கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 5, 2025
பார்வையிட்டோர்: 5,467 
 
 

அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21

அத்தியாயம் – 19

மேற்படி கள்ள நோட்டு வழக்கு விஷயமாக இன்னும் இரண்டொரு துப்புகள் துலங்கவேண்டியது பாக்கி இருந்தது. அதற்காகப் போலீஸ்காரர் கொப்பனாம்பட்டிக்குப் போனார். சிவராமலிங்கக் கவுண்டரிடம் அவருடைய மகள் எப்பேர்ப்பட்ட இக்கட்டில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறாள் என்பதைத் தெரிவித்தார். எப்படியாவது செம்பாவின் பெயர் இந்த வழக்கில் அடிபடாமல் காப்பாற்ற வேண்டுமென்று கவுண்டர் ரொம்பவும் கேட்டுக் கொண்டார்.

செம்பவளவல்லி திக்பிரமை பிடித்தவள் போல் இருந்தாள். அவளுடைய மனத்தில் கேணியும், கேணிக்கரைக் குடிசையும், சோளத் தட்டைக் குவியலும், இரத்தம் தோய்ந்த கத்தியும், சாகும் நாயின் ஓலமும், குழிதோண்டும் மனிதர்களும், பயங்கர ஆயுதம் ஏந்திய போலீஸ்காரரும், சிதறிக் கிடந்த நோட்டுக்களும், கையில் விலங்கு பூட்டிய செங்கோடனும், அவனைப் போலீஸார் கொண்டுபோன போது தன்னைப் பார்த்த பார்வையும், அவன் சொன்ன வார்த்தையும் ஒரே குழப்பமாக வட்டமிட்டுச் சுழன்று கொண்டிருந்தன. எல்லாவற்றிலும் அதிகமாக அவள் மனக்கண் முன்னால் ஒரு செப்புக்குடம்-உள்ளே காலியான செப்புக்குடம்-வாயைப் பெரிதாகத் திறந்துகொண்டு காட்சி அளித்தது. அந்த வெறுங்குடம் மனக்கண் முன் தோன்றியபோதெல்லாம் அவளுடைய அடி வயிற்றில் என்னவோ வேதனை செய்தது.

இத்தகைய நிலைமையிலேதான் போலீஸ்காரர் வந்தார். அவரைப் பார்த்ததும் செம்பா பரபரப்புடன், “வாருங்கள்! நீங்கள் வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன்!” என்றாள்.

“அது எப்படி? எதற்காக?” என்று கேட்டார் போலீஸ்காரர்.

“எதற்காக, எப்படி என்று உங்களுக்கே தெரியும்!” என்றாள் செம்பா.

“ஓகோ! அப்படியா?”

“உங்களிடம் ஒன்று கேட்கவேண்டும் என்றிருந்தேன் கேட்கட்டுமா?”

“பேஷாய்க் கேட்கலாம்.”

“அவர் எதற்காக ‘நான் தான் கொலை செய்தேன்’, ‘நான் தான் கொலை செய்தேன்’ என்று கத்தினார்? என்னைக் காப்பாற்றுவதற்காகத்தானே?”

“ஆமாம்.”

“நான் செய்திருப்பேன் என்று அவருக்கு எப்படித் தோன்றியது?”

“நீ குடிசையிலிருந்து வெளியேறியதைச் செங்கோடன் பார்த்துவிட்டான். அதைத் தவிர இன்னொரு காரணமும் உண்டு. அவன் லாந்தரைக் கொளுத்திக் கொண்டு குடிசைக்குள் புகுந்தபோது வாசற்படியில் உடைந்த வளையல் ஒன்று கிடந்தது. அது உன்னுடையதுதான் என்பது அவனுக்குத் தெரிந்துவிட்டது… பின்னே தெரியாமல் இருக்குமா?”

செம்பா தன்னுடைய கைகளைப் பார்த்துக் கொண்டாள்.

“உன்னுடைய ஒரு கையில் சிவப்பு வளை இருக்கிறது. இன்னொரு கையில் இல்லை. மற்றவர்கள் கண்ணில் இது பட்டிருந்தால் ஆபத்தாய்ப் போயிருக்கும்!” என்றார் போலீஸ்காரர்.

“அப்புறம்? அந்த வளையல் என்ன ஆயிற்று?” என்று செம்பா ஆவலோடு கேட்டாள்.

“செங்கோடன் அதை ஒருவரும் அறியாமல் சட்டென்று மடியில் எடுத்துக் கொண்டு கேணிக்கரைக்கு ஓடி வந்து மடியை உதறினான். வளையல் கேணியில் விழுந்தது.”

“எவ்வளவு சாமர்த்தியமாகச் செய்திருக்கிறார்! என் பேரில் என்ன கரிசனம்! என்ன அன்பு! அவருக்கு என்னால் இப்படி நேர்ந்துவிட்டதே!” என்று சொல்லிவிட்டுச் செம்பா கண்ணீர் பெருக்கினாள்.

“வேண்டாம், செம்பா! உன் செங்கோடனுக்கு ஆபத்து ஒன்றும் வராது. அவனை விடுதலை செய்து கொண்டு வந்து சேர்க்க நான் இருக்கிறேன். வருத்தப்படாதே!” என்றார் போலீஸ்காரர்.

செம்பா போலீஸ்காரரை ஏறிட்டுப் பார்த்து, “நான் அதற்காக வருத்தப்படவில்லை. அவரை நீங்கள் காப்பாற்றி விடுவீர்கள் என்று எனக்குத் தெரியும். அப்படி நீங்கள் செய்யாவிட்டால் நான் கோர்ட்டில் வந்து நடந்ததை நடந்தபடி சொல்கிறது என்று தீர்மானித்திருந்தேன்.”

போலீஸ்காரர் சிறிது திடுக்கிட்டு, “அதெல்லாம் வேண்டாம். நீ கோர்ட்டுக்கு வந்தால் வீண் சிக்கல் ஏற்படும். செங்கோடனைக் காப்பாற்றுவதற்கு நான் ஆயிற்று!” என்றார்.

“அதற்காக நான் வருத்தப்படவில்லையென்றுதான் சொன்னேனே!”

“பின்னே எதற்காக வருத்தம்? எதற்காகக் கண்ணீர்?”

“அப்படி எனக்காகத் தம் உயிரைக் கொடுக்கத் துணிந்தவருக்கு நான் பதில் என்ன சொல்லப் போகிறேன்! திரும்பி வந்ததும் பணக்குடம் எங்கே என்று கேட்பாரே?”

“ஏன், பணக்குடம் எங்கே? பத்திரமாய் வைத்திருக்கிறாய் அல்லவா?”

“குடம் பத்திரமாக ஐயனார் கோயில் குட்டையில் கிடக்கிறது. அதனால் என்ன பிரயோஜனம்? அந்தக் குடத்தை அவசரமாய்த் தூக்கிக்கொண்டு ஓடினேன் அல்லவா? கொஞ்ச தூரம் போன பிறகுதான் அது கனக்கவே இல்லை என்பது ஞாபகத்துக்கு வந்தது. உடனே நிலா வெளிச்சத்தில் குடத்துக்குள் பார்த்தேன். குடம் காலியாயிருந்தது! அதைப் பார்த்து என் மூளை குழம்பி விட்டது. நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தேன். ஊர்க்காரர்கள் ஓடி வரும் சத்தம் கேட்டுக் குடத்தைக் குட்டையில் போட்டுவிட்டு அவர்களோடு நானும் சேர்ந்து கொண்டேன். கவுண்டர் விடுதலையாகித் திரும்பி வந்து, ‘குடத்தில் இருந்த பணம் எங்கே?’ என்று கேட்டால் என்ன பதில் சொல்லுவேன்? நான் பணத்தை பத்திரமாய் வைத்திருப்பேன் என்ற நம்பிக்கையுடன் அவர் இருப்பாரே! அவருடைய கேஸுக்காகக் காலணா செலவழிக்க வேண்டாம் என்று சொல்லியனுப்பியிருக்கிறாரே! அரும்பாடுபட்டுச் சேர்த்த எண்ணூறு ரூபாயும் போய்விட்டது என்று தெரிந்தால் அவருக்கு எப்படி இருக்கும்? என்னிடம் அவருக்குள்ள அன்பெல்லாம் விஷமாய் மாறிவிடுமே!” என்று செம்பா புலம்பினாள்.

அத்தியாயம் – 20

கதை சொல்லிக்கொண்டே வந்த மோட்டார் டிரைவர் வண்டியை நிறுத்தியதும், மறுபடியும் ‘பொய்மான் கரடு’க்குச் சமீபம் வந்திருக்கிறோம் என்று தெரிந்து கொண்டேன். இடது பக்கத்தில் செங்குத்தாகக் கரிய குன்று நின்றது. மழைக்கால இருட்டுச் சூழ்ந்திருந்தபடியால் குகையும் மானும் கண்ணுக்குத் தெரியவில்லை. கார் செல்லும் சத்தமும் கதை சொன்ன குரலும் நின்றவுடனே மழைத் தூற்றலின் சளசளச் சத்தமும் பூமியில் மழை விழுந்ததும் எங்கிருந்தோ கிளம்பும் ஆயிரக்கணக்கான சிறிய ஜீவராசிகளின் கதம்பக் குரலும் சேர்ந்து கேட்டன.

“இப்போது இங்கே நின்று என்ன உபயோகம்? இருட்டில் ஒன்றும் தெரியவில்லையே?” என்றேன்.

இப்படிச் சொல்லி வாய் மூடுவதற்குள்ளே பளிச்சென்று ஒரு பெரிய மின்வெட்டுத் தோன்றிச் சுற்றிலும் சூழ்ந்திருந்த காரிருளை அகற்றிக் குன்றுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. அவ்விதம் மின்னிய நேரத்தில் பொய்மான் குகைக்குள்ளே நெளிந்து நெளிந்து ஒரு பளபளப்பான கயிறு சென்றதையும், குகைக்குள்ளிருந்து கிறீச் சென்று சத்தமிட்டுக்கொண்டு ஒரு சிறிய பிராணி வெளிப்பட்டு ஓடிவந்ததையும் பார்த்தோம். பாம்புக்குப் பயந்து அந்தக் குகைக்குள்ளிருந்த மான் வெளியே ஓடி வந்ததாகவே தோன்றியது. அடுத்த நிமிஷம் மறுபடியும் நாற்புறமும் அந்தகாரம் சூழ்ந்து கொண்டது. கரிய பாறை மட்டும் பயங்கரமாக நின்றது.

மின்னலில் கண்ட காட்சி என்னைச் சிறிது அரட்டிவிட்டது என்பதை ஒப்புக்கொள்கிறேன். “சரி போகலாமே இருட்டில் இங்கே என்னத்தைப் பார்க்கிறது?” என்றேன்.

வண்டி நகரத் தொடங்கியது. சாலையில் வலப்புறத்தில் இருந்த குடிசைகளில் இருட்டும் நிசப்தமும் குடி கொண்டிருப்பதைக் கவனித்தேன். “இந்தக் குடிசைகளையே பார்க்க முடியவில்லையே! அரை மைல் தூரத்திலுள்ள செங்கோடக் கவுண்டரின் குடிசை எங்கே தெரியப் போகிறது? மழை இல்லாமல் நிலவு நாளாக இருந்தால் குன்றின் மேல் ஏறிப் பார்த்திருக்கலாம்” என்று நான் சொல்லிக்கொண்டேயிருக்கையில், மோட்டார் திடீரென்று ஒரு திரும்புத் திரும்பி வளைந்து சாலையோரத்து மரத்தில் மோதிக் கொள்ளப் போய் மறுபடியும் வேகமாக வளைந்து திரும்பி நடுச்சாலைக்கு வந்தது.

அந்த மழையிலும் குளிரிலுங்கூட எனக்கு உடம்பு வியர்த்துவிட்டது. “என்ன? என்ன?” என்று பக்கத்திலுள்ள மோட்டார் சாரதியின் காது செவிடுபடும்படி கத்தினேன்.

“ஒன்றுமில்லை, ஸார்! பதறாதீங்க! ஒரு நாய் குறுக்கே ஓடியது. அதன்மேலே வண்டி ஏறாமலிருப்பதற்காக வளைத்துத் திருப்பினேன்” என்றார் மோட்டார் டிரைவர்.

இதைக் கேட்டதும் எனக்கு வந்த கோபத்துக்கு அளவேயில்லை.

“என்ன அப்பா, நீ! ஒரு நாயைக் காப்பாறுவதற்காக மனிதர்களைக் கொன்றுவிடுவதற்குப் பார்த்தாயே? அழகாயிருக்கிறது!” என்றேன்.

“அது எப்படி, ஸார்! நாயும் உயிருள்ள ஜீவன் தானே? மனிதனுடைய உயிரைக்காட்டிலும் நாயின் உயிர் எந்த விதத்தில் மட்டம்?” என்றார் டிரைவர்.

இதற்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை.

கார் போய்க்கொண்டே இருந்தது.

மழைத் தூற்றல் போட்டுக்கொண்டேயிருந்தது.

சேலம் ஜங்ஷன் நெருங்கிக் கொண்டேயிருந்தது.

கதையின் முடிவைத் தெரிந்துகொள்ள என் ஆவல் வளர்ந்து கொண்டேயிருந்தது.

“கொஞ்சம் நான் அஜாக்கிரதையாயிருந்திருந்தால் அந்த நாய் செத்துப் போயிருக்கும்! ஒரு மயிரிழையில் அது தப்பியது” என்றார் டிரைவர்.

“இன்னும் கொஞ்சம் மோட்டாரை வளைத்திருந்தால் நாமே பைஸலாகியிருப்போம்!” என்று சொன்னேன்.

“அதெல்லாம் இல்லை, ஸார்! மனித உயிர் ரொம்ப கெட்டி! அவ்வளவு இலகுவாகச் சாவு வந்து விடாது!”

“அப்படியே சாவு வந்தாலும் கதையின் முடிவைத் தெரிந்துகொண்ட பிறகு வந்தால் எனக்குக் கவலையில்லை!” என்றேன்.

“அதற்கென்ன, சொல்கிறேன். கதை கொஞ்சந்தான் பாக்கி இருக்கிறது!” என்றார் டிரைவர்.

பணத்தைக் காணோமே என்று கவலைப்பட்ட செம்பவளவல்லிக்குப் போலீஸ்காரர் சின்னமுத்துக் கவுண்டர் ஆறுதல் கூற முயன்றார்.

“செங்கோடன் இப்படிப்பட்ட இக்கட்டான நிலைமையில் இருக்கும்போது கேவலம் பணத்தைப் பற்றி நீ கவலைப்படுகிறாயே? பணம் கிடக்கட்டும், தள்ளு!” என்று சொன்னார்.

இது செம்பவளவல்லியின் காதில் கொஞ்சமும் ஏறவில்லை.

“நீங்கள் தான் போலீஸ்காரர் ஆச்சே! பணத்தைக் கண்டுபிடித்துக் கொடுங்கள். இல்லாவிட்டால், கோர்ட்டில் வந்து நடந்தது நடந்தபடியே சொல்லிவிடுவேன்!” என்றாள்.

“சொன்னால் செங்கோடனுக்குப் பதில் நீ கொலை கேஸில் அகப்பட்டுக்கொள்வாய். அவ்வளவுதானே? அதில் என்ன பிரயோஜனம்?”

“நான் ஏன் மாட்டிக்கொள்கிறேன்? கதவிடுக்கில் மறைந்து நின்று கடப்பாரையினால் மண்டையில் ஓங்கிப் போட்டவர் அல்லவா அகப்பட்டுக்கொள்ள வேண்டும்? உங்களை நான் பார்க்கவில்லை என்று நினைத்தீர்களா?” என்றாள் செம்பா.

போலீஸ்காரர் திடுக்கிட்டுப் போனார். ஏனெனில் செம்பா சொன்னது உண்மையேயாகும். போலீஸ்காரர் அன்று மாலை பங்காருவுக்கும் எஸ்ராஜுக்கும் முன்னதாகவே கேணிக்கரைக்கு வந்துவிட்டார். அந்தப் போக்கிரிகள் குடிசைக்குள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கவனித்துக் கொண்டிருந்தார். அரைகுறையாக அச்சடித்த கள்ள நோட்டுகளை ஃபிலிம்களுடன் சேர்த்துக் கொளுத்தியதைப் பார்த்தார். உள்ளே அச்சமயம் நுழையலாமா, வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, செங்கோடன்-பங்கஜா இவர்களின் பேச்சுக் குரல் கேட்டது. பிறகு எஸ்ராஜ் விளக்கை அணைத்துவிட்டு வெளியேறினான். அதுதான் குடிசைக்குள்ளே நுழைந்து பங்காருவைக் கையும் களவும் கள்ள நோட்டுமாகப் பிடிக்கத் தக்க சமயம் என்று நினைத்து உள்ளே பிரவேசித்தார். ஆனால் தம் பின்னோடு இன்னும் யாரோ ஒருவர் வரும் சத்தம் கேட்டுக் கதவின் இடுக்கில் ஒளிந்து கொண்டார்.

வருவது ஒரு பெண் என்று அறிந்ததும் அவருக்கு ஒரே வியப்பாகிவிட்டது. அவள் யார், எதற்காக அங்கே வருகிறாள் என்று தெரிந்துகொள்ளும் ஆவல் ஏற்பட்டது.

வந்தவள் உள்ளே வந்து அவசரமாகச் செப்புத் தவலையை எடுத்தாள். பங்காரு திரும்பிப் பார்த்து அவளுடைய சேலைத் தலைப்பைப் பற்றினான். கத்தியை எடுத்துக் குத்துவதற்கு ஓங்கினான். இவை யாவும் கண் மூடித் திறக்கும் நேரத்தில் நடந்து விட்டன. போலீஸ்காரருடைய புத்தி பிரமாதமான அவசரத்தில் வேலை செய்தது. பங்காருவுக்குப் பின்னால் கிடந்த கடப்பாரையைச் சட்டென்று எடுத்து அவன் பின் தலையில் ஓங்கிப் போட்டார். பங்காரு, “ஐயோ!” என்று கத்திக் கொண்டு தரையில் விழுந்தான். அவன் இருட்டில் பார்த்தது ஒரு பெண்பிள்ளையைத்தான். அந்தப் பெண் குமாரி பங்கஜாவாக இருக்கவேண்டும் என்று தவறாகத் தீர்மானித்துக் கொண்டான். அவளே தன் தலையில் அடித்தவள் என்று எண்ணிக் கொண்டு தரையில் விழுந்தான். ஆகையினாலேயே பின்னால் அவன் குமாரி பங்கஜாவின் மேல் குற்றம் சாட்டினான்.

செம்பா கையில் தவலையை எடுத்துக்கொண்டு பங்காருவின் பிடியை உதறிக்கொண்டு கிளம்பியபோது, கதவின் இடுக்கில் ஓர் உருவம் கடப்பாரையை ஓங்கிக் கொண்டு நிற்பதைப் பார்த்துவிட்டாள். அப்படி நின்றவர் யார் என்று தெரியவில்லை. ஆனால் அவருடைய போலீஸ் உடை மட்டும் அவளுடைய மனத்தில் பதிந்திருந்தது. அவசரத்திலும் பீதியிலும் அப்போது அதைப்பற்றி யோசிக்க முடியவில்லை. பின்னால் யோசித்துப் பார்த்து, பார்த்து இப்படி இப்படி நடந்திருக்கவேண்டும் என்பதை ஒருவாறு ஊகித்துக் கொண்டாள்.

தாம் கதவருகில் நின்றதைச் செம்பா பார்த்தாளா இல்லையா என்பதைப் பற்றிப் போலீஸ்காரருக்குக் கொஞ்சம் சந்தேகம் இருந்தது. அது இப்போது தெளிந்து விட்டது.

“ஐயா! பணத்தைக் கொண்டு வந்து கொடுத்து விடுங்கள்” என்றாள் மறுபடியும் செம்பா.

“பணமா? நான் எங்கே போக?”

“நீங்கள்தான் பணத்தை எடுத்திருக்க வேண்டும்!”

“என்னைத் திருடன் என்றா சொல்லுகிறாய்?”

“நான் சொல்லவில்லை. நீங்களேதான் ஒப்புக்கொண்டீர்களே!”

“அது எப்போது?”

“அன்றைக்கு அவரிடம் நீங்கள் போலீஸ்காரன் வேஷத்திலே கூட ‘திருடன் வருவான்’ என்று சொல்லவில்லையா? அதை நான் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தேன்.”

“செம்பா! நீ பலே கெட்டிக்காரி. இவ்வளவு சாமர்த்தியசாலியாயிருந்துகொண்டு அந்த அசட்டுச் செங்கோடனைப் போய்க் கலியாணம் செய்துகொள்ளப் போகிறாயே, அதை நினைத்தால்தான் வருத்தமாயிருக்கிறது!”

“சிலரைப் போல புத்திசாலிகளாயிருப்பதைக் காட்டிலும் அவரைப்போல் அசடாயிருப்பதே மேல்!”

“அது உன் தலை எழுத்து! எப்படியாவது போ! செங்கோடன் சீக்கிரம் திரும்பிவருவான். உன் கலியாணத்தன்று பணமும் சீதனமாகக் கிடைக்கும்!” என்றார் போலீஸ்காரர்.

அத்தியாயம் – 21

செங்கோடன் மீது குற்றம் ஒன்றுமில்லை என்று போலீஸ் அதிகாரிகளே அவனை விடுதலை செய்து விட்டார்கள். கள்ள நோட்டு வழக்கில் அவனைச் சாட்சியாகவும் உபயோகித்துக் கொண்டார்கள். எல்லாம் முடிந்த பிறகு ஒரு நல்ல முகூர்த்தத் தேதியில் செங்கோடனுக்கும் செம்பவளவல்லிக்கும் திருமணம் நடந்தது.

புதிய தம்பதிகள் கேணிக்கரைக் குடிசையில் தனிக் குடித்தனம் நடத்த ஆரம்பித்த அன்று மாலை செங்கோடன் தன் அருமை மனைவியைப் பார்த்து, “செம்பா! நான் இனி மேல் அடிக்கடி சினிமாவுக்குப் போகிறதென்று உத்தேசித்திருக்கிறேன். உன்னையும் அழைத்துப் போவேன்!” என்றான்.

“நன்றாயிருக்கிறது! உங்களுக்குப் பைத்தியமா, என்ன? நாளைக்கு நமக்கு இரண்டு குஞ்சு குழந்தைகளைப் பழனியாண்டவன் கொடுக்கமாட்டானா? அவர்களுக்கு ஏதாவது தேடி வைக்க வேண்டாமா? சினிமாவிலும் கினிமாவிலும் பணத்தைத் தொலைத்து விடலாம் என்று பார்க்கிறீர்களா?” என்று செம்பா கேட்டாள்.

“பணம் கிடக்கிறது, பணம்! சின்னமநாயக்கன்பட்டியில் கூடார சினிமா நடந்தால் அதற்கு நான் கட்டாயம் போவேன். இல்லாவிட்டால் சேலத்துக்காவது போய் சினிமா பார்த்துவிட்டு வருவேன்…”

“அதெல்லாம் உதவாது. நான் உங்களைப் போகவிடமாட்டேன். சினிமாவில் பார்க்கிற ராஜா-ராணியாக நாமே இருந்தால் போகிறது. நீங்கள் ராஜா செங்கோடக் கவுண்டர்; நான் ராணி செம்பவளவல்லி…!”

“சேச்சே! என்னையும் உன்னையும் எதற்காக அவ்வளவு கேவலப்படுத்திக் கொள்கிறாய்? சினிமாவிலே வருகிற ராணிகள் உன் கால்தூசி பெறுவார்களா, செம்பா? ஒரு நாளும் இல்லை. அதற்காக நான் சொல்லவில்லை. நீ அன்றைக்கு ஒரு நாள் என்னை சினிமா பார்த்துவிட்டு வா என்று சொன்னாயல்லவா? நானும் உன் ஏச்சுக்குப் பயந்து போனேன் அல்லவா? அங்கே பொய்மான் கரடுக்குச் சமீபமாகக் குமாரி பங்கஜா என்பவளைப் பார்த்தேன் அல்லவா? அவளைப் பார்த்துப் பேசி, அவளுடன் பழகிய பிறகுதான் உன்னுடைய மகிமை எனக்கு நன்றாய்த் தெரிய வந்தது. செம்பா! உன்னைப் பெறுவதற்கு நான் எவ்வளவோ தவம் செய்திருக்க வேண்டும்! பழனியாண்டவனுடைய கிருபையினால்தான் உன்னை நான் மனைவியாக அடைந்தேன். ஆனாலும் உன்னை அடைந்தது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் என்று அந்தக் கூடார சினிமாவுக்குப் போகாமலிருந்தால் எனக்குத் தெரிந்திராது. என்னுடைய பணத்தைப் பாதுகாப்பதற்காக நீ எவ்வளவு பெரிய அபாயமான காரியத்தில் தலையிட்டாய்!” என்று செங்கோடன் மனமுருகிக் கூறினான்.

“நானும் உங்களை அதனால்தான் நன்கு அறிந்து கொண்டேன். என்னைக் காப்பாற்றுவதற்காக நீங்கள் கொலைக் குற்றத்தைக்கூட ஒப்புக்கொண்டீர்களே! என் பேரில் உங்களுக்கு எவ்வளவு அந்தரங்க அபிமானம் இருக்கவேண்டும்!” என்றாள் செம்பா.

“அது ஒன்றும் உனக்காக இல்லை. அந்தப் போலீஸ்காரர் திடீரென்று என் முன்னால் தோன்றவே மிரண்டுபோய் அப்படி உளறிவிட்டேன்!” என்றான் செங்கோடன்.

“உடைந்து கிடந்த என் வளையலை அவ்வளவு ஜாக்கிரதையாய்க் கொண்டு போய்க் கிணற்றில் போட்டீர்களே, நான் கொலைகாரி என்று எண்ணியபோதும் என் பேரில் பிரியமாயிருந்தீர்களே! இதற்கு நான் எத்தனை ஜன்மம் எடுத்து உங்களுக்கு உழைத்தாலும் போதாது என் கடன் தீராது!” என்றாள் செம்பா.

“தீராமல் என்ன? ஒரு பிள்ளைக் குழந்தையைப் பெற்றுக் கொடு; கடன் அவ்வளவும் தீர்ந்துவிடும்.”

“அப்படியானால் பெண் குழந்தையே தரும்படி அம்மனைப் பிரார்த்திப்பேன், பெண் என்றால் மட்டமா? நானும் பெண்தானே!”

“நீ பெண்தான். அதனால் எல்லாப் பெண்களும் உன்னைப்போல ஆகிவிடுவார்களா? அந்தக் குமாரி பங்கஜாவையே எடுத்துக் கொள்ளேன், அவளைப் பெண் பேய் என்று பங்காரு சொன்னது சரிதான். நான் கூட முதலில் கொஞ்சம் ஏமாந்துவிட்டேன். பொய்மானை நிஜமான் என்று எண்ணி விட்டேன். ஆனால் அந்தப் போலீஸ்காரர் அவளிடம் என்னத்தைக் கண்டாரோ, தெரியவில்லை. மூன்று மாதம் ஜெயிலில் இருந்துவிட்டு வந்தவளைக் கலியாணம் செய்துகொண்டிருக்கிறார். அந்தப் போலீஸ்காரருக்கு வேலை போய்விட்டது என்று உனக்குத் தெரியுமோ, இல்லையோ?”

இவ்விதம் செங்கோடக் கவுண்டனும் செம்பாவும் பேசிக் கொண்டிருந்த அதே சமயத்தில் மாஜி போலீஸ் கான்ஸ்டேபிள் சின்னமுத்துக் கவுண்டரும் குமாரி பங்கஜாவும் ஆனந்தமாக உரையாடிக் கொண்டிருந்தார்கள்.

“அந்தப் பங்காரு, எஸ்ராஜ் இவர்களுடன் சில நாள் பழகியதும் நல்லதாய்ப் போயிற்று. அப்படிப் பழகியிராவிட்டால் உலகில் எவ்வளவு பொல்லாத தூர்த்தர்கள் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரிந்திராது. உங்களுடைய பெருமையையும் அறிந்திருக்கமாட்டேன். மலாய் நாட்டில் எங்களுடைய சொத்து சுதந்திரமெல்லாம் போனது பற்றி நான் கவலைப்படவில்லை. அதன் பயனாகத்தான் உங்களை அடைய நான் கொடுத்து வைத்திருந்தேன்!” என்றாள் பங்கஜா.

“கொடுத்து வைத்திருந்தவன் நான். ஜப்பான்காரன் மலாய் நாட்டுக்குப் படையெடுத்து வந்ததே உன்னை என்னிடம் கொண்டு சேர்ப்பதற்காகத்தான். இல்லாவிட்டால், அந்தப் பட்டிக்காட்டுப் பெண் செம்பவளவல்லியைப் போல் யாராவது ஒருத்தியைக் கட்டிக்கொண்டு கஷ்டப்படுவேன்” என்றார் சின்னமுத்துக் கவுண்டர்.

“இன்றைக்கு இப்படிச் சொல்கிறீர்கள்! அன்றைக்கு அந்தப் பட்டிக்காட்டுப் பெண்ணைத்தான் ஆகாசத்திலே தூக்கி வைத்துப் பேசினீர்கள், பிரமாத கெட்டிக்காரி என்று…!”

“அவள் ஒன்றும் கெட்டிக்காரி இல்லை. செங்கோடனிடம் அவள் வைத்திருந்த ஆசை அப்படி அவளைக் கெட்டிக்காரியாகச் செய்திருந்தது.”

“அவள் பேரில் நீங்கள் வைத்திருந்த ஆசை உங்களை அவ்வளவு பலசாலியாகச் செய்துவிட்டது; அதனால் தானே பங்காருவின் தலையில் அந்தக் கடப்பாரையைப் போட்டீர்கள்? அவள் உயிரைக் காப்பாற்றினீர்கள்?”

“அவள் பேரில் ஆசையால் அவளை நான் காப்பாற்றவில்லை. உன்பேரில் வைத்த ஆசையினால்தான் காப்பாற்றினேன். என் கண்மணி! இதைக்கேள், கேட்டு நன்றாய் மனத்தில் பதிய வைத்துக்கொள். பங்காரு செய்த தவறையே நானும் செய்தேன். குடிசைக்குள் இருள் சூழ்ந்திருந்தது. அந்த இருட்டில் ஒரு பெண் உள்ளே வந்தாள். அவள் செம்பா என்று நான் நினைக்கவேயில்லை. நீ என்று தான் நினைத்தேன். அதனால் தான் என் கைகளுக்கு அவ்வளவு பலம் ஏற்பட்டது. பங்காருவின் மண்டையில் கடப்பாரையைப் போட்டேன்…”

இதைக் கேட்டதும் பங்கஜாவுக்கு உடம்பு புல்லரித்தது. சினிமா கதாநாயகிகளைப் போல் பேசினாள்; காரியத்திலும் நடந்து கொண்டாள்.

“நாதா! இத்தனை நாளும் இதைச் சொல்லவில்லையே? எனக்காக எப்பேர்ப்பட்ட காரியத்தைச் செய்தீர்கள்? என் உடல் பொருள் ஆவியெல்லாம் ஏழேழு ஜன்மத்துக்கும் உங்களுடைய உடைமை” என்றாள் பங்கஜா.

அந்த நிமிஷத்தில் மாஜி போலீஸ்காரர் சின்னமுத்துக் கவுண்டர் ஏழாவது சொர்க்கத்தை அடைந்தார்.

சேலம் ஜங்ஷனின் தீப வரிசைகள் சற்றுத் தூரத்தில் தெரிந்தன. நகருக்குள் புகுந்து சுற்றி வளைத்துக் கார் போக வேண்டியிருந்தது. ரெயில் வண்டி ஒன்று குப் குப் என்ற சத்தத்துடன் வரும் சத்தம் கேட்டது. ‘விஸில்’ ஊதும் சத்தமும் கேட்டது.

“மெட்ராஸ் வண்டி வந்துவிட்டது. ஆனால் கொஞ்ச நேரம் நிற்கும். அவசரமில்லை” என்றார் டிரைவர்.

“அப்படியானால் பாக்கிக் கதையையும் சொல்லி முடித்துவிடு!” என்றேன்.

“கதைதான் முடிந்துவிட்டதே! செங்கோடக் கவுண்டரும் செம்பவளவல்லியும் ஆனந்தமாக இல்வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். இரண்டு பெண் குழந்தைகளும் ஓர் ஆண் குழந்தையும் அவர்களுக்கு இருக்கின்றன. செங்கோடக் கவுண்டர் மேலும் கொஞ்சம் நிலம் வாங்கிச் சேர்த்திருக்கிறார். நாலு வருஷமாக மழை பெய்யாமலிருந்தும் அவருடைய கேணியில் நிறையத் தண்ணீர் இருக்கிறது. அவருடைய நிலங்கள் பச்சென்று இருக்கின்றன. சோளம் நன்றாகப் பயிராகிக் கொண்டை விட்டிருக்கிறது அவருடைய குழந்தைகள் சோளக் கொண்டையைப் பறித்துத் தின்றால் இப்போது செங்கோடக் கவுண்டர் திட்டுவதும் ஆட்சேபிப்பதும் இல்லை. செம்பா சில சமயம் குழந்தைகளைத் தடுக்கிறாள். ஆனால் செங்கோடக் கவுண்டர் அவளுடன் சண்டை பிடிக்கிறார். ‘குழந்தைகள் தின்றால் தின்றுவிட்டுப் போகட்டும்! அவர்களுக்கில்லாத சோளக்கொண்டை வேறு யாருக்கு? அப்படியே அறுவடை செய்து வைத்திருந்தால் யாராவது சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் வந்து கொண்டு போகப் போகிறார்கள்! குழந்தைகள்தான் தின்றுவிட்டுப் போகட்டுமே’ என்று சொல்லுகிறார்!”

“இதைக் கேட்பதற்கு மிகவும் சந்தோஷமாயிருக்கிறது. ஆனால் கேஸ் என்ன ஆயிற்று? குற்றவாளி யார் என்று ஏற்பட்டது?”

“ஏன்? குற்றவாளிகள் எஸ்ராஜுவும் பங்காருசாமியுந்தான். கள்ள நோட்டுப் போட முயன்றதற்காக அவர்களுக்குத் தலைக்கு மூன்று வருஷம் கடுங்காவல் தண்டனை கிடைத்தது. கள்ள நோட்டுப் போடுவதில் அவர்கள் வெற்றி பெறவும் இல்லை. ஒரு நோட்டையாவது அவர்களால் செலாவணி செய்ய முடியவில்லை. ஆகையால் தலைக்கு மூன்று வருஷத் தண்டனையோடு போயிற்று.”

“பங்காருவுக்குக் கூடவா தண்டனை கிடைத்தது?”

“ஆமாம்; அவன் தான் கேஸில் முதல் குற்றவாளி.”

“குற்றவாளியை யமலோகத்திலிருந்து யார் விசாரணைக்குக் கொண்டு வந்தார்கள்? செத்துப் போனவன் மீது கேஸ் போடுவது உண்டா?”

“பங்காரு செத்துப் போனான் என்று யார் சொன்னது? கொட்டறாப்புள்ளி மாதிரி இருக்கிறானே! அவனுடைய தலைக் காயம் சில நாளைக்குள் ஆறிவிட்டது. சிறையில் நன்றாய்க் கொழுத்து வெளியே வந்தான்.”

“பின்னே, ‘கொலைக் கேஸ்’, ‘கொலைக் கேஸ்’ என்று சொன்னாயே? ‘கொப்பனாம்பட்டி கொலை’ என்றும் ‘மிக மர்மமான கொலை’ என்றும் சொன்னாயே!”

“சாதாரண கொலைக் கேஸ்களில் கொன்ற குற்றவாளி யார் என்பது மர்மமாயிருக்கும். அதைக் கண்டு பிடிக்கப் போலீஸாரும் துப்பறிவோரும் பாடுபாடுவார்கள். ஆனால் இந்தக் கொப்பனாம்பட்டி கொலைக் கேஸில் கொலை செய்தவன் யார் என்பதும் மர்மம்; கொலையுண்டவன் யார் என்பதும் மர்மம்! உண்மையில் யாரும் சாகவில்லை! ஆகையால் கொலை செய்யப்படவும் இல்லை! செங்கோடக் கவுண்டன் அன்றிரவு, ‘நான் தான் கொன்றேன்’ ‘நான் தான் கொன்றேன்’ என்று கத்தியதால் ‘கொப்பனாம்பட்டி கொலைக் கேஸ்’ என்று பெயர் வந்து விட்டது. கொல்லப்பட்டவன் யார் என்பது தெரியாமலேயே ஜனங்கள், ‘கொப்பனாம்பட்டி கொலைக் கேஸ்’ என்று பேசிக் கொண்டிருந்தார்கள். அதைத்தான் நானும் சொன்னேன்!” என்றார் மோட்டார் டிரைவர்.

“கதை இப்படி முடிந்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம். ஆனால் போலீஸ்காரர் விஷயம் என்னவாயிற்று? அவர் ஏன் போலீஸ் இலாகாவைவிட்டு விலகினார்?” என்று கேட்டேன்.

“ராஜிநாமா தான். கள்ள நோட்டுக் கேஸில் அவர் சரியான தடையம் கண்டுபிடித்துக் கொடுக்கவில்லை என்று அவர் பேரில் புகார் ஏற்பட்டது. கள்ள நோட்டுகள் என்று அவர் குடிசையிலிருந்து திரட்டி மூட்டை கட்டி கொண்டு வந்தவை உண்மையில் உண்மையான நோட்டுகள் என்றும், செங்கோடன் தவலையில் இருந்தவை என்றும் தெரியவந்தன. இதனால் போலீஸ்காரருக்குப் ‘பிளாக் மார்க்’ கிடைத்தது. எதிர்பார்த்தபடி பிரமோஷன் கிடைக்கவில்லை. ஆகவே கோபங்கொண்டு ராஜிநாமா செய்துவிட்டார்.”

“செங்கோடனுக்கு அவனுடைய பணம் கிடைத்து விட்டதாக்கும்!”

“திவ்யமாகக் கிடைத்துவிட்டது. ஆனால் செங்கோடன் இப்போதெல்லாம் பணத்தைப் புதைத்து வைப்பதில்லை. மிச்சமாகும் பணத்தைப் பாங்கியிலோ, சர்க்கார் கடன் பத்திரங்களிலோ போட்டு வட்டியும் வட்டிக்கு வட்டியும் வாங்குகிறான்.”

“ரொம்ப சந்தோஷம்” என்றேன்.

கடைசியாகக் கேட்க எண்ணியிருந்த கேள்வியையும் கேட்டுவிட்டேன்:

“போலீஸ்காரர் இப்போது என்ன செய்கிறார்?” என்றேன்.

“மாஜி கான்ஸ்டேபிள் 374ஆம் நம்பர் இப்போது மோட்டார் டிரைவர் வேலை பார்க்கிறார்! கார் ஓட்டும் சமயம் தவிர மற்ற வேளையெல்லாம் கால்மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்து பெண்சாதியை அதிகாரம் பண்ணிக்கொண்டிருக்கிறார்!”

இன்னும் ஒரே ஒரு கேள்வி பாக்கியிருந்தது: “அந்த மோட்டார் டிரைவர் நீர்தானா?” என்பது.

ஆனால் நான் அதைக் கேட்கவில்லை. எதற்காகக் கேட்பது? நாயின் உயிரைக் காப்பதற்காக மோட்டாரையும் என்னையும் அவர் வேலை தீர்த்துவிடப் பார்த்ததை நினைத்தாலே தெரியவில்லையா? இந்தக் கேள்வியை அவரிடம் கேட்கப் போவானேன்?

முற்றிற்று.

– பொய்மான் கரடு (குறுநாவல்), முதற் பதிப்பு: 1951.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *