கதையாசிரியர்:
தின/வார இதழ்: தமிழ் முரசு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 5, 2024
பார்வையிட்டோர்: 1,259 
 
 

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பொழுது சாய்ந்து கொண்டிருந்தது. பூமகள் தன் அலுவலகத்திலிருந்து அவசர அவசரமாய் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். விரைவு ரயிலில் வந்து கொண்டிருந் தாலும் மனவேகம் காற்று வேகத்தை மிஞ்சிக் கொண் டிருந்தது.

அவளது அவசரத்துக்குக் காரணமில்லாமலில்லை. முதல்நாள் மாலையில் வீட்டிலிருந்த நேரத்தில் நடந்து விட்ட அந்தப் பயங்கரச் சம்பவம் மறுபடியும் மறுபடியும் நினைவலையில் வந்து அவளை அலைக்கழித்துக் கொண் டிருந்ததே அவளது மனக்கலக்கத்தின் மூலகாரணம்.

அவளின் இரண்டாவது பிள்ளை இரண்டு வயது நவீன் வீட்டின் முன்பகுதியில் விளையாடிக் கொண்டிருக்க, அவளது முதல் பெண் காமினி அப்பாவிடம் பாடம் படித்துக் கொண்டிருந்தாள். அவர்கள் வேலையில் அவர்கள் இருக்கட்டும என்று தனது அடுப்படி வேலைக்குள் அவள் மூழ்கிப் போனாள். சுமார் இருபது நிமிடங்கள் ஓடியிருக்கும். ஏதோ ஞாபகமாய்ப் பால்கனிப் பக்கம் வந்தவளின் இரத்த ஓட்ட மே ஸ்தம்பித்துப் போனது. சத்தம் செய்யாமல் பூனைபோல் பதுங்கிப் போய், பால்கனியில் ஏறி அதன் விளிம்பில் நின்று கொண்டிருந்த நவீனைப் பிடித்துக் கொண்டதும்தான், அவளுக்குப் போன உயிர் திரும்பியது. விடுவிடுவென்று முன்னறைக்கு வந்த கணவனைத் திட்டு கிறாள். அவளது கோபத்துக்கான காரணத்தைத் தெரிந்து கொண்டவன். தன் கவனக்குறைவுக்காக வருத்தப்பட்டுக் கொண்டாலும், தனது ஆண் உரிமையை விட்டுக் கொடுத்து அடங்கிப் போக விரும்பாதவனாய்… “நான் அப்பவே சொன்னேன் ஒன்று போதுமின்னு. நீ கேட்டாதானே… ஒன்றுக்கு ஒன்று துணையா இருக்குமின்னு அப்ப அடம்பிடிச்சு அவளைப் பெத்துகிட்டே… இப்ப என்னடான்னா இதுக எங்க ஒத்துப் போவுதுக… எலியும் பூனையுமாத் தானே இருக்கு துங்க… எப்பப் பார்த்தாலும் அவன் ஓடிக்கிட்டே இருக் கிறான். அக்கா பக்கத்தில உட்கார்ந்து விளையாட மாட் டேன்கிறான், படிக்க மாட்டேன்கிறான். இப்பவே பாசம் கிறது கொஞ்சமும் இல்லே. பின்னாடி எப்படி இருக்கப் போறான்.’

மிகுந்த கவலையுடன் கேட்கிறான். இது அவனது குற்றச் சாட்டாகவும் இருந்தது. ஒரு கணம் அவன் குறுகிப் போனாலும் மறுகணம் வம்புக்கு எழுந்து நிற்கும் கருந்தேளாக நிமிர்ந்து நின்றாள்.

“எப்படிங்க சேர்ந்திருப்பாங்க… மூத்தவ என்னைக் கண்டாலே முறைக்கிறா… சின்னவன் எடுத்ததுக்கெல்லாம் சிணுங்கறான். பிள்ளைங்கன்னா தாய் தந்தையோட பொழுதைக் கழிக்கணும். இங்கேதான் இதுகளுக்கு அந்தக் கொடுப்பினை இல்லையே… காலையிலேர்ந்து சைல்டுகேர் செண்டர்லேயும், கிண்டர் கார்டன்லேயுமில்லே அடைஞ்சு கெடக்குதுங்க… அக்காவைத் தம்பியும் தம்பிய அக்காவும் பார்க்கறதே படுக்கப் போறப்பதானே…! இதுல எங்கே பாசமும் பிரியமும் வரப்போவுது.’

பூமகள் தன் மனக்குறையை வார்த்தைகளாய்க் கொட்டித் தீர்த்துக் கொண்டாள். அவன் கையிலிருந்த புத்தகத்தை வீசியெறிந்துவிட்டு விருட்டென்று எழுந்து உள்ளே போகிறான். அதுவரை அப்பாவிடம் பாடம் படித்துக் கொண்டிருந்த காமினி அம்மாவை ஆத்திரமாய்ப் பார்த்து முறைத்துவிட்டு அப்பாவிடம் ஓடுகிறாள். அவளைப் பொறுத்தவரை அவளுக்கு அப்பாதான் எல்லாமே…அம்மா மூன்றாவது நபராகிப் போயிருந்தாள்.

கையிலிருந்த குழந்தையுடன் சமையலறையில் புகுந்து கொண்டு சமையலைக் கவனிக்கிறாள் பூமகள். இடுப்பிலே குழந்தை சிணுங்கிக் கொண்டேயிருக்க… ஒருவர் மட்டும் வேலை செய்கிறது, கணவனின் அலட்சியமும் உதாசீனமும் அவள் மனத்தை வெகுவாய்ப் பாதிக்கிறது. மன உளைச் சலுடன் இருக்கிறாள்.

நடுத்தர வர்க்கத்தின் பிரதிநிதிகள் அவர்கள். இருவரும் படித்தவர்கள், படிப்புக்கேற்ற வேலையையும் தேடிக் கொண்டார்கள். முதல் குழந்தை பிறக்கும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை அவர்களுக்கு. குழந்தை பிறந்த மூன்றாவது மாதத்திலேயே புட்டிப் பாலுடன் குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். கணிசமான கட்டணத்துடன் தேவைப்பட்ட இதர பொருள்களையும் அவர்கள் வழங்கிப் பிள்ளையைப் பாதுகாக்க விட்டார்கள்.

காலையில் விட்டுச் செல்லும் குழந்தை, மாலையில் வீடு திரும்பும் போது வீட்டுக்குக் கொண்டு வரப்படும். அப்பா அம்மாவுடன் இருக்கும், வீடு வந்தது முதல் தூங்கப் போகும் வரை குழந்தை தந்தையிடம் இருக்கும். தாய் வீட்டு வேலைகளைக் கவனித்து ஓய்வாக வந்து அமரும்போது அது தூங்கிப் போயிருக்கும். காலையில் குழந்தையைக் குளிப் பாட்டி உடை உடுத்தித் தூக்கிப் போய் விடுவதுடன் தாயின் கடமை முடிந்துவிடும். குழந்தை பகல் முழுவதும் வெளி யிலும், இரவில் தந்தையிடமும் இருப்பதால் இயல்பாகவே அது தாயை அறவே மறந்திருந்தது. தாயின் அணைப்பைக் கூட அதனால் முழுமையாய்ப் பெற முடியாத அவசர வாழ்க்கை நிலை. எப்படியோ குழந்தை மூன்று வயதான போது தனக்கு இன்னொரு குழந்தை வேண்டுமென்ற ஆசை அவளுக்கு வந்தது. அவன் எவ்வளவோ சொல்லியும் அவள் கேட்பதாய் இல்லை. ஆசைப்பட்டது போலவே ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அதன் மேல் பிரியத்தைப் பொழிந்தாள். மாதங்கள் மூன்று கழிந்த போது தலைவலி ஆரம்பமானது.

அவள் வேலைக்குப் போக வேண்டிய சூழ்நிலை. குழந்தையை யார் பார்த்துக் கொள்வது என்ற கேள்வி பிறந்தது. வருமானத்தைப் பெருக்கிக் கொள்வதும், வசதியான வாழ்க்கையை அமைத்துக் கொள்வதும் அவர்களுக்குத் தேவையான ஒரு விஷயமாகிப் போனதால் அவர்களுக்குக் குழந்தைகள் ஒரு பிரச்சினையாகிப் போனார்கள். இப்போது இரண்டாவது குழந்தையும் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் விடப்பட்டது. இப்போது, முதல் குழந்தை கிண்டர் கார்டனுக்கு மாற்றப்பட்டிருந்தாள்.

இருவரும் வேலைக்குப் போவதும், போகும்போது ஆளுக்கொரு குழந்தையோடு சென்று அந்தந்த இடத்தில் விட்டுச் செல்வதும், பிறகு வீடு திரும்பும்போது அவர்களை ஆளுக்கொருவராய் அள்ளிக் கொண்டு வருவதும் அன்றாட இயந்திரமயமான வேலையாகிப் போனது. இளவயது தந்தையான அவனுக்கு மனைவியோடு சிறிது நேரம் சிரித்து விளையாடக் கொஞ்சிப் பேசக்கூட நேரமில்லாத நிலை. எதிலும் வெறுப்பு… எதைப் பார்த்தாலும் எரிச்சல்… வாழ்க்கையை உல்லாசமாய் இனிமையாய்க் கழிக்க வேண்டிய நேரத்தில் இப்படி ஒரு அவதிப்பட்ட நிலை, ஒருவருடைய வருமானத்தில் இரண்டு குழந்தைகளையும் தாயார் வீட்டிலிருந்து கவனித்துக் கொண்டு குடும்பத்தை நடத்தினால் பிரச்சினைகளே இல்லாமல் அவர்கள் வாழலாம். ஆனால் அவர்கள் விரும்பிய ஆடம்பர வாழ்க்கை அவர்களை இந்த அவதிப்பட்ட வாழ்க்கையில் கொண்டு போய் விட்டது.

சிக்கனம் கட்டுப்பாடு என்பதை அவர்கள் நினைத்தும் பார்த்ததில்லை. அடுத்தவரின் வசதிமிக்க வாழ்க்கையோடு தங்களுடைய நிலையையும் உயர்த்திக் கொள்ள வேண்டி அவர்கள் போட்ட கவர்ச்சிப் போராட்டப் போட்டிதான் அவர்களின் சங்கடமான சூழ்நிலைக்குக் காரணமாகிப் போனது.

பல தடவை அவர்களின் பெற்றோர்கள் அவர்களுக்கு அறிவுரை சொன்னார்கள். யாராவது ஒருவர் வீட்டிலிருந்து குழந்தைகளைக் கவனியுங்கள். ஒருவர் வருமானத்தில் குடும்பத்தை எளிய முறையில் நடத்துங்கள் என்றார்கள். ஆனால் அவர்கள் அதைக் காதில் போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை.

மனத்துக்குள் ஏற்பட்ட உளைச்சலுடன் அவள் கையில் குழந்தையுடன் சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருக்க உள்ளே தனது அறையில் தனது பெண்பிள்ளையுடன் விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென்று அலறல் சத்தமும், குழந்தையின் அழுகையும், பாத்திரங்கள் விழுகின்ற ஓசையும் கேட்கவே, அவன் ஓடி வருகிறான். கொதித்துக் கொண்டிருந்த சுடுநீர் கேத்தல் கீழே விழுந்தது. தண்ணீர் கொட்டித் தரையெல்லாம் வெள்ளமாய்க் கிடக்கிறது. சுடுநீர் பட்டதால் ஏற்பட்ட காயத்தின் வலிதாங்காமல் பூமகள் புழுவாய் நெளிந்து கொண்டிருக்க அந்தப் பச்சைக் குழந்தையும் கத்திக் கொண்டிருந்தது. அவசர அவசரமாக ஆம்புலன்ஸ் வண்டிக்குத் தொலைபேசி, வழியாகத் தொடர்பு கொண்டான். அவர்கள் வருவதற்கு முன்பாக மனைவி யையும் குழந்தையையும் கவனித்தான்.

கையில் கரண்டியும் இடுப்பில் குழந்தையுமாய் இருந்த வேளையில் அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த கொதி நீரைக் குழந்தை தட்டிவிட. குழந்தை மீது பட்டு விடுமோ என்ற பதற்றத்தில் பூமகள் திரும்ப அடுப்பின் மேல் இருந்த கேத்தல் அவள் மீதே வந்து விழுந்தது. விளைவு…

அவளது இப்புக்குக் கீழே கடுமையான காயம். வலியால் அவள் துடித்தாள். வாசலில் ஆம்புலன்ஸ் வண்டி வந்தது. தாதியர் வந்து பூமகளையும் குழந்தையையும் தூக்கிச் சென்றார்கள். மனைவியின் துடிப்பைக் கண்டு அவன் மிகவும் துயரப்பட்டான்.

கொஞ்சம் பொறுமையாக இருந்து அவளோடு அந்த வேலைகளைச் செய்திருந்தால்… அல்லது அந்த நேரத்தில் குழந்தையைத் தான் கொண்டு வந்திருந்தால் அவளுக்கு இப்படி ஒரு துன்பம் நேர்த்திருக்காதே என்று தன்னைத் தானே நொந்து கொண்டான்.

கணவன் மனைவி இருவரும் கருத்தொருமித்துக் காதலாகி வருகின்ற இன்பதுன்பங்கள் அனைத்தையும் இருவரும் பங்கு கொள்வதில்தான் வாழ்வின் வெற்றியைப் பெறமுடியும் என்பதையும் பலதடவைகளில் படித்திருந்தும் அதைத் தன்னளவில் மறந்து போனதற்காக மிகவும் வெட்கப்பட்டான்.

மனைவியின் அருகில் அமர்ந்து அவள் தேகத்தைப் பாசத்துடன் நீவிவிட்டான். கண்களின் ஓரமாய் இறங்கிக் காய்ந்திருந்த கண்ணீரை விரல்களினால் துடைத்தான்.

“அழாதே பூமகள்… அளவுக்கதிகமான டென்ஷன்ல என்னையே மறந்துட்டேன்மா.. என்னை மன்னிச்சுடு… இனிமே உன்னை இப்படிக் கஷ்டப்படவிடமாட்டேன். உன்னோட சுமைகள்ள பாதியை நானும் தாங்குவேன். இந்தக் கடுமையான அழுத்தத்திலேர்ந்து வெளியே வரணும்னா உடனடியா உனக்கு நான் ஓய்வு கொடுக்கணும்.

“ரெண்டு பேர்ல ஒருத்தர் வீட்டு பாரத்தை ஏத்துக் கணும். இப்ப கொடுக்காத அன்பும் அரவணைப்பும் நம்ம பிள்ளைகளுக்கு நம்மால பின்னால கொடுக்கவே முடி யாதம்மா…என்னோட கடமை வருமானத்தைப் பெருக்க வேண்டியது. உன்னுடைய பொறுப்பு. வீட்ல இருந்து வரவுக்கேற்ற செலவு செய்து பிள்ளைகளை நல்லவர்களாக வளர்க்க வேண்டியது. முடிஞ்சா அடுத்த வீட்டுப் பிள்ளை களுக்கும் உதவியாய் இருக்க வேண்டியது.”

அவன் சொல்லிக் கொண்டிருந்தான். அவள் அவனது கையை எடுத்துத் தன் நெஞ்சில் அணைத்துக் கொண்டாள். அந்த இதயத்தின் ஒட்டம் அவனுக்கு நன்றி நன்றி என்று சொல்வது போல் அமைந்திருந்தது.

– தமிழ்முரசு 8-9-96.

– கவரிமான் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: அக்டோபர் 2007, சீதை பதிப்பகம், சென்னை.

சிங்கை தமிழ்ச்செல்வம் நூலாசிரியர் பற்றி... - மனங்கவர் மலர்கள், முதற் பதிப்பு: ஜூன் 2005 இலக்கிய வடிவங்களில் சிறுகதை. புதினம், கட்டுரை, உரைவீச்சு போன்ற அனைத்து நிலைகளிலும் சிந்தனையை வெளிப்படுத்துகின்ற ஆற்றல் மிக்கவராக மதிக்கப்படுகின்ற சிங்கை. தமிழ்ச்செல்வம் அவர்களை 1995-ம் ஆண்டு முதல் நான் நன்கு அறிந்து வைத்து உள்ளேன். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தில் உறுப்பியம் பெற்றுத் தொண்டாற்றினார். துணைச் செயலாளர் பொறுப்பேற்றுத் துணை நின்றார். கழகத்தின் வாழ்நாள் உறுப்பினராய்த் தொடர்ந்து…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *