மனக்கோலம்
(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரவு வெகு நேரம் கழிந்த பின்பு, சிறிது அயர்ந்தவன் ஒரு ஓலக் குரல் கேட்க, திடுக்கிட்டு விழித்தெழுந்தான். கடிகாரம் அப்போது இரண்டு மணிதான் அடித்தது. கனவு என்பதாக எண்ணி, அவன் மனது நிம்மதி கொள்ள வில்லை. சஞ்சலத்திலும், ஒரு நிகழ்ச்சி நேரப் போவதை எதிர்பார்த்தலிலும், நிசியைத் தாண்டி வெகுநேரம் நின்றிருந்தவனுக்குக் கொஞ்சம் அயர்வு தோன்றுகிறது. சாமக் கோழி அப்போது இரண்டுதரம் கூவி விட்டு நிசப்தமாகியது. நான்கு சுவரால் அடைபட்டது போன்ற அவ்விரவின் இருள் அவனை அச்சுறுத்தவில்லை. ஆனால் சுவர்க்கோழியின் இடைவிடா சப்தம் கருதியாக, மெளனம் பயங்கரமாகியது. அவன் எழுந்து மேற்கு நோக்கிய ஜன்னல் கதவுகளைத் திறந்தான். சந்திரன் வானத்தின் உச்சியிலிருந்து வெகுதூரம் சரிந்துவிட்டது. மெல்லிய மேகங்கள் ஆகாயத்தைத் துளாவி மேய்ந்தன. ஜில்லெனக் காற்று அவன் முகத்தில் பட, முகம் வியர்வை கொண்டது. “சிறிதுதான் அயர்ந்தேன். ஆம். அவள் இன்னும் வர வில்லை. உதயம் காணுமுன் வருவதற்கு இன்னமும் நேரமுண்டு. ஒருக்கால் நான் அயர்ந்தபோது வந்து போய் விட்டாளோ! இல்லை, அவளால் முடியாது. எல்லோ ருடைய தூக்கத்திலும் வருபவள் நான் தூங்கும் போதா வருவாள்… என்னைத் தட்டி எழுப்பாமலா போய் விடுவாள்…” அவன் மனது மிகுந்த வேதனை அடைந்தது. மறுபடியும் அவன் விடியுமுன் தூங்கவில்லை.
விரல்களின்றியும் வீணையில் சங்கீதம் வியாபகம் கொள்ளும்போலும்! சுருதி விலகி எட்டியா நின்று இடை விடாது முணுமுணுக்கிறது! சப்தத்தினின்றும் சங்கீதம் விடுதலை பெற்று எட்டிய வெளியில் மௌனமான வியாபகம் கொள்கிறது. சுவர்க்கோழிகள் இடைவிடாது புலம்புகின்றன. அவன் மனவெளி இருளில் ஒன்றிநின்ற ஒன்று அந்தப் பக்கம் சுட்டிக்காட்ட, மனம் அச்சம் கொள்கிறது. மௌனமாக இருந்து அந்த அறையில் நிலைத்து நிற்பது, தன்னை மறந்த பிறிதொன்று புறவெளியில் சஞ்சரிப்பதான எண்ணத்தைக் கொடுத்தது. அவன் அப்போது அவள் எண்ணத்தில் லயித்து இருந்தான். சுப்பையர் அருகில் அடுத்த வீட்டில் கெளரி அயர்ந்து இருந்தாள். அவள் பெயரை அவன் ஒருதரம் அழுத்த மாகவே உச்சரித்தான்.
அவனுக்கு வேதனை கொடுக்கவே வெகு சீக்கிரமாக இரவு நகர்ந்து கொண்டிருக்கிறது. அவள் வரவில்லை என்பதில் நேரம் நகரவில்லை. ஒவ்வொரு சமயம் இருளைக் கிழித்துக் கொண்டு உன்னத ஒளிபாய இதோ நிற்பாள் என்பதாக எண்ணுவான். “கௌரி” என்று மெல்லென அவன் வாய் அப்போது முணுமுணுக்கும். பதில் இராது. ஆம், அவள் பேசமாட்டாள். யாருக்காவது தெரிந்து விட்டால்…. ஆனால் எனக்கும் தெரிய மாட்டாளா?…… இன்னும் அவள் வர நேரம் இருக்கிறது…! தன்னைச் சிறிது தேற்றிக் கொள்வான். ஒவ்வொரு சமயம் அவன் மனது பயம் கொள்ளும். அப்போது வாயிற்புறத்தி லிருந்து மலரின் மணம் மெல்லெனக் காற்றில் மிதந்து வரும். அந்த இரவின் இருளில்தான் அந்த மலரின் மணம் கணிசம் கொள்ளுகிறது… எவ்வளவு மகிழ்ச்சி நிறைந்த இன்பம் இந்த வேதனை! பெயர்த்து எறிய முடியாத இந்த இருளில் அவள் ஏன் தன் எதிரில் நிசப்தத்தில் நின்றிருக்கக் கூடாது என்று அந்த அறையைக் குறுக்கு நெடுக்காக நடந்து துளாவுவான்.
கிழக்கு வெளுத்து உதயம் கண்டது. இருட்டு உள்ளளவும் அவள் வருவாள் என்ற நம்பிக்கையில் எதிர்பார்க்குமொரு அமைதி. அவள் வராதது கண்டு மறுபடியும் பகலைக் கழித்து இரவு வருவதை எதிர் பார்த்தலில் அமைதி இன்மையாக மாறக் கண்டான். உறங்குவதற்கு இரவு அவனுக்கு உறுத்தாத பாயாக விரியவில்லை. புரண்ட விழிப்பிலோ வேலை கொள்ளப் பகலில்லை. மறுபடியும் இரவைத்தான் எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது…
கேசவனுக்கு வாழ்க்கை லட்சியம் என்பது என்ன வென்றே புரியவில்லை. உலகில் எத்தனையோ பேர் புரியாத வாழ்க்கை நடத்தும் விதமும் அவனுக்குப் புரியவில்லை. அவன் மனோபாவம் வெகு விநோதமாகத்தான் அமையப் பெற்றது. அவன் பிறந்த வேளையின் கோளாறு போலும்! எந்த விஷயமும் இவ்வளவுதான் என்ற மதிப்பிற்கு அகப்பட்டு நிலைத்தால் அல்லாது அதன் தேவை எவ்வளவு என்பது புலனாகாது, நிலை கொள்ளாது இச்சைகள் மன விரிவில் விரிந்துகொண்டே போனால், மதிப்பிற்கான துரத்துதலில் தானாகவா இச்சைகள் பூர்த்தியாகின்றன? பிடிக்க முடியாதெனத் தோன்றும் எண்ணத்தில் இந்தத் துரத்திப் பிடிக்கும் பயனிலா விளையாட்டு எவ்வளவு மதியீனமாகப்படுகிறது. எல்லாம் தெரிந்தும் கூட அவனால் ஒன்றையும் செய்ய முடியவில்லை. இந்த மன வெறி யாட்டத்தில் களி கொண்டு எட்டிப் பார்த்து நிற்பவனா கடவுள்? அப்படியாயின் அவனை கேசவன் கருணையில் பார்க்க முடியவில்லை. பிடிபடாத பைத்தியக்காரத் தனத்தில் தான் சிற்சில சமயம் அவன் அகப்படுவதான எண்ணம் அவனுக்கு.
கேசவனுக்குப் பழமையில் நம்பிக்கை இல்லாதத னால், புதுமை என்பது மனத்திற்கு இசைவதாக இல்லை.
பச்சைவெட்டாக, உயிரற்று அழுகும் பழமையிலும் கேவலமாகத் தான் தெரிந்தது புதிய நாகரீகப் பண்பு, வாழ்க்கைப் பாட்டையில் அநேக விஷயங்களைப் பழக்க வழக்கங்களாக்க வேண்டும். அவைகளிடம் சிந்தனை களைக் கொள்ளவே இடமிருக்கக் கூடாது. ஒவ்வொரு நித்திய விதியையும் ஆராய்ந்து செய்ய மனிதனுக்கு அவகாசம் கிடையாது. ஒளியற்ற பழைய வழியிலும் மனது செல்லாது, புதிது என்ற ஆபாசத்திலும் சுருக்கம் கொண்டு கேசவன் சிந்தனைகளிலே காலத்தைக் கழிக்க ஆரம்பித் தான். அதிர்ஷ்டவசமாக அவன் தாயார் தகப்பனார் அவனுக்கு நல்ல ஆஸ்தியைவிட்டு, அவனுடைய இருப தாவது வயதிலே இறந்து விட்டார்கள். சென்ற நான்கு வருஷங்களாக அந்த நகரில் தன் வீட்டில் தனியாகக் கல்யாணமின்றி தன் சிந்தனைகளிலே காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தான்.
யோசனைகளிலேயே ஒருவன் எப்போதும் வாழ்க் கையைக் கழிப்பது முடியாது. பசிப்பிணி முதலியவை களின்றிக் காலம் கடத்தும் மிருக வாழ்க்கையாகத் தோன்றும் அது. தான் படைக்கப்பட்டவன் என்று எப்போதாவது உணரும்போது, ஏன், எதற்காக என்ற கேள்விகள் தானாகவே மனதில் எழும். இத்தகைய கேள்விகளை மனது விழுங்கவேண்டுமாயின், புற உணர்வு மயமாகவும், காரணகாரியமற்று சம்பவங்களைக் கொள்ளும் விதமாகவும் தான் ஒருவன் இருக்க முடியும். எப்போதும் எவ்விதம் இவ்விதமாக இருக்கமுடியும் ஒருவனால்?
கேசவன் வாழ்க்கையில் கௌரி குறுக்கிட்டபோது அதையும் ஒரு சம்பந்தமற்ற நிகழ்ச்சியாகத்தான் அவன் எண்ணினான். அண்டை வீட்டு சுப்பையர் மனைவி என்பதைத் தவிரவும் காலையில் வாயிலில் சிற்சில சமயம் கோலம் போடுவதை இவன் திண்ணையில் நின்று பார்ப்பது என்பதைத் தவிரவும் வேறொரு சம்பந்தமும் முதலில்
இல்லை. இவன் மனம் சித்திரம் கொள்ளக் கோலம் வரைகிறாள் என்று எண்ணிய இவனை ஒருநாள் நிமிர்ந்து உள்ளே போகுமுன் பார்த்தாள். சூனிய வெளியில் வாழ்க்கையின் லக்ஷ்யப் பாதையை அமைக்க, அவள் இரு விழிகளும் சுடரொளியாக அமைந்தனவெனக் கண்டான். அவள் முகமே விழிகளென இவனைப் பார்த்துவிட்டு உட்சென்று விட்டாள் கெளரி. அவள் எண்ணம் அவன் மனத்தை விட்டு அதற்குப்பின் அகலாது ஒரு லக்ஷ்யமாக நீண்டது. அவள் வேறு ஒருவரின் மனைவி என்பதை அவன் மனது ஏற்க மறுத்தது.
இரவு காணும் முன்பே மெல்லெனக் காற்று வீச ஆரம்பிக்கும். வாயிற்புறத்திலிருந்து மலரின் மணம் மிதந்து வந்து மயக்கம் கொடுக்கிறது. அந்தி வேளையின் சூரிய ஒளி ஒரு இன்ப வேதனை நிறத்தில் தோன்றுகிறது. சில சில நாட்களில் சூரியன் மறையுமுன்பே மேற்கிலிருந்து மேகத்திரள்கள் மேலோங்கி விடும். மேக முகப்பு பலவித வர்ணப்பாடுகளுடன் காணப்படும். அவன் இவைகளை, பார்த்து உணரும் உணர்ச்சிகள், இரவின் வருகையில் கொள்ளும் இன்பமயமான கனவுகள்தான். அவ்வேளை களில் அவன் தவறாது மேற்குப் பார்த்த அந்த ஜன்னலின் முன் நிற்பான். சில சமயம் அவன் பார்வையில் குறுக்காக அவளைக் கோவிலுக்கு போகப் பார்க்க நேரிடுவதும் உண்டு.
அவை காரணமின்றி நடக்கும் சம்பவங்கள் என அவன் கொள்ளுபவைகள்தாம். தூக்கத்தில் கண்ட இன்பக் கனவுகளைத் திரும்பக் காண ஞாபகம் கொள்ளுவது போன்றவையே அவன் மறதியும் ஞாபகமும், அவன் நின்று பார்க்கும் மறதியில் எவ்வளவு நேரம் அவன் வாழ்க்கை தூங்கிவிட்டது…… நீளுகிறது. நேற்று நடந்ததை ஞாபகப் படுத்திக் கொள்ளும்போது நடந்ததா என்பதாகிறது; நடக்கிறதோ எனில் அப்படியே காலமென்பதின்றி, காலத்தையும் மீறியதாகிறது; நாளைக்கு நடக்கப்போவது அவனுக்கு நிச்சயமில்லை. எதிர்பார்க்கும் சந்தேகத்தில் அவன் இளமையும் சிக்குண்டு பாழாகிறது. அமைதியை இவ்விதம் அடிக்கடி இழப்பவன் அமைதியை வேண்டு பவன் அல்ல. அமைதியை இழப்பதில்தான் அவன் அமைதி அடைகிறான் போலும். அது கேசவனுக்கு சாந்தமும் சமாதானமும் கொடுக்கவில்லை.உயிர் வாழ்ந்த ஒவ்வொரு கணமும் ஒரு புரியாத புதிராக அமைகிறது. விடை கண்டால் புரிந்த நிகழ்ச்சியும் மறுகணம் இறந்ததாகிறது. எனினும் அறியாததொன்று தன்னை எதிரே சூனியத்தில் பலமாக உத்தித் தள்ளுகிறதா…… இழுக் கிறதா……? காலை கண்டுவிட்டது; காகங்கள் கூட்டை விட்டு வெளியே பறந்து சென்று கொண்டிருந்தன. உலகமும் பகலில் நகர ஆரம்பித்தது. நிம்மதியின்றிப் பகலெல்லாம் இரவின் வரவே எதிர்நோக்கி நிற்க வேண்டும். இரவிலோ வெளில் அவளை எதிர்பார்த்து நிற்பது கொஞ்சம் அமைதியைக் கொடுப்பதாக இருக்கிறது.
கையால் ஆகாதவன்தான் கணவன் ஆகிறான். பசிக்குப் பிச்சை கேட்க யாரிடமும் எந்நேரமும் முடிகிறதா? தனக்கென ஒரு வீடு, தனக்கென்று ஒரு மனைவி. தன் பலவீனத்தை உணர்ந்ததில்தான் மனைவி என்கிற பாத்தியம் கொண்டாட இடமேற்படுகிறது ஆண்களுக்கு. பெண்ணோ எனில் தன் பலத்தை மறக்க, மறைக்கதான் மனைவியாகிறாள், ஒன்றிலும் கட்டுப்படாது தனியே எட்டி நின்று உற்றுப் பார்ப்பதே பெண்மையின் பயங்கரக் கருவிழிகள் தான். கேசவனுக்கு சுப்பையரின் மனைவி அருவருப்பைத் தான் கொடுத்தாள். ஆனால் ‘கௌரியின்’ நினைவில் ஒரு பயங்கரம் சப்தித்தது.
இரவு கண்டுவிட்டது; மனவேதனை இன்பவேதனை என மாறாமலே கொஞ்சம் குறைவதாயிற்று. அவன் மனது சொல்லிக் கொண்டது அவன் காதில் விழவில்லை. ‘இன்று அவள் நிச்சயம் வருவாள்.’ நேற்றிரவு அவள் வந்ததோ வராததோ ஒன்றாகத்தான் அவன் மனதில் சந்தேகத்தில் மறந்து மடிந்தது. ஒரு கணம் அவள் வருவதும் போவதும் என்ற எண்ணம்கூட சரியெனப்படவில்லை. இவ்வகை நிலையில் வெகு நேரமானதாய் ஒரு தோற்றம். சுப்பையரின் அருகில் கௌரி தூங்கிக் கொண்டு இருக்கிறாள் விழித்துக் கொள்கிறாள். இல்லை, இதோ இருள் திரையின் பின் நின்று கொண்டு இருக்கிறாள். இந்த இருளும், எதிரில் நிற்கும் அவளுடைய முகம் காண, ஒளி கொடுக்க வில்லையே!
உள்ளூற உறைந்து தடித்ததொரு உணர்ச்சி வேகம் அவனை வெகு தூரம் உந்தித் தள்ளிவிட்டது. நிற்கும் இடத்திலிருந்து வெகு சமீபத்திலேதான் ஆரம்ப இறுதிகளின் எல்லை, மயங்கிய தோற்றம் கொடுக்கிறது. மனது வெடிக்கும் ஏக்கத்தின் புரளலில் ஏதாவது இடம் சித்திக்காதா என்ற நம்பிக்கைதான். கேசவனால் பிறிதான ஒரு பெண்ணையும் புறத்தில் பார்க்க முடியவில்லை. அகத்தில்தான், பிளவுபட்ட ஒரு பாகத்தில் கௌரியைக் காண்பான் ஒரு சமயம். அக்கணமே அழிந்து சுப்பையரின் மனைவியாக மாறி விடுகிறாள் அவள். கொஞ்சம் இரைந்தே ‘கௌரி’ எனக் கேசவன் கூப்பிட்டான்.
பின்னின்று யாரோ அவனை அணைத்ததென உணர்ந்த ஒரு இன்பம்…… ஆதாரமற்று, நினைப்பதிலும் அதிர்ந்து இடிய, வடிவமாகும் கற்பனைக் கோட்டை…… அணைத்த கை சர்ப்பமாக அன்றோ அவன் மேல் நெளிந்தது! ஆம் சர்ப்பம் ஒன்றல்ல. சர்ப்பங்கள் அவன் மேல் கற்றி ஆசை கொண்டு, அவன் முகத்தை முகர்ந்து நக்கி முத்தமிடும் ஆர்வத்தில் நீட்டி விழுங்கும் அவைகளின் நாக்குகள்… அவை ஒளிக்கதிர் ஈட்டிகளா! அவனால் அந்தப் பயங்கர அணைப்பைத் தாங்க முடியவில்லை.
பயங்கரமும் அருவருப்பாக மாறி உடம்பில் நெளிகிறது. அந்த அணைப்பினின்றும் திமிறி விடுவித்துக் கொள்ளுவதற்குத்தான் போலும் அவன் உடம்பு மயிர் கூச்செறிந்தது. தன்னை எந்நிலையினின்றும் விடுவித்துக் கொண்டான் என்பது தெரியாதெனினும் ஒரு பயங்கரக் கனவிலிருந்து விடுவிக்க விழிப்புக் கொண்டது போன்ற தொரு உணர்வை அவன் நெஞ்சம் கொண்டது. அந்த இருள் வெளியில் கலகலவென நகைத்ததென ஒரு சப்தம் கேட்க, ஒளிகொண்ட ஏதோ ஒன்று உருவாகி எட்டிய வெளியில் மிதந்து சென்றது.
காலை காண ஆரம்பித்தது.
– தேனி 1948.
![]() |
மௌனி (ஜூலை 27, 1907 - ஜூலை 6, 1985) தமிழில் சிறுகதைகளை எழுதிய எழுத்தாளர்.மணிக்கொடி இலக்கியக் குழுவைச் சேர்ந்தவர் என அடையாளப்படுத்தப்படுபவர். மொத்தம் 24 கதைகளே எழுதியிருக்கும் மௌனி, தன் கதைகளில் மனிதர்களின் அகப் பிரச்சினையையே அதிகம் எழுதியுள்ளார். மனதின் கட்டற்றட தன்மையை பூடகமான மொழியில், தத்துவ சாயலுடன் வெளிப்படுத்திய எழுத்தாளர். எஸ். மணி ஐயர் என்கின்ற இயற் பெயருடைய மௌனி, ஜூலை 27, 1907-ல் தஞ்சாவூர் மாவட்டம்,…மேலும் படிக்க... |