மந்திரி மச்சான்..!




கோவிந்தனுக்குக் குமாரலிங்கத்தை நினைக்கக் கோபம் கோபமாக வந்தது.
தான் அரசு அலுவலகம் ஒன்றில் தினக்கூலி என்றாலும் அதிகாரியிலிருந்து அத்தனை ஊழியர்களும்…..
‘இவன் அமைச்சருக்கு நெருங்கிய உறவு, சொந்தக்காரன். அவர் சிபாரிசில் வேலையில் சேர்ந்தவன். ஆளைத் தொட்டால் ஆபத்து !’ – என்று பயந்து விலகிப் போக…. இவர் மட்டும் இதை எடு, அதை எடு என்று விரட்டுகிறார்.?!
ஏதோ வயதில் மூத்தவர், வேலையில் அதிக காலங்கள் குப்பை கொட்டி வருகிறவர் என்கிற மதிப்பு, மரியாதையில் கூப்பிட்டக் குரலுக்குப் போய் சொன்ன வேலையைச் செய்தால் ரொம்பத்தான் விரட்டுகிறார்.
‘வரட்டும் !… ஆள் பலம் தெரியாமல் மோதுகிறார். கூப்பிட்டால் இதுதான் கடைசி என்று எச்சரிக்க வேண்டும் !’ என்று கறுவிக்கொண்டு அவர் அழைப்பை எதிர்பார்த்து நாற்காலியில் அமர்ந்தான்.
குமாரலிங்கத்தின் கெட்ட நேரம்… அலுவலகத்தில் நுழைந்து அறைக்குள் சென்று அமர்ந்த…. ஐந்தாவது நிமிடமே….
“கோவிந்தன் !” அழைத்தார்.
இவன் விறுக்கென்று எழுந்து வேகமாக சென்று அவர் முன் நின்றான்.
“என்ன சார்…?” விரைப்பு முறைப்பாகக் கேட்டான்.
ஆள் அதிரவில்லை. மாறாக…
“இந்த பைலை மானேஜர்கிட்ட கொண்டு போய் கொடு.!” நீட்டினார்.
“முடியாது சார். !’ ‘
“ஏன்..?’ ‘
“நான் யார் தெரியுமா..?’ ‘
“கோவிந்தன். இந்த அலுவலக தினக்கூலி..!’ ‘
“அதில்லே..!’ ‘
“அப்புறம்…?’ ‘
“நான் சுகாதார மந்திரிக்கு யாரு..?’ ‘
“தெரியல..”
“மந்திரிக்கு மச்சான்..!’ ‘
“அதனால…?’ ‘
“நான் இந்த வேலையெல்லாம் செய்ய முடியாது..”
“அப்படியா…? நீ அப்புறம் இங்கே என்ன வேலை செய்வே…?’ ‘
“வருவேன். கையெழுத்துப் போடுவேன். உட்கார்ந்திருப்பேன். போவேன்.”
“மீறி வேலை கொடுத்தால்…?’ ‘
“மச்சான்கிட்ட சொல்லி…. நீங்க கஷ்டப்படுவீங்க. தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்திடுவேன்.!’ ‘
“பரவாயில்லே. இந்த பைலை மானேஜர்கிட்ட கொண்டு கொடு…”
“குமாரலிங்கம்..!” அடித்தொண்டையில் கத்தினான்.
“என் வயசு 50. உன் வயசு 25. என்னைப் பேர் சொல்லி கூப்பிடும் அளவுக்கு வளர்ந்துட்டே . பரவாயில்லே.!
மிரட்டாதீங்க ! நான் எதுக்கும் பயப்படமாட்டேன். நீ மந்திரி மச்சானாய் இருந்தாலும், மகாராஜா மச்சானாய் இருந்தாலும் எனக்குக் கவலை இல்லே.
நீ மந்திரி மச்சான் என்கிற தைரியத்துல இன்னைக்கு ஒரு வேலையும் செய்யாமல் சும்மா உட்கார்ந்து சம்பளம் வாங்கிப் போகலாம். ஆனா… இந்த மந்திரி பதவி என்கிறது நிரந்தரமில்லாதது. முதலமைச்சர் மனசு வைச்சா எந்த நிமிடத்திலும் இவரை மாற்றலாம். அது இல்லாம….நாளைக்கே இந்த மந்திரி சபை கவிழ்ந்தால் உன் மந்திரியெல்லாம் செல்லாக்காசாய் ஆகிடுவார். இன்னைக்குப் பயப்படுற மாதிரி நடிக்கிற அத்தனை அதிகாரிகளும் அவரை மதிக்காம உன்னை ஓட ஓட விரட்டுவாங்க. அப்போ அது உங்களுக்குக் கஷ்டமா இருக்கும். இல்லே… நீ வேலையை விட்டு ஓடுறாப்போல இருக்கும்.!
அப்புறம்….கோவிந்தன். ! நாம இங்கே எந்த சிபாரிசுல, எப்படி வேலைக்கு வந்தாலும்… வேலைக்குத் தக்கபடி நடக்கனும். எந்த வேலையும் உசத்தி மட்டம் கிடையாது. அதனால் கவுரவம் பார்க்காம வேலை செய்யனும். சம்பளம் மந்திரி கொடுக்கல. மக்கள் கொடுக்குறாங்க. அவுங்க வரிப்பணத்துலதான் எல்லா அரசாங்க அதிகாரிகளும் குப்பைக் கொட்டுறாங்க.
கடைசியா ஒன்னு…மந்திரி பதவி நிரந்தரம் கிடையாது. ஆனா…அரசாங்க வேலை நிரந்தரம். இங்கே நான் அதிகாரி. நீ எனக்குக் கீழ் வேலை செய்யும் ஒரு ஊழியன். நான் நினைச்சா… உன்னை வேலையை விட்டு நீக்க, தூக்க அதிகாரம் இருக்கு. நான் சொன்னது உனக்குப் புரிலைன்னா… உன் மச்சானையேக் கேளு. அவர் உனக்குப் புரிய வைச்சாலும் சரி. வைக்காமல் என்னைத் தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்தினாலும் சரி. ஒன்னும் பிரச்சனை இல்லே..!” நிறுத்தி நிதானமாக சொல்லி அவனைப் பார்த்தார்.
அவர் சொன்னதெல்லாம் உரைக்க… கோவிந்தனுக்கு வேர்த்தது.
“மன்னிச்சுக்கோங்க சார் !” என்று பணிவாய் சொல்லி… அவர் நீட்டிய பைலை வாங்கினான்.
குமாரலிங்கம் முகத்தில் திருப்தி.