மகாசூரன்




கட்டியங்காரன் உரத்த குரலில்
“ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜ கம்பீர ..சூராதி சூர சூப்பர் சுப்பராய, வீராதி வீர, வீரப்ரதாப கரி கை ராஜன் மகாசூரன் வருகிறார்.. பராக்..பராக்..”
கேட்டுக்கொண்டே வந்த ராஜா மகாசூரன் தன் அருகில் நடந்து வந்து கொண்டிருந்த மகா மந்திரி சிங்கமுகனிடம் ,
“மகா மந்திரி, முதலில் இந்த கட்டியன்காரனுக்கு புத்தி சொல்லுங்கள். அவன் சொல்லும் உபசார வார்த்தைகள் என்னை வதைக்கின்றன..” என்றார்.
“ஏன் மன்னா?” மகா மந்திரி சிங்கமுகன் ஒன்றும் புரியாமல் அரசரிடம் கேட்டார்.
“என்னுடைய வீரத்தைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். அவன் கூறும் உபசார வார்த்தைகள் என்னை கேலி செய்வதாக இருக்கிறது!”
“உங்கள் வீரத்தில் ஒரு குறையும் இல்லை. வீரத்தைவிட நீங்கள் அதி புத்திசாலி. தவிர நம் படைத் தளபதி குலபதி மிகவும் வீரம் உடையவர். நாம் இது வரை எந்த போரிலும் தோற்க வில்லை.”
“அது சரி. நாம் இது வரை எந்த போருக்கும் போகவில்லை. போனால் தானே வெற்றி தோல்வி பற்றி சொல்லமுடியும்..”
அரசன் மகாசூரன் பெயரில் மட்டும் தான் மகாசூரன். அவன் ஒரு கோழை. போர் என்று யாராவது சொல்லிவிட்டால் பயந்து நடுநடுங்கிவிடுவான். போர் என்று வந்தால் அதிலிருந்து தப்பிப்பது எப்படி என்று எப்பொழுதும் சிந்தித்துக்கொண்டிருப்பான். அவனுக்கு வீரம்தான் குறைவே அன்றி அவன் அதி புத்திசாலி. எதையும் தன் மதியால் வெல்லும் திறன் படைத்தவன். சமீபத்தில் பக்கத்தில் இருக்கும் எதிரி நாட்டு அரசன் வீரபத்திரன் தங்கள் நாட்டின் மீது போருக்கு ஆயத்தம் செய்வதாக ஒற்றர் மூலம் செய்தி கிடைத்ததில் இருந்து அரசனுக்கு தூக்கம் போய்விட்டது.
“மகா மந்திரி.. நீங்கள் உடனே சென்று நமது தளபதி குலபதியை அழைத்து வாருங்கள்..”
சிறிது நேரம் சென்றபின் தளபதியும் மகா மந்திரியாரும் அரசன் மகா சூரனை சந்தித்தார்கள்.
தளபதி :“அரசே..என்னை உடனே தங்களை சந்திக்கும்படி மகா மந்திரியார் உத்தரவிட்டார். தங்களின் உத்திரவுக்கு காத்திருக்கிறேன்.”
“ஏன் எதற்கு என்று கேட்காமல் நான் சொல்வதை செய்யுங்கள்.. உடனே நமது படை வீரர்களுக்கு ஓட்டப்பந்தயத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். அவர்களுக்கு மிகவும் வேகமாக ஓடுவதற்கு பயிற்சி அளிக்க வேண்டும். அவர்களுடன் நானும் கலந்து கொள்வேன். உடனே ஏற்பாடு செய்யுங்கள். அது மட்டும் அல்ல..யார் நன்றாக வேகமாக ஒடுகிறார்களோ அவர்களுக்கு மன்னர் பல பரிசுகள் அளிப்பார் என்று அறிவித்துவிடுங்கள்.”
“அப்படியே மன்னா ..தங்கள் உத்தரவு..”
தளபதி சென்றுவிட்டார். மகா மந்திரியாருக்கு ஒன்றும் புரியவில்லை. எதற்காக இப்பொழுது அரசர் படை வீரர்களுக்கு ஓட்ட பந்தயம் வைக்கிறார் என்று தெரியவில்லை. அரசரிடம் கேட்கவும் தயங்கினார். அரசரின் உத்தரவின் பேரில் ஓட்டப் பந்தய ஏற்பாடுகளை பார்வையிட அவரும் தளபதியுடன் சென்றுவிட்டார்.
எப்படியும் தளபதிக்கு இதைப்பற்றி தெரிந்திருக்கும் என்று நினைத்து அவரிடம் “தளபதியாரே..அரசரின் இந்த வினோத உத்தரவுக்கு என்ன காரணம்?” என்று மகா மந்திரி சிங்கமுகன் கேட்டார்.
“நமது அரசர் எப்பொழுதும் போரைப் பற்றி நினைத்து பயந்து நடுங்குகிறார். எனக்கு தெரிந்த செய்தியின் படி எதிரி மன்னன் வீரபத்திரன் நம் நாட்டின் மீது எப்பொழுது வேண்டுமானாலும் படை எடுக்கலாம். அப்படி படை எடுத்து வந்தால் உபயோகமாக இருக்கும் என்றுதான் இந்த ஓட்டப் பந்தய ஏற்பாடு!”
மகா மந்திரி மிகவும் மதியூகம் கொண்டவர். எதையும் உடனே புரிந்து கொள்ளும் பக்குவம் அவருக்கு உண்டு.
“அதாவது..போர் வந்து அதில் தோற்கும் நிலை வந்தால் போர் களத்தில் இருந்து வேகமாக ஓடி தப்பிக்க நம் படைகளுக்கு பயிற்சி.. அப்படித்தானே!”
“சரியாக புரிந்து கொண்டீர்கள் ..ஒருவரை திடீர் என்று வேகமாக ஓட சொன்னால் அவரால் அப்படி ஓட முடியாது. தினமும் நன்றாக ஓடி பயிற்சி செய்தால் எப்பொழுது வேண்டுமானாலும் வேகமாக ஓடலாம். அரசரும் படை வீரர்களும் எப்பொழுதும் வேகமாக ஒடி தப்பிக்க இது ஒரு நல்ல உபாயம் அல்லவா? இந்த மாதிரி அரசர் கிடைக்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நம் படை வீரர்களை காப்பாற்ற அரசர் எப்படியெல்லாம் யோசிக்கிறார் பாருங்கள்!”
மகா மந்திரி தலையில் அடித்துக்கொண்டார். “இப்படியும் ஒரு அரசன் இருப்பானா.. ஏன் தளபதி.. உங்களுக்கு நன்றாக ஓடத் தெரியுமா..?”
“எனக்கு ஓடத் தெரியாது. நின்று சண்டை போடுவேன். தோற்றால் போர்க்களத்தில் உயிரை விடுவேன்.. எதற்கும் மகா மந்திரியார் வேகமாக ஓடிப் பழகுவது நல்லது..!”
“எல்லாம் என் தலை எழுத்து.. வயதான காலத்தில் வேகமாக ஓட என்னால் முடியாது. தவிர நான் போர்க்களம் வர அரசர் சம்மதிக்க மாட்டார்.”
“அமாம்.. ஆமாம்.. அவரே வரமாட்டார். பிறகெப்படி தங்களை அனுமதிப்பார்?”
அடுத்த சில நாட்களுக்கு படை வீரர்களுக்கு வேகமாக ஓடும் பயிற்சி அளிக்கப்பட்டது. அந்தப் பயிற்சியில் அரசரும் கலந்து கொண்டார். அவர் ஓடும் வேகத்தைப் பார்த்து தளபதியும் மந்திரியும் “ அட ..நம் அரசர் போருக்கு பதில் வேகமாக ஓடும் போட்டி வைத்தால் வென்று விடுவார்!” என்று பேசிக்கொண்டார்கள்.
அரசர் அதன் பிறகு படை வீரர்களுக்கு தினமும் ஓடும் பயிற்சி அளிக்கும்படி தளபதிக்கு கட்டளையிட்டார்.
சில நாட்களுக்குப் பிறகு அரசர் தளபதியை அழைத்து போர்களத்திலிருந்து பக்கத்தில் இருக்கும் காடு வரை நல்ல தரமான சாலை அமைக்கும்படி உத்தரவிட்டார்.
“தளபதி..உமக்குத்தான் போர் செய்வதை தவிர பலவிதமான வேலைகளை அரசர் கொடுக்கிறார். இப்பொழுது சாலை அமைக்க அவசியம் என்ன?”
“மந்திரியாரே..இது என்ன கேள்வி.. நாம் நன்றாக ஓடுவதற்கு பழகிவிட்டோம். வேகமாக ஓட நல்ல சாலை வேண்டாமா..?”
“அடடா..நம் அரசருக்கு நல்ல முன் யோசனை..நாம் செய்வதெல்லாம் எதிரி நாட்டு மன்னனுக்கு தெரிந்தால் நம் வீரத்தைப் பற்றி என்ன நினைப்பான்?”
உண்மையில் அரசர் மகாசூரன் செய்யும் செயல்களைப் பற்றி அவ்வப்போது எதிரி மன்னன் வீரபத்திரன் ஒற்றர் மூலம் அறிந்து வந்தான். அவனுக்கு மகாசூரனின் நடவடிக்கைகள் ஒன்றும் புரியவில்லை. அவன் சிறந்த வீரனாக இருந்ததால் மகாசூரனின் ஓட்டப் பந்தய படைப் பயிற்சி, படைகளை நல்ல முறையில் தயார் செய்வதற்காக என்று நினைத்துக்கொண்டான். அடுத்ததாக அரசன் மகா சூரன் போர்க் களத்தில் சாலை அமைப்பது படை வேகமாக வந்து தாக்குவதற்கு என்று நினைத்துக்கொண்டான்.
சாலை வேலை முடிந்த பின்பு அரசர் போர்க் களத்திலிருந்து காடு வரை படை வீரர்களை வேகமாக ஓடும்படி பணித்தார். அவரும் அதில் கலந்துகொண்டார். பல முறை ஓடிப் பார்த்த பின்பு மிகவும் திருப்தியடந்தார்.
அரசர் வீரபத்ரரின் அரண்மனை:
எதிரி மன்னன் வீரபத்திரன் தன்னுடைய ஒற்றர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். தலைமை ஒற்றர் ராஜசிம்மன் அரசரிடம் மகா சூரன் நாட்டில் நடக்கும் வினோத ஏற்பாடுகளை பற்றி சொல்லிக்கொண்டிருந்தார்.
“ராஜ சிம்மா..மகாசூரன் எதற்காக இப்படி ஓடி ஓடி பழகிக்கொண்டிருக்கிறான்? ஏதாவது தகவல் கிடைத்ததா?”
“அவனுக்கு போர் என்றால் உதறல்..போர் வந்தால் எப்படியாவது ஓடி ஒளிந்துகொள்ளலாம் என்று திட்டமாக இருக்கும்.”
ராஜ சிம்மன் இப்படி சொன்னதும், உதவி தலைமை ஒற்றன் “அப்படி இல்லை மன்னா..நான் அறிந்தவரை அவர் படை வீரர்களுக்கு நல்ல பயிற்சி கொடுக்கிறார். அது மட்டும் அல்ல.. அவரும் நன்றாக ஓடி பழகுகிறார். ஒடிப் பழகுவது நல்ல உடல் பயிற்சி .படை வீரர்களை உயிர்ப்புடனும் உற்சாகமாகவும் வைத்திருக்கும்.” என்று கூறினார். இதை கேட்டதும், அரசர் “ஆம். அதுதான் சரியாக இருக்கும். நாம் நம் எதிரியை குறைவாக எடை போடக் கூடாது..வேறு ஏதாவது செய்தி உண்டா?”
“இருக்கிறது மன்னா..மகா சூரன் இப்பொழுது வேறு எதோ பெரிய திட்டத்தில் இறங்கி இருக்கிறார்..”
“அது என்ன.. விவரமாக சொல்”
“நாங்கள் மீண்டும் எதிரி நாடு சென்று சில நாட்கள் உளவு பார்த்து கண்டுபிடிக்க வேண்டும் மன்னா..”
“சரி ..சென்று வாருங்கள்..நாம் மீண்டும் சந்திப்போம்.”
***
சில நாட்களுக்கு பிறகு அரசர் மகாசூரர், தளபதி மற்றும் மகா மந்திரியுடன் மந்த்ராலோசனை மண்டபத்தில் மற்றும் ஒரு திட்டத்துக்கு ரகசியமாக தீவிர ஆலோசனை செய்தார்.
மகாசூரர் அரண்மனையில் மந்ராலோசனை சபை கூடி இருந்தது. மிகவும் ரகசிய ஆலோசனை என்பதால் அரசர், மகா மந்திரி , தளபதி ஆகிய மூவர் மட்டுமே இருந்தனர். அரசர் தமது திட்டத்தை விளக்கினார்.
“எல்லோரும் கவனமாகக் கேளுங்கள். இன்றுமுதல் பத்து நாட்கள் நாம் எல்லோரும் மாறு வேஷம் போட்டுக்கொண்டு அடிக்கடி நகர் வலம் வரவேண்டும். நகர் வலம் இரவில் அல்ல. பகலில் நாம் மாறு வேடத்தில் செல்லவேண்டும். நமது தளபதி மட்டும் மாறு வேடத்தில் எதிரி நாட்டின் உள்ளே சென்று உளவறிய வேண்டும். நாம் மாறு வேடத்தில் இருப்பதை யாரும் கண்டுபிடிக்க கூடாது.”
மகா மந்திரிக்கு சந்தேகம். “மன்னா..நாம் எதற்காக இப்பொழுது மாறு வேடத்தில் அலைய வேண்டும். பகல் நேரத்தில் நாம் அப்படி சென்றுவிட்டால் அரண்மனையில் நம்மை தேட மாட்டார்களா? நாம் மாறு வேடத்தில் சென்று எதையாவது கண்டுபிடிக்கவேண்டுமா?”
மன்னருக்கு கோபம் வந்தது. “யாரும் எந்த கேள்வியும் கேட்க வேண்டாம். நான் எல்லாவற்றுக்கும் முன்னேற்பாடு செய்திருக்கிறேன். நான் சொல்வதை மட்டும் செய்யுங்கள். இத்துடன் இந்த ஆலோசனை கூட்டம் முடிந்தது” என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
மகா மாதிரி தளபதியிடம், “என்ன தளபதியாரே.. மன்னரின் இந்த திட்டம் உமக்கு பிடித்திருக்கிறதா? சரியான மாறு வேடம் போடாவிட்டால் நீர் எதிரி நாட்டுக்குள் போக முடியாது. என்ன உமது திட்டம்?”
“நான் ஒரு பெண் வேடம் பூண்டு எதிரி நாட்டுக்குள் போவேன். பிறகு பாருங்கள். எனது திட்டம் உங்களுக்கு புரியும்.”
“ஐயோ பாவம். போர்களத்தில் நின்று போர் புரியவேண்டிய தளபதி நிலைமை இப்படியா ஆகவேண்டும். நடப்பது நடக்கட்டும். அரசர் என்ன வேடம் போடுவாரோ தெரியவில்லை!”
பத்து நாட்கள் சென்றன. அரசர் திட்டப்படி எல்லாம் நடந்தது.
அரசர் வீரபத்ரரின் அரண்மனை:
அரசர் வீரபத்திரன் தனது ஒற்றகளுடன் ஆலோசனையில் இருந்தார்.
“புதிதாக எதாவது செய்தி உண்டா?”
“மன்னா.. அரசர் மகாசூரர், அவரது மகா மந்திரி, தளபதி மூவரையும் கடந்த பத்து நாட்களாகக் காணவில்லை. அவர்கள் எங்கே சென்று என்ன செய்தார்கள் என்பதும் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்பொழுது மீண்டும் அரண்மனைக்கு திரும்பிவிட்டனர்”
“அவர்கள் எதோ புதிய திட்டம் தீட்டுவதாக அறிகிறேன். சரி. நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் தொடர்ந்து கண்காணியுங்கள்.”
அரசர் மகாசூரன் அரண்மனை:
சில நாட்களுக்கு பிறகு அரசர் மகாசூரர், தளபதி மற்றும் மகா மந்திரியுடன் மந்த்ராலோசனை மண்டபத்தில் மீண்டும் ரகசியமாக தீவிர ஆலோசனை செய்தார்.
“மகா மந்திரி, தளபதி.. இது மிகவும் ரகசியம். நீங்கள் இருவரும் எனது புதிய திட்டத்தை மிகவும் ரகசியமாக முடிக்கவேண்டும். யாருக்கும் தெரியக் கூடாது. முக்கியமாக எதிரி நாட்டு ஒற்றர்களுக்கு சிறிதும் சந்தேகம் வராமல் இதை செய்து முடிக்க வேண்டும்.”
“சரி ..அப்படியே தங்கள் உத்திரவு.. என்ன செய்யவேண்டும் மன்னா?” “முதலில் நமது போர்க்களத்தில் மிகவும் பெரிய கூடாரம் அமைக்க வேண்டும். அந்த கூடாரத்தை சுற்றி நமது வீரர்கள் காவல் இருக்க வேண்டும். யாரையும் கூடாரத்துக்குள் அனுமதிக்க கூடாது.”
“அப்படியே செய்துவிடுகிறோம்..ஆனால் மன்னா இது எப்படி யாருக்கும் தெரியாமல் செய்ய முடியும். கூடாரம் இருப்பதை மறைக்க முடியாதே.?”
“உண்மைதான். கூடாரம் இருப்பதை மறைக்க முடியாது. நான் சொன்னது கூடாரத்துக்குள் நடப்பதை. அதை மறைக்கலாம் அல்லவா?”
“சரி மன்னா..அப்படி ரகசியமாக நாம் என்ன செய்யப்போகிறோம்?”
அதில்தான் நமது திட்டத்தின் வெற்றி அடங்கி இருக்கிறது..!”
“சற்று விளக்கமாக கூறுங்கள் மன்னா..”
“எல்லோரும் அந்த கூடாரத்துக்குள் எதோ ரகசியமாக நடப்பதாக நினைத்துக்கொண்டு இருப்பார்கள். ஆனால் நாம் நிறைவேற்றவேண்டிய திட்டம் ஆது அல்ல. கூடாரத்துக்குள் சில படை வீரர்களை தங்க வைத்து எதோ அங்கு நடப்பது போல ஏமாற்ற வேண்டும். ஆனால் அங்கு ஒரு வேலையும் இல்லை. எதிரி ஒற்றர்கள் காதில் விழுவது போல கூடாரத்துக்குள் ஏதோ விபரீதமாக நடப்பதாக நீங்கள் பேசிக்கொள்ளவேண்டும். புரிகிறதா?”
“சரி. அப்படியே செய்கிறோம்.. பிறகு என்ன செய்யவேண்டும்?”
“போர்களத்தின் அருகில் இருக்கும் காட்டில் நீங்கள் மரங்களின் இலை, செடி, கொடிகளின் உதவியுடன் ஓர் மறைவான இடத்தை ஏற்படுத்தவேண்டும். அந்த இடத்தில் ஒரு சிறிய சுரங்க பாதை அமைக்க வேண்டும். அதன் முடிவு நம் நாட்டு எல்லை முடியும் இடத்தில் இருக்கவேண்டும். இந்த சுரங்க பாதை அமைப்பது யாருக்கும் தெரிய கூடாது. மற்றவர்கள் கவனத்தை திசை திருப்ப இந்த சுரங்க பாதை சற்று அருகில் ஒரு பெரிய பதுங்கு குழி அமைக்கவேண்டும். இந்த பதுங்கு குழி அமைக்கும் வேலை எல்லோருக்கும் தெரிவது போல் இருக்கலாம். எல்லாரும் பதுங்கு குழி வேலை நடப்பதாக நம்புவார்கள். சுரங்கம் அமைப்பது தெரியாது. இதுதான் எனது திட்டம். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் கேட்கலாம்.”
‘பதுங்கு குழி, சுரங்கம் எல்லாம் எதற்கு மன்னா?”
“அதை பற்றி நீங்கள் கவலைப் பட வேண்டாம். போர் வரும்போது உங்களுக்கு தெரியும். இந்த வேலைகள உடனே செய்து முடிக்கவேண்டும். உங்களுக்கு பத்து நாட்கள் அவகாசம் தருகிறேன். வேலை முடிந்ததும் நான் வந்து பார்க்கிறேன். நீங்கள் போகலாம்.”
அரசர் அத்துடன் மந்ராலோசனையை முடித்துவிட்டார்.
மகா மந்திரி தளபதியிடம் அரசரின் திட்டம் பற்றி பேசினார்.
“என்ன தளபதி ,,நமது மன்னர் புதுமையாக பல திட்டங்களை தீட்டுகிறார். நம் அரசரின் திட்டங்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”
“என்ன சொல்வது.. அரசர் போரில் தோற்றால் பதுங்கு குழியில் மறைந்து கொள்வார். அல்லது சுரங்கம் வழியாக தப்பி ஓடுவார்..நமது அரசர் ஓடி ஒளிவதற்கு மிகவும் தந்திரம் தெரிந்தவர்..”
“தளபதி பேசாமல் போர் செய்வதை விட்டு விட்டு இப்படி எதாவது ஒரு வேலையை முழு நேரமும் செய்யலாம்.”
“மந்திரியார் மட்டும் என்ன.. மந்திரி வேலையா பார்க்கிறார்..அரசருக்கு மந்திரியாரே தேவை இல்லை. எப்படியும் அரசருக்கும் ஒரு காலத்தில் மந்திரியாகும் யோகம் உண்டு..”
இருவரும் அரசர் உத்திரவின்படி திட்டங்களை நிறைவேற்ற ஏற்பாடு செய்தனர்.
அரசர் வீரபதிரனின் அரண்மனை.
அரசர் வீரபத்திரன் ஒற்றர்கள் புதிய செய்திகளை கொண்டுவந்திருந்தனர்..
தலைமை ஒற்றர் ராஜ சிம்மன் புதிய செய்திகளை விவரித்தார்.
“மன்னா..மகாசூரர் நாம் நினைத்தது போல சாதாரண வீரர் அல்ல..மிகவும் தந்திரம் மிக்கவர். போர்க்களத்தில் பதுங்கு குழி போல் செய்து அதில் பல வகை ஆயுதங்ககளை குவித்து வைப்பார் என்று எங்களுக்கு செய்தி கிடைத்தது. மேலும் அவர் போர்க்களத்தில் ஒரு பெரிய கூடாரம் அமைத்து அங்கு எதோ வேலை நடக்கிறது. அது என்ன என்று தெரியவில்லை. ஆனால் அங்கு எதோ புதிய நெருப்பு அம்பு எய்யும் பொறி அமைக்கிறார் என்று தெரிகிறது. வேறு என்ன அங்கு நடக்கிறது என்று நாங்கள் தொடர்ந்து உளவு பார்த்து வருகிறோம்.”
“சரி.. நீங்கள் தொடர்ந்து உளவு பார்த்து எனக்கு செய்திகளை அனுப்புங்கள்.”
அரசர் வீரபத்திரன் தனது மந்த்ராலோசனை சபையைக் கூட்டினார்.
அரசர் மகாசூரரின் அரண்மனை:
“மன்னர் மன்னா..நம் எதிரி நாட்டு மன்னர் வீரபத்திரன் நமக்கு ஓலை அனுப்பி இருக்கிறார். தூதுவர் உங்களை காண காத்திருக்கிறார்”
மன்னர் ஓலையை படித்து பார்த்தார். அதில் எதிரி நாட்டு மன்னன் அவருடன் போரை விரும்பவில்லை என்றும் நட்புடன் இருக்க விரும்புவதாகவும், அதன் அடையாளமாக அவரது தங்கையை மன்னர் மகாசூரர் திருமணம் முடிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த செய்திகளைக் கேட்ட மகா மந்திரியும் , தளபதியும் வியப்பில் ஆழ்ந்தனர்.
– 17.02.2014