மதன சுந்தரி கதை
கதையாசிரியர்: அரு.ராமநாதன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 2, 2026
பார்வையிட்டோர்: 332
(1958ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இரண்டாம் பகுதி: 32 பதுமைகள் சொல்லிய கதைகள்
2-வது மதனாபிஷேகவல்லிப் பதுமை சொல்லிய வேதாளக் கதைகள்
வேதாளம் சொல்லிய புதிர் கதைகள்
4. ஞானி சூஸ்திரவான் சூரன் கதை | 5. மதன சுந்தரி கதை | 6. கிளி மைனாக் கதை
விக்கிரமாதித்தன் மறுபடியும் முருங்க மரத்திலிருந்து வேதாளத்தைப் பிடித்துத் தோள்மீது சுமந்து கொண்டு வேகமாகத் திரும்பி நடக்கலானான். வழியிலே வேதாளம் அவனைப் பார்த்து, “மனித குலாதிபதியே! நீ அஞ்சா நெஞ்சமும் புத்தி சாதுர்யமும் உடையவன். ஆகவே. கதை ஒன்று சொல்லுகிறேன். கேளுமையா ராஜனே!’ என்று மறுபடியும் கதையை ஆரம்பித்தது:
சோபாவதி என்றொரு நகரம் உண்டு. அதை அரசாண்ட யசகேது என்னும் மன்னன், நீதிவசமி கேது என்னும் சிறப்புடன் இந்தப் பூவுலகத்திலே புகழ் பெற்று விளங்கினான். அவ னுடைய தலை நகரிலே சக்தி வாய்ந்த தெய்வம் என உலகப் பிரசித்தியடைந் திருந்த துர்க்கையம்மனுக்கு அழகான ஓர் ஆலயம் இருந்தது. அதற்குத் தெற்கே ‘துர்க்கை தீர்த்தம்’ என்ற தடாகமும் இருந்தது. ஒவ் வொரு வருஷமும் ஆஷாட மாசத்திலே சுக்லபக்ஷ சதுர்த் தசி அன்றைக்கு அங்கே ஒரு பெரிய உற்சவம் நடக்கும். தேர் திருவிழாக் கொண்டாட்டங்களைக் அன்றையத் தினம் ஏராளமான மக்கள் கூட்டம் கூட்டமாகத் காண்பதற்காக திரண்டு வருவார்கள். துர்க்கையம்மனின் வரப்பிரசாதத்தினால் எதுவும் கைகூடும் என நம்பிக்கையுள்ளவர்களெல்லாம் தடாகத்திலே தீர்த்தமாடி அம்மன் சந்நிதியிலே பலவிதப் பிரதிக்ஞைகளும் செய்து கொண்டு போவார்கள்.
ஒருசமயம் அந்த உற்சவத்தின் போது அந்தப் புண்ணிய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வதற்காகப் பிரம்மஸ்தலம் என்ற கிராமத்திலிருந்து தவளன் என்ற வாலிபன் ஒருவன் வந்திருந் தான். அவன் தன்னம்பிக்கை குறைந்தவனாகவும். கோழை மனசு படைத்தவனாகவும் விளங்கியதால் அவனுக்குத் தீனதாஸன் என்ற பெயரும் வழங்கி வந்தது. அவனுக்குத் துர்க்கையம்மனிடம் அபரிமிதமான பயபக்தியும் தேவியின் சக்தியில் அளவற்ற நம்பிக்கையும் உண்டு. அவன் தன் இதயத்தைக் கொள்ளைக் கொள்ளக்கூடிய பெண்ணை மணப்பதெனவும் முடிவு செய்திருந் தான். அந்த உற்சவ காலத்தில் சுத்தப்படன் என்பவனுடைய மகளான மதனசுந்தரி என்னும் கன்னிப்பெண் ஒருத்தியும் தன்னைப் போலவே அங்கு ஸ்நானம் செய்ய வந்திருப்பதைத் தவளன் கண்டான். புது நிலவைப் பழிக்கும் அழகுடைய அவளைக் கண்டவுடனே அவன் தன் உள்ளத்தைப் பறி கொடுத்தான். திருவிழா பார்க்க வந்த பெண் தனக்குக் கிடைப்பாளா என்று பெருத்த ஏக்கம் அவன் நெஞ்சை வாட்டியது. அவன் துர்க்கை யம்மன் சந்நிதானத்தை அடைந்து, “மகிஷாசுரமர்த்தனியே! நான் சுருதிய பெண்ணை மனைவியாக அடைவதுதான் என் வாழ்க்கையின் லட்சியம்! அவளோடு நான் சிறிது காலமே மணவாழ்வை ருசித்தாலும் போதும்! என் உயிரின் ஒரே ஆசை திருப்தியடைந்து விடும்! என் ஆசை அபிலாக்ஷையை நிறைவேற்று! அந்தப் பெண் என்னை மணம் செய்து கொள்வாளேயானால் மறுமுறை உன்னை ஸ்மரணை செய்யும்போது. என் தலையை வெட்டி உன் பாதாரவிந்தத்திலே சமர்ப்பிப்பேன்!” என்று பிரதிக்ஞை செய்து கொண்டான்.
அதன் பிறகு தன் கருத்தைக் கவர்ந்து கொண்ட அந்த கன்னிகை யார், எந்த ஊர் என்பதைப் போன்ற விவரங்களை விசாரித்து அறிந்து கொண்டு அவள்மீது கொண்ட மோகத்தோடு அவன் வீடு திரும்பினான். அங்கே அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. ஆகாரம் செல்லவில்லை. இதைக் கண்ட அவன் தாயார் கவலை கொண்டு இதற்குக் காரணம் என்னவென்று அவனை விசாரித்தாள். அவனும் உண்மையைச் சொல்லி தன் ஆசையைத் தெரிவித்தான். தாயாரும் உடனே தன் கணவர் விமலரிடம் சென்று விஷயத்தைச் சொன்னாள்.
இதைக் கேட்ட தகப்பனும் தன் மகனை வந்து பார்த்து, “மகனே. சுலபமாய் கிட்டக்கூடிய இந்த விஷயத்துக்காக நீ ஏன் இப்படி அதைரியப்பட்டு கலங்குகிறாய்? நான் கேட்டால் சுத்தப்படன் தன் மகளை உனக்கு கட்டாயம் மணம் செய்து கொடுப்பான். “அவனுக்கு நாம் குலம். செல்வம், அந்தஸ்து. தொழில் முதலிய எல்லாவற்றிலும் சமமானவர்களே: எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. எனக்கு அவனைத் தெரியும். அவனும் என்னை நன்றாக அறிவான். ஆகவே, இந்தச் சம்பந்தத்தை ஏற்பாடு செய்வதில் சிரமம் எதுவுமே இல்லை” என்று சொன்னான்.
இவ்விதம் விமலன் தன் மகனை பல வார்த்தைகளால் சமாதானப்படுத்தி தேற்றி ஆகாரம் உட்கொள்ளச் செய்தான். மறுநாள் அவன் தன் மகனுடன் புறப்பட்டுச் சுத்தப்படன் வீட்டுக்குச் சென்றான். அங்கே அவன் தன் மகனுக்கு மதனசுந்தரியை மணம் செய்து கொடுக்க வேண்டுமென்று கேட்டான். சுத்தப்படனும் அதற்குச் சம்மதித்தான். முகூர்த்தம் பார்த்த போது மறுநாளே நல்ல நாளாக இருந்தது. அதனால் மறுநாளே கல்யாணம் நடந்தது. மதனசுந்தரியும் தவளனைப் பார்த்தது முதல் அவன் மீது மையல் கொண்டிருந்தாள். இந்தக் கல்யாணத்திலே அவளுக்கும் பரம சந்தோஷம் உண்டாயிற்று. கல்யாணம் கழித்துத் தவளன் புதுப் பெண்டாட்டியுடன் சொந்த ஊர் திரும்பி வந்து சேர்ந்தான்.
விரும்பியவளை அடைந்த வாலிபன் புதுமணத்தின் ஆனந்தத்தேனைப் பருகி. ஆசைதீர சில நாட்கள் இன்ப வாழ்வை அனுபவித்து வந்தான்.
இவ்விதம் புதுமணத் தம்பதிகள் இருவரும் ஊரில் இருக்கும் போது, ஒருநாள் மதனசுந்தரியின் சகோதரன் அவ்விடம் வந்து சேர்ந்தான். தமையனுக்கும் தங்கைக்குமிடையே உயிருக்குயிரான வாத்ஸல்யம் உண்டு. தங்கையின் வீட்டில் அவனை எல்லோரும் அன்புடன் வரவேற்று குசலப்பிரசனம் செய்து தங்கள் அன்பை தெரிவித்தார்கள். சாப்பாடு ஆனபிறகு, இளைப்பாறும் போது அவன். பெரியவர்களைப் பார்த்து, “ஊரிலே துர்க்கா தேவியின் உற்சவம் நடைபெறுகிறது. அதற்கு என் தங்கை மதன சுந்தரியையும், அவள் கணவரையும் அழைத்து வரச் சொல்லி என் தகப்பனார் என்னை அனுப்பி வைத்தார்!” என்று சொன்னான். அதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டு விருந்து வைத்து அனுப்ப விரும்பினார்கள்.
மறுநாள் காலையில் தவளன் தன் மனைவி மதனசுந்தரியுடன் மாமனார் வீட்டுக்குக் கிளம்பினான். உரிய காலத்தில் அவர்களுடன் சோபாவதி நகரை அவன் அடைந்தான். நகர்ப்புறத்திலே துர்க்கையின் பெரிய கோவில் இருப்பதைத் தவளன் கண்டவுடனே. அவனுக்குப் பக்தி மேலிட்டது. அம்மனின் சந்நிதானத்திலே அவன் முன்னொரு சமயம் செய்த பிரதிக்ஞை விஸ்வரூபமெடுத்து அவனுடைய நெஞ்சை முள்போல் உறுத்தியது. அந்தச் சந்தர்ப்பத்திலே தன் சபதத்தை நிறைவேற்றிவிடத் தீர்மானித்த தவளன் தன் இளம் மனைவியையும் மைத்துனனையும் நோக்கி, “நீங்கள் இங்கேயே தடாகத்தின் நிழலில் இளைப்பாறுங்கள். நான் ஆலயத்தினுள் துர்க்கையம்மனைச் சேவித்துவிட்டு வருகிறேன். மைத்துனா! நிர்மானுஷ்யமான ஆலயத்தினுள் பயங்கரரூபிணியை உன் தங்கை பார்த்தால் மிகவும் பயப்படுவாள்! அவளுக்குத் துணையாக நீ இங்கேயே இரு!” என்று சொல்லிவிட்டு ஆலயத்தினுள் சென்றான்.
மஹிஷாசுரனைக் கீழே தள்ளி மிதித்த காலையும், தானவர்களை வென்ற பதினெட்டு கரங்களையும் கொண்டு பயங்கரமாக விளங்கிய துர்க்கா தேவியை அவன் வழிபட்டு வணங்கிப் பிரார்த்தித்தான். அப்போது அவன் மனதில் பழைய எண்ணம் புதிய உருவில் வைராக்கியச் சித்தமாக உதித்தது.
“தேவியின் அருளைப்பெற மக்கள் எல்லோரும் பலவி தமாக உயிர்பலி இடுகிறார்கள். அவ்விதம் இருக்கத் தேவியைத் திருப்தி செய்து பரகதியில் உய்வதற்காக ஏன் அவளுக்கு என்னை பலியிட்டு கொள்ளலாகாது? இவ்விதம் நினைத்தவுடனே அவன். நிர்மானுஷ்யமாய் இருந்த அந்தக் கர்ப்பக்கிரகத்திலிருந்து நீண்ட காலத்துக்கு முன்னதாக யாரோ காணிக்கை செலுத்திய கத்தியை வெளியே எடுத்து வந்தான். பிறகு மணியை கட்டித் தொங்கவிடப்பட்டிருந்த சங்கிலியில் தன் தலை மயிரை முடிந்து கட்டிவிட்டு. அந்தக் கத்தியால் தன் கழுத்தை அறுத்துக் கொண்டான். துண்டித்தவுடனே தலைமயிர் கட்டு அறுந்து. தலை வேறு உடல் வேறாகக் கீழே விழுந்தன.
வெளியே வெகு நேரமாகக் காத்திருந்த மைத்துனனோ. கோவிலுக்குள் போன தன் தங்கை புருஷன் திரும்பி வராததைக் கண்டு எதனால் தாமதமேற்பட்டது என்று அறிந்துவர விரும்பினான்.
“தங்கையே! நீ இங்கேயே இரு! நான் போய் பார்த்து வருகிறேன்!” என்று அவன் சொல்லிவிட்டு ஆலயத்தினுள் சென்றான். உள்ளே தன் சகோதரி கணவன் தலையறுத்து கிடப்பதைக் கண்டு கலக்கம் அடைந்தான்! “இதைப் போய் சொன்னால் தங்கை எப்படி சகிப்பாள்?” என்று மனம் குலைந்த அவனும் அதே கத்தியால் அதேபோலத் தன் கழுத்தையும் அறுத்துக் கொண்டு, தலை வேறு உடல் வேறாகக் கிடந்தான்.
போன புருஷனும், அண்ணனும் வராததைக் கண்ட மதனசுந்தரி பெரிதும் கலவரம் அடைந்தாள். ஆகவே, அவளும் கோவிலுக்குள்ளே நுழைந்தாள். உள்ளே அம்மன் சந்நிதியிலே தன் கணவனும் அண்ணனும் கிடந்த நிலையை பார்த்தவுடனே அவள் நிலைகலங்கிப் பூமியிலே விழுந்து புரண்டாள்.
“ஐயோ! இது என்ன? என் வாழ்க்கை பாழாயிற்றே?” என்று மதனசுந்தரி அலறினாள். இவ்விதம் திடீரென்று கொலையுண்ட இருவரையும் நினைத்து அவள் பலவாறாகவும் பிரலாபித்தாள். பிறகு அவள் எழுந்து, “இனி இவ்வாழ்வினால் என்ன பிரயோஜனம்?” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள். “அம்பிகே! மக்களின் நல்வாழ்க்கை. மாங்கல்யம். சம்பத்து ஆகியவற்றை காத்து ரக்ஷிக்கும் தேவி நீதான்! மாதர்களுக்கு உன்னையன்றி புகலிடம் வேறு உண்டோ? உன் கணவரான சிவபெருமானை உன் உடல் பாதியிலேயே கொண்டிருக்கிறாய். அவ்விதம் இருந்தும் நீ என்னுடைய கணவனையும், சகோதரனையும் அபகரித்து விட்டாய். நான் சதா உன்னையே நம்பி வழிபட்டு வருகிறேன். அப்படியிருக்க நீ செய்தது நியாயமே இல்லை. இப்போது உன்னை நான் ஒரு வரம் அளிக்க வேண்டுகிறேன். எதற்கும் அருகதையற்ற இவ்வுடலை உன் சந்நிதியிலே இப்போதே தியாகம் செய்துவிடப் போகிறேன். இனி எனக்குக் கிடைக்கப் போகும் மறு ஜென்மத்தில், அது எதுவாக இருந்தாலும் சரி. இவ்விருவரையுமே என் கணவராகவும். சகோதரராகவும் அடையும்படி அனுக்கிரகிக்க வேண்டும்!”
இவ்விதம் தேவியை மதனசுந்தரி வேண்டிக்கொண்டு மறுபடியும் மாதாவைப் பணிந்து எழுந்தாள். பிறகு அவள் பக்கத்திலிருந்த கொடியைக் கொண்டு சுருக்கு தயார் செய்து அதை ஓர் அசோக மரத்தில் கட்டினாள். தன் கழுத்தை நீட்டி அந்தச் சுருக்கை போட்டுக் கொள்ளும் சமயத்தில் ஆகாசத்தில் ஓர் அசரீரி வாக்கு எழுந்தது.
“அவசரப்பட்டு எதையும் செய்துவிடாதே! குழந்தாய், நீ சிறுசானாலும் உன்னுடைய மன உறுதியைக் கண்டு நான் சந்தோஷம் அடைந்தேன். இந்த சுருக்கு இப்படியே இருக்கட்டும். நீ உன் கணவன் சகோதரர் ஆகியவர்களுடைய தலைகளை அவர்கள் உடல்களுடன் சேர்த்துவிடு. என் அருளால் அவர்கள் மறுபடியும் உயிர்பெற்று எழுந்து விடுவார்கள்.”
அதைக் கேட்ட மதனசுந்தரி மனமகிழ்ந்து, அந்தச் சுருக்கை விட்டுக் கீழே குதித்து, தலையறுபட்டு கிடக்கும் முண்டங்களை நோக்கி வேகமாக ஓடினாள். அவளுக்கிருந்த பதற்றத்தில், தான் என்ன செய்கிறோம் என்பதையறியாமல், கை தவறி அவள் தன் கணவனின் தலையைத் தமையனின் உடலிலும், தமையனின் தலையைக் கணவன் உடலிலும் மாறுபாடாகப் பொருத்திவிட்டாள். அசரீரியின் வாக்குப் பிரகாரம் அவ்விருவரும் உடனே உயிர் பெற்றெழுந்தனர்.
அவர்கள் ஒருவரை ஒருவர் அளவளாவித் தங்களுக்கு நேரிட்ட புனர்ஜன்மத்தைக் கேட்டுச் சந்தோஷம் அடைந்தார்கள். துர்க்கா தேவியை வழிபட்டு மூவரும் மேற்கொண்டு தங்கள் பிரயாணத்தைத் தொடங்கினார்கள். நடந்து செல்லும்போது தலைகளை மாற்றி வைத்துவிட்டதை, மதனசுந்தரி அறிந்து கொண்டாள். அவளுக்குக் கலக்கம் ஏற்பட்டது. என்ன செய்வதென்றே விளங்கவில்லை. கணவன் தலையோடும் தமையன் உடலோடும் கூடிய ஓர் உருவம்! கணவன் உடலோடும் தமையனின் தலையோடும் கூடிய ஓர் உருவம்!
“இவ்விருவரில் மதனசுந்தரிக்கு கணவன் யார்? தமையன் யார்?”
இவ்விதம் வேதாளம் கூறக்கேட்ட விக்கிரமாதித்த மகாராஜன். பின்வரும் பதிலைச் சொன்னான்.
“அந்த இரண்டு உருவங்களில் எவன் அவளைத் தன் மனைவி என்ற நினைப்பில் பார்க்கிறானோ அவன்தான் அவளுடைய கணவன்!”
(உடல் உறுப்புகளில் சிரசே பிரதானமானது. மனிதரை அடையாளம் கண்டு கொள்வதும் தலையைக் கொண்டுதான். ஆகவே, கணவன் தலையைக் கொண்டவனே அவளுடைய கணவன் ஆவான்!” என்னும் விடை வடமொழி மூலமொன்றில் காணப்படுகிறது.)
அந்தப் பதிலை கேட்ட வேதாளம் மறுபடியும் முருங்க மரத்தின் மீது ஏறிக்கொண்டது.
– தொடரும்…
– விக்கிரமாதித்தன் கதைகள், வடமொழி மூலங்களைப் பரிசோதித்து எழுதியவர்: ராசு, தமிழ்ப் பாடங்களைப் பரிசோதித்து எழுதிவர்: அரு.ராமநாதன், முதற்பதிப்பு: ஜனவரி 1958, பிரேமா பிரசுரம், சென்னை.