மனிதரில் இறைவன்
(1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நெருப்பைப் பொழிந்துகொண்டிருந்த கோடை வெயிலில், மயூரநாதன் நடந்தான். உடம்பெல்லாம் வியர்வை கொட்டிக்கொண்டிருந்தது. அந்த உடம் பினுள் இருந்துகொண்டு தளராத ஊக்கம் உந்திச் செல்ல அவன் மேலே மேலே நடந்தான். ஓய்ச்சல் ஒழிவில்லாமல் அலைவீசும் இதயத்தின் ஆசாபாசங்களைப்போல் அந்தக் கருநீலக் கடல் ஓய்வொழின்றி அலைகளை வீசிவந்து கரையிலே மோதிச் சரிந்துகொண்டிருந்தது!
புனிதமான திருச்செந்தூர்க் கடற்கரையின் ஓரமாக ‘வள்ளி ஒளிந்த வளநாட்டை’யும், ஊரை விட்டுத் தொலையில் உள்ள அந்த அழகான சிறிய ‘குகைக் கோயிலை’யும் தாண்டி, மணற்பரப்பிலே நெடுந்தூரம் நடந்தான் மயூரநாதன். அப்பொழுது அந்தக் கரையின் மணல் திட்டிலேயிருந்த சிறு பாழ்மண்டபம் அவன் கண்ணில் பட்டது. ஆவலும் நம்பிக்கையும் அலைவீச, அவன் கடலைவிட்டு மணல் திட்டிலே ஏறினான்.
முதிர்ந்த கிழவனுடைய இதயக் குகையில் பூர்வ அனுபவங்களின் உணர்ச்சிச் சின்னங்கள் சிந்திச் சிதறிக் கிடப்பதைப்போல, அந்த மண்டபத்தினுள் உடைந்து போன சிற்பங்களும் மங்கிப் போன சித்திரங்களும் உருக் குலைந்து கிடந்தன. மேல் விதானம் ஏதோ ஓர் பேரிடி யில் அதிர்ந்து போய்ச் சரிந்து கிடந்தது. அந்த இடியின் ஞாபகப் பதிவுகளுடன் கன்னங்கரேலென்று பூதங்களைப் போலத் தூண்கள் நின்றுகொண்டிருந்தன. மயூரன் அவற்றைக் கடந்து உள்ளே நுழைந்தான். அப்பொழுது தான் அவன் கண்முன், அந்த மண்டபத்தினுள் படர்ந் திருந்த பாறையில் குடையப்பட்டிருந்த ஒரு சிறு குகை தெரிந்தது.
ஆமாம்; திருச்செந்தூர்க் கடற்கரையில் காற்றும் மணலும் அந்தக் குகையைச் சுற்றி மணல்வேலி கட்டி அதைச் சிதிலமாகாமல் இதுவரை காத்து வந்திருக் கின்றன. இது காரணமாக அந்தக் குகை மட்டும் சற்றும் சிதைவின்றி மனிதனுடைய தன்னம்பிக்கையைப்போல் எங்கோ ஒரு மூலையில் நிலைத்து நின்றது.
மயூரநாதன் அந்த அழியாத குகையின் அழகான வழுவழுப்பான பாறைச் சுவர்களைக் கூர்ந்து பார்த்தான். நிச்சயம், தன்னுடைய லக்ஷிய உருவங்களை வர்ணத்தில் அமைத்து நிலையாக நிற்கும்படி செய்வதற்கு உகப்பான சுவர்கள். ஆனால் அதென்ன? அந்தச் சுவர்களின் நெற்றி மட்டத்தில் ஏதோ சாஸனம் பொறிக்கப்பட்டிருக்கிறதே!
மயூரன் அந்தக் கல்வெட்டைப் படித்தான்:
‘இந்த உலகம் அழியக் கூடியது. இந்தக் குகையைச் சுற்றியுள்ள பொருள்கள் எல்லாம் அழியக் கூடியன. இந்தக் கோவில்களைச் சுற்றி நிற்கும் ஊர்கள், இங்கு நட மாடும் மனிதர்கள், அவர்களுடைய ஆசைகள் அன்புகள் எல்லாம் ஓர் நாள் அழிய வேண்டுந்தான். ஆனால்…’
மயூரநாதனுடைய உடல் பதறியது. அந்த வரிகளைத் தொடர்ந்து மேலே வாசித்தான்:-
‘ஆனால் அழிகின்ற உலகத்திலும் அழியாத அமரன் உண்டு. கவிதைகள் எல்லாம் அந்த அமரனுடைய புகழைப் பாடுகின்றன. கலைகள் எல்லாம் அவனைச் சித்திரித்து மகிழ்கின்றன. உலகம் அவனைக் கொண்டாடு கிறது. அவனுடைய வரவில் வானம் அசைகிறது. காற்றுப் பன்னீர் தெளிக்கிறது. பொங்குகிற மாகடலும் தலைதாழ்த்தி வந்து, அவனுடைய பாதங்களைத் தனது அலைக்கரங்களால் ஒற்றி அஞ்சலி செய்கிறது. அவன் மனிதரில் இறைவன்!’
மயூரநாதன் பெருமூச்சு விட்டான். அழிக்கும் கைகள் அணுகிவிடாத இடத்தில் தனது கலையை நிலை பெறச் செய்யவேண்டும் என்று இடந்தேடி அலைந்த ஓவியனுக்கு எண்ணம் வழங்கியதுபோல இருந்தது அந்த மகா வாக்கியம். அவன் நினைத்தான்:-
“ஆமாம்; அழிகின்ற இந்த உலகத்தில் அழியாத சிரஞ்சீவி ஒருவன் உண்டு. அவனுடைய உருவத்தை இந்த அழிக்க முடியாத குகையிலே வர்ணந் தீட்டுவேன். பொங்கிவரும் மாகடலும் அவனை வணங்கித் துதிக்கும். அலைகள் தாழ்ந்து வந்து அவனுடைய பாதத்திலே சரிந்து விழும்.”
மயூரன் குகையைவிட்டு வெளியே வந்தான், அந்த மகா வாக்கியம் வர்ணித்த மகாபுருஷனைக் கண்ணாரக் கண்டுவந்து ஓவியத்திலே சித்திரிக்க வேண்டும் என்ற லக்ஷியத்துடன்.
2
உலக மகாவீரர்கள் என்று சரித்திரம் வியக்கிறதே, கவிஞர்கள் பாடுகிறார்களே, அந்த மகா வீரர்களை எல்லாம் தேடிப் புறப்பட்டான் மயூரநாதன்.
ஆயிரம் யானைகளை மத்தகத்தைப் பிளந்து அலறச் செய்த வீரஸிம்மன்; பதினாயிரம் ரதங்களைத் தூள் தூளாகிக் காற்றிலே சிதறவிட்ட இடியேறு; நாற்பதினா யிரம் குதிரைப்படைகளை, ஏறிவந்த வீரர்களோடு கண நேரத்தில் மண்ணிற் புதைத்த சண்டமாருதன்; கப்பல் களை ஆழ்த்திய திமிங்கிலன்; வானூர்திகளை வானுலகு சேர்த்த அக்னிமேகன்- எல்லாரையும் தேடினான்.
குழந்தைகள் அலறித் துடிக்கும், வீரர்கள் மூர்ச்சை யாவார்கள், அவன் பெயரை உச்சரித்தால்! ராஜ்யங்கள் எல்லாம் நடுநடுங்கும். மண்டலாதிபதிகளின் சிரத்தி னின்று மகுடங்கள் கீழே விழும். அப்படிப்பட்ட பராக் கிரமர்கள் எல்லாரையும் தேடினான் மயூரன். கடைசியில்…
கடைசியில், மயூரநாதனுடைய முயற்சி வீணாகவில்லை. அவன் குகைக்குத் திரும்பியபோது வெற்றியினால் அவனுடைய உள்ளம் பூரித்தது. ஆனால்…?
தான் கண்ட வீரர்களில் எல்லாம் பெரும் வீரனை, பராக்ரமர்களில் எல்லாம் அதிபராக்ரமனை, தான் கண்ட பலசாலிகளில் எல்லாம் மகா பலசாலியை மூடி விழிக்கும் நேரத்தில் அந்தச் சுவரிலே வர்ணந்தீட்டினான். ஆனால்…?
வானம் அசையவில்லை. மெல்லிய காற்று இழைய வில்லை. அந்த வாளேந்திய வீரனுக்கு அஞ்சி அலை கடலும் தலை தாழ்த்தக் காணோம். சாஸனத்தின்படி எதுவுமே நடைபெறவில்லை!
வேதனையோடு அந்த வர்ணங்களைக் கருநீலக் கடலிலே கொட்டிவிட்டு மறுபடியும் புறப்பட்டான் மயூரநாதன். அவனுடைய மனம் சாஸனத்தில் வர்ணித் திருந்த லக்ஷியத்திலேயே லயித்திருந்தது!
3
பிறந்து இறந்து உழலும் மானுடருக்குப் பிறப் பிறப்பின்றி நிற்கும் பரம் பொருளைக் காட்டி, அவர்களை மோக்ஷ ஸாம்ராஜ்யத்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூறும் ஆசாரியர்களைத் தேடிப் புறப்பட்டான் மயூர நாதன்.
வானம் அசையவும், மென்காற்றுப் பனி சிதறவும், கடல் அலை கரங்குவிக்கவும் கூடிய மகான் அவர்களிடையே நிச்சயம் இருப்பான்; அந்த மகாபுருஷனைத் தரிசித்துவந்து வர்ணந்தீட்டுவேன் – என்று.
மயூரநாதன் நீண்ட நாட்கள் அலைந்தான். மடா லயங்கள், கோயில்கள், ஞானச் சாலைகள், வேள்விக் கூடங்கள், தபோவனங்கள், அமைதியான நீர்நிலைகள் – இப்படி எத்தனையோ இடங்கள் சென்று, சென்று ஆராய்ந்தான்.
மயூரனுடைய முயற்சி வீண்போகவில்லை. ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் அவன் குகைக்குத் திரும்பிய போது உள்ளத்தில் வெற்றி பொங்கிக் கொண்டிருந்தது. ஆனால்…?
மயூரநாதன் வர்ணந் தீட்டினான். தான் கண்ட சமய ஞானிகளில் எல்லாம் ஞானியை, பரிசுத்தவான் களில் எல்லாம் பரம் பரிசுத்தனைச் சித்திரத்திலே, கமண்டலக் கையனாக வரைந்தான். ஆனால்?
என்ன நேர்ந்தது? வானம் அசைந்ததா? இல்லை. காற்று? பன்னீர் தெளிக்கவில்லை. அலைகள் சற்றாவது இந்தப் பக்கம் எட்டி நகர்ந்தனவா? இல்லவே இல்லை. சாஸனம் கூறியபடி எதுவும் நடக்கவில்லை.
மனம் ஒடிந்த மயூரன் வர்ணங்களைக் கடலிலே கரைத்துவிட்டு மறுபடியும் புறப்பட்டான்.
4
ஆறறிவு படைத்த மக்களுக்கு நவம் நவமான தத்து வங்களைக் கண்டு தருகிறோம் என்று சொல்லி நித்தம் புதிய புதிய ஆராய்ச்சிகள் நடத்துகிறார்களே விஞ்ஞானி கள், அவர்களைத் தேடிப் புறப்பட்டான் மயூரன்.
உலகத்தை ஒரு வினாடியில் கடப்பதற்கும், ஏழ் கடலையும் ஒரு சிறு குடத்துக்குள் அடைத்து விடுவதற் கும், அக்னியைப் பனிக்கட்டியாக மாற்றுவதற்கும் அதிசய மார்க்கங்களைக் கண்டுபிடிக்கிற அந்த ஆராய்ச்சி மூர்த்திகள் அனைவரையும் சென்று தேடினான்.
மயூரனுடைய யத்தனம் வீணாகவேயில்லை. குகைக்கு அவன் திரும்பியபோது முன் எப்பொழுதும் இல்லாத நம்பிக்கை இதயத்தில் பொங்கிக்கொண்டிருந்தது. ஆனால்…?
விஞ்ஞானிகளில் எல்லாம் விஞ்ஞானியை, அறிஞரில் அறிஞனை ஆராய்ச்சிக் கையானாகச் சித்திரந் தீட்டினான். ஆனால்…?
பாவம், வானம் அசையக் காணோம். காற்று மென்மையாகக் காணோம். கடல் அலை அடங்கிற்றில்லை. என்ன ஏமாற்றம்! இயற்கையின் நியதியில் எள்ளளவும் மாறுதல் ஏற்படவில்லையே!
மயூரநாதனுடைய தலை சுழன்றது. வெளியே அடித்த காற்று அவனுடைய மூளைக்குள்ளே புயல் வீசியது. வெளியே பொங்கிய கடல் அவன் இதயத்தில் குமுறியது. வேகமாக எழுந்தான்.
“அட பொய்ச் சாஸனமே, என்னையும் என் கலையை யும் அழித்துவிடப் பார்க்கிற கல்வெட்டே, நீ அழியக் கடவாய்!’
இப்படிச் சொல்லிக்கொண்டே வர்ணக் கிண்ணங் களை அந்தக் கல்வெட்டின்மேல் வீசினான். கல் உடையக் காணோம். கிண்ணங்களே சிதறின! மறுவினாடி, அந்தக் கிண்ணங்கள் சிதறியதுபோல் ‘கல கல’ வென்று மற்றோர் ஒலி கேட்டது!
மயூரநாதன் திடுக்கிட்டு நின்றான். அவனுடைய எதிரில் சிலம்பு கொஞ்ச நடந்து வந்து நின்றாள் அந்தக் கடலின் கன்னி. அவளுடைய கருநீலப் புடவை, அலைகளில் பதினெட்டு முழம் கிழித்து மேனியிலே ஓடவிட்டது போலத் தோற்றமளித்தது. அவளுடைய உடலில், எத்தனை வர்ணங்கள் உண்டு உலகில் அத்தனையும், ஒளி வீசிக்கொண்டிருந்தது. அந்தச் சங்கு வளையல்களும், மூக்குத்தியிலிருந்து ஒளி வீசிய கோலக் கடல் முத்தும் மயூரநாதனுடைய உள்ளத்தில் அதிசயமான ஒரு பக்தியை விளைத்தன.
“மனத்தையே கொண்டு கல்லிலே வீசி எறிவது போலக் கிண்ணங்களை ஏன் இப்படி எறிந்தாய்?” என்று அவள் கேட்டாள்.
மயூரநாதனுக்கு ஆவேசம் வந்தது.
“கடல் அன்னையே, நீதான் என்னுடைய லக்ஷியங் களுக்கெல்லாம் சாக்ஷி. நான் வரைந்துள்ள இந்த மூன்று மகான்களில் ஒருவரும் நீ வணங்குவதற்கு உரியவர் இல்லையா!”
கடல் அன்னை ஒரு சிரிப்புச் சிரித்தாள். பௌர்ணமிக் கடலில் அலைகள் பொங்கிவந்து கரையிலே முத்துக் களைச் சிதறுவதுபோல இருந்தது அந்தச் சிரிப்பு.
“உலகப் பிரசித்திபெற்ற மகாவீரன் இவன். அண்ட பிண்ட சராசரம் எல்லாம் இவனே தலைவன் என்று கைகூப்பி வணங்குகிற இந்த மகாவீரன் அமரனில்லையா?”
“மைந்தா, உடல் வலிமையின் பேரால், வீரம் என்ற கவசத்துக்குள் ஒளிந்துகொண்டு, மனித குலத் தைப் பூண்டோடு அழிக்க முயற்சிக்கும் இந்த ஹிம்ஸா மூர்த்தியை மகாபுருஷன் என்ற நினைத்துவிட்டாய்?”
மயூரன் பதில் சொல்லாமல் அடுத்த சித்திரத்துக்கு முன்னால் நின்றான்.
கடல் அன்னை மறுபடியும் பேசினாள்.
“என் தெய்வம், உன் தெய்வம் என்று எங்கணும் தொடர்ந்து எதிர் வழக்காடி விவாதச் சேற்றிலே தெய்வத்தை அழுத்தி விடுகிற சழக்கர்களில் சர்வ சமய சமரஸ ஞானியைத் தேடி அலைந்து வீணாகிவிட்டாயே!”
மயூரன் அந்த வார்த்தைக்கும் பதில் சொல்லாமல் அடுத்த சித்திரத்தைக் காட்டிக் கேட்டான்:-
“இயற்கையை வென்று ஆட்சி செய்யும் இந்த ஞானவீரன், மகா விஞ்ஞானி, இவனுங்கூட மகா மகா புருஷனில்லையா?”
கடல் அன்னை இந்த முறை சிரிக்கவில்லை. ஒரு கணம் மெளனமாக நின்றாள். பெரிய அலை ஒன்று பொங்கி வருவதற்குமுன் ஒரு கணம் நீர்ப்பரப்பிலே ஓர் அமைதி தோன்றுமே, அதைப்போல இருந்தது அந்த மௌனம். அடுத்த வினாடி அலை பிரும்மாண்டமாகப் பொங்கி வந்தது!
”அழியப் போகிற உலகத்தை, சீக்கிரமே அழித்து விடுவதற்கு வேண்டிய நாசினிகளைச் சிருஷ்டிக்கிறார்களே அந்த புத்திசாலிகளிடம், நிரந்தர சேவாமூர்த்தியைத் தேடினாயோ?”
மயூரனுடைய கண்களில் நீர் துளித்தது, அவன் கேட்டான்:-
“தாயே, அப்படியானால் அஹிம்ஸை என்ற அற்புத மான கருவியினால் உலகத்தை வென்றுவிடுகிற மகாவீர னும், சர்வ சமய சமரஸம் என்ற உயர்ந்த உபதேசத் தினால் உலகுக்கு ஞானமார்க்கம் காட்டும் ஆசாரியனும், அணுசக்தியையும் மிஞ்சிய ஆத்ம சக்தியை உலகுக்குக் கண்டுபிடித்துத் தந்த மகா விஞ்ஞானியுமான ஒரு புண்ணியமூர்த்தி உலகத்தில் உண்டா?”
“புதல்வா, அப்படிப்பட்ட மகாத்மா ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமியில் அவ தரிக்கிறான். அவனுடைய வரவினால் வானம் அசைகிறது. காற்று பனிநீர் சிதறுகிறது. என்னுடைய அலைக்கரங்களினால் அவனுடைய பாதங்களைத் தொட்டு நான் என்னைப் புனிதப்படுத்திக் கொள்கிறேன்.”
“அன்னையே, அப்படியானால் இப்பொழுதே சென்று அப்படிப்பட்ட மனிதர் எங்கிருக்கிறார் என்று கண்டு வந்து அவரை…”
“தம்பி, அவசரப்படாதே. மனிதர்கள் அவனை உணர்கிற தருணத்தில் அவனுடைய லக்ஷியம் சித்தியாகி அவன் மறைந்துவிடுகிறான்.”
“அப்படியானால்?”
“அவன் பேரண்டமாக விளங்குகிற நித்திய வஸ்து. அவன் பிறப்பு இறப்பு அற்ற மூலப்ரக்ருதியில் ஓர் அம்சம். ரூப நாமமற்ற அந்த வஸ்துவோ கலைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது. அந்தச் சித்திரத்தை வரையவேண்டிய இடம் பாறையில்லை, உள்ளந்தான்!”
இறகின் எல்லையை உணர்ந்தவன்போல மயூரன் எழுந்தான். அலை வீசிக் குமைகிற அந்தக் கடலுக் குள்ளே இறகை எறிந்தான்.
“அம்மா, இன்றே அறிவு வந்தது. மனிதரில் இறைவனை உணர்ந்தேன். தங்கள் ஆசீர்வாதம்.”
தாழ்த்திய தலையை உயர்த்திப் பார்ப்பதற்கு முன் எதிரே இருந்த அன்னை மறைந்துவிட்டாள்.
மயூரன் கண்ணைத் துடைத்துக்கொண்டே குகையி லிருந்து எழுந்தான். வெளியே அலை வீசிக்கொண்டிருந்த கடலின் ஒலியிலே அன்னையின் இனிமையான குரல் கேட்டது:-
“ஒப்புடையன் அல்லன்; ஓர் ஊரன் அல்லன்;
ஓர் உருவம் அல்லன்; ஓர் உவமன் இல்லி;
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன்
இவன் இறைவன் என்று எழுதிக் காட்டொணாதே!”
– இந்த தொகுப்பில் உள்ள பன்னிரண்டு கதைகளும் கல்கி, ஆனந்த விகடன், கலைமகள், வசந்தம் முதலான பத்திரிகைகளில் வெளியானவை.
– மஞ்சள் ரோஜா முதலிய கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1954, பாரி நிலையம், சென்னை.
![]() |
மீ. ப. சோமசுந்தரம் (Mi. Pa. Somasundaram; 17 சூன் 1921 – 15 சனவரி 1999) ஒரு தமிழ் எழுத்தாளர். மீ. ப. சோமு என்பது இவரது புனைபெயர். இவர் பத்திரிக்கை, கவிதை, புதினம், சிறுகதை, கட்டுரை, இசை போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர். 1962ல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். அகில இந்திய வானொலியில் பணியாற்றியவர். வாழ்க்கைக் குறிப்பு சோமு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில்…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: December 5, 2025
பார்வையிட்டோர்: 126
