித்துப்போனாள் லயா.
“ஹஸ்பெண்ட், வொய்ப்னா பிரண்ட்ஸ் மாதிரி இருக்கனம். எப்பப் பார்த்தாலும் பணம், சொத்து, சொந்தக்காரங்களப் பத்தி தப்பா பேசறது, ஒருத்தர ஒருத்தர் குற்றம் கண்டு பிடிக்கிறது. சந்தேகம் இப்படி இருக்கிறதுக்கு கல்யாணமே பண்ணாம இருந்துக்கலாம். கொஞ்சமாச்சும் இயற்கையப் பார்த்து ரசிக்கனம், அன்பா, நம்பிக்கையா, ஒத்த வார்த்தையப் பேசனம். மனைவி இன்னைக்கு என்ன சேலை கட்டியிருக்கறான்னு கூட பார்க்காம ஆபீஸ் போயி சம்பாதிச்சுட்டு வர்ற பணம் வெறும் காகிதம் தான். பணத்தையும், சொத்தையும் சேர்க்கவா இந்த பூமில பொறந்தோம்?”
“சூப்பர். இதே தாட் தான் எனக்கும். என்னோட அப்பா அம்மா பெருசா எதுவும் சம்பாதிக்கலே. ஆனா சந்தோசமா வாழ்ந்திட்டாங்க. இப்ப கூட தன் வீட்டுக்கு வர்ற மருமகள் நிறையப் பணத்தோட வர வேணாம். நிறைஞ்ச மனசோட வந்தா போதும்னு சொல்லிட்டாங்க”
இந்த வார்த்தை லயாவை அயனின் குடும்பத்துடன் மன நெருக்கம் கொள்ள வைத்தது. உடனே தனது தாயின் அலைபேசிக்கு தொடர்பு கொண்டு ‘மம்மி நேத்தைக்குப்பார்த்த வரன் அயனையே முடிச்சிடுங்க, உடனே கல்யாணத்துக்கு நாள் குறிச்சிடுங்க’ என்றாள் அயனின் கைகளை இறுகப்பற்றியபடி!
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |