மனைவி நினைத்தால்?
கொஞ்சம் அதிகமாகவே உடல் இளைத்து , நோஞ்சானாய்… நடக்கவே தெம்பில்லாமல் தளர்வாய் செல்லும் நண்பனைப் பார்க்க எனக்கு அதிர்ச்சி.
நான் ஒரு மாத காலமாக ஊரில் இல்லை. அலுவலக வேலையாய் வெளியூர் பயணம்.
‘ என்னாச்சு இவனுக்கு…? உடல் நிலை சரி இல்லாமல் , படுத்தப்படுக்கையாய் இருந்து எழுந்து நடமாடுபவன் போல் செல்கிறான். ஏதாவது விபத்தா..? இல்லை நோயா…? ‘ என்று எனக்குள் யோசனை ஓடிய அடுத்த வினாடி…….
‘எய்ட்ஸா..! ‘ நினைக்க சொரக்கென்றது.
அவனுக்கும் என் வயதுதான். நாற்பது. ஆனால்… அவன் முப்பத்தைந்து வயது தோற்றம். பெண்கள் எல்லாரையும் கொக்கிப் போடும் அழகு, பேச்சு. இயல்பிலேயே…ஒரு சில ஆண்களுக்குத்தான் இப்படிப்பட்ட கவர்ச்சி. அது இவனுக்கு அமைந்தது அதிர்ஷ்டம்.
மேலும்….திருமணமாகி…. இரண்டு குழந்தைகளுக்குக்குத் தந்தை என்பதை தலையிலடித்து சத்தியம் செய்தாலும் யாரும் நம்ப மாட்டார்கள். ஆள் அவ்வளவு இளமை. உடல் கட்டுக்கோப்பு.
அதனால் இவன் ஆள் கட்டவிழ்ந்த காளை !பெண்கள் விசயத்தில் கில்லாடி.
அலுவலகத்திற்கு மதியம் சாப்பாடோடு வருவான். சம்சாரி என்று விசயம் தெரிந்த அலுவலக பெண் ஊழியர்களெல்லாம் இவனோடுதான் கொஞ்சுவார்கள், குலாவுவார்கள்.
இவர்களில்….. திருமணம் ஆனவர்கள், ஆகாதவர்கள்… என்று இவன் பெரும்பாலும் டிக் அடித்துவிட்டான்.
ஆகையால்…அலுவலகத்தில் எல்லா ஆண்களுக்கும் இவனை பார்த்தால் வயிற்றுக்குள் எரிச்சல். காதுகளில் புகை.
இது மட்டுமல்லாது வெளியிலும் ஆட்டம். ஆள் அரை நாள் விடுப்பென்றால் எவளோடு எங்கேயோ ஜூட் என்று அர்த்தம்.
அப்படிப்பட்ட ஆள் எசகு பிசகாக எவளிடமாவது மாட்டி, ஆழம் தெரியாமல் காலை விட்டு, எய்ட்ஸ் வாங்கிக் கொண்டு வந்துவிட்டானா…? – எனக்குள் ஓடியது.
அப்படித்தானிருக்க வேண்டும்.!! இல்லையென்றால் இவன் இந்த அளவிற்குப் பாதிக்கப் பட்டிருக்க மாட்டான்.! – எனக்கு அவனைப் பார்க்க, நினைக்க…. பாவமாக இருந்தது.
பாவி ! அல்பத்திற்கு ஆசைப்பட்டு ஆயுளை முடித்துக்கொண்டானே..! இவனுக்குப் பிறகு மனைவி, மக்கள்..கதி ? ! – நினைக்க சொரெக்கென்றது.
‘ விசாரிக்க வேண்டும் ! ‘ வழியில் ஓரம் கட்டி நின்றேன்.
என் கணிப்பு பொய்க்கவில்லை. பத்து நிமிடங்களில் திரும்பியவன் காய்கறி கூடையுடன் வந்தான்.
” சிவா ! நில்லு..! ” மறித்தேன்.
” ஏய்..! எப்போடா வந்தே …? ” – என்னைத் திடீரென்று எதிர்பாராமல் பார்த்ததில் அவனுக்கு அதிர்ச்சி, ஆச்சரிம். நின்றான்.
” காலையிலதான் வந்தேன். உடனே…உன்னைப் பார்க்கத்தான். வந்தேன். வழியில நீ என்னைக் கவனிக்காமல் போனே. அதான் நிக்கிறேன். அது சரி. ஏன்.. இளைப்பு…? ” ஆளை மேலும் கீழும் பார்த்துக் கேட்டேன்.
” விதி..! ” மெல்ல சொன்னான்.
” விதியா..? ”
” ஆமாடா. கொழுப்பு !! ” அழுத்தம் திருத்தமாக உச்சரித்தான்.
” என்ன உளர்றே..? ”
” இரு விலாவாரியா சொல்றேன்..!” – என்று இன்னும் ஓரம் கட்டினான். மரநிழலில் அமர்ந்தான்.
அமர்ந்தேன்.
” சொல்லு…? ” – பார்த்தேன்.
” சொன்னா வெட்கக்கேடு. இருந்தாலும் சொல்றேன்..” – பீடிகை.
” என்ன..? ”
” நான் பொம்பளைங்க விசயத்துல ரொம்ப சபலப்புத்திக்காரன் என்கிறது உனக்குத் தெரிஞ்ச விசயம். மனைவிக்கும் அது தெரியும். ரெண்டு, மூணு தடவை கண்டிச்சாள். நான் கேட்கலை. உனக்குத் தெரியாது. இந்த அலம்பல்லாம் இல்லாம ஒரு சின்ன வீடும் வச்சிருந்தேன். நான் யாருக்கும் தெரியாம போய் வந்தேன். இது எப்படியோ என் வீட்டுக்காரிக்குத் தெரிஞ்சுப் போச்சு. வழக்கம் போல கண்டிச்சா கேட்கல.
அதுக்காக அவ அழுது ஆர்ப்பாட்டம் செய்யல. படிக்கிற புள்ளைங்களை பள்ளி விடுதியில் சேர்த்து விடுங்க சொன்னாள். ஏன்..? கேட்டேன். எனக்கு இப்போ நாம சந்தோசமா இருக்கனும்ன்னு ஆசை. புள்ளைங்க வீட்ல இருந்தால் இடைஞ்சல். சேர்த்துவிட்டால் தொல்லை இல்லே. வசதி. சொன்னாள்.
‘ வாரத்துக்கு ஒன்னு ரெண்டுன்னு ரேசன் போடுற மனைவியே இப்படி ஆசைப் படுறாளே. பருத்தியே புடவையை காய்ச்சிடுச்சி.! ‘ என்கிற சந்தோசத்துல. மகன்களை அவள் சொல்படி சேர்த்து விட்டேன்.
” இன்னையிலிருந்து … நீங்க மத்திய சாப்பாடு எடுத்துப் போக வேணாம். மதியம் சமைச்சி வைக்கிறேன் சூடா சாப்பிட்டுப் போகலாம்..! ” ன்னு ஒரு மாதிரியா சொல்லி கண்ணடிச்சா.
‘ ஓகோ..! விசயம் அப்படிப் போகுதா..? ‘ ன்னு எனக்கு ரெட்டிப்பு சந்தோசம். அப்படியே செய்தேன்.
அன்னைக்குப் பிடிச்சது சனி. மதியம், ராத்தரின்னு… அவளே என்னை வழிய அழைச்சி…. தினம் கணக்கு வழக்கில்லே. உடல் சோர்ந்து போகுது. முடியலன்னு சொன்னாலும் கேட்காம… ‘எனக்குப் பதில் சொல்லிட்டு அடுத்தவளைத் தொடு ‘ ன்னு சொல்லி சக்கையானால்தான் விடுறாள். உமைக்குத்து.!! உள்காயம்.! ! ” என்று பலகீனமாக சொல்லி முடித்தான்.
எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது.
” விசு ! ஒரு உண்மைடா..! ”
”என்ன..? ” ஏறிட்டேன்.
” பொண்டாட்டிங்க விட்டுக் கொடுக்கிற வரைக்கும்தான் ஆணுக்கு ஆட்டம், பாட்டம். மனுசிங்க…. புடிக்கனும்னு நினைச்சா….. சரியா புடிச்சு, ஒடுக்கி, நம்ம நாடி நரம்புகளைக் கழற்றிடுவாளுங்க. இப்போ எனக்குக் கட்டிலைப் பார்த்தா வெறுப்பா இருக்கு. மனைவியை நினைச்சா பயமாய் இருக்கு. இனி தாங்காதுன்னு கால்ல விழுந்து கதறினாத்தான் விடுவாள் போலிருக்கு. அதான் செய்யப்போறேன். நீயும் ஜாக்கிரதையாய் இருந்துக்கோ. ” சொல்லி….எனக்கும் ஓர் குட்டு வைத்து விட்டு எழுந்து நடந்தான்.
எனக்கும் தலை சுழன்றது.!! மயக்கம் வரும் போலிருந்து. !!