பொருத்தம்
கதையாசிரியர்: இந்திரா பார்த்தசாரதி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: August 6, 2026
பார்வையிட்டோர்: 81
(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உலகத்திலுள்ள எல்லா ப்ரோக்கர்களுக்கும் ஒரே ஜாடை தான் போலிருக்கிறது. இதழ்களில் காகிதப் பூ புன்னகை மலர மனத்துக்குள் வாடிக்கைக்காரரை எடை போட்டுக் கொண்டிருந்தால், அக்கறையும் அலட்சியமும் கலந்த பேச்சு, சாதிக்க முடியாதது உலகில் என்ன இருக்கிறது என்ற தோரணை…
அவர் குப்தாவைப் பார்த்துக் கொண்டே நின்றார்.
“நோ ப்ராப்ளம்… ரிடையராகிவிட்டீர்கள். கவர்ன்மென்ட் குவார்ட்டர்ஸை காலி செய்ய வேண்டும். அவ்வளத்தானே? நிச்சயமாக உங்கள் தகுதிக்கேற்ற வீடு கிடைக்கும். கவலைப் படாதீர்கள்.கவர்ன்மென்ட் ஆஃபீஸர்கள் அநேகமாக எல்லோருமே, ஓய்வு பெற்றவுடன் குடி போவதற்கு சௌகர்யமாக வீடு கட்டிக் கொண்டிருப்பார்களே, நீங்கள் விதி விலக்கு, அவ்வளத்தானே..?” குப்தா ஒரு வசீகரப் புன்னகையுடன், பேன்ட் பாக்கெட்டிலிருந்து கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டான்; சில விநாடிகள் மெளனம். அவன் யோசிக்கிறான் என்று தோன்றிற்று அவருக்கு.
“ஓகே.. நீங்களும் உங்கள் மனைவியுந்தான். குழந்தை குட்டிகள் இல்லை. இருந்துதான் என்ன பிரயோஜனம்? இந்த காலத்தில் பெற்ற தாயையும் தகப்பனையும் அனாதையாக ரோடில் அலைய விடுவதுதான் பாரத தர்மமாகிப் போய் விட்டது. முதியோர் விடுதிகள் பெருகி வருவதற்கு வேறு என்ன காரணம்? என் அப்பா, அம்மா என்னுடன்தான் இருக்கிறார்கள். சந்தோஷமாக இருக்கிறார்கள். இது நம் கடமை. என்ன சொல்லுகிறீர்கள்?…”
அவன் தன்னிடம் பதிலை எதிர்பார்க்கின்றானோ என்று அவருக்குத் தோன்றிற்று.
பதிலை எதிர்பார்க்கவில்லை. அவன் தொடர்ந்தான்.
“கவர்ன்மென்டில் நல்ல உத்தியோகத்தில்தான் இருந்திருப் பீர்கள். பார்த்தாலே தெரிகிறது. நல்ல பென்ஷன் வரும் இல்லையா?” அவர் தலையசைத்தார்.
சில விநாடிகள் மௌனம்.
”ஓகே… ஒரு வீடு இருக்கிறது. பக்கத்தில் தான். மூணு பெட்ரூம். அவ்வளவு பெரிய வீடு எதற்கு என்று கேட்காதீர்கள். வாடகை அதிகம் இல்லை. ஒரு நல்ல ‘பார்ட்டி’ வேண்டும் என்கிறார்கள். வீட்டைப் பாருங்கள், பிடித்திருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள். அதுதானே உங்கள் கார்…? போகலாம். வாருங்கள்…,” என்றான் குப்தா.
டிஃபன்ஸ் காலனி. மிகவும் ‘பாஷ் ஏரியா’, எப்படி வாடகை குறைவாக இருக்க முடியும் என்று தோன்றிற்று அவருக்கு. தில்லிக்கு வந்த புதிதில் அவர் டிஃபன்ஸ் காலனியில் இருந்தார். அப்பொழுது இரண்டு ‘பெட்ரூம்’ தான் வீட்டுக்கு 150 ரூபாய் கொடுத்தார். இப்பொழுது ஆறாயிரம் ரூபாயாக உயர்ந்து விட்டது என்பதும் அவருக்குத் தெரியும்.
காரிலிருந்து இறங்கியதும், குப்தா கேட்டான், “உங்கள் மனைவி பார்க்க வேண்டாமா?”
“எனக்குப் பிடித்திருந்தால், அவளுக்கும் பிடித்தமாதரிதான்” என்றார் அவர். அவன் திடீரென்று நின்று அவரை நமஸ்காரம் செய்தான். முகத்தில் புன்னகை.
“இந்த மாதிரி தம்பதிகளை இந்த காலத்தில் தரிசனம் பண்ணுவதே பெரிய புண்ணியம். என்ன சொல்லுகிறீர்கள்..?”
அவர் வீட்டைப் பார்த்தார். டிஃபன்ஸ் காலனி எப்படி மாறிவிட்டது இந்த முப்பது சொச்சம் வருஷங்களில்! அந்தக் காலத்திலேயே பளீரென்று இருக்கும். இப்பொழுது பார்க்கின்றவர்கள் முகத்தில் வந்து ஒட்டிக்கொள்ளும் பிரகாசம்! சலவைக்கல்லால் இழைக்கப்பட்டது போன்ற ஒரு பிரமை. சலவைக் கல் தானோ?
குப்தா வீட்டுக்குள் நுழைந்துவிட்டான். அவர் தயங்கியபடியே அவனைப் பின் தொடர்ந்தார்.
அவன் காலிங்பெல்லை அழுத்தினான் சில வினாடிகளுக்குப் பிறகு ஒரு பெண் கதவைத் திறந்தாள்.
வேலைக்காரி போல் தோன்றியது. பணக்கார வீட்டு வேலைக்காரி.
“மெம் சா(ஹ)ப் இருக்கிறார்களா?” அவன் கேட்டுக் கொண்டிருந்த போதே அவள்தான் ‘மெம் சா(ஹ)ப் என்று தோன்றியது-வந்து விட்டாள். நல்ல உயரம். அரச வம்சத்துப் பெண் போல் இருந்தாள். ஐம்பதைந்து வயதிருக்கும். தலை முடியைப் பார்த்தால் அப்படித் தோன்றியது. முகம் இந்த வயதை மிக்க கணிசமாக குறைத்துக் காட்டியது.
”நமஸ்தேஜி… இவர் வீட்டைப் பார்க்க வந்திருக்கிறார்..” என்றான் குப்தா
அவள் அவரை ஏற இறங்கப் பார்த்தாள்.
“எல்லாவற்றையும் அவரிடம் சொல்லி விட்டாயா?” என்றாள் அவள் ‘சடக்’கென்று குப்தா பக்கம் திரும்பி.
அவன் சிறிது திடுக்கிட்ட நிலையில் சமாளிப்பது போல் அவருக்குப் பட்டது.
“சொ… ல்.. லி விட்டேன். “
“சாவியைக் கொடு” என்று வேலைக்காரியிடம் சொல்லிவிட்டு. அவள் உள்ளே போய் விட்டாள்.
வீட்டு மாடிக்குப் பின் பக்கமாகத் தான் போக வேண்டும் என்பதை அவர் உணர்ந்தார்.
“பின் பக்க வாசலுக்கு இரண்டு சாவிகள் உண்டு . ஒன்று உங்களுக்கு, மற்றது வீட்டுக்காரர்களுக்கு..” என்றான் குப்தா.
‘முன் பக்க வாசலிலேயே மாடிப்படி இருந்திருக்கலாமே?” என்றார் அவர்.
“இருந்திருக்கலாம் அவர்கள் அப்படி வீட்டைக்கட்டவில்லை. வீடு கீழேயும் மாடியிலுமாக அவர்களே இருந்தார்கள். இப்பொழுதுதான் வாடகைக்கு விடுகிறார்கள். ஏன் உங்கள் மனைவிக்கு இது பிடிக்காதா?”
அவர் பதில் சொல்லவில்லை.
வீடு துப்புரவாக இருந்தது. நல்ல காற்றோட்டம். பெரிய படுக்கை அறை. ஹால் பெரிதாக இல்லாவிட்டாலும் வசதியாக இருந்தது. கண்ணாடி ஹாலை அலங்கரித்தது. அதில் நிறைய பரிசுப் பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன. தங்க மெடல்கள், வெள்ளிக் கோப்பைகள்.
‘”அவை இங்கேயே வைக்கப்பட்டிருப்பதில் உங்களுக்கு ஆட்சேபணை இல்லையே..?” என்றார் குப்தா.
அவர் சிறிது திடுக்கிட்டார். அவை இங்கு ஏன் இருக்க வேண்டும். வீட்டை வாடகைக்கு விட்ட பிறகு…?
அவன் சொல்லியது விளங்காதது போல், அவர் அவனைப் பார்த்தார்.
“அவை இங்குதான் இருக்கும்…” என்றான் குப்தா. அவன் இதை வேறு எங்கேயோ பார்த்துக் கொண்டு சொன்னான். அவனுக்கு இதைச் சொல்வதில் கொஞ்சம் தர்ம சங்கடம் இருப்பது போல் அவருக்குப் பட்டது.
மூன்று ‘பெட்ரூம்’ என்று குப்தா சொன்னது தப்பு.இன்னொரு அறையும் இருந்தது. ஒட்டி இருந்தது.
“இந்த ரூம்..?” என்று அவர் அவனைப் பார்த்தார்.
“இந்த அறை ஒட்டி தான் இருக்கும் வீட்டுக்கார அம்மா இங்கு சில சமயம் வருவதுண்டு. இந்த அறை அவள் உபயோகத்துக்கு.” இதை அவர் எதிர்ப்பார்க்கவில்லை.
“அவள் இங்கு வருவதனால் உங்களுக்கு ஒரு தொந்தரவும் இல்லை. மிகவும் நல்ல பெண்மணி. உங்கள் மனைவி அவளை மிகவும் விரும்பக் கூடும்.”
“எதற்கு அவள் இங்கு வர வேண்டும்? இந்த அறையில் என்ன இருக்கிறது? கீழே வீடு மிகவும் பெரிதாகத்தானே இருக்கிறது? அவர்கள் வீட்டில் யார் யார் இருக்கிறார்கள் ..?” என்றார் அவர்.
”அதெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது. நீங்கள் வீடு பிடித்திருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள். வாடகை நானூறு ரூபாய்…”
“வாட்….? நானூறா?” அவர் குரல் ‘க்றீச்’சிடுவதை அவரால் உணர முடிந்தது.
“அதான் வாடகை அதிகமில்லை என்று நான் சொன்னேனே…? வாடகை குறைவாக இருப்பதற்குக் காரணமே இந்த சின்ன அசௌகரியங்கள்தான்…” என்றான் குப்தா.
“இந்த நானூறு ரூபாய் அவர்களுக்கு எதற்கு? இந்த வீட்டை அவர்கள் வாடகைக்கு விட வேண்டிய அவசியம் என்ன? அதுவும் இந்த வாடகைக்கு?” என்று கேட்டார் அவர்.
குப்தா பதில் கூறாமல், பேசாமல் நின்றான். அவன் கைக் கெடியாரத்தில் மணியைப் பார்த்தான். கடிகாரம் நின்று விட்டது என்று தோன்றியது.அவன் அதை தட்டி ஆட்டி மறுபடியும் நோக்கினான். “டைம்’ என்ன ?” என்றான் குப்தா. அவர் கடிகாரம் கட்டிக் கொண்டு வரவில்லை
“ஓகே.. கேட்க வேண்டியதெல்லாம் வீட்டுக்கார அம்மாவிடம் கேளுங்கள். அவள் பதில் சொல்வாள். என்று எனக்குத் தோன்றவில்லை. வாடகை கொள்ளை மலிவு. நான் உங்கள் இடத்தில் இருந்தால் எடுத்துக் கொண்டு விடுவேன். நீங்களும் உங்கள் மனைவியும் தான். இரண்டு பேருக்குப் புழங்க எவ்வளவு பெரிய இடம்…. அதுவும் இந்த வாடகைக்கு நாலாவிதமான மனிதர்கள் இருப்பதால் தான் உலகம் சுவாரஸ்யமாக இருக்கிறது… இந்த வீட்டுக்கார அம்மா ஒரு விதம்…. அதை ஒப்புக் கொண்டு பேசாமல் கண்ணை மூடிக் கொண்டு வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.”
அவர் மௌனமாக நின்று கொண்டிருந்தார்.
“ஏன் மனைவியைக் கலந்தாலோசிக்க வேண்டுமா..?”
அவர் பதில் கூறவில்லை.
“சரி உங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால் வாருங்கள் போகலாம்… வேறு வீடு பார்த்துச் சொல்லுகிறேன்…” என்றான் குப்தா.
‘இந்த வீட்டையே எடுத்துக் கொள்கிறேன்” என்றார் அவர். ‘ஆனால்… ஒரு விஷயம்…” என்று சொல்லிவிட்டு நிறுத்தினான் குப்தா.
“என்ன?”
“எனக்கு அரை மாத வாடகை கமிஷனாகக் கொடுக்க வேண்டும் இல்லையா?”
“ஸோ?”
“மார்க்கெட் ரேட்டில் வீட்டு வாடகையைக் கொண்டு மூவாயிரம் ரூபாய் தர வேண்டும். “
“மன்னிக்கவும்… எனக்கு இந்த வீடு வேண்டாம்.”
“சரி. ரெண்டாயிரம் தருவீர்களா, மாட்டீர்களா?” “எனக்கு இந்த வீடு வேண்டாம்”
”ஓகே… ஓகே… ஆயிரம் ரூபாய் கொடுங்கள் போதும்.. அரண்மனை மாதிரி ஒரு வீடு பார்த்துத் தந்திருக்கிறேன்… ஆயிரம் ரூபாய் கூட கொடுக்க மாட்டீர்களா? அவர் பேசாமல் குப்தாவைப் பார்த்துக் கொண்டே நின்றார்.
“என்ன சரியா?” என்றான் குப்தா
அவர் புன்னகை செய்தார்.
அந்த வீட்டுக்குக் குடியேறிய பிறகு அவர் தம் மனைவியைக் கேட்டார்.
“என்ன உனக்கு வீடு பிடிச்சிருக்கா?”
“ரெண்டு நா கழிச்சாவது கேக்கத் தோணித்தே உங்களுக்கு..?” “நான் அப்போவே கேட்டேன். நீதான் பதில் சொல்லலே… இப்பொ இப்படிச் சொல்றியே..”
“நன்னாத்தான் இருக்கு வீடு.. அந்த ரூம் ஏன் பூட்டியிருக்கு?”
“தெரியலியே … வீட்டுக்காரி வந்து போயிண்டிருப்பான்னான் குப்தா… இது வரையிலும் வர்லே… இரு… அதோ வாசல்லே பெல் அடிக்கிறது. பாத்துட்டு வர்றேன்…’
அவர் வசாலுக்குப் போய் கதவைத் திறந்தார். வீட்டுக்காரி.
அவரைப் பார்த்துப் புன்னகை செய்துவிட்டு உள்ளே போனாள். பூட்டியிருந்த கதவைத் திறந்து உள்ளே தாளிட்டுக் கொண்டாள்.
அவள் வெளியே வரக்கூடும் என்று அவர் காத்துக் கொண்டிருந்ததுதான் மிச்சம். அவள் ஒரு மணி நேரம் வரை வெளியே வரவில்லை.
அவருக்குக் கண் அயர்ந்தது. தூங்கிப் போய்விட்டார். தூங்கி எழுந்ததும் அவர் உடம்பு தெப்பமாய் நனைந்திருந்தது. விசிறியைப் போடாமலேயே அவர் தூங்கியிருக்கிறார்.
“இவ்வளவு ஞாபக மறதியா?” என்றாள் அவர் மனைவி.
“ஒரே அசதி…இரு. வீட்டக்கார அம்மா போய்ட்டாளான்னு பாத்திட்டு வர்றேன்.”
“அவ போயிருப்பா..”
“எப்படிச் சொல்றே..?’
”மணியைப் பாருங்கோ..”
‘மை காட் மூணு மணி நேரமா தூங்கியிருக்கேன்! என்னை எழுப்பக் கூடாது..?”
அவர் ஹாலுக்கு வந்தார். வீட்டுக்கார அம்மாவின் அறையில் பூட்டு தொங்கியது.
மூன்று நாள் கழித்து அவர் வீட்டின் பின்புறமாக உள்ளே நுழைந்த போது, முற்றத்தில் நின்று கொண்டிருந்த வீட்டுக்காரி… “பாய் சா(ஹ)ப்.. ஏக் மினிட்…” என்றாள்.
அவர் நின்றார்.
“உங்களை என் வீட்டுக்காரருக்கு மிகவும் பிடித்துவிட்டது. நீங்கள் கொடுத்த பத்து மாத அட்வான்ஸை திருப்பித் தர சொல்லிவிட்டார்.”
அவருக்கு தலை சுற்றியது. என்ன சொல்லுகிறாள் இவள். மூன்று நாட்களுக்குள் அவள் கணவனுக்கு அவரைப் பிடித்துவிட்டதா? அவள் கணவனை அவர் இதுவரை பார்க்கவேயில்லையே..! “தாங்க் யூ.. ஆனால்.. நான் கொடுக்கும் வாடகையே மிகவும் குறைவு.. இதில் பத்து மாத அட்வான்ஸ் எனக்கு ஒரு பெரிய விஷயமில்லை.”
“என் கணவர் அதைத் திருப்பித் தர வேண்டுமென்று சொல்லிவிட்டால் அதை நான் மீற மாட்டேன்…”
“உங்கள் கணவரை நான் இன்னும் பார்க்கவேயில்லையே..” என்றார் அவர்.
‘எனக்கு இப்பொழுது வேலை இருக்கிறது.. அப்புறம் அறிமுகப் படுத்துகிறேன். பணத்தை வாங்கிக் கொண்டு போங்கள். இதோ எடுத்துக் கொண்டு வருகிறேன்.’
அவர் பணத்தை வாங்கி ஷெல்பில் வைத்ததும் அவர் மனைவி சிரித்தாள்.
“என்ன சிரிக்கிறாய்..?”
“நீங்க திரும்பி வாங்கிக்க மாட்டேன்னு பிடிவாதமாக சொல்லியிருக்கணும். உங்களுக்கு தைர்யம் போறாது.”
‘ஒத்தர் மனசைப் புண்படுத்தறதுக்கு என்ன தைரியம் வேண்டிக் கிடக்கு?’
“கொள்கை புண்ணாக்குன்னு என்கிட்டே சண்டை போட்டிருக் கேளே, அப்பொ என் மனசு எவ்வளவு புண்பட்டிருக்கும்னு உங்களுக்குத் தோணலியே, இப்பொ யாரோ ஒத்தி மனசு புண்படக்கூடாதுங்கிறேள்.. நல்ல மனுஷன் நீங்க..”
அவள் இதைச் சொல்லிவிட்டு வாய்விட்டு, உரக்கச் சிரித்தாள். “ஏய்… என்ன இப்படி சிரிக்கிறே, எனக்கு பயமா இருக்கு… என்றார் அவர்.
ஒரு வாரம் கழித்து, அவள் மாடிக்கு வந்தாள்.
அவர் ஹாலில் நின்று கொண்டிருந்தார்.
அவள் அவரைப் பார்த்துப் புன்னகை செய்து கொண்டே தன் அறைக் கதவைத் திறந்தாள்.
”உங்கள் கணவரை நான் எப்போது பார்க்கலாம்…?”
“இந்த அறையில்தான் இருக்கிறார். வாருங்கள்..”
“அந்த அறையிலா..?”
“ஆமாம்…”
அவர் அவளைப் பின் தொடர்ந்தார். அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.. அறை மத்தியில் ஒரு பெரிய கட்டில் படுக்கை கலைந்திருந்தது.
கட்டிலருகே செருப்பு. ஒரு ‘ட்ரெஸ்ஸிங் கவுன்’ படுக்கையில் கிடந்தது.
அறை முழுவதும் புத்தகங்கள் தாறுமாறாக இறைந்துகிடந்தன. “இவர்தான் நம் வீட்டுக்கு வந்திருக்கும் குடித்தனக்காரர்: என்றாள் அவள்.
அவர் சுற்று முற்றும் பார்த்தார்.
“உங்களை உட்காரச் சொல்கிறார்”. என்றாள் அவள். அவர் உட்கார்ந்தார்.
“எந்த முடிவு எடுத்தாலும் என் கணவரைக் கேட்காமல் எடுக்க மாட்டேன். இவர் பெரிய விளையாட்டு வீரர். ஹாலில் பரிசுகளைப் பார்த்திருப்பீர்களே… ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். 1971 பங்களாதேஷ் சண்டையில் இவர் ஆற்றிய சாகஸம் பற்றி எத்தனை கட்டுரைகள் வந்திருக்கின்றன தெரியுமா? அவள் இதைச் சொல்லிவிட்டு சிறிது நேரம் மௌனமாய் உட்கார்ந்திருந்தாள். அவள் கண்கள் ஈரமாய் விட்டது போல் அவருக்குப்பட்டது.
“உங்களை இவருக்கு மிகவும் பிடித்து விட்டது. காரணம் தெரியவில்லை. இதற்கெல்லாம் காரணமும் தேவையில்லை. ஒருவர் இன்னொருவரை விரும்புவதற்கு என்ன காரணம் வேண்டும்?”
சிறிது நேரம் மௌனம்.
“குப்தா உங்களை அழைத்துக் கொண்டு வந்த போதே எனக்குத் தெரியும். உங்களை இவருக்கு மிகவும் பிடிக்குமென்று. நான் நினைத்தபடியே அவர் என்னிடம் சொன்னார். ‘நல்ல ஆளாகத் தான் இருப்பார் போலிருக்கிறது. ‘ நீண்ட நேரம் அன்று அவர் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார்… என்ன இல்லையா, நரேந்தர்? பாருங்கள் அவர் புன்னகை செய்வதை..
அவள் எழுந்திருந்து அங்கு இறைந்து கிடந்த புத்தகங்களைச் சுட்டிக்காட்டி சொன்னாள்… “நரேந்திரன் இப்படித்தான் புஸ்தகத்தை படித்துவிட்டு அப்படியே போட்டுவிடுவார். நான் எதையும் எடுத்து வைப்பதில்லை. வைத்தால் அவருக்கு வருகிற கோபத்தைப் பார்க்க வேண்டுமே, பார்த்தால்தான் நம்புவீர்கள், பாருங்கள், இப்பொழுது ஒன்றும் தெரியாத அப்பாவி போல் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அவள் ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டினாள். முகத்தில் புன்னகை… “மை காட்… ஒரு புத்தகம் கூட என்னால் படிக்க முடியாது. எல்லாம் ராணுவப் புத்தகங்கள் ‘ரோமல் தி டெசர்ட் ஃபாக்ஸ்’…ரோமல் இவருடைய பெரிய ஹீரோ.. ஆனால் இவருக்கு ஹிட்லரைக் கண்டால் பிடிக்காது. ரோமல் மீது மரியாதை, அவன் பெரிய ராணுவ வீரன் என்பதால்தான் … என்ன நான் சொல்வது சரிதானே, என்ன நரேந்தர் பேசாமலிருக்கிறீர்கள்?
அவர் எழுந்திருந்தார்.
“என்ன எழுந்து விட்டீர்கள். என் கணவரை சந்தித்ததில் சந்தோஷந்தானே?”
“சந்தோஷந்தான்.. யார் இல்லை என்றார்கள்..?”
“நான் அவருக்கு ஒரு தொந்தரவும் கொடுக்க விரும்பவில்லை. அதனால் தான் எல்லா காரியங்களையும் என் தலைமேல் போட்டுக் கொண்டு செய்கிறேன். அவர் நிம்மதியாகப் புத்தகங்கள் படித்துக் கொண்டிருக்கட்டுமே, என்ன சொல்லுகிறீர்கள்..?”
“சரிதான்.”
“உங்கள் மனைவிக்கு இந்த வீடு பிடித்திருக்கிறதா..?’
“எப்படிப் பிடிக்காமலிருக்க முடியும்? அவளுக்கு உங்களை மிகவும் பிடித்திருக்கிறது…”
“என்னையா?”
“ஆமாம்”
“நரேந்தர்…பார்த்தீர்களா இவர் மனைவிக்கு என்னை மிகவும் பிடித்திருக்கிறதாம்… சரி இன்னொரு நாள் நான் இவர் மனைவியையும் இங்கு அழைத்து வருகிறேன். ஓ.கே?”
அவர் அறையை விட்டு வெளியே வந்தார். ஹாலிலிருந்த பரிசுப் பொருள்களை சிறிது நேரம் பார்த்துக் கொண்டு நின்றார்.
“ஆமாம் நீங்கள் சொன்னது சரிதான். அவளை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..” என்றாள் அவள் மனைவி மிக சன்னமாக அவர் காதருகே..
அப்பொழுது வீட்டுக்காரி அறையில் யாரோ சிரிப்பது அவருக்குக் கேட்டது.
அவர் திரும்பிப் பார்த்தார்.
“நரேந்தர் சிரிச்சிண்டிருக்கார்” என்றாள் அவர் மனைவி. அவர் முகத்தில் அப்பொழுது நிச்சலமான ஆழ்ந்த அமைதி சூழ்ந்தது.
– இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள், முதற் பதிப்பு: 2010, கிழக்கு பதிப்பகம், சென்னை.
| இந்திரா பார்த்தசாரதி (பிறப்பு: சூலை 10, 1930) தமிழகத்தின் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இவர் 40 ஆண்டு காலம் டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியாவர். இது தவிர போலந்து நாட்டில் வார்சா நகரில் அமைந்துள்ள வார்சா பல்கலைக்கழகத்தில் ‘இந்தியத் தத்துவமும் பண்பாடும்’ கற்பிக்கும் ஆசிரியராகவும் இருந்தார். 17 புதினங்கள்,…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
அப்பாவுக்கு ஒரு கடிதம்
என்.ஸ்ரீதரன்
August 16, 2026
காலம் கடந்து விட்டது
இரா.துரைமாணிக்கம்
August 16, 2026
எனக்கெனவே… நீ… கிடைத்தாய்!
ஆர்.மணிமாலா
August 16, 2026