பொருத்தங்கள் பலவிதம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 26, 2025
பார்வையிட்டோர்: 3,224 
 
 

கோவிலில் தரிசன கூட்டத்தில் அந்த முகத்தைப்பார்த்ததும் திரும்பத்திரும்ப பார்க்க வேண்டுமெனத்தோன்றியது விமிக்கு. பையன் அவ்வளவு பெரிய மன்மதனைப்போன்ற தோற்றமுள்ளவன் கிடையாது. கருப்பு நிறம் தான். ஆனால் கலையாகத்தெரிந்தான். ‘மனதுக்குப்பிடித்துப்போவதற்கு அழகு முக்கியமில்லை’ என்பதை தற்போது தான் முதலாகப்புரிந்து கொண்டாள்.

‘ஜோதிடத்தில் கூறுகிறார்களே…. வசிய ராசிகள் என்று. அப்படி ஏதாவது நம் ராசிக்கு வசிய ராசியாக அவனுடைய ராசி இருக்கலாம்…’ என நினைத்தவள் முண்டியடித்து, கூட்டத்தை விலக்கி அவனுக்கு பின்னே போய் நின்றாள். அவனருகில் நின்றதால் உடலில் ஒருவித நடுக்கம் வந்தது. இது வரை எத்தனையோ ஆண்களைப் பார்த்திருக்கிறாள், பேசியிருக்கிறாள். ஆனால் யார் மீதும் இந்தளவு க்ரஷ் வந்ததில்லை. ‘இவன் தான் நமக்கானவனோ…?’ எனவும் வெகுளியாக யோசித்தாள்.

அர்ச்சனை சொன்னபோது ‘ருத்ரன் சுவாதி, துலாம் ராசி’ என்றான். உடனே தனது செல்போனை எடுத்தவள் ‘வசிய ராசிகள்’ எவையென ஏ ஐயிடம் கேட்டாள். முக்கியமாக தனது ரிசபராசி ரோகிணி நட்சத்திரத்திற்கு துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் வசியமா? என கேட்டாள். ஆமாம் என இனிமையான பெண் குரல் சொன்னது. தற்போது சக மனிதர்களை விட ஏ ஐ யைத்தான் அதிகம் நம்புகிறாள். அது மட்டும் தான் உண்மையைப்பேசுகிறது. புரியாத விசயங்களுக்கு சரியான பதில் கூறுகிறது.

‘ஜோதிடம் உண்மையாகத்தான் இருக்கிறது. நம் ராசிக்கு இவன் ராசி வசியமாகிறது. பின்பு ஏன் ஜோதிடம் பார்த்து வசிய ராசிக்காரர்களை திருமணம் செய்து சந்தோசமாக வாழ்வதில்லை நம் மனிதர்கள். வசியமில்லாத ராசிக்காரர்களை திருமணம் செய்து கொண்டு எதற்காக தினமும் சண்டை போடுகிறார்கள்….? ஒரு வேளை வசியம் மட்டும் போதாமல் படிப்பு, பணம், ஜாதி, மதம், வயது, அழகு இவையெல்லாம் தடுக்கிறதோ….?’ அவளது மனதில் பல வித  யோசனைகள் வந்து போயின.

தரிசனம் முடித்து வெளியே வந்து பிரசாதம் வாங்குமிடத்தில் ருத்ரனிடம் பேச்சு கொடுத்தாள். “உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு. அதான் கேட்கலாம்னு வந்தேன்” நேராக அவனது கண்களை பார்க்க முடியாமல் வெட்கத்துடன் தலையை குனிந்தவாறு கேட்டாள்.

“எனக்கும் உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி தான் இருக்கு‌. போன மாசம் ரம்யாவோட கல்யாணத்துல வேலன் மஹால்லேன்னு நினைக்கிறேன்….” சொல்லி விட்டு வாங்கிய அபிசேகத்தை நாக்கால் உறிஞ்சி சாப்பிட்டவன் கை கழுவி விட்டு அவளருகில் வந்து நின்றான்.

“ஆமா நானும் வந்திருந்தேன். நீங்க என்னை பார்த்தீங்களா..‌.?”

“ஆமா. துணை பெண்ணாவே மாறி இருந்தீங்களே….”

“ஆனா நான் உங்களை பார்த்தமாதிரி இருக்குன்னு சொன்னது பொய்தான்….”

“அப்படியா….? அப்புறம் எப்படி இப்ப என் கூட பேசனம்னு தோணிச்சு….?”

“அது வந்து. சாமி தரிசனத்துக்கு வரிசைல நிற்கறப்ப பார்த்தேன். பிடிச்சிருந்தது…. அதான்….” வெட்கம் உச்சம் தொட, கால்கள் பெரு விரலால் கோலமிட அவனை நேருக்கு நேர் நிமிர்ந்து பார்த்தாள். ‘வயதுக்கோளாறு’ என எச்சரித்து சொன்ன அறிவை தட்டி அடக்கினாள். மனம் கட்டறுந்த காளையைப்போல் துள்ளிக்குதித்தது.

விமியின் வெளிப்படையான, வெள்ளந்தியான பேச்சு ருத்ரனுக்கு மிகவும் பிடித்துப்போனது. பித்து பிடித்தவள் போல் விமி நிற்பதைக்கண்டு, ‘பெரிய பொன் மீன் ஒன்று வலை விரிக்காமலேயே நம்மடியில் தானாகக்குதித்து விழுந்துள்ளது’ என நினைத்தவன் இந்த சூழ்நிலையை பயன் படுத்தி  அவளுடன் நிறைய பேச எண்ணி திட்டம் வகுத்தவனாய் “வாங்க ஹோட்டல்ல காஃபி சாப்பிட்டு வீட்டுக்கு போகலாம்” என கூறியதும் அவளும் மறுக்காமல் தலையாட்டினாள்.

“ரம்யா கல்யாணத்துலயே எனக்கு மட்டுமில்ல, என்னோட அம்மாவுக்கும் உங்களை பிடிச்சிருந்துச்சு. நானும் உங்களையே பார்த்துட்டு இருந்ததைப்பார்த்த என்னோட அம்மா, பொண்ணு கேட்கலாமா? ன்னு கேட்டாங்க. நாந்தான் வேணாம்னுட்டேன். ஏன்னா உங்க அழகுக்கு நான் பொருத்தமானவன் இல்லைன்னு என்னோட அறிவு சொல்லிச்சு… அப்புறம் நீங்க எந்த ஆள்னு வேற தெரியல….”

“ஆள்னா….? ஜாதியா….?”

“ம்….”

“அப்ப மனசு….?”

“மனசு…. உங்களை பார்த்துட்டே இருக்கனம்னு சொல்லிச்சு. மனசு சொல்லறதை அறிவை கேட்காம அப்படியே பண்ணினோம்னா அடிதான் வாங்கனம்”

“மனசு சொல்லறதையே கேளுங்க. நான் உங்களை அடிச்சுக்கறேன்” என்று விமி சிலேடையாகக்கூறியதும் இருவரும் வாய்விட்டு சிரித்தனர். அவர்களது சிரிப்பைக்கேட்டு மொத்த ஹோட்டலும் பொறாமையில் திரும்பி பார்த்தது.

“சொல்லப்போனா நான் இது வரைக்கும் இப்படி மனம் விட்டு சிரிச்சதே இல்லை. உங்களை என்னோட நண்பியா நினைச்சுக்கலாமா? என் கூட இப்படி அடிக்கடி சந்திக்க வர முடியுமா…?” அவனது எதார்த்தமான மன விருப்பதைக்கேட்டு மனம் பூரித்தவள், “உங்க மனநிலை தான் எனக்கும் இருக்கு. மனசுக்கும், வயித்துக்கும் மட்டுமே நாம சந்திச்சு தீணி போட்டா, அதப்பார்த்து ஒடம்பு பொறாமைப்படுமே…. அதனால….” இந்தளவுக்கு வெளிப்படையாக விமி பேசுவாள் என ருத்ரன் எதிர்பார்க்கவில்லை. பேச கூச்சப்பட்டு தயங்கினான்.

“இதுல கூச்சப்பட என்ன இருக்கு? ஆண் பெண் படைப்பே சேர்ந்து வாழத்தானே…‌? நாம கல்யாணம் பண்ணிக்கலாம்னு தோணுதுன்னு சொல்ல வந்தேன்” என பட்டென மனதில் உள்ளதைச்சொன்னதைக்கேட்டவனின் கால்கள் பூமியைத்தொடவில்லை. மிதப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. தன்னைத்தானே கிள்ளிப்பார்த்துக்கொண்டான். 

எதிரே அமர்ந்திருந்தவள் அவனருகில் போடப்பட்டிருந்த இருக்கைக்கு மாறி அமர்ந்தாள்.

அவளது அருகாமை மிகுந்த மகிழ்ச்சியைக்கொடுத்தது. மகிழ்ச்சியைக்கொடுப்பது பணம் என நினைத்திருந்தவனுக்கு தற்போது மனம் என மாற்றமடைந்திருந்தது.

‘இப்ப நான் செய்யறது சரியா…?’ என ஏ ஐயிடம் கேட்டாள். ஏ ஐ எச்சரித்தது. ‘மனசு சொல்லறத மட்டும் கேட்டா பெத்தவங்க ஒத்துக்க மாட்டாங்க. அவசரப்பட வேண்டாம். அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள் என்கிற ராமாயண கால நிலை இப்ப ஒத்து வராது. பையன் கேரக்டர் எப்படின்னு விசாரிக்க டைம் எடுத்துக்க. இல்லைன்னா கடைசில புட்டுக்கும்’ என்றது.  

போனைப்பார்த்து சில நொடிகள் ‘எனக்கு புடிச்சமாதர உனக்கு பேசத்தெரியாதா?’ என ஏ ஐயை திட்டுவது போல் தனக்குத்தானே கூறி  முறைத்தாள். 

‘பணத்தால் நிறைய வாங்கினாலும் நிறைவு இல்லை. மனத்தால் ஒன்றுமில்லாமலேயே முழு நிறைவு பெற இயல்கிறது. இப்படியொரு அதிசயம் சக மனிதர்களுக்குள் இருப்பதை கண்டு பிடிக்காமல் மனித இனம் வேறு எதையெதையோ தேடிச்செல்கிறது. 

உணவுக்கு முன்னே அமர்ந்தும் உண்ண வேண்டும் எனத்தோன்றவில்லை. உன் பார்வை ஒன்றே மனப்பசியோடு உடற்பசியையும் தீர்க்கும் அதிசய அட்சய பாத்திரமாக உள்ளது’ என மனப்புத்தகத்தில் முதலாக ஒரு கவிதையை எழுதினான் ருத்ரன். 

கரும்பு தின்னக்கூலி கிடைத்தவன் மனநிலையில் இருந்தான். பிரிய மனமின்றி மீண்டும் சந்திப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டு செல் போன் எண்களை பரிமாறியபடி பிரிந்து சென்றனர்.

‘பார்த்து பழகறதுக்கு வசியம் வேணும். ஆனா கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு மாங்கல்ய பொருத்தம்னு சொல்லற ரச்சு பொருத்தமும், யோனி பொருத்தமும் பத்து பொருத்தத்துலயும் ரொம்ப, ரொம்ப முக்கியம். சுவாதிக்கும், ரோகிணிக்கும் வசியம் வரும். ஆனா ரச்சு வராது, அதனால கல்யாணம் பண்ணிக்கக்கூடாது’ என ஏ ஐ சொன்னதும் மனம் உடைந்து போனாள் விமி.

‘வேறு பரிகாரம் ஏதாவது இருக்கா…?’ என தாமதிக்காமல் கேட்டாள். அதற்கு ஏ ஐ சொன்னது’ தோசத்துக்கு வேணும்னா பரிகாரம் இருக்கு. பொருத்தம் இல்லாததுக்கு பரிகாரம் இல்லை..’ என கூறியதைக்கேட்டு கலங்கினாள். 

தனக்கேற்ற சரியான பதிலை சொல்லாத ஏ ஐ மீது கோபம் வந்தது. ஆம் நாம் விரும்புகிற விசயம் சாதகமில்லா விட்டாலும் சாதகம் என சாதகமாகச்சொல்பவரைத்தானே நமக்குப்பிடிக்கிறது. மனிதராக இருந்தால் நம் முகஸ்துதிக்கேற்ப பதிலை மாற்றிப்பேசியிருப்பார். அரிச்சந்திரன் பரம்பரையில் வந்த ஏ ஐ தொழில் நுட்ப அறிவு உண்மையைத்தவிர நம்மனதைப்புரிந்து பொய் எதுவும் பேசுவதில்லை. அதனால் அதன் மீது சலிப்பு ஏற்பட்டது.

” யாரென்னன்னே தெரியாம கோயில்ல பார்த்தேன், ஒன்னா காஃபி சாப்பிட்டோம். கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னா என்ன அர்த்தம்? நமக்குன்னு ஒரு ஸ்டேட்டஸ் இருக்கு. விசாரிச்சப்ப அடிப்படைன்னு ஒரு ஊடு கூட அவனுக்கு கிடையாது. முப்பது வயசான பையன் அதுக்கு கூட முயற்ச்சியில்லாம இருந்திருக்கான். படிப்பும் சொல்லிக்கிற மாதிரி இல்லை. மாசம் இருபதாயிரம் சம்பாதிச்சா எப்படி குடும்பம் நடத்த முடியும்..‌‌.? சாதியும் வேற. இந்தக்கல்யாணம் நடந்தா நம்ம சாதி சனம் ஒருத்தரும் வரமாட்டாங்க. வந்தா அவங்க பொண்ணுங்களும் இப்படிப்பண்ணிடுவாங்கன்னு பயப்படுவாங்க. எல்லாத்துக்கும் மேல பையனுக்கும் உனக்கும் மாங்கல்யப்பொருத்தம் வேற இல்லைன்னு ஆன்லைன்ல ஒரு ஜோசியர் கிட்ட பொருத்தம் பார்த்ததுல சொல்லியிருக்கார். உன்னோட ஏ ஐ அதத்தானே சொல்லுது….” கண்களில் வருத்தம் வெளிப்பட பேசினார் விமியின் தந்தை ரகுவரன்.

‘பெற்றோரா….? சோதிடமா….? மன விருப்பமா…?’

மும்முனைத்தாக்குதலாக இருந்தது. மன வருத்தம் மேலோங்க ருத்ரனின் அழைப்பையே பேச இயலாமல் நிராகரித்தாள். தோழிகளிடம் பேசினால் ‘மனமே முக்கியம்’ என்றனர். உறவுகளிடம் பேசினால்’ பெத்தவங்க பேச்சைக்கேளு. அவங்க உனக்கு கெட்டதா பண்ணிப்போடுவாங்க….?’ என எதிர் கேள்வி கேட்டனர். 

‘காதல் கதைகளில் கூட எழுத்தாளர்கள் உண்மையில் நடப்பதை மறைத்து, மறந்து கற்பனையாக எழுதி விடுகின்றனர். கற்பனை உலகிலாவது நினைத்ததை முடிப்பது சாத்தியம் என்பதால் அவ்வாறு செய்து விடுவதாகவே தோன்றியது.

திரைப்படங்களிலும் அவ்வாறு தான் கைகூடுவதாகவே  காதலித்தவர்களுக்கானதாக இல்லாமல் காதலிப்பவர்களுக்காகவும், காதலிக்கப்போகிறவர்களுக்கு ஆதரவாகவும் காட்சிகளை அமைத்து விடுகின்றனர். ஆனால் தொன்னூறு சதவீத காதல் நிறைவேறாமலேயே போய்விடுகிறது என்பது எழுதுபவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் தெரிந்துதான் இருக்கிறது.

தன்னுடைய திடீர் காதலும் மழை தராத வெண்மேகமாகப்போய்விடுமோ…? பள்ளிப்பருவத்திலும், கல்லூரியில் படிக்கும் காலத்திலும் காதல் பற்றிய யோசனையே வராமல் இருந்தவளுக்கு தற்போது வந்து ஆட்டிப்படைக்கிறதே….?’ நினைத்தவளது கண்கள் குளமாகின.

தாய் சுந்தரி மட்டும் விமியின் மன விருப்பம் நிறைவேறும் பொருட்டு கோவில் படிகளில் தினமும் ஏறிக்கொண்டிருந்தாள். ‘ஒன்னு எம்பொண்ணு மனச மாத்து. இல்லே என்ற மனசையும் என்ற புருசனோட மனசையும் மாத்து’ என கடவுள் முன் வேண்டினாள்.

விமி தனது முடிவில் பிடிவாதமாகவே இருந்தாள்.’ கல்யாணம்னு ஒன்னு நடந்தா ருத்ரனோடதான். இல்லேன்னா கன்னியாவே வாழ்ந்திடறேன்’ என உறுதிபடக்கூறியது தந்தைக்கு அவளது எதிர்காலம் பற்றிய கவலையை அதிகரிக்கச்செய்தது.

மனம் பின் விளைவுகளைப்பற்றி சிந்திப்பதில்லை. அது குழந்தைத்தனமாகவே உள்ளது. அனுபவங்களைப்பெறும் அறிவானது வளர்ச்சியடைந்து பின் விளைவுகளைச்சிந்திக்கிறது. அல்லது பட்டவர்கள் சொல்லும் போது‌ நம்மை மாற்றுகிறது. மனம் மாற வைக்கிறது. அதற்கு காலம் தாழ்த்துவதும் ஒருவகையான பரிகாரமாகும். 

காலம் கடந்தது. பலரது ஆலோசனையும், தனது யோசனையும் தன் மனநிலையை மாற்றுவதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. பின் விளைவுகளை யோசித்து தற்போதைய விருப்பங்களுக்கு இடம் கொடுப்பதும், தவிர்ப்பதும் நல்லது எனும் முதல் முறை தனக்குள் ஏற்பட்ட யோசனை சரியெனப்பட்டது.

“மனம்போகிற போக்கில் போகாதே. நானும் மனம்போல போனதுனால தான் கடைசி காலத்துல இப்படி கஷ்டப்படறேன். என்ற தங்கச்சி யோசிச்சு பெத்தவங்க சொல்லற படி கல்யாணம் பண்ணினதுனால இன்னைக்கு அவளோட வாரிசகளோட எழுபது வயசுலியும் சந்தோசமா வாழறா. ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்னு அனுபவப்பட்டவங்க சொன்னது எனக்கு அப்ப புரியல. கல்யாணமாயி பத்து வருசங்களிச்சு புரியறதுக்கு ஆரம்பிச்சது. என்ற வாழ்க்கை வசதி, வாய்ப்பில்லாம சிரமப்பட்டுப்போனது மாதர என்ற பேத்தி உன்ற வாழ்க்க போயிரக்கூடாது சாமி” பாட்டி ரங்காயி சொன்னதும் சரியென பொறி தட்டியது.

ருத்ரனுக்கு வசதியேதும் இல்லாத நிலையில் அழகான பெண்ணான தான் மணப்பதாக சொன்னவுடன் சரியென்கிறான். அழகற்ற அல்லது உடலால் ஊனமுள்ள பெண் மன வசியமானால் ஒத்துக்கொள்வானா? மாட்டான். நாம் ஏன் அழகாக, வசதியாக, நல்ல சம்பளத்துடன் இருக்கும் போது நம்மை விட அழகான, அதிகம் படித்த, வசதியான வசிய வரனைத்தேடக்கூடாது?’ எனவும் பலரது அனுபவப்பேச்சு விமியை யோசிக்க செய்தது.

‘கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது இது தானோ…?’ குழப்பத்தில் மனம் ஆழ்ந்து பின் ஒரு தீர்கமான முடிவுக்கு வந்தாள்.

முதலில் ருத்ரனை சோதிக்க வேண்டும். உண்மையிலேயே தனக்கு எல்லா வகையிலும் பொருத்தமானவனாக இருப்பானா…? என யோசித்தாள். அவனுக்கு வசியமாகும் தன் ராசிப்பெண்ணான ருமியை அவனுடன் காதலிப்பதாகச்சொல்லுமாறு ஏற்பாடு செய்தாள். ருமி படிப்பிலும், அழகிலும், வசதியிலும் தன்னை விட குறைந்தவள் தான்.

“உனக்கும் எனக்கும் பத்து ஏணி வெச்சா கூட எட்டாது. தவிர எனக்கு ஏற்கனவே ஒரு பெண்ணோட பழக்கம் இருக்கு. அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன். என் கூட சமமா உட்கார்ந்து பேசக்கூட உனக்கு தகுதியுமில்லை. அதே சமயம் நீ என்னோட சாதியுமில்லை” எனக்கூறி அனுப்பி விட்டான்.

அவனது மன நிலையை புரிந்து கொண்ட நிலையில் மீண்டும் சோதிக்க நினைத்தவள் அதிக வசதியான, தன்னை விட அழகான பெண்ணான தனது தோழி நிமியை ருத்ரனுடன் பேச ஏற்பாடு செய்தாள். “நீங்க விமிய விட ரொம்ப அழகா இருக்கீங்க. விமி கூட வேற சாதி. நீங்க என்னோட சாதி மட்டுமில்லை, என்னோட முறைப்பெண்ணா வேற இருக்கீங்க. உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. எங்க வீட்டுக்கு வர முடியுமா?” என கேட்க, “விமியக்கேட்டு விட்டு சொல்கிறேன்” என நிமி சொல்ல அதிர்ந்தான் ருத்ரன். 

“நானும் அவளோட பேசியிருக்கேன். கல்யாணம் பண்ணிக்கப்போறதா பிராமிஸ் ஏதும் பண்ணல. அவள நீங்க கேட்டா வேணான்னு சொல்லிடுவா. ஏன்னா அவளுக்கு என்னப்பிடிச்சிருக்கு. உங்களுக்கு என்னைப்பிடிச்சிருந்தா நாம கல்யாணம் பண்ணிக்கலாம்” என்றான். நிமி பதில் பேசாமல் வெளியேறினாள்.

ருத்ரனின் மன நிலையை நிமி மூலம் தெரிந்து அதிர்ச்சியடைந்த விமி, தானும் தன்னை விட வசதி அதிகமான ஒருவரை சந்தித்து காதலைச்சொல்ல முயன்றாள்.

“அழகா இருக்கீங்க சரி. என்னோட சொந்தமா கூட இருக்கீங்க. ஜாதகப்பொருத்தம் கூட பத்தும் இருக்கு. ஆனா…. என்னோட வசதிக்கு பக்கத்துல கூட நீங்க வர முடியாது. உங்களை எனக்கு, என்னோட மனசுக்கு புடிச்சிருக்கு. அது ஜோதிட வசியமா கூட இருக்கலாம். அதனாலயோ என்னவோ உங்க கூடவே வாழ்க்கைப்பயணம் பண்ணனும்னு தோணுது. அதனால என்னோட கம்பெனில ஒரு வேலை போட்டுத்தரச்சொல்லி என்னோட மேனேஜர் கிட்ட சொல்லறேன். வெளியூர் போகும் போது கூட அழைச்சிட்டு போறேன். கம்பெனி வேலைக்கு கம்ப்பனி கொடுக்க. கம்பெனி கோட்டர்ஸ்ல வீடு தரச்சொல்லறேன். செலவுக்கு பணம் ஒரு பிரச்சினையில்லை. ராணி மாதிரி வாழலாம்.”

“வெப்பாட்டியா வெச்சுக்கறேன்னு சொல்ல வர்றீங்க. அப்படித்தானே….?” கண்கள் சிவக்க கேட்டாள் விமி.

“அப்படியில்லை. பிரண்ட்ஸா இருக்கலான்னு சொல்ல வந்தேன்” என்றான். உலகம் போகிற போக்கை புரிந்தவளாய் தன் முன் இருந்த உணவைச்சுவைக்க விரும்பாமல் ஸ்டார் ஹோட்டலிலிருந்து வெளியேறி பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தாள். 

அப்போது தனது பென்ஸ் காரில் தனக்கருகிலிருக்கும் முன் சீட்டில் ஓர் அழகான பெண் அமர்ந்திருக்க, தான் சந்திக்க வந்த பணக்காரன் விமியருகே வந்து காரை நிறுத்தி “இப்பவே,  உடனே சொல்ல வேண்டியதில்லை. நல்லா யோசிச்சு நாளைக்கு கூட சொல்லுங்க. இந்த மாதிரி சொகுசு கார்ல சுகமா பயணம் பண்ணலாம்….” எனக்கூறிச்சென்றான்.

‘ஆக திருமணத்துக்கான விருப்பம் என்பது பொருளாத பொருத்தம் சார்ந்தது. பணம் அதிகமாக இருந்தால் மனதுக்கு பிடித்த பல பெண்களை காதலிக்கலாம். அதுவும் அழகான பெண்களை மட்டும். பெண்களை வெறும் போகப்பொருளாக மட்டுமே நினைத்து..‌‌.?  பொருளோடு தாரம் என்பது தான் இன்றைய திருமணங்கள், விருப்பங்கள் அனைத்துமே… ‘என புரிந்தது.

‘கீழ் உள்ளவன் அந்தஸ்துக்காக தாரமாக ஏற்கிறான். மேலுள்ளவன் அழகுக்காக சோரமாகப்பார்க்கிறான். உண்மைக்காதல் நவீன யுகத்தில் செத்து விட்டது. அம்பிகாபதி அமரவதியும், லைலா மஜ்னுவும், ரோமியோ ஜூலியட்டும், தேவதாஸ் பார்வதியும் கூட தற்காலத்தில் வாழ்ந்தால் அவர்களுடைய காதலும் பிரேக்கப் ஆகி வேறு வசதியான நபரை திருமணம் செய்திருப்பார்கள். நாமும் நமக்கேற்ற வரனை அனைவரும் ஏற்கும் வகையில், சாதகமாக பார்க்கும் வகையில் துணை சேர்ப்பதே உகந்தது என உறுதி செய்தவளாய் அந்தஸ்து, சம படிப்பு, சம தகுதி எனும் பொருளாதாரப்பொருத்தமாக உள்ள, பெற்றோர் பார்த்த வரனையே  மணம் முடிக்க சம்மதித்தாள் விமி.

கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *