மணிமொழி, நீ என்னை மறந்துவிடு!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: October 6, 2024
பார்வையிட்டோர்: 7,370 
 
 

(2009ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9

4. மகளே… உன்னை நான் ஏமாற்றிவிட்டேன்!

மணிமொழி பயணம் செய்த வாடகைக் கார், அவளுடைய வீட் டிற்கு முன்னால் வந்து நின்றது.

மணிமொழி, தன் கையிலிருந்த பெட்டியுடன் கீழே இறங்கி காருக்கான வாடகையைக் காரோட்டியிடம் கொடுத்துவிட்டு, வீட்டிற்குள் நுழைந்து மாடிப்படிகளில் ஏறி, “அப்பா! அப்பா!” என்று அழைத்துக்கொண்டே உள்ளே ஓடினாள்.

அரைத் தூக்கத்திலிருந்த நம்பி, கண்களைத் திறக்க முடியாமல் துன்பம் கொண்டு கண்களைத் திறந்து திரும்பிப் பார்த்தார்.

மணிமொழி ஓடி வந்து பெட்டியைத் தரையில் வைத்துவிட்டுக் கைகளை அவர் மடியில் ஊன்றிக் ஊன்றிக் கொண்டு, கொண்டு, “அப்பா, நான்கு பேரிடம் நான்கு பெட்டிகளையும் கொடுத்து விட்டேன். ஐந்தாவது மனிதரிடம் ஐந்தாவது பெட்டியைக் கொடுக்க முடியவில்லை!” என்று சொல்லிப் பதறினாள்; குமுறினாள்; பரபரப்புக் கொண்டாள்; பதைபதைத்தாள்.

நம்பி, “ஏன்?” என்று கேட்டு, மணிமொழியின் முதுகில் கையை வைத்தார்.

“அப்பா, அந்த மனிதர், ஐந்தாவது பெட்டியை வாங்கிக்கொள்ள வேண்டியவர், நெற்றியில் துப்பாக்கிக் குண்டு பட்டுச் செத்துக் கிடக்கிறாரப்பா!” என்று சொல்லிவிட்டு அழப் போனாள் மணிமொழி. அதற்குள்…

நம்பி சட்டென்று எழுந்து, “ஆ.!” என்று கத்தினார். அவர் முகம் வேறுபாடு அடைந்தது.

“மணிமொழி, நன்றாகப் பார்த்தாயா? அவர் செத்தா கிடக்கிறார்?” என்று மணிமொழியின் தோள்களைப் பற்றிக்கொண்டு கேட்டார்.

“ஆமாம் அப்பா, அவரை எவரோ சுட்டுக் கொன்றுவிட்டார்கள்! உயிர் போய்விட்டது. உடல்தான் கிடந்தது!” என்றாள் மணிமொழி, சேலைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக்கொண்டு.

“பிணம்! பிணமா?!?” என்று கத்திக்கொண்டே, குலுங்கிக் குலுங்கி அழுதார் நம்பி.

மணிமொழி நிமிர்ந்து அப்பா வின் தாடையைத் தொட்டுப் பிடித்து, “அப்பா, ஏன் இப்படி அஞ்சுகிறீர்கள்? ஏன் இப்படி நீங்கள் அழ வேண்டும்?” என்று கேட்டாள்.

“மணிமொழி! இந்த விநாடியிலிருந்து நான் அஞ்ச வேண்டியவன் தான்; அழவேண்டியவன்தான்” என்று சொல்லிவிட்டு விக்கினார் நம்பி.

“விளங்கச் சொல்லுங்கள் அப்பா!” என்ற மணிமொழி அப்பாவின் முகத்தைத் தன் பக்கத்திற்குத் திருப்பினாள்.

நம்பி கண்களைத் துடைத்துக் கொண்டு பரபரப்போடு, “மணி மொழி, எல்லாவற்றையும் உனக்கு விளக்கிக் கொண்டிருக்க நேரம் இல்லை” என்று சொல்லிவிட்டு நேரத்தைப் பார்த்தார். பிறகு, “இன்னும் கொஞ்ச நேரத்தில் சென்னைக்கு ஒரு விமானம் புறப்பட இருக்கிறது. அதில் நீ சென்னைக்குப் போய்ச் சேர வேண்டுமம்மா!” என்றார்.

“ஏனப்பா நான் மட்டும் உடனே சென்னைக்குப் போக வேண்டும்?” என்று கேட்டாள் மணிமொழி.

“கேசவதாஸ் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிற நேரத்தில் நீ அவர் மாளிகைக்குப் போய் வந்திருக்கிறாய்! நீ அங்கு போய் வந்த அடையாளம் ஏதாவது இருக்கும்! அங்குள்ள தரையில் நீ நடந்த கால் அடையாளங்களும், அங்குள்ளவற்றை நீ தொட்ட கைவிரல் அடையாளங்களும் போதுமே!” என்று குமுறினார் நம்பி.

“அதனால் என்ன?” என்று குழந்தையைப் போல் கேட்டாள் மணிமொழி.

மணிமொழியின் மாசுமருவற்ற இந்தத் தன்மை நம்பியை நிலை குலையச் செய்தது!

“அதனால் என்ன என்றா கேட்கிறாய்? தெரிந்துகொள். விடிவதற்குள் கேசவதாஸ் தன் மாளிகையில் கொலை செய்யப்பட்டுச் செத்துக் கிடப்பது போலீசுக்குத் தெரிந்து விடும்! கேசவதாஸ் பெரும் பணக்காரர். அதனால் போலீசார் இந்த வழக்கில் அக்கறையோடு ஈடுபடுவார்கள். கேசவதாஸைக் கடைசியாகப் பார்த்தது யார் என்பதை விடிவதற்குள் எப்படியும் கண்டு பிடித்துவிடுவார்கள்! நீ கேசவதாஸ் வீட்டிற்குப் போய் வந்ததை வாடகைக் கார் ஓட்டியைத் தவிர மற்றவர்களும் பார்த்திருக்கக்கூடும், உனக்குத் தெரியாமல்! நாளைக்குள் வாடகைக் காரோட்டிகள் அனைவரையும் பிடித்து, நீ சென்ற கார் ஓட்டியைப் பிடித்துவிடுவார்கள்!?”

இதைச் சொன்ன பிறகு, நம்பியின் உடல் கொஞ்சம் நடுங்கத் தொடங்கியது!

“கண்டுபிடிக்கட்டுமே! நான் தான் கேசவதாஸ் வீட்டிற்குக் கடைசியாகப் போய் வந்தவள் என்பதைப் போலீசார் கண்டுபிடிக்கட்டுமே! அதனாலென்ன?” என்று கேட்டாள் மணிமொழி.

“மகளே! நீ குழந்தை! போலீசார் உன்னைக் கண்டுபிடித்துவிட்டால், உன்னையும் என்னையும் சும்மா விட்டுவிட மாட்டார்கள்!” என்றார் நம்பி.

“ஏனப்பா?”

“கேசவதாஸ் யார் தெரியுமா?”

“தெரியாது!”

“அவர் நல்லவரல்ல! அதனால் தான் சுடப்பட்டுக்கிடக்கிறார்.”

மணிமொழி எதையோ கேட்க வாயைத் திறந்தாள். நம்பி சட் டென்று அவள் வாயைத் தன் கரத்தால் மூடி, மற்றொரு கரத்தால் அவளைப் பற்றிச் சன்னலுக்கு அருகில் அழைத்துக்கொண்டு வந்தார். சன்னலுக்கு அருகில் வந்ததும் வெளியே ஒருமுறை எட்டிப் பார்த்துவிட்டு மணிமொழியின் முகத்தை ஒரு கரத்தால் தூக்கிப் பிடித்துக்கொண்டு அவர் சொன்னார்…

“மகளே! உன்னை நான் ஏமாற்றி விட்டேன்! உனக்கு முன்பு நான் ஏமாற்றியது உன் தாயை. ஏமாற்றம் தாங்காத உன் தாய் நம்மைவிட்டுப் போய்விட்டாள்! என்றைக்கு உன் தாய் இறந்தாளோ, அன்றிலிருந்து உன்னையும் ஏமாற்றத் தொடங்கி விட்டேன்! இப்பொழுது நீ சாகக் கூடாது மகளே! நான்தான் சாக வேண்டும்! நீ குற்றமற்றவள்!”

நம்பி ஓவென்று அழுதார். மணிமொழி, “அப்பா!” என்று வீறிட்டுக் கத்தினாள்.

பெற்றவரும் பெற்ற மகளும் மனம்விட்டு அழுதுகொண்டிருக்கும் இந்த நேரத்திலே, கீழே கார் ஒன்று வந்து நிற்கும் ஓசை கேட்டது. உடனே நம்பி தன் அழுகையை நிறுத்தித் தன்னைச் சரிப்படுத்திக் கொண்டு, வெளியே எட்டிப் பார்த்தார்.

காரை நிறுத்திய காரோட்டி, தன் இருப்பிடத்திலிருந்து ஆறு பெட்டிகளை எடுத்துக்கொண்டு மேலே ஏறிவந்தான்.

நம்பி கதவைத் திறந்தார்.

காரோட்டி நம்பியைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே ஆறு பெட்டிகளையும் உள்ளே கொண்டு வந்து வைத்தான்.

“என்ன, வேலா?” என்றார் நம்பி.

“பெரிய ஐயா இந்த ஆறு பெட்டிகளையும் அனுப்பியிருக்கிறார். இந்த ஆறு பெட்டிகளையும் பெற்றுக்கொள்ள வேண்டியவர்கள் சென்னையில் இருக்கிறார்கள். இன்றிரவே இன்றிரவே சென்னைக்குப் புறப்பட்டுப் போய் இந்தப்

பெட்டிகளை அவரவர்களிடம் சேர்த்துவிட வேண்டுமாம்.”

“சரி என்று பெரிய ஐயாவிடம் சொல்லு” என்றார் நம்பி.

“ஆகட்டும். கொஞ்ச நேரத்திற்கு முன் ஐந்து பெட்டிகளையும் கொடுத்துவிட்டு வர மணிமொழியை நீங்கள் அனுப்பினீர்களல்லவா?”

“ஆமாம்.”

“பெட்டியைப் பெற்றுக் கொண்டவர்களெல்லாம் உடனே தொலை பேசியில் தொடர்பு கொண்டு, பெட்டி பழுதில்லாமல் வந்து சேர்ந்துவிட்டது என்று சொல்லி, பெட்டி கொண்டு வந்த மணிமொழியை நிரம்பவும் பாராட்டி, இனிமேல் மணிமொழியிடமே பெட்டியை அனுப்பி வைக்கச் சொல்லிப் பெரிய ஐயாவிடம் சொன்னார்களாம். ஆனால்…”

“ஆனால், என்ன?”

“கேசவதாஸிடமிருந்து மட்டும் இன்னும் பெட்டி மட்டும் இன்னும் பெட்டி கிடைத்த செய்தி வரவில்லையாம். பெரிய ஐயா உங்களிடம் இதைச் சொல்லச் சொன்னார்கள்!”

“அது கொஞ்சம் முன் பின்னாக வரும். சரி வேலா, சென்னைக்கு நான் போகப் போவதில்லை. மணிமொழிதான் போகிறாள். ஆறு பெட்டிகளையும் கவனத்துடன் உரியவர்களிடம் அவள் சேர்த்து விடுவாள். பெரிய ஐயாவிடம் போய், மணிமொழிதான் சென்னைக்குப் போகிறாள் என்று சொல்லி, இன்னும் கொஞ்ச நேரத்தில் புறப்படவிருக்கும் விமானத்தில் மணிமொழி போக ஏற்பாடு செய்யச் சொல்லு. மணிமொழி பெயரையே பதிவு செய்து, அவள் பெயருக்கே டிக்கெட் வாங்கிக் கொண்டு நீ விமான நிலையத்தில் காத்திரு. நாங்கள் நேரே விமான நிலையத்திற்கு வந்து விடுகிறோம்” என்றார் நம்பி.

“ஆகட்டும்” என்று சொல்லிக் கதவைச் சாத்திக்கொண்டு வெளியே ஓடினான் வேலன்.

காரோட்டி போனதும் நம்பி மணிமொழியைப் பார்த்து, “மகளே, பயணத்துக்கு ஏற்பாடு செய்யம்மா. கேசவதாஸிடம் கொடுக்க விட்டுப் போன பெட்டியை இங்கேயே வைத்துவிடு. இந்த ஆறு பெட்டி களையும் உன் பயணப் பொருள் களோடு சேர்த்து வைத்துக் கொள். பெட்டிகளைப் பற்றி எவர் விசாரித் தாலும் ஒரே மாதிரியான பதிலையே சொல்லு” என்றார்.

“ஆகட்டும் அப்பா” என்று சொல்லி, மணிமொழி பயணத்துக் குரிய ஏற்பாடுகளைச் செய்வதில் இறங்கினாள்.

நம்பி கீழே போய் வாடகைக் கார் ஒன்று கொண்டு வந்தார். மணிமொழி தன் பயணப் பொருள்களோடு காரில் ஏறிக் கொண்டாள்.

மேலே போயிருந்த நம்பி காரில் வந்து ஏறிக்கொள்வதற்குச் சற்று நேரமாயிற்று.

அவர் வந்து காரில் ஏறிக் கொண்டதும் மணிமொழி அவரைப் பார்த்து, “ஏனப்பா இவ்வளவு நேரம்?” என்று கேட்டாள்.

“உன் அம்மா படத்தைப் பார்த்தேன். மெய்ம்மறந்து போனேன். அவ்வளவுதான்!” என்று சிரித்துக் கொண்டு மணிமொழியின் முதுகைத் தட்டிக் கொடுத்துவிட்டுக் காரோட்டியைப் பார்த்து, “நேராக விமான நிலையத்திற்குப் போ” என்றார்.

கார் புறப்பட்டது. கொஞ்ச நேரத்தில் கார் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. காரின் வாடகைக் கட்டணத்தைக் கொடுத்துவிட்டு, விமான நிலையத்திற்குள் புகுந்தார் நம்பி. மணிமொழி பின் தொடர்ந்தாள்.

வேலன் டிக்கெட்டுடன் காத்திருந்தான். அவன் நம்பியைக் கண்டதும் ஓடி வந்து, “மணிமொழியின் பெயர்தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மணிமொழி பெயருக்குத்தான் டிக்கெட் வாங்கியிருக்கிறது. இந்தாருங்கள்!” என்று தன் கையிலிருந்த டிக்கெட்டை நம்பியிடம் கொடுத்தான். நம்பி அதை வாங்கிக் கொண்டு, “சரி வேலா, நீ போ” என்றார். வேலன் போய்விட்டான்.

“வா, மணிமொழி” என்று மணிமொழியின் கையைப் பிடித்துக் கொண்டு தளத்திற்கு ஓடினார் நம்பி. தளம் வந்தது. கம்பிக் கதவு வந்தது. கம்பிக் கதவைத் தாண்டிச் செல்லுகிற உரிமை, பயணம் செய்வோருக்கு மட்டும்தான் உண்டு. ஆகையால் கம்பிக் கதவின் ஓரத்தி லேயே நின்றுகொண்டார் நம்பி.

நம்பி, மகளின் முகத்தைத் தன் இரு கைகளாலும் ஒற்றி, “மகளே, போய் வா! சென்னையில் இறங்கியதும் முதல் வேலையாக இந்த ஆறு பெட்டிகளையும் அவரவர்களிடம் சேர்த்துவிடு. பிறகு இந்தப் பெட்டிகளைப் பற்றிய நினைவையே மறந்துவிடு. இந்தப் பெட்டிகள் தொடர்புள்ள எவரோடும் பழகாதே. அவர்கள் சொல்லுவது எதையும் கேட்காதே! மீண்டும் இந்த மாதிரியான பெட்டிகளைக் கொண்டு வந்து கொடுத்துக் கொடுக்கச் சொல்வார்கள். உயிரே போனாலும் சரி, அந்தப் பெட்டிகளைத் தொடவே தொடாதே!” என்றார்.

“அப்பா! இது நம் வீடல்ல. விமான நிலையம்!” என்றாள் மணிமொழி.

“தெரியும் மகளே! இனி எனக்கு வீடும் வெளியும் ஒன்றுதான்!”

“அப்பா, நான் சென்னையில் எங்கே தங்குவது என்பதைப் பற்றி நீங்கள் சொல்லவில்லையே?” என்றாள் மணிமொழி, கண்களைத் துடைத்துக்கொண்டு.

“நீ தங்குவதற்கு என்று சென்னையில் ஓரிடம் இருந்தால், முதலில் உன்னிடம் நான் அதைத்தான் சொல்லியிருப்பேன்! தெரியாததால் தான்…” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டார் நம்பி.

“அப்பா! உங்கள் மனதைப் புண்படுத்திவிட்டேன். பொறுத்துக் கொள்ளுங்கள், அப்பா!?” என்றாள் மணிமொழி அழுதுகொண்டே.

இந்த நேரத்தில் பணியாள் ஒருவன் வந்து, “நீங்கள்தானே மணிமொழி? போங்கள், விமானத்தின் படியை எடுக்கப் போகிறார்கள்” என்றான்.

மணிமொழி நம்பியின் நெஞ்சில் முகத்தைப் புதைத்துக்கொண்டு, “அப்பா, நீங்கள் என்னிடம் கடைசியாகச் சொல்லப் போவ தைச்சொல்லிவிடுங்கள்!” என்று சொல்லிவிட்டு அழுதாள்.

நம்பி மணிமொழியை இறுகப் பற்றிக்கொண்டு, ”மகளே! என்னை மறந்துவிடு!” என்றார்.

“அப்பா, இதுதான் நீங்கள் எனக்கு இறுதியாகச் சொல்லுவதா?” என்று குரல் அடைக்கக் கேட்டாள் மகள்.

“மணிமொழி, நீ என்னை மறந்துவிடு!” என்றார் நம்பி.

“அப்பா!” என்று ஒரு கத்துக் கத்திவிட்டு, விமானத்தை நோக்கி ஓடினாள் மணிமொழி.

அவள் விமானத்தில் ஏறினாள். படி இழுக்கப்பட்டது. கதவு சாத்தப்பட்டது. விசிறி சுழன்றது. விமானம் நகர்ந்தது… ஓடியது… எழும்பியது… பறந்தது.

விமானத்தைப் பார்க்க விரும்பாத நம்பி திரும்பிக்கொண்டார்.

மணிமொழிக்கும் நம்பிக்கும் தெரியாமல் இவர்கள் இருவரையும் வட்டமிட்டுக் கொண்டு இருந்த ஒருவன், அங்கிருந்து வெளியே வந்து காரில் ஏறிக் கொண்டான். அவனது கருவண்டு மீசையும் பெரிய மனிதனைப் போன்ற போலித் தோற்றமும் அருவருப்பை அளித்தன.

நம்பி நடந்தார்.

நம்பியாரே! ஐயா மருதநம்பியாரே! மணிமொழியைப் பெற்றெடுத்த பெரியவரே! மனைவியை ஏமாற்றி மகளையும் ஏமாற்றியவரே!

இனி எவரை ஐயா ஏமாற்றப் போகிறீர்? உம்மை நீரே ஏமாற்றிக் கொள்ளப் போகிறீரா? அதுதான் என்றோ நடந்துவிட்டதே! நீர் செய்ய வேண்டிய வேலை ஒன்றே ஒன்றுதானய்யா இருக்கிறது! அந்த ஒரு வேலை, என்ன வேலை தெரியுமா? தற்கொலை! செய்து கொள்ளுமய்யா!

5. வான வீதியிலே ஒடு வண்ணப் புறா!

மணிமொழிக்கு விமானப் பயணம் புதுப் பழக்கமாக இருந்தது. விமானம் பறந்து கொண்டிருந்தது.

அவள் அருகில் ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள். அந்த இருப்பிடத்தில் மணிமொழியும் அந்தப் பெண்ணும்தான். அந்தப் பெண்ணின் மடியிலே வண்ணப் புறாவைப் போன்ற பட்டு மேனிக் குழந்தை ஒன்று இருந்தது.

அந்தக் குழந்தை கொஞ்சம் தன் தாயின் மடியிலிருந்து தாவித் தன் பிஞ்சு விரல்களால் மணிமொழியைத் தொட்டபொழுது, அந்தக் குழந்தையின் தாய், “டேய் போக்கிரி! என்னடா உனக்குக் கை நீளுகிறது?” என்று செல்லமாகக் கடிந்து, குழந்தையை இழுத்துக்கொண்டாள்.

”குழந்தை என்னைத் தொட்டால் நான் ஒன்றும் கரைந்துவிட மாட்டேன்!” என்று சிரிப்பைச் சிந்திக் கொண்டே சொன்ன மணிமொழி “இங்கே வாடா என் கண்ணு!” என்று தன் இரு கைகளையும் நீட்டினாள்.

குழந்தை தாவி வந்தது. குழந்தையின் தாய் சிரித்துக் கொண்டே மணிமொழியிடம் குழந்தையைக் கொடுத்தாள். குழந்தை குழந்தை மணிமொழியைப் பார்த்துக் ‘குளுகுளு’வென்று சிரித்தது. மணிமொழி குழந்தையை அணைத்துக் கொண்டாள்.

குழந்தையின் தாயும் மணிமொழியும் தோழமையுடன் பேசத் தொடங்கினார்கள்.

“நீங்கள் எதுவரையில் போகிறீர்கள்?” என்று கேட்டுப் பேச்சைத் தொடங்கினாள் மணிமொழி.

“சென்னைக்குப் போகிறேன்” என்றாள் குழந்தையின் தாய்.

“உங்கள் பெயர் என்ன?” என்று இரண்டாவது கேள்வியைக் கேட்டாள் மணிமொழி.

“என் பெயர் மணிமொழி” என்றாள் குழந்தையின் தாய்!

“என்ன, என்ன? உங்கள் பெயர் மணிமொழியா?” என்று கேட்டாள் மருதநம்பியின் மகள் மணிமொழி.

“ஆமாம். ஏன் மணிமொழி என்றதும் உங்களுக்கு இவ்வளவு வியப்பு?” என்று கேட்டாள் குழந்தையின் தாய்.

“என் பெயரும் மணிமொழிதான். அதனால்தான் எனக்கு இவ்வளவு வியப்பு!” என்றாள் மணிமொழி.

குழந்தையின் தாய் சொன்னாள்: “என் இயற்பெயர் கோமதி. கோமதி என்ற பெயர் என் தாய் தந்தையர் வைத்த பெயர். எனக்குத் திருமணம் ஆகும் வரையில் நான் கோமதியாகத் தான் இருந்தேன். திருமணம் ஆனதும் மணிமொழியாக மாறி விட்டேன்!”

“எப்படி?” என்று கேட்டாள் மணிமொழி.

“என் கணவருக்கு மணிமொழி என்ற பெயரில் என்ன மயக்கமோ எனக்குத் தெரியாது! என்னைத் திருமணம் செய்து கொண்டவுடன் என்னை ‘மணிமொழி, மணிமொழி’ என்று அழைக்கத் தொடங்கிவிட்டார்! அதனால் கோமதியாகிய நான், மணிமொழியாகி விட்டேன்!” என்றாள்.

“ஓகோ!” என்று சிரித்தாள் மணிமொழி.

குழந்தையின் தாய் திடீரென்று, “அவரை மணந்து கொண்டதற்கு இந்தப் பெயரும் குழந்தையும்தாம் மிச்சம்” என்றாள் பெருமூச்சுடன்.

இதைக் கேட்டதும் மணிமொழியின் சிரிப்பு நின்றது. மணிமொழி கூர்ந்து குழந்தையின் தாயைப் பார்த்தாள். முகம் சருகு போல் இருந்தது. முதலிலே துளிர், அப்புறம் தளிர், அப்புறம் இலை, இறுதியிலே சருகு!

குழந்தையின் தாயின் முகத்திலே அழுது அழுது கறைபடிந்து கிடந்த நீர்க் கோடுகளை மணிமொழி ஒருமுறை பார்த்துவிட்டு, “உங்கள் கணவர்..?” என்று ஐயத்துடன் கேட்டாள்.

“என்னை விட்டுப் பிரிந்து பத்து நாட்கள் ஆகின்றன. நான் இப்போது கிழக்குப் பஞ்சாபிலிருந்து அகதியாக, புகலில்லாதவளாக, ஏழையாக, எவருமற்றவளாக வந்து கொண்டிருக்கிறேன். என் வாழ்வின் ஒளி ஒழிந்து போகும், நான் பெற்ற செல்வம் அப்பாவை இழந்து அநாதையாகும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. எனக்கு வாழ்வு வந்து இரண்டு ஆண்டுகள்தாம் ஆகின்றன. தாழ்வு வந்து…” என்று சொல்லிவிட்டுத் தலைப்புச் சேலையால் முகத்தை மூடிக்கொண்டாள் குழந்தையின் தாய்.

அன்னை அழும்போது தன் பொக்கை வாயைத் திறந்து சிரிக்கக் கூடாது என்பது குழந்தைக்குத் தெரியவில்லை. வஞ்சனையின்றி வாய்விட்டுச் சிரித்தது.

குழந்தையைத் தன் தோளோடு அணைத்துக்கொண்ட மணிமொழி, “தாழ்வு வந்து எத்தனை நாட்கள் ஆனால் என்ன அக்கா! கணவனை இழந்த கவலைக்கு என்ன சமாதானம் சொல்வது? இருந்தாலும் அக்கா, மனக் கவலையை மாற்றிக் கொள்ளவே நினையுங்கள்!” என்றாள்.

குழந்தையின் தாய் கண்களைத் துடைத்துக்கொண்டு, “என் தங்கையைப் போன்ற உன்னிடம் என்னைப் பற்றி ஏதாவது சொன்னால் எனக்குக் கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும் என்று நினைக்கிறேன்” என்றாள்.

“சொல்லுங்கள் அக்கா, கேட்கிறேன்” என்று சொல்லி விட்டுக் குழந்தையைத் தன் மடியிலேயே போட்டுத் தூங்கச் செய்தாள் மணிமொழி.

“நானும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவள்தான். தமிழகத்தில் பிழைக்க வழியில்லாது என் தந்தை என்னை அழைத்துக்கொண்டு கிழக்கு பஞ்சாபுக்குச் சென்றார். அங்கே பக்ராநங்கல் அணைக்கட்டில் வேலை பார்த்தார். அவருடன் கூட வேலை பார்த்த இன்ஜினீயரான ஓர் இளம் வயதுக்காரர், வீட்டுச் சாப்பாடு வேண்டுமென்று எங்கள் வீட்டில் வந்து சாப்பிட்டார். அவரும் அப்பாவும் ஒன்றாக வந்து சாப்பிட்டுப் போவார்கள். நாளான பின், அவர் அப்பாவுக்கு முன்னதாகவே தனியாக வந்து சாப்பிடத் தொடங்கினார். எங்கள் காதல் வளர்ந்தது. அப்பா எதையும் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. அந்த இளைஞர் திருமணமாகாதவர். திருந்திய முகமும், திண்ணமான எண்ணமும் கொண்டவர். என்னை அவருக்குப் பிடித்திருந்தது. கனிவு பிறந்தது; கல்யாணமும் செய்து கொண்டுவிட்டோம்…”

குழந்தையின் தாய் இதற்கு மேல் எதுவும் சொல்லாமல் விக்கினாள். பின்னர் சுதாரித்துக்கொண்டு…

“எங்கள் திருமணம் முடிந்த சில நாட்களில் என் தந்தை என்னைத் தவிக்கவிட்டுப் போய்விட்டார். என் தந்தைக்குப் பிறகு எல்லாமாக ஆகிவிட்டார் என் கணவர். என் அப்பா இறக்கும்போது, இதோ உன் மடியில் கிடக்கிறானே, இவன் என் வயிற்றில் இருந்தான். என் மஞ்சத்தில் தவழப் போகும் இவனையும் என் நெஞ்சத்தில் ஆழப் பதிந்த என் கணவரையும் நினைத்து ஆறுதல் பெற்றேன். நாட்களாயின. இவன் பிறந்தான். மகிழ்ந்தோம். மகிழ்ந்திருந்த அந்த நேரத்தில்தான் என் கணவரைப் பற்றிய சில விவரங்களை நான் அறிந்தேன்.

என் கணவரின் சொந்த ஊர், பிறந்த ஊர் எல்லாம் சென்னைதான். என் கணவரின் தாய் தந்தையர் இப்போது சென்னையில்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு என் கணவர் மூத்த மகன். இவருக்குத் தம்பி ஒருவர் உண்டு.

என் கணவரின் தந்தைக்கு ஒரு சகோதரி. அவருக்கு ஒரு பெண். என் கணவரின் அத்தை பெண்ணாகிய அவளைத் திருமணம் செய்துகொள்ளச் சொல்லிக் கணவரின் தாயும் தந்தையும் வற்புறுத்தினார்கள். இவருக்கு அந்தப் பெண்ணைப் பிடிக்கவில்லை. அதற்குக் காரணம் ஏதும் அவர் சொல்லவில்லை. நானும் கேட்கவில்லை. கணவரின் தாயும் தந்தையும் அந்தக் காலத்துப் பழக்க வழக்கங்களையும் பழைமையையும் விரும்பி, அதன்படியே நடக்க வேண்டும் என்பதில் உறுதி கொண்டவர்கள்.

தம் அத்தை மகளைத் திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லாத என் கணவர், நாட்களைக் கடத்திக் கொண்டு வந்தார். அந்த நேரம் பார்த்து வலுவில் ஏற்பாடு செய்து கொண்டு, மாற்றலாகிக் கிழக்குப் பஞ்சாபிற்கு வந்து விட்டார் என் கணவர். வந்து வேலை பார்த்த இடத்தில்தான் இன்ஜினீயரான அவருக்கும், ஏழைத் தொழிலாளியாகிய என் தந்தைக்கும் நட்பு ஏற்பட்டு, எங்களுக்குள் காதல் மலர்ந்து, திருமணமாகி, இந்தச் செல்வம் பிறந்தது.

எனக்கும் என் கணவருக்கும் திருமணமானது என் கணவரின் பெற்றோருக்குத் தெரியாது. வேண்டும் என்றே என் கணவர் எங்களுக்குத் திருமணமானதை அவர் தாய் தந்தையருக்குத் தெரியாமல் மறைத்து வந்தார். ஒரு மாதத்திற்கு முன்பு கூட அவர் அப்பா கடிதம் எழுதியிருந்தார், ‘எப்போதடா நீ உன் அத்தை மகள் சிவகாமியைக் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறாய்?” என்று. அதற்கு எந்த விதமான பதிலையும், எந்தவிதமான விவரத்தையும் எழுதவில்லை என் கணவர். ‘நமக்குத் திருமணம் ஆனதையும் நமக்குக் குழந்தை பிறந்திருப்பதையும் இன்னும் நீங்கள் உங்கள் பெற்றோருக்கும் உங்கள் தம்பிக்கும் தெரியப்படுத்தாமல் இருக்கிறீர்களே, திடீரென்று அவர்கள் இங்கே வந்துவிட்டால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டேன். ‘வந்தால் என்ன, தங்கள் மருமகளையும் பேரக் குழந்தை யையும் பார்த்துவிட்டுப் போகட்டுமே!’ என்று சிரித்தார்!

எனக்கு என்ன ஆகுமோ, ஏது ஆகுமோ என்று அச்சம் இருந்து கொண்டே இருந்தது. இருந்தாலும் என் கணவர் உறுதி உடையவராதலால் அது பற்றி நான் கொஞ்சம் மறந்திருந்தேன். இப்படிக் கவலையை மறந்து, களிப்போடு இருந்த நேரத்தில்தான்…” என்று சொல்லி, வாயைப் பொத்திக்கொண்டு அழுதாள் குழந்தையின் தாய்.

மணிமொழி சங்கடமாகி, தன் முகத்தைத் திருப்பிக்கொண்டு வெளியே பார்த்தாள்.

சற்று நேரத்தில் தன்னைத் தேற்றிக்கொண்ட குழந்தையின் தாய், “கேள் மணிமொழி” என்று தொடர்ந்து சொல்லத் தொடங்கினாள். “பாறை ஒன்றைத் தகர்த்து வழி உண்டாக்க வைத்த வெடி ஒன்றால் ஒரு பெரிய விபத்து ஏற்பட்டு, மூவர் மாண்டனர். அந்த மூவரிலே ஒருவர் என் கணவர். இந்தச் செய்தியை சென்னையில் இருக்கும் என் கணவரின் தாய் தந்தையருக்கு அறிவித்துவிட்டு, என்னையும் குழந்தையையும் இந்த விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்திருக்கிறது பஞ்சாப் அரசு.

என்னை என் மாமனாரும் மாமியாரும் முன் பின் பார்த்ததில்லை. நானும் அவர்களைப் பார்த்ததில்லை. என் புகைப்படத்தைக் கூட அவர்கள் பார்த்ததில்லை. “உங்கள் பையனின் மனைவியையும், குழந்தையையும் அனுப்பி வைத்திருக்கிறோம்’ என்று பஞ்சாப் அரசினர் அனுப்பிய கடிதத்தைப் படித்த பிறகுதான் அவர்களுக்குத் தங்கள் பையன் கல்யாணம் செய்து கொண்டு பிள்ளை ஒன்றையும் பெற்றுவிட்டான் என்பது தெரியும்.

அவர்கள் தங்கள் பையனை இழந்த துக்கத்தில் இருப்பார்கள். அதோடு நான் என்ன சாதியைச் சேர்ந்தவள் என்பதே அவர்களுக்குத் தெரியாது. நான் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவள். என்னை அழைத்துக் கொண்டு போக அவர்கள் விமான நிலையத்திற்கு வந்திருப்பார்களா, அல்லது நான்தான் அவர்கள் வீட்டை விசாரித்துக்கொண்டு போய்ச் சேர வேண்டுமோ… தெரியவில்லை!”

“நீங்கள் இதைப் பற்றித் துன்பம் கொள்ளாதீர்கள் அக்கா. அவர்கள் விமான நிலையத்திற்கு வந்திருந்தால் சரி! வராவிட்டால் என்ன, நான் உங்களுக்கு துணைக்கு வருகிறேன். நான் வந்து உங்களை உங்கள் மாமனாரிடத்திலும் மாமியாரிடத்திலும் விட்டுவிட்டு வருகிறேன்” என்றாள் மணிமொழி.

விமானம் பறக்கத் தொடங்கி ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. திடீரென்று வானிலை காரணமாக, விசிறி ஒன்று சுற்றுவது நின்று விட்டதால், விமானம் அசைந்தது. ஆடியது. குலுங்கியது. மேலும் கீழும் இறங்கியது. ஏறியது. நிலை தடுமாறியது!

இந்த நிலையில் திடீரென்று மழை! எது வானம், எது மழை என்று கூட அறியமுடியாத அளவுக்குப் பெரும் மழை! குழந்தையின் தாய், மணிமொழியின் தோளைப் பற்றி, “மணிமொழி, என்ன காரணம் என்று தெரியவில்லை. என் மனம் திக்திக்கென்று அடித்துக் கொள்கிறது” என்றாள். அவள் முகம் மாறி நிற்பதைக் கண்டு மணிமொழி அஞ்சினாள்.

“மணிமொழி, கவனமாகக் கேள்! நான் கணவரை இழந்தவள். என் கணவர் ஒழுக்கக்குன்று. உத்தமர். அந்த உத்தமரோடு உடன் வாழ்ந்த நான், மற்றொருவரோடு வாழ்வது என்பது எப்பிறப்பிலும் நடக்காததொன்று! என் கணவர் இறந்ததும் நானும் இறக்க நினைத்தேன். ஆனால், கண்ணான இந்தக் குழந்தைக்காகத்தான் இன்னும் சாகாமல் இருக்கிறேன்!” என்றவள், திடீரென்று மணிமொழியின் இரு கைகளையும் பற்றிக்கொண்டு, “மணிமொழி, உன்னைப் பார்த்த பிறகு, உன் பெயர் மணிமொழி என்பதை, அறிந்த பிறகு, இனி நான் வாழத் தேவை இல்லை என்று முடிவு கொண்டுவிட்டேன். இது அசைக்க முடியாத முடிவு” என்றாள் குழந்தையின் தாய்.

“அக்கா, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று பதறினாள் மணிமொழி.

“நான் சாகப்போகிறேன் மணிமொழி, நான் சாகப்போகிறேன்! இந்தக் குழந்தைக்கு இனி நீதான் தாய். இந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு எங்கு வேண்டுமானாலும் போ. ஆனால், என் மாமியார் வீட்டுக்கு மட்டும் போகாதே. இந்தக் குழந்தை இனி உன் குழந்தை. உனக்கு மணம் ஆனாலும் ஆகா விட்டாலும் இது உன் குழந்தையாகவே இருக்கட்டும்!” என்று சொல்லி விட்டுக் குமுறிக் குமுறி அழுதாள் குழந்தையின் தாய்.

மணிமொழியின் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது.

விமானம் நிலை தடுமாறிப் பறந்துகொண்டிருந்தது. விமான அசைவின் ஏற்ற இறக்கம் அதிகமாக இருந்தது.

“அக்கா! இந்தக் குழந்தையை என்னிடம் ஒப்படைத்துவிட்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதே தெரியவில்லையே! விமானம் ஆடுவதைப் பார்த்தால் எவருமே உருப்படியாகப் போய்ச் சேர முடியாது போலிருக்கிறதே! அமைதி பெறுங்கள் அக்கா” என்று சொன்னாள் மணிமொழி.

பயணம் செய்தவர்கள் அனைவரும் பயந்து ஒருவரை ஒருவர் பிடித்துக்கொண்டார்கள். திடீரென்று விமானத்திற்குள்ளே சிவப்பு விளக்கு ஒன்று பளிச்சிட்டது. ஒலிபெருக்கி அலறியது…

“விமானத்தின் நான்கு விசிறிகளில் ஏற்கெனவே ஒரு விசிறியின் சுழற்சி நின்றுவிட்டது. இப்போது அதே பக்கத்தில் இன்னொரு விசிறியின் சுழற்சியும் நின்றுவிட்டது! கடுமையான மழை. கொஞ்சம் கொஞ்சமாக விமானம் இறங்கிக் கொண்டிருப்பதால் விமானத்தைக் கட்டாயமாகத் தரையில் இறக்கியாக வேண்டியதாயிருக்கிறது. விமானத்தை இறக்கும்போது, இறக்கப்படுகிற இடம் எப்படி இருக்கும், பாதுகாப்புடன் விமானம் இறங்குமா என்பதையெல்லாம் சொல்ல முடியாது! துணிவு இல்லாதவர்கள் பாரசூட் மூலம் குதித்து விடலாம். விமானப் பணியாட்கள் பாரசூட் தருவார்கள். வாங்கிக் கட்டிக்கொண்டு குதிப்பவர்கள் குதித்துவிடலாம். துணிவு உள்ளவர்கள் விமானத்திலேயே இருக்கலாம்.”

விமானத்தில் பயணம் செய்தவர்கள் குறைவானவர்கள். இந்தப் பேரிடர் அறிவிப்பைக் கேட்டதும் பயணம் செய்தோரில் அஞ்சிய சிலர், விமானப் பணியாட்களிடம் பாரசூட்டை வாங்கிக் கட்டிக் கொண்டு, அந்தக் கடும் மழையில் கண்களை மூடிக் கொண்டு குதித்து விட்டார்கள். இன்னும் சிலரும், மணிமொழியும், குழந்தையின் தாயுமே விமானத்தில் இருந்தார்கள். விமானம் கீழ் நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தது.

குழந்தையின் தாய் சட்டென்று எழுந்து மணிமொழியின் மடியிலிருந்த குழந்தையை எடுத்து மாறி மாறி முத்தங்கள் முத்தங்கள் ஈந்து ஈந்து விட்டு மறுபடியும் மணிமொழியின் மடியிலே படுக்க வைத்தாள். பின்பு, மணிமொழியின் கரங்களைப் பற்றிக் கொண்டு, “மணிமொழி, நீ என்னை மறந்துவிடு!” என்று சொல்லிவிட்டுத் திரும்பினாள். நடந்தாள்.

“அக்கா… அக்கா!” என்று கத்தினாள் மணிமொழி. குழந்தையின் தாய் குதித்துவிடப் போகிறாள்; அவளை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று எண்ணினாள்.

குழந்தையின் தாய் திரும்பவே இல்லை. விமானத்தின் கதவுக்கருகில் வந்தாள். பணிப்பெண்ணிடம் பாரசூட்டைப் பெற்றுக் கொண்டாள்; கதவைத் திறக்கச் சொன்னாள்; ஆனால், பாரசூட்டை அணிந்துகொள்ளாமலே கொட்டுகிற அந்த மழையில் அப்படியே தொப்பென்று குதித்துவிட்டாள்!

“அக்கா… அக்கா..!” என்று கன்னி மணிமொழி கதறினாள். எழுந்திருக்க முயன்றாள். மடியிலே கிடந்த குழந்தை வீறிட்டு அழுதது.

மணிமொழி, என்ன பிறவியடி உன் பிறவி! உன்னைப் பெற்ற அப்பா, ‘என்னை மறந்துவிடு’ என்று சொல்லி உன்னை விமானத்தில் அனுப்பி வைத்தார். இங்கே விமானத்தில் உன்னைப் பார்த்த ஒருத்தி, ‘என்னை மறந்துவிடு’ என்று சொன்னதோடல்லாமல், தன் குழந்தையையும் உன்னிடம் தந்துவிட்டு, உன் கண் எதிரிலேயே விமானத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டுவிட்டாளே!

விமானம் இறங்கிக்கொண்டே வந்தது. எந்த இடத்தில் அது பொத்தென்று விழுந்து நொறுங்கும் என்று சொல்லமுடியாத அளவுக்குத் தத்தளித்தது. விமானத்திற்குள் பேரிடர் ஒலி ஒலித்துக்கொண்டே இருந்தது. சிவப்பு விளக்கு அடிக்கடி ஒளியிட்டுக்கொண்டு இருந்தது.

கொட்டும் மழையில் எவ்வளவு உயரத்தில் இருக்கிறோம், நாம் குதிக்கும் இடம் மலையாக இருக்குமா, ஏரியாக இருக்குமா, காடாக இருக்குமா என்பதைக் கூட அறியாமல் கண்களை மூடிக்கொண்டு குதித்து விட்டவர்களைத் தவிர, மற்றவர்கள் விமானத்திலேயே இருந்தார்கள்.

விமானமோட்டிகள் இருவரும் இறுதி வரை முயற்சி செய்து பார்ப்பது என்ற ஒரே நோக்கத்துடன் துணிந்து உட்கார்ந்து விமானத்தைப் பழுது பார்த்துக்கொண்டே செலுத்தினார்கள்.

கீழே இறங்கிக்கொண்டிருந்த விமானம், எவருமே எதிர்பாராத வகையில் திடீரென்று மேலே பறக்கத் தொடங்கியது. விமானத்தின் விசிறிகள் இரண்டும் சுழலத் தொடங்கின. விமானமோட்டிகள் இருவருமே, ‘எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம்! துணிவு இல்லாதவர்களைக் குதிக்கும்படி சொல்லிவிட்டோமே, அவர்களெல்லாம் என்ன ஆனார்களோ?” என்று துன்பம் கொண்டார்கள். அவர்கள் மீதும் குற்றம் இல்லை. விமானம் மீண்டும் நல்ல நிலையில் பறக்கும் என்று அவர்கள் நினைக்கவே இல்லையே!

விமானம் மீண்டும் பறக்கத் தொடங்கிவிட்டதென்றும், இன்னும் சிறிது நேரத்தில் அது ஹைதராபாத்தில் பாதுகாப்புடன் இறங்கும் என்றும் அறிவிப்பு வந்தது.

விமானம் ஹைதராபாத் விமான நிலையத்தில் மெல்ல இறங்கி நின்றது. எல்லாரும் இங்கே இறங்க வேண்டும் என்றும், சென்னைக்குப் போகிறவர்கள் வேறு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று பணிப்பெண் அறிவிப்பு கொடுத்தாள்.

6. நீ என் மருமகள்!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கூட்டம் மிகுந்திருந்தது. நேற்றிரவு பம்பாயில் புறப்பட்ட விமானம் பல தொல்லைகளுக்கு உட்பட்டதும், விமானம் எப்படியோ ஹைதராபாத் வந்து சேர்ந்ததும், தப்பியவர்கள் ஹைதராபாத்திலிருந்து வேறு விமானத்தில் வருகிறார்கள் என்பதும், எல்லோருக்கும் தெரிந்துவிட்டது.

விமானத்திலிருந்து குதித்தவர்கள் யார் யார், தப்பி வந்து சேரப் போகிறவர்கள் யார் யார் என்பதெல்லாம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்ததால், குதித்தவர்களுக்கு வேண்டியவர்களெல்லாம் ஹைதராபாத் போய்விட்டார்கள். குதிக்காமல் விமானத்திலேயே இருந்து தப்பி வந்தவர்களுக்கு வேண்டியவர்களெல்லாம் சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்தார்கள். தப்பி வந்தவர்களை வேடிக்கை பார்க்க ஏராளமான பேர் வந்திருந்தார்கள். அதனால்தான் இவ்வளவு கூட்டம்!

அவர்களில் முத்தழகு ஒருவன்.

முத்தழகு, அந்தக் குழந்தையின் தாய் மணிமொழியின் மைத்துனன். தன் அண்ணியை அழைத்துக் கொண்டு போக அவன் வந்திருந்தான். தம் மருமகளும் பேரக் குழந்தையும் தப்பிய செய்தி கேட்டு மணிமொழியின் மாமனாரும் மாமியாரும் மகிழ்ச்சியில் கிடந்தார்கள்.

முத்தழகுக்கு மனதிற்குள் குழப்பம். முன்பின் பார்த்திராத அண்ணியிடம் என்ன பேசுவது, எப்படி நடந்துகொள்வது என்று விளங்கவில்லை அவனுக்கு!

அவன் அழகன், அண்ணனைவிட அவன் அழகன். நல்ல உயரம். செந்தளிர் உடல், ஒல்லியான தோற்றம் காரணமாக ஒரு கவர்ச்சி. அழகிய முகம். வண்ணக் கண்கள். அரிசிப் பற்கள். அழகான தலை முடி.

விமானம் வந்து இறங்கி, அதிலிருந்து ஒவ்வொருவராக இறங்கினார்கள். மணிமொழி குழந்தையைத் தன் தோளில் போட்டுக்கொண்டு மெல்லப் படிகளில் இறங்கி நடந்தாள். அவள் எவர் முகத்தையும் பார்க்கவில்லை. பயணம் செய்வோர் தங்குமிடத்தை நோக்கித் தனியாகப் போய்க்கொண்டு இருந்தாள் அவள்.

‘நம்மை அழைத்துப் போக நல்ல வேளையாக எவரும் வரவில்லை. நம்மை எவரும் அடையாளம் கண்டுகொள்ளவும் இல்லை. குழந்தையின் தாய் சொல்லியதைப்போல, அவளுடைய மாமியார் வீட்டிற்குப் போகாமல், குழந்தையோடு வேறு எங்காவது போய்விடலாம். முதலில் பயணம் செய்வோர் தங்குமிடத்திற்குச் சென்று, பொருள்களையெல்லாம் சரிபார்த்து வாங்கிக்கொண்டு, ஒரு வாடகைக் காரில் ஏறி விமான நிலையத்தை விட்டு வெளியே சென்றுவிடுவோம். எங்கே போவது, என்ன செய்வது என்பதைப் பற்றிப் பிறகு முடிவு செய்து கொள்ளலாம்’ என்று மணிமொழியின் மனம் எண்ணியது.

அதே நேரம், “அண்ணி” என்றொரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தாள்.

“உங்கள் தோளில் கிடக்கும் குழந்தையின் சித்தப்பா நான்! அண்ணன் என்னைப் பற்றிச் சொல்லியிருப்பாரே! நான் முத்தழகு” என்றான் முத்தழகு.

“சொல்லியிருக்கிறார்” என்று சொல்லி விட்டுக் கொஞ்சம் நடந்து பயணம் செய்வோர் தங்குமிடத்தில் வந்து ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள் மணிமொழி.

‘எந்த உணர்ச்சியோடு நாம் இவரிடம் பேசுவது, எந்த நோக்கத்தோடு இவரிடம் நாம் நடந்துகொள்வது?’ என்று எண்ணிக் குழம்பினாள் மணிமொழி.

“அண்ணி, ஏன் உட்கார்ந்து விட்டீர்கள்? புறப்படுங்கள், நம் பங்களாவிற்குப் போவோம். அப்பாவும் அம்மாவும் தங்கள் மருமகளையும் பேரக் குழந்தையையும் காணக் காத்து நிற்கிறார்கள் வாசலிலேயே. அவர்கள் உங்களைப் பார்த்ததில்லை. இருந்தாலும்கூட, அவர்களுக்கு என் அண்ணன் மீதிருந்த அன்பு அனைத்தும் உங்கள் மீதும் உங்கள் குழந்தையின் மீதும் திரும்பி யிருக்கிறது. புறப்படுங்கள்!?” என்றான் முத்தழகு.

மணிமொழி நிமிர்ந்து முத்தழகின் முகத்தை ஒருமுறை பார்த்தாள். அவள் கண் இமைகள் என்ன காரணத்தாலோ படபடவென்று அடித்துக் கொண்டன – பறவை பறக்கத் தொடங்குவதற்கு முன்னால் ஒருமுறை தன் இறக்கைகளைப் படபடவென்று அடித்துக் கொள்ளுமே, அதைப் போல!

“என்ன அண்ணி, புறப்படுங்கள்” என்றான் முத்தழகு.

“நான் கொண்டு வந்த பொருள்களைக் கேட்டு வாங்கி வாருங்கள்; நாம் புறப்படலாம்” என்றாள் மணிமொழி.

“சரி அண்ணி” என்று சொல்லி விட்டு உள்ளே ஓடினான் முத்தழகு. அவன் போனதும் மணிமொழிக்குத் திக் திக்கென்று மனம் அடித்துக்கொண்டது. பொருள்களைச் சோதிக்கும் அறையில் பொருள்கள் இருந்தன. அந்தப் பொருள்களோடுதான் ஆறு பெட்டிகளும் இருந்தன. அவற்றை அவன் திறந்து பார்த்துவிட்டால் என்ன செய்வது!

கொஞ்ச நேரத்தில் முத்தழகு, மணிமொழியின் பயணப் பொருள்களையெல்லாம் அவன் ஒருவனாகவே முதுகிலும் தோளிலும் தலையிலும் கரத்திலுமாகத் தூக்கிக் கொண்டு வந்து, “போகலாமா அண்ணி?” என்றுகேட்டான்.

மணிமொழி அவனைப் பார்த்துக் கொஞ்சம் இதழ் திறந்து சிரித்து, “என்ன இது, நீங்கள்…..” என்றாள்.

“இதற்குப் போய்க் கூலி கொடுக்க முடியுமா அண்ணி? வாருங்கள்” என்று சொல்லிவிட்டு, முன்னால் கார் நிற்குமிடத்திற்கு நடந்தான் முத்தழகு.

துன்பத்தை மட்டுமே கண்டிருந்த மணிமொழி இப்போது கொஞ்சம் இன்ப உணர்வுடன் அவனுக்குப் பின்னால் குழந்தையோடு நடந்தாள்.

மணிமொழி காரை அடைந்ததும் முன் பக்கத்துக் கதவைத் திறந்து முத்தழகுவின் அருகில் உட்கார்ந்து கதவைச் சாத்திக்கொண்டாள்.

இதைச் சிறிதும் எதிர்பார்க்காத முத்தழகு திடுக்கிட்டான். இருந்தாலும் சமாளித்துக்கொண்டு, “அண்ணி, பின்னால் உட்கார்ந்து கொண்டால் உங்களுக்குச் சௌகரியமாக இருக்குமே!” என்றான்.

“ஆகட்டும்” என்று மணிமொழி கதவைத் திறந்து இறங்கிச் சாத்தி விட்டு, பின் கதவைத் திறந்து ஏறிக் கொண்டாள்.

முத்தழகு திரும்பிப் பார்த்தான்: குழந்தை முத்தழகைப் பார்த்துச் சிரித்தது. கொழுகொழுவென்றிருந்த குழந்தை, பால் உணவு விளம்பரங்களிலே வருமே, அந்தக் குழந்தையைப் போன்று தோன்றியது முத்தழகுக்கு.

குழந்தை பையனா பெண்ணா என்பது முத்தழகுக்குத் தெரியாது. அதைத் தெரிந்து கொள்வதற்காக, “குழந்தையின் பெயர் என்ன?” என்று கேட்டான் முத்தழகு.

இந்த வினாவை எதிர்பார்த்திராத மணிமொழி திடுக்கிட்டாள். இருந்தாலும் சமாளித்துக்கொண்டு “இளங்கோ” என்று சொன்னாள்.

“அண்ணனுக்குக் கதைகள் படிக்கத்தான் பிடிக்கும். அவர் போய்த் தன் மகனுக்கு இளங்கோ என்று இலக்கியப் பெயர் வைத்திருப்பது வியப்புக்குரியதுதான்” என்றான் முத்தழகு.

இதைக் கேட்டதும் மணிமொழிக்கு அச்சம் பிறந்தது. இந்தக் குழந்தையின் தந்தையைக் கண்ணால் கூடப் பார்த்திராத அவள், அவருடைய குணங்களையும் பழக்க வழக்கங்களையும் எங்கே அறிந்திருக்கப் போகிறாள்! முன்பின் பார்த்திராத ஒருவரை, முன்பின் கேள்விப்பட்டிராத ஒருவரை, இப்போது இல்லாத ஒருவரைத் தன் கணவர் என்று அவருடைய தம்பியிடமும் அவருடைய பெற்றோரிடமும் சொல்லிக்கொண்டு எவ்வளவு நாட்களுக்குக் காலம் தள்ள முடியும்? அவருடைய பெயர் கூடத் தெரியாதே மணிமொழிக்கு!

“இல்லை, அவர் அங்கு வந்த பிறகு இலக்கியங்களை விரும்பிப் படித்தார். இளங்கோ அவருக்குப் பிடித்த புலவர். அதனால் தன் செல்வனுக்கு இளங்கோ என்ற பெயர் வைத்துவிட்டார்” என்றாள். பொய்க்கு மேல் பொய்யாகச் சொல்லிக்கொண்டே இருக்கிறோமே, பலூன் எப்போது வெடிக்குமோ என்று பயந்தாள் அவள்!

குழந்தையின் தந்தை பெயர் என்ன என்பதைக் குழந்தையின் தாய், மணிமொழியிடம் சொல்ல வில்லை. அதை இப்போது தெரிந்து கொண்டுவிட வேண்டும். எப்படித் தெரிந்து கொள்வது?

“இளங்கோவின் அப்பாவுக்கு வேறு பெயர் ஏதாவது உண்டா?” என்று கேட்டாள் மணிமொழி.

“அரசு என்பதைத் தவிர, அண்ணனுக்கு வேறு பெயர் எதுவும் இல்லையே!”

மணிமொழி மனத்திற்குள் மகிழ்ந்தாள். முதல் சோதனையில் அவளுக்குக் கிடைத்த வெற்றி, அவள் சோர்வைப் போக்கி உற்சாகம் தந்தது. மயக்கம் நீங்கி மன ஆறுதல் பெற்றாள் மணிமொழி.

கார், நுங்கம்பாக்கத்தில் அமைதியான ஓர் இடத்தில் கட்டப்பட்டிருந்த ஒரு பெரிய பங்களாவின் சுற்றுச் சுவர் வாயிலைக் கடந்து உள்ளே வந்து நின்றது. கதவோரம் நின்றுகொண்டிருந்த மாமியாரும், வாசற்படியில் நின்று கொண்டிருந்த மாமனாரும் காருக்கருகில் ஓடி வந்தார்கள்.

முத்தழகு காரைவிட்டுக் கீழே இறங்கிப் பின்கதவைத் திறந்து கரங்களை நீட்டினான். மணிமொழி குழந்தை இளங்கோவை அவன் கரங்களில் கொடுத்துவிட்டுக் கீழே இறங்கிச் சுற்றிலும் ஒருமுறை பார்த்தாள். பின், மாமனாரையும் மாமியாரையும் நிமிர்ந்து பார்த்தாள்.

மாமனார் ஒல்லியாகச் சிவப்பாக இருந்தார். அவர் முகத்தில் முழு அமைதி இருந்தது. மாமியார் நல்ல பருமன். அவள் முகத்தைப் பார்த் ததும் அவள் அடிக்கடி சினம் கொள்பவள் என்பதை மணிமொழி கண்டுகொண்டாள்.

“இந்தா அம்மா, உன் பேரன் இளங்கோ!” என்று பேரனைத் தன் அம்மாவின் கையில் கொடுத்தான் முத்தழகு.

மாமியார் கரங்களை நீட்டிப் பேரனை வாங்கி, “பேரனா!?” என்று வியப்புடன் பேரனை நெஞ்சோடு அணைத்து, அவனுக்குப் பல முத்தங்கள் ஈந்தாள். மாமனார் மாமியாருக்கு அருகில் வந்து அவள் நெஞ்சோடிருந்த பேரன் கன்னத்தைத் தொட்டு முத்தம் கொஞ்சினார். பின்பு, மகிழ்ச்சியில் மிதந்த மாமியாரின் முகத்தைப் பார்த்தார். மாமியாரின் கண்களிலே கண்ணீர்!

“இவன் நம் அரசைப் போலவே இருக்கிறான்!” என்று சொல்லிக் கண்களைத் துடைத்துக் கொண்டார் மாமியார்.

அதைக் கேட்டு மாமனாரின் கண்களும் கலங்கின. அவர்கள் ஒரே நேரத்தில் மணிமொழியைப் பார்த்தார்கள். அவள் தலையைக் குனிந்துகொண்டாள்.

“டேய் சின்னத் தம்பி, என்னடா நிற்கிறாய்? அண்ணியை உள்ளே அழைத்துக்கொண்டு போய், அவள் குளிப்பதற்கும் சாப்பிடுவதற்கும் ஓய்வு எடுத்துக் கொள்வதற்கும் ஏற்பாடு செய்!” என்று முத்தழகைப் பார்த்துச் சொல்லிவிட்டு, மணிமொழியைப் பார்த்து, “போ அம்மா, போய் முதலில் குளித்துச் சாப்பிட்டுக் கொஞ்சம் தூங்கு. அப்புறம் பேசிக்கொள்ளலாம்” என்றாள்.

மணிமொழி உள்ளே சென்றதும் மாமனாரும் மாமியாரும் சுற்றுப் பத்தியில் கிடந்த கட்டிலில் வந்து உட்கார்ந்து கொண்டார்கள். இளங்கோ தன் பாட்டியின் மடியில் சிரித்துக்கொண்டு கிடந்தான்.

“ஐயமே இல்லை. அரசுவின் நிறமும் முகமும் அப்படியே இருக்கின்றன இந்தப் பயலுக்கு. அரசு அவன் திருமணத்தைப் பற்றி ஒரு சிறு கடிதத்தின் மூலம் கூட நமக்குத் தெரிவிக்கவில்லையே, ஏன்?” என்று கேட்டார் மாமனார்.

“இந்தப் பெண் தாழ்ந்த சாதியாக இருப்பாள் என நினைக்கிறேன். அதனால்தான் நமக்குத் தெரியாமலேயே திருமணம் செய்துகொண்டு இருக்கிறான்” என்றாள் மாமியார்.

“தாழ்ந்த சாதி, உயர்ந்த சாதி என்ற எண்ணமெல்லாம் இந்தக் காலத்தில் ஏது? அத்தை மகள் சிவகாமியை நாம் திருமணம் செய்துகொள்ளச் சொல்லுவோம் என்ற அச்சம்தான் காரணம், அவன் நம்மைக் கேட்காமலேயே திருமணம் செய்துகொண்டதற்கு!”

“ஏதேது, சாதியைப் பற்றி அவ்வளவு எளிதாகச் சொல்லிவிட்டீர்கள்! மருமகளைப் பார்த்ததும் மனம் மாறிவிட்டதோ?”

“மகனைப் போலவே இருக்கிறாள் மருமகள். அதனால் மருமகள் எந்தச் சாதியாக இருந்தாலென்ன என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்!”

“இந்தப் பயலைப் பார்த்ததிலிருந்து எனக்கிருந்த சாதி வெறி போய்விட்டது. எனக்கும் இனி எல்லாச் சாதியும் ஒரு சாதிதான்.”

“உண்மையாகவா?”

“உண்மையாகவேதான்! என் மூத்த மகன் என்னை விட்டு என்று பிரிந்தானோ, அன்றே என் சாதி என்னை விட்டுப் போய்விட்டது. என் சின்னப் பையன் முத்தழகு எந்தப் பெண்ணை விரும்புகிறானோ அந்தப் பெண்ணையே நான் அவனுக்குத் திருமணம் செய்து வைப்பேன். அவன் திருமணத்தில் சதியும் இருக்காது, சாதியும் இருக்காது.”

இந்த நேரத்தில் குளித்துவிட்டு வந்த மணிமொழி, மாமியாருக்கு அருகில் வந்து மண்டியிட்டு அவள் காலடிகளைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டாள். மாமியார், மணிமொழியின் தோள்களைப் பற்றி, “நீ என் மருமகள். எழுந்திரு” என்றாள்.

பெரியவளே, உன் மருமகள் விமானத்திலிருந்து குதித்து இறந்து போன செய்தி உனக்குத் தெரியாது! இந்த மணிமொழி உன் மருமகளல்ல. இவள் மணமாகாத கன்னிப்பெண் என்பதை அறிந்ததும், நீ எப்படி நடந்துகொள்வாயோ! இந்த மணிமொழியின் வருகையால், உன் குடும்பத்தில் பல துன்பங்களை நீ காணப்போகிறாய்! அப்போது ‘நீ என் மருமகள்’ என்கிற உன்னுடைய இந்தப் பாசச் சொல் நிற்குமா, பார்க்கலாம்!

– தொடரும்…

– மணிமொழி, நீ என்னை மறந்துவிடு! (தொடர்கதை), ஆனந்த விகடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *