மணிமகுடம் துறந்த மன்னன் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 15, 2025
பார்வையிட்டோர்: 125 
 
 

(1958ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரண்டாம் பகுதி: 32 பதுமைகள் சொல்லிய கதைகள்

1-வது வினோரஞ்சிதப் பதுமை சொல்லிய விக்கிரமாதித்தன் பூர்வீகக் கதைகள் 

கதை – 1 | கதை – 2 | கதை – 3

2. மணிமகுடம் துறந்த மன்னன் கதை

தேவலோகத்தி லிருக்கும் அமராவதிப் பட்டணத்துக்கு ஒப்பான சகல ஐசுவரியங்களோடு கூடிய நகரம் ஒன்று பூவுலகில் இருந்தது. கன்னியாபுரி என்னும் பெயருடைய அந்நகரில் பர்த்ருஹரிராஜன் அரசாட்சி புரிந்து வந்தான்.

அவனுடைய பராக்கிரமத்தை எதிர்க்கும் சக்தியின்றி மன்னாதி மன்னர்களெல்லாம் அவனிடம் சிறைப்பட்டார்கள். அவ்வி தம் சிறைப்பட்ட தங்கள் கணவர்களின் உயிரை மீட்க அரசிகள் கன்னியாபுரப் பட்டணத்திற்கு ஓடோடியும் வந்தார்கள். அரச சபையிலே மன்னர் மன்னனின் கால்களைப் பிடித்துக் கொண்டு உயிர்ப்பிச்சை தருமாறு வேண்டினார்கள். ராஜா பர்த்ருஹரியின் பாதங்களில் அவர்கள் தலை வைத்து வணங்கியதால் அவர்களின் நெற்றியில் இடப்பட்டிருந்த திலகங்கள் பதியவே, பார்ப்பதற்கு செக்கச் செவேலென்று காட்சியளித்தன. இவ்விதம் பர்த்ருஹரிராஜன் தனக்கு நிகரற்றவனாய் சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்று ஆட்சி நடத்தி வந்தான். அவனுக்கு ஒரு தம்பி இருந்தான். அவனும் விக்கிரமன் என்ற பெயருக்கேற்ப எதிரிகளின் வீரத்தைத் தன் பராக்கிரமத்தால் கவர்ந்து வந்தான்.

ராஜா பர்த்ருஹரி கலையுள்ளம் படைத்தவன். இயற்கை அழகின் கவர்ச்சியில் மனதைப் பறிகொடுத்துவிடக் கூடியவன். பெண்ணாசைகளில் அதிக ஈடுபாடு உள்ளவன். அவன் முன்னூற்று அறுபது அழகிகளை மணம் புரிந்து தன் அரண்மனை அந்தப்புரங் களைக் கலைக்கூடமாக்கியிருந்தான். ஆயினும் அவன் தன் பிதாவிற்கு மரண காலத்தில் செய்து கொடுத்த வாக்குறுதியின் பிரகாரம், தனக்குப் பிள்ளைகள் ஏதும் ஜெனிக்காதபடி தன் பிரதிக்ஞையைக் காப்பாற்றி வந்தான். அதற்காகவே மாதவிலக்காகிப் பதினான்கு நாள் சென்ற பிறகுதான் பத்தினிமார் களிடம் அவன் கொஞ்சி மகிழ்ந்திருப்பதை வழக்கமாக மேற்கொண்டிருந்தான். அவனுடைய அந்தப்புரப் பத்தினிகளில் அவனுக்கு மிகவும் பிரியமானவள் ஒருத்தி இருந்தாள். அவள் தேவலோகத்து அப்ஸரஸுகளையெல்லாம் தோற்கடிக்கும்படியான உடல் லாவண்யமும் மென்மையும் பெற்றிருந்தாள். அவளுக்கு அனங்கசேனை என்று பெயர். மன்மதன் கலைகள் அனைத்திலும் கைதேர்ந்தவளாய், இளமைக் கவர்ச்சிகளைச் சேனைகளாகக் கொண்டு அவள் பர்த்ருஹரியின் இதயத்திலே மோகப் போரை எழுப்பி, வெல்லும் சாதுர்யமும் படைத்தவளாய் இருந்தாள். அவளே பட்டமகிஷியாகவும் விளங்கினாள். சரச சல்லாபங்களில் சிறந்த அந்த மோகனாங்கியின் இளமைக் கவர்ச்சியிலே பர்த்ருஹரி மூழ்கியவனாய் உலக நினைவையும் மறந்து கிடக்கலானான்.

ராஜா பர்த்ருஹரி அவ்வாறு அனங்கசேனையிடம் அலாதியான ஆசை வைத்து வரும் நாளில் அந்நகரத்தில் எல்லா சாஸ்திரங்களையும் கற்றுணர்ந்த அந்தணன் ஒருவன் வசித்து வந்தான். வயது ஆக ஆகக் கிழட்டுத்தனம் தட்டவே அவன் நாடி தளர்ந்து அதிகமாக வாடலானான். உடம்பில் வலிவும் வாலி பமும் இருந்தால் ஓரளவு வறுமையைச் சமாளிக்க முடியுமென அவனுக்குத் தோன்றியது.

ஒருநாள் அந்த அந்தணன் பூமிதேவியைக் குறித்துக் கடுந்தவம் செய்தான். அவன் தவத்தினால் திருப்தியடைந்த பூமிதேவி, அவன் முன் தோன்றினாள்.

“அந்தண சிரேஷ்டனே! உன் தவத்தினால் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். உனக்கு வேண்டியதைக் கேள்; தயங்காமல் தருகிறேன்” என்றாள் பூமிதேவி.

”தேவி! என்மீது உனக்குக் கருணை பிறந்திருப்பது பாக்கியமே! வறுமையினால் பெரிதும் நான் வருந்துகிறேன். எனக்குக் கிழத்தன்மையிலிருந்து விடுதலை கொடு!” என்று வேண்டினான் அந்தணன்.

பூமாதேவி கனிந்த மாதுளம் பழம் ஒன்றை அவனிடம் கொடுத்து “இந்தப் பழத்தைச் சாப்பிடு, நீ விரும்பியபடியே என்றும் இளமையுடன் இருப்பாய்!” என்று சொல்லி மறைந்தாள்.

என்றும் மாறாத இளமை அளிக்கக்கூடிய அதிசய மாதுளம்பழம். அது யாருக்கும் கிடைக்காத சித்தி, என்றெல்லாம் ஆனந்தக் கூத்தாடினான் அந்தணன்.

பழத்தைப் பெற்றுக்கொண்ட அந்தணன் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினான். ஸ்நானம் செய்து பூஜைகளை முடித்துக் கொண்டு நியமமாகப் பழத்தைப் புசிக்கத் தயாரானான். அப்போது அவன் உள்ளத்தில் ஓர் எண்ணம் தோன்றியது.

“நானோ பரம ஏழை. அடுத்த வேளைச் சாப்பாடு எங்கு கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன். சாகாமலும் யௌவனமாகவும் இருப்பதினால் எனக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது? சுகத்தை அனுபவிக்கத் திரவியம் இருக்கிறதா? அது கிடையாது! இல்லை, யாருக்காவது நான் உதவத்தான் முடியுமா? நீண்ட காலம் வாழ்வது மூலம் பிச்சையெடுப்பதுதான் நீங்கிவிடுமா? இந்தத் தொழில் என்னை விட்டுப் போகாது. பிறரிடம் யாசகம் கேட்டே என் வாழ்வு முடிய வேண்டும். சிறிது காலமே உயிர் தரித்திருந்தாலும் மற்றவர்களுக்கு ஏதோ கொஞ்சமாவது உதவியாயிருப்பவன் எவ்வளவோ மேலானவனாயிற்றே? அறிவு, உயர்ந்த பதவி போன்ற மேலான குணங்களை உடையவன் சிறிது காலம் ஜீவித்திருந்தாலும் அவன் வாழ்வு பூரணமானதாகிறது. பரந்த அறிவு, ஆண்மை, உயர்பதவி, நேர்மை போன்ற குணங்களுடையவன், கொஞ்ச காலம் வாழ்ந்திருந்தாலும், அவன் வாழ்வு மற்றவர்களுக்கு நல்ல பலனை அளிக்கிறது. நம்மால் எறியப்படும் சாதத்தைக் கொத்தித் தின்று காகம் நீண்ட காலம் ஜீவித்திருக்கிறது. அதனால் என்ன பயன்? மேலும் சொல்லுவார்கள்:

“அழுகிப்போன பதார்த்தங்களைக் காகம் தின்று அதிக காலம் பிழைத்திருக்கிறது. ஆகவே, கீர்த்தியும் நேர்மையும் உடைய மனிதர்களால் நடத்தப்படும் வாழ்க்கையே உண்மை வாழ்வு எனப் படுவது. பிறருடைய வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும்படி தன் வாழ்க்கையை நடத்துபவனே உண்மையாக ஜீவிப்பவன். கொக்கு கூடத்தான் தன் அலகினால் வயிற்றை நிரப்பிக் கொள்ளுகிறது!

“இன்னும்,

“தனக்காகவே முயன்று சம்பாதித்து வயிற்றை நிரப்புபவன் ஆயிரம் தடவை கீழானவனே. மற்றவர்களின் சந்தோஷமே தன் சந்தோஷமாகக் கொண்டவன் ஒருவனே நேர்மையாளரின் தலைவன். பூமிக்குக் கீழிருக்கும் உஷ்ணமான வடவாக்கினி தன்னுடைய பசியைப் போக்கக் கடல் நீரைக் குடித்து விடுகிறது. ஆனால் மேகமோ கடுங்கோடையினால் பூமி அடைந்த உஷ்ணத்தைக் குறைக்க மழையாகப் பெய்கிறது.

”ஒருவன் தன்னுடைய குலம், நடத்தை, குணம் ஆகியவற்றால் பலனைக் கொடுக்காவிட்டால், அவன் பிறப்பானது ஓர் உபயோகமு மின்றி வாக்கியத்தின் நடுவே வந்து சேரும் வார்த்தையைப் போன்றதாகும். (இந்தச் சுலோகம் சிலேடையாக அமைந்துள்ளது.)

இவ்விதம் மனதில் நினைத்த மறையவன், பழத்தைச் சாப்பிட விரும்பவில்லை. குடிகளின் தலைவனான அரசனே, என்றென்றும் இளமையாயிருக்க வேண்டியவன். அத்தகைய அரசனே இந்த அதிசய மாதுளம் பழத்தை உண்டு அழியாத இளமையுடன் வாழத் தக்கவன் என்று அந்தணன் தீர்மானித்தான். மரணமும், கிழத்தன்மையும் நீங்கப் பெற்ற அரசன் நீண்ட காலம் குடிமக்களை நீதியுடன் அரசாளலாம் அல்லவா?

இதை எண்ணிய அவன் நேரே ராஜா பர்த்ருஹரியை வந்து அடைந்தான்.

“அரசே! பாம்புகளை ஆபரணமாக அணிந்துள்ள பரமசிவனும், பீதாம்பரத்தைத் தரிக்கும் மகாவிஷ்ணுவும் தங்களுக்குச் சர்வ மங்களங்களையும் அளிப்பார்களாக!” என்று வாழ்த்தி பழத்தை அவனிடம் கொடுத்தான்.

மாதுளம் பழத்தை வாங்கிக்கொண்ட மகாராஜன். அதன் சோபையைக் கண்டு வியந்தவனாய் அதனை திருப்பித் திருப்பிப் பார்த்தான்.

“இந்தப் பழம் உனக்கு எப்படிக் கிடைத்தது? பூவுலகில் இது போன்ற பிரகாசம் பொருந்திய பழத்தைக் காண்பது அரிதே!” என்று கேட்டான் பர்த்ருஹரி.

“மன்னர் மன்னவரே! பூமிதேவி யின் வரப் பிரசாதத்தால் இப் பழம் எனக்குக் கிடைத்தது. இதைப் புசித்தால் மரணமும் கிழத் தன்மையும் நீங்கிப் புத்துயிர் பெறலாம் என்றும் யாசகம் வாங்கி வயிற்றை நிரப்பும் எனக்கு இப் பழத்தினால் என்ன பிரயோஜனம்? நீண்ட ஆயுளோடு, நெறி தவறாமல் ஆட்சி புரியும் அரசனே நாட்டுக்குத் தேவை. ஆகவே தங்களிடம் கொண்டு வந்தேன். தாங்கள் இதைப் புசித்து அழியாத இளமையையும் நீண்ட ஆயுளையும் பெறுவீர்களாக!” என்றான் அந்தணன்.

மாதுளம் பழத்தைப் பெற்றுக்கொண்ட பர்த்ருஹரி மன்னன், அந்தணனுக்கு ஏராளமான பரிசுகளும், நிலபுலன்களும் அளித்துக் கௌரவித்தான். மாதுளம் பழத்தைச் சாப்பிடத் தயாரானபோது மன்னனுக்கு ஒரு யோசனை தோன்றியது. “இந்தப் பழத்தைச் சாப்பிடுவதால் நான் அமரத்தன்மை அடைகிறேன். ஆனால் என் பத்தினி அனங்கசேனை இருக்கிறாளே! நான் வெகு காலம் வாழ்ந்திருக்க, என் உயிருக்குயிரான மோகனாங்கி இறந்து போய்விடுவதா? அவள் பிரிவை எப்படித் தாங்குவேன்? அவளை விட்டு நான் பிரிந்திருப்பது என்பது எவ்விதம் முடியும்? சரசாங்கிதான் என்றென்றும் அழகு வாடாமல் இளமையோடு வாழத் தகுந்தவள். அனங்கசேனை இப்பழத்தைச் சாப்பிடட்டுமே!” என்று எண்ணமிட்டான் பர்த்ருஹரி மன்னன்.

அதற்குமேல் பழத்தை வைத்துக் கொண்டு அவன் யோசிக்க விரும்பவில்லை; உடனே தன் தேவி. யை அழைத்து அவளிடம் பழத்தைக் கொடுத்தான் மகாராஜன்.

“அன்பே அனங்கசேனை! இந்த அபூர்வ சக்திவாய்ந்த மாதுளம் பழம் ஓர் அந்தணனால் எனக்குக் கொடுக்கப்பட்டது. இதைச் சாப்பிட்டால் மரணபயமும், கிழத்தன்மையும் அகன்று விடுமாம். என்றென்றும் இளமையாக வாழலாமாம்! நீ இதைச் சாப்பிடு!’ என்று ராஜபர்த்ருஹரி அன்புடன் கொடுத்தான்.

அரசன் கொடுத்த பழத்தை அனங்கசேனை வாங்கிக் கொண்டாளே தவிர சாப்பிடவில்லை!

அவளுக்குச் சோரநாயகன் ஒருவன் இருந்தான். அரண்மனை குதிரை லாயத்திலிருந்த குதிரைப் பாகனிடம் அவளுக்கு மோகம்! குதிரையை அடக்கி ஆளக்கூடியவனே அந்த மோகனாங்கியின் ஆசையைத் தணித்து மகிழ்விக்க முடியுமென்று நம்பியிருந்தாள் அனங்கசேனை. தன் ஆசை நாயகன் கிழத்தனம் அடையும்போது தான் என்றென்றும் இளமையால் இருப்பதால் பலனில்லை. அதனால் நிராசையே மிஞ்சுமென்று எண்ணமிட்டாள். ஆகவே, குதிரைப் பாகனை ரகசியமாக சந்தித்து அந்தப் பழத்தைக் கொடுத்துச் சாப்பிடும்படி சொன்னாள்.

ராஜபத்தினியிடம் பிரியம் கொண்டவனாக நடித்தானே தவிர, குதிரைப் பாகனுக்கு அரண்மனை வேலைக்காரி ஒருத்தியிடமே உள்ளூர ஆசை உண்டு. மோகத்தின் பாதையே விசித்திரமானது. சாட்டையில்லாப் பம்பரம்போல் அலாதியாக ஆடக்கூடியது ஆசைப் பொம்மலாட்டம்! கலா ரசிகையான ராஜபத்தினியின் உயர்தரமான பண்பாடுகளும், மென்மையான அன்பு மொழிகளும் முரடனான குதிரைப் பாகனின் ஆசைக்குப் போதவில்லை! அவனைப்போல் கீழ்த்தரமான கொச்சை வார்த்தைகள் பேசக்கூடிய வேலைக்காரியிடமே அவனுக்கு அதிகமான மோகக்கிறக்கம் இருந்தது!

அந்த வேலைக்காரியைக் குதிரைப்பாகன் இரகசியமாகச் சந்தித்து, “என் அன்பே! இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் நீண்ட நாட்கள் உடல் கட்டுத் தளராமல் வாலிபத்துடன் இருக்கலாமென்று ஒருவர் தெரிவித்தார். உன்னை விட்டு விட்டு, நான் மட்டும் இதைச் சாப்பிடமாட்டேன். நீயே சாப்பிட்டுவிடு!” என்று மாதுளம் பழத்தை அவளிடம் கொடுத்து விட்டான்.

அந்த மாதுளம் பழத்தை அவள் வாங்கிக் கொண்டாளே தவிர, அவளும் சாப்பிடவில்லை. அவள் தன் ஆசை நாயகனான இடையனிடம் கொடுத்தாள். இடையனோ, மாட்டுக் கொட்டிலில் சாணம் முதலிய கழிவுப் பொருள்களைக் கூட்டி எறியும் தன் ஆசை நாயகியான வேலைக்காரப் பெண்ணிற்கு அந்தப் பழத்தைக் கொடுத்து விட்டான். அவள் பழத்தை வாங்கி சாணிக் கூடையின் மீது வைத்துத் தூக்கிக் கொண்டு வீட்டிற்குக் கிளம்பினாள்.

ராஜவீதியில் அவள் சென்று கொண்டிருக்கையில் ராஜாபர்த்ருஹரி எதிர்பட்டான். அப்போதுதான் வேட்டைக்குத் தன் பரிவாரங்களுடன் புறப்பட்டு வந்து கொண்டிருந்தான். சாணிக்கூடையின் மீது அதிசய மாதுளம் பழத்தைக் கண்ட அரசன் திடுக்கிட்டு நின்றான். பழத்தின் சோபை அரசனைத் தடுத்து நிறுத்திவிட்டது. அந்தணன் ஒருவன் தனக்களித்த பழத்தைப்போன்று பிரகாசத்துடனிருக்கும் அதைக் கண்டதும் அதை அடைய விரும்பினான். ஒரு மாதுளம் பழத்தைத் தன் ஆசை நாயகியான அனங்கசேனை சாப்பிட்டு அழியாத இளமையுடன் விளங்குவாள்! இன்னொரு பழத்தைத் தானும் அருந்தினால் தானும் சாகாத இளமையுடன் அவளுடன் ஆனந்தமாக வாழலாம் என்று எண்ணமிட்டான் ராஜா பர்த்ருஹரி. உடனே சாணக்கூடைப் பெண்ணை அழைத்தான் மன்னர்பிரான்.

“இந்தப் பழத்தை நான் விரும்புகிறேன். எனக்குக் கொடுத்துவிடு. உனக்கு வேண்டிய பரிசுகள் தருகிறேன்!” என்றான் பர்த்ருஹரி.

மன்னாதி மன்னன் கேட்கும்போது அவளால் மறுக்க முடியுமா? மேலும் அந்தப் பழத்தின் அபூர்வ சக்தியை அவள் அறியவில்லை; அவளால் நம்பவும் முடியாது! இடையன் அன்பாகச் சாப்பிடக் கொடுத்த பழம் அது என்றே அவள் எண்ணினாள். ஆகவே, அரசன் கேட்டதும் தட்டாமல் அந்த மாதுளம் பழத்தைக் கொடுத்து விட்டாள்.

பழத்துடன் அரசன் உடனே அரண்மனைக்குத் திரும்பி விட்டான். வேட்டைக்குச் செல்ல அவன் மனம் விரும்பவில்லை. பூமிதேவி வரப்பிரசாதத்தால் கிடைத்த ஒரே அதிசயப்பழம் என்று அந்தணன் தெரிவித்தான். அப்படியிருக்க, அதே போன்ற மற்றொரு பழம் எப்படிக் கிடைத்தது?

தை அறிய விரும்பிய அரசன் அந்த அந்தணனை அழைத்துவரக் காவலாளிகளை அனுப்பினான்.

அவன் வந்ததும், “அந்தணனே! சில நாட்களுக்கு முன்பு என்னிடம் வந்து, பூமிதேவியின் அனுக்கிரகத்தால் கிடைத்ததென்று நீ ஒரு பழம் கொடுத்துச் சென்றாய். இப்போது அதைப் போலவே மற்றொரு பழத்தைக் கண்டெடுத்தேன். உன்னால் எனக்குக் கொடுக்கப்பட்ட பழத்தைப் போன்ற மற்றொரு பழம் உண்டோ?!” என்று கேட்டான் பர்த்ருஹரி மன்னன்.

“அரசே! அதைப்போன்ற பழம் இப்பூவுலகில் எங்கு தேடினும் தாங்கள் அடையமுடியாது! பூமிதேவியின் கடாக்ஷத்தால் நான் அடைந்தது உண்மையே. என் வார்த்தையைத் தாங்கள் நம்பலாம். அரசன் தெய்வத்தைப் போன்றவன். அவன் எதிரில் பொய் பேசக்கூடாது. எல்லாத் தெய்வங்களின் குணங்களையும் அரசன் கொண்டிருக்கிறான். ஆகவே, புத்திசாலியானவன் அரசன் சமூகத்தில் சத்யத்திற்கு புறம்பாக பேசவோ, நடக்கவோ மாட்டான். அரசனைத் தெய்வம் போன்று மதித்து நடத்தவேண்டும் என்று தீர்க்கதரிசிகள் சொல்லியிருக்கிறார்கள்!” என்றான் அந்தணன்.

“அப்படியானால் எனக்கு எப்படி அதே போன்ற பிரகாசத்துடன் மற்றொரு அதிசய மாதுளம்பழம் கிடைத்தது?”

“அரசே! தங்களுக்குக் கொடுத்த பழத்தைப் புசித்தீர்களா?” என்று கேட்டான் அந்தணன்.

“இல்லை…..”

“அதை என்ன செய்தீர்கள்?”

“என் உயிருக்குயிரான அனங்கசேனையிடம் கொடுத்துச் சாப்பிடச் சொன்னேன்.”

“ராஜபத்தினியார் அந்தப் பழத்தைச் சாப்பிட்டார்களா என்று விசாரியுங்கள்.”

உடனே அனங்கசேனையை வரவழைத்து, அரசன் பின் வருமாறு கேட்டான்:

“தேவி! சத்தியத்திற்குக் கட்டுப்பட்டு நான் கேட்பதற்குப் பதில் சொல். சில நாட்களுக்கு முன்பு உன்னிடம் சாப்பிடக் கொடுத்த பழத்தை என்ன செய்தாய்? சாப்பிட்டாயா?”

அரசனின் கேள்விக்கு உடனே அனங்கசேனையால் பதில் கொடுக்க முடியவில்லை; தடுமாறினாள்.

“சொல், தேவி, சொல்…..” என்று அவளைத் துரிதப்படுத்தினான் மன்னர் பிரான்.

“நான் சாப்பிடவில்லை, பிரபோ!” என்றாள் கலவரத்துடன் அனங்கசேனை.

“அதை என்ன செய்தாய்? அது இப்போது எங்கே இருக்கிறது?” என்று வற்புறுத்தினான் பர்த்ருஹரி. விசாரணையில் உண்மை வெளிப்பட்டுவிடும்போல் இருந்தது. அதைவிடத் தானே உண்மையைச் சொல்லி விட்டால் என்னவென்று தோன்றியது அனங்கசேனைக்கு! “உண்மையைச் சொன்னால் மன்னிப்புக் கிடைக்கும்!” என்று வாக்குறுதி வாங்கிக் கொண்டு, அனங்கசேனை தன்னுடைய அந்தரங்க நாடகத்தை வெளியிடத் தயாரானாள்.

“குதிரைப் பாகனிடம் அந்தப் பழத்தை கொடுத்து விட்டேன்” என்று சொல்லிவிட்டுத் தலையைக் குனிந்து கொண்டாள் ராஜபத்தினி.

மன்னாதி மன்னனுக்கு உண்மை விளங்கிவிட்டது. மோகத்தின் சுழலில் சிக்கித் தவிக்கும் மோகனாங்கியின் நிலையை உணர அவனுக்கு அதிகநேரம் தேவைப்படவில்லை. குதிரைக் காரனை அழைத்து விசாரிக்கவே, அவன் பழத்தை வேலைக்க ரியிடம் கொடுத்ததும், அவள் இடையனிடம் கொடுத்ததும், அந்த இடையன் சாணக்காரியிடம் கொடுத்ததுமான இரகசியங்கள் வெளிப்பட்டன.

விவரங்களை அறிந்த பர்த்ருஹரி மன்னன் பெரிதும் மனோவியாகூலம் அடைந்தான். உயிருக்குயிரான அனங்கசேனையிடம் அவன் எவ்வளவோ நம்பிக்கை வைத்திருந்தான். அவளோ கேவலம் குதிரைப் பாகன் ஒருவனிடம் தீரா மோகம் கொண்டிருந்தது அவனை மிகவும் வாட்டியது. அளவில்லா சோகத்தில் ஆழ்ந்து விட்டான்.

“மனதைக் கவரும் உருவம், யெளவனம் ஆகிய இரண்டிலும் ஆடவன் கொள்ளும் அபிமானம் வீண்தான். வில்போன்ற புருவங்களுடைய பெண்கள் உள்ளத்தில் மன்மதன் தான் விரும்பியதையே செய்வான். பெண்களின் எண்ணங்களையும் செயல்களையும் ஒருவராலும் அறியமுடியாது.

குதிரையின் பாய்ச்சல், தேவேந்திரனின் இடிமுழக்கம், பெண்களின் சித்தம், மனிதனுடைய பாக்கியம், அதிக மழை மழையின்மை – ஆகிய இவைகளை தெய்வத்தாலேயே தடுக்க முடியாது என்பார்கள். அவ்வி தமிருக்க கேவலம் சாதாரண மனிதனால் என்ன செய்யமுடியும்? மேலும், பெண்களின் சஞ்சலம் நிறைந்த உள்ளத்தைக் கவருவதைவிட, ஒருவன் காட்டிலே புலி யைப் பிடித்து விடலாம்; ஆகாயத்தில் பறக்கும் பறவையைப் பிடித்து விடலாம்; தண்ணீரின் நடுவே நீந்தும் மீனைக் கூட அவன் சுலபத்தில் பிடித்து விடலாம் என்பார்கள். அதுமட்டுமல்ல;

மலட்டுப் பெண்ணின் குழந்தை அரசுக்கட்டில் ஏறலாம் என்றும், வானத்தில் பூக்கள் மலர்வதைக் காணமுடியும் என்றும் நினைக்கலாம். ஆனால் பெண்களின் உள்ளத்தில் புனிதத்தன்மையைப் பற்றி சிறிது கூட நினைக்க முடியாது என்று சொல்லுவார்கள். இன்னும்,

தத்துவத்தை அறிந்தவனும், சுகம், துக்கம், வெற்றி, தோல்வி வாழ்வு, மணம் ஆகியவற்றை நன்கு பிரித்துக் காட்டக் கூடியவனுமான அறிவாளியையே பெண்களின் நடத்தைகள் கெடுத்து விடுகின்றனவே, மன்மதனைப் போன்ற ஒருவனை அடைந்து சுகித்திருந்தாலும், பெண் உடனே மற்றொருவனை விரும்பத்தான் செய்கிறாள்; சுயநலக்காரிகளான மங்கையர் சுபாவம் அத்தன்மையது என்று புனித உள்ளம் படைத்தோர் சொல்லுவார்கள்.

ஜபம், மந்திரம், தந்திரம், விநயம், அறிவு, ஆகியவை இல்லாமலேயே பேரறிவு படைத்த ஒருவனையும் பெண்கள் ஒரு கணத்தில் ஏமாற்றும் சக்தி வாய்ந்தவர்கள்.

குடும்பத்திலிருந்தும் ஜாதியிலிருந்தும் தள்ளப்பட்டவன், நிகிருஷ்டமானவன், அலட்சியம் செய்யக்கூடியவன், துஷ்டன், தீண்டக்கூடாதவன் முதலானவர்களே மோகனாங்கிகள் விரும்பும் ஆடவர்களாவர் என்று கருதுகிறேன்.

கௌரவம், உயர்பதவி. போற்றக்கூடிய தன்மை வாய்ந்த குணங்களை உடையவர்களாயிருந்தும், பெண்கள் ஒரு காரணமுமின்றி தாங்களாகவே ஆசைப்போதையின் காரணமாகத் துரோகத்தின் சேற்றிலே இறங்குகிறார்கள்.

பெண்கள் சுய லாபத்திற்காகச் சிரிக்கவும் அழவும் செய்வார்கள்; தங்களிடம் நம்பிக்கை வைக்கும்படி அவர்கள் கெஞ்சுவார்கள்; ஆனால், அதே சமயம் அவர்கள் யாரிடமும் நம்பிக்கை வைப்பதில்லை; நல்ல குடும்பத்தில் பிறந்தவனும். புத்தியுள்ளவனும், அவர்களை மயானத்தில் கிடக்கும் பணியாரங்களைப் போலத் தவிர்க்கவேண்டும்.

துறவறத்தைவிட அதிகப் பாக்கியம் அளிப்பது வேறு எதுவுமில்லை; அறிவைவிடப் பேரின்பம் எதுவும் கிடையாது; திருமாலைத் தவிர காப்பாற்றுவோரும் இல்லை. சம்சாரத்தைக் காட்டிலும் பெரும் எதிரி வேறு கிடையாது.”

இவ்வி தம் சிந்தித்த ராஜாபர்த்ருஹரி உலகபந்தங்களின் மீது வெறுப்பு அடைந்தான். மோகனாங்கியைத் தண்டனைக்கு உள்ளாக்குவதால் தனக்கு ஒன்றும் பிரயோஜனமில்லை என்பதை அறிந்த பாத்ருஹரி ராஜன், அரசைத் தம்பி விக்கிரமாதித்தனிடம் ஒப்புவித்துவிட்டான். கடைசியாக அவன் துறவியாகித் தவம் செய்யக் காட்டிற்குச் சென்றான்.

அளவு மீறிய ஆசையின் விளைவு நிராசையிலே முடிந்துவிட்டது. அபரிமிதமான மோகத்துறைகள் கடைசியில் விரக்தியையும் துறவு மனப்பான்மையையும் உண்டாக்கும் என்பதை ராஜாபர்த்ருஹரியின் வாழ்வு உலகிற்கு எடுத்துக் காட்டியது.

– தொடரும்…

– விக்கிரமாதித்தன் கதைகள், வடமொழி மூலங்களைப் பரிசோதித்து எழுதியவர்: ராசு, தமிழ்ப் பாடங்களைப் பரிசோதித்து எழுதிவர்: அரு.ராமநாதன், முதற்பதிப்பு: ஜனவரி 1958, பிரேமா பிரசுரம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *