கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 1, 2025
பார்வையிட்டோர்: 3,634 
 
 

அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18

அத்தியாயம் – 13

செங்கோடனிடம் குமாரி பங்கஜா தன்னுடைய சோகக் கதையைச் சொல்ல ஆரம்பித்த அதே சமயத்தில் செம்பவளவல்லியின் தாயிடம் அவளுடைய தந்தை சொன்னார்: “எனக்கென்னமோ நம்பிக்கை இல்லை. இந்தக் கலியாணம் நடக்கும் என்று. இன்று காலையில் இங்கே செங்கோடன் அப்படியெல்லாம் சக்கரவட்டமாகப் பேசினானே, சாயங்காலம் அவன் பொய்மான் கரடுக்குச் சமீபமாகப் போய்க்கொண்டிருப்பதைப் பார்த்தேன்!” என்றார்.

“இது என்ன அபசகுனப் பேச்சு? அந்தப் பிள்ளை ஏதாவது மண்ணெண்ணெய், நெருப்புப் பெட்டி வாங்கக் கடைக்குப் போயிருப்பான். அதற்காகக் ‘கலியாணம் நடக்காது’ என்று ஏன் சொல்ல வேண்டும்?” என்று கேட்டாள் செம்பாவின் தாயார்.

“என்னமோ ‘கோல்மால்’ நடந்து கொண்டிருக்கிறது! இவன் அங்கே போவதை அந்தப் பட்டணத்துக் காலிகள் ஒரு மரத்தின் பின்னாலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். செங்கோடனைச் சுட்டிக்காட்டி ஏதோ பேசிக் கொண்டார்கள். அந்தப் போலீஸ்காரர் வேறே அங்கு வளைய வளைய வந்து கொண்டிருக்கிறார். அவர்களுடன் வசிக்கும் பெண்பிள்ளை பாறைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறாள். எனக்கு என்னமோ சந்தேகமாயிருக்கிறது. செங்கோடன் பெருஞ்சங்கடத்தில் மாட்டிக் கொள்ளப் போகிறான்!” என்றார் கவுண்டர்.

“செங்கோடன் எதற்காகச் சங்கடத்தில் மாட்டிக் கொள்கிறான்? அந்தப் பட்டணத்து மனுஷர்களுக்கும் இவனுக்கும் என்ன வந்தது?” என்று கவுண்டரின் மனைவி கேட்டாள்.

“போலீஸ்காரர் என்னிடம் சொன்னதைச் சொல்கிறேன்; நீ வேறு யாரிடமும் சொல்லி வைக்காதே! இந்த ஜில்லாவில் ஐம்பது அறுபது வருஷத்துக்கு முன்னால் கூழைக் காலன் என்று ஒரு பக்காத் திருடன் இருந்தான். கேள்விப்பட்டிருக்கிறாயா…?”

“கேள்விப்படாமல் என்ன? நான் செம்பாவைவிடச் சிறு பெண்ணாயிருந்தபோது கூழைக் காலனைப் பற்றிக் கதை கதையாய்ச் சொல்லுவார்கள். அவன் ஒரு தடவை ராசிபுரத்திற்கு வந்து…”

“சரி, நிறுத்து! உன் கதையை இப்போது எடுத்து விடாதே! அந்தக் கூழைக் காலன் கொள்ளையடித்த பணத்தை எங்கேயோ ஓர் இடத்தில் புதைத்து வைத்திருந்தானாம். அது இந்தப் பட்டணத்து ஆட்களிடம் எப்படியோ அகப்பட்டுவிட்டதாம். கிடைத்த புதையலைச் சர்க்கார் கண்ணில் காட்டாமல் ஒளித்து வைக்க முயற்சி செய்து வருகிறார்களாம். அதற்கு நம் செங்கோடனும் உடந்தையாய் இருக்கிறானாம். எல்லாரும் ஒரு நாள் ஜெயிலுக்குப் போகப் போகிறார்கள் என்று சொல்கிறார் போலீஸ்காரர்!”

“வெறும் கதையாக அல்லவா இருக்கிறது? கூழைக் காலன் பணத்தைப் புதைத்து வைத்திருந்தால் அது நம்ப கையிலேயெல்லாம் அகப்படாமல் நேற்றைக்கு வந்த இவர்களிடம் அகப்பட்டுவிடுமா? அப்படி அகப்பட்டாலும் அவர்கள் போயும் போயும் செங்கோடனைத் தானா தேடிப் பிடிக்க வேண்டும்? அவன் தான் அப்படிப்பட்ட காரியங்களில் தலையிடுவானா? அப்படி ஏதாவது இருந்தாலும், ‘இதிலெல்லாம் நீ சிக்கிக் கொள்ளாதே!’ என்று செங்கோடனுக்கு நீங்கள் புத்தி சொல்ல வேண்டாமா? உலகந்தெரியாத பிள்ளையை இப்படி விட்டு வேடிக்கை பார்ப்பார்களா?” என்றாள் செம்பாவின் தாயார்.

“செங்கோடனுக்கு எச்சரிக்கை செய்யலாம் என்று தான் நானும் பார்த்தேன். ஆனால் அந்தப் போலீஸ்காரர் உண்மையைக் கண்டுபிடிக்கும் வரையில் பொறுத்திருக்கச் சொல்கிறார்…”

“என்னத்திற்கு பொறுத்திருக்கிறது? அந்தப் பிள்ளையையும் சேர்த்து ஜெயிலுக்கு அனுப்புவதற்கா? போலீஸ்காரர் சொல்லுவது நன்றாயிருக்கிறதே! அடுத்த வீட்டுப் பிள்ளையைக் கேணியில் போட்டு ஆழம் பார்க்கிற கதையாய் இருக்கிறதே!”

“செங்கோடனை எப்படியாவது தப்பித்து விடுகிறதாகச் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறார்.”

“அதையெல்லாம் நீங்கள் நம்பாதீங்க! நாளைக்கே அந்தப் பிள்ளையைக் கூப்பிட்டுச் சொல்லிவிட்டு மறுகாரியம் பாருங்கள்!”

மேற்படி சம்பாஷணையைச் செம்பா ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தாள். செங்கோடனைப் பற்றி தன் பெற்றோர்கள் பேசுவதை அவள் எப்படி ஒட்டுக் கேட்காமல் இருக்க முடியும்? அதுவரையில் உற்சாகமாக இருந்தவளுடைய மனத்தில் இப்போது கவலையும் பயமும் தோன்றின. மறுநாள் வரையில் காத்திருக்க அவள் விரும்பவில்லை. உடனே அவனிடம் சொல்லியாக வேண்டும்! மேலும் முதல் நாள் சாயங்காலம் வைக்கோல் கட்டின் மேல் உட்கார்ந்து சல்லாபம் செய்ததெல்லாம் அவளுடைய ஞாபகத்தில் பதிந்திருந்தது. அந்த நினைவும் அவளுடைய ஆர்வத்தை அதிகப்படுத்தியது.

தாயும் தகப்பனும் கவனியாத சமயத்தில் வீட்டை விட்டுக் கிளம்பிச் செங்கோடனுடைய கேணியை நோக்கிப் புறப்பட்டாள். போகும்போது யோசித்துக் கொண்டே சென்றாள். அப்பா சென்ன விஷயம் சரியாயிருக்கும் என்றே அவளுக்குத் தோன்றவில்லை. அந்தப் போலீஸ்காரர் அப்பாவை நன்றாய் ஏமாற்றியிருக்கிறார். செங்கோடனை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டுத் தன்னைக் கலியாணம் செய்து கொள்ள எண்ணுகிறார்! ஓகோ! சிவப்புத் தலைப்பாக்காரரே! அப்படியா உம் உத்தேசம்? செம்பாவிடம் அதெல்லாம் நடக்குமா? ஒரு நாளும் இல்லை! செம்பா செத்தாலும் சாவாளே தவிர, செங்கோடனையன்றி வேறு யாரையும் கலியாணம் செய்துகொள்ள மாட்டாள்!

ஒரு வேளை இப்படியும் இருக்கலாம்; அந்தப் பட்டணத்து ஆட்களும் அந்த வெட்கங்கெட்ட சூர்ப்பனகையும் அந்தப் போலீஸ்காரரும் – எல்லாரும் ஒரு கட்சியாயிருக்கலாம்! கூழைக் காலன் புதையலாவது, மண்ணாங்கட்டியாவது! – எல்லாருமாகச் சேர்ந்துகொண்டு செங்கோடன் கஷ்டப்பட்டுச் சேர்த்து வைத்திருக்கும் பணத்தைப் பறிக்கப் பார்க்கிறார்கள்! அதற்காகத்தான் ஏதோ பெரிய சூழ்ச்சி செய்கிறார்கள்!… பெண்ணே! செம்பா! உன்னுடைய சமர்த்தை நீ காட்டவேண்டும். பணம் போய் விட்டால் செங்கோடனுக்குப் பிராணன் போய்விடும், அல்லது பைத்தியமே பிடித்தாலும் பிடித்துவிடும். பணத்தை நீ காப்பாற்றிக் கொடுத்தால் செங்கோடன் எவ்வளவோ சந்தோஷப்படுவான். என்றைக்கும் உன் அடிமையாயிருப்பான்! ஆகையால் செங்கோடனுடைய பணத்தைக் காப்பாற்றிக் கொடுப்பது உன்னுடைய பொறுப்பு! குடும்ப வாழ்க்கையில் நீ சந்தோஷமாயிருப்பதெல்லாம் இது விஷயத்தில் நீ செய்வதைப் பொறுத்திருக்கிறது!

செம்பாவுக்குச் சாதாரணமாகப் பயம் என்பதே கிடையாது. “பேயும் பிசாசும் என்னை என்ன செய்யும்! என்கிட்டப் பிசாசு வந்தால் கன்னத்தில் நாலு அறை அறைந்து அனுப்ப மாட்டேனா!” என்பாள். இருட்டு நேரங்களில் சிறிதும் பயமின்றி எங்கும் போவாள். ஆனால் இன்றைக்கு என்னவோ, அவளுடைய உள்ளத்தில் அடிக்கடி பயம் புகுந்து வேதனை செய்தது. இருட்டைக் கண்டே பயமாயிருந்தது. ‘இருட்டில் திடீரென்று யாராவது திருடன் எதிர்ப்பட்டாலோ…’ என்று எண்ணியபோது நெஞ்சு படபடவென்று அடித்துக்கொண்டது. கால்கள் தடுமாறின. வயற்காட்டில் அங்கங்கே தெரிந்த சிறிய மொட்டைப் பாறைகளுக்குப் பின்னால் திருடர்கள் ஒளிந்திருப்பார்கள் என்று தோன்றியது. கூழைக்காலன், செவிட்டுக் காதன், நொண்டிக் கையன், குருட்டுக் கண்ணன் முதலிய பயங்கரமான கொள்ளைக்காரர்கள் அவளைச் சுற்றிலும் சூழ்ந்து கொண்டதாகப் பிரமை உண்டாகி அடிவயிற்றில் திகில் ஏற்பட்டது. தொண்டை வறண்டது. நா உலர்ந்தது. ஆனால் அவளுடைய நடையின் வேகம் மட்டும் குறையவில்லை. செம்பா! நீ இப்படி மெள்ள நடந்து கொண்டிருக்கையில் செங்கோடனுக்கு என்ன ஆபத்தோ! அல்லது அவனுடைய பணத்துக்குத் தான் என்ன ஆபத்தோ?… சின்னானுக்குக் கூடக் காய்ச்சல்; ஒரு வாரமாய் வேலைக்கு வருவதில்லை. ஆகையால் இவன் எங்கேயாவது போய்விட்டால் குடிசைக்குக் காவல் கிடையாது! ஆண் பிள்ளைகளின் அசட்டுத்தனத்தை என்னவென்று சொல்லுவது? நாலு வருஷம் கஷ்டப்பட்டுச் சேர்த்த பணத்தைத் தரையில் தோண்டி வைத்துவிட்டுச் சாயங்கால நேரங்களில் வெளியிலே போகலாமா? இந்தக் காலத்திலும் கூழைக்காலனைப் போன்ற திருடர்கள் இல்லாமலா போகிறார்கள்? ஒரு வேளை இதே நிமிஷத்தில்-எந்தத் திருடனாவது தரையை தோண்டிப் புதைத்து வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொண்டிருக்கலாம்!… இந்த எண்ணம் செம்பாவின் கால்களுக்கு அதிகமான துரிதத்தைக் கொடுத்தது.

குடிசைக்குக் கிட்டத்தட்ட அருகில் வந்தபோது நாய் குரைக்கும் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு நின்றாள். குரைப்புச் சத்தம் இரண்டு தடவைதான் கேட்டது. அதற்குப் பிறகு, அம்மம்மா! அந்தப் பயங்கரத்தை என்னவென்று சொல்வது? குரைத்த நாயின் நீண்ட ஊளைக் குரல் கேட்டது. அந்தச் சகிக்கமுடியாத தீனமான சோகக் குரல் கொஞ்சம் கொஞ்சமாக மௌனமாகிக் கடைசியில் மறைந்தது. நாய் ஊளையிடும் சத்தம் கிராமங்களில் அடிக்கடி கேட்கக் கூடியதுதான். ஆயினும் இப்போது கேட்ட ஊளைச் சத்தம் செம்பாவைக் கலக்கிவிட்டது. ஆடிக் காற்றில் சோளப்பயிர் ஆடுவதுபோல் அவளுடைய உடம்பு ஆடிற்று; கைகளும் கால்களும் நடுநடுங்கின. நாய் ஊளையிடுவது சாவுக்கு அடையாளம் என்று சொல்லக் கேட்டிருந்தாள். யாராவது மனித உயிரைக் கொண்டு போக யமராஜன் வரும்போது, நாயின் கண்களுக்கு அவனுடைய தோற்றம் புலப்பட்டு விடுமாம்! அதனால் நாய் ஊளையிடுமாம்!…இந்தப் பேச்சு உண்மையா? அப்படியென்றால், இப்போது ஏதேனும் சாவு ஏற்படப்போகிறதா? ஐயோ! யமன் யாருக்காக வருகிறானோ தெரியவில்லையே? இங்கே யார் இருக்கிறார்கள்? ஒருவரையும் காணோமே? குடிசை நிசப்தமாய் இருக்கிறதே! நேற்று இங்கு வந்தபோது வைக்கோற் கட்டின் மேல் செங்கோடன் உற்சாகமாக உட்கார்ந்து தெம்மாங்கு பாடினானே?…அந்த இடம் இப்போது காலியாய், வெறிச்சென்று இருக்கிறதே!…சுவாமி முருகக் கடவுளே! காளியம்மா! தெய்வங்களே! ஒன்றும் நேராமல் காப்பாற்றுங்கள். செங்கோடனைக் காப்பாற்றுங்கள். என்னைக் காப்பாற்றுங்கள், எல்லாரையும் காப்பாற்றுங்கள்!…

அது என்ன? சரசரவென்று கேட்கும் சத்தம் என்ன? அதோ பேச்சுக்குரல் கேட்கிறதே! சோளக் கொல்லையில் புகுந்து யாரோ இரண்டு பேர் வருகிறார்களே!… இல்லை; வருகிறது செங்கோடன் இல்லை! அப்பா சொன்ன பட்டணத்து ஆசாமிகள்! எதற்காக இங்கே வருகிறார்கள்? ஒருவன் தலைமீது ஏதோ சுமந்துவருகிறானே, அது என்ன? இன்னொருவனும் கையில் ஏதோ பெட்டி மாதிரி எடுத்துக்கொண்டு வருகிறான்!… ஒரு வேளை அப்பாவிடம் போலீஸ்காரர் சொன்னது உண்மைதானோ? கூழைக்காலன் புதையலை ஒளித்து வைக்க வருகிறார்களோ?…செங்கோடனை மாட்டிவைத்து ஜெயிலுக்கு அனுப்ப ஏற்பாடு செய்கிறார்களோ?… செங்கோடன் எங்கே? ஏன் இன்னும் வரவில்லை? இருட்டில் இத்தனை நேரம் வேறிடத்தில் என்ன வேலை? இவர்கள் ஏதோ சூழ்ச்சி செய்து செங்கோடனை ஏமாற்றிவிட்டு வந்திருக்கிறார்கள் போல் இருக்கிறது!

நாய் குரைத்ததே!…அது எந்த நாய்?…அது ஏன் அப்படி ஊளையிட்டது?…அப்புறம் அதன் குரலைக் காணோமே, ஏன்? செத்துப் போய்விட்டதோ? ஒரு வேளை இவர்கள்தான் கொன்று விட்டார்களோ?

இதோ கேணி அருகில் வந்துவிட்டார்கள்! அவர்கள் கண்ணில் படக்கூடாது. இந்தச் சோளத் தட்டைக் குவியலுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளலாம். ஒளிந்துகொண்டு இவர்கள் என்ன செய்கிறார்களோ, பார்க்கலாம்! தனியாக ஏன் வந்தேன்? அப்பாவையாவது தம்பியையாவது அழைத்து வராமற் போனேனே? இந்த மாதிரி ஏதோ நடக்கப் போகிறது என்று யாருக்குத் தெரியும்? கூப்பிட்டாலுங்கூட அவர்கள் வந்திருக்கமாட்டார்கள். நான் வருவதைக்கூடத் தடுத்து நிறுத்தியிருப்பார்கள்…

ஆ! அது என்ன ‘பொத்’ என்ற சத்தம்! அப்புறம் சலசலப்புச் சத்தம்! கிணற்றில் பெரிய கல்லைத் தூக்கிப் போட்டதுபோல்!…அந்த மனுஷன் கேணிக் கரையில் நின்று குனிந்து பார்க்கிறான்! அவன் தலையில் தூக்கிக் கொண்டு வந்ததைக் கேணிக்குள்ளே போட்டிருக்கவேண்டும்! அதனால்தான் அந்தச் சத்தம் கேட்டிருக்கிறது! கேணியில் என்னத்தைப் போட்டான்? ரொம்ப கனமான சாமானாக இருக்க வேண்டும்! அதனாலேயே அவ்வளவு சத்தம் கேட்டது! என்ன சாமானைப் போட்டிருப்பான்?…செம்பாவின் உடம்பெல்லாம் சிலிர்த்தது! சொல்லமுடியாத பயங்கரம் அவளைப் பீடித்தது! ஆளைக் கொலை செய்து சாக்கில் போட்டுக் கட்டிக் கிணற்றில் போட்ட ஒரு பயங்கர சம்பவத்தைப் பற்றி அவள் சமீபத்தில் கேள்விப்பட்டிருந்தாள்! ஒரு வேளை அப்படியிருக்குமோ? யாரை அப்படிக்கொன்று சாக்கில் கட்டிக்கொண்டு வந்திருப்பார்கள்! ஐயோ! ஒரு வேளை செங்கோடனை!…செம்பாவைச் சுண்ணாம்புக் காளவாயில் போட்டு எரித்ததுபோல இருந்தது.

அவர்கள் ஏதோ பேசுகிறார்கள். ஒருவன் சொல்கிறான்: “என்னடா, கேணிக்குள்ளே பார்த்துக்கொண்டு நிற்கிறாய்? தண்ணீரில் மிதக்கும் என்று பயமா? சீ! சீக்கிரம் வா! அந்தப் பைத்தியக்காரச் செங்கோடக் கவுண்டன் திடீரென்று எதையாவது நினைத்துக்கொண்டு ஓடி வந்து தொலைப்பான்! அதற்குள் காரியத்தை முடிக்க வேண்டும்!”

அதற்குள் இன்னொருவன், “வந்தால் வரட்டும்; செங்கோடன் தான் வரட்டும். அவன் பாட்டன் வேணுமானாலும் வரட்டும்!” என்று சொல்கிறான்.

ஆகையால் செங்கோடனுடைய உயிரைப்பற்றிக் கவலையில்லை. அவனை எங்கேயோ நிறுத்தி வைத்து விட்டு இவர்கள் வந்திருக்கிறார்கள். எதற்காக? கிணற்றில் என்ன போட்டார்கள்? இன்னும் என்ன செய்யப் போகிறார்கள்?

இதோ குடிசையை நோக்கி வருகிறார்கள். ஒருவனுடைய கையில் ஏதோ பெரிய மூட்டையைப் போல் இருக்கிறது. அவர்களுடைய கண்ணில் நான் படக்கூடாது!… சோளத்தட்டை குவியலுக்கு அடியில் செம்பா நன்றாக ஒளிந்து மறைந்து கொண்டாள். அவளுடைய காதுகள் மட்டும் வெகு கூர்மையாகக் கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்தன. ஊசிவிழும் சத்தங்கூட அவளுக்குக் கேட்டிருக்கும். குடிசையின் கதவைப் பலாத்காரமாகத் திறக்கும் சத்தம் கேட்காது போகுமா?

வந்த மனிதர்கள் பூட்டோடு நாதாங்கியைக் கழற்றி விட்டுக் கதவைத் திறந்து உள்ளே போனார்கள். பிறகு செம்பாவும் எழுந்து நின்று குடிசைப் பக்கம் கவனித்துப் பார்க்கத் தொடங்கினாள். அவள் நின்ற இடத்துக்கு நேரே, குடிசைச் சுவரில் காற்றோட்டத்துக்காக வைத்திருந்த துவாரப் பலகணி இருந்தது. ஆகையால் உள்ளே நடப்பதையெல்லாம் அங்கிருந்தே பார்க்கலாம்.

இரண்டு மனிதர்களும் உள்ளே போனார்கள். ஏதோ பேசிக் கொண்டார்கள். இருட்டில் அவர்கள் தடுமாறும் சத்தம் கேட்டது. பிறகு தீக்குச்சி கிழிக்கும் சத்தமும் கேட்டது. சற்று நேரத்துக்கெல்லாம் விளக்கு வெளிச்சம் தெரிந்தது. இன்னும் சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரே பிரகாசமாய்த் தெரிந்தது. குடிசைக்குள்ளே தீப்பிடித்துப் பற்றி எரிவது போலத் தோன்றியது. செம்பா திகிலினால் வாயடைத்துப் போயிராவிட்டால் “ஐயோ!” என்று அலறியிருப்பாள். அச்சமயம் பயத்தினால் அவளுடைய வாய் அடைத்துப் போயிருந்ததும் கால் செயலற்றுப் போயிருந்ததும் நல்லதாய்ப் போயிற்று. ஏனெனில் சிறிது நேரத்துக்கெல்லாம் குடிசைக்குள் நெருப்பின் பிரகாசம் மெதுவாகக் குறையத் தொடங்கியது.

“மடையா! இப்படி ஒரே அடியாகக் கொளுத்துகிறாயே! வெளியே தெரியுமே! கொஞ்சம் கொஞ்சமாகக் கொளுத்து! எல்லாவற்றையும் கொளுத்திவிடாமல் பாக்கி கொஞ்சம் வைத்திரு! கவுண்டனுடைய புதையல் உண்மையாயிருந்தால் அதற்குப் பதிலாக நம்முடைய சரக்கில் கொஞ்சம் வைத்து விட்டுப் போகலாம்!” என்றான் ஒருவன். “அதெல்லாம் என்னத்துக்கு அப்பா, வீண்வம்பு? நம் காரியம் ஆனதும் ஒரேயடியாய்க் குடிசைக்கு நெருப்பு வைத்துவிட்டுப் போகலாம்” என்றான் மற்றவன். அட சண்டாளப் பாவிகளா! இப்படியா மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? நான் ஒருத்தி இருக்கிறேன்! குடிசையில் நீங்கள் நெருப்பு வைப்பதற்கு முன்னால் உங்களை….

என்ன செய்ய முடியும்? அவர்களை என்ன செய்ய முடியும்? தன்னந்தனியாக ஒரு பெண் இரண்டு ஆண் பிள்ளைகளை, கொலைக்காரப் பாவிகளை என்ன செய்யமுடியும்?… ஏன் முடியாது? ஏதாவது செய்துதான் ஆக வேண்டும்! ஒரு பெரிய கல்லைத் தூக்கி அவர்கள் தலையில் போட்டல் என்ன? எப்படி போடுகிறது? எங்கிருந்து போடுகிறது? கல் எங்கே இருக்கிறது? அவர்கள் பார்த்து விட்டால்… செங்கோடனிடம் ஜம்பமாக அன்று கத்தியை எடுத்துக் காட்டினோமே! அது இப்போது கையில் இல்லாமல் போய் விட்டதே?… இருந்தால் தான் என்ன? இரண்டு ஆண் பிள்ளைகளை எதிர்த்து…சீச்சீ! அவர்கள் ஆண் பிள்ளைகளா? திருடர்கள்! பெண் பிள்ளைகளை விடக் கேடானவர்கள்!

குடிசைக்குள்ளே இப்போது சிறிய விளக்கின் ஒளி மட்டுமே தெரிந்தது. ஆனால் ‘தங்’ ‘தங்’ என்ற சத்தம் கேட்கத் தொடங்கியது. அது என்ன சத்தம்? தரையை இடித்துத் தோண்டும் சத்தம்! எதற்காகத் தரையைத் தோன்றுகிறார்கள்? செங்கோடனுடைய பணத்தைக் கொள்ளையிடுவதற்குத்தான்! எங்கே புதைத்து வைத்திருக்கிறான் என்று இவர்களுக்குத் தெரியுமா? எனக்கே தெரியாதே! இவர்களுக்கு எப்படித் தெரிந்தது? கண்ட கண்ட இடத்தில் தோண்டிப் பார்க்கிறார்களா? அல்லது ஏமாற்றித் தெரிந்து கொண்டார்களா?…ஐயையோ! நாலு வருஷம் உழைத்துப் பாடுபட்டுச் சேர்த்த பணத்தை-சேலம் முதலியாரின் நிலத்தை வாங்குவதற்காக வைத்திருக்கும் பணத்தை-இவர்கள் கொண்டுபோக விட்டுவிடுவதா!…முடியாது! இந்தச் செம்பாவின் உடம்பில் உயிர் இருக்கும் வரையில் அது முடியாத காரியம்.

செம்பாவின் உடம்பில் தெம்பும் மனத்தில் ஊக்கமும் பிறந்தன. சோளத்தட்டைக் குவியலை விட்டு நகர்ந்து மெள்ள மெள்ள நடந்து குடிசையை நோக்கிச் சென்றாள். சுவர் ஓரமாக வந்து பலகணித் துவாரங்களின் வழியாக உள்ளே பார்த்தாள்.

அந்தக் குடிசைக்குள்ளே இரண்டு அடுப்புகள் உண்டு என்பது செம்பாவுக்குத் தெரியும். ஓர் அடுப்பில் எப்போதும் சாம்பல் குவிந்து கிடக்கும். அந்த அடுப்பைப் பெயர்த்து எடுத்துப் பக்கத்தில் வைத்திருந்தார்கள். அவர்களில் ஒருவன் சிறிய கடப்பாரையினால் அங்கே தோண்டிக் கொண்டிருந்தான். இன்னொருவன் தோண்டிய குழியிலிருந்து மண்ணை எடுத்து வெளியில் போட்டான். கடப்பாரை விழுந்தபோது ‘தங்’ ‘தங்’ என்று கேட்ட சத்தம் ஒரு தடவை ‘டங்’ என்று கேட்டது.

“இருக்கிறது, அப்பா, புதையல் இருக்கிறது! கவுண்டன் கஞ்சா போதையில் சொன்னது பொய்யல்ல!” என்று ஒருவன் சொன்னான்.

“நீதானே சந்தேகப்பட்டாய்!” என்றான் இன்னொருவன்.

ஆகா! இந்தப் பாவிகள் இப்படியா செய்கிறார்கள்? நாலு வருஷம் பாடுபட்டுத் தேடிய பணத்தை அடித்துக் கொண்டு போகவா பார்க்கிறார்கள்? இதை எப்படித் தடுப்பது? கூக்குரல் போடலாமா? பிசாசு மாதிரி தலையை விரித்துப் போட்டுக் கொண்டு உள்ளே போய்ப் பயமுறுத்தலாமா? அல்லது…

எங்கேயோ தூரத்தில் பேச்சுக் குரல் கேட்கிறது போலிருக்கிறதே! ஆம்! தெய்வம் எனக்குத் துணை அனுப்புகிறதா? யார் வந்தாலும் நல்ல சமயத்தில் தான் வருகிறார்கள்! அவர்கள் யாராயிருக்கும்? ஒரு வேளை இந்தத் திருடர்களைச் சேர்ந்தவர்களாகவேயிருந்தால்?…தெய்வம் அப்படியும் என்னைச் சோதிக்குமா?

செம்பாவின் காதில் விழுந்த பேச்சுக்குரல் குடிசைக்குள் இருந்தவர்களின் காதிலும் கேட்டது. தோண்டிக் கொண்டிருந்தவன் சட்டென்று நிறுத்தினான். காது கொடுத்து இருவரும் கேட்டார்கள். ஏதோ மெல்லிய குரலில் பேசிக் கொண்டார்கள். கடைசியில், “நீ போ! யாராயிருந்தாலும் கொஞ்ச நேரம் தடுத்து நிறுத்து! அதற்குள் காரியத்தை முடித்து விடுகிறேன்!” என்று ஒருவன் கூறியது கேட்டது. “விளக்கை அணைத்துவிடு! எனக்கு விளக்கு வெளிச்சம் வேண்டாம்! நிலா வெளிச்சமே போதும்!” என்று அவன் சொல்லியதும் செம்பாவின் காதில் விழுந்தது.

ஒருவன் எழுந்து விளக்கை அணைத்துவிட்டு வெளியில் விரைவாகச் சென்றான். இன்னொருவன் வேகமாகத் தோண்டினான். மறுநிமிஷம் குழியிலிருந்து ஒரு செப்புத் தோண்டியை எடுத்து வெளியில் வைத்தான். பெண்ணே செம்பா! இதோ உன் சந்தர்ப்பம் வந்துவிட்டது! போ! துணிச்சலாகப் போ! குடிசைக்குள் சென்று உன் காதலனுடைய பொருளைக் காப்பாற்று! தயங்காதே! போ! போ!…

அத்தியாயம் – 14

செங்கோடன் முதலில் கொஞ்ச நேரம் குடல் தெறிக்க ஓடினான். பிறகு அவனுக்கே ‘எதற்காக இப்படி ஓடுகிறோம்? என்ன பைத்தியக்காரத்தனம்!’ என்று தோன்றியது. ஓட்டம் நடையாக மாறியது. குடிசையில் தான் பார்த்த வெளிச்சம் உண்மையாகப் பார்த்ததா அல்லது வீண் பிரமையா என்ற ஐயம் உதித்தது. திருட வந்தவர்கள் அவ்வளவு பெரிய வெளிச்சம் போட்டுக் கொண்டா திருடுவார்கள்? அவ்வளவு துணிச்சலுடன் திருட வரக் கூடியவர்கள்தான் யார்? அந்தப் பட்டணத்துச் சோம்பேறிகளுக்கு அவ்வளவு தைரியமா? ஒருநாளும் இராது!-வீண்பயம்!-ஒருவேளை செம்பா வந்திருப்பாள். தன்னைக் காணாதபடியால் சிறிது நேரம் காத்திருக்கலாமென்று விளக்கேற்றி இருப்பாள்… இருந்தாலும் குடிசை ஓலைக் குடிசை, பக்கத்தில் வைக்கோலும் சோளத் தட்டையும் போர் போட்டிருக்கிறது. விளக்கேற்றும்போதுகூட ஜாக்கிரதையாக ஏற்ற வேண்டும். ஆனால் செம்பா மிகக் கெட்டிக்காரி! அவளுக்கு ஜாக்கிரதை சொல்லித் தர வேண்டியதில்லை.
நடை கொஞ்சம் மெதுவானதும், “கவுண்டரே! கவுண்டரே!” என்று கூச்சல் போட்டுக்கொண்டு ஓடிவந்து குமாரி பங்கஜா செங்கோடனுடைய கையைப் பிடித்துக் கொண்டாள். “இப்படி என்னை விட்டுவிட்டு ஓடி வரலாமா!” என்று கேட்டாள்.

“சனியனே! நீ விடாமல் தொடர்ந்து வந்துவிட்டாயா? நீ வருவது தெரிந்திருந்தால் ஓட்டத்தை நிறுத்தியிருக்க மாட்டேனே?” என்றான்.

கையை உதறி குமாரி பங்கஜாவைத் தடுமாறிக் கீழே விழச் செய்துவிட்டுச் செங்கோடன் மறுபடியும் விரைவாக நடந்தான்.

“ஐயோ! நான் விழுந்துவிட்டேன். கொஞ்சம் இரு! என்னைத் தூக்கிவிடு” என்று பங்கஜா கத்தினான்.

செங்கோடன் அவளைத் திரும்பியே பார்க்காமல் நடந்தான்.

குடிசைக்குச் சுமார் நூறு கஜ தூரத்தில் வந்த போது சோளக் கொல்லையில் ஏதோ வெள்ளையாய் விழுந்து கிடப்பது அவன் கண்ணில் பட்டது. ஒரு தீனமான, பரிதாபமான, இதயத்தைப் பிளக்கும் துன்ப ஒலியும் கேட்டது. அது என்னவென்று பார்க்காமல் செங்கோடனால் மேலே போக முடியவில்லை. அருகில் போய்ப் பார்த்தான். அது ஒரு நாய், அது சாகும் தறுவாயில் கிடந்தது. அதன் வயிற்றிலிருந்து இரத்தம் சிந்திக் கொண்டிருந்தது.

ஐயோ! இந்த வாயில்லாப் பிராணி இங்கே எப்படி வந்தது? எந்த மகாபாவி இதை வயிற்றில் குத்திக் கொன்றான்?…ஆஹா! அந்தப் போலீஸ்காரருடைய உயர்ந்த ஜாதி நாய் அல்லவா இது? இங்கே எப்படி வந்தது? யார் இதைக் குத்தியிருப்பார்கள்?

நாயைப் பார்த்ததனால் செங்கோடனுடைய மனத்தில் திகில் அதிகமாயிற்று. அதோடு ஆத்திரமும் பரபரப்பும் மிகுந்தன. குடிசையை மேலும் அணுகிச் சென்றான். ஆனால் இப்போது சர்வ ஜாக்கிரதையுடன் எந்தவித ஆபத்துக்கும் தயாராக நடந்தான். நாயைப் பார்ப்பதற்காக நின்ற நேரத்தில் குமாரி பங்கஜா அவனை வந்து பிடித்து விட்டாள். சளசளவென்று ஏதோ அவனைக் கேள்விகள் கேட்டு பேச வைக்க முயன்றாள். எதற்காக இவள் இவ்வளவு கூச்சல் போட்டுப் பேசுகிறாள்? செவிடனுடன் பேசுவது போலப் பேசுகிறாளே ஏன்?

கேணிக்கரை மேடும் அதன் அருகில் தென்னை மரமும் குடிசை வாசற் புறத்தை மறைத்துக் கொண்டிருந்தன. ஆனால் அந்தப் பக்கத்திலிருந்து ஒரு மனிதன் வெளிப்பட்டு வந்தது தெரிந்தது. அவன் யார் என்று சீக்கிரத்திலேயே தெரிந்துவிட்டது. எஸ்ராஜ் என்பவன் தான். இவன் ஏன் இங்கே வந்தான்? இன்னொருவன் எங்கே? சந்தேகித்ததெல்லாம் உண்மைதான்போல் இருக்கிறது. செங்கோடா! உன்னை இந்தப் பட்டணத்துச் சோம்பேறிகள் ஏமாற்றி விட்டார்களா? நல்லவேளை! காரியம் மிஞ்சிப் போவதற்குள் வந்துவிட்டாய்! பார் ஒரு கை!

செங்கோடன் ஒரு கை பார்க்க யத்தனிப்பதற்குள்ளே வேறு காரியங்கள் நடந்துவிட்டன.

“எஸ்ராஜ்! எஸ்ராஜ்! இந்தக் கவுண்டன் என் கன்னத்தில் அறைந்தான்! விடாதே இவனை! இங்கேயே கொன்று குழியை வெட்டிப் புதைத்துவிடு!” என்று குமாரி பங்கஜா கத்தினாள்.

“அப்படியா! உன்னையா இந்தப் பட்டிக்காட்டான் தொட்டு அடித்தான்? அவ்வளவுக்கு ஆகிவிட்டதா? இதோ பார்! ஒரு பாடம் சொல்லிக் கொடுக்கிறேன்!” என்று எஸ்ராஜ் கர்ஜித்துக்கொண்டே செங்கோடனுடைய மார்பில் ஒரு குத்து விட்டான்.

அவ்வளவுதான்! செங்கோடனுடைய உள்ளத்தில் குமுறிக் கொண்டிருந்த எரிமலை பொங்கியது. எஸ்ராஜின் மார்பிலும் தலையிலும் முதுகிலும் மோவாய்க் கட்டையிலும், கண்ட கண்ட இடங்களிலெல்லாம் செங்கோடனுடைய இரும்புக் கைகள் சரமாரியாக அடிகளையும் குத்துக்களையும் பொழிந்தன.

‘ஐயோ!’ ‘அப்பா!’ ‘போதும்!’ ‘வேண்டாம்!’ என்னும் எஸ்ராஜின் அபயக் குரல்கள் செவிடன் காதில் ஊதின சங்காகவே முடிந்தன.
இவர்கள் இருவரும் இவ்விதம் முஷ்டி யுத்தம் செய்து கொண்டிருக்கையில் குமாரி பங்கஜா குடிசையை நோக்கிச் சென்றாள். கேணிக்கரையில் ஏறி அப்பாலும் இறங்கி விட்டாள்.

அச்சமயம் குடிசைக்குள்ளேயிருந்து “ஐயோ ஓஓஓ!” என்ற ஒரு நீடித்த பரிதாப ஓலம் கேட்பவர்களின் உடம்பின் இரத்தத்தைச் சுண்டச் செய்யும் பயங்கரத்துடன் எழுந்தது. அதே குரல் ஒரு கணம் நின்று, மறுபடியும், “ஆ! செத்தேன்!” என்று அலறியது. பிறகு, ஒரு நிண்ட முக்கல், விம்மல், அப்புறம் நிசப்தம்! சகிக்க முடியாத நிசப்தம்!

முதல் ஓலத்திலேயே எஸ்ராஜும் செங்கோடனும் சண்டையை நிறுத்திவிட்டார்கள். மறுஓலத்திற்குப் பிறகு இருவரும் குடிசையை நோக்கி ஓடினார்கள். அவர்களுக்கு எதிர்ப்புறமாக வந்த குமாரி பங்கஜா கேணி மேட்டில் செங்கோடன் மேல் முட்டிக் கொண்டாள்.

“பங்கஜா! என்ன? என்ன?” என்று நடுங்கிய குரலில் எஸ்ராஜ் கேட்டான்.

“தெரியவில்லையே? ஐயோ! தெரியவில்லையே” என்றாள் பங்கஜா.

“சத்தம் குடிசைக்குள்ளிருந்தா?”

“ஆமாம்.”

“நீ அங்கே-குடிசைக்குள்ளே-போனாயா?”

“இல்லை; வாசலண்டை போனதும் சத்தம் கேட்டது. திரும்பிவிட்டேன்!”

“கவுண்டரே! தீக்குச்சிப் பெட்டி வைத்திருக்கிறீரா? உள்ளே போய்ப் பார்க்கவேண்டும்?”

“பார்க்க வேண்டும்; பார்க்கத்தான் போகிறேன். முதலில் நிஜத்தைச் சொல்! எதற்காக இங்கே இந்த நேரத்தில் வந்தாய்? உன்னுடன் யார் வந்தது? குடிசைக்குள் யார்? என்ன செய்தீர்கள்?”

“அதெல்லாம் அப்புறம் சொல்கிறேன், கவுண்டரே! முதலில் உள்ளே போய்ப் பார்க்கலாம்.”

“அப்படியானால் நீங்கள் இரண்டு பேரும் என்னுடன் வாருங்கள். ஓடிப் போய்விடாதீர்கள்!”

“சத்தியமாய் நாங்கள் ஓடவில்லை. எப்படி ஓட முடியும்? நடந்ததைத் தெரிந்துகொள்ளாமல்?… நீர் முதலில் தீக்குச்சிப் பெட்டியைக் கண்டுபிடித்து விளக்கைப் பொருத்தும்!”
நிலா வெளிச்சத்தில் எஸ்ராஜ், பங்கஜா இவர்களுடைய முகங்களைச் செங்கோடன் பார்த்தான். அந்த முகங்களில் பீதி குடிகொண்டிருந்தது. அவர்களுடைய கால்களும் கைகளும் வெடவெடவென்று நடுங்கின.

செங்கோடனுக்கும் திகிலாய்த்தான் இருந்தது. ஆயினும் மர்மம் இன்னதென்று தெரிந்துகொள்ள அவன் ஆவல் கொண்டிருந்தான். அதுமட்டுமா? சாம்பல் குவிந்த அடுப்பின் அடியில் யாருக்கும் தெரியாது என்று எண்ணிப் புதைத்து வைத்திருந்த பணம் என்ன ஆயிற்று? பரபரப்புடன் செங்கோடன் மேலே நடந்தான். தென்னை மரத்துக்குப் பின்னால் குடிசைச் சுவர் ஓரமாக ஒரு நிழல் ஒரு கணம் தெரிந்து உடனே மறைந்தது! சீச்சீ! செங்கோடா! உனக்குக் கூடவா இந்தப் பிரமை! பேய், பிசாசு, பூதம் எல்லாம் வெறும் பொய் என்பாயே? அறிவு எங்கே போயிற்று?

குடிசையின் முன்கூரை முகப்பில் செங்கோடன் வழக்கமாகத் தீப்பெட்டி வைப்பது வழக்கம். ஹரிக்கன் லாந்தரைச் சுவருக்கு வெளியே நீண்டிருந்த மூங்கில் கழியில் கட்டித் தொங்கவிடுவது வழக்கம். தீப்பெட்டியை வழக்கமான இடத்திலிருந்து எடுத்துக் கொண்டான்; லாந்தரையும் எடுத்துப் பொருத்தினான்.

லாந்தர் வெளிச்சத்தில் குடிசையின் வாசற் கதவு திறந்து உட்புறமாகச் சுவரோடு சாத்தியிருந்தது தெரிந்தது. திறந்திருந்த வாசற்படியின்மேல் சில இரத்தத் துளிகள் சிந்தியிருந்தன. இன்னும், அதோ இரத்தத்தைப் போலவே சிவப்பாகக் கிடந்து பளபளக்கும் பொருள் என்ன? செங்கோடன் குனிந்து அதைக் கையில் எடுத்துக் கொண்டான். பின்னால் வந்தவர்கள் அறியாதபடி அதை மடியில் செருகிக் கொண்டான். பிறகு குடிசைக்குள்ளே சென்றான்.

அத்தியாயம் – 15

சேலத்திலிருந்து நாமக்கல்லுக்குச் சென்ற வழியில் மோட்டார் சாரதி சொன்ன கதை இது என்பதை நேயர்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். அவர் சொன்ன கதையை ஏதோ எனக்குத் தெரிந்த பாஷையிலும் பாணியிலும் எழுதிக்கொண்டு போகிறேன். சேலம் ஜில்லா கிராமங்களில் குடியானவர்கள் கையாளும் சக்தி வாய்ந்த பேச்சு நடையை என்னால் அவ்வளவு நன்றாகக் கையாள முடியுமா? அல்லது அவர்களுடைய பேச்சில் காணும் ரஸத்தைத்தான் எழுத்திலே கொண்டு வர முடியுமா?

செங்கோடன் லாந்தரைப் பொருத்திக்கொண்டு குடிசைக்குள்ளே நுழைந்த கட்டத்தில் கதை நின்று போயிற்று. ஏனெனில், அதற்குள் நாமக்கல் வந்துவிட்டது. “இந்த நாமக்கல்லுக்குக் கொஞ்சங்கூடப் புத்தியில்லை. இன்னும் கொஞ்சம் அப்பால் தள்ளியிருக்கக் கூடாதோ! கதையின் நடுவில் வந்து குறுக்கிட்டு விட்டதே!” என்று நொந்து கொண்டேன்.

நாமக்கல்லுக்கு வந்த காரியம் முடிந்து முன்னிரவில் திரும்பிப் புறப்பட்டோம். மணி சுமார் ஒன்பது இருக்கும். காலையில் போட்ட தூற்றலைக் காட்டிலும் இப்போது கொஞ்சம் அதிகமாகவே விழுந்துகொண்டிருந்தது. ‘மழை’ என்று கூட அதைச் சொல்லலாம். மேலே வானமும் கீழே நான்கு திசைகளும் இருட்டியிருந்தன. மோட்டார் வண்டியின் முன் விளக்குகள் அந்த இருட்கடலைக் கிழித்துக் கொண்டு சாலையில் சற்று தூரத்துக்கு வெளிச்சமாக்கிக் கொண்டு சென்றன. அந்தப் பிரகாசமான ஒளியில் மழைத்துளிகள் வைரத்துளிகளாக ஒளிர்ந்தன. ஒவ்வொரு சமயம் வானத்தை வெட்டிய மின்னல் பூமியில் நெடுந்தூரத்தைப் பிரகாசமாக்கி விஸ்தார வெட்டவெளிகளையும் ஆங்காங்கு நின்ற மொட்டைப் பாறைகளையும் குட்டை மரங்களையும் ஒரு கணம் காட்டி விட்டு மறைந்தது.

பாக்கிக் கதையைக் கேட்க வேண்டும் என்ற என் ஆர்வத்தை மோட்டார் சாரதியிடம் தெரிவித்துக் கொண்டேன். அவரும் கதையைத் தொடங்கினார்:

குடிசைக்குள் செல்லும்போதே செங்கோடனின் உள்ளம் பதைபதைத்தது. என்னத்தைப் பார்க்கப் போகிறோமோ என்று திகில் கொண்டிருந்தது. அங்கே அவன் பார்த்த காட்சியோ பதைபதைப்பையும் திகிலையும் அதிகமாக்கியது. மனிதன் ஒருவன் அலங்கோலமாய் விழுந்து கிடந்தது தெரிந்தது. தன்னைக் கெடுப்பதற்கு முயன்ற இருவரில் ஒருவன் தான் அவன்! பங்காருசாமி என்ற பெயரை உடையவன். அவன் பக்கத்தில் ஒரு கூரிய கத்தி கிடந்தது. அதில் இரத்தக் கறை பட்டிருந்தது. அப்புறம், அடுப்பைத் தோண்டி எடுத்து அப்பாற்படுத்திவிட்டு அங்கே குழி தோண்டியிருந்ததையும் அவன் பார்த்தான். குழி காலியாயிருந்ததையும் கவனித்தான். ஆனால் அந்தச் செம்புக் குடம் பக்கத்தில் எங்கேயாவது இருக்கிறதா? இல்லை! மாயமாய் மறைந்துவிட்டது! தான் எண்ணியது சரிதான்! ஆனால் இது என்ன? ஒரு சிறிய பெட்டி திறந்து கிடக்கிறதே! அதற்குள்ளே… ஆத்தாடி! நோட்டுக்கள்! ரூபாய் நோட்டுக்கள்! பெட்டிக்கு வெளியில் பக்கத்திலும் ரூபாய் நோட்டுக்கள்! இன்னும் ஏதோ கறுப்பாகச் சுருள் சுருளாகக் கிடந்தது! ஒன்றும் புரியாமல் திக்பிரமையுடன் செங்கோடன் அந்தப் பெட்டிக்குச் சமீபத்தில் சென்று குனிந்து பார்த்தான். அப்போது தரையில் விழுந்து கிடந்த மனிதன் முனகினான். செங்கோடன் விளக்கை அவன் பக்கம் திருப்பினான். அந்த மனிதன் கொஞ்சம் தலையைத் தூக்கித் தன் சிவந்த கண்களினால் செங்கோடனை விழித்துப் பார்த்தான்! அதனால் செங்கோடனுக்குக் குலை நடுக்கம் ஏற்பட்டது.

“நீயா….! நீயா வந்து தொலைந்தாய்….அவள் எங்கே! அந்தப் பெண் பேய் எங்கே?-அவள்தான் என்னைக் கொன்றவள்!” என்று மெல்லிய குரலில் முணு முணுத்தான், கீழே கிடந்த பங்காருசாமி. “பாவி! சண்டாளி…!” என்று சபித்துக்கொண்டே எழுந்திருக்க முயன்றான். முடியாமல் கீழே விழுந்தான். அவன் தலை சாய்ந்தது. கோரமாக விழித்த சிவந்த விழிகள் மூடிக் கொண்டன.

செங்கோடன் உடனே மந்திர சக்தியிலிருந்து விடுபட்டவன் போலானான். கீழே கிடந்த இரத்தம் தோய்ந்த கத்தியைக் கையில் எடுத்துக்கொண்டு வெளியே ஓடி வந்தான். அந்தச் சமயத்தில்தான் எஸ்ராஜும் குமாரி பங்கஜாவும் தயக்கத்துடன் நெருங்கி வந்து குடிசைக்குள்ளே எட்டிப் பார்க்க முயன்றார்கள்.

அவர்களைப் பார்த்ததும், செங்கோடன் ஆவேசம் வந்தவனைப் போல் கத்தியைக் காட்டி, “உள்ளே வராதீர்கள்! வந்தால் உங்களையும் பலி கொடுத்துவிடுவேன்!” என்று கத்தினான். அவர்கள் பயந்து அப்பால் விலகிக் கொண்டார்கள். செங்கோடன் வெளியில் வந்து குடிசையின் கதவைச் சாத்தினான்.

“ஓகோ!”, “கொலை!”, “கொலை!” என்று கத்திக்கொண்டு கேணியைப் பார்த்து ஓடி மேட்டின் மீது ஏறினான். கேணி ஓரத்தில் வந்ததும் மடியை அவிழ்த்து அதிலிருந்த பொருளைக் கேணியில் விழும்படி செய்தான்.

அதே சமயத்தில் பக்கத்து தென்னை மரத்துக்குப் பின்னாலிருந்து போலீஸ் கான்ஸ்டேபிள் சின்னமுத்துக் கவுண்டர் வெளிப்புறப்பட்டார்.

“அப்பனே, செங்கோடா! என்ன விஷயம்? எதற்காக இப்படி அலறுகிறாய்? கேணியில் என்னத்தைப் போட்டாய்?” என்றார்.

ஒரு நிமிஷ நேரம் செங்கோடன் திகைத்து நின்று விட்டு “நானா? நான் ஒன்றும் கேணியில் போடவில்லை! இனிமேலே தான் போடப் போகிறேன்!” என்றான்.
“என்னத்தைப் போடப் போகிறாய்?”

“ஒரு மனுஷனைத் தூக்கிப் போடப்போகிறேன்.”

“மனுஷனையா? மனுஷனைக் கேணியிலே தூக்கிப் போடலாமா? செத்துப் போவானே?”

“அவன் முன்னமே செத்துப் போய்விட்டானுங்க!”

“யார் செத்துப் போனது? செத்தவனை எதற்காகக் கேணியில் போடப் போகிறாய்?”

“ஒருவனைக் கொலை செய்தால், அவனைச் சாக்கிலே கட்டிக் கிணற்றிலே போடலாம் என்று சினிமாவிலே காட்டினாங்களே!”

“யாரை நீ கொலை செய்தாய்?”

“அந்தப் பங்காருசாமியை நான் கொலை செய்து விட்டேன்! இந்தக் கத்தியினால்தான்…!” என்று செங்கோடன் சொன்னபோது, அவன் கை கொஞ்சம் நடுங்கிற்று.

“இங்கே கொடு, அந்தக் கத்தியை!” என்று போலீஸ்காரர் கேட்டதும் செங்கோடன் கொடுத்து விட்டான்.

“சரி! வா! நீ கொன்ற ஆளைப் போய்ப் பார்க்கலாம். அவனைத் தூக்கிப் போடுவதற்கு நானும் ஒரு கை கொடுக்கிறேன்!” என்று சொல்லிவிட்டுப் போலீஸ்காரர் குடிசையை நோக்கிப் போனார். செங்கோடனும் அவர் பின்னால் போனான்.

குடிசை வாசலில் எஸ்ராஜும் குமாரி பங்கஜாவும் நின்று கொண்டிருந்தார்கள். பங்கஜா அழுது கொண்டிருந்தாள். எஸ்ராஜ் அவளைத் திட்டிக்கொண்டிருந்தான். கான்ஸ்டேபிளைப் பார்த்ததும் பங்கஜா, “ஐயோ! இங்கேயும் வந்துவிட்டாயா! இந்தப் பாவிகளால் என் கதி இப்படியாச்சு!” என்று அலறினாள்.

– தொடரும்…

– பொய்மான் கரடு (குறுநாவல்), முதற் பதிப்பு: 1951.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *