மனப்புலம்பல்!
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 17, 2024
பார்வையிட்டோர்: 911
இதைச்செய்தால் அதைச்செய்திருக்கவேண்டும். அதைச்செய்தால் இதைச்செய்திருக்க வேண்டும் என செய்து முடித்த விசயத்தில் மனம் திருப்தியடையாமல் சுகி புலம்பிக்கொண்டே இருப்பது கணவன் சுமனுக்கு பிடிக்கவில்லை.
எந்த விசயத்தைப்பற்றியும் இரண்டு பேரும் கலந்து பேசி முடிவு செய்ய முடிவதில்லை. எதைச்சொன்னாலும் அதற்கு எதிரான விசயத்தைச்சொல்வது வாடிக்கையாகிவிட்டது. வடக்கே போகலாம் என கணவன் கூறினால் ‘தெற்கே போவது தான் நல்லது’ என்பாள். இட்லி செய்யச்சொன்னால் பூரி செய்யப்போவதாகச்சொல்லுவாள். பூரி கேட்டால் ‘எண்ணையில் போட்டது உங்களுக்கு வேண்டாம். இட்லியே சுடலாம்’ என்பாள்.
புலம்பலின் உச்சத்துக்கே சென்றவள் “உங்களுக்கு பதிலா என்ற மாமம்பையன் மயிலானையே கல்யாணம் பண்ணியிருக்கோணும். மாடு மேச்சாவது இத்தன கஞ்சி ஊத்தியிருப்பான். என்ற மேல உசுரா இருந்தான். மக்கு நாந்தான் அதைப்புரிஞ்சுக்காம டவுன் வாழ்க்கைல நெழல்ல சொகமா வாழோணும்னு சம்பளத்துக்கு வேலைக்கு போற உங்கள கட்டிக்கறேன்னு பிடிவாதமா இருந்து தொலைச்சுட்டேன். ஒடம்பு நெழல்ல சொகமா இருந்து என்ன பண்ணறது? மனசு எப்பப்பாத்தாலும் அக்னி நட்சத்திர வெயில்ல இருக்கற மாதர புழுக்கமாவே இருந்து தொலைக்குது” என்று கூறிக்கண்ணீர் சிந்தினாள்.
சுகியின் கணவன் சுமனும் தன் மனைவிக்கு என்ன தேவையோ அதைக்கேட்டவுடன் வாங்கிக்கொடுத்தான். மாதம் ஒரு முறை சுற்றுலா கூட்டிச்சென்றான். அலுவலகத்தில் லோன் போட்டு குழந்தைகளை மனைவி சொல் படி அதிக கட்டணம் செலுத்தும் பள்ளியில் சேர்த்து படிக்கச்சேர்த்தான்.
திருமணம் போன்ற விசேசங்களில் எந்தப்பெண்ணாவது புதிய டிசைனில் சேலை அணிந்திருந்தால் அதைப்பார்த்து நாள் முழுவதும் புலம்புவதோடு, ‘அதே டிசைனத்தான் நானும் செலக்ட் பண்ணி வெச்சிருந்தேன். கடைசில உங்க பேச்சக்கேட்டு இதையெடுத்து தொலைச்சிட்டேன்’ எனக்கட்டிய சேலையைக்காட்டிக்கூறுவதோடு அன்றோ, அடுத்த நாளோ அதே சேலையை எடுத்து வந்து விடுவதோடு, அடுத்த விசேசத்திலேயே கட்டி மற்றவர்கள் முன் பெருமைப்பட்டுக்கொள்வாள்.
தங்களது காரைப்போலவே பக்கத்து வீட்டில் வாங்கி விட்டார்கள் என்பதற்காக வேறு பெரிய கார் மாற்றி வாங்க வேண்டும் என பிடிவாதம் பிடித்து வாங்கினாள். தான் அணிந்திருக்கும் டிசைன் நகையை தெரிந்தவர்களோ, உறவுக்காரப்பெண்களோ வாங்கி அணிந்திருப்பதைக்கண்டு விட்டால் அடுத்த நாளே தனது நகையை மாற்றி வேறு டிசைனில் எடுத்து விடுவாள்.
வாட்ஸ் அப் குரூப்பில் யாராவது உறவினர் சொந்தமாக சிந்தித்து தத்துவம் எழுதி வெளியிட்டால், தானும் வேறு யாராவது எழுதியதை தன் பெயர் போட்டு பகிர்ந்து மகிழ்வாள்.
முன்பெல்லாம் தனக்கு நகரத்தில் வீடு இருப்பதை பெருமையாகப்பேசுவாள். அதை மற்றவர்களும் ‘உன்ற புருசனாட்ட என்ற புருசனும் படிச்சு வேலைக்கு போயிருந்தா நானும் பட்டணத்துல ஊடு கட்டியிருப்பேன். படிக்காத மாக்கானக்கட்டீட்டு மாடு, கண்ணு மேச்சு கூரைச்சாளைல குடும்பம் நடத்தறேன். உனக்கு மாதர அதிர்ஷ்டம் எனக்கு வேணுமில்லோ…?’ என கிராமத்து உறவுப்பெண் கூறுவதைக்கேட்டு தான் அதிர்ஷ்டசாலி என நினைத்து பூரிப்பாள்.
தற்போதெல்லாம் கிராமத்து உறவுகள் முன்பு போல் தன்னை மதிப்பதில்லை என கவலைகொண்டாள் சுகி.
“என்ற புருசனுக்கு இருக்கற பத்தேக்கறா காட்ல ஒரேக்கரா வித்தா உன்ற மாதர டவுன்ல ஊடு வாங்கிப்போடுவேன். ஆயரம், ரெண்டாயரம்னு அப்ப வித்த காடு இன்னைக்கு ரெண்டு கோடி, மூனு கோடின்னு போகுது. அப்புடிப்பாத்தா நானும் இப்ப முப்பது கோடிக்கு அதிபதின்னு வெச்சுக்குவே. உன்ற புருசன் எத்தன சம்பளம் வாங்குனாலும் கிராமத்துல ஒரு ஏக்கரா வாங்கிப்போடுவியாக்கு?” இழவு வீடு எனக்கூடப்பார்க்காமல் என தனது அத்தை மகள் சாந்தி தன்னை மட்டம் தட்டிப்பேசியதைக்கேட்டு கவலையடைந்த சுகி, உடனே தன் கணவனை அழைத்துக்கொண்டு நகரத்து வீட்டிற்கு புறப்பட்டு சென்று விட்டாள்.
“இன்னைக்கு பட்டிக்காட்ல இருக்கிறவளுகெல்லாம் கோடி, கோடின்னு பேசிக்கறாளுக. நானும் என்ற பொறந்த ஊட்ல ‘அஞ்சேக்கரா வேணுமா? அம்பது பவுன் நகை வேணுமா?’ ன்னு கேட்டதுக்கு ‘அம்பது பவுனு தான் வேணும்’ னு சொன்னங்காட்டிக்கு என்ற அப்பங்காரனும் அடிமாட்டு வெலைக்கு அஞ்சேக்கராவையும் மொத்தமா அஞ்சு லட்சத்துக்கு வித்து அம்பது பவுனு போட்டாரு. இன்னைக்கு அம்பது பவுன காலேக்கரா வித்தாலே எடுத்துரலாமாட்டிருக்குது. பாக்கி சொத்து கொறைஞ்சது இன்னைக்கத்த வெலைக்கு பத்துக்கோடியாகும். ஒவ்வொரு நாளும் ஏறீட்டே வேற போகுது. கொங்கு மண்ணே இப்ப தங்கமா மாறிப்போச்சு. நானும் நல்லா ஏமாந்துட்டனே. இத நெனைச்சு எந்த ஆத்துல போயி உழுகறதுன்னு தெரியலையே…. முட்டாள்…. படிச்ச முட்டாள். நானு உங்களச்சொல்லலே… என்னத்தாஞ்சொல்லறேன்” என கூறியவள் இரண்டு நாட்கள் உணவையே வெறுத்தாள்.
“மொதல்ல நம்ம கல்யாணத்தப்ப டவுன்ல ஊடிருந்தாத்தா பசங்களுக்கு பொண்ணே கொடுப்பேன்னு சொன்னவங்க இப்ப கிராமத்துல காடு, தோட்டம் இருந்தாத்தாங்கொடுப்பேன்னு சொல்லறாங்க.
இப்ப நம்ம பையனுக்கு தோட்டம்னு ஒன்னுமில்லியே… ஆரு பொண்ணு கொடுப்பா? சாந்தி பையனுக்கு சொத்து இருக்கங்காட்டிக்கு பத்தேக்கராவோட பண்ணையார் பொண்ணு கெடைச்சிருக்குது. அத்தன சொத்த வாங்க நாம பணத்துக்கு எங்க போறது…?” என நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதாள்.
“இத பாரு சுகி, இக்கரைக்கு அக்கரை பச்சைனு நம்ம முன்னோர்கள் பழமொழி எழுதி வெச்சதே இதப்போல அப்பவும் மனுசங்க வாழ்ந்த முறைய வெச்சுத்தான். நம்ம மனசு சொல்லறத அப்படியே கேட்டம்னா கவலப்பட்டு இந்த வெலை மதிப்பில்லாத ஒடம்பை எழந்திருவோம். ரெண்டு நாளா வகுத்துக்கு சோறு கொடுக்காம நீ இருந்ததுனால எதாச்சும் மாறிப்போச்சா? போகாது. நமக்கென்ன வாழ்க்கை வாழோனும்னு அமைப்பு இருக்குதோ அதப்படிதா வாழ முடியும். நோய், நொடி இல்லாம வாழ்ந்தாவே பெரிய கோடீஸ்வர யோகமா நெனைச்சுக்கலாம். முந்தா நேத்தே நாம கிராமத்துக்கு வாழ, வாழ செத்துப்போன சொந்தக்காரரோட எழவு கேக்கத்தானே போனோம். அங்கொரு வெவரம் கெட்ட முட்டாள் பொம்பள செத்துப்போன மனுசனப்பத்திப்பேசாம சொத்தப்பத்தி பேசுனத வெச்சு நீ கவலப்படறியே…? செத்துப்போனவருக்கு அம்பதேக்கரா சொத்திருக்குது. கொறைஞ்சது நூறு கோடிக்கு போகும். இப்படி அல்பாயுசுல போயி சேந்துட்டாரே…ன்னு கொஞ்சமாச்சும் கவலப்பட்டியா…? அதப்பத்தி ஒரு வார்த்தையாச்சும் பேசுனியா….? அவரோட பொண்டாட்டி உன்ற கிட்ட சொத்து பெருமை பேசுனாங்களா….? புருசன் போயிட்டாரேன்னு தானே அழுதாங்க. அவங்களுக்கும் உன்ற வயசு தானே….? சரி நானும் வேணும்னா நீ ஆசப்படற சொத்த எப்படியாச்சும் வாங்கீட்டு அவருமாதர செத்துப்போயிட்டா சந்தோசப்படுவியா….?” என கேட்ட கணவனின் வாயை ஓடிச்சென்று பொத்திய சுகி, “எனக்கு சொத்து வேண்டாங்க. நீங்க தான் வேணும்” எனக்கூறி வெகுளியாக தனது கணவனின் மார்பில் முகம் புதைத்து அழுதாள்.
முன்பு சொத்துக்காக அழுதவள், தற்போது கணவனின் சொல்லுக்காக அழுதாள். “ஒன்னி மேல் நாஞ்சொத்துப்போனதப்பத்தி பேசமாட்டேன். நீங்க செத்துப்போறதப்பத்தி பேசக்கூடாது ” என கணவனது கையில் தனது கையால் அடித்து சத்தியம் செய்தவள், தன் மனக்கட்டுப்பாட்டிலிருந்து விலகி, தன் அறிவுக்கட்டுப்பாட்டுக்குள் வந்தவளாய் கணவன் சுமனைப்பார்த்து பற்கள் தெரிய கவலை மறந்து மகிழ்ச்சியாக சிரித்தாள் ஐம்பது வயதை நெருங்கும் சுகி என்கிற சுர்ணகி.