மந்தாரவதி கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 2, 2026
பார்வையிட்டோர்: 566 
 
 

(1958ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரண்டாம் பகுதி: 32 பதுமைகள் சொல்லிய கதைகள்

2-வது மதனாபிஷேகவல்லிப் பதுமை சொல்லிய வேதாளக் கதைகள்

வேதாளம் சொல்லிய புதிர் கதைகள்

1.2 நீதிவேந்தன் கதை | 2. மந்தாரவதி கதை | 3. மூன்று ரசிகர்கள் கதை

விக்கிரமாதித்த மகாராஜன் மறுபடி யும் வேதாளத்தை முருங்க மரத்தி லிருந்து பிடித்துக் கட் டிக் கொண்டு வரும் பொழுது அது பின் வருமாறு கதை சொல்ல ஆரம்பித்தது.

யமுனா நதிக் கரையிலே பிரம்ம ஸ்தலம் என்று ஒரு பிரதேசம் இருக்கிறது. அங்கே அக்னிஸ்வாமி என்ற பிராமணன் ஒருவன் இருந்தான். அவன் வேதங்கள் முழுமையும் அறிந்தவன். அவனுக்கு மந்தாரவதி என்னும் அழகிய பெண் ஒருத்தி இருந்தாள். அவளைச் சிருஷ்டித்த பிரம்மனுக்கு அவனே சிருஷ்டித்த தேவமாதரின் அழகுகூட அவள் அழகுக்கு ஈடாகத் தோன்றவில்லை. அவள் யுக்த வயதை அடைந்த சமயம் கன்யாகுப்ஜத்திலிருந்து அதேபோல எல்லா அம்சங்களிலும் நிறைந்த மூன்று பிராமண இளைஞர்கள் வந்து சேர்ந்தார்கள். அவர்களில் ஒவ்வொருவனும் அந்தப் பெண்ணைத் தனக்கே மணம் செய்து கொடுக்க வேண்டுமென்று அவள் தகப்பனை வேண்டினான். அவளை வேறு யாருக்காவது கொடுத்தால் தன் உயிரை விட்டு விடுவதாகவும் ஒவ்வொருவனும் கூறினான். அவளை அவர்களுள் யாராவது ஒருவனுக்கு மணம் செய்து கொடுத்தால் மற்ற இருவரும் இறந்து போய் விடுவார்களோ என்று எண்ணி அக்னிஸ்வாமி, யாருக்கும் அவளை மணம் செய்விக்கவில்லை. பெண்ணும் கன்னியாகவே இருந்தாள். அம் மூன்று இளைஞர்களும் சந்திரமண்டலத்தையே நோக்கி நின்று அதன் கிரணங்களால் வாழும் சகோதரப் பக்ஷியைப் போல அவள் முகத்தையே நோக்கிக் கொண்டு இரவும் பகலும் கழித்து வந்தனர்.

இப்படி இருக்கையில் திடீரென்று ஒரு நாள் மந்தாரவதிக்குச் சுரநோய் கண்டது; அது அவள் உடலையே தகித்தது. கடைசியில் அவள் உயிர் துறந்தாள். அவளை இழந்த இளைஞர் மூவரும் உடலை நன்றாக வருத்தத்தால் நிலை குலைந்தனர். அவள் அலங்கரித்து மயானத்துக்கு எடுத்துச் சென்று தகனம் செய்தனர். அம்மூவருள் ஒருவன் சுடுகாட்டிலேயே ஒரு குடிசை போட்டுக் கொண்டான். பிச்சை எடுத்து கிடைத்ததை உண்டு அவளைச் சுட்டு எரித்த சாம்பலையே படுக்கையாகக் கொண்டு காலம் கழித்து வந்தான். மற்றொருவன் அவள் அஸ்திகளைக் கொண்டு கங்கையில் சேர்ப்பிக்கப் போய்விட்டான். மூன்றாமவனோ துறவியாக மாறித் தேச சஞ்சாரம் செய்யப் புறப்பட்டான்.

துறவியாக இருந்தவன் இவ்வி தம் ஒவ்வொரு ஊராகச் சுற்றி வரும்போது வஜ்ரலோகம் என்னும் கிராமத்தை அடைந்தான். அங்கே ஒரு பிராமணன் வீட்டில் சாப்பிடச் சென்றான். அவன் சாப்பிடும் போது ஒரு குழந்தை அழ ஆரம்பித்தது. அதை சமாதானப்படுத்துவதற்காகச் செய்த முயற்சிகள் எல்லாம் வீணாகவே, வீட்டுக்காரி கோபம் தாங்காமல் அந்தக் குழந்தையைத் தூக்கி நெருப்பில் எறிந்து விட்டாள். நெருப்பில் விழுந்தவுடனே குழந்தை வெந்து சாம்பலாயிற்று.

விருந்தாளியாக வந்திருந்த துறவிக்கு இதைக் கண்டதும் மயிர் கூச்செறிந்தது. “ஐயய்யோ! நான் ஒரு பிரம்ம ராக்ஷஸி வீட்டுக்கன்றோ வந்து விட்டேன். இவ்விடத்தில் ஆகாரம் சாப்பிடுவது பிரத்யக்ஷமான மஹா பாபமாயிற்றே? நான் இங்கே சாப்பிடமாட்டேன்” என்று அவன் அழுது கதறிக் கொண்டே எழுந்தான்.

கிரஹஸ்தன் உடனே துறவியை நோக்கி, ”ஸ்வாமி என் மந்திர சக்தியின் வலிமையால் உடனே குழந்தையை உயிர்ப்பிக்க வைத்துவிடுகிறேன். மந்திரத்தை உச்சரித்தவுடன் எழுந்து விடுவான்” என்று கூறினான். உடனே அவன் மந்திரப்புத்தகத்தை எடுத்து வந்து, கையில் ஒரு பிடி மண் எடுத்து வைத்துக் கொண்டு சஞ்சீவி மந்திரத்தை அவன்மீது உச்சாடனம் செய்தான். பிறகு அவன் அந்த மண்ணை சாம்பல் மீது வாரி இறைத்தவுடன், முன் இருந்தபடியே பையன் பிழைத்து எழுந்தான்.

இதைக் கண்ட துறவி மனச் சமாதானமடைந்து அங்கே உணவு கொண்டான். கிரஹஸ்தனும் அந்தப் புத்தகத்தைப் பரண் மீது வைத்துவிட்டான். துறவி அங்கேயே சாப்பிட்டு விட்டுத் தங்கினான். நள்ளிரவில் பிராமணன் அயர்ந்து தூங்கும் போது, மெதுவாகப் பூனை போல எழுந்து சென்று புத்தகத்தை எடுத்துக் கொண்டு வெளிக் கிளம்பினான் துறவி. அதைக் கொண்டு தன் காதலியை உயிர்ப்பித்து விடவேண்டுமென்ற ஆசை அவன் உள்ளத்தில் பதிந்திருந்தது.

வெளியே வந்த துறவி, இரவு பகலாக நடந்து தன் காதலி யைச் சுட்டு எரித்த மயானத்தை அடைந்தான். அங்கே சாம்பல் மீது குடிசையைக் கட்டி காலம் கழித்து வந்தவனைக் கண்டான். கங்கைக்குச் சென்றிருந்தவனும் அச்சமயம் அங்கு அஸ்திகளைக் கொண்டு வந்திருந்தான். ”நண்பா, இந்தக் குடிசையைப் பிரித்து விடு. அஸ்திகளைச் சாம்பலில் போட்டுவிட்டு என் மந்திர வலி மையால் சாம்பலிலிருந்து மந்தாரவதி என்கிற பெண்ணைப் பிழைப்பித்து விடலாம்” என்று சொல்லி குடிசையைப் பிரிக்கச் செய்தான். பிறகு புஸ்தகத்தைப் பிரித்து மந்திர உச்சாடனம் செய்து பிடி மண்ணை எடுத்துச் சாம்பல் மீது வாரியிறைத்தான். மந்தாரவதியும் உடனே பிழைத்து எழுந்தாள். அவள் உடல் புடம் போட்ட தங்கம் போல் ஜொலித்தது.

இவ்விதம் பிழைத்தெழுந்த அவள் அழகைக் கண்ட மூவருக்கும் அவள் மீது தாங்க முடியாத மையல் ஏற்பட்டது. யார் அவளை மணம் செய்து கொள்ளுவது என்பதைப் பற்றி அவர்களுக்குள் பெரும் விவாதம் ஏற்பட்டது. ஒவ்வொருவனும் அவள் தன்னால்தான் பிழைத்தெழுந்தாள் என்று வாதாடினார்கள்.

“என் மந்திர வலிமையாலே தான் அவள் உயிர் பெற்றாள்” என்றான் ஒருவன். “புண்ணிய தீர்த்தங்களின் மகிமையாலேதான் அவள் உயிர்பெற்றெழுந்தாள்” என்றான் அஸ்திகளைக் கொண்டு வந்தவன். “ஆகவே எனக்குத்தான் மனைவியாவாள்” என்று அவன் வாதித்தான். “நான் தான் அவள் சாம்பலைக் காத்து வந்து அவளைப் பிழைக்கச் செய்தேன். ஆகவே எனக்கே உரியவள்” என்றான் மூன்றாமவன்.

இதைக் கூறிவிட்டு வேதாளம், ”கதைகேட்ட மகாராஜனே! இப்போது அவர்களுடைய விவாதத்தின் தீர்ப்பு என்ன? அவள் யாருக்கு மனைவி? ராஜனே! தெரிந்து கொண்டு சொல்லா விட்டால் உன் தலை அனேக சுக்கலாகச் சிதறிவிடும்” என்றது.

உடனே விக்கிரமாதித்தன் பின்வருமாறு சொன்னான்: “எத்தனையோ கஷ்டங்களை அனுபவித்திருந்தாலும், மந்திர வலி மையால் அவளைப் பிழைக்கச் செய்தவன் அவள் புருஷனாக மாட்டான்: அவளுடைய தந்தையே ஆவான்! எலும்புகளைச் சுமந்து கங்கைக்குச் சென்றவன் மகனாவான். அவள்மீது கொண்டுள்ள ஆசையால் அவள் சாம்பலை விட்டுப் பிரியாமல் மயானத்திலேயே தங்கித் தபசு செய்து அதனைத் தழுவிக் கிடந்தவனே அவள் புருஷனாவான்!”

இவ்விதம் விக்கிரமாதித்தன் தன் மௌனத்தைக் கலைத்துக் கூறியவுடனே. வேதாளம் அவன் தோளை விட்டுக் கிளம்பி மறைந்து பழையபடி தன் இடத்திற்கே சென்றது. விக்கிரமாதித் தனும் தபசிக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதற்காக அதைத் தேடிக் கிளம்பினான்.

மன உறுதி கொண்டவர்கள், தாங்கள் எடுத்த காரியத்தை உயிர் துறக்க நேரிட்டாலும் நடுவில் கைவிடாமல் செய்து முடித்தே தீர்வார்கள் அன்றோ?

(தமிழ் பாடத்தில் மந்தாரவதியின் பெயர் சின்னியாள் எனவும், அவளுடைய தந்தையின் பெயர் சடகோபியன் எனவும் காணப்படுகின்றன)

– தொடரும்…

– விக்கிரமாதித்தன் கதைகள், வடமொழி மூலங்களைப் பரிசோதித்து எழுதியவர்: ராசு, தமிழ்ப் பாடங்களைப் பரிசோதித்து எழுதிவர்: அரு.ராமநாதன், முதற்பதிப்பு: ஜனவரி 1958, பிரேமா பிரசுரம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *