பொற்காப்பைத் திருடினாரா புரந்தரதாசர்?




அது அழகான ஒரு நந்தவனம். அதன் நடுவே பசுமையான புல் தரை மீது அமர்ந்து, மலர் தொடுத்துக் கொண்டி ருந்தாள் அழகான இளம் பெண் ஒருத்தி. அவள் ஒரு தேவதாசிப் பெண். பெயர் லீலாவதி. அவள், ‘நாரத முனிவரின் அம்சம்’ எனப்படும் புரந்தரதாசரின் பரம பக்தை. விரல்கள் பூத்தொடுக்க, உதடுகள் புரந்தரதாசரின் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தன.
அப்போது, ‘‘மகா ஜனங்களே… நம் பாண்டுரங்கப் பெருமானின் சிலையில் இருந்த பொற்காப்பைக் காணவில்லை. அது தொடர்பான தகவல் அறிந்தால், உடனே மன்னரிடம் தெரிவிக்குமாறு பக்த ஜனங்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்!’’ என்று அரசின் சிப்பந்தி ஒருவன் பறையறைந்து முச்சந்தியில் செய்தி தெரிவித்தான். அதைக் கேட்ட லீலாவதி, சட்டென்று எழுந்து அருகில் இருந்த தனது இல்லத்தின் பூஜை அறையை நோக்கி விரைந்தாள். அங்கு, ‘காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட’ பொற்காப்பு இருந்தது. உடனே முந்தைய நாள் இரவு நடந்த நிகழ்ச்சிகள் அவள் மனத்தில் தெளிவடையத் தொடங்கின.
சுழன்றடிக்கும் மழை. மின்னல். இடி. பூஜையறையில் விளக்கேற்றிய லீலாவதி கூடத்துக்கு வந்து சாளரங்களைச் சாத்தினாள். அப்போது, வாசற் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. ஓடிச் சென்று கதவைத் திறந்தாள். எதிரே& வாட்டசாட்டமான மனிதர் ஒருவர் புன்னகையுடன் நின்றிருந் தார். மழை, உடலை நனைத்திருந்ததால், அவர் நடுங்கிக் கொண்டிருந்தார்.
அவள், ‘‘உள்ளே வாருங்கள் சுவாமி!’’ என்று அவரை அழைத்துச் சென்று ஆசனம் ஒன்றில் அமர வைத்து, மாற்றுடை ஒன்றை எடுத்து வந்து அவரிடம் கொடுத்தாள். பின்பு, ‘‘சுவாமி, அந்த அறைக்குச் சென்று உடை மாற்றி விட்டு ஓய்வெடுங்கள். நான், சாப்பிட ஏதேனும் கொண்டு வருகிறேன்!’’ என்றாள். மாற்றுடையை வாங்கிக் கொண்ட அவர், சிரிப்பு ஒன்றை உதிர்த்தார். அதில் ஏதோவொரு மர்மம் ஒளிந்திருப்பதை லீலா வதி உணரவில்லை.
‘‘இந்தாருங்கள் சுவாமி!’’ என்று ஒரு பாடலை முணுமுணுத்தவாறே பழத் தட்டை நீட்டினாள் லீலாவதி.
‘‘அம்மணீ, அருமையாகப் பாடு கிறீர்கள். சரி… இந்தப் பாடலை இயற்றியது யார் என்று தெரியுமா?’’ & வந்தவர் கேட்டார்.
‘‘மகான் புரந்தரதாசரை அறியாதார் உண்டோ? அடியேன் அவர் பக்தை. அவரது இசைக்கு நான் அடிமை!’’& என்றாள் லீலாவதி.
‘‘அம்மணீ! தங்கள் அழகில் மயங்கி, கொட்டும் மழையில், இச்சையுடன் தங்களது இல்லம் நாடி வந்திருக்கும் இந்தப் புரந்தரதாசன்தான் உண்மையில் தங்கள் அடிமை!’’
‘‘என்ன… தாங்கள்தான் புரந்தர தாசரா?! தங்களை என் தெய்வமாக பூஜித்து வருபவள் நான். தங்கள் திருப்பாதங்களால் இந்த ஏழையின் குடிசை புனிதம் பெற்றது. எனினும், தாங்கள் கூறிய வார்த்தைகள் என்னைத் தீயாகச் சுடுகிறது. தேவரீர்! தயை கூர்ந்து அந்த எண்ணத்தை விடுத்து, எனக்கு ஆசி புரியுங்கள்!’’ கண்களில் நீர் பெருக அவர் பாதங்களில் வீழ்ந்தாள் லீலாவதி. அவளின் பதற்றத்தை ரசித்த அவர்,
‘‘அம்மணீ! தங்களது பக்திக்கு என் மனமார்ந்த நன்றி. தங்களைக் கண்டதே என் பாக்கியம். இதோ, இதை என் அன்புக்கு அடையாளமாகப் பெற்றுக் கொள்ள வேண்டும்!’’ என்றவாறு தன் வலக் கரத்திலிருந்த பொற்காப்பைக் கழற்றி, அவளிடம் கொடுத்தார். அவள் அதை வாங்க மறுத்தாள். எனவே, பலவந்தமாக அவள் கையில் திணித்து விட்டு, அங்கிருந்து வெளியேறினார் புரந்தர தாசர்.
_ அந்த நினைவிலிருந்து மீண் டாள் லீலாவதி. இந்த நிகழ்ச்சி, புரந்தரதாசர் மீது அவளுக்கு தாங் கொணா ஆத்திரத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தியது.
அவள், அந்தப் பொற்காப்புடன் அரண்மனையை நோக்கி விரைந்தாள். நடந்தவற்றை மன்னரிடம் எடுத் துரைத்தாள். அதைக் கேட்ட மன்னர் வியப்புற்றார். பண்டரிநாதனின் பக்தரான புரந்தரதாசரின் இந்தச் செய்கை, புதிராக இருந்தாலும் அவரைக் கைது செய்ய ஆணை பிறப்பித்தார் அவர்.
தர்பாரில் கொலு வீற்றிருந்தார் மன்னர். லீலாவதி யின் குற்றச்சாட்டுகளைக் கேட்டுக் குழம்பினார் புரந்தரதாசர். ‘‘மன்னா! நான் பகவானது காப்பைத் திருடவில்லை. அதை இந்த அம்மணியிடம் கொடுக்க வும் இல்லை. முதலில் இவர் யார் என்றே எனக்குத் தெரியாது. எல்லாவற்றுக்கும் மேலாக நேற்று நான் பண்டரிபுரம் செல்லவே இல்லை!’’
லீலாவதியின் கண்கள் நெருப்பை உமிழ்ந்தன. ‘‘மன்னா… இவர் நேற்று எனது இல்லத்துக்கு வந்து, என்னை நேசிப்பதாகக் கூறினார். இவரது இச்சைக்கு இணங்காமல், இவரை நான் தெய்வமாக வழிபடுவதைக் கூறினேன். இறுதியில் இந்தப் பொற்காப்பை என் கரத்தில் திணித்து விட்டுச் சென்றார். பண்டரிநாதன் மேல் ஆணையாக நான் கூறியவை அனைத்தும் சத்தியம்!’’ என்றாள். புரந்தரதாசர் திக் பிரமை பிடித்தவராகத் தலை குனிந்து நின்றார். கோபம் கொண்ட மன்னன், ‘‘பாண்டுரங்கனது பொற் காப்பைத் திருடியது பெருங்குற்றம். ஆகவே, இவருக்கு முப்பது கசையடி கொடுக்க உத்தர விடுகிறேன்!’’ என்று தீர்ப்பளித்தான்.
இதைக் கேட்டு புரந்தரதாசர் மனம் உடைந் தார். அப்போது அங்கு ஓர் அசரீரி: ‘‘மன்னா! கோயில் கதவு பூட்டியது பூட்டியபடி இருந் தது என்று அர்ச்சகர் கூறியது ஞாபகம் இல்லையோ? அப்படி இருக்கும்போது பொற்காப்பை புரந்தர தாசர் எப்படி எடுத் திருக்க முடியும்? என் பரம பக்தன் புரந்தர தாசனிடம் கொஞ்சம் அகம்பாவமும் இருந்தது. அதைப் போக்கவும் அவன் புகழை உலகறியச் செய்யவுமே யாம் லீலாவதியின் இல்லத்துக்குச் சென்று இப்படியரு நாடகம் நடத்தினோம்.’’
புரந்தரதாசர் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். மன்னரும் மற்றவர்களும் அவரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினர்.
அதன் பிறகும் அந்த பண்டரிநாதனின் திருவருளை வியந்து எவ்வளவோ அற்புதமான பாடல்களை இயற்றினார் புரந்தரதாசர். இவரது பாடல்களை ‘தாசர்வாள் பதம்’ என்றும் ‘தேவர்நாமா’ என்றும் இசை உலகம், போற்றிப் புகழ்கிறது!
– மே 2007