மதிவாணியின் மறுபிறவி!
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 7,973
தூய்மையான கங்கை ஆறு. அதிகாலைப் பொழுது. பறவைகளது குரல். கரையில், பசுக் கன்றுகள், தாய்ப் பசுக்களை அழைக்கும் ஒலி. பதில் குரல் கொடுக்கும் பசுக்கள். இந்தச் சூழலில், இறைவனை தியானித்தபடி இடுப்பளவு நீரில் நின்ற கௌதம முனிவர், கதிரவனை நோக்கிக் கரம் குவித்து அனுஷ்டானம் செய்தார். அப்போது அவர் உடலில் ஏதோ ஒன்று தட்டுப்பட்டது. நிஷ்டை கலைந்த அவர் கண்ணில் பெண் ஒருத்தியின் உடல் தென்பட்டது. சட்டென்று அந்தப் பெண்ணை இழுத்துக் கரையில் போட்டார்.
சற்று நேரத்துக்குப் பிறகு கண் விழித்த அவள், கௌதம முனிவரைக் கண்டதும் பதறி எழுந்து, அவர் காலடியில் விழுந்து அழத் தொடங்கினாள்.
‘‘தீர்க்க சுமங்கலி பவ. பெண்ணே! எழுந்திரு. கலங்காதே’’ என்றார் முனிவர்.
‘‘ஸ்வாமி! மாங்கல்யம் கழுத்தில் ஏறிய சில மணித் துளிகளில் கணவனைப் பறிகொடுத்த என்னைப் பார்த்து, ‘தீர்க்க சுமங்கலி பவ’ என்கிறீர்களே?’’ என்று கேட்டாள்.
‘‘பெண்ணே! நீ யார்? உனது சோகத்துக்குக் காரணம் என்ன?’’ என்று கேட்டார் முனிவர்.
அந்தப் பெண் தன்னைப் பற்றி விவரித்தாள்…
புனித நகரமான காசியில் அன்று மன்னர் மகள் மதிவாணியின் சுயம்வரம். பல நாட்டு மன்னர்களும் மண்டபத்தில் குழுமியிருந்தனர். அவர்களிடையே, மகத நாட்டு அரச குமாரன் திரிலோசனன் முழு மதி போல் பிரகாசித்தான்.
அந்த மன்னர்களைப் பார்த்து, ‘‘என் அருமை மகள் மதிவாணியின் சுயம்வரத்துக்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். இந்தக் கூண்டில் அடைபட்டுள்ள சிங்கத்தை அடக்கி வெற்றி பெறுபவருக்கு என் புதல்வி மாலை சூட்டுவாள்!’’ என்று அறிவித்தார் காசி மன்னர்.
‘கூண்டுக்குள் உள்ள சிங்கத்தை அடக்குவதா?’ என்று பல அரச குமாரர்கள் சற்று பின்வாங்கினர். எந்த அரச குமாரர் முதலில் சென்று, சிங்கத்தின் வாயில் சிக்கி பலியாகப் போகிறாரோ?’ என்று ஒட்டு மொத்த அரண்மனையும் திகைப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. சில நிமிடங்களுக்கு அங்கே பெரும் அமைதி நிலவியது.
அப்போது அனைவரும் பிரமிக்கும் வண்ணம் ஆசனத்தை விட்டு எழுந்தான் திரிலோசனன். கூண்டை நோக்கி மிடுக்குடன் நடந்தான். அதன் அருகே நின்று, கைகளைக் கூப்பி இறைவனைப் பிரார்த்தித்தான். பின்னர் கூண்டின் கதவைத் திறந்து உள்ளே புகுந்தான். மதிவாணி உட்பட அரண்மனையில் உள்ள அனைவரும் ‘அடுத்து என்ன நடக்குமோ?’ என்று பீதியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
பிடரியைச் சிலிர்த்துக் கொண்டு சிங்கம் திரிலோசனன் மீது பாய்ந்தது. சுமார் அரை மணி நேரப் போராட்டத்துக்குப் பின் அந்த சிங்கத்தை அடக்கித் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான் திரிலோசனன். சபையில் பெருத்த ஆரவாரம்.
அடுத்த சில மணித் துளிகளில் திரிலோசனின் அருகே மணக்கோலத்தில் அமர்ந்திருந்தாள் மதிவாணி. வேத கோஷங்கள் முழங்க, மகிழ்ச்சி ஆரவாரத்துக்கு இடையே, மதிவாணியின் சங்குக் கழுத்தில் திருமாங்கல்யம் பூட்டினான் திரிலோசனன். அன்றைய மாலை நேரத்தில் மனைவி மதிவாணியுடன் சென்று கங்கையில் நீராடி, காசி விஸ்வநாதரையும் விசாலாட்சியையும் வணங்கினான் திரிலோசனன். அவன் மீது பொறாமை கொண்டான், சுயம்வரத்தில் தோற்றுப் போன ஒரு மன்னன். இவன், கங்கைக் கரையில் இருந்த திரிலோசனின் பின்புறம், அவன் அறியாமல் நெருங்கி வந்து, வாளால் அவன் தலையை வெட்டினான். மாண்டான் திரிலோசனன்.
இந்தச் செய்தி கேட்டு காசி நகரமே துன்பத்தில் ஆழ்ந்தது. திருமணமான அன்றே கணவனை இழந்த துர்பாக்கியசாலி மதிவாணி அழுது புலம்பினாள். எவராலும் அவளைத் தேற்ற முடியவில்லை. நள்ளிரவு வேளையில் கங்கைக் கரையை அடைந்த அவள், ‘‘தாயே… கங்கையம்மா, கணவர் சென்ற இடத்துக்கே நானும் செல்ல விரும்புகிறேன். என்னை ஏற்றுக் கொள் தாயே!’’ என்று கதறியவாறு கங்கையில் பாய்ந்தாள்.
‘‘முனி சிரேஷ்டரே, கங்கையின் ஸ்நானம் பாவங்களைத் தொலைக்கும் என்பார்கள். ஆனால், என்னை ஏற்றுக் கொள்ளாமல் கங்கை ஏன் நிராகரித்தாள்? ஸ்வாமி, இப்படிப்பட்ட என்னை ‘தீர்க்க சுமங்கலி பவ!’ என்று வாழ்த்துவது எப்படிப் பொருந்தும்?’’
‘‘பெண்ணே… வருந்தாதே! காரணம் இல்லாமல் எந்தக் காரியமும் நடை பெறாது. எனவே, மனதை ஒருமுகப்படுத்தி தவம் செய்து ஆத்மசாந்தி அடைவாயாக! உன் கழுத்தை அலங்கரிக்கும் திருமாங் கல்யத்துடன் நீ மறுபிறவி எடுப்பாய். திரிலோசனன் அப்போது சூரிய குலத்தில் பிறப்பான். உனது மாங்கல்யம் அப்போது அவன் கண்களுக்கு மட்டுமே தெரியும். அதன் பின்னர் நீங்கள் இணை பிரியாமல் வாழ்வீர்கள்!’’ என்று கௌதம முனிவர் திருவாய் மலர்ந்தருளினார்.
அதன் பின் மதிவாணி அவரது ஆசிரமத்திலேயே தங்கித் தவமியற்றி ஆவி பிரிந்தாள். அவளே மறுபிறப்பில் சந்திரமதி எனும் பெயரில் பிறந்தாள். திரிலோசனன் அரிச்சந்திரனாகப் பிறந்து சுயம்வரத்தில், சந்திரமதியின் திருமாங்கல்யத்தைக் கண்டு கூறினான். இவ்வாறுதான் சந்திரமதி அரிச்சந்திரனை மணம் புரிந்தாள்.
– நவம்பர் 2007