மணிமொழி, நீ என்னை மறந்துவிடு!






(2009ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18
13. அந்தப் பையில் என்ன இருக்கிறது?
மணிமொழி சென்றுகொண்டு இருந்த வாடகைக் கார், சாந்தோம் கடற்கரை ஓரமாக ஓரிடத்தில் நின்றது.
“அதோ பார், அந்த நான்காவது வீடுதான்! அங்கே கொண்டு காரை நிறுத்து!” என்றாள் மணி மொழி.
“எந்த வீடம்மா?”

“அதோ ஒரு கார் நிற்கிறதே, அந்த வீடுதான்! அந்தக் காரைத்தானே நாம் பின்பற்றி வந்து கொண்டிருக்கிறோம்! நாம் புறப்பட்ட நுங்கம்பாக்கத்திலிருந்து தான் அந்தக் காரும் புறப்பட்டது. அதை எப்படியும் பிடித்து விட வேண்டும் என்று நினைத்தேன். பிடித்துவிட்டேன்! போ, அந்தக் காருக்குப் பின்னால் போய் நம் காரை நிறுத்து!” என்றாள் மணிமொழி.
கார் புறப்பட்டது. காரோட்டி அந்தக் காருக்குப் பின்னால் போய்க் காரை நிறுத்தினான்.
கார் நின்றதும், மணிமொழி கீழே இறங்கி, “கொஞ்சம் இரு, இதோ வந்துவிடுகிறேன்” என்று சொல்லிவிட்டுத் தலையில் கிடந்த சேலையைச் சரிப்படுத்திக் கொண்டு, அந்த வீட்டு வாயிற்படிகளில் ஏறிக் கதவைத் தட்டினாள்.
கதவு திறந்தது. திறந்தவள் ஒரு கிழவி. இருட்டில், தனக்கு எதிரே நிற்பது ஒரு பெண் என்பது மட்டுமே அந்தக் கிழவிக்குத் தெரிந்தது.
“ஐயா இருக்கிறார்களா?” என்று கிழவியைப் பார்த்துக் கேட்டாள் மணிமொழி.
“மேலே மாடியில் இருக்கிறார்!”
“உங்களைப் பார்க்க உங்களுடன் படித்த தோழி ஒருத்தி வந்திருக்கிறாள் என்று போய் ஐயாவிடம் சொல்லுங்கள். வாடகைக் கார் காத்திருக்கிறது. நான் ஐயாவைப் பார்த்துவிட்டு உடனே போக வேண்டும்.”
“என்னடி பெண்ணே, நீ என்னைப் போய் மாடியில் ஏறச் சொல்லுகிறாயே? இந்த வயதிலே என்னாலே மாடி ஏற முடியுமா? மேலே ஐயா மட்டும்தான் இருக்கிறார். நீயே போய்ப் பார்!”
“வழி..?”
“அதோ, அடுத்த கட்டில் இருக்கிறது.”
“சரி” என்று சொல்லிவிட்டு மணிமொழி உள்ளே போனாள். மணிமொழி உள்ளே போனதும், கிழவி கதவைச் சாத்தித் தாழிட்டாள்.
மணிமொழி மாடிப் படிகளில் ஏறி மேலே வந்து பார்த்தபோது, அவன், இருட்டில் திறந்த வெளியில் கடலைப் பார்த்து நின்று கொண்டிருந்தான்.
மணிமொழியும் கொஞ்ச நேரத்திற்கு இருளிலேயே நின்று கொண்டு கடலையே பார்த்துக் கொண்டிருக்கும் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். நிலவு நேரமாதலால் வெளிச்சம் இருந்தது.
மௌனமாக நின்றுகொண்டு இருந்த மணிமொழி, ஒரு முடிவுக்கு வந்து, சுவரிலிருந்த சுவிட்சைப் போட்டாள். எங்கும் வெளிச்சம்!
விளக்கைப் போட்டதும் பளிச்சென்று அவன் தன் பையிலிருந்த துப்பாக்கியை எடுத்து நீட்டிப் பிடித்துக்கொண்டு திரும்பிப் பார்த்தான்.
மணிமொழி சோகத்தோடு நின்றுகொண்டிருந்தாள், பதுமை மாதிரி.
“மணிமொழி, நீயா?” என்று கேட்டுக்கொண்டே துப்பாக்கியைப் பைக்குள் போட்டுக் கொண்டு, மணிமொழிக்கு அருகில் வந்தான் அவன்.
“ஆமாம், தங்கதுரை! உங்கள் சகோதரி மணிமொழிதான் வந்திருக்கிறேன்!”
“மணிமொழி, உனக்கு நான் என்ன செய்ய வேண்டும்? சொல்லு, எதுவானாலும் செய்கிறேன்” என்றான் தங்கதுரை.
“அப்படியானால், என் மாமனாரின் பெட்டகத்திலிருந்து நீங்கள் எடுத்துக்கொண்டு வந்தீர்களே தோல்பை, அதைத் தாருங்கள்” தாருங்கள்” என்றாள் மணிமொழி.
“மணிமொழி!” என்று கத்தினான் தங்கதுரை.
“நான் பையை எடுத்துக் கொண்டு வந்தது உனக்கு எப்படித் தெரியும்?” “தங்கதுரை, நீங்கள் நினைப்பது போல அவ்வளவு அசடு அல்ல நான்!” “உனக்கு எப்படித் தெரியும் நான்தான் பையை எடுத்துக் கொண்டு வந்தேன் என்று? சொல் மணிமொழி?”
“வீட்டில் நானும் மாமனாரும் மட்டுமே இருக்கும் வேளை பார்த்து நீங்கள் வந்து, கரண்ட் டைக் கட் செய்துவிட்டு, மாமா வின் பெட்டகத்தை உடைத்துப் பையை எடுத்துக்கொண்டு என்னை தள்ளிவிட்டு ஓடினீர் கள்! இருட்டாக இருந்ததால் அதுவரை நீங்கள் யார் என்பது எனக்குத் தெரியாது. வெளியே ஓடி வந்து பார்த்தேன். அப்போது தெரு ஓரத்தில் மரத்தடியில் இருளில் நின்றுகொண்டிருந்த காரில் நீங்கள் ஏறினீர்கள். கார் கதவை நீங்கள் திறந்த போது, காருக்குள் விளக்கு எரிந்தது. அந்த வெளிச்சத்தில் உங்களையும் உங்கள் கையிலிருந்த பையையும் நான் நன்றாகப் பார்த்துவிட்டேன்.” என்றாள் மணிமொழி.
“மணிமொழி, நீ கெட்டிக்காரி!” என்றான் தங்கதுரை.
“இல்லை தங்கதுரை, நான் கெட்டிக்காரியாக இருந்திருந்தால் என் அப்பாவைத் தவிக்க விட்டுச் சென்னைக்குத் தனியாக வந்திருக்க மாட்டேன்!”
“தவறு மணிமொழி, தவறு! பம்பாயில் உன் அப்பாவோடு இருந்திருந்தால் நீ கைது செய்யப்பட்டிருப்பாய். இங்கு வந்ததால் தான் தப்பித்திருக்கிறாய்” என்று சொல்லிவிட்டுத் திரும்பி நடந்து சென்று, முன்பு நின்ற இடத்திலேயே போய் நின்றுகொண்டு மௌனமாக கடலைப் பார்த்துக் கொண்டிருந்தான் தங்கதுரை.
மணிமொழியும் மெல்ல நடந்து அவனுக்கருகில் போய் நின்று, “கொடுங்கள் பையை! வாடகைக் கார் காத்துக்கொண்டு இருக்கிறது. நான் போக வேண்டும்” என்றாள்.
“அந்தப் பையைத் தர முடியாது, மணிமொழி!’
“அந்தப் பை இல்லாமல் நான் இந்த வீட்டை விட்டுப் போக மாட்டேன்!” என்றாள் மணி மொழி.
“அந்தப் பையில் என்ன இருக்கிறது என்பது உனக்குத் தெரியுமா? அத்தனையும் வைர நகைகள்! லட்சத்திற்கு மேல் பெறுமானமுள்ள இந்த நகைகளைக் கொண்டு வருவதற்காக நான் எத்தனை நாள் திட்டமிட்டேன், தெரியுமா? ஆமாம், இந்தப் பையை வாங்கிக்கொண்டு செல்வதில் உனக்கு ஏன் இவ்வளவு அக்கறை?”
“சில நாட்களாக நான் அவர்களுடைய சோற்றைத்தானே தின்று வருகிறேன்?”
“நன்றியுணர்ச்சியா?”
“பெண்களுக்கு வேண்டியது கற்புக்கு அடுத்தபடியாக அது தானே?”
“ஒப்புக்கொள்கிறேன். நன்றியோடு நடந்துகொள்ள வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காகத் தான் இந்தப் பையை நீ கேட்கிறாயா?”
“கொஞ்சம் சுயநலமும் உண்டு!”
“உனக்கா மணிமொழி? உனக்கா சுயநலம்?”
“ஆமாம் தங்கதுரை! எனக்கும் சுயநலம் உண்டு. சுயநலமற்றவர்கள் இங்கே யார் இருக்கிறார்கள்?”
“சரி, உன் சுயநலமென்ன இதிலே?”
“சொல்லத்தான் வேண்டுமா தங்கதுரை?”
“சொல்லவேண்டிய நிலைக்கு நீ வந்துவிட்டாய் மணிமொழி!?”
“உண்மைதான் தங்கதுரை, நீங்கள் சொல்வது உண்மைதான். என் சுயநலத்தை நான் உங்களிடம் சொல்லவேண்டிய நிலைக்கு வந்துவிட்டது உண்மைதான்! கேட்டுக்கொள்ளுங்கள் என் சுயநலத்தை. நகைப் பையைக் காணோம் என்றதும் என்னைத் தான் எல்லாரும் சந்தேகப்படுவார்கள். அப்புறம், அவர்கள் பார்வையில் நான் திருடியாகி விடுவேன்! திருடி என்ற பெயரோடு என்னால் வாழ முடியாது தங்கதுரை!” என்று சொல்லி விட்டு மணிமொழி அழுதாள்.
தங்கதுரை நிமிர்ந்து வானத்தைப் பார்த்தான். மழை வரும் போலிருந்தது. தங்கதுரை திரும்பி மணி மொழியைப் பார்த்து, “மணி மொழி, நீ என்ன உதவிகள் கேட்டாலும் செய்கிறேன், பையை மட்டும் கேட்காதே!” என்றான்.
“தர முடியாதா?” என்று கேட்டு, குரலைக் கடுமையாக்கிக் கொண்டாள் மணிமொழி.
“தரமுடியாது!” என்றான் தங்கதுரை. “தருவதால் எனக்கு எந்த நன்மையும் இல்லை!”
“எனக்கு நன்மை உண்டு!”
“உன் நன்மையைப் பற்றி எனக்குக் கவலை இல்லை!”
“ஆனால், உங்கள் நன்மையைப் பற்றி உங்களுக்குக் கவலை உண்டல்லவா?” “உண்டு.”
“அப்படியானால் தந்துவிடுங்கள்.”
“தராவிட்டால்..?”
“பையை நீங்கள் தராவிட்டால் பம்பாயிலிருக்கும் உங்கள் முதலாளிக்கு எழுதுவேன். முதலாளிக்குத் தெரிந்தால் நீங்கள் சுடப்படுவீர்கள்!”
“மணிமொழி..!”
“சொல்லுங்கள்?”
“நீ நிறையத் தெரிந்து வைத்திருக்கிறாய் மணிமொழி!”
“இல்லாவிட்டால் உங்களைப் பின்தொடர்ந்து துணிந்து இங்கே வந்திருக்க மாட்டேன்!”
“சரி, ஒன்று செய்வோம். பையிலிருக்கும் வைர நகைகளை நாம் இருவருமாக எடுத்துக் கொண்டு எங்காவது ஓடிவிடுவோம்.”
“இதற்கு நான் சம்மதிக்காவிட்டால்?”
“சம்மதிக்காவிட்டால்…?” என்று வாயில் விரலை வைத்துக் கடித்தபடியே திறந்தவெளிக்குப் போனான். மழை கொட்டியது.
மழையில் நனைந்துகொண்டே அங்குமிங்கும் உலாவினான்.
மணிமொழி தங்கதுரையிடம் வந்து நின்று, “பூனையாக நிற்கும் என்னைப் புலியாக மாற்றாதீர்கள் தங்கதுரை!” என்றாள்.
“உண்மைதான் மணிமொழி, உண்மைதான்! வா, பையைத் தருகிறேன்!” என்று கையை நீட்டினான், அவள் அவன் கையைப் பிடித்துக்கொள்ள.
“நீங்கள் முன்னால் போங்கள், பின்னால் நான் வருகிறேன்” என்றாள் மணிமொழி.
தங்கதுரை ஏமாந்தான். “சரி” என்று சொல்லிவிட்டுத் திரும்பி நடந்தான் தங்கதுரை. பின்னாலேயே மணிமொழி நடந்தாள்.
மாடிப்படிகளில் இறங்கிக் கொண்டிருந்த தங்கதுரை திடீரென்று நின்று திரும்பி, “இந்தப் பையைத் திருப்பிக் கொண்டு போய் இருந்த இடத்திலேயே வைத்துவிட்டால், நல்லவளாகி விடலாம் என்று நினைக்கிறாயா மணிமொழி?” என்று கேட்டான்.
“பலனைப் பற்றிக் கவலை இல்லை எனக்கு. என்னுடைய செஞ்சோற்றுக் கடன் இது. இதை நான் செய்தாக வேண்டும்!” என்றாள் மணிமொழி.
தங்கதுரை திரும்பிப் படிகளில் இறங்கினான். பின்னாலேயே மணிமொழியும் இறங்கினாள்.
திடீரென்று மீண்டும் தங்கதுரை திரும்பி நின்று, “மணிமொழி, ஒன்று கேட்பேன், பதில் சொல்வாயா?” என்று கேட்டான்.
“சொல்லக்கூடியதாக இருந்தால் சொல்கிறேன்” என்றாள் மணிமொழி.
“என் முதலாளியைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?”
“உங்கள் முதலாளி யார், அவர் எங்கிருக்கிறார், என்ன செய்கிறார் என்பது எல்லாமே எனக்குத் தெரியும். அவர் செய்யும் செயலில் ஒரு பெரும் திருக் கூட்டமே பங்கு கொண்டிருக்கிறது! அந்தக் கூட்டத்தில் நீங்களும் ஒருவர்.”
மீண்டும் இருவரும் இறங்கினார்கள். கடைசிப் படியில் கிழவி நின்றுகொண்டிருந்தாள்.
தங்கதுரை அவளைப் பார்த்து, “ஆயா, இந்த அறைச் சாவியை எடுத்து வா!” என்று பக்கத்தில் படியோரத்திலிருந்த அறையைச் சுட்டிக்காட்டினான். கிழவி உள்ளே போய்ச் சாவியை எடுத்து வந்து கொடுத்தாள்.
“வெளிக்கதவு தாழிட்டிருக் கிறதல்லவா?”
“போட்டிருக்கிறது, ஆனால் சும்மா யாரோ கதவைக் தட்டிக் கொண்டே இருக்கிறார்கள்!” என்றாள் கிழவி.
“என்னது..? கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறார்களா?” என்று பதறிக் கேட்டான் தங்கதுரை.
“பதற வேண்டாம் தங்கதுரை, வாடகைக் காரோட்டிதான் கதவைத் தட்டிக் கொண்டிருப்பான். நான் வந்து நேரமாயிற்று. மழை வேறு கொட்டுகிறது, அதனால்தான் கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறான்!” என்றாள் மணிமொழி.
“இருந்தாலும், இந்த அறையைத் திறப்பதற்கு முன்னால், கதவைத் தட்டுவது யார் என்பதை நான் தெரிந்துகொள்ள வேண்டும்!” என்றான் தங்கதுரை.
பின்பு, விறுவிறுவென்று நடந்து போய் தாழைத் தள்ளிக் கதவைத் திறந்தான். வெளியே
மழை… காற்று… வேறு எவரும் இல்லை!
மழை சோவென்று பெய்தது! பெருமழை!
சாரல் அடித்ததால் தங்கதுரை கதவைச் சாத்திவிட்டுத் திரும்பி னான். அப்போது எவரோ படபடவென்று கதவைத் தட்டினார்கள்.
தங்கதுரை, பளிச்சென்று திரும்பி கால் சட்டைப் பையில் இருந்த துப்பாக்கியை எடுத்து இடக்கையில் பிடித்துக்கொண்டு, வலது கையால் கதவின் தாழைத் தள்ளினான். கதவைத் திறந்தான். வெளியே மழை… காற்று… எவரும் இல்லை.
வெளியிலிருந்து தூற்றலுடன் அடித்த சாரலால் தங்கதுரையின் உடை முழுவதும் நனைந்து விட்டது. கனத்த மழை அடித்ததால் தங்கதுரை கதவைச் சாத்தித் தாழிட்டுவிட்டுத் திரும்பினான். அப்போது எவரோ படபடவென்று கதவைத் தட்டினார்கள்.
கதவைத் தட்டிய ஓசையைக் கேட்டதும் கொஞ்ச நேரம் நின்று சிந்தித்த தங்கதுரை, திரும்பாமல் நேராக மணிமொழி நிற்கும் இடத்திற்கு வந்தான்.
“யாரது கதவை தட்டியது?” என்று கேட்டாள் மணிமொழி.
“எவரும் இல்லை” என்று சொல்லிவிட்டு, அந்த அறைப் பூட்டைத் திறந்து கதவைத் தள்ளினான். பின்பு, கிழவியைப் பார்த்து, “ஆயா, நீ போய் அந்த வெளிக் கதவுக்கருகில் நில். எவர் கதவைத் தட்டினாலும் திறக்காதே!” என்றான்.
“ஆகட்டும்” என்று சொல்லி விட்டுக் கிழவி போய்விட்டாள்.
பின்பு தங்கதுரை அறைக்குள் புகுந்துகொண்டு, “வா, மணிமொழி” என்று கூப்பிட்டான்.
“இல்லை, நான் இங்கேயே இருக்கிறேன். நீங்கள் எடுத்துக் கொண்டு வாருங்கள்” என்று அறைக்கதவைப் பிடித்துக் கொண்டு, வெளியிலேயே நின்றாள் மணிமொழி.
“சரி” என்ற தங்கதுரை அறை விளக்கைப் போட்டான்.
அறையில் ஒரு பெட்டகமும், இரண்டு பெரிய பீரோக்களும் இருந்தன.
தங்கதுரை பெட்டகத்தைத் திறந்து, பையை வெளியே எடுத்தான். அந்தப் பைதான்… அதே பைதான்!
“இந்தா மணிமொழி, வந்து பையை எடுத்துக்கொள். பைக்குள் நகைகளெல்லாம் பத்திரமாக இருக்கின்றனவா என்று பார்த்துக்கொள்” என்றான்.
மணிமொழி அறைக்குள் நுழைந்து பையை எடுத்துத் திறந்து, நகைகளெல்லாம் சரியாக இருக்கின்றனவா என்று பார்த்தாள். அப்போது தங்கதுரை திடீரென்று எழுந்து வெளியே ஓடிப்போய் கதவைச் சாத்திப் பூட்டிவிட்டான். பூட்டிய அறைக் கதவின் சாவியைத் தன் பைக்குள் போட்டுக்கொண்டு, கதவோரத்தில் நின்றுகொண்டிருந்த கிழவியிடம் போய், “ஆயா! வீட்டைப் பார்த்துக்கொள். நான் வெளியே போகிறேன். கதவைத் தாளிட்டுக்கொள். நான் வரும்வரைக்கும் கதவைத் திறக்காதே. எவர் தட்டினாலும் திறக்காதே!” என்று சொல்லிவிட்டுக் கதவைத் திறந்து கொண்டு, கொட்டும் மழையில் வெளியே ஓடினான்.
கிழவி கதவைச் சாத்தித் தாளிட்டுக் கொண்டாள்.
அம்மா, பெரியவளே! கிழவித் தாயே! வயதாகிவிட்டால் எலலாரும் காசி எங்கே என்று தேடிப் போய்ப் புண்ணியத்தைத் தேடிக் கொள்வார்கள். நீ காசு எங்கே என்று தொலைக்க முடியாத பாவங்களைச் செய்து கொண்டிருக்கிறாயே, தாயே! உனக்கென்று யாருமே இல்லாத இந்த உலகத்தில் காசு கர்மாந்தரங்களெல்லாம் உனக்கு எதற்கு?
14. கதவைத் திறந்தது யார்?
அறைக்குள் அகப்பட்டுக் கொண்ட மணிமொழி படபட வென்று கதவைத் தட்டினாள்.
‘இந்த நேரத்திற்கு, குழந்தை இளங்கோவோடு கோயிலுக்குப் போயிருந்த மாமியார் திரும்ப வந்திருப்பார். இந்த இருண்ட வேளையில் நான் வீட்டில் இல்லாமல் இருப்பதைப் பற்றி என்ன நினைப்பார்? மாமியார் கூடத் துணைக்குப் போயிருந்த பாவை, வீட்டிற்குத் திரும்ப வந்ததும் என்னைத் தேடுவாளே! மருந்து வாங்கப் போயிருக்கும் இளையவர் திரும்பி வந்து, அறை திறந்து கிடப்பதையும் நகைப்பை காணாமல் போனதையும் பார்த்திருப்பார்! நானும் அந்த வீட்டில் இல்லை என்பது தெரிந்ததும், நான்தான் நகைகளை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டேன் என்ற முடிவுக்கு வந்துவிடுவாரே! நம்முடைய திட்டம் நிறைவேறாமல் போய், கள்ளி என்ற பட்டம் கிடைத்துவிட்டால் என்ன செய்வது?” என்று மணிமொழி மிகக் கவலை கொண்டாள்.
படபடவென்று கதவைத் தட்டினாள் மணிமொழி. திடீரென்று கதவு திறந்தது.
தூக்கிவாரிப் போட்டது மணி மொழிக்கு! கதவு திறந்து கொள்ளும் என்று அவள் நினைக்கவே இல்லை. கடமைக்காகக் கதவைத் தட்டிக்கொண்டிருந்த மணி மொழி, கதவு திறந்ததும் திடுக்கிட்டாள்.
கதவை நன்றாகத் திறந்து கொண்டு, வெளியே வந்து பார்த்தாள்.
எவரும் இல்லை!
கதவைத் திறந்தது யார்?
தெரியவில்லை!
மணிமொழி, கையில் நகைப்பையுடன் மெல்லக் கால்களை எடுத்து வைத்து வாயிற்கதவுக்கு அருகில் வந்தாள். வாயிற் கதவு திறந்து கிடந்தது.
சுற்றுமுற்றும் பார்த்தாள். எவரும் இல்லை!
மணிமொழி தப்பி வெளியே செல்லவேண்டும் என்பதற்காகவே யாரோ செய்த மாதிரியல்லவா இருக்கிறது! கிழவி எங்கே?
மணிமொழி வெளியே தலையை நீட்டித் தெருவைப் பார்த்தாள். மழை கொட்டு கொட்டென்று கொட்டியது! தெருவில் எவருமே இல்லை! அவள் வந்த வாடகைக் கார்..?
அதுவும் இல்லை!
‘வாடகைக் கார்க்காரன், வாடகைப் பணத்தைக்கூட வாங்காமல் போய்விட்டானே! சரி போகட்டும், இப்போது இந்தக் கொட்டும் மழையில் எப்படிப் போவது? இனிச் சிந்திக்கவோ, தாமதிக்கவோ நேரமில்லை!” என்று எண்ணிய மணிமொழி, வெளிக் கதவைச் சாத்திவிட்டு, தலைப்புச் சேலையை எடுத்துத் தலையில் போட்டுக்கொண்டு படிகளில் இறங்கிக் கொட்டும் மழையில் தெருவில் நடந்தாள். அப்போது அதே கதவைத் திறந்து கொண்டு ஓர் உருவம் வெளியே வந்து, படிகளில் இறங்கி, மணி மொழியைப் பின்பற்றி நடக்கத் தொடங்கியது.
மணிமொழி! கொட்டும் மழையில் இரவில் பணப்பையுடன் தனியாகப் போகும் உன்னை ஓர் உருவம் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறதே! திரும்பிப் பாரம்மா! கொஞ்சம் திரும்பிப் பாரம்மா!
15. அண்ணி! நீங்களே இப்படிச் செய்யலாமா?
மணிமொழி, நகைப்பையுடன் பங்களாவிற்குத் திரும்பிய போது, பங்களா இருளில் மூழ்கிக் கிடந்தது.
வாயிற்பக்கத்தில் காவல் காப்போன் நூல் நூற்றுக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.
மணிமொழி பங்களாவிற்குப் பின்பக்கம் தோட்டத்திற்கு ஓரமாக வந்து நின்று பார்த்தாள். எந்த ஓசையும் இல்லை; எவரும் இல்லை. மழை இப்போது கடுமையாக இல்லை என்றாலும் கொஞ்சம் பெய்துகொண்டுதான் இருந்தது. மணிமொழி தெப்பமாக ஊறிப்போயிருந்தாள். சேலை அவள் உடம்போடு ஒட்டிப் போயிருந்தது.
மணிமொழி உள்ளே போக வேண்டுமென்றால் சிறு கட்டைச் சுவரில் ஏறிக் குதித்துதான் போக வேண்டும்! பெண்ணொருத்தி மழையில், இருளில், சுவர் ஏறிக் குதிப்பதா?
மணிமொழி அஞ்சவில்லை. கையைச் சுவரின்மேல் வைத்தாள். சுவரில் இருந்த குழிகளில் விரல்களை வைத்துச் சுவரைப் பிடித்துக்கொண்டு ஏறித் தோட்டத்திற்குள் குதித்தாள். குதித்ததும் நகைப்பையை எடுத்துக்கொண்டு நடந்து கதவுக்கருகில் வந்தாள்.
கதவு திறந்து கிடந்தது!
எப்பொழுதும் சாத்தித் தாழிடப்பட்டிருக்கும் தோட்டத்துக் கதவு திறந்து கிடக்கிறதே?
மணிமொழி அச்சத்துடன் அச்சத்துடன் உள்ளே நுழைந்து கதவைத் தாழிட்டாள். வெளியே மீண்டும் மழை பிடித்துக் கொண்டது!
மணிமொழி கையில் பையுடன், விளக்கு எரிந்துகொண்டு இருந்த பின்கட்டுக்கு வந்தாள்.
அங்கே, ஒரு தூணில் சாய்ந்து நின்றுகொண்டிருந்தான் முத்தழகு.
அவனைக் கண்டதும் மணிமொழியின் கையில் இருந்த பை கீழே விழுந்தது. பைக்குள் இருந்த வைர நகைகள் சிதறின!
முத்தழகு, குளிரில் நடுங்கும் மணிமொழியையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தான். பின்பு மணிமொழிக்கு அருகில் வந்து, “அண்ணி, முதலில் போய் நீங்கள் உடையை மாற்றிக்கொண்டு மாடிக்கு என் அறைக்கு வாருங்கள்” என்றான்.
மணிமொழி அங்கேயே நின்றுகொண்டிருந்தாள். முத்தழகு கொஞ்சம் கடுமை கலந்த குரலில், “போங்கள் அண்ணி, போய் உடையை மாற்றிக் கொண்டு மாடிக்கு என் அறைக்கு வாருங்கள். போங்கள்” என்றான்.
மணிமொழி மெல்ல அந்த இடத்தை விட்டுப் போனாள்.
மணிமொழி மெல்ல அந்த இடத்தைவிட்டுப் போனதும், முத்தழகு தரையில் சிந்திக் கிடக்கும் வைர நகைகளைப் பார்த்தான்.
அவன் கண்கள் கலங்கின! காரணம், அவை அனைத்தும் குடும்பத்தின் பூர்விக நகைகள். மிகவும் பழைமையான விலை உயர்ந்த அந்த நகைகளை அப்பாவும் அம்மாவும் கவனத்துடன் காத்து வந்தார்கள். பெட்டகத்திற்குள்ளே பத்திரமாக இருக்கவேண்டிய நகைகள் இப்படிச் சிதறிக் கிடக்கின்றனவே!
அப்பாவும் அம்மாவும் எந்தத் துக்கத்தை வேண்டுமானாலும் தாங்கிக் கொள்வார்கள். வீட்டில் இருக்கும் பூர்விகமான நகைகளை இழக்கின்ற துன்பத்தை மட்டும் அவர்களால் தாங்க முடியாது! வீட்டைவிட்டு வெளியே சென்ற நகைகள் நல்லவேளையாக பத்திரமாகத் திரும்ப வந்துவிட்டன.
முத்தழகு ஒவ்வொரு நகையாக எடுத்துப் பைக்குள் போட்டு, நன்றாக மூடி, கையில் எடுத்துக் கொண்டான். பெட்டகம் இருந்த அறையை நோக்கி நடந்தான்.
அப்பாவின் அறைக் கதவு சாத்தியிருந்தது. இதனால் அப்பா நன்றாக அயர்ந்து உறங்கிக் கொண்டு இருக்கிறார் என்பது தெரிந்தது.
பெட்டகம் இருந்த அறைக்கு உள்ளே சென்று, விளக்கைப் போட்டான் முத்தழகு. பின்பு, பெட்டகத்தைத் திறந்து, அந்த நகைப்பையை இருந்த இடத்திலேயே வைத்துப் பூட்டினான். பின்பு, விளக்கை அணைத்துக் கதவைச் சாத்தி, கால்சட்டைப் பைக்குள்ளிருந்து ஒரு பூட்டை எடுத்துப் பூட்டி, சாவியைப் பைக்குள் போட்டுக்கொண்டு, மாடிப்படிகளில் ஏறி, தன் அறைக்கு வந்து, சாய்வு நாற்காலியில் அமர்ந்தான்.
கொஞ்ச நேரமாயிற்று. படிகளில் எவரோ ஏறிவரும் ஓசை கேட்டது. முத்தழகு அறையை விட்டு வெளியே வந்து எட்டிப் பார்த்தான்.
விடியும்போது கட்டவிழ்க்கும் மல்லிகை போல், வெள்ளைச் சோளி, வெள்ளைச் சேலையுடன் மாடிப்படிகளில் வந்துகொண்டு இருந்தாள் மணிமொழி. நிலவு வெளிச்சத்தில் அவளைப் பார்க்கும்போது…
முத்தழகின் முகம் சிவந்தது.
மணிமொழி மாடிக்கு வந்தாள். அறைக்குள் நுழையாமல் வெளியிலேயே நின்றாள்.
சற்று நேரம் கதவோரத்திலேயே நின்றுகொண்டிருந்த மணிமொழி திரும்பிப் படிக்கட்டை நோக்கி மெல்ல நடந்தாள்.
இதைக் கண்ட முத்தழகு அறையை விட்டு வெளியே வந்து, “அண்ணி! வாருங்கள் அண்ணி!” என்று அழைத்தான். அவன் கால்கள் மெல்ல நடுங்கின. வெள்ளைத் தாமரை போல் வெளிறிப்போன மணிமொழியின் முகத்தை, முத்தழகின் கண்கள் பார்த்துக்கொண்டே இருந்தன.
மணிமொழி, தலையைக் குனிந்துகொண்டே முத்தழகுக்கு அருகில் வந்து நின்றாள்.
“குளித்தீர்களா அண்ணி?” என்று கேட்டான் முத்தழகு. இதைக் கேட்கும்போது, அவன் மணிமொழிக்கு மிக அருகில் இருந்தான். அந்தப் பின்னிரவில் வீசிய மெல்லிய காற்று, மணிமொழியின் சேலைத் தலைப்பை முத்தழகின் மேல் படும்படி செய்தது.
இருந்தாலும் மணிமொழி இருந்த இடத்தை விட்டு நகராமல், “நீங்கள் உடையை மாற்றிக் கொண்டு வரும்படி சொன்னீர்கள். குளிக்காமல் உடையை மாற்றும் பழக்கம் எனக்கு இல்லை” என்றாள்.
“தண்ணீர் குளிர்ந்துவிட்ட இந்த நேரத்தில் குளிக்கலாமா அண்ணி?”
“எனக்கு இப்படி நினைத்த நேரத்திலெல்லாம் குளித்துப் பழக்கம் உண்டு. அதனால் என் உடம்புக்கு ஏதும் வராது!”
“நீங்கள் ஈரப் புடைவையுடன் இருக்கிறீர்களே என்றுதான் உடையை மாற்றிக்கொண்டு வரச் சொன்னேன்.”
“நான் வரும்போது, உங்கள் அம்மாவின் அறையில் இளங்கோ அழுதுகொண்டிருந்தான். அவ னுக்குப் பால் கொடுக்க உங்கள் அம்மா என்னைத் தேடினாலும் தேடுவார்கள். என்னிடம் நீங்கள் என்ன சொல்லவேண்டும்? சொல்லுங்கள்!”
“அண்ணி, இப்படி வாருங்கள்” என்று மணிமொழியை அறைக்குள் அழைத்தான் முத்தழகு.
மணிமொழி உள்ளே வந்தாள். முத்தழகு சட்டென்று கதவைச் சாத்தித் தாழிட்டான். பின்பு, மணிமொழிக்கு அருகில் வந்து, “நீங்களே இப்படிச் செய்யலாமா அண்ணி?” என்று கேட்டான்.
“இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன்னால், என் கேள்விகள் சிலவற்றுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும்!”
“கேளுங்கள் அண்ணி!”
“நகைப் பையை இருந்த இடத்திலேயே வைத்துவிட்டீர்கள் அல்லவா?”
“ஆமாம்.”
“நகைப்பை காணாமல் போனது இந்த வீட்டில் யாருக்காவது தெரியுமா?”
“யாருக்கும் தெரியாது!?” என்ற முத்தழகு, மணிமொழியை இன்னும் மிக நெருங்கி வந்து நின்று, துக்கம் கலந்த குரலில், “ஆனால், நீங்களே இப்படிச் செய்யலாமா அண்ணி?” என்று கேட்டான்.
மணிமொழி நிமிர்ந்து முத்தழகைப் பார்த்தாள். அவள் கண்களிலிருந்து நீர் தாரை தாரையாகக் கொட்டியது. அதைக் கண்டு முத்தழகு திடுக்கிட்டான்!
முத்தழகு, தன் முகத்தை இன்னும் மணிமொழியின் முகத்திற்கு அருகில் கொண்டு போய், “என் அண்ணன் இறந்து போய் விட்டார். அவருக்கு வாரிசாக அவர் அவர் மகன் இளங்கோ இருக்கிறான். எங்கள் இரண்டு பேரைத் தவிர, வேறு எவரும் இல்லை பங்கு கேட்க! ஆகையால், சொத்துக்கள் அனைத்தையும் இரண்டு பங்காகப் பிரிக்க வேண்டியது தான். அப்போது அந்தப் பையில் உள்ள நகைகள் அனைத்தையும் அப்படியே இளங்கோ பங்குக்குக் கிடைக்கும்படி செய்துவிடுகிறேன். அப்புறம், அவை உங்கள் நகைகள்தாமே!” என்றான் உறுதியான குரலில்.
இதைக் கேட்டதும் மணிமொழி, தன் கைகள் இரண்டாலும் முகத்தை மூடிக்கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
“அண்ணி!” என்று தடுமாறும் குரலில் கூறிக்கொண்டே, மணி மொழியின் கரங்களை விலக்கப் போனான் முத்தழகு. அப்போது படபடவென்று யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டது.
முத்தழகு பட்டென்று விலகி நின்று கதவைப் பார்த்தான். மணிமொழி சட்டென்று முகத்தைத் துடைத்துக்கொண்டு கதவோரம் ஒளிந்து நின்றாள்.
முத்தழகு தன்னைச் சரிப்படுத் திக்கொண்டு கதவைத் திறந்தான். வெளியே எவரும் இல்லை!
வெளியே வந்து கூடம் முழுவதும் பார்த்தான். எவரையும் காணோம். படிகளை எட்டிப் பார்த்தான். எவரும் இல்லை!
திரும்பி வந்தான். அறைக்குள் நுழைந்து, “எவரும் இல்லை அண்ணி!” என்று சொல்லிக் கொண்டே கதவைத் தாழிடப் போனான்.
உடனே, “தாழிடாதீர்கள்! எவரோ வந்து கதவைத் தட்டிய பிறகு, இங்கு உங்கள் அறையில் இந்த நேரத்தில் நான் இருப்பது சரியல்ல!” என்று சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியே வந்தாள் மணிமொழி.
படிகளில் இறங்கிக் கண்ணிலிருந்து மறைந்து போனாள்.
– தொடரும்…
– மணிமொழி, நீ என்னை மறந்துவிடு! (தொடர்கதை), ஆனந்த விகடன்.