மனிதன்..!
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 7, 2018
பார்வையிட்டோர்: 5,101
புதுச்சேரி-நாகை பேருந்தில் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பஞ்சைப் பனாதி… வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை. நாற்பத்தைந்து வயது தோற்றம். எதைஎதையோத் தின்று வெறுப்பேற்றினான். மரியாதை மருந்துக்குக் கூட ”சார்!” நீட்டவில்லை.
எனக்கு, இவன் அநாகரீகத்தை உணர்த்தி முகத்தில் கரி பூச ஆசை. கடலூர் பேருந்து நிலையம் வந்ததும் வெள்ளரிப் பிஞ்சு விற்பவனை அழைத்து பத்து ரூபாய் நீட்டினேன். அவன் இரண்டு கட்டுகளை ஒரு கேரி பேக்கில் கொடுத்துச் சென்றான்.
ஒரு கட்டில் இரண்டை எடுத்து, ”சார் !” அருகில் அமர்ந்திருந்தவனிடம் நீட்டினேன்.
”வேணாம் சார்!” நாசூக்காக மறுத்து வெளியே வேடிக்கைப் பார்த்தான்.
‘மருந்தானாலும் விருந்தானாலும் காக்கைபோல் பகிர்ந்து உண்ண வேண்டும்!’ என்பதை உணர்த்த…. ”சார் நீங்க, சார் நீங்க….” என்று அக்கம் பக்கம் நீட்டி அவர்கள் மறுக்க…..தின்றேன்.
வெளியே வேடிக்கைப் பார்த்து வந்தவன் முகத்தில் ஈயாடவில்லை.
சிதம்பரம் பேருந்து நிலையத்தில் வழக்கம் போல் பேருந்து சிறிது நேரம் நிற்க…. இறங்கி சிறுநீர் கழித்து முடித்து திரும்பினேன்.
எனக்கு முதுகு காட்டி சிறிது தூரத்தில் சென்ற என் பக்கத்து இருக்கைக்காரனைப் பார்த்த எனக்கு அதிர்ச்சி.
”சார் !” அழைத்தேன்.
திடுக்கிட்டுத் திரும்பியவன் சுதாரித்து, ”சார்! நீங்க மறந்து விட்டுட்டுப் போயிட்டீங்களோன்னு நெனைச்சேன்!” வழிந்து நான் பேருந்தில் விட்டு வந்த வெள்ளரிப்பிஞ்சு கேரி பேக்கை நீட்டினான்.
”தேவை இல்லே. வைச்சுக்கோங்க.” சொல்லி நடந்தேன்.
கையில் உள்ளது கனக்க, சிரிக்க….அவன் அப்படியே நின்றான்.