மந்திரத் தேநீர் கெட்டில்
(ஜப்பானிய சிறுவர் கதை)

ஜப்பானியர்கள் தேநீர் விரும்பிகள் என்பது மட்டுமல்ல. தேநீர் அவர்களின் கலாச்சாரத்தில் முக்கியமான அங்கம் வகிக்கக் கூடியது. புத்துணர்ச்சி பானம் என்பதற்கு அப்பால், அவர்களின் பண்பாட்டில் அதற்கு சடங்கு முக்கியத்துவமும், ஆன்மிகச் சிறப்பும் உண்டு.
தேநீர் விருந்து ஜப்பானியர்களின் பிரசித்திபெற்ற சடங்கு. விருந்தினர்களுக்குத் தேநீர் அளிப்பதற்காகவே அவர்கள் தமது வீட்டுக்கு வெளியே தனியாக புற வீட்டைக் கட்டியிருப்பார்கள். அங்கே விருந்தினர்களைக் குறிப்பிட்ட முறையில் வரவேற்று உபசரித்து, சடங்கார்த்தமான முறையில் அவர்களுக்குத் தேநீர் வழங்குவதும், விருந்தினர்கள் அதே விதமாக உரிய சடங்கார்த்தமான முறைகளில் விருந்தை ஏற்று நன்றி கூறி தேநீர் பருகுவதும் ஜப்பானிய மரபு வழக்கம். இதில் விருந்தோம்பல், பண்பாடு, கலை, ஆன்மிகம் உள்ளிட்ட பன்முகத்தன்மைகள் உள்ளார்ந்திருக்கின்றன.
ஜப்பானியத் தீவுகள் ஒன்றில் தேநீரை மிக விரும்புகிற வயோதிக ஜென் துறவி ஒருவர் இருந்தார். அவர் எப்போதும் தனக்கான தேநீரைத் தானே தயாரித்துக்கொள்வார். அவரது பாத்திரம் பண்டங்களை வேறு யாரும் புழங்குவதற்கு அனுமதிக்கவும் மாட்டார்.
ஒரு நாள் அவர் சந்தையில் பழைய பொருட்களை இரண்டாவது கையாக விற்கும் கடையில் அழகான தேநீர் கெட்டில் ஒன்றைப் பார்த்தார். அது மிகவும் பழையதாகவும், துருப் பிடித்தும் இருந்தது. ஆனால் ஜென் துறவி, துருவுக்குப் பின்னால் இருக்கும் அழகைக் காணும் கண்கள் கொண்டிருந்தார். எனவே, அவர் அதை வாங்கிக்கொண்டு தனது ஆலயத்திற்குத் திரும்பினார்.
கெட்டிலில் உள்ள துருவை முற்றிலுமாக நீக்கித் துடைத்துப் பளபளப்பாகினார். பிறகு அந்த ஆலயத்தில் அவரோடு வசித்துக்கொண்டிருக்கும் இரு மாணவச் சிறார்களை அழைத்தார்.
“இன்றைக்கு சந்தையிலிருந்து எவ்வளவு அருமையான கெட்டிலை வாங்கி வந்திருக்கிறேன் பார்த்தீர்களா!” என்று அவர்களிடம் அதைக் காண்பித்துவிட்டு, “நான் இதில் இப்போது நம் அனைவருக்கும் சுவை மிகுந்த தேநீரைத் தயாரிக்கப் போகிறேன்!” என்றார்.
மாணவர்கள் இருவரும் காத்திருக்க, அவர் கெட்டிலை விறகடுப்பில் வைத்து, தண்ணீரை ஊற்றிச் சூடுபடுத்தினார். கெட்டில் மெல்ல மெல்லச் சூடாகிக்கொண்டிருந்தது. அதில் இருக்கும் தண்ணீர் கொதிக்கத் தொடங்கியது. அப்போது முற்றிலும் எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அந்தக் கெட்டிலின் ஒரு புறம், அணிலைப் போல் இருக்கிற, பேட்ஜர் என்கிற பிராணியின் தலையும், மறுபுறம் மயிரடர்ந்த வாலும், அடிப் பகுதியில் சிறிய நான்கு கால்களும் முளைத்தன.
“அய்யய்யோ….! மிகவும் சூடாக இருக்கிறதே…!” கெட்டில் கூக்குரலிட்டது. “நான் தீப்பிடித்து எரியப்போகிறேன்!” என்றபடி அடுப்பின் மீதிருந்து தப்பித்துக் கீழே குதித்து, அறை முழுதும் தனது பேட்ஜர் கால்களால் ஓடத் தொடங்கியது.
கிழத் துறவியும், மாணவச் சிறுவர்களும் மிகுந்த ஆச்சரியம் அடைந்தனர்.
“அது வெளியே ஓடிவிடப்போகிறது! அதைப் பிடியுங்கள், பிடியுங்கள்!’ துறவி மாணவர்களை ஏவினார்.
ஒரு மாணவன் விளக்குமாறையும், இன்னொரு மாணவன் அடுப்புக் கங்கை எடுக்கும் இடுக்கியையும் எடுத்துக்கொண்டு கெட்டிலைத் துரத்தினர். அவர்கள் அதைப் பிடித்தபோது பேட்ஜர் தலையும், வாலும், கால்களும் மறைந்து மீண்டும் சாதாரணமான கெட்டிலாக ஆகிவிட்டது.
“மிக விசித்திரம்! இது பில்லி சூனியக் கெட்டிலாக இருக்கவேண்டும். இது போன்ற துன்மார்க்கப் பொருட்கள் எதையும் கோவிலுக்குள் வைத்திருக்கக் கூடாது. நிச்சயமாக வெளியேற்றப்பட வேண்டும்!” வயோதிகத் துறவி சொன்னார்.
அப்போது ஓட்டை, உடைசல்களை வாங்கும் வீண்பொருள் வியாபாரி கோவில் பக்கமாக வந்தார். துறவி அவரை அழைத்து தேநீர்க் கெட்டிலை அவரிடம் கொடுத்து, “இதை நான் விற்க விரும்புகிறேன். இதற்கு என்ன விலை வருமோ, நீயே பார்த்துப் போட்டுக் கொடு!” என்றார்.
வீண்பொருள் வியாபாரி தேநீர் கெட்டிலைத் தராசில் எடை பார்த்தார். துறவி அதை வாங்கி இருந்ததைக் காட்டிலும் பல மடங்கு குறைவான விலையே கொடுத்தார்.
பேரம் ஏதுமின்றி சல்லிசான விலைக்கு அந்தக் கெட்டில் கிடைத்ததால் அவர் உற்சாகத்தோடு சீழ்க்கையடித்தபடியே தன் வீட்டிற்குச் சென்றார்.
அன்று இரவு அவர் அமைதியாகத் தூங்கிக்கொண்டு இருக்கையில், “வீண்பொருள் வியாபாரி,… வீண்பொருள் வியாபாரி…!” என்று யாரோ அழைக்கும் குரல் காதருகே கேட்டது.
கண் திறந்து பார்த்தார். “யார் என்னை அழைப்பது?” என்று கேட்டபடியே விளக்கின் சுடரை ஏற்றினார்.
பேட்ஜர் தலை, மயிரடர்ந்த வால் மற்றும் குட்டையான நான்கு கால்களுடன் தேநீர் கெட்டில் அவரது படுக்கையில் தலையணைக்கு மேல் நின்றுகொண்டிருந்தது.
வீண்பொருள் வியாபாரி அதைக் கண்டு அதிசயித்து, “வயோதிகப் பூசாரியிடம் இன்று நான் வாங்கி வந்த தேநீர் கெட்டில்தானே நீ?” என்று கேட்டார்.
“ஆமாம்! ஆனால் நான் சாதாரணக் கெட்டில் அல்ல. மாறுவேடத்தில் இருக்கும் மாந்தரீக பேட்ஜர். எனது பெயர் பும்புகு. அதாவது நல்லதிர்ஷ்டம்
என்று அர்த்தம். வயோதிகத் துறவி என்னை அடுப்பில் வைத்து எரிக்கப் பார்த்தார். அதிலிருந்து தப்பிக்கவே அவரிடமிருந்து ஓடினேன். ஆனால் நீ என்னிடம் இதமாக நடந்துகொண்டாய். என்னை அடுப்பில் வைக்கவில்லை. நான் உன்னோடு தங்கியிருந்து, நீ பணக்காரனாக ஆவதற்கு உதவுவேன்!”
“கேட்பதற்கே வினோதமாக இருக்கிறது!” என்ற வீண்பொருள் வியாபாரி, “நான் செல்வந்தன் ஆவதற்கு நீ எப்படி உதவ முடியும்?” எனக் கேட்டார்.
“அதற்கு ஓர் அற்புதமான யோசனை வைத்திருக்கிறேன்!” தனது மயிரடர்ந்த பேட்ஜர் வாலை உயர்த்தி வளைத்து அசைத்தபடியே கெட்டில் கூறியது. “நான் பல விதமான கழைக்கூத்து வித்தைகளைச் செய்வேன். நீ என்னை வைத்துக் காட்சி நடத்தி, நுழைவுச் சீட்டுகளை விற்று, நிறையப் பணம் சம்பாதிக்கலாம்!”
அது நன்மை பயக்கும் யோசனையாக வீண்பொருள் வியாபாரிக்குத் தோன்றியது. மறு நாளே அவர் தன் முற்றத்தில் ஒரு சிறிய அரங்கை நிர்மாணித்தார். அதற்கு வெளியே ‘நல்லதிர்ஷ்டத்தின் மந்திரத் தேநீர் கெட்டில் பும்புகு மற்றும் அதன் அசாதாரணமான வித்தைகள்’ என அறிவிப்பை எழுதி ஒட்டினார்.
அதிசயக் கெட்டிலையும் அதன் வித்தைகளையும் கேள்விப்பட்ட மக்கள், குடும்பத்தோடு ஆர்வமாகக் காட்சிக்குக் குழுமினர். ஒவ்வொரு நாளும் பார்வையாளர் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. முக்கியமாக குழந்தைகளும் பெண்களும் பும்புகுகின் ரசிகர்களாக ஆகி, மீண்டும் மீண்டும் காட்சியைக் காண வந்தனர்.
அரங்கு நிறைந்த பார்வையாளர்கள் ஆன பின் வீண்பொருள் வியாபாரி பறையை முழக்குவார். பும்புகு மேடைக்கு வந்து நடனமாடவும், பாடவும் பல்வேறு விதமான கழைக்கூத்துகளை நிகழ்த்தவும் செய்யும். மக்கள் அதைக் கண்டு களிப்பார்கள். அந்தக் காட்சியிலேயே மக்களால் மிகவும் விரும்பப்பட்டது, உயரமாக இழுத்துக் கட்டப்பட்ட கயிற்றின் மீது பும்புகு ஜப்பானியப் பெண்கள் போல ஒரு கையில் காகிதக் குடையைப் பிடித்துக்கொண்டு, மறு கையில் விசிறியை வீசியவாறு ஒயிலாக நடந்து செல்வதுதான். இறுதி நிகழ்ச்சியாக நடத்தப்படும் இந்த வித்தையைக் கண்டு மக்கள் கைதட்டியும், சீழ்க்கை அடித்தும் ஆரவாரம் செய்வார்கள்.
ஒவ்வொரு காட்சி முடிந்ததும் வீண்பொருள் வியாபாரி பும்புகுவிற்கு சுவையான அரிசிக் கேக்கை உண்ணக் கொடுப்பார்.
அதிசயக் கெட்டிலின் வித்தைக் காட்சிக்கு ஏராளமான நுழைவுச் சீட்டுக்களை விற்று, வீண்பொருள் வியாபாரி பணக்காரராக ஆகிவிட்டார்.
ஒரு நாள் அவர் கெட்டிலிடம், “தினந்தோறும் தனி ஒருவனாகவே நீ நிறைய வித்தைகளைச் செய்து தளர்ந்துவிட்டாய். எனக்கும் போதுமான அளவு பணம் கிடைத்துவிட்டது. இனியுள்ள காலத்தை நீ அமைதியாகக் கழிக்கும்படி திரும்பவும் உன்னை ஆலயத்திற்கே கொண்டு சென்று கொடுத்து விடலாம் எனத் தீர்மானித்திருக்கிறேன்” என்றார்.
“ஆமாம், நானும் சற்று தளர்வாகத்தான் இருக்கிறேன். ஆனால் ஆலயத்தில் நான் அமைதியாகக் காலம் கழிக்க இயலுமா என்பது தெரியவில்லை. என்னை மீண்டும் அடுப்பில் வைத்து விட்டால் என்ன செய்வது? அதேபோல, துறவி எனக்கு சுவையான அரிசிக் கேக்குகளைத் தராவிட்டால் என்ன செய்வது?”
“அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்!”
மறுநாள் காலையில் வீண்பொருள் வியாபாரி பும்புகுவை எடுத்துக்கொண்டு ஆலயத்திற்குத் திரும்பச் சென்றார்.
அங்கே துறவியைச் சந்தித்த அவர், அந்த அதிர்ஷ்டக் கெட்டிலால் தனக்கு வளமான வாழ்க்கை அமைந்தது பற்றிக் கூறிவிட்டு, “மனிதர்கள் அமைதியாக தவ வாழ்க்கை வாழ்வதற்கு இங்கே வருவார்கள். அதைப் போல பும்புகுவும் தனது இறுதிக் காலத்தை அமைதியாகக் கழிக்க நீங்கள் இடம் கொடுக்க வேண்டும் என்று தாழ்மையாகக் கேட்டுக்கொள்கிறேன். இரண்டு முக்கியமான காரியங்கள். கெட்டிலை நீங்கள் மீண்டும் அடுப்பில் வைத்து சூடுபடுத்திவிடக் கூடாது. அதோடு, அதற்கு சாப்பிடுவதற்கு தினமும் அரிசிக் கேக்கைக் கொடுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
“அப்படியே செய்கிறேன்! பும்புகு உண்மையிலேயே அதிர்ஷ்டம் தரக்கூடிய மந்திரக் கெட்டில்தான். அதற்கு உரிய மதிப்பு கொடுத்து, எங்களின் அரிய கலைப் பொருள் காட்சியகத்தில் வைத்துவிடுவோம். அதை நான் மறுபடியும் அடுப்பில் வைக்க மாட்டேன்.” துறவி வாக்குறுதியளித்தார்.
அவ்வாறே பும்புகு கோவிலில் உள்ள கலைப் பொருள் காட்சியகத்தில் வைக்கப்பட்டு, தினமும் அதற்கு அரிசிக் கேக் உணவாகக் கொடுக்கப்பட்டது.
இப்போதும் அது அந்த ஆலயத்தில் இருப்பதாகவும், அதுவும் தியான வாழ்வில் ஈடுபட்டுவருவதாகவும் சொல்லப்படுகிறது.
![]() |
இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க... |