மனம் தேடிய மருந்து
கதையாசிரியர்: எஸ்.மதுரகவி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: November 26, 2025
பார்வையிட்டோர்: 201

மும்முரமான வாரத்தின் முதல் பணி நாளான திங்கட் கிழமை . முற்பகல் நேரம். விழுப்புரம் நீதிமன்ற வளாகத்திற்கு அலுவலக வேலையாய் வந்த வங்கி ஊழியர் இளைஞன் குணசேகரன் , வேலையை முடித்து விட்டு , நீதிமன்றத்தின் வாயிலை நோக்கிப் போகும் போது , நடுத்தர வயது பெண்மணி வக்கீல் ராதா எதிரில் வந்தார்.. ராதா, காலஞ்சென்ற குணசேகரனின் தந்தையின் நண்பரான வக்கீல் தியாகராஜனிடம் ஜுனியராக இருப்பவர்.
ராதா, குணசேகரனைப் பார்த்து புன்னகை பூத்தார். அடுத்து அவர் பேசியது குணசேகரனுக்கு அதிர்ச்சியை அளித்தது.
“என்ன குணா அம்மா வொய்ப் குழந்தை எல்லாம் சௌக்கியமா?
“எல்லாம் நல்லா இருக்காங்க அக்கா”
“ஆமாம் ஏன் ஒங்க அண்ணன் ராஜசேகரன் , எல்லா சொத்தையும் ஒங்க பேருக்கு மாத்திட்டாரு. அவருக்கு கல்யாணம் காட்சி இல்லைங்கறதுக்காகவா ? “
“என்ன அக்கா சொல்றீங்க..?“
“ஆமாம்பா அவரு சேர்த்த ஆஸ்தி பாஸ்தி , ஒங்க அப்பா வெச்சிட்டுப் போனது , தாத்தா சேர்த்து வெச்சிட்டுப் போனது நிலபுலன் ,ரைஸ் மில் இடம் , வீடு வாசல் எல்லாத்தையும் ஒங்க பேருக்கு மாத்தி அதை பதியவும் சொல்லிட்டாரு ஒங்க அண்ணன் .. அவுரு ஒன் கிட்ட சொல்லலையா ? நான் ஓட்டை வாயா உளறிட்டேனா ? “
“நேரம் பார்த்து சொல்லிக்கலாம்னு இருந்திருப்பான். சரி நான் வரேன் அக்கா”
மேலே பேச்சை வளர்க்க விரும்பாமல் அங்கிருந்து விரைவாக நகர்ந்தான் குணசேகரன். வங்கிக்கு வந்தான். அலுவல் நிறைய இருந்தது.அவன் நினைப்பெல்லாம் ராஜா ஏன் இப்படி செய்தான் என்றே சுற்றிக் கொண்டு இருந்தது. அன்று மாலை நான்கு மணி . மேலாளர் பெண்மணியிடம் சீக்கிரமே செல்ல அனுமதி கேட்டான். அவரும் அவனுடைய முக மாற்றத்தை கவனித்து , கேள்வி எதுவும் கேட்டு குடையாமல் அனுமதி கொடுத்தார்.
இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றான். கூடத்தில் அவனுடைய பத்து வயது மகள் பவித்ரா , பள்ளியிலிருந்து திரும்பி உடை மாற்றிக் கொண்டு டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.
டிவியின் ஒலியை நிறுத்தி விட்டு பவித்ரா , “ அப்பா , அம்மா பக்கத்து வீட்டுக்காரங்களோட நிச்சயதார்த்தத்துக்கு போய் இருக்காங்க … காபி போட்டு தரவா அப்பா” என்று கேட்டாள்.
“வேண்டாம் ம்மா..“ என்று சொல்லி விட்டு மாடியறைக்கு வேகமாகச் சென்று திரும்பி வந்தான்.
பவித்ராவைப் பார்த்தான்.
“பெரியப்பா காலைலேந்து அவரோட ரூம்ல இல்லப்பா … எங்கே போய் இருக்காரு ? “ கேட்டாள் பவித்ரா.
பதில் சொல்லாமல் குணசேகரன் , அவனுடைய அம்மா இருந்த சிறிய அறைக்குச் சென்றான். அம்மாவுக்கு அதிர்ச்சி தர வேண்டாம் என்று அவரிடம் எதுவும் பேசாமல் , சோபாவில் வந்து அமர்ந்தான். அப்பாவின் மனநிலையை அறிந்து டிவியை நிறுத்தி விட்டாள் பவித்ரா. அவனிடம் தண்ணீரைக் கொடுத்தாள். வாங்கிப் பருகினான்.
அன்றிருந்து இரண்டு மாதங்கள் ஆகியும் அவனுடைய அண்ணன் என்ன ஆனான் என்ற தகவல் தெரியவில்லை. அவனுடைய நட்பு வட்டம் வருகிற கடைகளில் எல்லாம் விசாரித்தும் ஒன்றும் தெரியவில்லை. வக்கீலை சென்று பார்த்த போது அவர் சொத்து ஆவணங்களை ஒப்படைத்தார். அண்ணனைப் பற்றி தகவல் எதுவும் அவரிடம் இல்லை. அவனுடைய சில நண்பர்கள் கூறிய யோசனையின்படி காவல் நிலையத்தில் புகார் அளித்தான். காவல் துறையில் உள்ள சில நண்பர்களிடம் பேசிப் பார்த்தான்.
இன்று ஞாயிற்றுக் கிழமை . மதிய நேரம் பவித்ராவும் அவனுடைய மனைவி சொர்ணமும் அண்டை வீட்டாருடன் அருகில் உள்ள மைதானத்தில் நடக்கும் பொருட்காட்சிக்குச் சென்றிருந்தார்கள் . சோபாவில் அமர்ந்து இருந்த அவனருகில் அவள் அம்மா வந்தார். காதும் கேட்காத அப்பா போன அதிர்ச்சியில் பேச்சும் நின்று போன அம்மாவிடம் எப்படி கேட்பது என்று குணா , ஒன்றும் கேட்காமல் உட்காரு என்று சாடை காட்டினான். அவனருகில் அமர்ந்த அவனுடைய அம்மா , ஒரு காகிதத்தை நீட்டினார். . பவித்ராவின் ரப் நோட்டுத் தாளில் முத்து முத்தாக அவனுடைய அம்மாவின் கையெழுத்து. வாசித்துப் பார்த்தான்.
“ராஜா காய்ச்சலில் படுத்து இருந்த போது சொர்ணம் அவனுக்கு கஞ்சி கொடுக்க கஷாயம் கொடுக்க வெந்நீர் கொடுக்க மாடிக்கு ஏறி இறங்கி கொண்டிருந்தாள். அன்னிக்கு சொர்ணத்தின் அக்கா மாலா வீட்டுக்கு வந்தாள்.
அமைதியான வீட்டில் அவள் உரத்த குரலில் சொர்ணத்திடம் மூத்தாரை நீ …. இல்ல அவரு உன்னை …. என்று கேட்டாள். சொர்ணம் கோபத்துடன் அவளிடம் வீட்டை விட்டு வெளியே போன்னு சொன்னா … அவள் இவளை திட்டிக் கொண்டே வீட்டை விட்டுப் போனாள் . அதற்கு அப்புறம் தான் ராஜா..“
அவனுடைய தாயார் கண்ணீர் உகுத்தார். குணா அம்மாவின் கைகளைப் பற்றிக் கொண்டான்.
சில ஆண்டுகள் கழித்து ..
செங்கல்பட்டு . வெண்ணிலா மகளிர் விடுதி. ஞாயிற்றுக் கிழமை. காலை எட்டு மணி. இளைஞி பவித்ரா , குளித்து முடித்து லேப்டாப்பில் மூழ்கி இருந்த போது அவளுடைய அறைத் தோழி அர்ச்சனா, அறைக்குள் வந்தாள்.
“நேரம் காலமே கிடையாதா … இன்னிக்கும் ஆபீஸ் வேலையா?“
கேட்டாள் அர்ச்சனா.
அவளுடைய கேள்விக்குப் பதில் சொல்லாமல்
“அச்சு நீ எங்கே கிளம்பிட்ட? கீழ போய் டிபன் சாப்பிட்டு வந்துட்டியா?“
கேட்டாள் பவித்ரா.
“நான் ஒரு கேள்வி கேட்டா நாலு கேள்வி கேக்கறப்பா நீ … நான் பக்கத்துல இருக்கிற கோதண்ட ராமர் கோயிலுக்குப் போகப் போறேன். வந்துதான் சிற்றுண்டி “
லேப்டாப்பை மூடி வைத்த பவித்ரா , நானும் வரேன் வா என்றாள். இருவரும் விடுதியை விட்டு வெளியே வந்தனர்.
கோதண்ட ராமர் கோயிலுக்குச் சென்ற அவர்கள் தெய்வ தரிசனத்தை முடித்து விட்டு கோயில் வளாகத்தில் ஓர் ஓரத்தில் சிறிது நேரம் பேசாமல் அமர்ந்து இருந்தார்கள். பின்னர் , கோயிலை விட்டு வெளியே வந்தார்கள்.
அர்ச்சனா வேறு பாதையில் செல்வதைப் பார்த்த பவித்ரா ” என்னப்பா வழி மறந்திடுச்சா ” என்று கேட்டாள் .
அர்ச்சனா பேசினாள் – “ இல்லப்பா … இந்த தெருவுல பாகப்பிரவினை பிரச்சினையால பூட்டி இருக்கிற ஒரு வீட்டுத் திண்ணைல ஒரு மௌன சாமியார் இருக்காரு அவரைப் பார்த்துட்டு போனா நல்லது நடக்குதாம்.. உனக்கு மனம் போல் மாங்கல்யம் அமையணும் இல்ல”
“உனக்கு மட்டும் திருமணம் வேணாமா ? சரி வா” என்றாள் பவித்ரா. பாழடைந்த வீட்டுத் திண்ணையில் இருந்த ஒல்லியான வெள்ளை தாடி பெரியவரை இருவரும் பார்த்தனர்.
“பார்த்தால் போதும் வா பவித்ரா” கையைப் பிடித்தாள் அர்ச்சனா.
பவித்ரா அந்தப் பெரியவரின் அருகில் சென்றாள். அவருடைய கைகளைப் பற்றிக் கொண்டாள்.
“மச்சி .. எல்லாரும் கையெடுத்து கும்பிட்டுட்டுப் போறாங்க.. நீ என்ன சொந்தக்காரர் மாதிரி அவரோட கையை பிடிக்கற.. அவரு சுவாமிகள்”
அர்ச்சனா சற்று தள்ளி நின்று கொண்டு பேசினாள்.
பவித்ரா, பெரியவரின் அருகிலிருந்து நகராமல் பேசினாள் –
“சொந்தம்தான் பா அச்சு. நெருங்கின சொந்தம்… எங்க அப்பவோட அண்ணன் இவுரு என்னோட பெரியப்பா … எங்கப்பா மனசு தேடிய மருந்து இவர்தான் . எங்க அப்பா கிட்ட இப்பவே பேசறேன்..“
கைபேசியை எடுத்து அவருடைய தந்தையை அழைத்தாள் பவித்ரா. அர்ச்சனா பவித்ராவின் அருகில் வந்து நின்றாள்.
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |
