கதையாசிரியர்:
தின/வார இதழ்: கலைமகள்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 23, 2026
பார்வையிட்டோர்: 3,595 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இதுதான் என் வீடு. இதற்கு எதிர்த்தாற்போல இருக்கிற காலிமனை, வீட்டைச் சேர்ந்தது. காலி மனையை ஒட்டித் தொடர்ந் திருக்கிறதே சவுக்கண்டி, அது காலி மனையைச் சேர்ந்தது.

பதினைந்து வருஷத்துக்குப் பிறகு டில்லிக் கம்பளிச் சட்டையைப் போட்டுக்கொண்டு தெரு வழியாக வந்தபொழுது – வந்தே இருக்க வேண்டியதில்லை; புத்தி என்பது சாதாரணமாக எல்லாருக்கும் எப் பொழுதும் இருப்பதில்லை – தெருவில் இருந்த இரண்டொரு நாய்கள் என்னை விரைக்கப் பார்த்தன. இந்த ஊர் ஆள் அல்ல என்று அவற் றுக்கு நிச்சயமாகத் தெரிந்திருந்தது போல் கண்ணின் மணிகள் நிலைத்து நின்றன. ஆனால் இவன் அந்நியன், கடிக்காவிட்டாலும் குலைத்தேனும் விரட்டத் தக்கவன் என்ற அபிப்பிராயம் திட்டமாக உருவாகவில்லை. தொண்டை வரையில் வந்த குரைப்பு, தொண்டைக் கதிர் கருகியது போல் வெளிவரவில்லை: கால் கெண்டைச் சதைக்கோ உடுப்புகளுக்கோ அபாயம் இல்லை என்ற தைரியத்தில் வீட்டை நோக்கி நடந்தேன்.

தைரியம் என்றால் எதிரியை மறந்து விடவேண்டும்; நினைப்பில் வரக்கூடாது.எதிரியின் படைப்பலம் என்ன, எந்த இடத் தில் இருக்கின்றன என்று வேவு பார்க்க ஆள் வைத்துவிட்டுத் தைரிய மாக இருக்கிறான் என்றால் அர்த்தம் இல்லை? குலைக்கிற நாய் கடிக் காது. அப்பொழுது கடிக்கிற நாய் குலைக்காமல் இருக்குமோ? இந்த மாதிரி தைரியந்தான் என்னிடம் இருந்தது. நடுவில் நடுவில் திரும்பிப் பார்த்துக்கொண்டே முன்னேறினேன். ஒரு நாய் பத்தடி தூரம் பின் தொடர்ந்தது.மற்றொரு நாய் பதினைந்தடி தூரம் வந்துவிட்டு நடு ரோட்டில் மண்ணைச் சேர்த்துக்கொண்டு படுக்கப் பிள்ளையார் சுழி போட் டது. நமக்கு மெத்தை மேடாக இருக்க வேண்டும். அதற்குப் பள்ள மாக இருக்க வேண்டும். இதனால் மேடும் பள்ளமும் ஒன்றுதான் என்று சொல்லிலிட முடியுமா? அல்லது சுகத்தைக் காண ஒரே வழிதான் என்று சொல்லிவிட முடியுமா? எப்படியானால் என்ன? என் தைரியம் ஊர்ஜிதமாகிவிட்டது. வீடு வந்துவிட்டது.

ஒரு வார்த்தை: வீடு வந்ததா? நான் போனேனா? – பாஷை என் னும் கருப்பைக்குள் கருத்து புகுந்திருக்கும் பொழுது தலைகீழாகத்தான் இருக்குமா? அல்லது கருத்தை மறைப்பதுதான் உயர்ந்த நடையா? தொனி என்றால் இதுவா?

வீடு எப்பொழுதும் போலத்தான் இருந்தது? பதினைந்து வருஷ காலத்தில் சின்னப் பெண் உருமாறிப் போனது போலவும் இல்லை; இறங்கு முகமாக இருக்கும் கிழவியைப் போலவும் இல்லை. பழந்திண்ணை அப்படியே இருந்தது.

திண்ணையில் வாத்தியார் உட்கார்ந்துகொண் டிருந்தார். புகை இருந்தால் நெருப்பு அங்கே கட்டாயம் இருக்கும் என்பார்களே, அது மாதிரி எதிரில் உட்கார்ந்திருந்த பையனைக் கொண்டு அவர் வாத்தியார் என்று கணித்தேன் . இவாசலில் வந்து ஒரு நிமிஷம் தயங்கினேன்.

“:யாரைப் பார்க்கிறீர்கள்?'”

“சாமியை”

”அவர் இல்லை.”

“அவர் சம்சாரம்?”

“அவரும் இல்லை’

நான் திரும்பலாமா என்று நினைப்பதை அறிந்துகொண்டுவிட்ட வாத்தியார் மூக்குக் கண்ணாடியைக் கழற்றி வைத்தார்.

“உட்காருங்கள். வந்துவிடுவார்?”

போவது போலப் பாசாங்கு செய்தேனே ஒழிய திரும்பும் அபிப்பிராயம் எனக்கு இல்லை. வெள்ளத்தில் வீழ்ந்தவன் துரும்பைப் பிடிப்பான் என்பார்களே, அந்த மாதிரி வாத்தியாரின் வார்த்தைகளில் தொற்றிக்கொண்டு திண்ணையில் உட்கார்ந்தேன்.

“சின்னசாமி, புத்தகத்தை வை. இவரோடு கொஞ்சம் பேசுகிறேன்.”

சின்னசாமி திறந்திருந்த புத்தகத்தை அப்படியே கவிழ்த்து வைத்துவிட்டு – புத்தகத்தை மூட எவ்வளவு நேரம் பிடிக்கும்?- கூரையில் செருகியிருந்த கிட்டிப் புள்ளை எடுத்துக்கொண்டு ஓடி விட்டான்;

கிட்டிப்புள் எடுத்த இடத்தை நோக்கிக் கண் சென்றது. வரிசையாகக் குளவிக் கூடுகள் நாலைந்து, வேலைக்குச் சென்றுவிட்ட ஏழைக் குடியானவர்களின் வீடுகளைப் போல இருந்தன. ஒன்றாவது மூடியிருக்க வேண்டுமே; இல்லை. தேவைக்கு மிஞ்சிய வீடுகள் கட்டிக் கிடப்பது போல இருந்தன?

“ஏன் ஸார், குளவி முட்டையிடுமா? இல்லாவிட்டால் நம்மைப் போல் முழுக் குழந்தையாகப் பெறுமா?”

“இதெல்லாம் பாட திட்டத்தில் இல்லை. ஜாடையாகச் சொல் வது புரிகிறது. சாமி இருக்கிறாரே, அவர் ரொம்ப மதமதார் எருமை மாடு என்று நான் சொல்லப்படாது. ஆனால் அப்படித்தான். வீடு வாசல் ஒன்றிலும் பிடித்தம் கிடையாது. சுத்தமாக இருக்கவேண்டும் என்ற நினைப்பெல்லாம் கிடையாது. எங்கள் வீட்டை வந்து பாருங் களேன். உங்களுக்கு, ஜோலி இருக்குமோ என்னவோ? இதோ கோயி லுக்குப் பின்னாலேதான்; வாடகை வீடுதான். கிளிக் கூண்டு மாதிரி இருக்கும். இந்தக் குளவிக் கூடுகள் மூன்று வருஷமாக இருக்கின்றன. கேட்பார் கிடையாது. வீட்டை அவ்வப்போது ஒட்டடை அடித்துச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று சொப்பனங்கூடக் காண மாட்டார்.”

”அப்படி இருக்காது. குளவிக் கூடுகள் கட்டுகிற வீட்டில்தான் பிள்ளைக் குட்டிகள் பிறக்கும் என்பார்கள்.”

”அப்படியா? எனக்குத் தெரியாதே!”

“பாடத் திட்டத்தில் இதெல்லாம் சேர்ந்திருக்காது. மண்கூடு கட்டினால் பெண்கள் பிறக்கும் என்பார்கள்: அரக்குக் கூடாக இருந் தால் பிள்ளைகள்.”

“அதெல்லாம் இருக்கலாம். எல்லாவற்றுக்கும் ஓர் எல்லை வேண்டும். இவருக்கு மூன்று மண் கூடாகிவிட்டன. பாடம் சொல் லிக் கொள்கிறானே. அரக்குக் கூடு அவன் பெரியவன். இனிமேலாவது வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டாமா?”

வாத்தியார் கர்ப்பத் தடை பிரசாரகரா என்ன என்று நினைத்துக் கொண்டு குறிப்பின்றி எதிரே பார்த்தேன்.

சவுக்கண்டிக்கு முன்னிருக்கும் மனையில் பக்கத்து வீட்டுக்காரர் வந்து நுழைந்தார். அதிலிருந்த வைக்கோற்போரிலிருந்து கற்றை கற்றையாக வைக்கோலை உருவிப் போட்டுச் சுருட்டி எடுத்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினார்.

“அந்த இடத்தை வாடகைக்கு வாங்கிக்கொண்டிருக்கிறாரா?”

“அதைத்தான் சொன்னேனே. பூசனிக்காய் போவது தெரி யாதி: கடுகைப்பற்றி ஆராய்வார். ஐந்து ரூபாய்க்குக் குறைந்து முடியாதென்றால் மூன்றரைதான் என்று கொக்கைப் போல் ஒரு காலால் நிற்கிறார். அதற்கும் விதியற்றுச் சொல்லிக் கொடுக்கிறேன். தைக் கோட்டை விட்டுவிட்டார்.”

எனக்குத் திடீரென்று வெறிபிடித்து விட்டது. விட்டத்தின் ஓரத்தில் இருந்த குளவிக் கூடுகளை எல்லாம் ஒன்று விடாமல் பெயர்த் துத் தள்ளினேன். கூட்டுக்குள் குஞ்சுகள், முட்டைகள் இருந்தால்- மாட்டின் வலிக்கு மட்டுண்ணி இரக்கப்பட்டால் – பூகம்பம் யாருக்கு இரக்கம் காட்டுகிறது? இரக்கம் என்பதே வாச்சாங்குள்ளி ஆட்டம் மாதிரி. தோற்கிறவன் ஜயிப்பதற்குச் செய்யும் சூழ்ச்சி. கூடுகள் பொலபொலவென்று விழுந்து பூகம்பம் குலுக்கிய டுகளைப் போல இறைந்து கிடந்தன.

வாத்தியார் என்னை வெறிக்கப் பார்த்துக்கொண்டே இருந்தார்.

”அதோ அவருக்குப் பேர் என்ன?”

“சாமிசா”

“சாமிசாவா?”

“ஆமாம். அப்படித்தான் அவருக்கு வருகிற தபாலில் எல்லாம் விலாசம் எழுதியிருக்கு.’

“ஊரார் தபாலை எல்லாம் பார்க்கிறதுகூட உங்கள் வேலையா?” என்று கேட்டுக்கொண்டே திண்ணையை விட்டிறங்கி, சாமிசா வீட்டுக்குப் பாய்ந்தேன்.

சாமிசா வீட்டுவாசலில் நின்று பார்த்தால், நடுவில் இருக்கும் முற்றம் தெரியும். சாமிசா பசுமாட்டு வாயில் வைக்கோலைத் திணித் துக்கொண் டிருந்தார். நான் ஒன்றுமே பேசாமல் முற்றத்தையும் அவரையும் மாட்டையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டே இருந் தேன். இரண்டொரு நிமிஷமோ யுகமோ யார் கண்டது? மாடு, முற்றம் ஒன்றும் தென்படவில்லை.

“:யாரு ஸார்?”

அந்தக் குரல் என்னைத் தட்டி உலுக்கி எழுப்பிற்று. இங்கே எதிர்த்த வீட்டுக்கு வந்தேன் என்று சொல்ல வந்தவன், “நீங்கள் யார் ஸார்?” என்று கேட்டுவிட்டேன்.

“இந்த வீட்டுச் சொந்தக்காரன்.”

பதில் சொன்னபோது தலையை ஒரு மாதிரியாகச் சாய்த்துக் கொண்டு நின்றார் ; தலைமயிர் சண்டைக் கோழிக் கழுத்து மயிரைப் போல் சிலுப்பிக்கொண்டது.

:”இந்த வீட்டுக்குச் சொந்தமென்றால் பக்கத்து வீட்டு மனையில் என்ன வேலை?’

“நீர் கேட்க வேலை என்ன? நீர் யாரு?”

‘நான்-நான் – வீட்டுச் சொந்தக்காரன்:’

“தெரியும்டா!” என்று கழுத்தைப் பிடித்துத் தள்ள வந்து விட்டான்.எங்கள் சத்தத்தைக் கேட்டு அல் அயல்காரர்கள் கூடிவிட்டார்கள். பேச்சு, செயலாக மாறியதும் குறுக்கிட்டார்கள்.

எனக்கு ஆத்திரம் பொங்கிக்கொண்டிருந்தது. கையாலாகத வனுக்கு ஆளத் தெரியாது- எதுவானால் என்ன, வீடு, வாசல், மனைவி, பணம்.. பாத்திரம் அறிந்து, பிச்சை மாத்திரந்தான் இடவேண்டும் என்பதில்லை. கொதிப்பு வெடிக்கும் கட்டம்.

அப்போது கூட்டத்துக்கிடையே ஒருவர் தலையை நுழைந்தார். அமளிக்கிடையே கண் கலங்க நிற்கும் என்னைப் பார்த்தவர் சாமி!

நான் அவரைப் பார்த்தேன். உறுத்துப் பார்த்தேன்: மௌனமாகப் பார்த்தேன்.

“எப்பொ வந்தீங்க? எல்லாம் போக இவரோடு உங்களுக்கு  என்ன தகராறு?’

நான் வாயைத் திறக்கவில்லை.

“இவன் யாரய்யா கம்பளிச் சட்டையைப் போட்டுக் கொண்டு? இவன் வீட்டுச் சொந்தக்காரனாமே – இவனா? அப்போ நீர் யாரு?”

சாமி அவருக்கு எதுவும் பதில் சொல்லவில்லை: “நீங்க வாங்க பேசிக் கொள்ளலாம்” என்று சொல்லி, என்னை அழைத்துக்கொண்டு போனார். உண்மையில் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போனார். திண்ணையில் வாத்தியார் பையனுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார்.

“ஏன் வாத்தியார் ஸார், நீங்க இவர் கிட்டே என்ன சொன்னீங்க?'”

“நீங்கள் வெளியில் போயிருப்பதாகச் சொன்னேன்.”

“இவர் யாரு தெரியுமா?’

“தெரியாதே!”

“இவர் கிட்டே இருந்துதான் இந்த வீட்டை வாங்கினேன்”.

என் கொதிப்பு வெடித்தது.

“உங்களுக்கு லாயக்குப்படாது, அலிக்குப் பெண்ணைக் கொடுத்தாற்போல.”

“குசாலாக எடுத்துக்கொள்ளுங்கள். அதற்காகவா வந்திருக்கிறீர்கள்?'”

என் நாடி எல்லாம் ஒடுங்கிப் போச்சு. மோட்டாரில் பெட்ரோல் இருந்தால் அல்லவா வண்டி ஓடும்?

“இவர் திண்ணையில் உட்கார்ந்திருந்தார். குளவிக் கூடுகள் கண்ணில் பட்டன. அவற்றை உடைத்தெறிந்தார். எதிர்த்த மனை யைப் பார்த்தார். பக்கத்து வீட்டுக்காரரோடு சண்டைக்குப் போய் விட்டார். சாமிசா இப்படி அக்கிரமம் செய்திருக்கிறான் என்று நான் சொன்னேன்” என்றார் வாத்தியார்.

“வக்கீல் வீட்டுக்குப் போய் நோட்டீஸ் கொடுத்துவிட்டுத்தான் வருகிறேன்.”

“நோட்டீஸ், மண்ணாங்கட்டி; தீயை வைத்து வைக்கோல் போரையும் அவன் வீட்டையும் கொளுத்தவேண்டாம்?”

“அதெல்லாம் முடியாதவர்கள் சட்டத்தின் பலத்தைத்தானே தேட வேண்டும்? தேடுகிறேன். அதெல்லாம் இருக்கட்டும். வீட்டில் உட்கார்ந்து ஆற அமரப் பேசுவோமே.”

:வீட்டில் உட்கார மனம் இல்லை. சல்லிசாகக் கல்லை விலைக்கு வாங்கித் தாத்தா கட்டின வீடு. மோரும், வறட்டியும் பாட்டி விற்று வாங்கினது எதிர்மனை என்பார்கள்.”

“திண்ணையில் உட்கார்ந்து சொல்லுங்களேன். நின்றுகொண்டே  பேசினால்?”

“நாய் வந்து குந்துமா உங்கள் வீட்டிலே, ரோசம் மானம் ல்லா தவர்களோடு..!

அவர் கோபம் அடையவே இல்லை.

“இப்பொழுது பாதிப் பணம் கொடுத்தாலும் வீட்டைத் திருப் பித் தந்துவிடுகிறேன். பாக்கி பிறகு தரலாம். எனக்காக நீங்கள் படுகிற வேதனையைப் பார்த்தால்..”

திசை மாறிப் போய்விட்ட ஞாபகம், அப்போது தான் வந்தது. வீட்டை விற்றுப் பத்து வருஷமாகிவிட்டன. டில்லியில் வேர் விட்டாயிற்று. மாஜி வீட்டைப் பார்க்க மனசுக்கு ஆசை. ஆசை நிறைவேறாவிட்டால் கோபம், தாபம், ஆத்திரம். ‘மனமே, படு, படு. சொன்னதைக் கேட்டாயா? இந்த ஊரில் இறங்கும் வேலை இல்லை என்று சொன்னேனே, கேட்டாயா?”

இதோ போய்ப் பணத்தை எடுத்துக்கொண்டு வருகிறேன்” என்று கூறி, ரெயில்வே ஸ்டேஷனை நோக்கிக் கிளம்பினேன்.

ஒவ்வொருவரும் அடுத்தவனை முட்டாளென்று நினைக்கிறார்கள். ஆனால்…!

– ஏப்ரல், 1962, கலைமகள்.

– கலைமகள் பொன்விழாக் கதம்பம் (1932-1961), பொன்விழா வெளியீடு, முதல் பதிப்பு: ஏப்ரல் 1982, கலைமகள் காரியாலயம், சென்னை.

ந.பிச்சமூர்த்தி வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *