மனத் தொற்று

வாசலில் கத்திக் கொண்டே போகும் அந்த காய்கறி வியாபாரியை நினைத்தபோது சதாசிவத்திற்குப் பரிதாபமாய்த்தான் இருந்தது. அந்த மூன்று சக்கர வண்டியில் மோட்டாரை மாட்டிக் கொண்டு டுர்ர்ர்ரென்று வேகமாய் விட்டுக் கொண்டு போய் விடுகிறார். வியாபாரமா, காட்சியா? சற்று நின்று நின்று கத்தினால்தானே இரு பக்கமும் உள்ள மாடி வீடுகளுக்குக் கேட்கும். என்னென்ன காய்கள் இருக்கின்றன என்று அவர்களுக்குக் காதில் விழ வேண்டாமா? இவர் சத்தம் பெரிதா, வண்டிச் சத்தம் பெரிதா என்பதுபோல் பறந்தால்? அந்தப் பெட்ரோலுக்கு ஆகும் காசாவது இவருக்குக் கிடைக்குமா? அது போகவல்லவா லாபம் பார்க்க வேண்டும்?
பெரிய பெட்டி போல் கனமான பலகை அமைத்து, இரும்புச் சட்டம் போட்டு, அடுக்கடுக்காய்க் காய்களைப் பிரித்து அடுக்கி, பார்த்தவுடன் வாங்கத் தோன்றுவதுபோல் பரப்பி, பார்வையாய்க் கொண்டு வரத் தெரிந்தவருக்கு, அதை எப்படி நின்று வியாபாரம் பண்ண வேண்டும் என்று தெரியவில்லையே? இந்த ஓட்டம் ஓடினால்? குரல் கேட்டவர்கள் வாசலுக்கு வந்து தலையை நீட்டி அழைப்பதற்குள் காத தூரம் பறந்து விடுவார் போலிருக்கிறதே…!
இது சுறுசுறுப்பா? பொறுமையின்மையா? எனக்கென்ன விற்கிறதுக்கு எடமா இல்ல?
இன்றுவரை அவரிடம் யாரும் காய் வாங்கியதைப் பார்த்ததே இல்லை. குரல் கொடுத்துக் கொண்டே நகருவதோடு சரி. வயசான ஆளாய்த் தெரிகிறது. ஒரு வேளை அவர் மூலம் கொரோனா பரவி விடும் வாய்ப்பு உண்டு என்று வாங்க பயப்படுகிறார்களோ? அரசு அனுமதித்திருக்கும் நேரத்தில், கடைக்குப் போய் வாங்குவதென்றாலும் அங்கும் கூட்டம் கூடுகிறதே! அது இதைவிட ஆபத்தாயிற்றே? இல்லை வாசலுக்கே கொண்டு வருவதால் விலை அதிகமாயிருக்கும் என்று நினைக்கிறார்களா?
சதாசிவமும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார். விலையையும் சொல்லிச் சொல்லித்தான் கத்துகிறார். அதைக் கேட்கும்போது இங்கே ருக்மணி வாங்கும் வேறு ஒரு கடைக் காய்கறிகளின் விலை அதிகமாய்த்தான் தெரிகிறது. ஃபோனிலேயே சொல்லி விடுகிறாள். சொன்ன ஒரு மணி நேரத்திலோ, மதியமோ அதுவும் தப்பினால் மாலையோ ஒரு பையன் கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போகிறான்.. கையோடு ஒரு மிஷினும் கொண்டு வருகிறான். கார்டு தேய்த்து பணத்தை செட்டில் பண்ணி விடுகிறாள். தண்ணீர் கேனும் வாங்குவதால், அதோடு காய்களும் சேர்த்து வரவழைப்பது வசதியாய்ப் போகிறது அவளுக்கு.
இவர்தான் வழக்கமாய்ப் போய்க் கொண்டிருந்தார். இந்தக் கொரோனாவால் வந்தது வினை. வெளியே போவது அறவே நின்றது. இவரானால் ரோட்டிற்கு எதிர்ப் பக்கம் உள்ள ஒரு கடைக்குத்தான் போவார். அங்கு சற்று விலை குறைவு என்பது இவர் கணிப்பு.
சின்னப் பசங்க…நாலு பேர் சேர்ந்து எப்டி உழைக்கிறாங்க…எவ்வளவு தன்மையாப் பேசறாங்க……அதிலெடுங்க மாமி…இதிலெடுங்க மாமின்னு எனக்கு மட்டும் அன்னைக்குக் காலைல வந்த புதுசாத்தான் தருவாங்க….கருவேப்பிலை, மல்லிக்கெல்லாம் என்னைக்குமே காசு போட்டதில்லை….எடை எப்பவுமே கூடத்தான் இருக்கும்…அவங்கள உற்சாகப்படுத்தறது நம்ம கடமையில்லயா…? நன்னா முன்னேறி வரட்டுமே…! யாரு வேண்டாம்னாங்க….அதுக்காக தெனமும் விலை கூடக் கொடுத்து வாங்க முடியுமா? ரெண்டு கடையையும் கம்பேர் பண்ணிப் பாரு…அப்போ தெரியும் விலை வித்தியாசம்…… சொல்லித்தான் பார்த்தார். மசியவில்லை. என்னவோ அந்தப் பசங்கள் மீது அவளுக்கு ஒரு பிரியம்…ஒரு கேனுக்கு ரெண்டு மூணுன்னு கொண்டு வந்து இறக்கிட்டுப் போயிடறாங்களே…! அட்வான்ஸ் கொடுத்தது ஒரு கேனுக்குத்தான் தெரியுமா? நல்ல பையங்க…என்று இரக்கப்பட்டாள். அவ்வளவு வேலைலயும் வீடு வந்து கொடுத்துட்டுப் போறாங்களே…! யார் செய்வா? போகட்டும்…இந்தப் பசங்களே இருக்கட்டும்….விட்டு விட்டார் இவரும்.
அப்படிப்பட்ட இவளிடம்….வாசலில் வரும் அந்த வண்டிக்காரரிடம் காய்கறி வாங்கு என்றால் கேட்பாளா? அதுவும் வயசான அந்த மனுஷனிடம்…! கொரோனாவ வீதி வீதியாக் கொண்டு வந்து வீடு வீடாச் சேர்த்துடப் போறார்…! அநியாயமாய்ப் பயப்படுகிறாளே…! ஒன்று நிச்சயம். வண்டிக்காரரின் விலைகள் குறைவாகத்தான் இருந்தன.
தற்செயலாய் இவள் வாங்கும் காய்களின் பில்லை எடுத்துப் பார்க்கத்தான் செய்தார். சொல்லப்போனால் அவர் வாங்கும் கடை விலையை விடக் கூடத்தான். வீட்டுக்குக் கொண்டு வந்து இத்தனை அக்கறையாய் ஒருவன் கொடுக்கிறான் என்றால் சும்மா முழம் போடுவானா? இதை யார் எடுத்துச் சொல்வது? ஒன்று உறுதி. வண்டிக்காரரிடம் யாருமே வாங்கியதாய்த் தெரியவில்லைதான். நம்மைப் போலவே மற்றவர்களும் பயப்படுகிறார்களோ…! வயதான மனுஷனிடம் எதற்கு வம்பை (கொரோனா வம்பை) விலைக்கு வாங்கிக் கொண்டு என்று? இதை நினைத்துத்தான் சனம் பயப்படுது என்று அவருக்குத் தெரியுமா? ஐயோ பாவம்…தெரிந்தால் எவ்வளவு வருந்துவார்…? சரி….இன்று ஏன் இங்கு தயங்கி நிற்கிறார்? சுற்று முற்றும் பார்க்கிறாரே? யாராவது அழைத்திருப்பார்களோ? ஏதோ குரல் கேட்டுத்தான் நிற்கிறார்… தெரிகிறது…..! வெண்டைக்கா…பொடலங்கா….கத்தரிக்கா….பூசணி….பட்டரு…சோயா…..- யாரும்மா கூப்டீக…? மாடி, கீழ் என்று பார்வை பரபரக்கிறது. சித்த தலயக் காட்டுங்க தாயீ….யாரு கூப்டது….? வாங்க தாயீ…கீழதான் நிக்கிறேன்….-
தனி வீடு என்று எதுவும் இல்லாத அந்தப் பகுதியில் யார் கூப்பிட்டிருக்க முடியும்? அடுக்ககத்திலிருந்துதான் யாரேனும் அழைத்திருக்கணும்…! அட….கூப்டுட்டு இப்டியா கண்டுக்காம இருக்கிறது? அந்தாளு எம்புட்டு நேரம்தான் நிப்பாரு? இன்னும் எவ்வளவு எடத்துக்கு இந்த வெயில்ல போகணுமோ? காலைலயே என்னமா சுள்ளுன்னு அடிக்குது? அந்த மனுசனோட உழைப்ப மதிக்க வேணாமா? என்னா சனங்க…? பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம்….உருள…தக்காளி….கொட மொளகா….. – யாரேனும் வருவார்கள் என்று விடாமல் நம்பிக்கையோடு அவரும் தொடர்ந்து கத்துகிறார். அபூர்வமாய்த்தான் யாரேனும் வாங்குகிறார்கள். தரைத்தளம் கார் பார்க்கிங் என்றும் பிறகு முதல் மாடி, இரண்டாம் மாடி, மூன்றாம் மாடி என்றும் அமைக்கப்பட்ட அடுக்ககங்கள். இறங்கி வரச் சோம்பேறித்தனம்…யாரு கீழ எறங்கி, வண்டியெல்லாம் கடந்து, ரோட்டுக்குப் போயி, வாங்கி….அடுக்ககங்களில் உள்ளோருக்கு என்று படிந்துவிட்ட அசாதாரணமான அலுப்பு…..இருந்து பார்த்தால்தான் தெரியும் சிரமம்… ஆனாலும் அவர் முகத்தில் என்ன ஒரு எதிர்பார்ப்பு? இந்தப் பகுதியில் எப்படியும் வியாபாரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாய் நிலை நாட்டிவிட வேண்டும் என்று நினைக்கிறாரோ? யாரும் வாங்காவிட்டாலும், விடாமல் வருகிறாரே…! என்னை உறுதியா நம்பலாம்….கண்டிப்பா தினமும் வருவேன்….என்று நம்பிக்கையைத் தருகிறாரே…! கொஞ்சம் கொஞ்சமாவேனும் பிக்அப் ஆகட்டும் என்றும் நினைக்கலாம்…! வேன் ஒன்று வந்து நிற்க…அந்த டிரைவர் அவரிடம் தெரு அடையாளம் கேட்க….சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போதும் யாரேனும் காய் வாங்க வருகிறார்களா என்றே அவர் பார்வை திரிந்து கொண்டிருக்கிறது. ருக்கு…..ஏ…ருக்கு….நீ கூப்டியா….? நேரா நம்ம அபார்ட்மென்டுக்குக் கீழ நிக்கிறாரு….? சட்டென்று ஒரு சந்தேகம் தோன்ற அடுப்படி சென்று கேட்டேன். ஐயையோ….இன்னுமா நின்னிட்டிருக்காரு…அடப் பாவமே….? என்ன அடப் பாவமே….கூப்டியான்னா…அதுக்கு பதில் சொல்லாமே….? ஆமாங்க….நாந்தான் கூப்டேன்….அதிசயமா சோயா…பட்டர் கொண்டு வந்திருக்காரேன்னு ஒரு ஆசைல படக்குன்னு கூப்பிட்டுட்டேன்…அப்புறம்தான் ஞாபகம் வந்திச்சு…வாசல்ல வர்றதை வாங்குவமா, வேண்டாமான்னு…அதுவும் வயசான ஆளா வேறே இருக்காரேன்னு திடீர்னு பயம் வந்திடுச்சு…. அதான் பதுங்கிட்டியாக்கும்….நல்லாயிருக்குடி….நீ பண்றது…? வேண்டாங்கன்னு ஒரு வார்த்தை முகம் காண்பிக்காமச் சொன்னா அவர்பாட்டுக்குப் போவாருல்ல…..? அவருக்கென்ன கொரோனாவா இருக்கு…இருந்தா வருவாரா முதல்ல? அதெப்படிங்க வேண்டாம்னு சொல்றது? நாம மட்டுமா இருக்கோம் இங்க…..? கொஞ்ச நேரம் பார்த்திட்டுக் கிளம்பிப் போயிடுவாரு…நீங்க ஏன் அலட்டிக்கிறீங்க….?
பாவம்டீ…..யாருமே இந்தப் பகுதில அவர்ட்ட வாங்கினதேயில்ல…நாமளாச்சும் ஒரு நாளைக்கு வாங்குவோம்….குறைஞ்சா போறோம்….-பையை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.
ஐயையோ…வேண்டாங்க…. அவரும் வயசான மனுஷன்…நீங்களும் வயசானவர்…எதுக்குங்க வம்பு? வினையை விலை கொடுத்தா வாங்கணும்…? அதெல்லாம் ஒண்ணும் வராது…பயப்படாதே…! அப்டி அவருக்கிருந்தா வியாபாரத்துக்கு வருவாரா? பயமிருக்காதா….? அவரு உங்களப் பார்த்து பயந்தார்னா….?-கேட்டுவிட்டுச் சிரித்தாள் ருக்மணி. அப்டீன்னா அவர் தெருவுல வந்தே இருக்கமாட்டாரு….போகுற இடமெல்லாம் எத்தனை பெரிசுகளைப் பார்ப்பாரு….விலகி விலகியா ஓட முடியும்….? வயசானவங்களுக்கு தொத்துதுன்னு சொல்றாங்களே தவிர…வயசானவங்களுக்கு மட்டுமே வருதுன்னு சொல்லலியே…? சின்னவங்களுக்குக் கூட வந்திருக்குதானே…! ஒரு விலகல் மெயின்டெயின் பண்ணுங்கன்னுதானே சொல்றாங்க….பயப்படாதே….ஒண்ணும் ஆகாது…..தள்ளி நின்னே வாங்கிட்டு வர்றேன்….போதுமா…..? இன்னைக்கு உன்னோட பட்டர்பீன்ஸ் ஆசையை நிறைவேத்தியே ஆகணும்…அதுதான் முக்கியம்….சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.
ருக்மணி அதற்குமேல் தடுக்கவில்லை. நாக்கு அப்போதே இழுத்துவிட்டது. மாலை டிபன்… “சப்பாத்தி- குருமா“ என்று நினைத்தவாறே கீழே இறங்கினேன். ரிச் ப்ரோட்டீனுங்க அது…விலை ஜாஸ்தின்னாலும் பரவால்லே…வாங்கிட்டு வாங்க…நான் வாங்குற பையன் கடைல அது ஏனோ வர்றதேயில்ல…- அவளின் நெடுநாளைய ஆசை நிறைவேறப்போகிறது இன்று….அவளுக்கு மட்டுமா…வீட்டில் எல்லாரும்தானே சாப்பிடப்போகிறோம்…பையனும் வளைச்சுக் கட்டுவானே…சூப்பர்மா….! அவன் உறிஞ்சுவது இப்போதே என் காதில் விழ ஆரம்பித்து விட்டது.
கீழே வராண்டாவிற்குச் சென்று கார் பார்க்கிங் கடந்து போய் எட்டிப் பார்க்கிறேன். ஆளைக் காணவில்லை. அடப்பாவி…ஆள் நகர்ந்தாச்சா….? அங்குமிங்கும் சுற்றிச் சுற்றி….கண்ணுக்கெட்டிய தூரம் வரை பார்வையை ஓடவிட்டு- அவர் கத்தி விற்கும் சத்தம் கேட்கிறதா என்று காதுகளைத் தீட்டிக் கொண்டு நிற்கிறேன். சற்று தூரம் போயிருந்தாலும் போய் பிடித்துவிடலாமே என்ற எண்ணம். ஆள் கண்ணில்பட்டால்தானே? டுர்ர்ர்ர்ர்…என்று கிளம்பிட்டாரோ…! மனுஷன் சிட்டாப் பறந்திடுறாரே…! போயே போனார் அவர். பாழாய்ப்போன இந்தக் கொரோனா அவரையும் அண்டவிடவில்லை. நம்மையும் நெருங்கவிடவில்லை. அது சார்பான யோசனையும், பயமும், தயக்கமும்தானே இந்தத் தாமதத்திற்குக் காரணம்? நினைத்துப் பார்த்தேன்.
யார் கூப்டதுங்க…? என்று எவ்வளவு நேரம் காத்திருந்தாரோ? – மனது மிகவும் சங்கடப்பட சோர்வோடு மீண்டும் மாடியேறினேன். எங்கோ தள்ளி அவர் குரல் கேட்பதுபோல் ஒரு பிரமை. வயதான அந்த வியாபாரியை, கொரோனாவைக் காரணம் வைத்து, எல்லோருமே ஒதுக்கி விடுவார்களோ…? தொற்று பயம் இப்படியா பரவும்? எல்லாமும் விற்று, வெறும் வண்டியாய் வீடு திரும்புவாரா? மாட்டாரா? இந்தக் கேள்வி தீவிரமாக,, மனசு ஏனோ மிகவும் சங்கடத்தில் ஆழ்ந்து போனது.
![]() |
1987 முதல் உஷாதீபன் என்கிற புனை பெயரில் எழுத ஆரம்பித்த இவர் தனது எழுத்துப் பணியை இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறார். வார, மாத இதழ்களிலும் இலக்கியச் சிறு பத்திரிகைகளிலும் இவரது கதைகள் வெளி வந்துள்ளன. அச்சு மற்றும்இணைய இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இயற்பெயர் கி.வெங்கட்ரமணி. திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு நகரைச் சொந்த ஊராகக் கொண்டவர். 1951 ல் பிறந்த இவர், தமிழ்நாடு அரசு வேளாண் பொறியியல் துறையில் கண்காணிப்பாளராகப்…மேலும் படிக்க... |