கதையாசிரியர்:
தின/வார இதழ்: கலைமகள்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 4, 2024
பார்வையிட்டோர்: 2,011 
 
 

(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“லீமா!”

அவள் அசையவில்லை. சந்திரநாத் அவளைப் பார்த்தபடியே நின்றான். நிமிஷங்கள் ஒவ்வொன்றாகக் கழிந்துகொண்டே இருந்தன. அவள் தலையில் முக்காடு விலகி ஒரு புறத்திலே கிடந்தது. முதல் நாள் வாரிவிட்ட கூந்தல் கலைந்து பறந்து கொண்டிருந்தது. முகத்தை மேசை யோடு சேர்த்தபடி கவிழ்ந்திருந்தாள். ஆயினும் அவள் விம்மி விம்மி அழுது கொண்டிருப்பது நன்றாகவே தெரிய வந்தது. சந்திரநாத் மறு படியும் “சலீமா!” என்று கூப்பிட்டான். அப்பொழுது அவனுடைய குரலி லும் ஒரு வித கரகரப்பு தட்டியது. சில நிமிஷங்கள் கழிந்தன. அவள் அசையாமல் அப்படியேதான் இருந்தாள். மூன்றாம் முறையாகவும் கூப்பிட்டுக் கொண்டு அவன் மெல்ல மெல்ல நடந்து அவளுக்கரு கில் வந்தான். அப்பொழுதுதான் அவள் தலையைத் தூக்கினாள். கண்ணீர் அவளது பொன் போன்ற கன்னங்களில் கோடு கிழித்து ஓடிக்கொண் டிருந்தது. அதைப் பார்த்தவுடன் அவனும் பேசமுடியாமல் அழுபவன் போலவே நின்றான். சிறிது நேரம் சென்றது. பிறகு அவள் அவனைப் பார்த்து ஒருவித ஏளனம், ஆவேசம் எல்லாம் கலந்த குரலில் இதைக் கேட்டாள்.

“உங்கள் ஹிந்து சமூகத்திற்கு மேலும் மேலும் வெற்றிக்கு மேல் வெற்றி கிடைக்கிறது. இல்லையா?”

சந்திரநாத் ஒன்றுமே பேசவில்லை . அவள் அதே தொனியில் மறுபடியும் பேசினாள். ஆனால் விஷயம் வேறொன்றாக இருந்தது.

“என்னை எதற்காக இங்கே கொண்டு வந்து வைத்திருக்கிறீர்கள்?”

இப்படியாக ஒரு கேள்வி கிளம்பும் என்று அவன் கனவிலும் எதிர்பார்க்கவில்லை . அதனால் சிறிது நேரம் யோசித்துக்கொண்டே நின்றுவிட்டு பிறகு சொன்னான்.

“உன் தந்தையும் இதையே விரும்பியிருந்தார். என் கடமையும் இது தானே.”

அவள் மேலும் பேச விரும்பாதவள் போலவே மௌனமாக இருந்தாள். சந்திரநாத் அவளைப் பார்த்தபடியே அங்குமிங்குமாக நடந்துகொண்டிருந்தான். சிறிது நேரம் சென்றதும் அவள் மீண்டும் ஆரம்பித்தாள். அதற்குள்ளாக மறுபடியும் அவளுடைய கண்கள் கலங்கி விட்டன.

“அந்தப் பக்கத்தில் வசிக்கும் நம் ஜனங்கள் எல்லோருமே கொல்லப்பட்டு விட்டார்களா?”

“எனக்கு நிச்சயமாக ஒன்றுமே தெரியாது, சலீமா. நான் இங்கே வருவதற்கு முன்பே எல்லாம் நடந்துவிட்டது. உன் தந்தையார் உன் விஷயமாக அறிவித்திருந்தாராம். அதைக் கேட்டதுமே புறப்பட்டு உன்னிடம் வந்தேன்.”

அவள் மறுபடியும் விம்மி விம்மி அழத் தொடங்கினாள். அதைப் பார்த்ததும் அவன் கிட் டச் சென்று, “சலீமா, எப்படியோ எல்லாம் நடந்து விட்டது. வீணாக அழாதே. அழுதுதான் வரப்போவது என்ன? நீ ஒரு குழந்தையா?” என்று ஆறுதல் சொன்னான்.

அவளுடைய கண்களும் முகமும் சிவந்து பொங்கி இருந்தன. அடிக்கடி பெருமூச்சு விட்டுக்கொண்டு சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.

அப்போது வேலைக்காரி ஒருத்தி ஒரு தட்டில் ஏதோ உண்ணுவதற்கும் குடிப்பதற்கும் கொண்டு வந்து அவள் முன்னிலையில் வைத்து விட்டுச் சென்றாள். அவளை இடைமறித்து, “இது யாருக்காக?” என்று சலீமா கேட்டாள். அந்த வேலைக்காரி ஒன்றுமே பேசாது சந்திர நாத்தையும் அவளையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

அப்போது அவன் பதில் சொன்னான். “வீணாக உன்னையே வெறுத்துக் கொள்ளு கிறாய். நீ படித்தவள். அதிலும் அறிவுள்ளவள். வாழ்க்கையிலே எல்லோருக்குமே துன்பங்கள் எதிர்பாராத நிலையில் மலைபோல வந்து விழுகின்றன. அதற்காக எல்லோருமே இறந்து விடுகிறார்களா?”

அவள் ஆவேசத்துடன் எழுந்து நின்று சொன்னாள்.

“இது தற்செயலாக நிகழ்ந்த ஒன்றா, மறந்து விட? பழிக்குப் பழி வாங்க முடிந்தால் ஒரு சமயம் நான் மறக்கக்கூடும். என் ஆசையும் அதுவே.”

“பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்னும் எண்ணமே இன்று தேசம் முழுவதும் நடக்கும் எல்லாக் கொடுமைக்கும் காரணம் என்பதை நீ உணரவில்லையா சலீமா?”

“எங்கோ எவனோ யாரையோ கொன்றதற்கு வேறு ஒரு மூலையிலே வாடும் ஒன்று மறியாத மக்களைக் கொண்டு சூறையாட நான் விரும்பவில்லை. என் பெற்றோர்களை, உறவினர்களை, காரணம், நீதி. நியாயம் ஒன்றுமே இன்றி யார் கொன்றார்களோ அவர் களையே தண்டிக்க வேண்டும் என்று உயிர் துடிக்கிறது. இதில் நியாயம் இல்லை என்று சொல்ல யாராலும் முடியாது.”

“சலீமா, நீ சொல்வது சரியாகவே இருக்கலாம். ஆனால் அதில் ஒரு பிரயோஜனமும் கிடைக்கப் போவதில்லை. பதிலுக்கு இன்னும் அனேகருடைய கண்ணீரால் நமது நாட்டு மண் நனைக்கப்படும் என்பது மட்டும் நிச்சயமாகும்.”

இந்த வார்த்தைகள் அவளிடத்தில் ஒரு மாறுதலையும் உண்டு பண்ணிவிடவில்லை. அவள் முன்போன்ற உணர்ச்சிகளுடனேயே காணப்பட்டாள். பேச்சை நிறுத்தி விட்டு அவ ளைப் பார்த்தபடியே சந்திரநாத் மௌனமாக இருந்தான். சிறிது நேரத்திற்குள் அவள் மறுபடி யும் எழுந்து நின்று, “இவ்வளவிற்குப் பிறகும் என்னை எதற்காக இங்கே பாதுகாத்து வைத் துக்கொண்டிருக்கிறீர்கள்? நான் போக வேண்டும். இதைத் தவிர என்னால் இப்போது வேறு ஒன்றும் சொல்ல முடியாது” என்று சொன்னாள்.

“எங்கே போக வேண்டும் என்கிறாய்?”

“எங்கேயா? என்னுடைய இடத்திற்குத்தான். முஸ்லிம்கள் என்று பிறந்த ஒரு குற்றத் திற்காக அநியாயமாக யார் யார் கொல்லப்பட்டார்களோ அவர்கள் செத்துக் கிடக்கும் இடத் திற்குத்தான் நான் போக வேண்டும்.”

சந்திரநாத் இதற்கு ஒரு பதிலும் சொல்ல விரும்பவில்லை . நிலத்தைப் பார்த்தபடி எதையோ சிந்தித்துக் கொண்டு சும்மா இருந்தான்.

அவள் தொடர்ந்து பேசினாள். வரவர அவளுடைய வார்த்தைகளில், தோற்றத்தில் ஒருவித வேகமும் வர்மமும் கலந்து காணப்பட்டன.

“இனி எனக்கு யாருமே உரிமையானவர்களல்ல. என்னுடைய துன்பத்திற்கு, மரணத் திற்கு கண்ணீர் விடத்தக்கவர்கள் எல்லோருமே பூண்டோடு அழிக்கப்பட்டு விட்டார்கள். இனி எனக்கு மரணம்தான் சுகம் தரும். நானும் அதையே விரும்புகிறேன்.

மேலே அவளால் பேச முடியவில்லை. திரும்பவும் மேசை மீது முகத்தை வைத்துக் கொண்டு விம்மி விம்மி அழத்தொடங்கினாள்.

அதைப் பார்த்தவுடன் சந்திரநாத் அவளருகில் போய் நின்று, ‘சலீமா!” என்று உருக்க மாகக் கூப்பிட்டான். அந்தக் குரலுக்குச் செவிமடுக்காமலிருக்க அவளால் முடியவில்லை . அதனால் தலையைத் தூக்கிப் பார்த்தாள். அவன் அவளது கையைப் பிடித்துக்கொண்டே இதைச் சொன்னான்:

“நீ மறுபடியும் குழந்தையைப் போலவே பேசுகிறாய். நடக்கக் கூடாதது நடந்துவிட்டது என்பது உண்மைதான். இந்த நிலையிலும் நிதானமான பாதையில் நியாயத்தோடு நடக்கக் கூடிய ஆற்றலைச் சம்பாதித்துக் கொள்வதுதான் மனித தன்மை. அதை இழந்துவிடுவது மிகவும் இலேசு. ஆனால் அதைக் காப்பாற்றுவது எல்லோருக்கும் இயலாத காரியமாகும். ஒரு வேளை நீ என்னிடத்திலே சந்தேகப்படுகிறாயா?”

சிறிது நேரம் வரையில் மௌனமாக இருந்துவிட்டு மறுபடியும் தொடங் கினாள்.

“இதோ பார். நீ யாருக்காக இவ்வளவு கவலைப்பட்டு அழுகிறாயோ அவர்களையும் காப்பாற்றி உன்னையும் அழாமல் செய்திருப்பேன். துரதிஷ்டமாக நான் அப்பொழுது இங்கே இருக்கவில்லை. கடைசியில் உன்னை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. இனி உன்னைப் பாதுகாத்து வைப்பதும் உன் மனத்திற்கு ஆறுதலைத் தேடித் தருவதும் என் கடமை.”

அவன் பேச்சை நிறுத்தினதும் அவள் தொடங்கினாள்.

“தயவு செய்து பெரிய மனசு வைத்து என்னைச் சாகவிட்டு விடுங்கள். இதுதான் நீங்கள் எனக்குச் செய்யும் பெரிய ஆறுதல்.”

சந்திரநாத் அவளைப் பார்த்தபடியே சிலைபோல இருந்தான். அவளுடைய உள்ளம் எந்தவிதமான சமாதானத்தாலும் ஆறுகிற நிலையில் இல்லை என்பது நன்றாக விளங்கியது. சிறிது நேரம் வரையில் அவனாலும் ஒன்றும் பேச முடியவில்லை . பிறகு ஒருவாறு சமாளித்துக் கொண்டு, “சலீமா. என்னை ஒரு கெட்டவன், மனிதத்தன்மை இல்லாதவன் என்று சொல்லும் படி செய்து விடாதே. எனக்காகக் கொஞ்சம் பொறுத்திரு” என்று வேண்டினான்.

அவள் மேலே ஒன்றுமே பேசவில்லை. வேதனைகளை அடக்கிக் கொண்டு ஒருவாறு மௌனமாக இருக்க முயன்றாள்.

அப்போது வெளியே கொஞ்ச தூரத்துக்கப்பால் வெறிகொண்ட ஜனங்களின் குமுறல் கடலின் அலைபோலக் கேட்கத் தொடங்கியது. அந்தச் சத்தம் காதில் விழுந்ததும் அவன் எழுந்து நின்று, “சலீமா இன்றும் தொடங்கி விட்டார்கள் என்றே தோன்றுகின்றது. நான் போக வேண்டும். ஐயோ மனிதர்கள் தர்மத்தையும், கடமையையும் மறந்து எப்படி மிருகங்களாக மாறுகிறார்களோ, தெரியவில்லை . நான் போய்ச் சீக்கிரமாகத் திரும்பிவிடுகிறேன். சலீமா!” என்று சொன்னான்.

“வேண்டாம் நீங்கள் அந்த இடத்திற்குப் போகவே கூடாது. ஒரு வேளை உங்களையும் நான் இழந்தவிட நேரிடும்.”

“திடீரென்று இப்படி ஏன் சொன்னேன்?” என்று அப்போது அவளுக்குத் தெரியவில்லை. ஆனாலும் அவளுடைய மிருதுவான பெண் உள்ளம் இதையேதான் விரும்பியது. சந்திரநாத் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் ஏனோ மிகுந்த ஆறுதலடைந்தான். பிறகு. “சலீமா, நீ ஒன்றுக்கும் பயப்படாதே. எனக்கு ஒரு தீங்குமே வந்து விடாது. நான் இந்த சமயத்தில் வீட்டினுள்ளே இருப்பது பெரிய துரோகமாகும்” என்று சொல்லிக்கொண்டே வெளியேறினான். போகும் போது வாசலிலே நின்ற வேலையாளைப் பார்த்து, “ஜாக்கிரதை!” என்று எச்சரித்து விட்டுச் சென்றான்.

தெருவில் இறங்கினதும் கூக்குரல்கள் வருகிற திக்கை நோக்கி வேகமாக நடந்தான். சிறிது நேரத்திற்குள் ஜனங்களின் வெறி கொண்ட பேய்க்கூத்து அவன் கண்ணுக்கு நன்றாகத் தெரிந்தது. மேலே அவன் ஓடியே சென்றான். வேங்கையின் கோரமான இயல்புடைய அந்த ஜனக்கூட்டமும் அவனைக் கண்டதும் மெல்ல விலகியது. சிலர் உண்மையாகவே பயந்து ஒதுங்கினார்கள். இன்னும் சிலருக்கு அவனுடைய இரக்கம் அவ்வளவாகப் பிடிக்கவில்லை . ஆனாலும் அவர்களும் மெல்ல ஒதுங்கி அவ்விடத்தை விட்டு அகன்றார்கள்.

அதற்கிடையில் அந்தப் பகுதியில் வசித்த முஸ்லீம்கள் ஆண்கள், பெண்கள், குழந் தைகள் என்று எல்லோருமே அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். பரிதாபகரமான அவர்களது முகத்தைப் பார்த்ததும் சந்திரநாத் அழுதுவிட்டான். பிறகு அவர்களுக்கு வேண்டிய ஆறுதல் சொல்லித்தன் ஆட்களின் உண்மையான சிலரை அவர்களுடைய பாதுகாப்புக்காக நிறுத்தி

வைத்து அவர்களுக்கு நம்பிக்கை தந்த பிறகே வீட்டை நினைத்தான்.

சலீமா சாளரத்தின் வழியாகத் தெருவைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். ஜனங்கள் பிரேதக் களையுடன் அங்குமிங்குமாகப் போய்கொண்டிருந்தார்கள். “இது ஏன்?”என்று சிந்திக்கவும் அவளால் அப்பொழுது முடியவில்லை . சிறிது நேரத்தில் ஒரு கூட்டத்தவர்கள் அந்தப் பக்கத்தில் வந்தார்கள். அவர்களைப் பார்த்ததுமே இன்ன இடத்தில் இருந்துதான் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அவள் தெரிந்து கொள்ளக் கூடியதாய் இருந்தது.

அவர்களில் பலர் இளைஞர்கள். சிலர் நடுத்தர வயதினர். இரண்டொரு கிழவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். ஒரு வெற்றிக்குப் பின் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் வருகிற யுத்த வீரர்களைப் போல அவர்களும் உல்லாசமாகவே வந்தார்கள். அதைப் பார்த்ததும் அவளுக்கு உடம்பெல்லாம் பற்றிக் கொண்டது. எழுந்து சாளரத்துக்குப் பக்கத்திலே வந்து நின்று கையைக் காட்டி ஒருவனைக் கூப்பிட்டாள். எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள்.

“நீங்கள் மனித ஜன்மங்கள் தானே? அல்லது பிசாசுக் கூட்டமா?”

இந்த வார்த்தைகளைப் பேசும் போது அவளிடம் அலாதியான ஒரு கம்பீரம் காணப் பட்டது. வந்தவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை . அவர்கள் அதில் நின்றபடியே தடு மாறினார்கள். மறுபடியும் அவள் பேசத் தொடங்கினாள்.

“ஒன்றுமே அறியாத ஏழைகளை வதை செய்தீர்கள். கொள்ளையடித்தீர்கள். எல்லாம் மறுபடியும் வட்டியோடு சேர்த்து அனுபவிக்கும் நாள் தூரத்தில் இருக்கவில்லை . அடே! நான் யார் தெரியுமா? உங்களால் கொல்லப்பட்ட கொள்ளையிடப்பட்ட அந்த நிரபராதிகளான முஸ் லீம்களின் கூட்டத்தில் தவறியிருக்கும் ஒருத்திதான். பதிலுக்கு வஞ்சம் தீர்க்கும் வரையில் உயிரோடு இருக்கிறேன் என்பதை மறந்துவிட வேண்டாம்.”

அவள் துர்க்கை போலவே அப்போது விளங்கினாள். அதற்குள் சிலர் நிமிர்ந்து பார்த்து விட்டு “இது சந்திரநாத் அவர்களின் வீடு” என்றார்கள். உடனே எல்லோருமே மேலே பார்த்து விட்டு யோசித்துக்கொண்டு நின்றார்கள். ஒருவனுக்கு மட்டும் அவளுடைய வார்த்தைகள் பொறுக்கவில்லை. அவன் வாசல் பக்கமாக ஓடினான். அதற்குள் வாயிலிலே நின்று வேலையாள் அவனை வெளியே தள்ளிக் கதவைத் தாளிட்டு விட்டான்.

அப்பொழுதுதான் சந்திரநாத் அங்கே வந்து சேர்ந்தான். வீட்டின் அருகே நின்ற ஜனங்களைப் பார்த்ததும், “என்ன?” என்று கேட்டான். அவனைக் கண்டதும் அந்த ஜனங்கள் நழுவ ஆரம்பித்தார்கள். அவன் எல்லோரையும் மறித்து நிறுத்திக்கொண்டு இரண்டொரு வார்த்தை மட்டும் பேசினான்.

“நீங்கள்தானா உண்மையான ஹிந்துக்கள்? ஐயோ! நீங்கள் ஒவ்வொருவரும் உங் கள் மதத்தின் பழம் பெருமைக்கு, தர்மத்திற்கு அழிவு தேடிவிட்டீர்கள். பரம்பரையாக வந்த சகிப்புத் தன்மை எப்படி உங்களிடம் இருந்து மறைந்தது? பதிலுக்கு இராட்சகர்களாகி விட்டீர்களே? உங்களைப் பார்க்கவே என் கண்கள் கூசுகின்றன.”

கடைசியில் அவன் தொண்டை குழறியது. அவ்வளவில் பேச்சை நிறுத்தி விட்டு படிமீக ஏறி நின்று அந்த ஜனங்களை ஒருமுறை பார்த்தான். எல்லோரும் கணத்தில் அந்த இடத்தை விட்டு மறைந்துவிட்டார்கள்.

சந்திரநாத் மேலும் சிறிது நேரம் வரையில் அதிலேயே நின்றுவிட்டு உள்ளே நுழைந் தான். எதிரில் சலீமா நின்றாள். அப்போது அவளிடம் நிரந்தரமாக உறைந்து கிடந்த சோகத் தின் திரை முழுவதும் விலகி இருக்க ஒருவித ரௌத்திரமே காணப்பட்டது. அவன் அவளை ஒரு முறை உற்றுப் பார்த்து விட்டு மெல்லச் சிரித்துக்கொண்டே, “சலீமா, உள்ளே போ. இது என்ன பைத்தியக்காரத்தனம்?” என்று ஒரு மாதிரியாகச் சொன்னான். அவளோ அதை அலட்சியமாகக் கேட்டுக்கொண்டு அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தாள்.

அப்பொழுதுதான் அந்தத் தந்தி வந்தது. சந்திரநாத் அதை வாங்கிப் படித்ததும், “சலீமா. எல்லோரும் சௌக்கியமாக டாக்காவிலே இருக்கிறார்களாமே” என்று தந்தியை நீட்டினான். உடனே, “உண்மையாகவா?” என்று கூச்சலிட்டுக் கொண்டே அவள் ஓடி வந்தாள். பிறகு கொஞ்ச நேரமாக அங்குமிங்குமாகச் சிறு குழந்தையைப் போலவே குதித்துக் குதித்து ஓடித் திரிந்தாள்.

பிறகு அவனுக்கருகில் வந்து உட்கார்ந்து கொண்டு “என்னை எப்போது டாக்காவிற்கு அனுப்பப் போகிறீர்கள்?” என்று கேட்டாள்.

“நீ எப்போது போக விரும்புகிறாய்?” “எவ்வளவு சீக்கிரமாகப் போக முடியுமோ அது உங்களையே பொறுத்தது.” சந்திரநாத் சிறிது வரையில் யோசித்துக் கொண்டிருந்துவிட்டுச் சொன்னான்.

“சலீமா, எதிர்பாராமல் திடீர் திடீரென்று எங்குமே கலகங்கள் முளைத்து விடுகின்றன. அதனால் தான் யோசிக்கின்றேன். அல்லது….”

அதற்குள் அவள் இடைமறித்து, “நீங்கள் கஷ்டப்பட வேண்டாம். என்னை வண்டியிலே ஏற்றிவிட்டாலே போதும். எப்படியாவது நான் போய் விடுகிறேன்” என்றாள்.

இதைக் கேட்டதும் அவனுக்குச் சிரிப்புத்தான் வந்தது. சலீமா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு சந்திரநாத் இதையே சொன்னான். “ஒன்றுக்கும் அவசரப்படாதே சலீமா! எப்படியாவது உன்னை அங்கே கொண்டு போய்ச் சேர்த்து விடுகிறேன். நினைத்த உடனே எதையும் செய்துவிடக் கூடிய நேரம் இதுவல்ல என்பதை நீயே நன்றாக உணருவாய்.”

அவள் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு மௌனமாக இருந்தாள். பிறகு எழுந்து சென்று அங்கே கிடந்த பட்சணத்தட்டை எடுத்துக்கொண்டு வந்து அவனுக்கு முன்பாக வைத்திருந்தாள்.

“விருந்தாளி சாப்பிடுமுன் வீட்டுக்குடையவனான ஒரு ஹிந்து சாப்பிடுகிற வழக்கம் இல்லையே?”

“அது உண்மையாக இருக்கலாம். ஆனால் நீங்கள் சாப்பிடு முன் நான் எதையும் தொட மாட்டேன் என சத்தியஞ் செய்து விட்டேன் என்றுவைத்துக் கொண்டால்….”

அவள் பேச்சை நிறுத்திவிட்டுத்தட்டை எடுத்து நீட்டினாள். அவன் அந்தத் தட்டை வாங் கித் தனக்கு முன்னால் வைத்துவிட்டு அவளுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். மறுபடியும் அவள் தொடங்கினாள். “ஒரு முஸ்லிம் பெண் கொடுக்க, உயர்ந்த ஹிந்து குடும்பத் திலே பிறந்த நீங்கள் உண்ணக் கூடாது என்று இருக்கிறீர்களா?”

அவ்வளவில் அவன் சாப்பிடத் தொடங்கினான். அப்பால் இரண்டு பேருமாகவே பட்ச ணங்களைக் காலி செய்தார்கள்.

பிறகு அவள் சந்திரநாத்தைப் பார்த்து. “உங்களிடம் ஒன்று கேட்கிறேன். ஒளிக்காமலே சொல்லுகிறீர்களா?” என்று கேட்டாள். அவன் வெறுமனே தலையை மட்டும் அசைத்துத் தன் சம்மதத்தைத் தெரிவித்தான்.

“சில மணி நேரத்திற்கு முன் நான் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு நீங்கள் என்மீது வெறுப்புக் கொள்ளவில்லையா? மறைக்காமல் சொல்லுங்கள்.”

அவன் சாந்தமான குரலிலே “சலீமா, எதற்காகவும் நான் கோபிக்கிறதில்லையே” என்றான்.

“ஆனாலும் என் அறிவில்லாத வார்த்தைகளை நீங்கள் மறந்து விட வேண்டும்.”

“நீ அப்படி எதையும் சொல்லிவிடவில்லை.”

“என்னுடைய மனம் சாந்தியடையவில்லை.”

“அதற்கு என்ன செய்ய வேண்டும்?” “உங்களுக்கு எது இஷ்டமோ அதன்படி என்னைத் தண்டித்து விடுங்கள்.”

“சரி தண்டிக்கிறேன். அதற்குரிய நேரம் வரட்டும்.”

ஏனோ. இரண்டு பேருமாகவே சிரித்தார்கள்.

மறுநாள் அதிகாலையிலேயே அந்த வீட்டு வாசலிலே ஒரு வண்டி வந்து நின்றது. சந்திரநாத் அது யார் என்று பார்க்க ஆளை அனுப்பினான். அதற்குள் அந்தக் கிழவர் உள்ளே வந்துவிட்டார். முதிர்ந்த நிலையிலுமே அவருடைய வாயிலிருந்து வந்த வார்த்தைகள் இளமையைத் தொட்டுக்காட்டின.

“சந்திரநாத்!” என்று முதலில் ஆத்திரத்தோடு கத்தினார். அவன் ஒன்றும் புரியாமலே ஓடிவந்து “நமஸ்காரம் தாத்தா” என்று வணங்கினான். அவர் அவனுடைய வணக்கத்தை ஏற்கவில்லை. மேலும் ஆத்திரம் கொண்டவராய், “நீ அந்நிய மதத்தைச் சேர்ந்த ஓர் இளம்பெண்ணை இங்கே வைத்திருக்கிறாயாமே?” என்று உறுமினார்.

அவன் ஒன்றுமே பேசவில்லை. அவருடைய கோபம் மேலும் உச்ச நிலையைக் கிட்டியது.

“எதற்காக அவளை நீ இங்கே வைத்திருக்க வேண்டும்? எங்கள் ஹிந்து தர்மத்துக்குச் சாவுமணி அடித்துவிட்டாயே.”

அப்பொழுதான் அவன் வாயைத் திறந்து மெல்லப் பதில் சொன்னான்.

“தாத்தா. இதனால் நான் ஹிந்து தர்மத்துக்குச் சாவுமணி அடிக்கவில்லை. உண்மை யில் ஹிந்து தர்மத்தைச் சாகவிடாமல் காப்பாற்றிவிட்டேன்.”

கிழவர் தம் வாயில் வந்தபடியெல்லாம் திட்டிக்கொண்டே வெளியே சென்று வண்டியில் ஏறிவிட்டார். அவன் அவர் பின்னோடு போய் நமஸ்கரித்து விட்டுத் திரும்பி வந்தான். அதுவரைக்கும் உள்ளே நின்ற சலீமா அப்பொழுது தான் முன் ஹாலுக்கு வந்து சேர்ந்தாள். அவளுடைய முகம் கொஞ்சம் வாடியிருந்தது. அதைப் பார்த்ததும், “இந்த மனிதர்களுடைய எந்த விதமான வார்த்தைகளையும் நீ பொருட்படுத்தக்கூடாது. அவர்கள் “பாட்டன் சொன் னான்”, “அப்பன் செய்தான்” என்று தர்மம் பேசுபவர்கள். சலீமா, இது என் வீடு. ஆதலால் உனக்கும் உரிமை உண்டு. எனவே நீ சிந்திக்க நியாயமே இல்லை” என்று ஆறுதல் சொன் னான். அவள் சிறிது நேரம் வரையில் ஒன்றுமே பேசாமல் இருந்துவிட்டு, “எப்படியானாலும் என்னைச் சீக்கிரம் அனுப்பி விடுங்கள்” என்று கேட்டுக் கொண்டாள்.

இதைக் கேட்டதும் அவனும் “சரி” என்று தலையை அசைத்தான்.

அன்றைக்கே புறப்படுவதற்குரிய எல்லா ஆயத்தங்களையும் செய்து முடித்தார்கள். அவனுடைய மோட்டார் வண்டியைச் சாரதி வாயிலிலே கொண்டு வந்து நிறுத்திவிட்டு வெளியே வந்து நின்றான்.

சந்திரநாத் தன் அறையிலிருந்து புறப்பட்டு நேரே அவள் இருந்த அறையை நோக்கி நடந்தான். அவன் வருவதைக் கண்டதும் சலீமா எழுந்து நின்று “புறப்பட ஆயத்தமா” என்று கேட்டாள்.

“ஆம் இதை உன் கைப்பெட்டியினுள்ளே வை.”

“எதற்காக இதை நான் வைத்துக் கொள்ள வேண்டும்?”

“அவர்களும் எல்லாவற்றையும் இழந்தே போயிருக்கிறார்கள். அது அவசியம் உங்களுக்குத் தேவைப்படும்.”

“ஆனாலும் இவ்வளவும் எதற்கு?” “பரவாயில்லை ”

“ஐயோ! இதில் எத்தனை ஆயிரம் தந்திருக்கிறீர்கள்?”

“பாரமாக இருக்கிறதா?”

அவள் பேசாமல் நின்றாள். அதை வாங்கி அவளது கைப்பெட்டியைத் திறந்து அவனே வைத்து விட்டான்.

மோட்டார் வண்டி பாதையிலே போய்க்கொண்டிருந்தது. சந்திரநாத்தே வண்டியை ஓட்டிக்கொண்டு போனான். சலீமா பின்புறத்து ஆசனத்தில் உட்கார்ந்திருந்தாள். இடையில் “எதற்காக மோட்டார் ஓட்டியை நிறுத்திவிட்டு வருகிறீர்கள்?” என்று அவள் கேட்டாள். “நான் இப்பொழுது உங்கள் மதத்தைச் சேர்ந்தவர்கள் வாழுகிற இடத்துக்கு வருகிறேன். அவர் களோ இன்று ஜாதி, மத வெறியில் நமக்கும் வழிகாட்டிகளாக இருக்கிறார்கள். அபாயம் வந்தா லும் நான் அமைதியாகவும் சந்தோஷமாகவும் ஏற்பேன். எனக்காக மற்றவர்கள் ஏன் அகப் பட்டுக் கொள்ள வேண்டும்? என்று எண்ணியதால்…” என்று இழுத்தான்.

அவள் உடனே “வண்டியை நிறுத்துங்கள்” என்று கூச்சலிடத் தொடங்கிவிட்டாள். கடைசியில் வண்டியை நிறுத்தியே அவளைச் சமாதானம் செய்ய முடிந்தது. பிறகு அவளும் முன்பக்க ஆசனத்துக்கு வந்து உட்கார்ந்து கொண்டாள்.

வண்டியும் மறுபடியும் போய்க் கொண்டிருந்தது. இடையில், “சலீமா நீ ஒரு முஸ்லிம் பெண். உங்கள் ஜாதிப் பெண்கள், ஆசாரப்படி வெளியே தலையைக் கூட நீட்டுவதில்லை. அப்படியிருக்க அந்நிய மதத்தவனாகிய ஒருவனுக்குப் பக்கத்தில் நீ உட்கார்ந்திருக்கிறாயே… என்று அவன் பேசி முடிப்பதற்குள்ளாகவே அவள் தொடங்கிவிட்டாள்.

“எல்லா மதத்திலும் இப்படியான உளுத்துப்போன கட்டுப்பாடுகள் இருக்கத்தான் இருக்கின்றன. அது உண்மையில் நியாயமென்றே வைத்துக் கொண்டாலும் நீங்கள் சம்பந்தப்பட்ட மட்டில் என்னை யாரும் தடுக்க முடியாது.”

அவன் திரும்பி அவளைப் பார்த்துக்கொண்டே “ஏன் அப்படி” என்று கேட்டான்.

“அது என் இஷ்டம்.”

மறுபடியும் சந்திரநாத் திரும்பி அவளைப் பார்த்தான்.

இரண்டு பேருடைய உள்ளத்திலும் உண்டான மலர்ச்சி அவர்கள் முகங்களில் வெளி யாகி மறைந்தது. வண்டி மேலே போய்க் கொண்டிருந்தது.

“இன்னும் எத்தனைமைல் போக வேண்டும்?” என்று இடையில் சலீமா கேட்டாள்.

“பாதி தூரத்துக்கு மேலே வந்துவிட்டோம். இனி ஹிந்துக்களினால் எந்த அபாயமும் வராது. நீ பயமின்றி இருக்கலாம்.”

அவள் இதைக் கேட்டதும், “ஆனால் இனித்தான் நான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அல்லவா? என் உயிர் போன பிறகே உங்களுக்கு ஏதேனும் தொந்தரவு வரலாம்” என்று சொல்லி விட்டு மெல்லச் சிரித்தாள்.

“சலீமா, நீயோ ஒரு பெண். எப்பொழுதும் பெண்களைக் காப்பாற்ற ஆண்கள் தங்க ளைத் தியாகம் செய்வதுதான் தர்மம். நீ நினைப்பது தப்பு.”

“இந்தத் தர்மங்களைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. ஆனாலும் நான் அப்ப டித்தான் செய்வேன். அதை யாரும் தடுக்க முடியாது.”

சந்திரநாத் மௌனமாகவே வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றான். “போக வேண்டிய தூரத்தில் பெரும்பகுதி கழிந்து விட்டதல்லவா?” என்று இடையில் அவள் கேட்டாள். அவனும் “ஆம்” என்று தலையை அசைத்தான்.

ஒரு சந்திப்பில் திரும்பியவுடனே திடீரென்று ஒரு ஜனக்கூட்டம் எதிரே காட்சிகொடுத்தது. அவர்களது நிலையைக் கண்டதும் சந்திரநாத் திகைத்து வண்டியை நிறுத்தினான். அந்த கூட்டத்திலிருந்த சிலர் வேகமாக அவர்களது வண்டியை நோக்கி ஓடி வந்தார்கள். அதற்குள் ஒருவன் தூரத்திலிருந்தே கல் ஒன்றை வீசி எறிந்தான். அது வண்டியின் முன்புறத்திலே பட்டுத் தெறித்துக் கண்ணாடியை உடைத்து விட்டது. ஒரு கண்ணாடித் துண்டு சந்திரநாத்தின் நெற்றியில் பறந்து ரத்தத்தைப் பெருகச் செய்தது.

கணத்துள் சலீமா அந்த ஜனக்கூட்டத்தின் முன்பாக நின்றாள். அவளைப் பார்த்ததும், இவள் ஓர் உயர்ந்த ஜாதி முஸ்லிம் பெண்’ என்பதை எல்லோரும் உணர்ந்து கொண்டார்கள். உடனே சிலர் பின்வாங்கி ஒதுங்கினார்கள். மற்றவர்கள் வெறிகொண்டுதான் நின்றார்கள். அதற்குள் ஒருவன் சொன்னான். “அடே இவன் ஒரு ஹிந்துவாகவே இருக்கவேண்டும்.”

எல்லோரும் சந்திரநாத்தையே பார்த்தார்கள். அந்தக் கூட்டத்தின் ராட்சத எதிர்ப்பை அடக்கிச் சலீமாவின் குரல் எழுந்து கேட்டது.

“எல்லோரும் விலகுங்கள். உங்கள் ஜாதியை உங்கள் மதத்தைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான மக்களைப் பாதுகாத்த இந்த மகான் யாராக இருந்தாலும், எந்த மதத்தவராக இருந்தாலும் என்ன? நீங்களும் உங்கள் மதத்தாரும் அவர் காலடியில் மண்டியிட்டு வணங்கக் கடமைப்பட்டவர்களாக இருக்கிறீர்கள்.”

“நான் யார் என்று இன்னும் நீங்கள் உணரவில்லையா? என்னையும் என்னைப் போன்ற உங்கள் மனிதர்களையும் காப்பாற்றிய உங்கள் ஆண்டவனின் அன்பரது புனித உள்ளத்தைப் புண்படுத்தி விட்டீர்களே.”

பேச்சை நிறுத்திவிட்டு எல்லோரையும் ஒருமுறை நிமிர்ந்து பார்த்தாள். அத்தனை பேரும் அசையாமல் அப்படியே நின்றார்கள். பிறகு அவள் தன் புடவையின் ஒரு தலைப்பைக் கிழித்து அவனது நெற்றியில் வழிந்த ரத்தத்தைத் துடைத்துக் கட்டுப் போட்டாள்.

சந்திரநாத் அசையாமல் அப்படியே இருந்தான். முன்புறத்தில் நின்றவர்களில் சிலர் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்கள்.

உள்ளே அவன் வண்டியை விட்டு இறங்கி நின்று இதையே சொன்னான். “நான் ஹிந்துவாகப் பிறந்துவிட்டேன். நீங்கள் முஸ்லிம்மான்களாகப் பிறந்துவிட்டீர்கள். ஆயினும் என்ன? நாமெல்லோரும் இந்த நாடு பெற்ற குழந்தைகள் தாமே!”

அவ்வளவோடு நிறுத்திவிட்டு அந்தக் கூட்டத்தை நோக்கி நமஸ்கரித்தான். அதைப் பார்த்துக்கொண்டு நின்ற ஒரு வயோதிபர் அருகில் வந்து அவன் கைகளைப் பிடித்துக் தன் கண்களில் ஒத்திக் கொண்டார்.

வண்டி புறப்படும் பொழுது கூட்டத்தினர் எல்லோருமே அமைதியாக நின்று வணக்கத்தைத் தெரியப்படுத்தினார்கள்.

வண்டி போய்க் கொண்டிருந்தது.

“சலீமா!” என்றான் சந்திரநாத்.

அவள் தன் கையினால் அவனது நெற்றியைத் தடவிக்கொண்டே “வலிக்கிறதா” என்று கேட்டாள்.

சந்திரநாத் சொன்னான். “வலி எப்பொழுதோ மறைந்துவிட்டது. அதற்கு மாறாக உடம்பு முழுவதும் குளிர, உள்ளம் இனிக்கிறது. சலீமா!”

உடனே அவள் அவனது கையைப் பிடித்து தன் கண்களில் ஒத்திக் கொண்டாள். அந்தக் கையில் இரண்டு துளி நீர் ஒட்டிக் கொண்டிருந்தது.

– கலைமகள் மாசி – 1948.

– ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: நவம்பர் 2019, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *